Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Thursday, October 9, 2014

விமர்சனம்,



‘கானகன்‘           லக்ஷ்மி சரவணக்குமார்
எதிர்ச்சொல் பதிப்பகம்.         விலை-200/-  


தங்கப்பன், தாய் பெண் புலியை வேட்டையாடுவதிலிருந்து தொடங்கி, அதன் குட்டிப்புலி வளர்ந்து தங்கப்பனைப் பழிவாங்குதல் வரை நீளுகிறது நாவல்.  
  
எனக்கு கடல், காடு, மலைப்பகுதிகள் அவ்வளவு விருப்பம்.  குடும்பம், தனக்கான கடமை, என்பது தலையில் எப்போதும் அளவாக இருந்துகொண்டு தகுதியை நிர்மானிக்கும் மயிராக இருக்கிறது. அப்படி இல்லாமல் இருந்தால் கடல், காடு, மலையின் அப்பழுக்கற்ற காற்றை நுகர்ந்துகொண்டு எங்கேயாவது திரியலாம். சில நேரம் நாம் வாழும் பகுதியில் அத்தகைய இயற்கைகள் அமைந்திருக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கும். 

லக்ஷ்மி சரவணக்குமார் கானகன் வாசித்தபோது, குறைந்த பட்சம் அந்த கவலைகளை நிவர்த்தி செய்து மிக நீண்ட நாள்கள் கானகத்தில் உலவிய அனுபவத்தையும் மன மகிழ்வையும் தந்தது. 

எழுத்துப்போக்கு வாசிப்பை மிக வேகமாக கொண்டு சென்றுவிடுகிறது. காட்டை ஒட்டி வசிக்கும் மக்களின் மூலமாக காட்டின் தன்மையை, மேன்மையை, அதற்குள் வேட்டையாடும் நுட்பத்தை நாவல் முழுவதும் பரப்பிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மிருகமும் தங்களுக்கான வேட்டையை எவ்வாறு கட்டமைத்துக் கொள்கிறது என்பதை நுணுக்கமாக வைக்கிறது. குறிப்பாக புலி தேவையில்லாமல் தொடர்ந்து வேட்டையாடுவதில்லை. யானைகளுக்கு  மனிதனை பழிவாங்கும் அவசியம் ஏன் ஏற்படுகிறது. என்பதெல்லாம் வாசிப்பு சுவாரசிய்த்தை அதிகப்படுத்துகிறது. 

விரிந்து கேட்பாரற்றுக் கிடந்த காடு, வேட்டையாடிய  மிருகம் ருசிகண்டதுபோல  மனிதன்  குறைந்த முதலீட்டில் காட்டின் அபரிதமான லாபங்களைக் கண்டடைந்ததால் கொஞ்சங் கொஞ்சமாக  காட்டை தங்கள் வசம் கைப்பற்றிக்கொண்டே வந்திருக்கிறான் என்கிற புரிதலை உணர்த்துகிறது. விளங்குகளின் வாழ்விடங்கள் அப்பகுதியின் வாழும் மக்களின் கண்முன்னே அழிவதை நினைத்து கையறு நிலைக்குத் தள்ளப்படுவதை வேதனை பொங்க பகிர்கிறது. காடு சூறையாடப்படுகிறதே என்கிற வேதனை ஒவ்வொருவரின் மனதுக்குள் இருந்தாலும், கஞ்ஜா பயிர் செய்யும் முதலாளிகளின் அற்ப கூலிக்காக அவர்கள் வாழ்வின் நெறுக்கடி பணிந்துபோகச் செய்துவிடுகிறது.

காட்டின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்த வன தேவனாக சடையன் பாத்திரம் தேசாந்திரி வாழ்வாக வடிக்கப்பட்டு இருப்பது சிறப்பு. தங்கப்பனும், வாசியும் அங்கு இருக்கும் இனக்குழுவும் வாழ்வாதாரத்திற்காக காட்டை நேசிப்பவர்களாகவும், அதே சமயம் தங்கள் வாழ்வுக்கு ஆபத்து வரும்போதும் நுட்பமான வேட்டைக்காரர்களாகவும் மாறி மாறி செயல்படுவதால், அம்மக்களுடைய வாழ்வு ஊசலாட்டமானது என்பதைப் பதிவுசெய்கிறது. தங்கப்பனைக்காட்டிலும், வாசி காட்டின் ஒரு ஜீவராசிகளையும் இழந்துபோக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறான். மனிதர்கள் வேட்டைப் பக்குவங்களை அறிந்ததுபோலவே, மிருகங்களும் தாம் வேட்டையாடப்படப்போகிறோம் என்பதின் நுணுக்கத்தை புரிந்து வைத்திருத்தலின் செய்திகளை வாசிக்கிறபோது வாசக மனம் பெரும்பாலாக திருப்த்தி அடைகிறது.

