Sunday, November 29, 2015

சிறுகதை,

                 

  
                                                            ‘ஆசனவாய்‘                            

‘வாழ்க்கையின் பிழைப்பை இந்த இடத்தில், இந்த வேலையில் தேடியிருக்கக்கூடாதோ!‘ யாக்கோபு, வேலையில் சேர்ந்து மாதத்தின் கடைசியில் தோன்றியது. வாலிபத்தில் ஜேம்சுடன் கூட்டாளியாக இருந்தபோது, அவன் அப்பா ஏதோ ஒரு வேகத்தில் ரெண்டாவதாகப் பிறந்த பையனுக்கு ‘யாக்கோபு‘ என்று பெயர் வைத்திருந்தார். அவனவன் வாழ்வதற்கான புத்திசாலித்தனம், எந்தக்காலத்திலும் அவனவனுடன்தான் இருந்திருக்கிறது. யாக்கோபு ஐந்து வயதில், ஒண்ணாவது சேரும்போது லட்சுமிகாந்தன் ஆனான். லட்சுமிகாந்தன் பெயர் வாசிக்கும்போது, ஆசிரியர் மிகச் சிரமப்பட்டு உச்சரித்தார். வாயில் நுழையவில்லை என்பதல்ல பிரச்சனை. பெயருக்கும், தோற்றத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?. வருத்தம்தான். அவனோடு படித்த சிலருக்கு மட்டுந்தான் அப்பெயர்த்தெரியும். ஊரில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்து வைத்திருந்த நெருக்கமான உறவினர்கள்கூட அப்பெயரை அழைத்ததில்லை. மாமன், மச்சான் முறை, கொண்டவர்கள் அவனைக் கேலிச்செய்யவே பயன்படுத்தினார்கள். யாக்கோபு, சற்றுக் கூடுதலான கறுப்புதான். முகம் அலங்கோலமாக ஒன்றும் இல்லை. படர்ந்து வட்டமாகவே இருந்தது. அதிகப்படியாக, சிறு வயதில் ஓயாமல் மூக்கில் ஒழுகும் கெட்டியான சளிதான், ஒட்டுமொத்தமாக அவனை கேலிக்குள்ளாக்கும்படி செய்திருந்தது. லட்சுமிகாந்தன் அரசுப்பதிவுக்கு மட்டுமே பயன்பாடுள்ளதாக இருந்தது. செல்லப்பெயர், அடையாளத்திற்கு மற்ற எதற்கும் யாக்கோபு மட்டுந்தான். பள்ளி வேலைக்கு வந்த முதல் நாளில், விளையாட்டு ஆசிரியர் அவன் பெயரை விசாரித்தபோது, அவ்வளவு உற்சாகமாக, கொஞ்சம் ஸ்டைலாக யாக்கோபு என்றே சொன்னான். 

கண்ணாடி அறையில் சில ஆசிரியர்கள் முன்னிலையில் பெரியப்பா, மகனின் மகன் மாரி “எங்கச் சித்தப்பாதான் சார். நல்லா வேலை, செய்வார்“ தலைமை ஆசிரியரிடம் அறிமுகப்படுத்திச் சொன்னான்.‘ “என் ரத்த வைகையாரா சார். நான் தூக்கி வளர்த்த, புள்ள சார்.“ யாக்கோபு மனசுக்குள் மகிழ்ந்தான். அறையில் மைய இருக்கைக்குப் பின் சுவரில், விலையுயர்ந்த இயற்கைச் சீனரி ஒட்டப்பட்டிருந்தது. எதிர் முக இடப்பக்கம் புத்தக அலமாரியில், பெரியாரியல், அம்பேத்கரின் புத்தகங்கள் புத்தம் புதியதாகவும், இன்னும் சில ஆங்கில அகராதிப் புத்தகங்கள் ஆரம்பத்தில் அடுக்கப்பட்ட தடம் கலையாமல் இருந்தது. வலப்பக்கம் வெள்ளைக்காரனின் பண வைப்பு இரும்புப் பெட்டியின்மேல் வித விதமான வெற்றிக் கோப்பைகள் அடுக்கப்பட்டிருந்தன. குளிர்சாதனப் பெட்டிக்கு நடுவாக மௌனச் சிரிப்புக்கும், ஏக்கத்திற்கும் இடைப்பட்ட முகபாவத்தில் கிறிஸ்து தொங்கிக்கொண்டிருந்தார். பள்ளி வேலைக்கு வருபவர்கள் வெகு சீக்கிரம் உருமாற்றங்கள் அடைந்து விடுகிறார்கள். கிறிஸ்து ஏனோ ஒரேமாதிரி இருந்தார். மைய இருக்கையின் பெரிய டேபில் கண்ணாடிக்குள் சில தத்துவ வாசகங்கள் சொருகப்பட்டிருந்தது.

தலைமை ஆசிரியர் “தோ, பாருபா. கக்கூசெல்லாம் சுத்தமா இருக்கணும். திடீர்னு அதிகாரிங்க வருவாங்க. நேரா அங்கதான் போவாங்க. கொஞ்சம் ஸ்மல் வந்தாக்கூட, பள்ளிக்கோடம் சரியில்லனுவாங்க. உங்க அண்ணன் பையன் சொன்னார்னுதான் உன்ன வேலைக்குப் போடுறேன். சரியா. போய் வேலையப்பாரு.“

யாக்கோபு, தன் இரண்டு  பெண் குழந்தைகளுக்கும் எத்தனையோ முறை கால்களைக்கழுவி விட்டிருக்கிறான். பள்ளிப் பிள்ளைகளுக்குச் செய்யப்போவதைத் தொழிலாக நினைக்கவில்லை. புன்னியம் என்றளவிற்குதான் யோசனை வந்தது. அந்த வேலையில் முன் அனுபவம் இருந்திருந்தால் புன்னியமாக நினைத்திருப்பானா?. சந்தேகம்தான். பத்து ஏக்கருக்குச் சொந்தக்காரன், என்பதைவிட, அந்நிலம் முழுவதையும் பயிர்ச்செய்திருந்தவன். அவைகள் பழைய வாக்காகப் பொய்த்துப்போனதால்தான். அண்ணன் மகன் அழைத்த குரலுக்கு வந்துவிட்டான். மாதச்சம்பளத்திற்கு ஆசைப்பட்டான். அது மட்டும் காரணமாக இருக்கவில்லை. வேலை, செய்யாமல் இருக்கமுடியாது. நகரத்தின் முக்கியப் பள்ளி. வேலை அதிகம் என்பதையெல்லாம் கணிக்கவில்லை. ஒரு ஏக்கர்க்கழனி வரப்பை, மதியத்திற்குள் அண்டை வெட்டித்தள்ளுகிறவன். பள்ளி வேலை அதைவிடக் கஷ்டமாக இருக்கப்போவதில்லை. ஊர்காறர்கள், உறவுக்காறர்கள் ஏற்கனவே நான்கு பேர்ப்பள்ளி அலுவலகத்தில் வேலை செய்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் “கக்கூஸெல்லாம்னு“ சொன்னபோது மட்டும், ஒரு மாதிரியாக இருந்தது. தரம் குறைவான வேலைதான் என்றாலும், அவன், அப்படி நினைக்கவில்லை. தலைமை ஆசிரியருக்கு அதைவிட நாகரீகமான வார்த்தைக் கிடைக்கவில்லையா? எண்ணங்கள் வந்து போயின. ஊர்காறப்பசங்கள் விளையாட்டுப் போலவே பள்ளியில் பல வேலைகளைச் செய்திருந்தார்கள். அவர்கள் கடைநிலை ஊழியர்கள். ஒரே நிறுவனத்தில், ஒரே ஊர், ஒரே சாதி மூன்று, நான்கு நபர்கள் சிறு வயது நண்பர்கள். அரிதான வாய்ப்புதான். நமக்கு மட்டும் என்ன கஷ்டம் இருக்கப்போகிறது யாக்கோபின் உறுதி. பத்தோடு பதினொன்னா வேலைச்செய்துவிட்டுப் போவதில் என்ன சிரமம். கஷ்டம் இருந்தாலும், கம்பெனிகளைவிடக் கொஞ்சம் நம்பகமான வேலைதான். யாக்கோபுவை, மாதச் சம்பளக்காரன் எனக் கிராமத்தில் பேசிக்கொள்வதில் கொஞ்சம் கிரக்கம் இருக்கத்தான் செய்தது.

நூற்றி அறுபது ஆண்டுகளைக்கடந்த பள்ளி.  தன் வளாகத்தில் வருகிறவர்களை, எந்த முகாந்தரமும் அல்லாமல் அரவணைத்துக்கொள்வதோ,  தள்ளிவிடுவதையோ உடனடியாகச் செய்துவிடுவதில்லை. கழிவறைக்கு மெலிந்த ஆதாரத்தூண், பொத்தல் சுவர், சிமெண்ட் சீட் எனத் தரம் தாழ்ந்த இடம் இல்லாமல், மாணாக்கரின் வகுப்பறை உறுதியும், அதன் பரப்பும் கொண்டதாகவே கழிவறை இருந்தது. மூன்று அடுக்குக் கட்டடம். மூன்றிலும் ஒரே அமைப்பில் கழிவறைகள் இருந்தது. கழிவறைகள் ஒட்டியே வகுப்பறைகள். வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் “அறிவில்லாதவங்க. கக்கூஸ எத்தாந்து,  கிளாஸ் ரூமாண்டக் கட்டிக்கிறானுங்க. பக்கத்தில இருக்கமுடியுதா?“ வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சொல்லியிருந்தார்கள். தங்கள் தங்கள் வீடுகளை யோசித்தார்களாத் தெரியவில்லை. அண்ணன் மகன் மாரி,  கழிவறைகளைக் காட்டுவதற்காகக் கூடவே வந்தான். கழிவறை  வாசலுக்கு நெருக்கமாக வரவில்லை. யாக்கோபு, எதிரிக் கோட்டைக்குள் தனியாய் நிற்பவனாக கழிவறைக்குள் நுழைந்தான். ஒரு சுற்றுப் பார்வைப் பார்த்தான்.

