நன்றி “தடாகம்” இணையம் மற்றும ‘யாழினி முனுசாமி’
நான் ஊகிக்காத அளவு அடிவிழுந்துவிட்டது. அடிவிழுந்த மாத்திரத்தில்
காவ்... காவ்.. என்று ஊரையே கூட்டுமளவுக்கு சத்தம்போட்டது.
வெறுமனே அப்படிக் கத்தியிருந்தால் கோபம் அதிகமாகியிருக்கும். மாறாக அப்படி
இல்லை, உண்மையிலேயே வயிற்றின் விலா எலும்பு உடைகிற அளவு அடித்துவிட்டு
இருக்கிறேன். சத்தம்போட்டுக் கத்திய பிறகுதான் அய்யோ அடி பலமாக
விழுந்துவிட்டதா என்று பதைத்தேன். லேசாகத்தான் அடித்தது போல் இருந்தது.
இவ்வளவு தூரம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.
பாவம் சற்று
முன்புவரை மிகவும் உற்சாகமாகத் துள்ளிக்குதித்து அதன் தாயோடும்,
சகோதரர்களோடும் விளையாடியது. மனிதனுக்கு மட்டுமல்ல, எந்தப் பிறவிக்கும்,
கையாள்கிற பொருளுக்கும் நிரந்தரமான சுகமான இருப்பு கிட்டுவதில்லை,
எதிர்பாராத நேரத்தில் மாற்றமும், அழிவும் சாத்தியமாகவே இருக்கிறது. நான்
இவ்வளவு அரக்கத்தனமாக எப்போது மாறினேன். எனக்கேத் தெரியவில்லை. சற்று
முன்புவரை பின்னங்கால்களை ஊன்றி, முன்னங்கால் இரண்டையும் தூக்கி அதன்
தாயின் மடியில் தாங்கி பால்குடித்துக் கொண்டிருந்தது. ஐந்து குட்டிகள் மாறி
மாறி விழுந்து எழுந்து பால் குடித்தன. தாய் பின்னங்கால் இரண்டையும்
விரித்து வைத்து ஊன்றி நின்றது. ஐந்து குட்டிகள் அவைகளில் எதுவுமே
ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை. ஒன்று செவிளியாகவும், ஒன்று கறுப்பும்,
செவிளியும் கலந்து இருந்தது. இன்னொன்று பாதி வயிறு, நான்குகால்கள்
வெள்ளையாகவும் மற்ற இடம் செவிளியாகவும் இருக்கின்றது. நான் அடித்தக் குட்டி
சற்று வித்தியாசமாக காக்கியும், மஞ்சளும் லேசாகக் குழைத்த கலரில்,
முகத்தின் நெற்றியில் நாமம் இழுத்திருப்பதுபோல் தனியான கலரில் ஒரு கோடும்,
ஒரு பக்கம் மூக்கு வெள்ளையாகவும் ஒருபக்கம் கறுப்பாகவும், மற்ற குட்டிகளை
விட அழகாகவும் இருந்தது. பொதுவாக எவ்வளவு ஆபத்து நிறைந்த ஜந்துவானாலும்
குழந்தைக்குட்டியாய் இருக்கிறபோது அழகுதான். தன் வாழ்நாளில் தன்
நலனுக்காகவே இதயத்தைப் பதப்படுத்தி வைத்திருக்கும் மனிதன்கூட அதை
ரசிக்காமல் இருக்க முடியாது.
அந்த நாய்க்குட்டியை அடிப்பதற்கு முன்,
தூக்கிக் கொஞ்சிவிட்டுதான் போனேன். அதன் பிறகு அடிக்கிற சூழ்நிலை எப்படி
ஏற்பட்டது யோசித்தாலும் விளங்கவில்லை?. ஒன்றும் இல்லை. இதேபோலத்தான் ஆறு,
ஏழு கோழிக் குஞ்சுகள் பொரித்து நான்கு நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அவைகளை
பையன்தான் வெளியே விட்டுவிட்டு இன்ஜினியரிங் காலேஜ் போனான். அவன்தான் அதை
சிரமேற்கொண்டு வளர்க்கிறான். இரண்டு, மூன்று நாளாய் வீட்டிலேயே இருந்தது.
