Tuesday, August 28, 2012

கவிதை


முடிவுராத இருவருக்குமான முரண்

ஒரே
ஒரு முறை
வருகிற நாள்
எனக்கும்
உனக்குமான
நாளாக இருக்கும்.

முரண்பாடுகள் முற்றி
தலை வீங்கி
வார்த்தைகள் வழிந்து
இதயத்தை நிரப்புகிறபொழுது

நம்
இருவருக்குமான
பாதை
இரு வேறு
திசைகளைக் காட்டி
கொக்கரிக்கும்,

கடந்த காலம் முழுக்க
நடந்துகொண்டதை
நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே

ஒரு
மழைத் துளியின் வேகமாக
எதிர்காலம்
முடிந்திருக்கும்.

நானோ
நீயோ
எங்கு இருந்தோம் என்பது
நம்
 இருவருக்குமேத் 
தெரியப்போவதில்லை.

ஜே.டேனியல்

Friday, August 24, 2012

புரிந்துணர்ந்தது

               எரியும் பனிக்காடு

பி.எச் டேனியல் எழுதிய  இந்நாவலை  தமிழில் மொழிபெயர்த்த  இரா. முருகவேள் தனது அறிமுக உரையில் “ஆனை மலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள். ....நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக்குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்...” என்று  ஆதவன் தீட்சன்யாவின் வாசகத்தைப் போட்டிருகிறார். இதில் ஆங்கிலேயரை மட்டும் சொல்வதில் நியாயமில்லை. தென் மாவட்டங்களின் வறட்சியின் காரணமாக ஏதோ ஒரு மூலையில் ஒருவேளை அரிசி சோற்றுக்குக் கூட வழியில்லாமல் திண்டாடும் மக்களை நயவஞ்சகமாய் ஏமாற்றி ஆசை வார்த்தைகளைக் கூறி ஆடு, மாடுகளைப் போல ஏற்றிச்சென்று திறந்த வெளி அடிமைச்சிறைகளில்  (தேயிலைத் தோட்டங்களில்) அமர்த்தியது யார்? என்றக் கேள்வியோடு இந்த நாவல் எனக்கு ஏற்படுத்தியதை இங்கு பதிர்ந்துகொள்கிறேன்.

நாவல் 1925 டிசம்பர் இரவு திருநேல்வேலி மாவட்டத்தின் மயிலோடை என்ற கிராமத்தில் தொடங்குகிறது. அச்சிறு கிராமம் கொடிய பஞ்சத்தால் சுருண்டு வதங்குகின்றன. அக்கிராம  மக்கள், தங்கள்  குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது  என்று தெரியாமல் பல்வேறு  யோசனைகளைப் பயன்படுத்தி, பிழைப்புக்கான வழிகளைத்தேடி அலைகிறார்கள். இப்படியே இருந்தால் எல்லோரும் பசியால் சாகவேண்டியதுதான் என்று கருப்பன் எண்ணுகிறான். கயத்தாறு போனால் ஏதாவது வேலை கிடைக்கும் என நம்பினான். கயத்தாறில் சுற்றியுள்ள கிராம மக்கள் எல்லாம் தங்களுக்கான காய்கறிகள், பொருள்கள் வாங்கக் கூடுகிற இடம். கருப்பன் கடை கடையாக ஏதாவது வேலையிருக்கிறதா என்று கேட்கிறான்.  எல்லோரும் அலட்ச்சியப்படுத்தி விரட்டுகிறார்கள். தன்னை மேம்பட்ட சாதியாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒரு நபர் உணவுவிடுதி வைத்திருக்கிறார். அங்கு வசதிபெற்றவர்களை தன் ஓட்டலில் பென்ச்சிலும், தலித்துகள் வந்தால் தனிக் கொட்டகையிலும் உணவு பரிமாரப்படும்.  அந்த முதலாளி கருப்பனிடம் கட்டை பிளக்கவேண்டும் ஆனால் இப்போது இல்லை இன்னொரு நாளைக்கு வா என்கிறான். கருப்பன் இன்றே கொடுத்தால் குடும்பத்தை பசியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கெஞ்சுகிறான். முதலாளி இப்போது கட்டாயமாக மறுத்துவிடுகிறான்.