நகர், கிராமப்புற இடங்களில் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள அறக்கொள்கைகளால் ஆண் பெண் துணை சாத்தியமாவது கடலில் முத்து எடுத்தல் காரியம்போல் சமூகத்தில் மூர்க்கமாக திரிகின்றபோது, நாவல் கதைமாந்தர்கள் வாழ்வில் மிகச் சாதாரணமாக மூன்று பெண்கள் தங்கப்பனுக்கு மனைவிகளாக ஒன்றி வாழ்தல் அந்த இனக்குழுவில் எப்படி சாத்தியமாகிறது. அதற்கு அடிப்படைக்காரணம் என்னவாக இருக்கும்? அவைகளை இச்மூகம் கடைபிடிக்க சாத்தியம் கிடையாதா? அல்லது அவ்வாழ்வின் சூழல் பேடியாள்களின் அறிவீன அறம் என்று ஒதுக்கிவிடுமா? என்ற கேள்விளை எழுப்புகிறது. வாசி வாலிபத்தை அடையும் முன்னே, ஜெமின்தார் மனைவி அவனுடன் புணர்தல். வாசி வாலிபனாகிவிட்ட பிறகு அவன் வாழ்க்கையில் ஒரு பிணைப்பு என்பது,  பெண்ணால்தான் கிடைக்கும் என ஊகிக்கின்ற பாட்டா, அவனுக்கு சந்தோஷம் கிட்ட, இளம் பெண்ணை அனுப்புகிறார். அவள் கர்பமாகின்றாள், பிறகு கலியாணம் நடக்கின்றது. இன்னொரு பக்கம் சகாயமேரி தங்கப்பனிடம் ஓடி வந்து மனைவியாக வாழ்கின்றவள். சடையன் மனைவி அவனை விட்டு தங்கப்பனிடம் வந்து வாழ்ந்து குழந்தையைப் பெறுகிறாள். அன்சாரி, தங்கப்பன் குடும்பத்துடன் உறுப்பினன்போல நெடுங்காலமாய் நெருங்கி இருப்பவன். தன்னைவிட வயது மூத்த சகாய ராணி மீது ஆசைப்படுகின்றான்.  முதலில் மறுப்பவள் பிறகு உறவை மேற்கொள்கிறாள். அதன் அடிப்படையில் தன் மூத்த சக்களத்தி மாரியிடம் விஷயத்தைச் சொல்கிறாள். அவளும் நல்லா இரு என்று புத்தி சொல்லி அனுப்புகின்றாள். தங்கப்பனை விட்டு இப்போது சகாய மேரி, அன்சாரியுடன் குடும்பம் நடத்துகின்றாள். 

இந்த வாழ்முறையில் சாதி, மதம், சமூக்க் கட்டுக்கோப்பு புணிதம் அது, இது என்ற அறங்கள் எல்லாமே செல்லாக்காசாக நிர்மானிக்கப்படுகிறது. எந்த குறுக்கீடும் இல்லாமல், அவரவர் வாழ்க்கையை நிம்மதியாக, சந்தோஷமாக இயல்பாக வாழ்கின்ற வாழ்முறை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

சினிமா பாணி

சில இடங்கள் சினிமா கிளைமாக்ஸ் பாணியை கையாண்டு இருப்பது, சற்று சோர்வாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக நாவல் காலகட்டத்தை அறிந்துகொள்ள எம்.ஜீ.ஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அமெரிக்கப்பயணைத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அந்த இனக்குழு மக்களின் கலாச்சாரம் என்ன? என்னமாதிரியான உடைகள் அணிந்திருந்தார்கள், அவர்களின் அவயங்களின் கட்டமைப்பு போன்ற  சித்தரிப்புகள் சரியாகச் சொல்லப்படவில்லை. சில இடங்களில் கோணி உடுத்தியிருந்தான் என்று குறிப்பிடப்படுபிகிறது. ஆனாலும் அந்த ஒரு குளுவை வைத்து பாத்திரத்தை முழுமையாக வாசகனால் உருவகப் படுத்திக்கொள்ள முடியவில்லை. சடையனின் பயித்திய வாழ்வும், அதற்கான சூழலும் மிக நம்பகத்தன்மையுடன் இருந்தாலும், ஒட்டுமொத்த யானைகளும் கிராமத்தைத் தாக்க வரும்போது சடையன் யானை மீது வருவதும். சினையான மானை வேட்டையாடியதால் ஜெமின்தார் காணாமல் போவதும். கடைசியாக குட்டிப்புலி வேட்டையாட போடப்படும் திட்டமும். முடிவில் தங்கப்பன் பழிவாங்கப்படுவதும் நம்பும் படியாக வாய்க்கவில்லை. அல்லது சினிமா பாணியில் அமைந்துவிட்டது. வெகு சில இடங்கள் மட்டுமே அப்டியான புரிதலைத்தருகின்றது. மற்றபடி கானகன் பெரும்பகுதி மனித வாழ்முறையைப் பகுதிப் பகுதிகளாகக் கொண்டும், புணைவுகளை சரிவிகிதத்தில் கலந்தும் கொடுத்திருப்பதால் ஒரு காட்டின் புதிய உலகத்தின் தரிசனத்தை கண்டடையச் செய்கிறது. ஆனால், எளிதில் (காட்டின் மௌனங்கள்) புரிந்துகொள்ளமுடியாத தேசாந்திரியான இன்னொரு கோணங்கியாகவும் விளங்கிக்கொள்ளமுடிகிறது.