இன்றுதான் வெளியே விட்டான். இன்ஜினியரிங் படிக்கிற பையனுக்குக் கோழிகள்
வளர்க்கிற வாஞ்சை இருக்கிறதே என்று அதிகபட்சமாக ஆச்சரியப்பட வேண்டாம்,
அவனுக்கும் தற்போதைய நிலையில் நாட்டுக்கோழி, மிசின் வெள்ளைக்கோழி என்ன விலை
என்பதை தெரிந்து வைத்திருந்தான். ஒருவேளை, அவர்களுக்கு அதிக சந்தோசத்தைக்
கொடுக்கிறவைகளைக் கொண்டுவந்து சேர்ப்பதில் என் வருமானம் சுணக்கம்
காட்டுவதால், இப்படிச் சுயமாக வருமானம் ஈட்டும் எண்ணம் வந்திருக்கலாம்.
இன்றுதான் முதல் முதலில் வெளியே விட்டான். சற்று வெளியே சுற்றவிட்டு
மீண்டும் வீட்டில் அடைத்துவிட எனக்குச் சொல்லிச் சென்றான்.
நான்
அடிக்கடி அவைகளைப் பார்த்துக்கொண்டே இணையத்தளங்களில் ஓயாமல் ஊடாடும்
முக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் நான் ஏற்கனவே சொன்னதுபோல பஞ்சுக் காய் வெடித்து அதில்
மிருதுவான பஞ்சு தன் மென்மையை வெளிப்படுத்து வதுபோல் கோழிக்குஞ்சுகள் சின்ன
மூக்குடன் குறுங்கால்களைக் கொண்டு அதன் தாயைச் சுற்றி வந்துகொண்டிருந்தன.
நாய்க்குட்டிகள் அவைகளைப் பார்த்து ஓடுகின்றன. ஒரு நாய்க்குட்டி என்றால்
கோழி எச்சரிக்கையாகி குத்தித் துரத்திவிடும். ஐந்து குட்டிகள் இப்படியும்,
அப்படியும் கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க ஓடுகின்றன. நாய்க்குட்டிகளுக்கு
அதன் தாயிடம் போதுமான பால் இல்லை. சோறு திங்கிற நிலைக்கு இன்னும் வராத
குட்டிகளாய் இருக்கின்றன. பால் காய்ச்சி ஊற்றலாம், நாங்களோ தினமும்
காபியோ டியோ போடுவது தேவையில்லாத வேலையாக நினைக்கின்றோம். சோம்பேறித்தனமோ
குடிக்கப்பழக்கமில்லாமலோ இல்லை. தினமும் என்கிறபோது ஒரு கணிசமான
பட்ஜெட்டைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் போடணும் என்று தோன்றினால்
போடுவது... இல்லை என்றால் விட்டுவிடுவது என்றுதான் நாட்கள் போகின்றன.
முற்றிலும் காபி போடாமல் விட்டுவிடுவதும் இல்லை. பரிதாபப் படுவதுபோல்
குட்டிகள் வயிறு ஒட்டிவிடவும் இல்லை. ஆனாலும் நாய்க்குட்டிகள் எதாவது
தின்றுகொண்டே இருக்க நினைக்கின்றன. அப்படித்தான் அந்தப் பூங்குஞ்சுகளைப்
பிடிக்க ஓடுகிறது. நான் இணையத் தளத்திலிருந்து பார்வையை விலக்கி வெளியில்
பார்த்தபோது தாய்க்கோழி இப்படியும், அப்படியும் நாய்க்குட்டிகளைத்
துரத்திக்கொண்டிருந்தது. நான் எழுந்து ஓடினேன். அதற்குள் ஒரு கொழுந்துக்
குஞ்சை வாயில் கவ்வியது. நான் கத்திக்கொண்டு வெளியே ஓடியபோது
விட்டுவிட்டது. ஆனால் கோழிக்குஞ்சு அவ்வளவு சீக்கிரத்தில் உரங்கத்
தொடங்கியது. அதுகூட சற்று முன் மிக உற்சாகமாகத் தன் சிறகடித்துக் கோழியின்
முதுகின் மீது உட்கார்ந்தது. அங்கிருந்து சற்று தூரம் பறந்து மீண்டும் மற்ற
கோழிக் குஞ்சுகளிடம் சிக்களான் செய்து விளையாடியது. இவ்வளவு சீக்கிரத்தில்
அதன் வாழ்வு முடங்கி, மூலையில் உறங்கும்படியானது ஏன்?. எனக்கு
அந்நிலையில் அந்தப் பூந்தளிரைப் பார்த்தும் இனிப் பிழைக்காதா... எதற்காக
இந்த ஜீவன் பிறந்தது. அது என்ன சாதித்தது. ஏன் இப்படி திடீரென ஆபத்து
நேர்கிறது என்று மிகவும் வேதனையாக நினைத்தேன்.
