Monday, October 31, 2011

கட்டுரை

                                   சாக்கடை  சர்க்கரை நோயானது
                                                   

                                                                1
பீடியோ ஆபீஸ் காலையிலே கூட்டம் கலைக்கட்டியது. துப்பாக்கி ஏந்திய போலீஸால் வாசல் மிரண்டிருந்தது. வயிறு பெருத்த இன்னுஞ்சில போலீஸ் மக்கள் கூட்டத்தைக் உள்ளுக்குள் வராமல் தடுத்தனர். சுங்குவைத்த கூவும் சேவல் விரைவாக வந்துபோனது. அனைத்துக் கறை வேட்டியும் வெளிறிய நிறத்தில் இருந்தது. பெரிய கட்சி ஆதரவாளர்கள் டூவீலரில் துண்டுக் கொம்புகளில் கொடியை பின்னியிருந்தார்கள். சிலது பறந்தும் சிலது முடங்கியும் இருந்தது. கவுன்சிலராகவும் வார்டு நெம்பராகவும் நின்ன அநேகரது கழுத்தும் கை விரல்களும் காலியாக இருந்தது. வாலிபர்கள் சைலன்சர் மூடியைக் கழட்டிவிட்டு இரண்டு முறுக்கி முறுக்கி தயாராக நிறுத்தியிருந்தார்கள். பாதிக்குமேல் நபர்கள் கிடைத்த சந்து பொந்துக்களை எல்லாம் பார்களாக மாற்றியிருந்தார்கள். நேரம் கடந்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
                                                                  2
நான் மனு நாமினேசன் செய்யிறபோதுதான் அந்தப்பய்யனும் வந்துநிக்கிறான். ஒரு நாள் முன்ன சொல்லியிருந்தாலும் நான் நின்னுஇருக்கமாட்டேன். நான் கேக்கும்போதெல்லாம் அய்யய்ய நமக்கு அரசியல்லாம் சரிவராதுன்னு சொன்னான். நண்பா நீ நில்லு உன்ன எப்படியாவது ஜெயிக்க வக்கிறேன்னு சொன்னான். எனக்குத்தான் எந்தவேலையும் இல்ல பி ஏ படிச்சிட்டு சும்மாயிருக்கிறோமே, இந்த பொழப்பையாவது பாப்பம்னு பாத்தா, கம்பெனில வேல செய்யிற நாயி அதுக்கும் போட்டியா வந்துட்டது.  அவனமாதிரி இந்த பூமியில யார் இருப்பாங்கப்பாரு, துரோகி. கூடவேயிருந்து எனக்கே பேடியா மாறிட்டான். என் வீட்டுக்கு வரும்போது என் தட்டிலேயே சாப்பாடு போடச்சொல்வேன். அவனுக்கு வேலை கிடைக்க எத்தனை கம்பெனி முகவரியை  தேடிக்கொடுத்திருக்கிறேன். என் சகோதரியின் மைத்துனியைக் கூட எப்படியாவது  பேசிமுடித்து சொந்தமாக்கிக்விட யோசனை செய்தேன். வேற்று சாதிக்காரன்கூட இப்படி ஒரு துரோகத்தை செய்யமாட்டான். சதிகாரன், மோசக்காரன், இவன் எத்தனைப்பேர் குடும்பத்தை கெடுப்பான்  எக்கேடு கெட்டுப்போகப்போகுறான் என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்.

                                                    3
டே நீ ஒண்ணும் கெவர்மெண்டுல  வேலை செய்யலடா, தனியார் கம்பெனிலதான் வேலை செய்யிற, அதனால எங்க கட்சி மூலமா நெம்பரா நிக்கவெக்கிறோம் நீ ஏன் பயப்படுற. உன் சாதியில சுயேட்சயா நிக்கிறானே பி ஏ படிச்ச வேலயில்லாதவன், அவனப்பத்தி கவலப்படாதே. அவன்சோறும் உன்சோறும் ஒண்ணா இருக்குதா என்ன? ஒரே ஊட்டிலேயே வெவ்வேற கட்சியில இருந்து கொண்டு ஒரே எடத்துல நிக்கிறாங்க. நீ ஏண்டா தயங்குற என் சாதிக்கட்சி மூலமா நிறுத்துறோம். இந்தா இதுல இருபத்திஐந்து ஆயிரம் இருக்குது புடிச்சிக்கோ உன்னாண்ட இருக்கிற புறுப்ப மட்டும் குடு மத்த எல்லாவேலையும் நான் பாத்துக்கிறேன். நீ எப்போதும் போல வேலைக்கு போ சாயந்திரம் மட்டும் கேன்வாஷ் செய்ய வந்துடு. டே என்னடா இவ்வளவுதூரம் சொல்றோம் இன்னும் யோசிக்கிற. உன் சாதியில ஒண்ணு ரெண்டு பெருசுங்க பெரியக்கட்சிக்கு போடுவாங்க. வாலிப பசங்க சிலது நடிகர் கட்சிக்கு போடுவாங்க. பாதிபேர் உன் பிரண்டுக்கு போடலாம்னு முடிவுபண்ணி யிருப்பாங்க,  இந்த சமயம்பாத்து நீ நின்னியானா மக்கள் அலை உன்பக்கம் திரும்பும், அந்த நேரம்பாத்து பாட்டில்,  சில்லரை கொஞ்சம் தட்டினா நீ தான் வார்டு நம்பர். நம்ம கட்சி பேர்ல நின்னு நீ வார்டு நம்பரா ஜெயிக்கிறளவு  எனக்கு சப்போட் பண்ணியானா நான்தான் தலைவர். இப்ப எழுதிவசிக்கோ நீ தான் துனைத் தலைவர். இந்த நேரம் பாத்து பஸ்ல வரச்சொல்ல எங்கப்பன் சாதிப்பெயர் சொல்லி திட்டினதெல்லாம் மனசுல வெச்சிக்காதடா.