கிழக்கு வாய்த்திறந்தபடிச் சிறுநீர்ப் பீங்கான்கள் வரிசையாக இருந்தது. எதிர், எதிர் நிலையில் ஐந்து, ஐந்து மலக்குழி அறைகள் இருந்தது. இதற்கு முன் சுத்தம் செய்ததற்கான பொருளாக ஒரு கட்டைத் தென்னந்தொடப்பம் மட்டும் இருந்தது. இரும்புப் பக்கட் மேற்குப் பார்த்த இரண்டாவது மலக்குழியில் தலைக் கவிழ்ந்துக்கிடந்தது. ஒரு பிளாஸ்டிக் மக்கு, சிறுநீர்க் கால்வாயில் சாய்ந்திருந்தது. மஞ்சளும், ரத்தநிறமும் இணைந்த சீறுநீர் அதில் நிரம்பி இருந்தது. சிறுநீர்க் கால்வாய்ப் பாதை வரிசையாக வெள்ளை நுரையோடு, மஞ்சள் நிறங்களில் அழியாமல் தடம் பதித்திருந்தது. மலக்குழிப்பக்கம் பக்கம் போனால், ஒரு குழியில் மஞ்சள் மலம் நுரைத்துப் பொங்கி, பிதுங்கும்படியாக இருந்தது. கண்ணுக்குச் சட்டென அகப்படாதச் சிறு ஈக்கள் நிறையச் சுற்றிக்கொண்டிருந்தன. பெரிய பெரிய ஈக்களின் கால்கள் மலத்தில் புதைய, ஸ்டா வைத்து உறுஞ்சுவதுபோலவும், சிறு சத்தம் வந்தாலும் பறந்து திரிவதுமாக இருந்தது. ஜட்டியில் பேண்டுவிட்டதைக் கழட்டி, பையன்கள் இன்னொரு குழியில் போட்டிருக்கிறார்கள். அதற்கடுத்த குழி உடைந்து இருந்தது. என்னைக்கோ பேண்டுவிட்ட மலம் காய்ந்துப் பீங்கான் முழுவதும் குறுக்கும், நெடுக்குமாகக் கறுப்புத்தட்டிப்போய் இருந்தது. நாற்றம் உயிரைக் கொன்றுக் கொண்டிருந்தது. யாக்கோபுக்கு, எங்கிருந்துத் தொடங்குவது என்பதே தெரியவில்லை. யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே போய்விடலாமா?. நினைக்கவில்லை. வெளியே வந்து பார்த்தான். கழிவறைக்கு வழிகாட்டியவன் எப்போதோ போய்விட்டிருந்தான். சுற்றி முற்றும் பார்த்தான் எதுவும் தென்படவில்லை. வகுப்பறையில் வைக்கும் குப்பைக்கூடை ஒன்று உடைந்த நிலையில் கொஞ்சம் குப்பையுடன் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. சிறிய குச்சியைத் தேடி எடுத்துக்கொண்டு மீண்டும் கழிவறைக்குள் நுழைந்தான். குச்சியில் ஜட்டியை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டான். அநேகமாகக் காலையில்தான் பேண்டு இருப்பான் போல, குச்சியில் எடுத்த வேகத்தில் ஜட்டியில் இருந்த மலம், குழிக்கு வெளியே சிந்திவிட்டது. பக்குவமாக எடுக்கத் தெரியலையே. தன்னையே சங்கடமாக நினைத்தான். கழிவறை மூலையில் தண்ணீர்த் தொட்டி இருந்தது. முதல் சுற்றாகத் தாராளமாக எடுத்து ஊற்றித் துடைப்பத்தால் தேய்த்தான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட எல்லா இடங்களிலும், முதல் அறையின், முதல் அனுபவமும், அதைவிட அகோரமாகவும்தான் மற்ற கழிவறைகள் இருந்தது. முதல் இரண்டு நாளை வெற்றிகரமாகக் கழித்தான்.

யாக்கோபு எந்த நபரிடமும், தடையின்றிப் பேசக்கூடியவன். அரசியல் சற்றுக் கூடுதலாகத் தெரிந்து வைத்திருந்தான். அதுசார்ந்த விஷயத்தைச் சந்தேகமின்றித் தெளிவாகப்பேசினான். ஏதோ ஒரு வேலையில் பொறுப்புக்கு வருகிறவர்கள், அந்த வேலையின் தன்மையை அறிந்துக் கொண்டதற்கான ஆதாரம், அவ்வேலையை மேற்கொள்வதற்கு எவ்விதத்   திட்டமிடலைச் செய்தார்கள் என்பதுதான் மிக முக்கியம். யாக்கோபுக்கு திட்டமிடல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. என்றாலும், முன் யோசனையாக வேலை எப்படி மேற்கொள்ளவேண்டும் என்பதில் பழகியிருந்தான். கழிவறைச் சுத்தத்திற்கு எவ்விதப் பொருள்களெல்லாம் கூடுதலாக வேண்டும் அறிவுறித்திப் பெற்றுக்கொண்டான். இரண்டு, மூன்று நாளில் யாக்கோபு, பள்ளியில் முக்கிய நபரானான்.

முதல் வாரத்தில் தலைமை ஆசிரியர், கிளர்க்கைக் கேட்டார் “சார், பாத்ரூம்லாம் அவ்வளவு சுத்தமா வைச்சிக்கிறாபலையாம் சார். இதுக்கு முன்னாடி இருந்த ஆளு, ஏமாத்துவாரு சார். சொம்மா, தண்ணீய ஊத்தி அலசிட்டுக் கழுவிட்டேன்னு போயிடுவாரு. யாக்கோபு, நல்லாத் தேச்சிக் கழுவுறாருனு சொல்றாங்க சார்“.

பக்கத்தில் இருந்த இன்னொருத்தர், “சார், யாக்கோபு நேத்துச் சயந்திரம் என்னாண்ட சொல்றாபல சார். இவுங்க வாங்கிக்குடுக்கிற பெனாயில், ஸ்மல்லே வரமாட்டேங்குது சார். பிலீச்சிங் பவுடரும் அதிகமாத் தேவைப்படுது. போதுமானது வாங்கிக்குடுத்தா இன்னும் நல்லாச் செய்யலாம்னு சொல்றாபல சார். நாம நல்ல பொருளா வாங்கிக்கொடுத்தா, அவன் இன்னும் நல்லா வச்சிக்குவான். சார், யாக்கோபுதான் சார், ஒரு நாளைக்கு ரெண்டு மூன்று முறை கழுவி விடுறாபல. இதுக்கு முன்னாடி இப்படிச் செய்ததில்லை சார்.“

அந்நேரம் பார்த்து உதவித்தலைமை ஆசிரியர் வந்தார். “சார், சூப்பர் ஆளை புடிச்சியிருக்கிறீங்க சார். பாத்ரூம் பக்கத்து வகுப்பறைகளில் இப்போதெல்லாம் எந்தக் கம்ப்ளைண்டும் இல்ல சார். யாக்கோபு என்ன செய்றாபலையோ தெரிலசார். நல்லாச் சுத்தமா இருக்குதுசார். நல்ல வேலைக்காரன் சார். நல்லா வேலை செய்வான்னு உங்களுக்கு எப்படித்தான், தெரிதோத் தெரில சார். அருமையாச் செலக்ட் பண்ணியிருக்கிறீங்க சார். விட்டுடாதீங்க“ அனைவரும் லேசாகச் சிரித்துக்கொண்டார்கள். யாக்கோபு வேலையை முடித்துக்கொண்டு வந்ததைப் பார்த்ததும் அமைதியானார்கள். முதல் வாரம் தங்கம் விலைக் குறைப்பு விளம்பரமாக, திறமையை மதிக்கும்படி, பலர் மனதிலும் அவனைக்குறித்துப் புகழ் பேச்சுக்கள் உயர்ந்திருந்தது.

யாக்கோபு, பள்ளிக்குள் நுழைந்தது நேற்றுபோல்தான் நினைவு. மூன்று வாரம் எப்படிக் கடந்தது. அவனுக்கே ஆச்சரியம். ஒருநாள் விடுப்பு என்றால், மலக்குழிகள் மலக்குவியலாகிவிடும். தேர்ச்சி விழுக்காட்டிலும் புள்ளி (0.5) ஐந்து குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. திறமையான நிர்வாகம் கணக்கிடலாம்.  அக்கணக்கிடலை யாக்கோபு அறிந்திருக்கவில்லை. எப்போதும்போல் கழிவறைச் சுத்தப்படுத்துதல் முடிந்ததும் அலுவலகத்தின் அருகில் சிலநேரம் அமர்ந்திருப்பான். அப்போதெல்லாம் ஊர்காரப்பசங்களோடு விளையாட்டாகப் பேசிக்கொள்வார்கள். தினமும் தலைமை ஆசிரியர், அலுவலகம் உள்ளிட்டவர்களுக்குப் பதினோரு மணிக்கு ‘டீ‘ வாங்கிவருவார்கள். பள்ளி அலுவலகத்திற்கும், டீக்கடைக்கும்  மாதக்கணக்கு இருந்தது.  மாரி வேலைக்கு வருவதற்கு முன்பு, தண்ணீர் வார்க்கும் ரங்கன் வாங்கி வருவான். மாரி வந்தபிறகு சில நேரம் ரங்கனும், பலநேரம் மாரியும் வாங்கிவந்து அலுவலகத்திற்கு ஊற்றித்தருவார்கள். யாக்கோபு வந்த பிறகு ஆரம்பத்தில் சில நாட்கள் டீக்கடைக்குப் போகும்படி மாரியும், சில நேரம் ரங்கனும் அனுப்பினார்.