டேனியல்

Monday, September 15, 2014

விமர்சனம்,

               முப்பத்தி நாலாவது கதவு 
                   
தமிழில்   புல்வெளி காமராசன்       அகநாழிககை வெளியீடு

1.   முன் அட்டையில் தொகுப்பின் பெயர் ‘முப்பத்தி நாலாவது கதவு‘ என்று பேச்சுமொழியிலும், புத்தகத்தின் உள்ளே ‘முப்பத்தி நான்காவது கதவு‘ என்று தூயத்தமிழிலும் வந்திருக்கிறது.

2.   இத்தொகுப்பில் 13 கதைகள்தான், ஆனால், முன் அட்டையில் 14 ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘இடாலோ கால்வினோ‘ என்ற ஆசிரியரின் கதையே இத்தொகுப்பில் இல்லாதபோது அவருடைய பெயரை முதன்மைப் படுத்தி போட்டிருக்கிறார்கள். இன்னொன்று ஆசிரியர்களின் பெயர்கள் வரிசைப்படியும், உள்ளே கதைகள் அமைக்கப் பட்டிருக்கவில்லை.

3.   முக்கியமானது இத்தொகுப்பில் உள்ள பதிமூன்று கதைகள் என்பது பல்வேறு நாட்டு மொழிக் கதைகள். மூல ஆசிரியர்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இத்தொகுப்பு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்துதான் மொழிபெயர்க் கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியிருக்க ஆங்கில மொழி ஆசிரியர்களின், பெயர்களை கதை பக்கத்திலாவது குறிப்பிட்டிருக்கவேண்டும். அப்படி அமைந்திருக்கவில்லை.

4.   34வது மதகண்டையில் மிதப்பது கழுத்தறுந்த பெண்ணின் பிணம். ஆனால் புத்தக அட்டையில் வசீகரமான நீந்தலுக்கான பிம்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

5.   உள்ளே ஆங்கிலத்தில் வரும் புத்தகத்தின் ஆவணப் பதிவுகளில் \muppathi naangavathu kathavu\ என்று வந்துள்ளது. ஆனால், \Muppaththi naangaavathu kathavu\ என்று வந்திருக்கவேண்டும்.

6.   (ஒண்ணு என்றதுக்குள்ள இங்கிருந்து நீ ஓடிடு. ஒன்னா சேர்ந்து அடிக்க வரீங்களா) அடைப்புக்குறிக்குள் வரும் ‘ண‘ ‘ன‘கர எழுத்துக்கள் சரியா தப்பானு புரிந்துகொள்வதில் குழப்பமாக இருக்கிறது. பலர் இரண்டிற்கும் ‘ண‘ போடுகிறார்கள். சிலர் ‘ன‘ போடுறாங்க. சிலர் ‘ண, ன‘போடுகிறார்கள். நல்ல முதிர்ச்சியான எழுத்தாளர்கூட இப்படி மாற்றி மாற்றி எழுதுகிறார்கள். நானே மொழியில் கைநாட்டு, சிலநேரம் எது என்பதில் குழப்பமாகிவிடுகிறது. அந்த குழப்பத்தை சில இடங்களில் காணமுடிகிறது.

என் விமர்சனத்தை இதோடு முடித்துக்கொண்டால், இதை எதில் சேர்ப்பது. போட்ட புத்தகம் எல்லாவற்றையும் தூக்கி பரணில் அடுக்கவேண்டியதுதான். ஒருவேளை மேற்கூறிய அனைத்தும் டெக்னிகல் விடுபடலாகக்கூட இருக்கலாம். அதை வைத்து புத்தகத்தின் தரத்தை நிர்மாணிக்க முடியாது. ஆனாலும், மேற்கூறய அனைத்தும் கவனிக்கவேண்டியதும்கூட. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். தொகுப்பிற்குள் நழைவோம்.