அப்போதுதான் மீண்டும்
அக்கோழிக்குஞ்சுகளிடம் போகக்கூடாது என்று எச்சரிக்கும் விதமாகக் கையில்
ஒரு குச்சியை எடுத்தேன். கோழிக்குஞ்சியைக் கடித்த நாய்க்குட்டி மீதுதான்
எனக்குக் கோபம். அது மீண்டும் வேறு கோழிக் குஞ்சியிடம் போனால் ஒரு
அடிகொடுக்க வேண்டும் என்று நின்றேன். ஒருவேளை கோழியை வீட்டிற்குள்
ஓட்டிவிட்டிருந்தால் நாய்க்குட்டிகள் கடிக்க வாய்ப்பில்லை என்று
நினைத்தேன். ஆனால் நாம் இல்லாதபோது சுதந்தரமாய்க் குஞ்சுகளைத் துரத்திக்
கடிக்க நேருமல்லவா? அதனால் கோழிக் குஞ்சியிடம் போகக் கூடாது என்பதை ஒரு
பயிற்சியாக்க வேண்டுமென்றே நின்றேன். கோழி தன் குஞ்சுகளுடன் பதட்டமாய் ஒரு
நிலையில் இல்லாமல், சுற்றிச்சுற்றி தன் பார்வையை நாலாப் பக்கமும்
செலுத்தியிருந்தது. பக்கத்தில் நாய்க்குட்டிகள் பால் இல்லாத தன் தாயின்
மடியை மோதுவதும் கோழிக்குஞ்களிடம் வருவதும் திரும்புவதுமாக இருந்ததன.
இருப்பதிலேயே சற்று அழகு என நினைத்த குட்டிதான் திடீரென ஓடிவந்த
கோழிக்குஞ்சைப் பிடிக்கத் தாவியது. அப்போதுதான் அடித்து விட்டேன்.
இத்தனைக்கும அந்தக் குட்டி கோழிக்குஞ்சைக் கவ்விக் கடிக்கவில்லை. ஓடிவந்தது
ஆனால் குஞ்சு தப்பிவிட்டது. வாழ்க்கையை என்னவென்று சொல்லுவேன்?
பூந்தளிரான குஞ்சைக் கடித்தது ஒன்று, நான் தவறுசெய்ததற்குத் தண்டனைத் தரத்
தயாராக நின்றபோது, வேறொன்று குறுக்காக வந்து அடிவாங்கிக் கொண்டது.
அடித்தமாத்திரத்தில் இடுப்பிலிருந்து செயலிழந்த விதமாக இழுத்துக்கொண்டு
முன்னங்கால்கள் இரண்டில் நடந்தது. திடீரென்று நோயுற்ற முகமாக சோகத்தில்
ஆழ்ந்தது. இருகண்களின் இரப்பை ஓரத்தில் கண்ணீர் சொட்டாக வழியாமல் ஈரம்
கோர்த்திருந்தது.
நான் அதிர்ச்சியுடன் அய்யய்யோ இத்தனை கொடுஞ்செயலை
செய்து விட்டேனே, சப்பை நகர்ந்து விட்டதா? குழந்தைக்குட்டி கொஞ்சநேரம்தான்
வலிதாங்காமல் கத்தியது. அதன்பிறகு கத்துவதை நிறுத்திவிட்டு ஓரமாக
ஒதுங்கியது. இவ்வளவு நேரமாக ஒன்றோடு ஒன்று ஓடியாடிக்கொண்டிருந்த
குட்டிகளில் ஒன்று திடீரென இந்நிலைக்குச் சென்றுவிட்டதை மற்ற குட்டிகள்
உணரவில்லை. அவைகள் எப்போதும்போல் அதன் பாட்டுக்கு விளையாடிக்
கொண்டிருக்கின்றன.