யாக்கோபு ‘டீ‘ வாங்கிவருவதற்கு உற்சாகமாகச் சென்றான். ஓரிரண்டு நாள் கவனிக்கவில்லை. ஒருநான் சின்ன கிளர்க்குகள்  யாக்கோபுதான் டீவாங்கிவருகிறான் என்பதைக் கவனித்தார்கள். உடனே பெரிய கிளர்க்கிடம் “இந்தப் பள்ளிக்கோடத்துல, யாரு என்ன வேலை செய்யிறதுனே தெரியல. பாத்ரூம் கழுவுற பையனை ‘டீ‘ வாங்கியாறச் சொல்லிட்டு இவுனுங்க அதிகாரிகளாட்டம் ஒக்காந்துகிறானுங்க. இன்னிக்கு, ‘டீ‘ வாங்கியாற சொல்லுவானுங்க. நாளைக்கு அவனையே ஊத்திக்குடுக்கச் சொல்லுவானுங்க. அவன் கையில வாங்கி, நாம குடிக்கணும். என்ன சொல்றதுனே தெரியல. எட்கிளர்க் சரியில்ல. எட்மாஸ்டரும் சரியல்ல. இவுனுங்களுக்கு ஒரேஅடியாச் சலுகைக் குடுத்துட்டா, அப்புறம் நம்ம ஒருத்தனையும் மதிக்கமாட்டான். அவனவன் வேலையையும் சரியாச் செய்யப் போறதில்லை.“

சில நாளுக்குப்பிறகும் யாக்கோபு ‘டீ‘ வாங்கிவந்தான். சின்ன கிளர்க்குகள் யாக்கோபுவிடம் கேட்காமல், மாரியிடமும், ரங்கனிடமும் கேட்டார்கள். “டே, நீங்க போயிப்படிக்கட்டில ஒக்காந்துக்கிணு.  யாக்கோபுவ ‘டீ‘ வாங்கியாற அனுப்பிறீங்களா?. அவன் கையில நாங்க வாங்கிக்குடிக்கணுமா?. நாளையில இருந்து அவனை டீக்கடைக்கு அனுப்பினீங்க, நான் எட்மாஸ்டராண்டயே சொல்லிடுவேன்.“

மறுநாள் யாக்கோபு,  கழிவறைகளைக் கழுவிவிட்டுச் சற்று முன்னதாகவே அலுவலகம் அருகில் வந்து நின்றிருந்தான். ரங்கன், மாரியிடம் பிளாஸ்கைக் கழுவி எடுத்துவரும்படி சொல்லி அனுப்பினான். யாக்கோபு, படிக்கட்டில்தான் உட்கார்ந்திருந்தான். ரங்கன் ஒரு பையை எடுத்து, அதற்குள் பிளாஸ்க்கை வைத்துக்கொண்டு கிளம்பினான். யாக்கோபு, ரங்கனையே பார்த்திருந்தான். ரங்கன் வாங்கிவரும்வரை யாக்கோபு, படியிலேயே அமர்ந்திருந்தான். மாரியும், ரங்கனும் ஊற்றிக்கொடுத்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு கடைசியாக யாக்கோபுவுக்கும் ஒரு டம்லரில் தந்தார்கள். யாக்கோபுவுக்கு வாங்கிக் குடிக்கலாமா வேண்டாமா என்றிருந்தது. கடைசியாகக் கொடுத்தார்கள், என்பதில் வருத்தம் இல்லை. அதற்குறிய வேலைச் செய்யாமல் குடிக்கிறோமே, சங்கடமாக இருந்தது. நேற்றுகூட நான்தானே வாங்கிவந்தேன். வெகு நேரம் அமைதியாகவே இருந்தான்.

மறு நாள் காலையில் தலைமை ஆசிரியர், யாக்கோபுவை, பார்த்தார். “யோ, நீ வந்த புதுசுல செய்தாமாதிரி இப்பலாம் செய்யறது இல்லியாமே. ஒரே கம்ளைண்டா வருது. நீ, கக்கூஸாண்டயேதான் இருக்கணும். ஆப்பீஸ் பக்கமே வரக்கூடாது. அங்க வந்து ஒக்காந்து இருகிறதாலதான். உன்ன ‘டீ‘ வாங்கியா, காப்பி வாங்கியானு வேலை வாங்குறாங்க. ‘டீ‘ வாங்கியாறதுலாம் உன் வேலை இல்லை. காலீல பசங்க வரதுக்கு முன்னாடி ஒருவாட்டிக் கழுவிடு. அப்புறம், பதினோருமணிக்கு ஒரு முறைக் கழுவு. அதோட, மூணு மணிக்கு ஒரு முறைப்பார்த்துத் தண்ணீய ஊத்தி அலசிட்டீயானா. சுத்தமா இருக்கும். உனக்கும் நல்லபேரு. புரியுதா. போயி வேலையப்பாரு.“

யாக்கோபு தலையை ஆட்டிக்கொண்டான். “அய்யா, பாத்ரூம் தொட்டிங்கள்லத் தண்ணீக் கொஞ்சமாதான் சார் விடுறாங்க. தண்ணீத் தாராளமா இருந்தாதான் நல்லா ஊத்திக் கழுவமுடியும். அப்புறம், பெனாயில் ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர்னு வாங்கித்தறாங்க. இவ்ளோ பெரிய எடத்துக்குப் பத்தல சார்.“ 

தலைமை ஆசிரியர் உடனே மாரி, ரங்கனை அழைத்தார். ரங்கனிடம்  “ஏம்பா, தண்ணீய சரியா விடமாட்றீயாமே. தோ. யாக்கோபு, சொல்றாப்பல. தெனமும், பாத்ரூம் தொட்டிய நிறைப்பி வைச்சிடு. பெனாயில் கிளார்க்கிடம் பணம் கூடுதலாக வாங்கிம்போய் நல்ல பெனாயிலா. ஐஞ்சி, அல்லது பத்து லிட்டர் வாங்கியாந்துக்குடு. கக்கூசு நாத்தம் வந்தா உங்களையும் தான் கேப்பேன். போங்க“ என்றார்.

யாக்கோபு வேண்டுமென்றே சொல்லவில்லை. நடைமுறை நிலைமையைச் சொன்னான். யாக்கோபு, போட்டுக் கொடுத்துவிட்டதாக ரங்கன் நினைத்தான். உள்ளூரில் ரங்கனுடைய அப்பா, “உன் ஈடு பையன்தானடா யாக்கோபு. ஒரு நாள் ஊட்டுல இருக்கிறானாடா, சொந்த நெலத்துல அப்பனாக்கூட அப்பிடிப் பாடுபடுறான். கூலி வேலைக்குப் போகுறான். அப்பிடி ஒழைக்குதுப் புள்ளிங்க. நீ வேலனாப் பதுங்குற, உனுக்கு வேண்டியதுக்கே, இவன் குடுப்பானா, அவன் குடுப்பானான்னுப் பாத்துங்கீற.“ அடிக்கடி யாக்கோபுவை உதாரணம் காட்டிப் பேசியதாலேயே, வேலைக்கு வரும் முன்னே யாக்கோவின் மீது சற்றுக் கடுப்பாகவே இருந்தான். தற்போது தலைமை ஆசிரியர் சொன்னதைக் கேட்டு மாரி லேசாகச் சிரித்துக்கொண்டு சற்று தூரமாக வந்துவிட்டான்.

“அடங் கறிமூஞ்சி, என்ன, ஏன் சொல்லிவுட்ட. நீ சரியாக்கழுவாத. தண்ணீ இல்லனுச் சொல்றீயா? மோட்டார்ல, தண்ணீ அப்பிடியே  கொட்டுதுபாரு. உனுக்குப் புல்லா, ரொப்பி உடுறேன். இது, எங்கிருந்தோ வந்துச்சிடா, ஏங் கழுத்தறக்க.“ பக்கத்தில் யாரும் இல்லை என்பதால், ரங்கன் மிகக்கோபமாக யாக்கோபை, கடிந்துகொண்டான்.

ரங்கன் இப்படிப் பேசுவானா? யாக்கோபு எதிர்பார்க்கவே இல்லை. “யப்பா, நான் ஏண்டா, உன்ன போட்டுக் குடுக்கப்போறேன். தண்ணிப் பத்தல சார்னு தான் சொன்னேன். நீ, கெவர்மெண்ட்டு வேலை செய்யிற. நான் கூலிக்கு நாத்தத்த வார்ற வேலைக்கு வந்திருக்கேன். இப்பவும், நாம கீராமத்தில இருந்த மாதிரிதான் நெனைக்கிறேன். தண்ணீ உட்டா, உடு. உடாக்காட்டிப் போ. இனிமே, நான் ஏன் சொல்லப்போறேன்.“ யாக்கோபு, கழிவறை நோக்கி நடந்தான்.

யாக்கோபு, கழிவறைகளில் வேலை செய்யும்போது முடிந்தளவு உபகரணங்களைக் கொண்டே வேலை செய்கிறான். ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்திவிட்டு வரும்போது தன் கை கால்களைச் சுத்தமாகக் கழுவிக்கொண்டுதான் வருகின்றான். எப்போதாவது அலுவலகத்தில் வந்து நிற்கும்போதோ, அவனோடு பேசும் நெருக்கத்தில் இருக்கும்போதோ லேசாக மலம் சார்ந்த வாசனை வரத்தான் செய்கிறது. கைகள் தண்ணீரில் ஊறி சிலுத்தபடி ரேகைகள் வெள்ளைப் படிந்திருந்தது.