முதலில் படைப்பாளியின் தனிமனித பிம்பத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் படைப்பை அணுகவேண்டும். புத்தக விமர்சனம் என்பது எழுத்து செழுமை அடைவதற்காகவும், படைப்பாளனின் மனக்கண், அனுபவக்கண் ஞானக்கண், எதற்குமே பிடிமடாமல் மெல்லிய கோளாருடன் தன் உடலுக்குள்ளேயே உயிர்போல பதுங்கியிருக்கும் தன்மைகளை, ஒரு மருத்துவன்போல அணுகி அதன் நிலைகளைத் தெரிவிப்பதும், விமர்சனத்தைக் கேட்பவர் அப்புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற ஆவலை உருவாக்குவதும்தான் விமர்சனம் என்று நான் நினைக்கிறேன்.

புத்தகத்தின் விமர்சனத்திற்கு வருகிறேன்.

1.   படைப்பின் தேர்வு, 
மொழிபெயர்ப்பு படைப்பை தேர்வுசெய்தல் என்பதிற்கு மொழியறிவு, வாசிப்பு அனுபவம் மட்டும் இருந்தால் போதுமானது அல்ல. அதற்கு மேலாக கதையாளன் சொல்லும் கதையின் நுண் தன்மையையும், மொழிபெயர்பாளனின் ரசனையும் ‘கடிகாரத்தின் இரு முள்போலவாகும். ஒரு புள்ளியில் இணைந்து சரியான நேரத்தைக் கணக்கிட்ட பிறகு, புதிய நேரம் கணக்கிடுதல் செயலைத் தொடர்தல்போல மொழிபெயர்ப்பாளன் மூலக்கதையாசிரியரின் நுணுக்கத்தைப் புரிந்துகொண்டு, பிறகு தன் இயல்பாக புதிய பாணியைத் தொடங்குகிறார். அப்படியான செயல்களால்தான் அதி உன்னதமான படைப்புத்தேர்வுகள் வசப்படுகிறது. நண்பர் காமராஜ் அவர்களுக்கு அப்படித்தான் வசப்பட்டிருக்கிறது. தன்னுடைய அதிகப்படியா கலந்துபட்ட வாசிப்பின் அனுபவத்தை  இத்தொகுப்பிற்கு பயன்படுத்தியிருக்கிறார்.

இத்தொகுப்பில் பதிமூன்று கதைகள் இடம்பெற்றுள்ளது. அவைகள் அனைத்துமே தனித்தனி வாழ்முறைகளை சமூக வெளியில் வெளிப்படுத்தி காட்டியிருக்கிறது. குறிப்பாக படைப்பின் களமாக, அழகியல், அரசியல், குறியீடுகள், எதார்த்தம், என உள்ளடங்கி இருப்பது இதன் சிறப்பாகும்.  இன்னும் சொல்லப்போனால், இம்மொழிபெயர்ப்பின் மூலம் உலகின் நான்கு திசையானாலும், இந் நான்கு தன்மைகளைச் சார்ந்துதான் கதைகள் பின்னப்பட்டிருக்கிறது. இக்கதைகள் தேர்வின்மூலம் மொழிபெயர்ப்பிற்கு ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார் என்பதுதான் மிக முக்கியம். கதை வெளிகளில் அதற்கு மேலும் பிரிவுகள் இல்லையா என்றால், இருக்கிறது. மறுப்பு இல்லை. ஆனால், இந்நான்குதான் எந்த இயற்கை மாறுதலையும், புரண்டு முடிந்த, கிளறிய வரலாற்றுக்குள்ளும் வாழ்வியலுக்குள்ளும் காலங்கடந்தும் நிமிர்ந்து நிற்கும் வகைமையாகும்.

2.   படைப்பின் மிக அற்புதான நிகழ்வுகள்

கைகள் விற்பனைக்கு என்கிற கதை எளிதில் புரிந்துவிடுகின்ற கதையல்ல. உற்பத்தி பொருட்கள் நகர் சந்தையில் குவியல் குவியலாக விற்கப்படுவதுபோல். மனிதனின் கைகள் கடைத்தெருவில் விற்கப்படுகிறது. இது நம்பும்படியான விஷயமா? கொஞ்சம்கூட எதார்த்தத்தை பிரிதிபலிக்கவில்லையே என்ற கேள்வி இக்கதையை வாசிகிற எவருக்கும் வருவது இயல்புதான். ஆனால், குறைந்த பட்சம் இரண்டுமுறை, அதாவது இக்கதை என்ன சொல்லுகிறது, மனைவி, கணவனின் கைகளை ஏன் விற்க வருகின்றாள். குடும்பத்தில் மூத்தவனின் கைகள் மட்டும் ஏன் விற்பனைக்கு வருகிறது. ஆரம்பத்தில் கைகளை விற்கக்கூடாது என்று அதன் அருமை பெருமைகளை சொன்னவனே கடைசியாக ஏன் தன் கைகளையே விற்க வருகிறான் என்ற கேள்வியைக்கேட்டுக்கொண்டே இரண்டுமுறை வாசித்தால்தான் அதன் உள்நிகழும் குறியீடுகள் புரியும்.  அதைவிடுத்து வெறுமனே மூன்றுமுறை நான்குமுறை வாசித்தாலும், அதன் உள் நிகழ்கிற சமூக வாழ்வியலின் அவலத்தைப் புரிந்துகொள்ளமுடியாது.

பொருளாதாரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரப் பிரச்சனையாக இருக்கிறது. அவைகளால் இருப்பவன் எந்த சூழலிலும் மதிக்கப்படுகிறான். அதை அடைய முடியாதவன் தினம் தினம் போராடிக்கொண்டிருக்கிறான். இக்கதையில் கை என்பது, கை அல்ல. பொருளீட்டும் சக்தி கொண்ட மனிதன். அந்தத் தனிமனிதனின் தலையில் இச்சமூகம் நிர்பந்திக்கப்பட்ட கடமையை, குடும்ப அமைப்பின்  மூலம் கட்டமைத்து வைத்திருக்கிறது. அந்தக் கடமையை அல்லது தனக்குள் நியாமாக உதிக்கும் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்ள தலைகீழ் தண்ணிர் குடிக்கவேண்டி இருக்கிறது. இதைதான் இக்கதை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறது. அதாவது,  குடும்பம் என்று வருகிறபோது குடும்பத்தலைவன்தான் பொருளாதாரத்திற்கான ஜவாப்தாரி.  அதுபோல பிள்ளைகளில் மூத்தவன்தான்  குடும்ப கஷ்டங்களை பூர்த்தி செய்தல் என்ற நிலைகூடுதலாக இருக்கிறது. ஒருவன் தன்னுடைய மொத்த வாழ்வின் நம்பிக்கைப் பலனாக ஒரு கதையை வெளியிடவேண்டும் என்று நினைக்கும்போது முடியவில்லை. அதற்காக அவனுடைய கையையே முதலீடாக வைக்க வருகிறான்.

இக்கதை, ஒரு பக்கம் சமூகத்தை மிகுந்த கேலிக்குள்ளாக்குகிறது. இன்னொன்று  தனக்கானத் தேவைகளை அவனவன் பெருமுயற்சியால் வென்றெடுக்கவேண்டும் என்பதுதான் இக்கதையின் நியதியாக இருக்கிறது. அதை மிக ஆய்வுப்பூர்வமாகவும், சுவாரசியம் குறையாமலும் வைத்திருக்கிறார்

நிலவறை

கதையல்ல. அவள் உள் உணர்வின் நகலை வாசகனுக்கு தந்துள்ளாள். சில கதைகளில் கவிதை வரிகள் இருக்கும், சில கதைகளில் அழுத்தமான கதையுக்தி இருக்கும் சில கதைகளில் உணர்வுதன்மை மேலோங்கி இருக்கும், ஆனால் இக்கதையில் மூன்றையும் சரிவிகிதமாக கலந்து படைத்திருப்பார்.

“பிறகு என் அமைதியின் மீது யாரோ எட்டிப் பார்ப்பதாய் உணர்ந்தேன்“
என் உதட்டில் நிரம்பி வழிந்த எல்லாக் கதைகளையும்,  உன் உதட்டுவழி முத்தத்தால் படித்து முடித்தாய்“
“ஒரு நதி இன்னொரு நதியில் இணைவதுபோல இணைத்துக்கொள்கிறோம்.“  இப்படி கதை முழுக்க பரவிக்கிடக்கும் வரிகளை வாசிக்கும் வாசகன் நிச்சயம் தன் இயல்பில் இருந்து சற்று மாறி அலைகழிக்கப்படுவான்.

ஒரு இளம் பெண் சந்தர்ப்ப சூழலால், ஆண்மகனைப் பார்க்கின்றாள், நாளடைவில் காதல் வயப்படுகிறாள், மறுக்கமுடியாத அன்பின் ஊடாட்டத்தில் உறவில் விழுகின்றாள். ஏதோ சூழல் இருவரும் தனித்தனியாகின்றார்கள். பெண் கருவுற்றும் இருக்கிறாள். அவள் தனியாக நிற்கும் இச்சூழலை விவரிக்கும் கதைதான்.  கடந்தகாலத்தில் நடந்ததையும், ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும், இயலாமையையும், சமூக சூழலையும் அவ்வளவு இயல்பாக கொண்டு செல்வார்.