                                                                       4
போப்பா நண்பனா இருந்தா இவன் சம்பாதிப்பான், நான் சும்மா இருக்கணுமா? நாங்க ரெண்டுப்பேரும் எங்கப்போனாலும் ஒண்ணா போவோம் வருவோம் அப்பிடியிருந்த எனக்கு நான் எலக்ஷன்ல நிக்கப்போறேன்னு அவுரு சொன்னாரா? கூடவேயிருக்கிற எனக்குக்கூட சொல்லாம மனு நாமினேஷன் பன்றாரே. அப்ப என்னால முடியாதா? அதான் ஏதோ ஒண்ணுன்னு ஒரு கட்சியில நிக்கிறேன். நான் என்னமோ அவுரு ஊட்டிலயிருந்து லட்சத்த தூக்கியாந்துட்டா மாதிரி என்ன மோசக்காரன், துரோகி, அவுசாரின்னு ஊர்ல பாக்கிற ஆளுகளாண்டலாம் சொல்லிக்கிணு வராராமே. அரசியல்னு வந்தா அப்பிடித்தான் இருக்கும் எதுவாயிருந்தாலும் பாக்கணும் அதான் ஆம்பளைக்கு அழகு. அத உட்டுட்டு போறவர ஆம்புள பொம்புளயாண்டலாம் சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கிறாரே. அவுருக்கூட நல்ல அரசியல்வாதிதான் இப்படி தப்பான பிரச்சாரம் பண்ணி, பண்ணி என்ன கெட்டவன்னு முத்திரைக்குத் திட்டா, அனுதாப ஓட்டு வாங்கிடலாம்னு பாக்கிறாரு. அதையும்தான் பாக்கலாம். ஒரு காலத்துல ஒதைச்சான் அந்த சாதிக்கட்சியில போய் நிக்கிறானே இவனுக்கெல்லாம் என்ன சாதிப்பற்று இருக்குதுனுவேற பிரச்சாரம் பன்றார். நான் தெரியாமத்தான் கேக்குறேன் எப்பவோ நடந்துபோன விஷயத்தயேன் விஷமத்தனமா பரப்பணும். என் குழந்தையும் ஒசந்த சாதின்னு சொல்றாங்களே அந்தக்குழந்தையும் ஒண்ணாதான் பாடம் படிக்கிறான். விளையாடுறான். அவனுக்கு தெரியாததை நாம கத்துக்கொடுக்கணுமா? நானே என்னளவு ஊர் பசங்களை, டே மாமா மச்சான்னுதான் கூப்புடுறேன். என்னளவில் உள்ள பசங்கள் எல்லோரும் அப்படிதான் நடந்துகொள்கிறார்கள். ஒண்ணா கிரிக்கட் ஆடுரோம் அவன் பங்ஷன்னா எங்களைக் கூப்புடுறான். அவுங்க பங்ஷன் முடிச்சக் கையோட குடும்ப பொம்பள நம்ம எடத்துக்கே வந்து ஒரு வீடு தவறாம பலகாரம் குடுத்துட்டுபோறாங்க. நம்ம பங்ஷன்னா அவன் சாதியில வயசானவன்கூட சிலர் வந்து சாப்பிட்டுபோறான். இப்பப்போய் கடந்த காலத்த நாபகப்படுத்தி அவுங்கள்லாம் உயர்சாதிக்காரன். அவன் என்ன சாணிவாரவச்சான். கோவணம் கட்டவச்சி கூழ் ஊத்தினான் என்கிறபோது நாமளே பழசஎல்லாம் கௌரிக் கௌரி அந்த இழிநிலையை மீண்டும் மீண்டும் புழக்கத்தில் வைக்கச்செய்வதுபோல ஆகாதா?  எனக்கென்னவோ இப்படி அடிக்கடி சொல்றதின் மூலமா சிலருக்கு தனிப்பட்ட அரசியல் லாபம் தேடிக்கிறாங்களோனு தோனுது. இதஒடைக்கணும்னுதான்  சாதிக்கட்சியாய் இருந்தாலும் நம்மள தேடிவரான் பழகுவோம்னு பணம்வாங்கினேன். பணம் வாங்கி என்வீட்டிலயா கொண்டுபோய் வெச்சிக்கினேன். சரக்கா, பணமா எல்லாருக்கும் குடுத்தேன். நாரப்பட மக்கள் ஜனங்களா அது, எவன்குடுத்தாளும் எனக்கு உனக்குன்னு சண்டப்போட்டு வாங்குதுங்க. உள்ளூர்ல எதுனா செய்யலாம்னு போய் ஓட்டுக்கேட்டா சும்மா வந்துகேட்டா ஓட்டு போடுவோமா? மூஞ்சியில, ஓட்டதான் போடுவோம்னு சொல்லுதுங்க. எதுவோ நடக்கட்டும்.

                                                                    5
எப்பவும் நண்பனாகவும், எப்பவும் விரோதியாகவும் இருப்பது நல்ல மனிதனுக்கு  அழகுஇல்லைதான். இவ்வளவு நாள் நண்பர்களாய் இருந்தீர்கள். இந்த வார்டு நெம்பர் பதவிக்கே, நட்ப்பை இழக்கணுமா? இப்ப நாங்க யாரும் சாதி பாக்கிறதில்லைனு சொல்றே நல்லதுதான். ஆனா இதுவரைக்கும் கிராம வருவாயில் உங்களுக்கான பங்கு என்னனுதெரியுமா? எப்பவாவது அதுல எங்களுக்கும் பங்குண்டுனு கேட்டிருக்கிறியா? ஆது எனக்கு தேவையில்லாத வேலைனு சொல்றே. பரவாயில்ல உன்பெருந்தன்மையை பாராட்டுறேன். கிராமத்துல எத்தனையோ நலத்திட்டம், காண்ராக்ட் வேலை ஒதுக்குறான் எதாவது ஒண்ணு உங்காளுங்க செய்ய விட்டுக்கொடுக் கிறாங்களா?  உனக்கு தேவை அதிகமிருக்கு, அவனிடம் பொருள் அதிகமிருக்கு கேட்கும்போது கொஞ்சமேனும் தந்தால் சற்று நிம்மதியாய் போகும். மூர்க்கமாய் மறுத்தால் இருவருக்குமான கருத்தில் சுமூகம் இருக்குமா? தனக்குள் கொதிகலனை வைத்துக்கொண்டே பிரகாசமான முகத்தைக்காட்டி சுற்றும் சூரியன்போல் உயர்ந்தவனுள்ளும், தாழ்ந்தவனென்று அடையாளப் படுத்தப்பட்டவனுக் குள்ளும் மறைமுகமான வன்முறை இருக்கத்தான் செய்கிறது. விடிந்தால் தெரிந்துவிடும்போ.

                                                                      6
வாழ்த்துக்கள் புது வார்டு நெம்பரே, உன் சந்ததியில் நீதான் முதலில்  மதம் பிடித்த யானையின் வால் நுனிமயிராக ஒட்டிக்கொண்டாய் என்று நினைக்கிறேன்.  நான் உன்னை எதிர் பார்க்கவேயில்லை. அந்த கம்பெனியில வேலைசெய்யிரானே அவன்தான் வருவான்னு எதிர்பார்த்தேன். பராவாயில்ல ஜனங்கள் உன்னை எதுக்கோ ஆவலாக தேர்வுசெய்திருக்கிறார்கள். நீ பணம்கூட அதிகமாய் செலவு செய்யவில்லையே. மக்களைக் கவர என்ன திட்டத்தை பிரயோகித்தாய். தயவுசெய்து சொல் அடுத்து வரும் தேர்தலில் நான் பயன்படுத்திக் கொள்கிறேன். சரி அதுபற்றி பிற்பாடு  பேசலாம், இப்போது விஷயத்துக்கு வருகிறேன். உன்னைப்போல் வெற்றி பெற்ற வார்டு நெம்பர் ஐந்துபேரும் என்னைத்தான் துனைத்தலைவர் பதவிக்கு தேர்வுசெய்திருக்கிறார்கள். எனக்கு முன்பே உன்னை துனைத்தலைவர் பதவிக்கு தேர்வுசெய்யுங்கள் என்று அவர்களிடம் போய் நீ பேசியதாக அறிந்தேன். பராவாயில்லை பதவி ஒரு போதிமரம் அதன் துளிர்த்து தொங்கும் வேர்களைப் பிடித்துவிட்டால், சுகமான சுகத்தைத்தந்து தாளாட்டும். அனுபவித்தவர்கள்,  என் கரத்தாலே இது துளிர்த்திருக்கிறது. நானே இதைக் காக்கும் வல்லுநர் என்று அடம் பிடிப்பார்கள். நீயே சொல் என்ன செய்யலாம். அவர்களுக்கு திருப்தியாகவே பணத்தை கொடுத்துள்ளேன். நீ எனக்கென்று விட்டுக்கொடுப்பாயா?  இல்லை முடிந்தவரை முயற்சி செய்கிறாயா?

