படிமங்கள்
வெள்ளைக்காகிதத்தில் எழுதிய என் வார்த்தைகளை தேடும்போது தெரியும். திமிர்பிடித்தவன்,வாழ்க்கை வாழத்தெரியாதவன், சபிக்கப்பட்டுக் கிடப்பதுதான் உன் விதி என்று வாய்ச்சண்டையில் உன் நண்பன் சொன்னது சரிதான். என்று என் மனசாட்சி என்னைத் தூங்கவிடாமல் குத்திக்காட்டியது.
அது எனக்கு ஜலதோஷம் பிடித்து தூங்கும்போது இடையிடையில் இருமல் ஏற்பட்டு தூக்கம் கெட்டதாலும் இருக்கலாம். வீட்டு சன்னல்களில் மேல் பாதி திறந்தே இருக்கின்றது. வீட்டில் இருள் அடர்த்தியாய் நுழைந்திருந்தது. புழங்கும் இடம் என்பதால் அது நல்லதாகவே பட்டது.
நான் படுத்திருந்தேன். பிரிஜின் தானியங்கி வேலைச்செய்வதும், கடிகாரநொடி முள் சக்... சக்கென்று இயங்கும் சத்தமும் தெளிவாகக் கேட்கின்றது. போர்வையை விலக்கி கண்விழித்தபோது இருள் மட்டும் மிஞ்சியிருந்தது. உலகைச்சமாதானப்படுத்தி வைத்திருக்கிற வல்லமை இருளுக்கு மட்டும்தான் இருக்கிறது. எங்கும் அமைதி. டி.வி டேபிளில் மீன் தொட்டியும் இருந்தது. தொட்டியின் மூடியில் மெல்லிய வெளிச்சம் தரும் லைட் இருந்தது. நீரும் தெளிவாய் இருந்ததால் மீன்கள் சுற்றுவது நன்றாகத் தெரிந்தது. பரந்த மனதுடன் குறுகியத்தொட்டிக்குள் மீன்கள் சலிப்பில்லாமல் நீந்திக்கொண்டே இருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். சிந்திக்கிறவன் மனசாட்சி பெருங்கலகக்காரன் தான். மீண்டும் நினைவுபடுத்தியது. உன் நண்பன் சொன்னது உண்மைதான். நீ அப்படித்தான். நான் எதிர் நினைவுக்குள்ளானேன்.
மண்டையன் சிட்டுக்கு சிட்டுக்கு என்று நடந்து வந்தார். நான் பள்ளியின் கேட்டில் நின்றிருந்தேன். ''வாச்மேன் கேள்விப்பட்டியா வாத்தியாருங்க நெறையப்பேரு எனக்கெதிரா எழுதிகுடுக்கிறாங்களாம். எட்மாஷ்டரும் அவுருக்கு வேண்டியவங்களும் பரிச்சையில காப்பி அடிக்கவுடனும் என்று சொன்னார்கள். அப்படி செய்வது தவறு என்று காப்பி அடிச்சதை நான் பிடிச்சேன். பசங்க என்வீட்டு சன்னலை உடைத்தார்கள். எட்மாஷ்டரிடம் வந்து சொன்னேன். அவர் எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லை. அதனால் கேசு கொடுத்தேன்." என்று சிறு புல்லும் பல் குத்த உதவும் எனும் நோக்கில் என்னிடம் சொன்னார்.
நான் உற்சாகமடைந்து நீதிபதியானேன். " சன்னல் ஒடச்ச பசங்கள கூப்பிட்டு கண்டிச்சியிருக்கணும்" என்றேன். இதைக்கேட்ட மண்டையன் நமக்கு சாதகமாக பேசுகிறான் என்று மேலும் ஆர்வமாக "இவங்க கேக்காததி னாலதானே நான் கேசுகுடுத்தேன். இப்பவந்து நிர்வாகத்துக்கெதிரான ஆளுன்னு எனக்கு எதிர்சாட்சியாய் வாத்தியாருங்களாண்ட எழுதி வாங்குறாங்களாம்." என்று பேசிக்கொண்டிருந்தபோது அலுவலகத்திலிருந்து பாபு வந்து என்னை அழைத்தான். நான் அதிகப்பிரசங்கியாக "தனியார் நிர்வாகம் சார். தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எதுவேணும்னாலும். எப்படிவேணும்னாலும் சாதிக்கும் சார்" என்று அலுவலகம் சென்றேன்.