கடிகார ஊசல்
இருவர் மட்டுமே இருக்கும் குடும்பத்தில்கூட பெண்ணின் ஓயாத வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்ளும், மனமற்றவன். மனமற்றவன் என்பதைவிட அதுகுறித்த யோசனையே இல்லாமல், தனக்கு விருப்பமானதில் நாட்டமுள்ள கணவன்.  சற்றும் சலிப்பில்லாமல் குடும்பமே தன் உலகமாக திருப்த்தி அடைகிற மனைவி.
இருவரும் எந்த முரணுமற்று இயல்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள். இது குடும்ப கட்டமைப்பின் வெற்றியாக இருக்கலாம். ஆனால், ஆசிரியர் அதன் முரண்களை மிக நுட்பமாக வாசகனுக்கு வைத்துச்செல்கிறார். அக்கதையில் வரும் கேட்டி (மனைவி) ஓயாத வீட்டு வேளைகளில் இணைத்துக்கொள்கிறவள் திடீரென்று இல்லாமல் போகும்போதுதான் குடும்பம், அல்லது வீடு என்பது என்ன என்று கணவனுக்கு புரியவருகிறது. அந்தப் புரிதலால் ஏதாவது மாற்றம் வருகிறதா என்றால் இல்லை. அதை வாசகனுக்கு உணர்த்தும் சூழலில்தான் கதை நிற்கிறது. கேட்டி ஒவ்வொரு முறையும், “ஜான் இப்ப எங்க போறீங்க“ என்று கேட்பது வெறுமனே கடமைக்காக அல்ல. அதை கேட்கும்போதெல்லாம் வாசகனை தங்கள் குடும்பங்களில் அப்படி நடந்துகொள்ளாதபடி எச்சரிக்கின்றார்.

மைனா பேசும் கிளி
எதார்த்த்தோடு, லேசாக நீதிபோதனையும் கலந்த ஒரு கஞ்ஜன் மனம் திருந்திய கதை அதன் சித்தரிப்புகள் சிறப்பாக அமைந்துள்ளது. உலக நடைமுறை வாழ்வில் ஒரு நபர் சற்று பிடிவாதமான நபராக, அதாவது தோற்றத்திற்கு முரட்டுத்தனமாக இருந்தால் அவரை இச்சமூகம் எளிதில் நெருக்கமாக அணுகுவதில்லை. அவரும் உலக இயல்பிற்கு நம்மால் பொறுந்த முடியாதோ என்று பயணிக்கிறார். மிட்டு        (மைனா) அதை உணர்த்தியபோது மிக எளிதாக தன் தவறை உணர்கிறான் என்பதுதான் கதை. ஆசிரியர் சுவாரசியமாக நகர்த்திச்சென்றிருக்கிறார்.

அவளாக இல்லாமலிருக்கலாம்
வாழ்வியல் சூழலோ, பொருளாதார நெருக்கடியோ, வேட்கையோ ஏதோ ஒரு காரணத்தால் வெளிநாடு பயணிக்கும் பெண்களின் நிலைகளை மிக ஆழமாக வைக்கின்ற கதை.

உச்சம், முப்பத்தி நான்காவது கதவு, அழியாத ஜோடி,
போன்ற கதைகள் அதன் அதன் தளங்களில் மிக முக்கியமான கதைகள் அவைகளை வாசிக்காமல் விடுவது என்பது வாழ்க்கையின் பல பார்வைகளை கற்கத் தவறுகிறோம் என்றுதான் என்னால் சொல்லமுடியும்.

மகளே
இத்தொகுப்பின் மிக முக்கியமான கதையாக எனக்குப்டுகிறது. இக்கதையை மொழிபெயர்ப்பாளர் மிகுந்த அக்கறையுடன் கையாண்டு இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் மூலக்கதையாசிரியரின் கதையின் உத்தியை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அப்படியேக் கொண்டுவந்திருப்பார்போல. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் செய்தவரும் அதே உணர்வைத்தருகிறார் என்றால் இதுதான் கதையின் உன்னதமான வெற்றி. மொழிபெயர்ப்பாளரின் வெற்றியும்கூட.

இதன் கதையை வாசித்ததால் எனக்குள் ஏற்பட்ட மலைப்பின் ரகசியத்தை எனக்குள்ளாகவே வைத்துக்கொண்டு. நிங்களும் மனித வாழ்வியலின் கோரத்தை அறிந்துகொள்ளவேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் எதுவும் எப்போதும் நடக்கலாம். அதைக் கடந்து புத்திசாலித்தனமாக வென்றெடுக்க இதுபோன்ற கதைகள்தான் துணைநிற்கும்.