                                                                   7
தலைவரே நீங்கள் அனுபவசாளிகள். நான் புதியவன் எனக்கு அவ்வளவாகத்தெரியாது. அவர்களுக்கு இருபத்திஐந்து கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன். நீங்களே துனைத்தலைவராக இருங்கள் அதுதான் சிறந்ததுங்கூட, எனக்கு ஐம்பதா சேர்த்துக் கொடுத்துவிடுங்கள்.

குறிப்பு-
1. கட்டுரையாளர்
2 . வேலையில்லாதவன்
3 .சாதிக்கட்சி
4 . கம்பெனிக்காரன்
5 . கட்டபஞ்சாயத்துக்காரன்
6 . வார்டில் ஜெயிடத்தவன்
7 .  வேலையில்லாதவன்
  
ஜேடி

Tuesday, October 25, 2011

கவிதை

    வாழ                
தடை இல்லை  

காலொடிந்து                                                       
நீரில் முழ்கும்
வெள்ளை பல்லி
வெளியில் எங்காவது
உயிருக்கு போராடினால்
கரிசனையோடு
காப்பாற்றிவிடுகிறேன்
திடுமென காலையில்
வீட்டு தண்ணீர்க் குடத்தின்
மூடியை தொட்ட
குட்டி பல்லியை
அவசரமாய் தலை நசுக்கிப்போடுகிறேன்.

என்னைப்போலவேதான்
அவனையும் என் தாய் பெற்றாள்
வெறுமனேதான் அடிக்கடி
விஷம் தோய்ந்த பற்களால்
அவனை கோதிவிடுகின்றேன்
சற்று தூரம் சென்று
டீக்கடை வாசியிடம்
காதலியின் குவிந்த இதழில்
காம வெள்ளோட்டத்தை
உறஞ்சுவதுபோல் பேசுகிறேன்.

இருபது வருடங்களாய்
நட்பிலக்கணம் வகுத்துக்கொண்டே
அதிகாரியின்
பாதங்களைப் பற்றி
வைத்துவிட்டேன்
எனக்கான வெள்ளை மனு
உயர் பதவிக்காக.

இருபத்தியைந்திலிருந்து
நாற்பது வரை
எண்ணைப் பசைக் கொழிப்பால்
துப்பாக்கியை மனதுக்குள்
பிடித்து நடமாடினேன்
அதே எண்ணையின் குறுக்கீட்டால்
அவயங்கள் முடங்கி
பதுங்கு குழியைத்தான்
தேடமுடிந்தது
இப்போது
நண்பனும்,தம்பியும்,சார்பாளரும்
இல்லவே இல்லை
கூப்பிடும் தூரத்தில்.

ஜேடி






Friday, October 21, 2011

நாவல்

போக்கு 4


மாணிக்கம்
பள்ளியில் நீர் வார்ப்பவர். அவர் சர்வீஸ் புத்தகத்தில் அப்படித்தான் பதிவாகியிருந்தது. ஆனால் காவலர் பணியை ஏறக்குறைய இருபது வருஷங்களாக செய்திருக்கிறார். அதன்பிறகுதான் அவர் எஸ்.ஆரில் இருக்கும் பதவியை கடந்த பதினைந்து வருஷங்களாக செய்து, பணி நிறைவு விழாவில் கதாநாயகனாக அமர்ந்திருக்கின்றார். முதிர்ந்த வேப்பமரம், பூமரம் கூட்டு நிழலின் கீழமைந்த மேடை சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. மேடையின் கூரையில் இருபுரத்திலும் ஆலோஜின் லைட் ராட்ச்சசவெளிச்சத்தை பரப்பியிருந்தது. தரையில்இரண்டு சிட்டிங் பென்ச்போட்டு அதன்மீது கிளாத் போட்டு மூடியிருந்தார்கள். அதற்கு மேல் நடுவாக பிளவர்வாஷ் வைத்திருந்தார்கள். ஆறு சேர் ஒரேமாதிரியாகப் போடப்பட்டிருந்தது. நடுவாக மாணிக்கம் தன் மனைவியோடு அமர்ந்திருந்தார். ஏறக்குறைய புதுமணத்தம்பதியாகும்போது செய்யப்படும் சடங்குகள் சரியாகசெய்யப்பட்டது. இருவர் கழுத்திலும் வண்ண மலர்களின் மாலை. கைகளில் மலர்கொத்து இருந்தது. மாணிக்கத்தின் மனைவிப்பக்கத்தில் பள்ளியின் கல்வி அலுவலர். மாணிக்கத்தின் பக்கத்தில் தலைமை ஆசிரியர். பிற சேர்களில் வாழ்த்திப்பேச ஒருவர். ஜெபத்துடன் விழாவைத்துவங்க ஆயர் என அமர்ந்திருந்தார்கள். தாம்பாலத்தட்டில் பலவிதமான தரமுள்ள பழங்கள் வைத்து, அதன் நடுவில் ஒரு சவரன் மோதிரப் பெட்டி வைத்திருந்தார்கள் மொத்த சர்வீஸை கணக்குச்செய்த்து நிர்வாகத்தின்மூலம் பணமுடிப்பை ஒரு நீளக்கவரில் செக்காக போட்டுவைத்திருந்தார்கள்.

மேடையில் எல்லோருக்கும் மீட்டிங் நடத்துவதற்கான ஒழுங்குமுறைத்தாள் அச்சிட்டு தந்திருந்தார்கள். மேடையின் கீழ் இரு ஆண், பெண் ஆசிரியர்கள்கவிதை இல்லாமல் கவிதை நயத்துடன் காம்பியர் செய்தார்கள். ஆறிலிருந்து பன்னிரண்டு வரை மாணவர்கள் ஏறக்குறைய இரண்டாயிரம் மாணவர்கள் மேடையில் சொல்லுகிற எந்தக்கருத்துக்கும் மறுப்பு இல்லாமல் கேட்பதற்கு மட்டும் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். ஒரே கிளாசாக இருந்தாலும் அவனுக்கு இஷ்டமான நண்பனுடன் உட்கார அனுமதிக்கப்படவில்லை. அப்படியும் அடக்குமுறையில் இருந்து விடுபட்ட விதமாக, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு பிடித்தமான சேஷ்டையை செய்துக்கொண்டிருந்தார்கள். பள்ளி பாடகர் குழுவினர் இறைவாழ்த்து பாடினார்கள். வேதம் வாசிக்கப்பட்டது. ஆயர் ஜெபத்துடன் விழா துவங்கியது. முதலில் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்கினார்.