நான் கொம்பைக் கீழே போட்டு குட்டியைக் கையில்
தூக்கினேன். கால்கள் ஏதாவது ஒடிந்து விட்டதா? இரு கால்களையும் மடக்கி
மடக்கி நீவி உருவினேன். அதன் உடல் உதறல் எடுத்துவிட்டது. லேசான முனகல்
மனிதன் குளிர் ஜீரத்தில் நடுங்குவதுபோல் இருந்தது. ஒரு வாரத்திற்குப்
முன்பு கிராமத்திலிருந்து வந்த அண்ணன் மகன் குட்டிகள் அழகாக
இருக்கிறதென்று கண்கள் விழிக்காதபோதே இரண்டு குட்டிகளைத் தூக்கிச்
சென்றுவிட்டான். அவைகளில் இதுவும் ஒன்று. கண்விழிக்காதக் குட்டிய ஏண்டா
தூக்கியாந்த என்று திட்டியிருப்பார்கள்போல. மீண்டும் கொண்டுவந்து இங்கேயே
விட்டுவிட்டான். அதை மீண்டும் கொண்டுவராமல் இருந்திருந்தால் இப்படி
அடிவாங்கியது தவிர்க்கப்பட்டிருக்கும். இடுப்பு செயலிழந்துவிடுமா? இப்படிச்
செயலிழந்த ஒரு நாயை வேறு தெருவில் பார்த்திருக்கிறேன். இரண்டு
முன்னங்கால்களால்தான் நடக்கும். அதன் இடுப்புப் பகுதி தரையில்
தேய்த்துக்கொண்டு போகும். அதைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கும். இந்த
ஜீவன் இப்படி வாழ்வதில் என்ன பலன் இருக்கிறது என்று நம் எண்ணங்கள்
கேட்கலாம். ஆனால் நான் அப்படி வாழ்வதில் உங்களுக்கு என்ன சிரமம் என்ற
கேள்வியை எழுப்பும் விதமாக பல வருஷங்கள் அந்தப் பகுதியின் எல்லா
இடங்களிலும் சுற்றிக்கொண்டே இருந்தது. அதைப் பார்க்கிறவர்கள் எல்லாம், எந்த
மாபாவி இந்த வாயில்லா ஜீவனை இந்த நிலைக்குக் கொண்டுவந்தானோ என்று திட்டாத
ஆளே இருக்க மாட்டார்கள். என்னைப் பொருத்தமட்டில் எந்த கோர்ட்டுக்கும,
பஞ்சாயத்துக்கும் போகாமல் அதன் பாட்டுக்கு வாழ்ந்து, அதற்குக் கொடுமை
இழைத்தவனுக்கு தினந்தோறும தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது என்றே
நினைக்கிறேன். அப்படித்தான் இந்தக் குட்டியின் நிலைமையும் ஆகிவிடுமா? கீழே
விட்டுப் பார்த்தேன். அப்படித்தான் இடுப்பு இழுத்துக் கொண்டு நடந்தது.
எனக்கு காலையில் ஏன் இதன் பாவத்தில் விழுந்தோம் சர்ச்சிக்குப் போகிற
நேரத்தில் இப்படியாகி விட்டதே. அடிப்பட்டு ரத்தம் கொட்டியிருந்தால் கூட
ஏதாவது கட்டுபோட்டு வைக்கலாம், தோல் மூடிய உடலுக்குள் என்ன நடக்கிறது
தெரியவில்லையே. அதன் நிலை மோசமாக மாறியது.