அலுவலகம் பரபரப்பான முடிவின் கட்டத்தை நெருங்க ஆயத்தமாக இருந்தது. அறையில் தலைமைஆசிரியர் எட்கிளார்க், சில ஆசிரியர்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். மின்விசிறிகளின் அதிகமான உழைப்பால் தலைமையாசிரியரின் டேபிளில் பேப்பர்கள் பறந்தன. அதை பேப்பர் வெயிட்டால் அடக்கினார். நான் உள்ளே நுழைந்தேன். ஒரு முழுத்தாள் முழுக்க எழுதியிருந்தது. "இதுல ஒரு கையெழுத்து போடு" என்று பிச்சைக்காரனுக்கு ஒருரூபாய் போடுவதுபோல நீட்டினார். நான் பேப்பரை வாங்கிக்கொண்டு வெளியே வந்து படித்தேன். 'பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் உண்டாகும்படி கேஸ்கொடுத்ததும் இல்லாமல், வேலைநேரத்தில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் அடியாட்களோடு வந்து தகராறு செய்தார். அதற்கு நானே சாட்சி' என்ற அடிப்படையில் எழுதியிருந்தது. நடந்த சம்பவத்துக்கும், எழுதியிருக்கும் மணுவுக்கும் சிறு உண்மை கூட இல்லை. எப்படியும் மண்டையனை தண்டிக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகமான தலைமையாசிரியரின் நோக்கமாயிருகிறது.
எதோ மலைவாழ் மக்களுக்கு தியாகம் செய்வதுபோல நான் இதில் கையெழுத்து போடமாட்டேன்' என்றேன். தலைமையாசிரியர் ஒரு புழு பேசுமா? என்பதுபோல் அதிர்ச்சியடைந்தார். "நீ அவருக்கு சப்போட்டா! வேலையே போகும் பரவாயில்லையா? கையெழுத்து போடு" என்றார். 'வேலையே போனாலும் பரவாயில்லை' என்றேன். அடக்குமுறைக்கு கூட்டாக உத்வேகத்துடன் எழும் கூலியாட்களிடம், ஆட்சியாளன் அடுத்ததாக பயன்படுத்துவது சூழ்ச்சிதான். ஸ்கூலுக்கு எதிரானவங்க பேச்சலாம் கேட்காத, அன்னிக்கி எதோ லோனு வாங்கனும்னு 'பே' சர்ட்டிபிகேட் வேணும்னு சொன்ன இல்ல. கையெழுத்து போட்டுட்டு ஆபிஸ்ல போய் வாங்கிக்க'.என்றார்.
நான் பதில் சொல்லாமல் வெளியே வந்துவிட்டேன். அப்போது உள்ளிருந்த வர்கள் 'அந்த பையன் திமிர்பிடிச்ச பையன்' என்று பின்மண்டையை சொறிந்கொண்டார்கள். என் நண்பனும் 'அந்த நாயைப்போய் கெஞ்சுரீங்களே. அது ரொம்ப திமிர்பிடிச்சது'. நண்பன் ஆபத்தில் தாங்குகிறவனாகச் சொன்னார்களே?. தொட்டபெட்டாவிலும், கடல்மட்டத்திலும் அதன் இயல்பில் அமைந்து தொடர்வதுதானே வாழ்வின் நகர்தல். மண்டையன் வேறு பள்ளியில் அதிகாரியான போது தற்செயலாக நான் சந்திக்கநேர்ந்தது. உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்தார். சரி சரி அவர் அழுகிய அதிகாரம் தனி இக்கதையில் அதிகமாக குழப்ப விரும்பவில்லை விட்டுவிடுகிறேன்.
