Thursday, December 29, 2011

கவிதை



ஆயுளைக் கழிக்கும் நாள்

தானேபுயல் 
ஒரு முதலாளித்துவத்தின் 
திமிர்பிடித்த மண்டையில்
வடியும் ஆங்காரத்தின் 
செயல் வடிவமாக 
கரையைக்கடப்பதுடன்
2011ன் செயற்பாட்டை முடித்துவைக்கிறது

இதனுடன் முடிந்துவிடுமா
கேரளம், கர்நாடகம், 
தமிழகத்திற்கு தண்ணீர் தரும் பிரச்சனை
ஆந்திரத்தின் பிரிவினை.

இரு வல்லாண்யின்
வார் பூட்டிய மிருதங்கத்திற்குள்

தால் ஏரியும், அதன் எழிலும்
உறைந்து கிடக்கிறது.
மிருதங்க பக்கத் தோல் 
பார்வையாளருக்கு 
நல்ல இசையை ஈந்தளிக்கிறது 

புழுக்கத்தில் தவிப்பவர்க்கு
நல்ல காற்று கிடைக்குமா?

ஒரே நாட்டின் வளர்ச்சிக்கு 
போட்டி போட்டு உழைத்து 
யார் இருந்தால் என்ன
நீதான் மேஸ்திரியாய் இரு என்றதற்காக
இன்று கிழித்து உறுவுகிறாய்,
என் குடல் திரௌபதியின் சேலையா?
எனக்காக நீண்டுகொடுக்கவும் 
ஆளில்லாமல் தான் நிற்கிறேன்
இத்தனைக்கும் 
உன் உழைப்பை 
சுரண்டிக்கொள்ளவும் நினைக்கவில்லை
எனக்கான சுதந்தர 
இருப்பைத்தான்கேட்டேன்
கிடைத்துவிடுமா?


கல்விக்கூடங்கள் ராணுவதளங்களாக
மாறினாலும் ஏற்றுக்கொகிற இஸ்ரேல்,
பாலஸ்தீனப்பிள்ளைகளுக்கு
சுதந்தரமான வாழ்நிலைக்கு
வழிவிடுமா?

ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான்
பாலைவனங்ளில் திரியும்
ஒட்டகங்களின் தொண்டைக்குழிக்குள்
எண்ணைக்கிணறை கண்டெடுக்க
(ஏழையாக மாறுகிறதற்கு 
காரணம் கண்டுபிடிக்காமல்)
வல்லரசுகளின் போட்டி கைவிடப்படுமா?


இவைகளை
அப்படியே தக்கவைத்துக்கொண்டு
கடந்த யுகங்களைப் புணர்ந்த 2011ன்று
பனிரெண்டு மாதங்களை
தன் கருவறையில் தக்கவைத்து
பிறசவிக்கிறது பிறசவிக்கிறது பிறசவிக்கிறது
2012ண்டான புதிய புத்தாண்டை!


மனிதனின் வாழ்நாளில்
ஒரு ஆண்டை கழிப்பதற்காகவே
வலுக்கட்டாயமாக
அவசரமாய் பிறக்கிறாயோ?

ஜேடி



 



Tuesday, December 27, 2011

சிறுகதை

      

நன்றி “தடாகம்” இணையம்  மற்றும ‘யாழினி முனுசாமி’


                                 நாமக்காரக் குட்டி

நான் ஊகிக்காத அளவு அடிவிழுந்துவிட்டது. அடிவிழுந்த மாத்திரத்தில் காவ்... காவ்.. என்று ஊரையே கூட்டுமளவுக்கு சத்தம்போட்டது. வெறுமனே அப்படிக் கத்தியிருந்தால் கோபம் அதிகமாகியிருக்கும். மாறாக அப்படி இல்லை, உண்மையிலேயே வயிற்றின் விலா எலும்பு உடைகிற அளவு அடித்துவிட்டு இருக்கிறேன். சத்தம்போட்டுக் கத்திய பிறகுதான் அய்யோ அடி பலமாக விழுந்துவிட்டதா என்று பதைத்தேன். லேசாகத்தான் அடித்தது போல் இருந்தது. இவ்வளவு தூரம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.