மலம் கழிக்கின்ற இடம்
உப்பிக்கொண்டு வந்தது. நுரையும் தண்ணீருமாகக் கழிய ஆரம்பித்தது. எனக்கு
இன்னும் பயம் கூடிவிட்டது. அய்யோ செத்துவிடுமோ, ஒரே ஒரு அடியில் பல வருஷம்
வாழ வேண்டிய உயிரை எடுத்துவிட முடியுமா? அப்படி ஒன்றும வலுவாகக்கூட
அடிக்கவில்லை என்றுதான் என் உள் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால்
எப்படியோ தவறுதலாக கை அழுத்தத்தைக் கூட்டி அடித்துவிட்டிருக்கிறது. ஒருவேளை
எனக்குள் இருக்கும் வன்முறையாளனின் முகம் இப்போதுதான் எனக்கே தெளிவாகத்
தெரிகிறது. பிள்ளைகள் நாளையோ, மறுநாளோ குட்டிகளை எங்காவது கொண்டுபோய்
விட்டுவிடலாம் என்று பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். அப்படி யோசனை வரக்
காரணம் வீட்டுவாசல், சிலநேரம் விட்டிலேயேக்கூட மலத்தை, சிறுநீரைக் கழித்து
விடுகிறது. மேலும் அவ்வளவையும் பராமரிக்கமுடியாது என்ற எண்ணம்தான். அப்படி
நடந்துவிட்டிருந்தால்கூட இந்த துக்க செயல் நடந்திருக்காது. அநியாயமாக
அதன் உயிரை எடுக்கிற அதிகாரத்தை நான் எடுத்துக்கொண்டேனே. மீண்டும் எடுத்து
அதன் கால்களை லேசாக மடக்கி முதுகை உருவி விட்டேன். ஒருவேளை பள்ளி
நாட்களென்றால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. காலையில் பரபரப்பாக
வேலையிருக்கும். அதை முடித்து ஓடுவதிலேயே கவனம் இருக்கும். இக்கொலைச் செயல்
தவிர்த்திருக்கலாம்.
நான் குளிக்க வேண்டுமே என்று நினைத்தபோதுதான்
இந்த சம்பவம் ஞாபகம் வந்தது. தண்ணீர் காயவைத்து அதன் இடுப்பின்மேல்
ஊற்றினால் என்ன என்று தோன்றியது. அப்படிச் செய்வது சரியா, தவறா என்று
அப்போது தெரியவில்லை. இருந்தாலும் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது இருக்கிற சூழலில் எந்த நிலைக்கெல்லாம் போகவேண்டி இருக்கிறது.
நீங்களேப் பாருங்கள் வீட்டோடு இருக்கிற தென்னை மரங்களில் விழுகிற ஓலைகள்
தென்னை மட்டைகள் இவைகளை எல்லாம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. என் அம்மா
அப்படித்தான் வீட்டின் வாசலுக்கு வெளியே அடுப்பு வைத்து சமைப்பாள்.
காலையும், மாலையும் அப்படிப் பற்றவைக்கிறபோது வீட்டின் வாசலுக்கு மின்
விளக்கே தேவையில்லை. சாப்பாடு முடித்துவிட்டாலும் வெறும் பாத்திரத்தில்
தண்ணீரை ஊற்றி, அடுப்பின்மீது வைத்து லேசாக எரியவிடுவாள். அந்தத் தண்ணீர்
சில நேரம் வெறுமனே அதிலேயே கிடக்கும். அம்மா ஏன் அப்படி வெறுமனே அடுப்பை
எரியவிடுகிறாள் என்று குழப்பமாக இருக்கும். இப்போது ஓரளவு ஊகிக்க
முடிகிறது. அடுப்பு லேசாக எரியும்போதே, நாங்கள் எல்லோரும் அந்த
வெளிச்சத்திலேயே சாப்பிட்டு முடித்திருப்போம். திடீர்திடீரென வீட்டின்
பூட்டை உடைக்கும் இன்றைய விலைவாசியின் பயத்தால் தற்போது பையன் வீட்டிற்கு
வெளியே கல்லை வைத்து அடுப்பு வைத்துள்ளான். அதிகாலையில் குளிப்பதற்குத்
தண்ணீர் சுட வைத்தல் போன்ற காரியங்களுக்கு சுலபமாய் இருக்கும். அந்த
அடுப்பில்தான் அவசர அவசரமாக சின்ன பாத்திரத்தில் தண்ணீர் போட்டேன். தீ
அடுப்பிலும் என் மனசிலும் ஒருசேர எரிந்தது. குட்டியைப் பார்த்தேன்.