நீண்ட நேரம் கருப்பனைக்   கவனித்துக் கொண்டிருக்கிற வெள்ளைக்காரனின் வாந்திகளை வந்தனம் செய்து சாப்பிட்டுத் தன் தொந்திகளை வளர்க்கும், நமக்குச்சொந்தமான உள்ளூர் வெள்ளையன். ஏசுவின் போதனைப்போல் தேயிலைத்தோட்டங்களின் சாகசங்களைப் பசுமை நிரைந்த எதிர்காலங்களை கருப்பன் மூளைக்குள் தினிக்கிறான். ஏற்கனவே வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொண்டவர்கள் எப்பேர்ப்பட்ட பஞ்சகாலங்களிலும்  தங்கள் செல்வங்கள் குறைந்து போகாமல் இறுக்க  உழைப்பாளிகளின் வயிற்றை பச்சைத்தண்ணீரால் கூட நிரப்ப மனம்மற்று, கூலிகளைக்கொண்டு தங்கள் வசதிவாய்ப்புகளைத்  தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

கருப்பனின் நிலையைப் புரிந்துகொண்ட சங்கரபாண்டியன் மேஸ்திரி,  தேயிலைத் தோட்ட வேலைக்கு முன்பணமாக நாற்பது ரூபாய் கடனாக வாங்கித்தருகிறான். அதன் மூலம் தேயிலைத் தோட்டத்துக்கு அடிமைகளாகிறான். சொர்க்கலோகத்துக்கு அழைத்துச் செல்வதுபோல ஆயிரமாயிரம் அப்பாவி மக்களை மலையின் உச்சியில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். தாங்கள் திரும்பிச் செல்கிறபோது செல்வச் சீமான்களாய் வீடுதிரும்புவோம் என்ற கனவுகள்  வந்த கொஞ்ச நாட்களிலேயே பொய்யாய்ப்போகிறது. ஒரு செடியின் வளரும் கொழுந்தையே வளரவிடாமல் கிள்ளிப்போடுகிறவர்கள் தங்கள் வாழ்வை எப்படி வளரச்செய்வார்கள் என்று எந்தத் தொழிலாளியும் யோசிக்கவே இல்லை,

கயத்தாறில் தனக்காகப் பேசி நாற்பது ருபாய் கடன் வாங்கிக்கொடுத்ததால் தன் குலதய்வம், புத்தன், காந்தி என்றெல்லாம்  காட்சிதந்த சங்கரபாண்டியன் மேஸ்திரி, மலையுச்சியில் வந்தவுடன் நானே இம்மலையின் ராட்ச்சசத் தலைவன் என்கிற விதமாகமாறிவிட்டானே என்று நினைக்கிறபோது கருப்பனுக்கு அதிற்சியாக இருந்தது. கூட்டம் கூடடமாக அழைத்து வரப்படுகின்ற  மக்கள் ஒரே டெண்டுக்குள் இரண்டு குடும்பம் மூன்று குடும்பங்கள் என்று  தங்கவைக்கிறார்கள். அந்த குடிலுக்குள்ளேதான் குடும்பம் நடத்த வேண்டும். கூலிகளுக்குத் தனிப்பட்ட எந்த விருப்பும் இருக்கக்கூடாது. ஆட்களின் பெயர் பதிவு செய்துவிட்டபிறகு  தேயிலை எஸ்டேட்டுக்கு முழு அடிமைகளாகிவிடுகிறார்கள். அவர்களின் தகவல் தொடர்பான போஸ்ட் கார்டுகளைக்கூட கண்காணிக்கப்படுகிறது. கூலிகளின் உறவுகள் போடுகின்ற தபால்களை மேஸ்திரிகள் பிரித்து வாசிப்பார்கள். அதில் எழுதிப்பட்டிருக்கிற வாசகங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு ஏன் கடிதத்தையே மறைத்துவிட்டு கூலிகளிடம் உங்கம்மா நல்லா இருக்கிறாங்களாம், எங்களுக்கு போதுமான காசு கையில் இருக்கிறது .நீங்க பணம் ஏதும் அனுப்பவேணாம்னு சொல்லி இருக்கிறாங்க அந்த லெட்டரைப் படிச்சிட்டு எங்கோ வச்சேன் கானல என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே வெள்ளையரின் கையாட்களாய்  இருக்ககின்ற வியாபாரிகள்  உயர்சாதி வகுப்பினர் துரைமார்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு  கூலிகளிடம் தன் தன் மனம் போனப் போக்கில் கணக்கு சொல்லுவது என்ற நிலை இருக்கிறது காளிச்செட்டியார் மளிகை கடையில் வைக்கிற விலைதான். ஓரு முறை கடன் வாங்கிவிட்டால்  வாழ்நாள் முழுவதும் அக்கடனில் இருந்து மீளவே முடியாது.  கருப்பனின் கனவு நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்துகொண்டே வருகிறது.