“மாணவச்செல்வங்களே என்று சம்பிரதாயமான வாழ்த்துக்களில் ஆரம்பித்தார். நான் வேலூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியின் மூலையில் ஒரு கிராமதைச் சேர்ந்தவன். எனக்கு உங்களைப் போல நகர்த்தின் மையப்பகுதியில் சிறந்து விளங்கும் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் தந்தை சாதாரண கூலி விவசாயி. ஐந்தாவதுவரை எங்கள் கிராமத்திலேயேப் படித்தேன். ஆறாம் வகுப்பு எட்டு கிலோமீட்டர் நடந்துச் சென்றுதான் படிக்கமுடிந்தது. இப்பள்ளியின் சைக்கிள் ஸ்டேண்டை பார்த்தே ஆச்சரியப் பட்டேன். பக்கத்து தெருவிலிருந்து கூட சைக்கிள் எடுத்து வருகிறீர்கள். என் அம்மா காலையில் கூழ் கறைத்து கொடுப்பாங்க. தொட்டுக்க பாதி வெங்காயம். நான் அதை அமிர்தமாக குடித்துவிட்டு பலகையும் நோட்டுபுத்தகத்தையும் எடுத்துக்கொண்டு ஓடணும். சட்டையில் மேல் பட்டன் மட்டும்தான் இருக்கும் என்றுப் பேசினார்.

இப்படி பேசியபோதெல்லாம் மேடை நிசப்த்தமாய் இருந்தது. மேடையில் பெடஸ்ட்டல் பேன் சத்தம் தெளிவாய்
க் கேட்டது. ஒரு பக்கத்தில் மாணவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. “வீட்டில் எங்கப்பா கடந்த காலஏழ்மையை சொல்லிச் சொல்லி போர் ஏத்துவார். இங்கேயும் அதையே சொல்லி சாகடிக்கிறாரே” என்று ஒருமாணவன் இன்னொரு மாணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவருக்கு குரல் சற்று கரகரத்தது. இந்த வலி இப்ப தெரியாது. நீங்கள் ஒருவேளை இந்த காலத்தைச் சரியாக பயண்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பின்னாளில் அதனுடைய வலி மிகவும் வேதனை நிறைந்ததாக இருக்கும். உங்கள் வயதொத்த எங்கள் காலங்களில் மதியத்தில் பள்ளியில் சரியான சாப்பாடு கிடைக்காது. நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் போக்கு வரத்து காரணமாக கிராமங்களுக்கு ஆசிரியர்கள் வர தயங்குவார்கள். ஆனால் உங்களுக்கு அப்படியல்ல. நல்ல உடை அணிகிறீர்கள். நிறைய ஆசிரியர்கள் தொடர்ந்து போதிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் நல்ல வசதியை பெற்றுள்ளீர்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் நல்ல முறையில் படித்து இப்பள்ளிக்கு பெறுமைத் தேடித்தரவேண்டும்.

முப்பத்தி ஐந்தாண்டு தன் பணியை சிறப்பாக செய்து பணிநிறைவு செய்திருக்கும் மாணிக்கத்தை வாழ்த்துகிறேன். என்றபோது தலைமை ஆசிரியர் குறிக்கிட்டு தாம்பாலத்தட்டை கல்வி அலுவலரிடம்
கொடுத்து தம்பதிகளுக்கு கொடுக்கச்சொன்னார். தம்பதிகள் தட்டை வாங்க ஆவலாய் நின்றார்கள். கல்வி அலுவலர் மேடையில் இருந்த அனைவரையும் அழைத்தார். எல்லோரும் தாம்பாலத்தில் கையை வைத்தார்கள். மாணவர்கள் உற்சாகம் தாங்காது கைகளைத் தட்டினார்கள். சத்தம் அடங்கவிலை. பிஈடி விசில் சத்தம் மூலைக்கு மூலை கேட்டதும். சற்று அமைதியானது மாணிக்கத்திற்கு உறவினர் பரிசுபபொருள்களைக்கொடுத்து வாழ்த்தினார்கள்.

மாணிக்கத்தோடு பணிசெய்தவர் தட்டுத்தடுமாறி வாழ்த்துரை வழங்கினார். தலைமை ஆசிரியர் “தான் இப்பள்ளிக்கு வருவதற்கு முன்பிருந்தே மாணிக்கம் இப்பள்ளியில் வேலையில் இருக்கிறார். ஒரு மரத்தை தாங்கி நிறுத்தியிருக்கும் வேர்கள் எப்படி கண்ணுக்குப் புலப்படுவதில்லையோ, அதைப்போலதான் இப்பள்ளிக்கு அநேகரின் உழைப்பும், உதவும் பண்பும் மறைமுகமாக வந்துசேர்கிறது. அப்படி சேர்கிறபோது பள்ளி அதன் இயல்பில் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்கிறது. அதற்காக யாரும் ரத்தம் சிந்தவேண்டியதில்லை. அதன் பற்களை யாராலும் பிடுங்கிப்போடவும் முடிவதில்லை. நாளுக்கு நாள் எப்போதும் எழுகிறது. அதுதான் நம் பள்ளி. இப்
பள்ளியில் பணிசெய்கிற நாங்கள் தற்போதைய வழிகாட்டிகள். அவ்வளவுதான் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களைவிட மோசமானவர்கள் வரலாம், எங்களைவிட சிறப்பானவர்கள் வரலாம். மோசமானவர்கள், சிறப்பானவர்கள் என்று தீர்ப்பு வழங்குகிறவர்கள் மாணவர்களாகிய நீங்கள்தான். உங்கள் பார்வைக்கு மறைவாக எங்கேயும் ஓடி ஒளிந்துக்கொள்ளமுடியாது. நாங்கள் உங்களுக்காக உழைக்க மனம் மாறுகின்றோம். நீங்கள் உங்களுக்காகவே படிக்க மனம் மாறுங்கள்.” என்று மாணவர்களின் வாழ்த்துரையாகவும் முடித்தார்.

மாணிக்கம் தன் இயல்பான சில கண்ணீர்த்துளிகளுடன் ஏற்புரையை முடித்தார். நன்றியுரை ஆசிரியர் கழகத்தின் தலைவர் சொன்னதோடு பணி நிறைவு விழா முடிந்தது.