கூனியதுபோல் உட்கார்ந்திருந்தது. மற்ற குட்டிகள் வந்து அதன் மீது விழுந்து
விளையாடின. இதற்கு முன்பு அதன் மீது விழுந்தால் எதிர்க்குரல் கொடுக்கும்,
அதிலும் வெள்ளையும் செவிளியும் கலந்த குட்டி அதன் கழுத்தை விளையாட்டாகக்
கடித்து புரளும்போது சடாரென்று ஒரு போர்வீரனைப்போல் முதுகு மயிரெல்லாம்
குத்திநின்று கரகரப்பான குரலில் முரட்டுத்தனமாகக் கத்தி முறைத்து
நிற்கும். மீண்டும் சற்றுக் கோபம் தணிந்து விளையாடும், ஆனால் இப்போது அது
மெதுவாக ஒதுங்கிவிடுகிறது.
தண்ணீர் சூடாகிவிட்டது. குட்டியை
இடதுகையில் தூக்கினேன். அதன் மலம் கழியும் வழியில் வெண்ணிற கண்ணாடி ஜவ்வு
போல் கழிந்து. ஒட்டிக்கொண்டிருந்தது. நான் என்னத்த சொல்றது...? மனசில்
வேதனை கூடிக்கொண்டுதான் இருந்தது. அதற்கு முன் சில நேரம் தூக்கும்போது
குட்டி வாலை ஆட்டிக்கொண்டு அதன் விசுவாசத்தைக் காட்டும் விதமாக என்
முகத்தையோ கால்களையோ நக்க முயற்சிக்கும். இப்போது மிகமௌனமாக இருந்தது. அந்த
மௌனந்தான் என்னைக் குற்றவாளி என்று முத்திரைக் குத்தி காட்டிக்
கொண்டிருந்தது. வயிறு ஏதாவது கொளாப்ரேஷன் ஆகியிருக்குமா? வலது கையால்
தண்ணீர் அள்ளி அதன் முதுகின் மீது ஊற்றி உருவினேன். வலிதாங்க முடியாமல்
விட்டு விட்டு முனகி லேசாகக் கத்தியது. நல்ல சூடுதான் மீண்டும் மீண்டும்
தண்ணீரை அள்ளி முதுகையும், கால்களையும் உருவினேன். குட்டியின் மீதிருந்து
ஆவி புகைபோன்று கிளம்பியது. உடல் உதறல் அதிகமானது. கால்கள் எலும்பு முதுகு
எலும்பு நன்றாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. ஆனால் கால்களை ஊன்ற
முடியவில்லையே. இந்த நேரத்தில் கடவுளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு
மூலையில் விட்டுவிட்டேன். நான் மனநிறைவாகச் செய்யும் எந்த வேலையும் அன்று
செய்யமுடியவில்லை. நாய்குட்டியின் பரிதாப நிலை மனதை சஞ்சலப்
படுத்திக்கொண்டே இருக்கிறது. எப்படியாவது பின்னங்கால் சற்று ஊன்றுகிறதா?
அப்படி நகர்ந்து விட்டால் போதுமே. எங்காவது கொண்டுபோய் விட்டுவிடலாம்
பிழைத்துக்கொள்ளும்” என்று மனம் அங்கலாய்த்தது.
அப்போதுதான் என்
மகள் வெளியே வந்தாள். “என்ன பண்ண. என் சின்ன குட்டி டாமிய. அடிச்சியா?”
என்றாள். அவள் வீட்டிலிருந்தவாறே முதலில் கத்திய சத்தத்தை அறிந்தவள்
என்பதால் அப்படிக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்லுவதென்றே தெரியாமல்
சற்று மௌனமாய் இருந்தேன். ஒரு வேளை செத்துத்போனால் குழந்தைக் குட்டியை
அடித்துக் கொன்றுவிட்டார் என்று பிள்ளைகள் பேசிக்கொள்வார்களா? அப்படியே
நடந்துவிட்டாலும் எனக்கான நியாயத்தை முன்கூடடியே சொல்லி வைத்தால்
நல்லதுதான் என்று சொல்ல ஆரம்பித்தேன்.
