Sunday, August 25, 2013

கட்டுரை,



 அதிகாரக் குரூரத்தை அறியாமலே,  தப்பிக்க பழிசுமத்தும் சாமானியர்கள்

மூன்று நாளைக்கு முன் என் மகள், “பக்கத்துவீட்டு செல்வியக்காவை மூணாவது வீட்டு அமுதா, அவுங்க அம்மா இரண்டுபேரும் சேர்ந்து அடிச்சிட்டாங்க. தெருவில நிறைய பொம்பளைங்க, நின்னு பாக்கிறாங்க. யாருமே வெலக்கி விடல. என்றாள். 

நான் “ஏன், என்ன சண்டை“ என்றேன். 

உடனே என் மகன் ‘’அமுதா வீட்டுக்காரர்கூட அப்படியே நிக்கிறார். அப்புறந்தான் செல்வியக்கா, அவுங்க பையன் தாஸ் ஓடிப்போயி “ஏய் எங்கம்மாவையா அடிக்கறீங்கனு, அமுதாவை எட்டி ஒரு ஒதை விட்டான். அதுல யாரோட வளையலோ உடைந்து அமுதக்கா, அம்மாவின் நெற்றியைக் கிழித்துவிட்டது. ரத்தம் கொட்டிடுச்சி. அப்புறம் அமுதக்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி, இரும்பு ராடால எங்கம்மா மண்டைய ‘தாஸ்‘  ஒடைச்சிட்டாணு மொதல்ல கேசு குடுத்துச்சாம்.  போலீஸ் வந்து தாஸ அலேக்கா தூக்கிம்போயிடுச்சாம். அப்புறம் படிக்கிற பையன்னு மாலையில விட்டுட்டாங்களாம்“ என்றான். 

பதினோராம் வகுப்பு படிக்கும் தாஸ, போலீஸ் புடிச்சிம்போச்சி என்பதை பிள்ளைகள் சற்று கிண்டலாக சொல்லிச் சிரிச்சதால, நான்கூட ஏதோ லேசான சண்டைன்னு நெனைச்சிட்டேன். 

பக்கத்து வீட்டில் மூணு ஆண் பிள்ளைகள். ஒருத்தன் பிஈ முடிக்கப்போகிறான். இன்னொருவன் பிகாம் இப்போதுதான் சேர்ந்திருக்கிறான். கடைசி பையன்தான் தாஸ் பதினோராவது படிக்கிறான். பக்கத்துவீட்டுக்காரர் மேஸ்திரி வேலை செய்கிறார். வேலையில் கெட்டிக்காரர்தான். மூணு பிள்ளைகளையும் பள்ளியில் சேர்ப்பதிலிருந்து, எதாவது சந்தேகங்களை அடிக்கடி கணவன் மனைவியுடன் வந்து என்னிடம் ஆலோசனைக்கேட்பார்கள். அவர் மனைவி, குழந்தைகளிடம் ஒரு குழந்தையாகவே விளையாடுவார். நல்ல அறிவாளியும்கூட. எங்களின் விஷேச நாட்களில் அவர்கள் பிள்ளைகள் எங்கள் வீட்டில் சாப்பிடுவார்கள். இந்து பண்டிகைகளில் செல்வியக்கா அவர்கள் வீட்டில் விஷேசமாகச் செய்கிற பலகாரங்களைக் கொண்டுவந்து கொடுப்பார். இப்படித்தான் ஏறக்குறைய பதிமூன்று வருஷங்கள் பக்கத்தில் பக்கத்தில் இருக்கிறோம். எப்புதாவது சின்ன சின்ன பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அதைத்தாண்டி நல்ல உறவு உண்டு. இவர்கள் இனத்தால் வன்னியர்கள்.