அலுவலகத்தில் சின்ன கிளர்க்குகள் யாக்கோபுவிடம் நகைச்சுவையாகச் சொல்லும் பாவணையில்  “யாக்கோபு, பாத்ரூமெல்லாம் நல்லா கழுவிட்டியா?, உன் நல்லதுக் குத்தான் சொல்றோம். உங்கூர்ப் பசங்கள நம்பாத. உனக்கே, ஆப்பு வெச்சிடுவானுங்க. ஆப்பீஸ்ல வந்து, எங்களுக்கு ‘டீ‘ லாம் ஊத்திக்குடுக்காதே. அதை அவுனுங்க செய்யட்டும். செரிதானா?“ நேரடியாகவே சொன்னார்கள்.

யாக்கோபுக்கு, சில நேரங்களில் மற்றவர்களோடு மகிழ்வாகப் பேசினாலும், இப்போதெல்லாம் தனிமைப்பட்டுக்கொண்டு வருவதை உணர்ந்தான். ஆசிரியர் தினம். பள்ளியில் கலர்கலராகத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. விழா என்றாலே ஒரே குழு, ஒரே குடும்பம், எனப் பள்ளிக் களைகட்டும். நகரத்தில் இந்தப்பள்ளியின் விழாவை அரசு அதிகாரிகள்கூட மெச்சித்தான் ஆகவேண்டும். ‘ஆசான் வழியில்‘ நாம் வாழும் குடும்ப விழா பிரமாண்டமான பிளக்ஸ் நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டிருந்தது. பேணரின் வலதுப் பக்கம் மேல் மூலையிலிருந்து சிறு மரக்கிளை நீண்டிருந்தது. அதில் இளம் பச்சையும், மஞ்சளும் கலந்த இலைகள், லேசான சூரிய வெளிச்சத்தில் நரம்புகள் வெள்ளி நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. நடுப் பகுதியில் இருந்து சிறு பறவைப் பறந்து மேல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இறக்கைகள் நீலம், சிகப்பு, லேசானக்  கறுப்பும் கலந்த நிறங்களில் இருந்தது.  சற்று நீளத்துடன் கூர்மையான வாய். சிறு சிறு புழுக்கள் மூக்கின் இரு பக்கமும் தெரிந்திருந்தது. புழுவின் வயிறுப் பகுதியில் உயிர் இருப்பதுபோன்று, தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. மேல் இருந்தக் கிளையின் கனப்பகுதியில் சிறுக் கூட்டில் இரண்டு, மூன்று குஞ்சுகள் தங்கள் மஞ்சள் வாயைத்திறந்து கொண்டிருந்தது. அவைகள் இன்னும், தாய் அல்லது தந்தையின் மேனியைப் பெற்றிருக்கவில்லை.

யாக்கோபுவை, தலைமை ஆசிரியர் காலையில் பார்த்தவுடன் சொன்னார், “ஏம்ப்பா, இன்னைக்கு வெளிய இருந்தெல்லாம் ஆட்கள் வருவாங்க. உம்பகுதி பாத்ரூம் எல்லாம் சுத்தமாப் பாத்துக்கோ.“

நிர்வாகப்பதிவேட்டில் யாக்கோபு, கையெழுத்துப் போடச்சென்றபோது சின்ன கிளர்க்குகள் “யாக்கோபு, பெனாயில், பவுடர் எல்லாம் கொஞ்சம் கூட வாங்கிக்கோ. பாத்ரூம்லாம் சொம்மாப் பளபளனு வெச்சிக்கோ. எங்கியும் போயிடக்கூடாது. இன்னிக்கு மட்டும், ஒருமுறை எக்ஸ்டாக் கழுவி விடு. சரியா.“

ஆசிரியர் ஓய்வறைப் பக்கமாக, கழிவறைக்கு நடந்தான். வெளியில் நின்றிருந்த ஆசிரியர் கழகச் செயலாளர் “யாக்கோபு, டீச்சர்ஸ் பாத்ரூமுக்குக் கொஞ்சம் பெனாயில் போட்டு விடு. ஸ்மல் அதிகமாக வருது. அப்பிடியே பசங்க பாத்ரூமையும் அப்பப்பப் பாத்துக்கோ, அதிகாரிங்க வருவாங்க“

“செர்தாம்சார். டீச்சர்ங்க, டாய்லெட்ட இப்பதான் சார், கழுவுனேன்“

“நான், வேணும்னாச் சொல்றேன். போயிப் பாருப்பா. நான், சொன்னாப் போய்ப்பாக்கணும். என்னாண்டப் பதில் பேசக்கூடாது.“

“செரிசார்.“

யாக்கோபு நேராகப் பையன்கள் பாத்ரூம் போனான். உதவித் தலைமை ஆசிரியர் வகுப்புகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.  “என்னா, யாக்கோபு வெறுங்கையில வரே. பெனாயில், பிளீச்சிங் பவுடர் எல்லாம் எங்க. இன்னிக்கு நல்லாப் போட்டுவுடு. அதிகாரிங்க வருவாங்க.“

“நான் பாத்துக்கிறேன் சார்.“

ஆசிரியர் தின மேடைப் பேச்சுக்கள் தொடங்கியது. பையன்கள் கரகோசம் ஆரவாரமாக இருந்தது. சில மாணவர்கள் குழுக் குழுவாக இணைந்து ஆசிரியர்களுக்கு ரோஜாக்களையும், சிறு சிறு பரிசுப்பொருட்களையும் கொடுத்தார்கள். அநேக மாணவர்களுக்கு, அனைத்து ஆசிரியர்களையும் தெரியும். அந்த ஆண்டின் ஆசிரியர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் வழங்கினார்கள். யாக்கோபுவுக்குக்கூட அநேக மாணவர்கள் தெரிந்திருந்தார்கள். மதியம் ஆசிரியர்களுக்குப் பிரியாணி விருந்து நடந்தது. ஏறக்குறைய அனைவரும் பந்தியில் அமர்ந்துவிட்டார்கள். சர்விங் செய்வதற்கு ஆள் பற்றாக்குறையாக இருந்தது. வாழை இலைகள் வரிசையாகப் போடப்பட்டுப் பிளாஸ்டிக் டம்ளர் வைக்கப்பட்டிருந்தது. அலுவலக நபர்கள்தான் பந்தி பரிமாற ஆய்த்தமானார்கள். ரங்கன், மாரி, ராஜன், எல்லாம் பரபரப்பாகத் தாங்கள் நினைத்த வேலைகளைச்செய்ய ஓடினார்கள். பிரியாணி டபராவின் இடது ஓரம் பாய் தட்டு அடிப்பதற்குத் தயாராக உட்கார்ந்திருந்தார். சர்விங் தொடங்கிவிட்டது. ரங்கன், மாரி பிரியாணித்தட்டுகளைக் கொண்டுவந்து வைக்கிறார்கள். யாக்கோபு தன் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு சுத்தமாக வந்திருந்தான். பந்தி பரபரப்பாக நடந்திரந்தது. தான் ஏதாவது உதவவேண்டும். கைகள் பரபரத்தது. பிரியாணி டபராவிடம் சில ஆசிரியர்கள் நின்றுகொண்டு “அங்க வை. மாரி வேகமா வா. ஓடு“ குரல் கொடுத்தார்கள். சற்றுநேரம் பந்தியை ஊகித்த யாக்கோபு மாரியோடு இணைந்து பிரியாணித் தட்டை எடுக்க வேகமாகப் சென்றான். பிரியாணி அண்டாவின் பக்கத்தில் நின்றிருந்த ஆசிரியர் “யாக்கோபு, ஸ்டாப் ரூம்ல ரெண்டுத் தண்ணிகேன் இருக்குதுபாரு அதைத் தூக்கிக்கிணுவாயேன்.“ என்றார்.

யாக்கோபு வேகமாக சென்று, அடுத்தடுத்து மூன்று கேனையும், தூக்கிவந்து வைத்தான். வைத்தவன் ஆசிரியரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அருகிலிருந்து அழைத்தபோதும் முதல் முறைக்குப்  பதில் கிடைக்காமல், யாக்கோபு மீண்டும் அழைத்தான். “சார், வெச்சிட்டேன் சார்“ பிரியாணி அண்டாவின் அருகில் வந்து சர்விங் தட்டை எடுத்தான். ஆசிரியர், “ஏம்ப்பா, தட்டை வெய்யிப்பா. அதுக்குள்ள ஏன் இங்க வந்த. அந்த சில்வர் டேக்ஷாவைக் கழுவு, அந்தத் தண்ணீர்க்கேனைத்திறந்து ஊத்து. கீழச் சிந்தப்போகுதுப் பொறுமையா ஊத்து.“

ரங்கன், “பாய், தட்டு அடி பாய். அந்தத் தட்டுலப் பீஸ் இல்லபாரு பாய், பாத்துப் போடு. டே, மாரி நீ அந்தப்பக்கம் கடைசியில ரெண்டுபேரு இருக்கிறாங்க பாரு. அங்க போ. இந்தப்பக்கம் நான் பாத்துக்கிறேன்“. மிகை உற்சாகத்துடன் சத்தமாகச் சொன்னான்.