மாணிக்கம் தம்பதிகளுக்கு விருந்தினர்களுடன் மையப்பகுதியில் அமர்த்தி இலை போடப்பட்டது. சாப்பாட்டு இருக்கையில் ஆசிரியர்கள் வருசையாக அமர்ந்தார்கள். சுகந்த் இலையில் டம்ளர் வைத்து தண்ணீர் தெளித்துவந்தான். மாணிக்கத்திடம் வந்ததும் லேசான சிரிப்பு தானாக வந்தது. சர்வீஸில் இருக்கும்போது மாணிக்கமும், சுகந்த்தும்தான் ஒருவரில் ஒருவர் அதிகமான அக்கறையுள்ள நண்பர்கள். வயதில்
இருவருக்கும் அதிக ஏற்ற இறக்கங்கள் உண்டு. அடிக்கடி நகைச்சுவையாகவும் பேசிக்கொள்வார்கள். இப்போது சுகந்த் எதற்காக சிரிக்கிறான் என்பது மாணிக்கத்திற்கு தெரிந்துதான் இருந்தது.

எந்தவொரு மீட்டிங்காக, பள்ளி விழாநிகழ்வாக இருந்தாலும் சாப்பாடு கொடுப்பது மரபு.
பள்ளியின் ஏதோ ஒரு மூலையில் பிரியாணிதான் செய்வார்கள். அதற்கு விரகு, கிரோஸின் வாங்கிவருவதிலிருந்து. ஐந்து கிலோ பூண்டு சில நேரம் மாணவர்கள் உறித்துவிடுவார்கள். இஞ்சியை சுத்தமாகக் கழுவி கட்செய்து மைய அறைத்துத் தருவது வரை. நகராட்சியிலிருந்து வருகின்ற தண்ணீரை டேக்சாக்களில் நிறப்பிவைப்பது, இப்படியான வேலைகளை மாணிக்கம் முதல் காவலர் வரைஉள்ள நபர்கள்தான் செய்துதர வேண்டும். ஆனால் பந்தியின் போதுமட்டும் ஆசிரியர்கள்தான் முதலில் உட்காரவேண்டும். எந்த சூழ்நிலையிலும் மாணிக்கம் முதல் காவலர்வரை பந்தியில் உட்காரக்கூடாது. தவறி உட்காரும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நம்பி உட்கார்ந்துவிட்டால் பிரியாணி செய்கின்ற பொறுப்பாளர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் சொல்லுவார்கள்.

கிளர்க் தவிர்த்து, அலுவலக உதவியாளர்கள் ஓரளவு பந்தி முடிந்த பின்னரே சாப்பிட உட்காரவேண்டும். சாப்பிட்டு முடிந்தபின்னர், ஏதாவது பாத்திரம் எடுத்துவர பணிப்பார்கள். பிரியாணி டரம்மின் பாதி மூடியதுபோல் மேல் தட்டுஇருக்கும்.அதன்மீது பிரியாணியை
அள்ளிப்போட்டு வைத்திருப்பார்கள். சில நாள் பீஸ் இருக்கும். சிலநாள் ஒன்றுமே இருக்காது. பிரியாணி பொறுப்பாளர்கள் போய் பாத்திரம் எடுத்தாங்கபா என்று சத்தமாக சொல்லுவார். மாணிக்கம் முதலில் வாங்கிவிடுவார். சுகந்த் வாங்க அச்சப்படுவான். சில நேரம் வாங்கவில்லை என்றால் இப்ப கொஞ்சம் காசுசேர்ந்திடுச்சி அதான் வேணாம்கிறான்னு கேலிசெய்வார்கள். அதற்காகவே வாங்கவேண்டியதாய் இருந்தது. பாத்திரத்தை வைத்துக்கொண்டு வாங்குவதை நினைத்தால், ஊர் திருவிழா நடந்தால் சுகந்த் கிராமத்தில் வருசையாக வந்து நாய்க்கர் வீடுகளில் சோறு இனிப்பு கொழுக்கட்டை என்று வாங்கிவருவார்கள். அதை இப்போது நினைத்தான். அதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு? ஏன் இப்படி வாங்கவேண்டும். இப்படி வாங்குவதால்தான் தம்மை முதல் பந்தியில் உட்காரவைக்க அனுமதிப்பதில்லையா? இந்த பள்ளியை ஆண்டைகள்தான் நடத்துகிறார்களா? பள்ளியில் பணிசெய்கிறவர்கள் எல்லோரும் வந்தேரிகள்தானே இதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை. தலைமை ஆசிரியராய் இருந்தால் அவருக்குறிய பணியில் உண்மையாய் இருக்கவேண்டும். பெருக்குகின்றவன் அவனுக்குறிய பணியில் சரியாக இருத்தல்வேண்டும். இவர்கள் பள்ளியைவிட்டு சமூகத்திற்குள் வந்தால் எல்லாரும் சாதாரண மனிதர்கள்தான். பஸ்நிலையத்தில் தெரியாமல் யார் மீதாவது மோதிவிட்டால் திட்டுவாங்கித்தான் ஆகவேண்டும்.

சுகந்த் தன் மனதிற்குள் ஒரு முடிவை எட்டியிருந்தான். கிறுத்தவஆசிரியர் கழக செயளாளரிடம் கிறிஸ்மஸ் கெட்டு கெதருக்கு எல்லா ஆசிரியர்கள், கிளர்க்குகளிடம் வசூலிப்பதுபோல எங்களிடமும் வசூல் செய்யுங்கள். ஏன் அலுவலக உதவியாளர்வரை வசூலிக்க மறந்துவிடுகிறீர்கள். இந்த முறை காவலர் வரை எங்கள் பங்கை செலுத்துகிறோம்” என்றான்.

செயளாளர் “நீங்கள் எல்லாம் குறைவான ஊதியம் வாங்குகிறீகள் என்று விட்டுவிட்டோம். மேலும் அது உங்களுக்கு லாபமான செயல்தானே, அதை ஏன் இழக்கிறீர்கள்”. என்றார் .

“அப்படியல்ல எங்களை எங்களுக்கான உரிமையில் பங்கு கொள்ளச்செய்யாமல் இருக்கவைப்பதன் மூலம் எங்களை இழிவுபடுத்தி உங்கள் மனப்போக்குக்கு எங்களை செயல்படவைக்க வழி செய்கிறீர்கள்”. சுகந்த் கேட்டுக் கொண்டிருக்கும் போதே காவலர் என்னையும்
சேருங்கசார்” என்றார்.

அலுவலக கிளர்க் “இன்னாடா பசங்களா பண
ங்கொழுப்பா? உங்க பேர் விடுபட்டது நல்லதுதானேன்னு விட்டுட்டு போகாத பேர சேக்கச்சொல்லி அடம் புடிக்கிறீங்களாமே” என்றார்.