பாவம் சற்று முன்புவரை மிகவும் உற்சாகமாகத் துள்ளிக்குதித்து அதன் தாயோடும், சகோதரர்களோடும் விளையாடியது. மனிதனுக்கு மட்டுமல்ல, எந்தப் பிறவிக்கும், கையாள்கிற பொருளுக்கும் நிரந்தரமான சுகமான இருப்பு கிட்டுவதில்லை, எதிர்பாராத நேரத்தில் மாற்றமும், அழிவும் சாத்தியமாகவே  இருக்கிறது. நான் இவ்வளவு அரக்கத்தனமாக எப்போது மாறினேன். எனக்கேத் தெரியவில்லை. சற்று முன்புவரை பின்னங்கால்களை ஊன்றி, முன்னங்கால் இரண்டையும் தூக்கி அதன் தாயின் மடியில் தாங்கி பால்குடித்துக் கொண்டிருந்தது. ஐந்து குட்டிகள் மாறி மாறி விழுந்து எழுந்து பால் குடித்தன. தாய் பின்னங்கால் இரண்டையும் விரித்து வைத்து ஊன்றி நின்றது.  ஐந்து குட்டிகள் அவைகளில் எதுவுமே ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை.  ஒன்று செவிளியாகவும், ஒன்று  கறுப்பும், செவிளியும் கலந்து இருந்தது. இன்னொன்று பாதி வயிறு, நான்குகால்கள் வெள்ளையாகவும் மற்ற இடம் செவிளியாகவும் இருக்கின்றது. நான் அடித்தக் குட்டி சற்று வித்தியாசமாக காக்கியும், மஞ்சளும் லேசாகக் குழைத்த கலரில், முகத்தின் நெற்றியில் நாமம்  இழுத்திருப்பதுபோல் தனியான கலரில் ஒரு கோடும், ஒரு பக்கம் மூக்கு வெள்ளையாகவும் ஒருபக்கம் கறுப்பாகவும், மற்ற குட்டிகளை விட அழகாகவும் இருந்தது. பொதுவாக எவ்வளவு ஆபத்து நிறைந்த ஜந்துவானாலும் குழந்தைக்குட்டியாய் இருக்கிறபோது அழகுதான். தன் வாழ்நாளில் தன் நலனுக்காகவே இதயத்தைப் பதப்படுத்தி வைத்திருக்கும் மனிதன்கூட அதை ரசிக்காமல் இருக்க முடியாது.

அந்த நாய்க்குட்டியை அடிப்பதற்கு முன், தூக்கிக் கொஞ்சிவிட்டுதான் போனேன். அதன் பிறகு அடிக்கிற சூழ்நிலை எப்படி ஏற்பட்டது யோசித்தாலும் விளங்கவில்லை?.  ஒன்றும் இல்லை. இதேபோலத்தான் ஆறு, ஏழு கோழிக் குஞ்சுகள் பொரித்து நான்கு நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அவைகளை பையன்தான் வெளியே விட்டுவிட்டு இன்ஜினியரிங் காலேஜ் போனான். அவன்தான் அதை சிரமேற்கொண்டு வளர்க்கிறான்.  இரண்டு, மூன்று நாளாய் வீட்டிலேயே இருந்தது. இன்றுதான் வெளியே விட்டான். இன்ஜினியரிங் படிக்கிற பையனுக்குக் கோழிகள் வளர்க்கிற வாஞ்சை இருக்கிறதே என்று அதிகபட்சமாக ஆச்சரியப்பட வேண்டாம், அவனுக்கும் தற்போதைய நிலையில் நாட்டுக்கோழி, மிசின் வெள்ளைக்கோழி என்ன விலை என்பதை தெரிந்து வைத்திருந்தான். ஒருவேளை, அவர்களுக்கு அதிக சந்தோசத்தைக் கொடுக்கிறவைகளைக் கொண்டுவந்து சேர்ப்பதில் என் வருமானம் சுணக்கம் காட்டுவதால், இப்படிச் சுயமாக வருமானம் ஈட்டும் எண்ணம் வந்திருக்கலாம்.  இன்றுதான் முதல் முதலில் வெளியே விட்டான். சற்று வெளியே சுற்றவிட்டு மீண்டும் வீட்டில் அடைத்துவிட எனக்குச் சொல்லிச் சென்றான்.