ஐந்து கடிதங்கள்
வெறுமனே வாய்ப்பந்தல் போடுகிறான் என்று வழக்குப்பேச்சில் சொல்வார்களே. அதுபோலதான் ஒவ்வொரு கடிதமும் அமைகின்றது. புதிதாக கல்யாணமாகி சந்தர்ப்ப சூழலால் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள தம்பதிகளின் கடிதப் பரிமாற்றம்தான் கதை.

முதல் கடிதத்தை மனைவிக்கு எழுதும்போது, மானே, தேனே, உன்னைப்பிரிந்து தவிக்கிறேன், வேகிறேன் புரளுகிறேன் என்று எழுதுவான். படிப்படியாக வருஷங்கள், காலங்கள் என கடக்கும்போது,  எதிர் முணையில் இருந்து கண்ணீருக்கு இணையான வார்த்தைகள் வரும். அவைகளை உள்வாங்குவதில் அலட்சியம் இருக்கும். இவன் எழுதும் கடிதங்களிலும் அன்புகுறைந்துகோண்டே வந்து வார்த்தைத் தாக்குதல் மறைமுகமாக சேர்த்தனுப்புவான். ஆண் ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர்ந்துகொண்டு, தூர இருக்கும் மனைவியை வெறுமனே ஆருதல் படுத்துவதற்காகவும், எப்போதோ ஒரு முறை கடிதங்களை அனுப்புவது என்பதும் எவ்வளவு வேதனையான விஷயம். ஐந்து கடிதங்களிலும் ஒரு மனிதனுடைய வாழ்வே முடிந்துவிடுகிற வரலாறு நடந்துவிடுகிறது.

கடைசி கடிதத்தில் இந்த வாசகம் வரும்
“அந்தக் கிழவிக்கு ஏதாவது ஆச்சுதுன்னா அவள நல்லபடியா எடுத்துப் போடுப்பா, அப்படி ஏதாவது நடந்திடுச்சுன்னா, என் சார்பாக அவளுக்கு நீயே கொள்ளி வச்சிடுப்பா.“ என்று மகனுக்கு எழுதுவான். இளம் உடலை திகட்டத்திகட்ட புணர்ந்த ஒருவன், அவளின் எலும்பும் தோலுமான உடலுக்கு செய்யும் மரியாதை. இதுதான் நமக்கும் ஆசிரியன் வைக்கும் பாடம்.
        மனித வாழ்வில் எந்த ஒரு ஆணோ, பெண்ணோ இப்படியான வாசகத்தை உதிர்க்கும் நிலை வரவேக்கூடாது. இந்த நன்றிகெட்டத் தனங்களும் சேர்ந்த்துதான் வாழ்க்கை என்பதை அற்புதமாக வைக்கிறார் கதையாசிரியர்.

தொகுப்பைக்குறித்து என் நிலை
இத்தொகுப்பில் மொழிபெயர்ப்பாளர், பலதரப்பட்ட வாழ்வின் நிலைபாடுகளை ஒருங்கே இணைத்து, அதிகபட்சமாக சிறப்பான கதைகளை இத்தொகுப்பில் வைத்திருக்கிறார். அகநாழிகை பதிப்பகம் இதைச் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறது. வாசிப்புத் தளத்தில் தேடி எடுத்து வாசிக்கும் புத்தகமாக இது நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மொழிபெயர்ப்பில், வாசகம் அமைப்பில் (வரியில்) சில குளறுபடிகள்.

பக்கம்-19 //சில கூரான நகங்களுடன், அருவெறுப்புடன் கிடந்தன.// ‘அருவருப்புடன்‘ என்று வரும் சூழல்தான் கதையோட்டத்தில் இருக்கிறது.
பக்கம்-21 //என் நண்பன் வெறுப்போடு தலையாட்டினான்//
         //என் நண்பன் அந்த அம்மாளிடம் கேட்டார்,// ஒரே கதையில் ஒரே நபரை ஒரு இடத்தில் ‘ன்‘ விகுதியும், இன்னொரு இடத்தில் ‘ர்‘ விகதியும் வருகிறது.

குவியம் என்ற கதையில் நாராயணன்சார் என்று 24 (ஒருவேளை இலக்கிய வட்ட நாராயணனுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டேரோ) இடத்தில் வருகிறது. இத்தனைக்கும் கதை குறைந்த பக்கங்களைக்கொண்டது. அவைகள் குறைத்து சொல்வதற்கான வசதி பல இடங்களில் இருக்கிறது. அவைகளை கவனத்தில் கொண்டிருக்கவேண்டும்.

நிலவறை
//உன் நடையில் நீ ஒரு கணம் நிற்கும்பொழுது  உன் பாதங்கள் தெருவோடு எதையோ பேசிச் செல்கிறது.//
நடை என்பது நின்றிருக்கும்பொழுது பாதங்கள் தெருவோடு பேசிச்செல்ல வாய்ப்பிள்ளை. கண்கள் பேசிச்செல்லலாம். எங்கு தவறு என்பது தெரியவில்லை.