மூணாவது வீட்டுக்காரர் ஏதோ அரசு மருத்துவமனையில் உதவியாளராக இருக்கிறார். அவரும் அடிக்கடி வந்து என்னிடம்  பேசுவார். “அரசு அகவிலைப்படி ஏத்தியிருக்கு. உங்களுக்கும் இருக்கா? என் மாப்பிள பாம்பேயில இருந்து கட்டில், பிரோ வாங்கினாரு. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க, ரொம்ப சீப்பா வாங்கித்தருவாரு.  சார் உங்க ரூமு, இப்பத்தான் சார் நல்லா இருக்கு“ என்பது போன்று பேசிக்கொண்டிருந்துவிட்டு போவார். அவர் வந்துபோனால் என் பிள்ளைகள் அய்யோ அருவைக்கேசு வந்துடுச்சா? என்பார்கள். ஆனால் எந்தக் கொடுக்கல், வாங்கல் இருந்ததில்லை. பொதுவாக நானாக எங்கும் (சினிமா, புத்தகக்கடை தவிர) போவதில்லை. அவர்கள் அழைத்தால் போகாமல் இருப்பதில்லை. இவர் இனத்தால் ஆதிதிராவிடர். 
 
இந்த நிலையில்தான் சண்டை நடந்திருக்கிறது. சண்டை நடந்த மறுநாள் மாலை பக்கத்துவீட்டு பையன் தாஸ், அவன் அண்ணன் இன்னொரு பையன் மூவராக வந்து, என்வீட்டில் விளையாட்டாக என் பையனோடு பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வந்ததும் “அணா, எங்கப்பா விடுநர், பெறுநர் மட்டும் எழுதி வாங்கிவரச்சொன்னார்“ என்று தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் சொன்னான். நான் சண்டை சம்பந்தமாகத்தான் இருக்கும் என்று புரிந்துகொண்டேன். ஆனால், “போலீஸ் ஸ்டேசனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதப்போறீங்களா? அல்லது நீங்க கேஸ்குடுக்கப்போறீங்களா?“ என்றேன். பசங்களுக்கு விவரம் தெரியவில்லை. சரியாக்கேட்டுவர போனார்கள்.

எந்த விஷயத்துக்கும் முழுத்தகவலையும் சொல்லி, எழுதிச்செல்லுகிற நபர். இந்தமுறை விடுநர், பெறுநர் மட்டும் கேட்கவேண்டிய நிலைக்கு ஏன் வந்தார். என்று யோசித்தேன். ஒருவேளை மூணாவது வீட்டுக்காரன் இனமும், நானும் ஒரே இனம் என்பதால் அந்த இனத்துக்கு எதிராகவே என்னால் எழுதி கொடுக்கமுடியாது என்று நினைத்திருக்காலாம்.  அல்லது மூணாவது வீட்டுக்காரன் அடிக்கடி வந்து பேசுவதால் நான் அவர்கள் சார்பாகத்தான் நிற்பேன் என்று ஊகித்தருக்கலாம். சரி எப்படியோ, நம்மிடம் வரவில்லை என்றால் நல்லதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

சற்று நேரத்தில் பக்கத்துவீட்டு மேஸ்திரியும், பிள்ளைகளும் வந்தார்கள்.  அது ஒண்ணும் இல்லிங்க. மகளிர் சங்கம் மூலமா கேஸ் குடுக்கத்தான்“ என்றார். “ஓ அப்படியா“ என்றாலும் எனக்கு தர்ம சங்கடமாகத்தான் இருந்தது. நான் ஒன்றும் பேசவில்லை. “நமக்கு தாலுக்கா ஸ்டேசன்தானேடா’’ என்று அவர் பையனை சும்மாக்கேட்டேன்.“ விடுநர் எழுதி, யார் கேஸ் குடுக்கப்போறீங்களோ அவுங்க முகவரியை எழுதிக்குங்க.“ என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேசன் முகவரியை பெறுநர் இடத்தில் எழுதி மேஸ்திரியிடம் கொடுத்துவிட்டேன். அவர் நன்றி சொல்லிக்  கிளம்ப எத்தனித்தபோது. மேஸ்திரியிடம் பேசினேன் “ ஏங்க. மறுபடியும் ஏன், கேஸ் அது இதுன்னு போறீங்க. நாம எல்லாம் பக்கத்தில பக்கத்தில இருக்கிறோம். பேசி  சமாதானமாக போக யோசித்துப்பாருங்க. கேசுனு போனீங்கனா உங்களுக்கும், நிம்மதியில்லை. அவங்களுக்கும் கஷ்டம்தான்“ என்றேன். 