யாக்கோபு, அண்டாவில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே சர்விங்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். கிராமத்தில் யாக்கோபு, மச்சான் பையனுக்குப் பிரியாணி போட்டபோது, யாக்கோபு, தலைமையில் ஐந்நூறு பேருக்குச் சர்வீங் நடந்தது நாபகம் வந்தது. பள்ளியில் முதல் பந்தியில் பிரியாணியின் முதல் தட்டு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இரண்டாவது வெறும் குஸ்காவை மாரி எடுத்துக்கொண்டு சுற்றினான். யாக்கோபு டேக்சாவில் தண்ணீரை ஊற்றி முடித்துவிட்டு. ஜக்கில் தண்ணீர் மொண்டு பரிமாற வேகமாக ஜக்கை எடுத்தான். உதவித் தலைமை ஆசிரியர் யாக்கோபுவை அழைத்து. “யாக்கோபு, வெளிய நிக்கிறான்பாரு என்.சி.சி பாய்ஸ், அவுங்க ரெண்டுபேரக்கூப்பிடு.“ எதுக்கோ கூப்பிடுறாங்க என்று ஓடிச் சென்று ரெண்டு பேரை அழைத்துவந்தான். “டே, ஓடு. ஆளுக்கொரு ஜக்கு எடுத்துக்கோ. இந்தப்பக்கம் ஒருத்தன் அந்தப்பக்கம் ஒருத்தன் தண்ணீ ஊத்திக்கினே போங்க. ஓடு..ஓடு“ 

யாக்கோபு, சற்று நேரம் வெறுமனே நின்றிருந்தான். ஏதாவது செய்யவேண்டும் போல மனம் பரபரத்தது. பந்தியாளர்கள் வேகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரங்கனும், மாரியும் இப்படியும், அப்படியும் ஓடி வேறு வேறு வேலைகளைச் செய்தார்கள். தலைமை ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் போதுமானப் பீஸ் விழுந்ததா? தன் கவனத்திற்கு வந்தவர்களுக்கு, சைகையின் மூலம் பீஸ் போடச்சொல்வதும் நடந்தது.  யாக்கோபை, தண்ணித் தூக்கிவரச்சொன்ன ஆசிரியர், “யாக்கோபு, கலாவ கூப்பிடு, அந்தப்பக்கம் காலியாவுதுபாரு, ரெண்டுபேரும் எலை எடுத்துடுங்க“ என்றார்.

ஆசிரியர் சொன்னவுடன் யாக்கோபு  காலாவை அழைத்துக்கொண்டு ஒரு பக்கமாக வந்து நின்றான். “அக்கா, நீ கோணியக் கீழப்போடு நான் எடுக்கிறேன்“ பக்குவமாக இலையைச்சுருட்டி எடுத்தான். சில இலையில் இருந்து எலும்புத்துண்டுகள் மசாலாக் கலவைகள் கீழேக்கொட்டியது. முதல் நாள் பாத்ரூம் மிலக்குழி, ஜட்டியிலிருந்து சிந்தியவை நியாபகம் வந்தது.  பின்னாக வந்த ரங்கன் “டே, எடு எடு. எலையை வேகமாக எடு, அப்பிடியே இந்தப்பக்கமா வா“ என்றான். முதலாவதாக உட்கார்ந்த தமிழாசிரியர் இன்னும் பொறுமையாகக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். யாக்கோபு, தயங்கி நின்றான்.  “ஏம்ப்பா, அங்க ஏன் நிக்கிற. இந்தப்பக்கம் காலியாயிடுச்சிப் பாரு. இதை எடுத்தும்போய்க் கொட்டிட்டு வந்துடு“

யாக்கோபு, கழனி வேலைகளில் எத்தனையோ நாள் முழுக்கப் பசியாக இருந்தும் வேலை செய்திருக்கிறான். சாப்பிடும் வேளைவரும்நேரம் சற்றுப் பசி எடுக்கும், அந்நேரம் கொஞ்சம் தாங்கிக்கொண்டால் பிறகு நாள் முழுக்கச் சோர்வற்று வேலை செய்திருக்கிறான். இன்று பிரியாணி வாசனையின் மகிமையோ என்னவோ! பசி நேரத்தைத் தாங்கியபிறகும்  தொடர்ந்து வயிற்றைப் பிசைகிறது.

உதவித்தலைமை ஆசிரியர் “ஏம்ப்பா, ஆபீஸ்ல யாரு யாரு, சாப்பிடலபாரு. எல்லாரையும் கூப்பிடுங்க. ரங்கா, மாரி, யாக்கோபு. நீங்களும் ஒக்காந்துச் சாப்பிடுங்க.“

யாக்கோபுக்கு  வயிறு முறுக்கல் உடைந்தது. ரங்கன், மாரி  சென்று அவரவர்களுக்கான இலையை எடுத்து வந்து உட்காரத்தொடங்கினார்கள். யாக்கோபு எடுத்த இலைகளை ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டிவிட்டு வருவாதாகக் கலாவிடம் சொல்லிச்சென்றான்.

திரும்பி வரும்போது பந்திக்கு வெளியே வராண்டாவில் தலைமை ஆசிரியர், உதவித்தலைமை ஆசிரியர் ஒரு பையனிடம் ஏதோப்பேசிக்கொண்டிருந்தார்கள். யாக்கோபு எச்சில் இலை எடுத்தக் கோணியை ஓரிடத்தில் போட்டு, கையை அலம்பிக்கொண்டு வர குழாய்ப் பகுதியை நோக்கிச்சென்றான். தலைமை ஆசிரியர் யாக்கோபுவை எப்போதும் இல்லாதபடி அழைத்தார். “ஏம்பா, ராஜா அந்தச் செவன்த் ‘பீ‘ கிளாஸ்ல ஒரு பையன் வாந்தி எடுத்துட்டானாம்,  அதைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு வந்துடுமா. ஓடுமா ஓடுமா. சீக்கிரமா வா,  நாம எல்லாம் ஒண்ணா ஒக்காந்துச் சாப்பிடலாம்“

‘ஒரே பென்சில ஒக்கார வேண்டிவருமா? அப்படி இருந்தா, கொஞ்சமா சாப்பிட்டு சீக்கிரம் எழுந்திடனும்‘ யாக்கோபு, வகுப்புத்தலைவனைக் கூட்டிக்கொண்டு வேகமாகப்போனான். வாந்தி மீது கொஞ்சம் மண்தெளித்து இரும்பு முறத்தில் வாறிக்கொண்டான். வெளியே  கொட்ட வேகமாக நடந்தான். ரங்கனும், மாரியும் சாப்பிட்டுக் கையலம்பக் குழாயை நோக்கிச் சென்றார்கள். ஆசிரியர் கழகச் செயலர், மாரியைச் சத்தமாகக்கூப்பிட்டு “ஏம்ப்பா, சீக்கிரம் ஓடியா. எட்மாஸ்டர் ரூமுக்குப் போயிட்டாரு. பிரியாணி பாத்திரத்தில் போட்டு வச்சியிருக்கிறேன் பாரு. கொண்டுபோய்ப் பரிமாறு. சீக்கிரம் ஓடியா.“

யாக்கோபு, ஆசிரியர் கழகச் செயலரை,  திரும்பிப் பார்த்துக்கொண்டே  சென்றான். கையில் இருந்த வாந்தியைப் பார்த்தான். மஞ்சள் நிறத்தில் சோறு சோறாக இருந்தது. மலத்தை, ஒத்த நாற்றம்தான். காலையில் மலக்குழி மலமும் மஞ்சள் நிறத்தில்தான் இருந்தது. மனிதனுக்கு முன்னும், பின்னும் நாற்றம்தான் கழியுமா? நினைத்தபடி யாக்கோபு நுழைவு வாயில் அருகில் சென்றான். நாற்பதுக்கு நாற்பது பிளக்ஸ் பேணர் பிரமாண்டமாகத் தெரிந்தது. அதிலும் கொட்டேஷனுக்குள் இருந்த எழுத்துப் பளிச்சென்று தெரிந்தது. யாக்கோபுக்கு கொட்டேஷன் எழுத்தைப் படிக்கவேண்டும்போல் இருந்தது. சிறுவயதில் படிக்காமல் போனதை நினைத்து வருத்தப்பட்டான். கையில் வாந்தி முறத்தை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டிப் படித்தான். ‘ஆ ச ன  வா யி ன்‘ வழியில் என்று ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி வாசித்தான். அர்த்தம் சீக்கிரம் புரியவில்லை. வாசித்தபடி ஆசன வாய்னா மலம் வெளிய போற வழிதானே!. அதுக்கு ஈடான வழியல நடக்கிறவங்கனா, பேணர்லப் போடுவாங்க? இவுங்கள்லாம், படிச்சவங்களாச்சே தெரியாமையாப் போட்டிருப்பாங்க. ஆசனவாய், கழிவை வெளிப்படுத்துகிறது. நாற்றத்தைச் சுத்தப்படுத்துகிறவன் மீதே  சுமத்துகிறது!‘.

பேஷனில் பிரியாணியை, வாழைஇலை மூடி மாரி எடுத்துச்சென்றான். பின்னாடி ரங்கன் கர்ச்சிப்பில் வாயைத் துடைத்துக்கொண்டே யாக்கோபுவைப் பார்த்து “சார், படிச்சது போதும். கொட்டிட்டுப் போய், சாப்பிடு சார். கூப்பிட்டாங்கப் பாரு, சார்“ வேக வேகமாக மாரிக்கு முன் தலைமை ஆசிரியர் அறைக்குப் போனான்.

“அக்காம், போடா. இங்க வந்து நீங்கக்கூட வேற சாதிக்காறனா, ஆயிட்டு இருக்குறீங்க. பள்ளியில எல்லாம் ஆசனவாய் வழியில் நடக்கிறவங்கதான்னுக் கொட்டையா எழுதிப் போட்டுகிறாங்க, பார்றா. வந்து படிச்சிட்டு, போடா.“ மெல்லமாகச் சொல்லிக்கொண்டே வாந்தியைக் கொட்டிவிட்டு வந்தான்.

வாந்திய வாற அனுப்பியபோதே, யாக்கோபுவின் எல்லாப் பசியும் அடங்கிவிட்டு இருந்தது.