மனைவி இரண்டு பிள்ளைகளோடு இருக்கிற என் நண்பனுக்கு உள்ளுரில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறதாம். அவள் நர்ஸாக எதோ ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறாளாம். இரண்டு வாரங்களாக பஸ்ஷில் போகும்போதும் வரும்போதும் அவள் பார்வையில் ஏற்றுகின்ற போதையை எந்த டாஸ்மார்க் கம்பெனியின் சரக்காலும் தரவேமுடியாதாம். இவைகளை நண்பனே ஒரு வீரம் நிறைந்த வரலாறை கூறுவதுபோல தினந்தோறும் என்னிடம் கூறுகிறார். திருட்டுத்தனமான கலவி கொள்வதில் என்னைப்போல் யாராலும் செய்யமுடியாது என்பதுபோல் விளித்து பேசுகிறார். அவர் கூறுவதில் பாதி உண்மை, மீதிப்பொய் என்று எனக்கு வெளிப்படையாக தெரிகிறது. இருந்தாலும் நான் ஆவலாய் கேட்பதால் மேலும் அவர் பொய்யை கூட்டுகின்றார்.
அவள் கணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் இறந்துவிட்டானாம். கணவன் இல்லாமல் தனிமை கொல்லுவதாக சொல்லுகிறாளாம். "அவள் என்னை அடிக்கடி தனியாக அழைக்கிறாள். எப்படியெல்லாம் கலவி கொள்ளவேண்டும் தெரியுமா? என்று பேசுகிறாள். அவள் பேச்சிலேயே என் வீரியத்தை வெளிப்படுத்திவிட நினைக்கிறாள். என் மனைவி இல்லாதபோது எனக்கும் அவளுக்குமான சேர்க்கை நடந்துவிட்டது. இலவசமாய் கிடைத்த அய்ஸ்கிரிம்போல சாப்பிட மிகவும் இன்பமாய் இருந்தது. அதன் பிறகு வழிப்போக்கன் சலுன்கடையில் தலைவார கேஷுவலாக நுழைவதுபோல் அவளுடனான உறவு பலமுறை நடந்துவிட்டது". எனச்சொன்னான். அப்படி சொல்லும்போது ஒரு பழக்கப்படாத குதிரையை அடக்கிவிட்ட வீரத்தை முகத்தில் காட்டுவான். அதன் பிறகு அவன் அவளைப்பற்றி எதுவும் சொன்னதேயில்லை. வாசகர்கள் நினைக்கலாம் இவனும் அப்படிப்பட்ட ஆள்தான் போல ஒரு நண்பன் தவறு செய்யும்போது நல்ல புத்திமதி சொல்லாமல் சுவாரசியமாய் கேட்டு அவனைத்தூண்டிவிடுகிறானே. வெறும் பேச்சிலாவது காமத்தை ருசித்து பார்த்துவிட நினைக்காத்தவர்கள் இருக் கிறார்களா? சந்தர்ப்பம் அமையாதவரை நானுள்பட எல்லோரும் உத்தமபுத்திரன் தான்.
ஒருநாள் பேச்சிவாக்கில் திடிரென்று 'அவளைப்பார்த்து வாரங்களைத் தாண்டிவிட்டது' என்றான். அதற்காகவே காத்திருந்தவன்போல் நான் 'ஏன் உன் மனைவிக்கு தெரிந்துவிட்டதா' என்றேன்.
"இல்லை ஒரு புடவை எடுத்துதரும்படி கேட்டாள்".
"அதிலென்ன பிரச்சனை எடுத்துக்கொடு"
"ஒருமுறை எடுத்து கொடுத்தால் அதே பழக்கமாகக் கேட்பாள். அதனால் அவள் முகத்திலேயே விழிப்பதில்லை". ஒருவேளை அந்த சந்தர்ப்பம் தனக்கு அமையவில்லையே என்ற வருத்தத்தில் வந்த கோபமா. இல்லை பெண்ணை எந்தளவுக்கு மதிப்பில்லா பொருளாக சீக்கிரத்தில் தூக்கி எரிந்துவிடமுடிகிறது என்ற கோபமா தெரியவில்லை "எவ்வளவு நன்றி கெட்டமனிதன்யா நீ உன் எண்ணம் விரைத்துக் கொள்ளும்போதெல்லாம் அவள் சதைகளை பிய்த்து தின்கின்றாய். நீ அவளோடு சேர்ந்தது, திருட்டுப்பூனை சுடக்குழம்பில் நாக்க வச்சதுபோலத்தான் அவளுக்கு இருந்திருக்கும். இருந்தும் நீ தோலுரித்த போதெல்லாம் வாழை பட்டையாக நீண்டு கிடந்தாள். அவளுக்கு ஒரு சிறு உதவி செய்யக்கூடாதா" என்று மிகவும் கோபமாகக் கேட்டேன். நண்பனோடு பத்துவருஷ பழக்கத்தில் இதுதான் அவனிடம் அதிகமாக கோபம்கொண்டது. நண்பன் இதை சற்றும் எதிர்பாராதவனாக என்னிடமிருந்து விலகிபோனான்.