தீவிரமாக இருந்த மேஸ்திரி சற்று சுதிகுறைந்து.  ''இல்லசார் சாமாதானமா போகறதுதான். இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காகத்தான் கொடுக்கப்போகிறோம்.'' 
''சரி யோசனைப்பண்ணி செய்யுங்க“ என்று முடித்துக்கொண்டேன். மேஸ்திரி முகத்தில் தீவிரம் குறைந்திருந்தது. “சரி வரங்கே“  என்று சென்றார்கள். 

அதிகாலையில் மூணாவது வீட்டுக்காரர் வந்துவிட்டார். எதோ வீர தீர செயல் செய்துவிட்டதுபோல சற்று பெருமைதோய்ந்த தொனியுடன் சொன்னார். அதில் இவன் நம்ம ஆளு என்ற உரிமை இருந்தது. “இன்னாங்க கேள்விப்பட்டீங்களா. அந்தாளோட பையன் தம்மாதுண்டு இருக்குதே. அது வந்து என் மனைவிய ரத்தம் வரா மாதிரி அடிச்சிடுச்சிங்க. சாதியை வச்சி திட்டுதுங்க. அதான் போனேன். கேஸ் குடுத்தேன். போலீஸ் அந்த பையனை தூக்கிம்போச்சி“ என்றார். 

நீங்க அவசர அவசரமாக கேசு குடுத்தாலும் அவன் படிக்கிற பையன் அவனை ஒண்ணும் செய்யமாட்டாங்க. அவன் ஜாலியா டிவி பாத்துக்கிணு. மதியம் பிரியானி வாங்கிக்குடுத்தாங்களாம் சாப்பிட்டுதான் வந்திருக்கான். ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்குங்க. நமக்கு சாதகமா இருக்கிதுண்ணு, அனாவசியமா எடுத்து பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை நாம பயன்படுத்தியது உண்மையில்லைனு தெரிஞ்சா அதுவே நமக்கு பாதகமா திரும்பிடும்.“

“அப்ப அவன் சாதிய வச்சி கேவலமாக பேசுவான், நான் கேட்டுக்கிணுபோகனுமா?“ 

“அப்படி அவர்கள் பேசவேயில்லை என்று தெருவில் பார்த்தவர்கள் சொல்றாங்களே. ஒரு வேளை,  அவர்கள் வன்மத்தோடு கேட்டிருக்கக் கூடுமானால் அதற்காக அவர்கள் வருத்தப்படவேண்டும்“

இதை மூணாவது வீட்டுக்காரர் எதிர்பார்க்கவில்லை. என் மனைவியின் மண்டையை ஒடைச்சான் நான் கேஸ் குடுத்தேன் என்று என்னிடம் உரையாடுவதை தவிர்த்து விலகினார். அதற்குள அமுதா வந்தாள். வரும்போதே “அணா, உங்க பையனும் தாசும் பிரண்டுங்க இங்க பேசரதக்கொண்டுபோய் அங்க சொல்லிடப்போறான் கொஞ்சம் சொல்லிவையிங்கணா“ என்றாள்.

அவள் ஆரம்பப்பேச்சே சரியில்லை என்று பட்டது. நான் பொறுமை இழக்கவில்லை. இங்க பாருமா. நான் யாருக்கும் சாதகமானவன் இல்லை. உனக்கு பிடிக்கலைனா எல்லாரும் தப்பானவங்கனு நினைக்காதே. இந்த சின்ன விஷயத்திலேயே நீ தப்பாவே யோசிக்கிறனு தெரியுது.“