மேஸ்திரிகள் வெள்ளை துரைகளின் நம்பிக்கைக்குரிய  மனிதர்களாய் இருப்பதற்கு,  தங்களுடைய சொந்த மக்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக வேலை வாங்குகிறார்கள். வருடந்தோறும்  வெயில் நாட்களில் கொடிய காச்சலில் விழுந்து குழந்தைகள் பெரியவர்கள் மரிப்பதும், மழைக்காலங்களில் நிமோனியா போன்ற நோய்களில் குவியல் குவியலாக குழந்தைகள், ஆண்கள், பெண்கள் மரித்துப்போகிறார்கள் என்பதை வாசிக்கிறபோது எவ்வளவு துயரங்கள் நடந்தேறியிருக்கிறது என்று வேதனைப்படத்தான் முடிகிறது, பெண்களுக்கு கூடுதலாக மார்பு நோய்கள் தொடங்கிவிடுகிறது.  மழைகாலங்களில் மனிதனின் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் படை படையாய்க் கிளம்பிவிடும். கூலிகளின் குடிசைகளிலும் புகுந்து குடிசை வாசி மனிதர்களை வேட்டையாடுகிறது.  அட்டை  மனிதர்களின்  கால்களிலும் கைகளிலும் ஏறி ஒட்டிக்கொள்கிறபோது அதைப்பிடித்து இழுத்தால் ரத்தம் பீரிட்டு அடிக்கும்,  ஒண்ணு ஒண்ணாகப் பிடுங்கி போடும்போது ரத்தம் மாலை மாலையாக வழியும் இப்படி வழிந்து அவதிப்பட்டாளும் மேஸ்திரிகள் ஒருவனையும் குடிசைக்குள் தங்கவைப்பதில்லை, வேலைக்கு போ போ என்று துரத்துவான் பெண்கள் கை கால் வீங்கக்கிடந்தாலும்  கூட இரக்கமற்ற (அக்காலகட்டத்தில் ஒண்ணு ரெண்டு கணக்குக்கூட தெரியாதவர்களை இங்கிலாந்து நாட்டு பெற்றோர்கள் இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய துரத்திவிட்டார்களாம் வீட்டுக்கும் அடங்காமல், விவரமும் இல்லாத நபர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்)  வெள்ளையர்களாக மாறி நாமெல்லாம் ஒரே இனம் என்கிறவன், தன் இன  மக்களையே வதைத்து எடுக்கிறார்கள் மேஸ்திரிகள்.

இருபது பேர் அல்லது ஐம்பது கொண்ட கூலிகளுக்கு ஒரு மேஸ்திரி. ஒவ்வொரு கூலியும் அதிகமானக் கொழுந்து கிள்ளி சம்பாதித்தால் அதில் இருபது இருபத்திஐந்து விழுக்காடு மேஸ்திரிக்கு கமிஷன் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு கூலிகளின் வருமானத்திற்கு தகுந்தார்போல் மேஸ்திரிகளுக்கு வருமானம் கிடைப்பதால்  கூலிகளை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார்கள்.