செயளாளர் தலைமை ஆசிரியரிடம்சென்றார். தலைமை ஆசிரியர் அவர்கள் விரும்பினால் நாம் தடைசெய்யமுடியாது என்
றார். தங்களுடைய பேச்சை மதிக்கவில்லை என்ற ஆதங்கம் கிளர்க்“ இந்த டஸ்பீனை சுத்தப்படுத்தி கொண்டா என்றார். பிறர் பார்வைக்கு தன்னை உண்மையான கிறுத்தவன் என காட்டிக்கொள்ள நினைக்கிறவன் இப்படி உடனடியாக பழிவாங்குகிறவனாக இருக்கிறான். சுகந்த் “அதெற்கென்ன சார் கொட்டி சுத்தப்படுத்திவிட்டால் போகிறது’ என்று எடுத்துச்சென்றான்.

கிறுஸ்மஸ் கெட்டுகெதரில், சுகந்த்துடன் காவலர்வரை முதல் பந்தியிலேயே உட்கார்ந்து இலையை கழுவிக்கொண்டிருந்தார்கள். பிரியாணி பொறுப்பாளர்கள் முகம் கடுப்பேறியிருந்தது. காவலர் நாம இருந்தா சர்விங்செய்ய வசதியாக இருக்கும் என்றான். சுகந்த் ஏம்பா வெளியாட்கள் யாராவது வந்து நாம சாப்பிட்டாதான் நமக்கு சங்கடம், இவனுங்க திட்டமிட்டே காலத்துக்கும் கடைநிலை ஊழியர்கள்தான் மனைவியைப்போல் பரிமாரிவிட்டு மீந்ததை சாப்பிடவேண்டும் என்று கடந்த கால கணவர் மார்களைப்போல் நினைக்கிறார்கள். அப்படி இனிமேல் இருக்கக்கூடாது. இதுவரை சர்விங் முடிச்சிட்டுதான் சாப்பிடுவோம், இனிமுதல்ல நாம சாப்பிட்டு சர்விங் பண்ணுவோம். அதுவரை பொறுப்பாளர்கள் செய்யடடும்’ என்றான்.

பிரியாணி பரிமாரப்பட்டது. காவலர் பீஸ் விழுந்ததா என்று கிளறிபார்த்தார். அடுத்து சுகந்த்துக்கு வைக்கப்பட்டது. கிளறினான். கோழிசூத் மட்டும்தான் இருந்தது. அதைப்பற்றி வருத்தம் இல்லை. முதல் பந்தியில் சாப்பிடுவது திருப்த்தியாய் இருந்தது. இந்த சுகத்தை மாணிக்கம் அண்ணன் அனுபவிக்காமலே தன் சர்வீசை முடித்துவிட்டாரே, என்று இரண்டுமாதம் கழித்து நடந்த கிறுஸ்மஸ் கெட்டுகெதரில் நினைத்துக்கொண்டான்.

ஜேடி


Thursday, October 13, 2011

நாவல்

போக்கு 3


மாலா தன் கிராமத்தின் மண் சாலையும், மெயின்ரோடும் ஒன்று கூடும் இடத்தை நெருங்கினாள். எதிரில் கௌரி புளியமரத்தின் இளைப்பாறும் கல்லிளிருந்து எழுந்து வந்தாள். கௌரிதான் முதலில் மாலாவைப்பார்த்தாள். ஆனால் மாலாதான் கௌரியை நல்லா இருக்கிறியா கௌரி என்று விசாரித்தாள். மாலாவின் கணவன் சற்று முன் நடந்துகொண்டிருந்தான். கௌரியின் வளர்ந்த பிள்ளை கிராமம் நோக்கி ஓடினான். இன்னொரு குழந்தை இடுப்பில் வைத்திருந்தாள். கெளரி மாலாவை விட நல்ல கலர்தான். ஏதோ வேண்டுதலுக்காக மொட்டை போட்டிருப்பார்கள் போல குழந்தைகளுடன் கௌரிக்கும் ஒரே அளவில் மயிர் வளர்ந்திருந்தது. கௌரி காதுகளில், இரண்டு மூன்று இடம் சின்னச் சின்ன பொன்னகை போட்டிருந்தாள். குண்டு ஜிமிக்கி தொங்கிக்கொண்டிருந்தது.

வரும் வழியில் பாலுக்காக குழந்தை அழுதிருக்கும்போல புளிய மரத்தின் நிழலில் பால் கொடுத்து எழுந்திருக்கிறாள். மார்புக்குக்கீழ் ஜாக்கட்டின் இரு கொக்கிகள் மாட்டாமல் இருந்தது. வெள்ளை ராசிப்பணங்காவின் அடி பாகம்போல தெரிந்தது. அதன் இடையில் தாலி வாழசீப்பு, மாங்கா, நாணக்குழ, கால்சவரன் சேர்ந்து சரமாக தொங்கியது. தோற்றத்தில் மங்களகரமாய் இருந்த கௌரி மாலாவைப் பார்த்ததும் முகத்தில் சோகம் படர்ந்தது. கௌரியின் இடுப்பில் இருந்த குழந்தையை மாலா வாங்கினாள். கௌரி கொக்கி போட்டுக்கொண்டாள். மாலா குழந்தையின் வாயோடு தன் வாயை வைத்து முத்தமிட்டாள். குழந்தையின் வாய் பால் வீச்சம் அடித்தது.


மாலா நீண்ட நேரம் யோசித்தவள்போல், கௌரி நல்லாயிருக்கிறியா என்றாள். அதில் ஆயிரம் கேள்விகள் இருக்கிறது என்பது இருவருக்கும் தெரியும். பதிலுக்கு சிக்குனபிறகு இருந்துதானே ஆகணும் என்றாள் கௌரி. அதிலும் ஆயிரம் பதில் இருப்பதை இருவரும் அறிந்தே இருந்தார்கள். கடந்த காலங்களின் ஏமாற்றங்கள் இருவரின் இயல்பான பேச்சை வெளிப்படுத்த தடையாக இருந்தது. அவைகளை கிளறினால் ரணங்கள் இல்லாமலே வலியை உணர்த்தும் என்று கௌரி நினைத்திருப்பாள், பேச்சை மாற்றினாள். ‘எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் அதான் பார்த்துவிடடு போகலாம்ணு வந்தேன்’ என்றவள், ‘மாலா உன்னப்பத்தியும் கேள்விப்பட்டேன். வேணாம் மாலா, எரிந்து கரியானது காத்துலதான் பறக்கும், தட்டுல விழுந்ததுதான் வயித்த நிறப்பும் பாத்து நடந்துக்க வரட்டுமா, உங்க ஊட்டுக்காறர் ரொம்பநேரம் நின்னுங்கிறாரு நீ போய்வா’ என்று கௌரி குழந்தையை வாங்கினாள்.