அவள், அவளுக்கு நியாயமாக படுகிற விஷயங்களை சத்தமாக படபடவென்று “அவுங்க நாய் வளக்கிறாங்க, பூனை வளக்கிறாங்க அதுங்கலாம் நடு ஊட்டிலயும், வாசல்லயும் வந்து பேளுதுங்க. அப்படியிலாம் உங்க வீட்லசெய்தா நீங்க பொறுத்துப்பீங்களா? பேசிக்கொண்டே இருந்தாள். எனக்கு ரேசாகிக் கொண்டேயிருந்தது. நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீ அனாவசியப்பேச்சுக்கள் நிறைய பேசுவதை நானே அடிக்கடிக்கேட்கிறேன். இந்த ஏரியாவுக்கு உனக்கு முன்னாடி வந்தவன், எனக்கு செல்வியக்காவைப்பத்தி நல்லா தெரியும். மேஸ்திரி துடுக்காக பேசுவார், ஆனால், மோசம் என்று சொல்லமுடியாது. செல்வி அப்படிப்பட்ட ஆளு இல்லை. நல்ல குணசாலியான பெண்தான். அவுங்க சின்ன பசங்களைக்கூட  நா கூசுகிற வார்த்தைகளை வைத்து பேசமாட்டாங்க.“
 
பாத்தியா நீங்ககூட நாங்கதான் சண்டைக்குபோகிற ஆளுங்கனு நெனைக்கிறீங்க. எங்க ஊட்டுக்காரு அங்கவேலை செய்யிறாரு, எங்கப்பா எனக்கு எவ்வளவு செலவு செய்யீறாரு. நாங்க ஏன்னா மத்தவங்க சண்டைக்கு போகப்போகுறோம்.

“ஏம்மா. இங்கபார். நாமெல்லாம் பக்கத்தில பக்கத்தில இருக்கிறோம் ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்துதான் வாழவேண்டியிருக்கிறது. சாதியக் குறிப்பிட்டு சொல்லாத்தை, நீ சொன்னதாக போய் கேசு குடுப்பே. அப்புறம் அவன் சாதியில நாலுபேரு வக்காலத்துக்கு வருவான். உன்சாதியில இருந்து நாலுபேரு வருவான். எடையில ஒண்ணும் அறியாமல் இருக்கிற குடும்பமெல்லாம் சாகணுமா? உங்களுக்கு அறிவில்ல. தவறே செய்தாலும் அதற்கு ஒரு நியாம் இருந்துன்னா. ஆயீரம்பேரு ஆதரவா வந்து நிப்பான். இந்தமாதிரி அபாண்டமா பழிய சொல்லி உன்ன மட்டும் தற்காத்துக்கணும்னு நெனைச்சா, உனக்கு எதிரா நானே வந்து சாட்சி சொல்லுவேன். என்று மிக சத்தமான கோபத்துடன் சொன்னேன். அமுதா வாயின் இரு ஓரங்களிலும் நுரைகிளம்பப் பேசிக்கொண்டிருந்தவள். மருண்டு பார்த்தாள். நடந்தது நடந்துபோச்சி இனி அப்படியெல்லாம் இருக்கவேண்டாம் போலீஸ் விசாரிச்சாக்கூட சமாதானமா போற வழியப்பாருங்க“ என்றேன். 

அமுதாவின் அப்பா “சரி சரி விடு அவரு வேலைக்கு போகிறாரு. போகட்டும் விடு“ என்று கிளம்பினார்கள்.

நான் அரசு மருத்துவமனையில் இருந்த செல்வியக்காவைப்பார்த்து விசாரித்துவிட்டு பள்ளிக்குப் போனேன். 

ஒரு வாரம் கடந்துவிட்டது. எந்த பிரச்சனையும் இதுவரையில்லை. பக்கத்துவீட்டு பையன், பள்ளி முடிந்து வந்ததும், மாலையில் வந்து  என் பையனை தட்டசு பயிற்சிக்கு அழைத்துச்செல்கிறான்.  ஆனால், அமுதா வீட்டில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நம்பிக்கையிருக்கிறது. நான் தவறு செய்யவில்லை என்பதை புரிந்துகொள்வார்கள் என்று.