எனக்கு இன்னும் துக்கமே இல்லை. தலை வலித்துக்கொண்டிருந்தது. தெருவில் டியுப்லைட் எரிந்துகொண்டிருந்தது. அதன் லேசான வெளிச்சம் வீட்டு சன்னலின் தொடர்பில் இருந்தது. சன்னல் பின்னாடி எதோ சார சரவென்று ஏறி விழுந்தது. கூர் பார்வையை அதன் பக்கம் திருப்பியபோது. பூனைதான் என்று தெரிந்தது.நண்பனுக்கு, நான் திமிர்பிடித்தவன், கோபக்காரன் என்று என்னிடம் பழகியதால் தெரிந்திருக்கலாம். வாழத்தெரியாதவன் என்பது ஒருவேளை நான் விழிப்புணர்வுடன் இல்லாததாலும், மனித மனங்களை மதிப்பதால் கறார்த்தன்மை இழந்துவிடுவதாலும், மிச்சம் பிடிக்கின்ற பணத்தேர்வின் திறமை இல்லாததாலும் வாழத்தெரியாதவன் முத்திரை குத்தியிருக்கலாம்.
இலக்கியத்தில் பத்துவருஷம் நண்பர்களாய் இருக்கிறவர்கள். இலக்கிய நுணுக்கங்களையும், பிறருடைய வாழ்வியல் கூறுகளையும் அலசுகிறார்களே தவிர. நண்பர்களாய் இருக்கிறவர்கள் எத்தனைப்பேருக்கு அவர்களுள் ஒருவருக்குள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வியல் வலி தெரியும்? இலக்கியவாதிகளின் நிலையே அப்படியிருக்க, எதிர்காலத்திற்காக எந்த நேரமும் பணம், சேர்த்துவைக்க ஓயாமல் உழைக்கிறவனான என் நண்பன் என்னை சபிக்கப்பட்டவன், சந்தோஷ வாழ்வு அவனை என்றுமே தொடப்போவ தில்லை. என்று எதை வைத்து சொன்னான்.
இரவின் அடையாளங்கள் இன்னும் என்னிடம் மறையவில்லை. " தம்பி எங்கடா இருக்கிற" என்று என் சகோதரி கேட்டாள்.
"நான் சென்னையிலிருந்து வந்துகொண்டிருக்கிறேன். என்ன விஷயம் "
"அனிதா பெரிய புள்ளையா ஆயிட்டாளாமே, வீட்டிலிருந்து பசங்க பொன் பண்ணாங்க. நீ சீக்கிரம் விட்டுக்கு போ. நான் காலையில வரேன்".
நான் பதட்டத்துடன் வீட்டில் நுழைந்தேன். மகள் டி.வி பார்த்துக்கொண் டிருந்தாள். நானும் இச்சமுகத்தில் ஊறுகிறவன் தானே நேரடியாக எப்படிக்கேட்பது என்று தயக்கமாக இருந்தது. "ஏய் அனிதா அத்தைக்கு போன் பண்ணிங்களா. டவுனல வேறயாருகாவாது சொன்நீங்களா". பக்கத்திலேயே இருக்கும் தாய் மாமன், மச்சான், சித்தி, பெரியம்மா என்ற எந்த உறவுக்கும் சொல்லக்கூடாது என்ற முடிவோடு இருந்ததால் சற்று பதட்டத்துடன் கேட்டேன்.
சின்னபையன் "அத்தைக்கு மட்டும் தான் சொன்னோம்" என்றான். நிம்மதியாய் இருந்தது. மகள் பெரியவளானது உண்மைதானா? பசங்க சும்மா விளையாட்டுக்கு சொல்கிறார்களா? இன்னும் சந்தேகமாக இருந்தது. மகள் சாதாரணமாக இருந்தாள். .....
தொடரும்....
இன்னும் கொஞ்சம் படிமங்கள் இருக்கிறது. பிறகு சொல்லுகிறேன்
No comments:
Post a Comment