குழந்தையை கொடுத்தபோது அதன் கால்கள் மென்மையான ஸ்பரிசத்தை மாலாவுக்கு உணர்த்தியது. மாலாவுக்கு அந்த ஸ்பரிசம் ஞானராஜ் மகன் விக்டரைத்தான் நினைவுபடுத்தியது. அப்போதெல்லாம் சேரியில் முப்பது நாற்பது வீடுகள்தான் இருக்கும் . அதை வீடுகள் என்று சொல்ல முடியாது. கொட்டகைகள் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு குடிசையில் நுழைய வேண்டு மென்றால் உடலை மடித்துத்தான் உள்ளே நுழைய முடியும். ஏறக்குறைய எல்லா வீடுகளுமே அப்படித்தான் இருந்தது. இதில் ஒன்று இரண்டு தூலக்கட்டு வீடாய் இருக்கும். அப்படி தூலக்கட்டு வீடாய் இருப்பவர்கள்தான் சேரியில் பணக்காரரர் லிஸ்டில் இருப்பார் அதிலும் உபரி சொத்துகளாக எருமையோ அல்லது ஒரு ஜோடு கடா மாடுகளோ வைத்திருப்பவர்தான் பணக்காரராக கருதப்படுவர்.

அந்த லிஸ்டில்தான் கருப்பன், ஏகாளி அண்ணன் தம்பிகள். அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. அண்ணனுக்கு மூன்று பிள்ளைகள். தம்பிக்கு பிள்ளைகள் ஏதும் இல்லை. எல்லோரும் நல்ல உழைப்பாளிகள். கருப்பன் தலையாரியாக இருந்தாலும் கறவை எருமை மாடுகள் இரண்டு, கடா மாடு இரண்டு ஜோடு இருந்தது. பெண்கள் கறவை மாட்டுக்கு புற்கள் அறுத்துவருவது, மாடுகளை மேய்ப்பது என்று பார்த்துக்கொள்வார்கள். தம்பி கூலி ஏர் என்று ஓயாத உழைப்பில் கவனம் செலுத்தினார்கள். சேரியில் முதல் முதலாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியது கருப்பன்தான். இன்னும் நான்கு வருஷம் கழித்து மூன்று ஏக்கர் அதே இடத்தின் பக்கத்திலேயே வாங்கினார்கள். அந்நிலத்திற்கு கீழ் திசையில் புறம்போக்கு நிலம் மூன்று ஏக்கர் மடக்கினார்கள். அவர்கள் நிலங்கள் ஏரியின் பாசன வசதிக்கு தொலைவாக இருந்தாலும், இரவு பகல் காத்துக்கிடந்து ஏரித்தண்ணீரைக் கொண்டுசென்று போகம் தவறாமல் நல்ல விளைச்சலைக் கண்டார்கள். சிக்கனமும் உழைப்பும் குடும்பத்தில் நிறைய மாற்றங்களைக் கொணடுவந்தது.

எருமைமாடுகள் விற்கப்பட்டன, பசுமாடுகள் கறவைமாடுகளாக மாறின. கடா மாடுகள் காணவில்லை. செவளைக்காளை கூர்மையான கொம்புடன் கெட்டியான மூங்கிலைப்போல் இருந்தது. அதன் கழுத்தில் இரண்டு மூன்று மணிகள் சேர்ந்தார்போல கட்டியிருநதார்கள். அதன் வயிற்றிற்கும் முன்னங்கால் களுக்கும் இடையில் இரு பட்டையில் கறுப்புக் கயிறு கட்டியிருந்தார்கள். அவைகளை உடுத்திக்கொண்டு எருதுகள் வெளியில் போகும்போதும் வரும்போதும் குதிரைபூட்டிய தேர்போல இருக்கும். பொன்னியும், ஐ ஆர் ஐம்பதும் வண்டி வண்டியாய் வீட்டிற்கு வரும். அடங்குமளவுக்கு அதிகமாக ஒன்றிரண்டு மூட்டைகள் வண்டியில் அடுக்கினாலும், எந்த மேடு, உலையையும் அனாயாசமாக கடந்துவிடும். மாலையானால் இருமாடுகளுக்கும் தாம்பாளத்தில் குங்குமத் தண்ணீரோடு கற்பூரத்தை ஏற்றி திஸ்டி கழித்து, பொட்டிட்டபிறகுதான் கொட்டடியில் கட்டுவார்கள். கருப்பன் குடும்பத்தில் கௌரி மூன்றாவதாக பிறந்தாலும், அவள் வளர வளரதான் வீட்டில் செல்வம் கொழிக்கிறதென்று ஊர்முழுக்கபேச்சாய் இருந்தது. கௌரி இளமையின் பட்டத்தை தொட்டுவிட்டாள். முழுக்க முழுக்க நவீனத்தோடு பராமரிக்கும் பூந்தோட்டத்தைப் போல் இருந்தாள்.

கருப்பன் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் ஞானராஜ் இருந்தார். அவருக்கு மனைவி, நான்குபிள்ளைகள் இரண்டாவதுதான் விக்டர். ஞானராஜீம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக மனைவியுடன் அதகிமாக உழைக்கிறார். ஆனால் முன்னேற்றம் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. ஞானராஜின் அப்பா முன்பு தலையாரியாக இருந்தார். வெள்ளைக்காரார்களின் வழி நடத்துதலால் கிருத்தவத்தை ஏற்றுக்கொண்டவர். சேரியிலேயே முதல் முதலாக தன் பிள்ளைகளை அரக்கோணம், பிறகு செங்கல்பட்டு என்று போடிங்கில் படிக்கவைத்திருக்கிறார். ஞானராஜ் உள்பட பிள்ளைகள் ஏழாவது, எட்டாவது என்றே முடித்துக்கொண்டார்கள். ஞானராஜின் மூத்த அண்ணனுக்கு தலையாரி வேலை கிட்டியிருக்கிறது. இன்னொரு அண்ணனுக்கு கூடுதலான நிலங்கள் ஒதுக்கப்பட்டது.அப்பாவழியாக ஞானராஜிக்கு ஒரு ஓட்டுவீடு கிடைத்திருக்கிறது. அந்த ஓட்டு வீட்டில் மயங்கி நிலங்களின் பாகத்தை அண்ணனுக்கே கூடுதலாக விட்டுக்கொடுத்திருக்கிறார்.

ஞானராஜ் முயல், கோழி, புறா, வளர்ப்பார். சேரிக்கு அத்திப் பூத்தார்போல ஒயர்மேன் வந்து தெரு கம்பத்தில் ஒரு குண்டு பல்புபோட்டு விடுவார். அந்த வெளிச்சம் நடு காட்டில் எதோ மரத்தில் மின் மினி பூச்சி ஒட்டியிருப்பது போல இருக்கும். ஒயர் வேலையை முடித்து அவர்பாட்டுக்கு சைக்கிளை தள்ளிக்கொண்டு போவார். ஞானராஜ் அவசர அவசரமாக ஓடிவந்து சார் இந்தாங்க இத வீட்டுக்கு எடுத்தும்போங்க என்று ஒரு முயலையோ அல்லது ஜோடு புறாவையோ, நாட்டுக்கோழியோ, வாத்துமுட்டையோ, எதையாவது ஒன்றை கொடுத்தனுப்புவார். கிராமத்துக்கு ஏதாவது தேவை இருப்பின் தாசில்தார், ஆர் ஐ, கலைக்டர் ஆபிஸ் என்று மனு கொடுத்து திரிவார். அந்த சில அதிகாரிகளின் வீடுகளைத் தெரிந்துகொண்டு நாட்டுக்கோழி, முட்டையோடு பயணிப்பார். விஷேஷ நாட்களில், நாட்டு உயிரிணங்களை சந்தைக்கு எடுத்துச்செல்வதுபோல் எடுத்துச்சென்று பழக்கப்பட்ட நபர்களுக்கெல்லாம் கொடுப்பார்.