தோட்டங்களில் பெண்கள் வேலை செய்யும்போது வெள்ளைதுரைகள் வந்துவிட்டால் எந்த பெண் தேவையோ அவர்களைத் தூக்கி குதிரையில் வைத்துக்கொண்டுபோய்விடுவார். பெண்ணின் கணவன் இருந்தாலும் ஒன்றும் கேட்கமுடியாது கேட்டால் அவர்களைக் கடுமையான வேலை வாங்குதல் அவர்களுக்குத் தரவேண்டிய ரேஷன்களைக்குறைத்தல் குடிசையை மாற்றி ஒன்றுக்கும் உதவாத இடங்களில் தங்கவைத்தல் என்று கொடுமைக் கூடிக் கொண்டே போகும்.

அதேசமயம் வெள்ளை துரைகளையும் மேஸ்திரிகள், எழுத்தர்களின் இச்சையைப் புரிந்துகொண்டு சாமாளிக்கத்தெரிந்த பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத உபசாரங்கள் செல்வங்கள் வந்து குவிந்துவிடுகிறது. மேலும் தோட்டங்களில் கஷ்டமான வேலைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். கருப்பன் வள்ளி போன்ற நேர்மையான உழைப்பைச்செலுத்துகிற  குடும்பங்கள் எந்த விசாரனையும் இன்றி தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்கு எருவாகி இருக்கிறது. இந்த பரந்த பனிக்காட்டின் ரத்தம் தோய்ந்த மணணுக்கு முதன் முதலாக ஆபிரஹாம் என்கிற டாக்டர் வருகிறார். அவர்தான் தேயிலைத் தோட்டத்தின் அக்கரமங்களைக் கண்டு கொதிக்கிறார், மனிதர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று பொருமுகிறார்.

கணக்கு முடிக்கும் போதெல்லாம் மேஸ்திரிகளும், கடன் தரும் காளிச்செட்டியாரும் கணக்கில்லாமல் குத்து மதிப்பாக ஏற்றிச் சொல்லும் கணக்குகளால் இரண்டு வருஷமாக தன் கிராமம் போகமுடியாமல் தவிக்கும் கருப்பன், வள்ளி இந்த வருஷமாவது எப்படியாகிலும் போய்விட வேண்டும் என்று நினைக்கும்போது,  வள்ளி மிகக்கொடூரமாக நோய்வாய் படுகிறாள். புதிதாக வந்த டாக்டர் எத்தனையோ  மருத்துவம் தந்தும் காப்பாற்ற முடியவில்லை வள்ளி இறந்துபோகிறாள். கருப்பன் எல்லாக் கனவுகளும் தகர்ந்த நிலையில் தனிமையாகிறான். இரண்டு நாள் கழித்து மேஸ்திரி, உன் மனைவிக்கு காரியங்கள் செய்த கடன் அதிகமாக இருக்கிறது வேலைக்கு போடே என்று சொல்வதுடன் நாவல் முடிகிறது.

 சமூகத்தில் ஒருவனிடமிருந்து  பொருளைக் கொள்ளையடித்து விடுகிறார்கள் அல்லது ஒருவனை  உலகத்தில் இல்லாமல் கொலை செய்துவிடுகிறார்கள். ஒருவன் பொருளை முற்றிலுமாக இழந்துவிட்டால் மீண்டும் சுதாரித்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளலாம், அதேபோல கொலையுண்டால் ஒருவேளை ஐந்து நிமிடமோ அரைமணி நேரமோ அவன் வாழ்வு அதோடு முடிந்தவிடும், ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களை நயவஞ்சகமாய் ஏமாற்றி நிர்கதியான இடத்தில் கொண்டுபோகிறார்கள். காலம் முழுக்க அவர்களின் பெலத்தை எல்லாம் சுரண்டிக்கொள்ளுதல், அவர்கள் வாழ்வையே  அவர்களுக்கு  இல்லாமல் செய்தல்  என்பது ஒரு ஆட்சியாளனின் போர்க்குற்றத்தைவிட,  இரக்கமற்ற தீவிரவாதத்தை விடக்கொடுமையானது.