“ஹீம்... அடிக்காம முத்தம்
கொடுப்பாங்களா? அது உயிர் வாழற துக்கான உணவு கிடைக்குது. அதுவும் பத்தாம
கொழந்தக் கோழிக்குஞ்சைக் கடிக்கலாமா? அது மட்டும் உயிர் இல்லையா? அதுவும்
வாழவேண்டாமா? என்று சொல்லும்போதே அவர் இந்த உலகத்தைக் கடந்து வேறு ஏதோ
ஒன்றைப் பேசுகிறார். அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று நகர்ந்து
விட்டாள். ஆனால் போகும்போது கோழிக்குஞ்சை கையில் எடுத்து உதட்டின்
கிட்டத்தில் வைத்து “குட்டி டாமி, உன்ன கடிச்சிடுச்சாமா?.அந்த டாமி
அடிக்கிறேன். நீ போ உங்கம்மா அதோபோறா பாரு” என்று கோழியின் கிட்டத்தில்
விட்டாள்.
தான் செய்த செயலுக்கு மறைமுகமாக சற்று ஆதரவைத் தந்ததுபோல்
இருந்தது. நான் வெளியில் கிளம்பிவிட்டேன். இருந்தாலும் கடைசியாக
ஒருபார்வையை அதன் மீது செலுத்திவிட்டுத்தான் சென்றேன். இப்போது மொத்தக்
குட்டியும் ஒன்றன் மீது ஒன்று மூட்டமாக ஏறிப் படுத்திருந்தன. அடிப்பட்ட
குட்டியும் மற்ற குட்டிகளில் தன் முகத்தை சொருகிக் கொண்டிருந்தது.
பின்னங்கால் சற்று ஊன்றி எழுந்து படுத்தது.
நான் சற்று நிம்மதியுடன்
வெளியேறினேன். நல்லவிதமாக நடந்துவிட்டால் ஒரு குட்டியைக்கூட
வைக்கக்கூடாது. எல்லாவற்றையும் எங்காவது சற்றுத்தொலைவில் கொண்டுசென்று
விட்டுவிட வேண்டும். அவைகள் குட்டியாய் இருக்கும் வரைதான் ஓரளவுக்கு
பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. சோற்றுக்கு நான்முந்தி நீ முந்தி என்று
அடித்துக்கொள்ளாமல் எந்த சத்தம் போடாமலும் சாப்பிடுகிறது. அவைகளே வளர்ந்து
விட்டபிறகு தனித்தனியாகப் போடவேண்டியிருக்கிறது. அப்படியே போட்டாலும்
அவைகள் தின்று முடிக்கும் வரை பக்கத்தில் நின்றால் ஓரளவு பிரச்சனை இல்லை.
சற்று ஏமாந்து விட்டால், ஆத்திரமுள்ள ஒன்று இரண்டு வாயாக சாப்பிட்டுவிட்டு
மற்றதையும் திங்க ஓடிவருகிறது. அந்த சமயம் இரண்டு நாய்களும்
முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு ராட்சசிளைப் போல் ஆக்ரோசமாக
சண்டைபோடுகின்றன. அப்போதெல்லாம் கூட்டு வாழ்க்கைக்கு நாய்கள் பயனற்ற மிக
மோசமான ஜந்துவாகக்தான் என்னால் காண முடிகிறது. வளர்ந்துவிட்டால்
வீட்டிற்குப் பாதுகாப்பிற்குக் குறைவில்லை.
ஒரு நாயைமட்டும் தனியாக
வைத்திருந்து அதன் வயிறை நிறைத்துக் கொண்டிருந்தால், எஜமான் மீது
விசுவாசத்தைக் கூட்டிக்கொண்டேயிருக்கும். நாய்களைப்பற்றி இவ்வாறான புரிதல்
எனக்கு ஏற்கனவே இருப்பதால் ஒரு குட்டியையும் வைக்கக்கூடாது என்பதில்
உறுதியாய் இருந்தேன். மேலும் வீட்டுவராண்டா முழுவதும் கண்ட இடங்களில் மலம்
கழித்துவிடுவதால் அவைகளைத் துரத்திவிடுவதில் என் பையனும் முனைப்புடன்
இருந்தான். குட்டியில் அழகாய் இருப்பதால் கட்டாயம் யாராவது எடுத்து
வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது.