டேனியல்.ஜே





Friday, November 27, 2015

சிறுகதை,

           

   நன்றி ‘காற்றுவெளி‘  Mullai Amuthan


    

         ‘தலைமுறை மரணங்கள்‘                                                             ‘சிறுகதை‘

குடும்பதின் முதல் தலைமுறையிலிருந்து, அவன் மரணங்களை ஆய்வு செய்துக்கொண்டிருந்தான். ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் நிகழ்ந்தஎட்டு மரணங்கள், வரிசையாகக் குறித்துக்கொண்டான். தலைமை, துணைத்தலைமை இருவகையில் பிரித்துக்கொள்ளும்படி மரணங்கள்நிகழ்ந்திருந்தது. சாதாரண வெள்ளைத்தாளுக்கு இரு பக்கங்களுக்கான தேவை இருக்கத்தான் செய்கிறது. குறிப்புத் தொடர, கடந்த காலங்களில்நிகழ்ந்த மரணங்களின் உருவங்களை யோசித்தபோது, அவரவர்களின் கடைசி நிமிடங்கள்தான் முன்னால் நின்றது. அந்நிமிடம் குழந்தையின் சுயப்புத்தியைக்கொண்டிருந்தது. மரணிப்பவர்களின் கடைசி நிமிடங்களில், அவர்களுக்கு எதிரியான மனிதர்களை முன்னால் நிறுத்தினால்,முடிவுவேறாக இருக்கலாம் என ஊகித்தான். மரணம் யார் கண்ணிலும் அகப்படுவதில்லை. அதன் கடந்த காலம் மிக நீண்டதாக இருந்தது.

குடும்பத்தின் முதல் தலைமுறையில் இருவர். ஒருதாய்ப் பிள்ளைகள். மூத்தவர் டேவிட்டுக்கு நான்கு பிள்ளைகள். இளையவர் தங்கராஜிக்குநான்கு பிள்ளைகள். இருவருக்கும் தலா இரண்டு ஆண், இரண்டு பெண் இருந்தார்கள். சில குழந்தைகள் பிறந்து, இறந்தும், இறந்து, பிறந்தும்இருந்தது. அவைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. ஆய்விற்குத் தேவைப்படவில்லை. வாழ்வோர் மட்டும்ந்தான் தேவைப்பட்டார்கள்.

டேவிட் பிள்ளைகளில் தன்ராஜ் மூத்தவன், தாமஸ் இளையவன். இருவருக்கும் நிறத்திலோ, அழகிலோ அல்ல. எண்ணிக்கையில். பிள்ளைகள்ஒண்ணுபோலவே அமைந்திருந்தது. தாமஸ் அண்ணனோடு, முரண்பட்டவன். சில விசயங்களை வேண்டுமென்றே விதண்டாவாதமாகச்செய்தான். அண்ணனுக்கு மூன்று பிள்ளைகள். தாமசுக்கு நான்காக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதம். கூடுதலாக ஆண் பிள்ளைப் பிறந்தது.அக்குழந்தை மற்றெல்லாக் குழந்தையைவிடக் குண்டாக,சந்ததியில் இல்லாத திடகாத்திரமாக இருந்தது. தாமஸ், ‘நான் என் அண்ணனைஜெயித்தேன். அவனும், நானும் சமமல்ல‘ என்பதாக, உள்ளுக்குள் பெருமையாக இருந்தான்.

தாமஸ், அவன் மனைவி இருவரும் நல்ல நிறம் என்பதால், அவர்கள் குழந்தைகளும் கோதுமை நிறத்தில் இருந்தார்கள். நான்காவது குழந்தைதாமஸின் மாமனாரைப்போலக் கறுப்பாக இருந்தான். படர்ந்த முகம், படர்ந்த உடல். நாளுக்கு நாள் குழந்தைப்பருத்து, வேகமாக வளர்ந்து.தத்தித்தத்தி நடக்கத்தொடங்கியது. ஒரு நாள் மாலை; தாய், வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தாள். குழந்தை, பூனையின் நழுவலாகவெளியேச்சென்றது. வாசல் அருகில் சிறிய தண்ணீர்த் தொட்டியில் கவிழ்ந்தது. சில நிமடங்களில் மிதந்துவிட்டது. பல ஆண்டுகள் கழிந்தாலும்தாமசுக்கு மீண்டும் குழந்தை இல்லை. ஏதோ ஒழுங்கு முறையாக அண்ணன், தம்பிக்குத் தலா ஒர் ஆண், இரண்டு பெண்கள்தான் நிலைத்தார்கள்.முதலாவது, இரண்டாவது தலைமுறையில், எண்ணிக்கை, பாலினம் வகையில் ஒரே அளவில் அமைந்திருந்தது,தற்செயலானதா, மரபுசார்ந்ததாக இருக்கமா? அவன் வெள்ளைத்தாளில் ஒரு முடிவானத் தீர்வை எழுத முடியவில்லை.

முதல் தலைமுறை அண்ணன் டேவிட் தன் குடும்பத்தை, மிகப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டார். சிறு பொருளுக்குக்கூடக் கிராமத்தின்நாட்டார்க் கடைக்குப் போகும்படியாக வைக்கவில்லை. அரசுப் பள்ளியில் இரவு காவலர்ப்பணியில் இருந்தார். எல்லாப் பொருளையும் நகரத்தின்மொத்த வியாபாரம் கடைகளில்தான் வாங்குவார். ஒன்றிரண்டு தேவைப்படும் பொருள்களை மாலைவேளையில் வாங்கி வருவார். கிராமத்தில்அரசுப் பணிசெய்த ஒன்றிரண்டு பேரில், அவரும் ஒருவர். கிராம பெண்கள் அவர் குடும்பம் நடத்தும் முறைமையைப் பெருமையாக நடவுகளிலும்,களையெடுக்கும் இடங்களிலும் பேசிக்கொண்டார்கள். அந்நாட்களில் கிராமங்களில் ரசம் கொடுத்து, கருவாட்டுக் குழம்பு, சாம்பார்க் கொடுத்து,மாட்டுக்கறிக் குழம்பு மாற்றாக வாங்குவதும். சிலர், குழம்பு வைக்க முடியாத நிலையில் வெறுமனே “கொஞ்சம், கொழம்பு தாம்மா“ அடிக்கடிவீடுகள் மாறி மாறி கேட்டுக்கொள்கிற வழக்கம் இருந்தது.

டேவிட் வீட்டுக்கு யாரும் குழம்புக் கேட்டு வரமாட்டார்கள். ஏதாவதொருநாள் தப்பித்தவறி வந்துவிட்டால், டேவிட் மனைவியிடம்அவமானப்படவேண்டும். டேவிட்டோ, அவர் பிள்ளைகளோ ‘பாவம் குடுத்தனுப்புமா‘ என்ற வார்த்தைகளைச் சொல்ல மாட்டார்கள். டேவிட் பலநேரங்களில் கண்டுகொள்ளமாட்டார். எப்போதாவது அத்திப்பூத்தார்போலச் சொல்லுவார், “தே, கொஞ்சம் குடுத்தனுப்புடி“ என்பதோடு சரி.பெரும்பாலும் பெண்கள்தான் குழம்புக் கேட்க வருவார்கள். டேவிட் வருபவர்களுக்கு ஆதரவாகச் சொன்னால், மனைவி “ஏன், அவுளுங்க எதுனாகாட்னாளுங்களா?. எங்க மாமா. எங்க மாமானு வராளுங்களே“ வருபவர்கள் காதில் விழும்படியே சொல்லி விடுவாள். அதற்காகவே யார்வந்தாலும், டேவிட் கண்டுகொள்ள மாட்டார். பிள்ளகளுக்கு அந்தப் பிரச்சனை இல்லாதபோதும்,கிராமத்தார் யாரிடத்திலும் அவர்களுக்குத்தொடர்பு இருந்திருக்கவில்லை. டேவிட் வெளி ஊர் அரசுப்பள்ளி ஒன்றில் தங்கியிருந்த போது, அவ்வளாகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.பிள்ளைகள் திருமண வயதை நெருங்கியபோதுதான், டேவிட் சொந்த கிராமத்திற்குக் குடிபெயர்ந்திருந்தார்.

முதல் தலைமுறை அண்ணனுக்கு நேர்மறையாக, தம்பி இருந்தார். தங்கராஜ் மனைவி காலையும், மாலையும் நாட்டார்க் கடைக்கு நடந்தாள். தன்ஓரகத்திபோல்,வீட்டில் இருப்பதில்லை. கூலி வேலைகளுக்குச் சென்றாள். பல நாட்கள் நாட்டார்க் கடைக்காரனிடம், அவமானப்படவேண்டியிருந்தது. தன் ஓரகத்திக்கு அந்நிலை இல்லை, அவள் கொடுத்து வைத்தவள். நினைத் திருக்கக்கூடும். தங்கராஜிடம் நொந்துக்கொண்டதில்லை. தங்கராஜ், பல நாட்கள் திடீரென யாரையாவது இரவு நேரங்களில் சாப்பாட்டுக்கு அழைத்து விடுவதுண்டு. வெறும், மிளகாய், புளி,பூண்டை,அம்மியில் அறைப்பதுதான் தெரியும். அதன் மணம், எச்சில் ஊர வைக்கும். பல இரவுகள், திடீரென வருவோருக்கும், பிள்ளைகளுக்கும்சாப்பாட்டுக் குண்டான் காலியாவதுண்டு. அநேக முறை வடித்த தண்ணீரில் தங்கராஜ், மனைவியின் பசித்தீர்ந்திருக்கிறது.