தற்காலத்தில் எழுதப்படுகிற நாவல்கள் தங்களுடைய தொழில் முறையுக்திகள் தங்களுடைய முழுமையான கற்பனைச் சாகசங்களை முதன்மையானதாக வைத்துக்கொண்டு இடையிடையிடையில் அங்கங்கு சில சில மனிதர்களின் மேம்போக்கான வாழ்வியலை தென்படவைக்கும் முறைகளிலிருந்து ‘எரியும் பனிக்காடு’ முற்றிலும் சமூகத்தின் ரத்தமும் சதையுமான அப்பட்டமான வாழ்வியலை முன்வைக்கிறது. இதன்மூலம் பணமுதலாளிகளின்  மனசாட்சியை சற்றேனும் உளுக்கிவிடுவது.  தூரத்து பசுமையை நம்பி அப்பாவித்தனமாய் வந்து விழுகிறவர்களின் எண்ணத்தை யோசிக்கவைப்பது, அல்லது இவர்களே ஒரு போராட்டத்தின் மூலமாக தங்கள் நியாமான கூலிகளுடன் வாழ்வைப்பெறுவது என்பது  நடந்தேறுகிற வாய்ப்பு இருக்கிறது.  அக்கால எழுத்துக்கள் மிகவும் போர்குணம்மிக்கதாக இருந்தது. அதனால், சில இடங்களில்  சமூகத்தை மாற்றம்கானச் செய்கிற நிகழ்வை நடத்திக்காட்டியது.  அக்கால மனிதர்கள் அடக்கு முறையாள னென்றால்  எந்த பச்சாதாபங்களுக்கும் செவிசாக்காமல் முற்றிலும் தங்கள் செய்லபாடே சிறந்ததென்று தனித்தன்மையுடன் நின்றார்கள். அதேபோல நீதிமான்கள் என்றாள் எந்த அநியாயத்திற்கும அடிபணியாது தூக்கு மேடைவரை ஒரே முடிவுடன் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலர் எழுதும்போது மிக வீரியமான எழுத்து, மனதை ஆயுதத்தால் கீறுகிறக் காரியத்தைச் செய்தது.  ஆனால், தற்போதைய சமூகம் அப்படியில்லை. ஆட்சியாளனும், பணமுதலைகளும், எல்லா மனிதர்களும் ஏன கடைநிலையில் உள்ள மனிதன்வரை தங்கள் இயல்பை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தகுந்தார்போல செயல்பட தெரிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் இயல்புத்தன்மையை நிறுவுகிற தனிமனிதன் மிகக்குறைவு. அப்படியே இருந்தாலும் அவர்களை இச்சமூகம் வெளிப்படையான பயித்தியங்கள் என்று முத்திரைக் குத்திவிடுகின்றன. ஆகவேதான்,  இப்படியானச் சூழலில், யாருடைய எழுத்துக்களானாலும் வெறுமனே ரசிக்கவும், நேரத்தை கடத்த வாசிக்கவுமான  தளங்களாக மாறிவிட்டன. இந்தப்போக்கில் எழுத்து அல்லது படைப்பு சமூகத்தில்  எந்த மாற்றத்தை  ஏற்படுத்திவிடும்.

பி.எச். டேனியல் அக்கால கட்டங்களில் தேயிலைத்தோட்டங்களின் மக்கள் பட்ட கஷ்டங்களை மிகவும் கரிசனை உள்ளத்தோடு  பதிவுசெய்திருக்கிறார். தலித்துகள், பள்ளர்கள், வசதியற்ற சில உயர்சாதி மக்கள், கேரளத்திலிருந்தும் தரகர்களால் ஆட்களைப் பிடித்து வந்துள்ளனர் என்கிற வரலாற்றின் பதிவை தெரிந்துகொள்ள முடிகிறது. ஆயிரமாயிரம் பின்தங்கிய மக்களால்தான் தேயிலைத் தோட்டத்தின் வளர்ச்சி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பணத்தாசைப் பிடித்த வெள்ளையனும், வெள்ளையனை விடக்கொடுரமாய் தங்களுடைய மக்களைத் தமிழனே வதைத்துள்ளான்  என்பதை அறிகிறபோது, உலகத்தின் எந்த மூலையின் மனிதனாக இருந்தாலும் இதயத்தில் இரக்கம், ஈதல், போதும் என்கிற மனநிலையற்ற எவனையும் மனிதனாக சொல்லத்துனிய மனம் கூசவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறேன்.