ஜேடி

Friday, August 23, 2013






சாதியின் குரூரத்தைக்குடித்து, நிறைவின் ஏப்பமிடும் படைப்பாளிகள்.
அதிகார குரூரத்தை அறியாமலே, தப்பிக்க பழிசுமத்தும் சாமானியர்கள்
                                                                    1
கடந்த சனியன்று (15.8.2013) குழந்தை, ஒரு வருடம் பூர்த்திசெய்யும் விழாவிற்கு கவிஞர் என்னை அழைத்தார். நான் சென்றிருந்தேன். கலியாண மண்டபத்தில் அநேக மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வந்திருந்தார்கள். இந்தமாதிரி விழாக்களில் கிராமியசூழல் நிறைந்த மக்களைக் கண்டு எவ்வளவு நாளியிற்று என்று மனம் சந்தோஷம் அடைந்தது. எனக்கு அக்கூட்டத்தில் அழைத்த கவிஞரைத்தவிர யாரையுமே தெரிந்திருக்கவில்லை. அந்நிகழ்வில் எனக்குத்தெரிந்த இன்னொரு நாட்டுப்புறக் கலைஞரும் வந்திருந்தார். அவருக்கு பல நண்பர்கள் தெரிந்திருந்தார்கள். தெரிந்திருந்தவர்கள் எல்லாருமே பதினைந்து வருஷத்திற்குமேல் பழகியவர்கள். நாட்டுபுற கலைகளில் ஒன்றாக இயங்குபவர்கள்.

நானும், கலைஞரும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிலரைக் காண்பித்து “அதோ போகிறார் இல்ல, அவர் ஒரு கவிஞர். இவர் தனியார் டி வி நிகழ்ச்சியில் சின்னச் சின்ன நிகழ்வுகளை நடத்துகிறவர்“ என்று சற்று தூரத்தில் நடமாடுகிறவர்களைக் காண்பித்து சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் தலையாட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை அழைத்த கவிஞர் வந்தார். நான் நிகழ்வுக்கு வந்ததின் வருகையைப் பதிவு செய்யும் விதமாக கவிஞருக்கு (கவிஞர் என்று அப்பிதழ்களில் குறிப்பிட்டு இருந்ததால் நானும் அதையே இங்கு உபயோகிக்கின்றேன்.) வாழ்த்து சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டேன். அவரும் வந்ததற்கு நன்றி சொல்லும் விதமாக உடல் தழுவி கைக்குளுக்கினார். பிறகு தம்பதிகளுக்கும், குழந்தைக்கும் வாழ்த்துரைகள் சொல்லி கேக் வெட்டப்பட்டது. சில முக்கியஸ்த்தர்கள் குழந்தையையும், தம்பதிகளையும் வாழ்த்திப் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் நாட்டுப்புற கலைஞரும் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெரியவர் வந்து சார் போங்க பந்தி காலியாக்கிடக்கிறது போய் சாப்பிடுங்கள் என்றார். சென்றோம். கூட்டுபொரியலுடன் நல்ல சோறு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு வந்து உட்கார்ந்தோம். தம்பதிகள் ஒவ்வொரு முக்கியஸ்தராக அழைத்து கைத்தறித்துண்டுகளை, போட்டு மரியாதை செய்துக்கொண்டிருந்தார். கவிஞர் நாங்கள் வந்ததைப் பார்த்து, அவருக்கு பக்கத்தில் இருந்தவர்களிடம் இன்னும் இரண்டு துண்டுகளை எடுத்துவாருங்கள். அவர்களும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு போடவேண்டும் என்றார். என்னை அத்தார், பிறகு நாட்டுபுற கலைஞரை அழைத்தார் துண்டுபோடப்பட்டது.