தங்கராஜ் அநேகமுறை வீட்டில் கிடைக்கும், பித்தளைப் பாத்திரம், பக்கட்டை அடகுவைத்துப் பொதுக்காரியங்களில் செலவிட்டிருக்கிறார். முதல்தலைமுறையின் முதல் மரணம் தங்கராஜ் மனைவியாக இடம்பிடித்தாள். மரித்திருக்கவேண்டிய வயது இல்லை. ‘சாந்தம்‘, தன்னால் இயன்றஉதவிகளை வாழ்க்கை முழுதும் செய்திருக்கிறாள். இன்னும் நடமாடவேண்டிய காலங்கள் இன்னும் கூடுதலாக இருந்தது. தங்கராஜ்,குடும்பச்சூழலில் கஷ்டம் இருந்தது. திசை மாறிவிடுதல் இருக்கவில்லை. பொதுவெளிக்குச் செய்யும் நன்மையைக் குறைவாகப் பேசினார்கள்.தங்கராஜிக்குச் சிறுப்பிரச்சனை வந்தாலும், மனைவியின் மரணத்தைச் சம்பரதாயங்களுடன் இணைத்துப் பேசிக்கொண்டார்கள்.

பதினைந்து வருஷம் இடைவெளியில் முதல் தலைமுறையில் அண்ணன் டேவிட் இறந்தார். கல்லறை அடக்கம் முடிந்த வாரத்தில், தன்ராஜ்ஊராரிடம் பஞ்சாயத்து வைத்தான். வழக்கப்படி குடியிருப்பு மனையில் மூத்தவனுக்குத்தான் மேல்பகுதியில் வரவேண்டும். அவனைமேல்வீட்டில் இருந்து வெளியேறி, கீழ்பகுதிக்குப் போகச்சொல்லுங்கள்.

இளயவன் தாமஸ், “இந்த ஊர்ல எவன். என் வீட்டாண்ட வறான் பார்க்கிறேன். எங்க பெரிப்பன் கெவர்மெண்ட்டு வேலையை ஏமாத்திவாங்கிக்கினானே. இப்ப வீடு பாகத்துக்கு வரானா? எவன் பஞ்சாயத்துக்கு வரானோ, அவனைத்தான் முதலில் வெட்டுவேன்“

அவன் செய்தாலும், செய்வான் அண்ணன், தம்பி வழக்கு. நாம ஏன் வீனாகத் தலையிடனும். கிராமத்தார் ஒதுங்கிக்கொண்டார்கள். தகப்பனுக்குரியவருவாய்களைத் தாமஸ் அனுபவித்தான். தன்ராஜ், தாமஸ் கடைசிவரை ஒன்றுபடவேயில்லை. தன்ராஜிக்கு ஓரளவு வருவாய் இருந்தது.இருந்தாலும் மேல் வரவை எதிர்ப்பார்த்தார். தன் பிள்ளைகள் நலன் முக்கியமாகக் கருதினார். தகப்பனார்ச் சொத்தை ஒருத்தன் மட்டும் ஆளும்படிஏன் விடவேண்டும், கிடைக்கச் சாத்தியம் உள்ள எந்த உபாயத்தையும் இழந்துவிடாக்கூதாது என்பதில் தன்ராஜ் குடும்பம் உறுதியாக இருந்தது.தாமஸ், நான் அரசு வேலைச் செய்யவில்லை. என் அப்பனின் வருவாய் பெரிய தொகையில்லை. என் குடும்பதிற்கு அதுமட்டுந்தான் ஆதாரம்என்பதாக வாதம் செய்தான். அண்ணனுக்குச் சிறிய அளவில்கூடப் பொருள் ஏதும் கொடுக்கவில்லை. அடிக்கடி ஒருவரை ஒருவர் மண்டைஉடைத்துக்கொண்டார்கள். அடிக்கடி நகரப் போலீஸ் ஸ்டேஷன் போனார்கள். ஒருமுறை நியாயவிலைக்கடையில் எழுபது வயசுக்கிழவி “யப்பாஎன்னால வரிசையில நிக்கமுடியலப்பா. நான் வாங்கிக்கினுப் போயிடுறேன்டா சாமி‘ என்று தாமஸிடம் கேட்டாள். “நீ, எனக்கு முன்னாடிப்போனுமா? கொஞ்ச நேரம் நின்னாச் செத்துட மாட்டே, எனக்குப் பின்னாலயே நில்லு“

அங்கிருந்தவர்கள் பாட்டியைப் பரிதாமாகப் பார்த்தார்கள். தாமஸ் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இனாம் அரிசியை வாங்கினான்.. தன்ராஜ்,தாமஸ் இருவருக்குமான பிள்ளைகள் திருமணங்களைச் சந்திக்கும் நிலைக்கு வந்திருந்தார்கள், சிலருக்கு மணம் முடிந்தும், சிலருக்குமுடிக்கவேண்டிய தருணத்திலும் இருந்தார்கள்.

டேவிட் இருக்கும்போதே இரு பெண்களை வெவ்வேறு இடங்களில் கொடுத்துவிட்டார். அக்காள், தங்கைக்குச் சில ஒழுங்கு முறையின்படிபிள்ளைகள் இருந்தது. சில பிள்ளைகளுக்குக் கலியாணம் முடிந்திருந்தது. சிலருக்கு முடியவில்லை. கணவர்கள்தான் குடும்பத் தலைமை. அரசுஊழியர்கள். வருமானம் இருந்தது. மின் கட்டணம் கட்டவும், மளிகைச் சாமான் மொத்தமாகவும் வாங்கி வருவதும் கணவர்கள்தான்செய்திருந்தார்கள். தங்கள் மாமியாருக்கு, டேவிட் செய்ததுபோலவே அந்தந்த கணவர்கள் தங்கள், தங்கள் மனைவிகளுக்குச் செய்யும்படியாகஅமைந்தது. ஒரு வரலாற்று நிகழ்வுதான்.

டேவிட் சிறிய மகளின் கணவர் ஒருநாள் விபத்தில் பலியானார். நாற்பத்தியைந்தைத் தொட்டுக்கொண்டு இருக்கலாம். அலுவலகத்தில் மாலைவிடுமுறை சொல்லிவிட்டு வந்தவர் வீட்டுக்கு வந்திருந்தால், மறுநாள் காலையில் வீடுகட்டும் பணிக்கு, அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும். மூத்தபெண்ணின் குழந்தைக்குப் பால் பற்றாக்குறையாக இருந்ததால், அடுத்து ஓரிருநாளில் நாட்டு பசுமாடு வாங்கப்பட்டு, ஓலை வேயப்பட்ட தடுப்புப்பாத்ரூம் அருகில் இருந்தப்புங்கை மர வேரில் கட்டியிருந்திருப்பார்கள். துக்க நாள் முடிந்து கொஞ்சம் சகஜநிலை வந்திருந்தது. சமயலறையில்கடலைபருப்பு,கடுகு தவிரி மற்ற பொருள்கள் ஏறக்குறைய காலியாக இருந்தது. எப்போதும் பச்சையாகவே உருவிப்போடப்படுகின்றகருவேப்பிலைகள், அதன் இருப்பிடத்தில் காய்ந்துபோன சிறு குச்சிகளாக மிஞ்சியிருந்தது. பிள்ளைகளைக் கரைச்சேர்க்கவேண்டிய கடமையை,நாளுக்கு முப்பது முறை வெவ்வேறு மனிதர்கள் சிறிய பெண்ணிற்கு ஆலோசனையாக வைத்துக்கொண்டிருந்தார்கள். சிறிய பெண் வாழ்நாளில்இதுவரை அறியப்படாதப் புதிய புதிய விஷயங்களுக்காக, ஒண்ணாவது படிக்கப்போகும் குழந்தையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

நான்கு, ஐந்து வருஷங்கள் கடந்த பிறகு டேவிட்டின் மூத்த மகன் தன்ராஜ் இறந்துவிட்டார். உடல் சரியில்லாதவர்தான், படுத்த படுக்கையாகஇருக்கவில்லை. நடமாடிக்கொண்டேதான் இருந்தார். அரசின் கடைநிலை ஊழியராக வேலைச் செய்தவர். சம்பளக்கவரைப் பிரிக்காமல் தன்மனைவியிடம் கொடுத்தவர். பணி இன்னும் ஆறுஆண்டு மிச்சம் இருந்தது. இழப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் பையன் திருமணம்,பெண்களுக்குப் பாக்கியாக நிற்கும் சில கடைமைகளுக்கும், சற்று நீண்டத் தடை ஏற்பட்டிருக்காது. மறுமகன் வேலையில்லாமல் இருந்ததால்,மாதக்கடனில் பெற்ற ஆட்டோ ரிக்ஷாவை, கம்பெனிக்காரன் எடுத்துச் சென்றிருக்கமாட்டான். தன்ராஜ் இயல்பாகச் சண்டையிடக்கூடிய ஆள்இல்லை. பின்னால், மனைவி இருந்தாள். தம்பி வேலையில்லாமல் இருப்பதால் ‘அப்பாவின் பென்ஷனை அனுபவித்துப் போகட்டுமே. அதற்கும்சேர்த்து ஏன் சண்டையிடவேண்டும்.‘ ஊர் முழுக்கப் பேசினார்கள்.

தன்ராஜ் இறந்து ஒருவருஷம் முடிவதற்குள், தம்பி தாமஸ் இறந்துவிட்டார். நாற்பத்தி இரண்டு இருக்கலாம். தாமஸ் மூத்த பெண் தனக்குஇஷ்டமானவனோடு சென்று ஏதோ கோயிலில் இந்து முறைமைப்படிதான் மணம் முடித்துக்கொண்டாள். சம்பந்தபட்டவர்கள் பெரிதாகப்பிரச்சனைக் கிளப்பவில்லை. உயிர் சேதம் மிச்சமானது. இன்னும் இரண்டு பிள்ளைகளுக்குத் திருமணம் முடிக்கவேண்டிய நேரத்தில் இருந்தார்.தாமஸ் சிறு வயதிலிருந்து எந்த வேலைக்கும் போனதே இல்லை. அப்பழக்கந்தான் வாழ்நாள் முழுதும் இருந்தது. பத்தாவது பெயிலான பையன்மீண்டும் முயற்சி இல்லாமல், வேலைகளுக்குப் போகத்தொடங்கி இருந்தான். குடும்பம் மிக நெருக்கடியில் இருந்தபோது அவ்வப்போது தாமஸ்கூலி வேலைக்குப் போனார். குடும்பத்தைப் பல கட்டங்களில் தாமஸ் சாமர்த்தியமாக நடத்திச்சென்றார் என்ற பேச்சு இருந்தது.