சமீபமாக நான் வாசித்த  எந்த  நாவலும்  இந்தளவு மனதைச் சிதைக்கவில்லை.

ஜே. டேனியல்


Friday, August 17, 2012


                                                                             வாழ்த்துக்கள்

 அம்ஷன் குமாருக்கு லெனின் விருது வழங்கும் தமிழ் ஸ்டுடியோவின்  நிறைவு விழாவிற்கு சென்றிருந்தேன். சில கூட்டம் பல பேரை ஏதோ ஒன்றைக் கொடுத்து (கேடயம் அல்ல, மனதிற்கு ஆத்ம நிரைவு) திருப்த்தி அடையச்செய்வதின் மூலமாக வெற்றியடைகிறது.  சில கூட்டம் பல பேரின் மனதை நோகடித்து வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்வதின் மூலமாக ஆவலாக கலந்துகொள்ள வந்தவர்கள் மீண்டும் அந்த பக்கம் வராமல் இருக்கச்செய்துவிடுகிறது.  ஏன் இப்படி நடக்கிறது என்று நான் யோசித்து யோசித்துப் பார்த்தபோது எனக்கான புரிதலாக இது இருக்கிறது. 1.கூட்டப்படுகின்ற கூட்டம்  மக்கள் நலனில் பெறும்பாலும் அக்கறை உள்ளதாக  இருத்தல். 2. கூட்டத்தைக் கூட்டுகிறவர் எப்போதும் ஒரு சமநோக்கு உள்ளவராக இருத்தல்  3. தனக்கான லாபத்தை மறைமுகமாக தூக்கலாக வைத்து செயல்படுவதை தவிர்த்தல்  4.ஏற்பாடுகளை  முழுமையான ஈடுபாட்டுடன் தன் யோசனையோ, அல்லது கூட்டுயோசனையோ எதுவாயினும் முழுதுமாக செலவழித்து நம்பிக்கையுடன் அனைத்து வழிகளிலும் செயல்படுத்த முயற்சிப்பது,  மேலும், காரணமில்லாமல் தன்னை அவமதித்தாலும் ஒருமுறையேனும் அவரை அனுகிப்பார்ப்பது. முக்கியமாக, சரியான நேரத்தைக் கடைபிடிப்பது.(சிலக்கூட்டங்கள் இரண்டரை மணிநேரம் தாமதமாகக் கூட தொடங்குகிறது. இப்படி ஆரம்பிக்கிற கூட்டம் வெறும் வெற்றுக்கடமைக்காக நடத்தப்படுகிறது என்றே நான் முழு மனதுடன் சொல்லுவேன். இப்படியான கூட்டங்கள் நடக்கிற இடங்களிலிருந்து ஒரு குரங்கைப்போல் தாவிவிட முயற்சிக்கிறேன்.) இந்த செயல்பாடுகள் சரியாக இருந்தால் நிச்சயம் கூட்டப்படுகின்ற கூட்டம் வெற்றி அடையும். அந்த, அளவில் தமிழ் ஸ்டுடியோவின் அருண் மற்றும் அவர் நண்பர்கள் சிறந்த இடத்தைப்பெறுகிறார்கள். ஐந்து மணிக்கென்றால் கூட்டம்  5.10க்கெல்லாம் சரியாகத் துவங்கிவிட்டது. அப்போதே எனக்குள் ஒரு திருப்த்தியை ஏற்படுத்திவிடுகிறார்கள். பரவாயில்லை சரியான நேரத்தில் துவங்கிவிட்டார்கள் என்று கூட்டத்தைக் கூர்ந்து கவனிக்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறேன். ஒரு வேளை தாமதமானால் என்னடா இது வீட்டில் இருந்தாலாவது ஏதாவது புத்தகம் படித்திருக்கலாமே என்ற என்னம் என் மூளையை பிசைந்து எடுக்கும் அப்போது நான் கூட்டத்திற்கு வந்ததே விருதா என்றாகிவிடுகிறது. லெனின் விருது வழங்கும் விழா அப்படி இல்லாமல்  சிறப்பாக இருந்தது. 