ஞானராஜ் தன் அப்பா காலத்தில் கிருத்தவராய் இருந்தாலும் பிஷப் சுந்தர்கிளர்கிடம் நாணஸ்த்தானம் எடுத்துக்கொண்டார். அவரோடு எடுத்துக்கொண்டவரெல்லாம் சீக்கிரம் மீண்டும் இந்து வழிபாடுகளையே செய்தனர். நண்பர்கள் அப்படி சென்றது தனக்கு செய்த துரோகம் போல் நினைத்தார். நீங்கள் போனாலும் நான் ஒருவனாக நான் ஏற்ற மதத்தை தூக்கி நிறுத்துவேன் என்று வைராக்கியமாக தேடிவந்த அரசாங்க வேலையையும் வேண்டாம் என கிராமத்திலேயே இருந்துவிட்டார். சேரியின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு முடிந்தளவு செயலாற்றினார். அப்படி போகும்போது தன்பணத்தை போட்டு செய்வார். கிராமத்தில் வசூல் செய்வதில்லை. அதனால்தான் ஞானராஜிக்கு சேரியில் மனநிறைவான மரியாதை இருந்தது. சில குடிகாரர்கள் அவரைப்பார்த்தால் பயந்து ஒதுங்கிவிடுவார்கள்.


அப்பாவின் இந்த மரியாதையை பார்க்கும் விக்டர் நாம கருபபன் மாமாவின் குடும்ப அந்தஸ்த்தைவிட ஒண்ணும் குறைவுபட்டவர்கள் இல்லை என்று கணக்கிட்டான். ஏற்கனவே கௌரியை மனதளவில் விரும்பினாலும், இந்த அந்தஸ்த்து ஞாணம் பிறந்தபிறகே தைரியமாக தன்னுடன் படித்த நண்பனே, கௌரியின் அண்ணனனாய் இருக்கும் ரமேஷிடம் தன்விருப்பத்தை சொன்னான். ஏற்கனவே கௌரியும், விக்டரும் ஜாடைமாடையாய் பேசிக்கொள்வது ரமேஷீக்கும் தெரியும். ரமேஷீக்கு தெரிந்தது போல் வேறுயாருக்காவது தெரிந்தால் பிரச்சனையாகப்போகிறதென்று கௌரியே தன் அண்ணனிடம் சொல்லி அழுதாள். விக்டர் தன் நண்பனென்பதால், ரமேஷ் ஞானராஜிடம் பேசி தன் அப்பாவிடம் வந்து கௌரியை கேட்க்க யோசனை சொன்னான்.

கருப்பன் குடும்பத்தில் கருத்துக்கணிப்பு நடந்தேரியது. கௌரியின் அம்மா அந்தப்பையன் ரொம்ப நல்லவன்தான். சிக்கனமானவன். மனுஷங்கமேலே நல்ல மரியாதை. மிகவும் புத்திசாலியா பொழைக்கிறவன்தான் என்று சொல்லிக்கொண்டே வந்தாள். உடனே கருப்பன் அவன் நல்ல பையன்தான், ஆனா அவனை நம்பி அவன் குடும்பமே இருக்குது. அந்த குடும்பத்த கவனிக்கத்தான் அவன் வருமாணம் சரியாயிருக்கும் நம்ம பொண்ணும் அங்கப்போனா கஷ்ட்டம்தான் அனுபவிக்கணும் அதனால சரிப்படாது என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு கௌரி வெளியில் அதிகமாக வந்ததேயில்லை.

புத்திசாலி எப்போதும் அசிங்கப்படுவதேயில்லை. விக்டர் தன் ஆசையை மிக இயல்பாக கைவிட்டுக்கொண்டே வந்தான். கௌரி தன் தகப்பனின் விருப்பப்படியே அமைந்த வாழ்விடம் போனாள். ஒருவேளை அன்று அவள் அப்பாவிடம் தன் விருப்பத்தை சொல்லியிருந்தால் இந்தக்குழந்தைகள் நம்ம விக்டர் மாமாவின் குழந்தையாக இருந்திருக்காதா? எந்த பக்கமும் வாழ்க்கை இருக்கிறதா? மாலா சிந்தனை செய்துகொண்டே சென்றாள்.


ஜேடி

Tuesday, October 4, 2011

கவிதை

                        இயல்பான முரண்


நான் பார்க்கிறேன்
பறப்பதில் தேறியப் பறவை
தன்னிலிருந்து உதிரும் சிறகை
கண்டுகொள்வதேயில்லை
நீயே சொல் 
இத்தனை நாள் அச்சிறகு
பயனற்றதாகவா 
அப்பறவையின் சதையில் தறித்திருந்தது

ஒரே அறையில் இருப்பதால்
எவ்வளவு அன்யோன்யமாக
பார் என்கிறாய்
உண்மையில்
அவர்கள் நாளொன்றுக்கு
நான்கு வார்த்தைகள்தான்
பேசிக்கொள்வார்கள்
பல நாட்கள்
அவ்வார்த்தைகள்கூட
கிட்டுவதில்லை என்கிறேன்
அதில் சிறிதும் உண்மையில்லை என
என் முகத்தை பார்க்க மறுக்கிறாய்

உன் இரண்டடி கூந்தலில்
இரண்டு மடிப்பாய் வைக்க
நான்கு முழப்பூவுக்கு
என் பேனாவால் தினமும்
முதலீட்ட முடியவில்லை
என்பதுதான் உண்மை
இருந்தாலும் 
ஒரு நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன்

நீ தினமும்
தலையில் வைத்த பூவால்
உன் மயிர்களில் வாசம் கூடுகிறது
உன் நாசியும் வாசத்தையேதான்
இதுவரை அதிகமாக நுகர்ந்திருக்கிறது

நீதான், 
ஒரு மேலைநாட்டு பெலிக்கன் பறவை
மார்பில் குத்திக் குத்தி
தன் சதைகளையே குஞ்சுகளுக்கு
உணவாக ஊட்டும்,
அதைவிட மேலாக
உனக்கு செய்வேன் என்றாய்

ஆனால் இவ்வளவு அவசரமாக
திருவிழாக்களின் அமைதியைபோல்
ஏன் நம் சினேகிதம் கானாமல் போனது

பறப்பதில் தேறியப் பறவை
தன்னிலிருந்து உதிரும் சிறகை
கண்டுகொள்வதேயில்லை

ஜேடி