நிகழ்வு முடிந்து இரண்டு வருஷ இடைவெளியில் முதல் தலைமுறை காலஞ்சென்ற டேவிட்டின் மூத்த மறுமகன் இறந்துவிட்டார். இன்னும்குறைந்த பட்சம் இருபது வருஷங்களாவது வாழவேண்டிய வயது இருந்தது. கணவனைவிட, மனைவிக்குப் பனிரெண்டு வயது குறைவாகவேஇருந்தது. பிள்ளைகள் நன்றாகப் படித்திருந்தார்கள். ஒரே மேடையில கூட இரட்டைத் திருமணங்களை நடத்திவிடலாம். ஒன்றுபோலத் தயாராகஇருந்தார்கள். நல்லது நடக்கவேண்டிய நேரத்தில், நடத்தக்கூடியவர் இல்லாமல் போவதா?, குடும்பம், நிலமை என்னவாகும் ஊர்க்காரர்ப்பேச்சுவாக்கில் சுட்டிக்காட்டுவதுண்டு.
இறந்தவரின் மனைவியின் அண்ணன் மகள், கட்டிப்பிடித்து அழும்போது“ “நாம் என்ன வழிக்கு வந்தோமோ. நம் குடும்பத்தில, குடும்பத்தநடத்திச்செல்கிற ஒரு ஆம்பளைங்களும் நிக்கமாட்றாங்களே. எல்லாரும் ஒருத்தர் பின் ஒருத்தர் போயிட்டாங்களே. வீட்ல பொம்பளைங்களாநிக்கிறோமே“. கதறி அழுதாள். கேட்டு ஊரே அழுதது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்தக் குடும்பத்தில் இத்தனை மரணங்கள் ஏன்நிகழவேண்டும். முதல் தலைமுறை டேவிட் தவிர்த்துப்பார்த்தால், மற்ற அனைவருக்குமே, இருபது, முப்பது ஆண்டுகள் வாழ்க்கை மிச்சமிருந்தது.சந்ததியின் ஐந்து, பேரிடமும்தான் குடும்பத்தை நடத்திச்செல்லும் தலைமைப் பொறுப்பு இருந்தது. தலைமை என்பது வெறும் ஆண் தன்மைக்கானவகையில் அல்ல. வருமானம், சமூகதொடர்புகள், அனுபவம்,போன்றவைகள் சார்ந்திருந்தது. அவர்கள் மரணங்களால் குடும்ப இயல்பு,பிள்ளைகளின் படிப்பையும், குடும்பப் பொருளாதாரத்தையும் பின்னுக்கு இழுத்துச்செல்கிற வேலை நடந்திருக்கிறது. குடும்பத்திற்குத் தலைமைதாங்குகிற பொறுப்பை, அனுபவமே இல்லாத புதிய நபரின் மீது சுமத்துகிற சூழல் உருவாகியிருந்தது.

முதல் தலைமுறையின் தங்கராஜ் மனைவியான முதல் மரணம், கடந்தபிறகு ஏறக்குறைய பத்தாண்டுகள் கழித்துத் தங்கராஜீன் மூத்த மகள்கணவன் இறந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். ஆனாலும், பிள்ளைகளுக்கான கடமையைச் செய்யவேண்டிய பொறுப்புஅவருக்குத் தரப்பட்டிருக்கவில்லை. குடும்பம் அவரால் கடத்தவேண்டும் என்ற சூழல் இருக்கவில்லை. அவைகளை ஆரம்பம் முதலே தங்கராஜ்பார்த்துக் கொண்டிருந்தார். தங்கராஜ் மூத்த மகள், கணவனால் சில நேரங்கள் கிடைக்கிற சுவாரசியங்களை இழந்தாள், என்றாலும் தினந்தோறும்போதை வஸ்த்தின் வாசத்திலிருந்து விடுபட்டிருந்தாள். தங்கராஜ் மூத்த மகளின் பிள்ளைகள் எப்போதும்போல் தாத்தா வீட்டில் இருந்துபள்ளிகளுக்குச் சென்றார்கள்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தங்கராஜீன் இளைய மகனின் மனைவி இறந்துவிட்டாள். குடும்ப வருமானம் மகன் கையில் இருந்தது. அவள் தாராளகுணம் கொண்டவளாக இருந்திருந்தாள். கூட்டுக்குடும்பத்தைச் சிதைப்பதற்கான முரண்டுபிடித்த வேலைகளை ஒருபோதும் செய்திருக்கவில்லை.கூட்டுக்குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் தாங்கிக்கொண்டு உழைத்திருந்தாள். மூன்று பிள்ளைகள் பெற்றிருந்தாள். வாய்க்கு, வாய்ப் பசிதீர்க்கும் முறைமை முடிந்தபின்,பறவைகள், குஞ்சுகளைத் தனிமைப் படுத்தி விடுவதை ஒத்ததாக, பிள்ளைகள் தங்கள் கால்களைக்கழுவிக்கொள்ளும் பக்குவத்தை அடைந்திருந்தார்கள். மரணப்படுக்கையில் இருந்தாள். இறக்கும் ஓரிருநாளில், அவள் அண்ணனைப் பார்த்துப்“போனால் போகட்டும் போடா., …யாரடா“. பாடல் பாடினாள்.

எல்லா மரணங்களையும் விட மிக இளம் வயது மரணம் அவளுடையதுதான். அந்த மரணத்தால், சந்தோஷக் கணங்கள் உண்டாக்கித்தருகிறவாய்ப்புகள் கணவனுக்குக் குறைந்துபோனது. குடும்பத் தலைமை அவன் கையில்தான் இருந்தது. பணத்தைக் கொள்ளையிடும் நோயின், ஓயாததொல்லை அவளை இல்லாமல் செய்துவிட்டது.
மனைவி இருக்கும்போது, தினமும் பொரியல், கூடுதலாக ரசம், சாம்பார் எனச் செய்திருந்தாள். கணவன் ஒரு காரக்குழம்புடன் நிறுத்திக்கொள்வதுநடந்தது. குடும்ப அட்டையில் புதிதாகப் பெயர்ப் பதிவு ஏதும் நடக்கவில்லை. பிள்ளைகள் நாளுக்கு நாள் பொறுப்பை உணரும் நிலை, இயல்பாகவந்திருந்தது. குடும்பத் தலைமைக்குக் கூடுதல் உதவிகரமாக இருந்தது.

தங்கராஜ் சின்ன மகனுக்கு அறிமுகமான சிலரின் வாய்சொல் வேறுமாதிரியாக இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் நான்கு பேர் பயணத்திற்குக்காத்திருக்குபோது பேருந்து தாமதமானால், ‘தங்கராஜின் சின்ன மகன் கூட இருப்பதால் அப்படி நடந்திருக்கலாம்.‘ பேசிக்கொண்டார்கள். இன்னும்சில கடினமனம் கொண்டவர்கள்‘இவன் தகப்பன் செய்த பாவமும், இவன் செய்த மோசங்கங்களின் மூலமும்தான் சின்ன வயதில் மனைவியைஇழந்தான்‘ என்றும் முடிவுசெய்துக்கொண்டார்கள்.

தங்கராஜ் சிறிய மகன் காதுகளில் விழுந்தபோது ‘உண்மையாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எழும்பியிருந்தது. ஆனால், ஏதாவது சிறியசிக்கல், கஷ்டம் வரும்போது மட்டுமே, அந்த அவதூறு வார்த்தைப் பயன்படுகிறது. ஆகையால், அதை நம்பி மெலிந்து போகவேண்டிய அவசியம்இல்லை‘. என்பது சிறிய மகனுக்குத் தெரியவந்திருந்தது.

அவன் ஆய்வின் முடிவில் எழுதினான், ‘எல்லாத்தரப்பு மரணத்தையும் அலசவில்லை. ஆனால், இவ்வாய்வில் கண்டுணர்ந்த இருவகைமரணங்களின் உள்ளடக்கம், ஒரு குடும்ப மரபுக்கு மட்டும் ஒத்துப்போவதில்லை. பொதுவாகக் குடும்பங்களின் தலைமை, துணைத்தலைமைஇருவகை மரணங்களுக்கு, ஒரே வகையான தகுதிச்சான்றைத் தரும்படி இயல்பாகவே அமைந்துவிடுகிறது. இயல்பிற்கு ஒத்தபடித் தலைமை,துணைத்தலைமைப் பதவிகளை இரு பாலினத்திற்கும் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஒன்று ஒடித்து வளர்க்கும் முறை.மற்றொன்று ஓய்வளித்துக் காக்கும் முறை. இரண்டுக்கும் வலி ஒன்றுதான். இரண்டின் நிகழ்வும் ஒரே அர்த்தம்கொண்டதல்ல. இரண்டுமேமுற்றாக அழித்தலுக்கானதும் அல்ல.

ஒரு வகைமையில், இரு தன்மை விளைவது நடக்க முடியாததல்ல. ‘தலைமுறை மரணங்கள்‘ மட்டும்  இயல்பிற்கு விலக்கானதல்ல.

டேனியல். ஜே