நான் காஞ்சிபுரத்திலிருந்து வழித்தடம் தெரியாமல் விசாரித்துக்கொண்டே வந்தபோதும் நிகழ்ச்சியிலிருந்து விடுபடமுடியாமல் கட்டிப்போட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட பாலு மகேந்திரா, வசந்த், பாலாஜி சக்திவேல், சுபகுணராஜன், ஓவியர் மருது, கூத்துப்பட்டரை நிறுவனர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்கைச் சிறப்பாக செய்தார்கள். குறிப்பாக பாலுமகேந்திரா பேசிய வார்த்தைகள் ஆழ்ந்த அனுபவங்களைக் காட்டியது. தன்னுடைய சினிமா பயிற்சிப் பள்ளியில் ஒரு மாணவன் என்னிடம் மாஸ்டர் நல்ல  படம் என்றால் என்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டான். நான் ஆடிப்போய்விட்டேன். என்னால் அவனுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் எத்தனையோப் படங்களை எடுத்திருக்கிறேன். நான் அவனுக்கு சட்டென்று சொல்லிவிடமுடியும். நான் இதுவரையில் எது நல்லப்படம் என்று நான் கருதுகிறேனோ அதை உனக்கு ஒரு வழிக்காட்டுதலாகச் சொல்லமுடியும்  ஆனால், ஒருவேளை அவைகள் உனக்கு நல்லப் படங்களாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆகையால் ஒரு நாள் அவகாசம் கொடு நான் உனக்குச் சொல்லுகிறேன்.”என்றார்.

 ‘நான்  பன்னிரண்டு வயதில் தெரிந்துகொண்டதை அவன் எட்டு வயதில் தெரிந்துவைத்துள்ளான். ஏனென்றால் தகவல் தொடர்பு முன்னைவிட எங்கோ முன்னேறிவிட்டது. அவன் என்னை விட அதிகம் படித்தவன். இருந்தாலும் தற்போது நான் ஆசிரியர் ஸ்தானத்தில் இருக்கிறேன். அவன் மானவன் ஸ்தானத்தில் இருக்கிறான், அதனால் அவனுக்கு ஒன்றை நிறுவும் தன்மையோடு பதில்சொன்னால்தான் அவனுக்கு திருப்த்தி ஏற்படும்.  ஆகவே, தம்பி ஒருநாள் அவகாசம் கொடு நான் யோசித்துச்சொல்லுகிறேன் என்றேன். 

அன்று இரவுமுழுதும் யோசித்தாலும் சரியான முடிவு பிடிபடவில்லை. இதுவரை நான் ஊகித்து எனக்கென்றே, வைத்துள்ள மக்களின் வாழ்விலிருந்து எடுப்பதுதான் நல்ல சினிமா என்ற கருதுகோளிலும் சில கேள்விகள் எழுகிறது. மறுநாள் பையனை எப்படி எதிர்கொள்வது என்று யோசனையில் இருந்தபோது. அந்தக்கேள்வியாளனும் வந்தான். சரி தம்பி நாம் சினிமாவைப்பத்தி சற்று தாமதமாக பேசுவோம். முதலில் உனக்கு எந்த விதமான சாப்பாடு பிடிக்கும். என்றுக்கேட்டேன். அவன், அங்கசுத்தி இங்க சுத்தி எனக்கு எங்கம்மா செய்யிற சாப்பாடுதான் பிடிக்கும் என்றான்.  அப்போதுதான் அவன் பதிலிலேயே, அவன் கேள்விக்கான விடையைப் பிடித்தேன்.  உனக்கு ஏன் உங்கம்மா செய்யிற சாப்பாடு புடிக்குது,. அம்மா  உன் வயிறு கெட்டுடக்கூடாதுன்னு.  உனக்கு சாப்பிட ருசியாய் இருக்கணும்னு உனக்காகப் பாத்துப்பாத்து செய்யிறாங்க, அதனாலதான் உங்கம்மா சாப்பாடு புடிக்கும்ணு சொல்றே. அதுபோலதான் ஒரு மனுசனின் மூளைக்கு கசடான விஷயத்தைப் புகுத்தாம, நேர்மையான செயல்கள் செய்வதற்கு சிறிதளவேணும் மனதை உந்தித்தள்ளுகிற வேளைகளைசெய்கிறப் படங்கள் நல்லப் படங்கள் என்று என் புரிதல் இருக்கிறது. அதுதான் நல்லப்படத்திற்கான என் வரையரை என்று  நான் கூறினேன்.” என்றார்.