எப்போதும்
உட்காரும் இடத்திற்கே சென்று சர்ச்சில் உட்கார்ந்தேன். குட்டிக்குழந்தையை
அடித்துவிட்டேன். அப்பா, அது மிகுந்த வேதனையைத் தனக்குள்ளே வைத்து
வேதனைப்படுகிறது. அதைக் காப்பாற்று என்று மனசுக்குள் வேண்டினேன். எந்த
விடுமுறை நாளிலும் பொதுவாக நூலகம் செல்லவே மனம் கூடுதலான கவனம்கொள்ளும்.
அன்றும் அப்படியே சென்று விட்டேன். மாலை ஐந்து மணிக்குத்தான் வீட்டிற்கு
வந்தேன். வரும்போதே நாய்குட்டியைத்தான் பார்த்து வந்தேன். நாய்குட்டிகள்
காணவில்லை. அவைகள் சுற்றின இடம் யாவும் காலியாக இருந்தது. சற்று பதட்டமாகச்
சென்று மகளைக்கேட்டேன் “நாய்க்குட்டிகள் எங்கே” என்று. அவள் “நீ
அடிச்சியே நாய்க்குட்டி அது நல்லா ஆயிடுச்சி டாடி, எல்லாமே மெத்தமேல
கொண்டுபோய் விட்டுவச்சியிருக்கிறேன்” என்றாள்.
“அப்படியா? நல்லா
நடக்கிறதா?” என்றேன். “ஓடுது” என்றாள். சின்னப்பையன் “நான் மொத்தத்தையும்
கொண்டுபோய் விட்டுட்டு வந்திடுறேன்” என்றான். மகள் “இருடா பாவம், கடைசியாக
நம்ம வீட்டு மீன் குழம்பு சோறு சாப்பிட்டுவிட்டு போட்டம்” என்றாள்.
எல்லோரும் சிரித்துவிட்டார்கள். நான் மெத்தைக்கு வேகமாக நடந்தேன். பையன்
என்னைவிட வேகமாகச் சென்று குட்டியைத் தூக்கிவந்தான். நான் “கீழே விடு”
என்றேன். அவன் என் பக்கமாக விட்டான். இருந்தாலும் அது என் பக்கமாக
வரவில்லை. வேறுதிசையில் ஓடியது. எப்பாடா, பரவாயில்லை. குட்டி தப்பித்துக்
கொண்டது என்று பெரும் மூச்சுவிட்டேன். எல்லாக் குட்டிகளும வயிறுமுட்ட
சாப்பிட்டிருந்தன. நான் சற்று சத்தமாக “டே எல்லாத்தையும் எங்கியாவது
தூக்கிம்போய் விட்டுடுடா” என்றேன். மகள் பாவம் என்று சொல்லிக்கொண்டே ஒரு
கட்டைப் பையை எடுத்துவந்தாள். “பாவமாம் பாவம்... வராண்டா முழுதும்
பேணுவைக்கிதே, என்னதானே பெருக்கச் சொல்றே. நீ பெருக்கினியானா உனக்கு
வருத்தம் தெரியும்” என்றான்.
சற்று கொஞ்சுதல் வார்த்தையோடு
ஒவ்வொன்றாக ஓடிப்பிடித்து பையில் போட்டாள். குட்டிகள் பையை உதைத்து உதைத்து
எழுந்து பையின் வாய்ப்புரத்தில் தலையைத் தூக்கிப் பார்த்தன. அப்போது
குட்டிகள் ஒவ்வொன்றும் செல்லமாக லேசாக விசில் சத்தத்தோடு முனகின.
மகள்
“அய்யய்யோ... செல்லங்கள் போகுதே, செல்லங்கள் போகுதே” என்றாள். பையன்
பையைத் தொங்கவிட்டு நடந்தான். எனக்கும் மனசு சங்கடமாய் இருந்தது. பையன்
வீட்டுகேட்டைத் தாண்டி நடந்தான். தெருவின் பாதையைத் தொட்டு நடந்தான். “டே
தம்பி இருடா. அடிப்பட்டுதே நாமக்காரக்குட்டி அதை மட்டும் விட்டுடுடா”
என்றேன். மகள் சற்று வேகமாகச் சென்று பைக்குள் கையைவிட்டு அந்தக்
குட்டியைத் தூக்கினாள். குட்டி அவள் கைக்குள் அடங்காமல் திமிறி கீழே
இறங்கி வேகமாக ஓடிவந்து என் கால்களை முத்தமிட்டு நக்கியது.
ஜேடி