நான் வாங்கிவந்து உட்கார்ந்துகொண்டேன். கூட்டம் இப்படியும் அப்படியும் நெறுக்கும்படியாக இருந்தது. நாட்டுபுற கலைஞர் நின்றவாரே அத்துண்டை மடிக்க தோளில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார். விழாத்தம்பதிகளுக்கு நெருக்கமாக நின்றிருந்த நபர் ஒருவர் நாட்டுபுற கலைஞருக்கு அருகில் வந்து மிக மெல்லமான குரலில் ‘டே அதைக்குடுடா‘ என்று வாய்க்கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, கை வேகமாக துண்டை பிடுங்கிக்கொண்டது. கலைஞரும் தன் அனுமதியைப் பொருட்படுத்தாமலே தனக்கு வந்தது கைவிட்டுபோகிறது என்பதை அறியாமல். தானே மனமுவந்து தருவதுபோல “ஆம் இந்தாங்க யாருக்காவது போடுங்க“ என்று நின்றார்.

அவருக்கு பார்வை சற்று குறைவுள்ளதால் எதை கவனித்தார் என்றெ தெரியவில்லை. நான் சற்று அதிர்ந்துபோய் சரி ஏதோ பற்றாக்குறை இருக்கும்போல, யாராவது முக்கியஸ்த்தர்களுக்கு, இல்லாமல் இருக்கும் அதனால் வாங்குகிறார் என்று யோசித்தேன். ஆனால், பிடுங்கிய நபர் ஏதோக் கந்தைத்துணியை எறிவதுபோல் ஒரு மூலையில் போட்டார். அது ஒரு பென்சில் விழுந்தது. அக்கூட்டத்தில் யாரோ ஒரு நபர் அத்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு அவரும் கரிக்கந்தையைப்போல் அங்கேயே விட்டுவிட்டார். அந்தத் துண்டு ஜனக்கூட்டத்தில் காலுக்கடியில் மாட்டிக்கொண்ட குப்பையைப்போல இப்படியும் அப்படியும் சுருங்கி, விரிந்துகொண்டிருந்தது.
எனக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. “சரி நண்பரே போகலாம். நீங்கள் வருவதாக இருந்தால் போகும் வழியில் இறக்கிவிடுகிறேன்“ என்றேன். நானும் வந்துவிடுகிறேன் என்றார். நான் பயணித்துக்கொண்டே மெதுவாக வினவினேன். “உன்னிடம் டவலை வாங்கினாரே அவரு யாரு“ என்றேன்.

“அவர் ஒரு கவிஞர். மிக நெருங்கிய நண்பரும்கூட“ என்றார். நான் மேலும் எப்படிக் கேட்பது என்று யோசித்தேன். இருந்தாலும் அச்செயல் என் தயக்கத்தை உடைத்தது.
அவரு ஏன் உன் கையில் இருந்த டவலை இழுத்தார்“ என்றேன். அய்யோ, அப்படியில்ல யாருக்காவது பற்றாக்குறையாக இருந்திருக்கும், அதற்குத்தான் வாங்கியிருப்பார்“ என்றார்.

நண்பர், முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த நபர் உன்னிடம் இருந்து பிடுங்கி ஏதோ ஒரு மூலையில் போட்டுவிட்டார். வேறு யாரோ ஒரு நபர் அந்தத்துண்டில் முகத்தைத் துடைத்துப்போடுகிறார், ஆனால் வேறு இடத்திலிருந்து டவல்கள் மரியாதை செய்ய கொடுக்கப்படுகிறது. என்றேன். நண்பரால் அதற்குமேல் பேசமுடியவில்லை.

ஆமான்யா, என்னதான் பழகினாலும் பல நேரங்களில் அப்படித்தான் செய்வார். அவரு எம்.பீ.சி இனம் என்றார். அப்போதுதான் சாதியின் கொடூர முகத்தை நேரில் கண்கூடாக அனுபவித்தேன். பதினைந்து வருஷமாக பழகுகிற ஒரு மனிதனை, அதுவும் கலை சம்பந்தப்பட்ட துறையில் ஒன்றாக இயங்குகிற நபருக்கு, கேவலம் இருபது ரூபாய் கைத்தறித்துண்டு தோளில் விழுவதையேத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால். இச்சமூகத்தில் பொருளாதார மேம்பாடு இல்லாமல் ஒரு சாமானியன் எதைதான் சாதிக்கமுடியும்..... தொடரும்

ஜேடி