“மேலும் அவர் ஆணித்தரமாகக் கூறியது, என் சினிமாத்துறைக்கு நான் முதன்மையான மூலதனமாக கையாள்வது இலக்கியம். எனக்கு அடிப்படை இலக்கியம் வாசிப்பது. அதன் ஊடாகவே நான் சினிமாவை அனுகுகிறேன். என் பள்ளி மானவர்களுக்கு காலை பத்து மணிக்கு ஏதோ ஒரு சிறுகதையைக் கொடுத்து வாசிக்கச்செய்வேன். மதியத்திற்குள் அந்தச் சிறுகதையிலிருந்து அவர்களுக்குப் புரிந்த விதத்தில் சுருக்கம் எழுதித்தரும்படிக் கேட்பேன்.” என்றார். சற்று முதிர்வை நுகர்ந்தபோதும் அவரின் சிந்தனை அழகியலை இனங்காணுவதிலும். ரசிப்புத்தன்மை மேன்மைஅடைந்திருப்பதிலும் சற்றும் குறைவுபடவில்லை. அந்த பாலுமகேந்திரா தான் பேசத்துவங்குவதற்கு முன் மேடையில் அமர்ந்திருந்ததை உற்றுப்பார்த்தேன். அச்சு அசல் அவருடைய முகம் ஒரு மெழுகுசிலைபோல் இருந்தது.

அருண் திடீரென்று இந்த விழா சாத்தியமாவதற்கு உதவிய நண்பர்களுக்கு  விருந்தினர்கள் பரிசளிப்பார்கள் என்று இடையில் என்னையும் அழைத்தார் நான் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் வேகமாகச் சென்று கை நீட்டியபோது  தன்னுடைய தொப்பிக்குள்ளிருந்து நேர்க்கோட்டில் பாயும் பார்வையால் என்னைப் பார்த்து வாழ்த்துக்கள் என்றார். 

அருண் பேசும்போது தற்போதய நிலையில் ஒரு சில படங்கள் நல்ல நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவைகள் நான்கு ஐந்து நாளுக்குள்ளே எடுத்துவிடுகிறார்கள். சினிமாத்துறையிலிருந்து வந்த ஆட்சியாளர்கள், சினிமாவின் போக்கைக் கண்டுகொள்வதில்லை. படைப்பாளர்கள்  இருக்கும் போது  அவர்களைக் கொண்டாடாமல் இல்லாதபோது தலையில் தூக்கி வைத்துக்கொள்வதில்  ஒரு பயனும் இல்லை. என்ற தன் ஆவேசத்தை வைத்தார். நிகழ்வில் அம்ஷன் குமாருக்கு பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் பணமுடிப்பும், கேடயமும் வழங்கப்பட்டது. நல்ல விஷயங்களை நம் சக்த்திக்கு மீறி செய்வதில் மனக்கசப்பு ஏற்படாது. ஆனாலும் தொடர்ந்து நல்லதை செய்யவேண்டி  இருக்கிறதே? இளைஞ்ர்கள்தான் அருணுக்கு தோள்கொடுக்கவேண்டும். அம்ஷன் குமாரின் ஏற்புரையை மட்டுமே கேட்கமுடியாமல் போனது. தாம்பரம் 8,30 ரயிலில் உட்கார்ந்தபோதான் அவரின் உரையைக் கேட்காதது  சற்று வருத்தமாகப்பட்டது.

ஜே. டேனியல்.