திருக்கச்சூர் எக்ஸ்பிரசில் இடாலோ கால்வினோ‘
//செய்தித் தாள்களில் P.T உஷா பற்றிய பேருந்து பலாத்காரமும் அதன் விளைவுகளையும், படித்த பிறகு தயக்கத்துடன்தான் பேருந்தில் ஏறுவான்.//
பி.டி உஷா பற்றியும், பேருந்து பலாத்காரம் என்பதும் இருவேறு செய்திகளா? பி.டி உஷா பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அது பற்றிய செய்தியைப்பார்த்து பேருந்தில் ஏறத் தயங்குகிறானா? சற்று குழப்பமாக இருக்கிறது.

கடிகார ஊசல்
//ஒரு மந்தை ஆட்டு ஜனங்கள் நெருக்கியடித்துப் பிதுங்கி வெளியேற, இன்னொரு மந்தை முண்டியடித்து மேலேறியது.//

மந்தை என்றாலே ஆடுகளுக்கு ஒப்பீடு செய்துகொள்கிற நிலை இருக்கிறது. மந்தை என்று சொன்ன பிறகு, ஆட்டு ஜனங்கள் என்பது வாசிப்பைத் தடைபடுத்துகிறது.

மகளே
//நான் ஒரு குருடன் என்பதை இந்த உலகம் அறியும்//
//என் பூர்வீகச் சொத்தாக என் தந்தை மூலம் வந்தது அது.//
இந்த வாசகத்தில் ‘ஒரு, இந்த‘ வார்த்தைகளை எல்லாம் குறைத்திருக்கலாம், இதில் மட்டுமல்ல பல கதைகளில் தேவையில்லாத இடங்களில் ‘அவன், ஒரு, என், அந்த, இந்த,‘ என்ற இணைப்புச்சொற்கள் திரும்பத்திரும்ப வருகிறது. அவைகளை இனம் கண்டு குறைத்திருந்தால் வாசிப்பின் சுவாரசியம் தடைபடாது.

மைனா பேசும் கிளி
இந்த கதைத்தலைப்பு என்ன அர்த்தத்தைக்கொடுக்கிறது. பேசும் கிளியின் பணியை மைனா செய்கிறது அதானே அர்த்தம். ஒருவேளை மூலக்கதையாசிரியர் அப்படி வைத்திருந்தாலும். மொழிபெயர்ப்பாளர் நம் வாசகனுக்கு அருகாக நிற்கும்படியாக பெயரை வைத்திருக்கலாம். அக்கதையிலேயே மைனாவிற்கு  அழகிய பெயரை வைத்திருப்பார். ‘மிட்டு‘ என்று. இதையேத் தலைப்பாக வைத்திருக்கலாம்.

51/2
ஐந்தரை வயது குழந்தை தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் சரியாகச் சொல்லப்படவில்லை. சின்ட்ரல்லா, வாலறுந்த நரி கதைகள்தான் அவனை பாதித்தது என்றால் அதை கதைப்போக்கில் சரியாகச் சொல்லப்படவில்லை. இது மூலக்கதையாசிரியரின் குறைபாடா மொழிபெயர்ப்பில் குறைபாடாத் தெரியவில்லை. என்னைப்பொறுத்த மட்டில். இத்தொகுப்பின் மொழிபெயர்ப்பின் போக்கு என்பது, எதார்த்த கதைகளில் ஆரம்பம் முதல் முடிவுவரை சற்றும் பிசகாமல் முழு தரத்தை பிரிதிபலிக்கிறது. குறியீட்டு கதைகளில் மொழிபெயர்ப்பில் சற்று தடுமாற்றம் இருக்கிறது என்று நினைக்கிறேன். குறியீட்டு கதைகளில்கூட கதைப்போக்கு சீரான நிலைக்கு வந்தபிறகு மொழிபெயர்ப்பு தடையற்று அற்புதமாகச்செல்கிறது. இப்படி வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ஊகித்தபோது, குறியீட்டுக் கதைகளில் உள் நுழைவதற்கு முன், அர்த்தம் இதுவாக இருக்குமோ, வேறொன்றாக இருக்குமோ என்ற தடுமாற்றத்தால்தான் சற்று சிக்கல் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.

மற்றபடி இத்தொகுப்பு மிகச்சிறப்பான தொகுப்பாக வாசகர் மத்தியில் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. பதிப்பாக்கிய பதிப்பகத்தார், மொழிபெயர்ப்பாளர், அதற்காக உதவிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அகநாழிகை பதிப்பகம்,  விலை-ரூ.120/-