நான் அடிக்கடி அவைகளைப் பார்த்துக்கொண்டே இணையத்தளங்களில் ஓயாமல் ஊடாடும்  முக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.   அப்போதுதான் நான் ஏற்கனவே சொன்னதுபோல பஞ்சுக் காய் வெடித்து அதில் மிருதுவான பஞ்சு தன் மென்மையை வெளிப்படுத்து வதுபோல் கோழிக்குஞ்சுகள் சின்ன மூக்குடன் குறுங்கால்களைக் கொண்டு அதன் தாயைச் சுற்றி வந்துகொண்டிருந்தன. நாய்க்குட்டிகள் அவைகளைப் பார்த்து ஓடுகின்றன. ஒரு நாய்க்குட்டி என்றால் கோழி எச்சரிக்கையாகி குத்தித் துரத்திவிடும்.  ஐந்து குட்டிகள் இப்படியும், அப்படியும் கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க ஓடுகின்றன. நாய்க்குட்டிகளுக்கு அதன் தாயிடம் போதுமான பால் இல்லை. சோறு திங்கிற நிலைக்கு இன்னும் வராத குட்டிகளாய் இருக்கின்றன. பால் காய்ச்சி ஊற்றலாம்,  நாங்களோ தினமும் காபியோ டியோ  போடுவது தேவையில்லாத வேலையாக நினைக்கின்றோம். சோம்பேறித்தனமோ குடிக்கப்பழக்கமில்லாமலோ இல்லை. தினமும் என்கிறபோது ஒரு கணிசமான பட்ஜெட்டைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் போடணும் என்று தோன்றினால் போடுவது... இல்லை என்றால் விட்டுவிடுவது என்றுதான் நாட்கள் போகின்றன. முற்றிலும் காபி போடாமல் விட்டுவிடுவதும் இல்லை. பரிதாபப் படுவதுபோல் குட்டிகள் வயிறு ஒட்டிவிடவும் இல்லை. ஆனாலும் நாய்க்குட்டிகள் எதாவது தின்றுகொண்டே இருக்க நினைக்கின்றன. அப்படித்தான் அந்தப் பூங்குஞ்சுகளைப் பிடிக்க ஓடுகிறது. நான் இணையத் தளத்திலிருந்து பார்வையை விலக்கி வெளியில் பார்த்தபோது தாய்க்கோழி இப்படியும், அப்படியும்  நாய்க்குட்டிகளைத் துரத்திக்கொண்டிருந்தது. நான் எழுந்து ஓடினேன்.  அதற்குள் ஒரு கொழுந்துக் குஞ்சை வாயில் கவ்வியது. நான் கத்திக்கொண்டு வெளியே ஓடியபோது விட்டுவிட்டது. ஆனால் கோழிக்குஞ்சு அவ்வளவு சீக்கிரத்தில் உரங்கத் தொடங்கியது. அதுகூட சற்று முன் மிக உற்சாகமாகத் தன் சிறகடித்துக் கோழியின் முதுகின் மீது உட்கார்ந்தது. அங்கிருந்து சற்று தூரம் பறந்து மீண்டும் மற்ற கோழிக் குஞ்சுகளிடம் சிக்களான் செய்து விளையாடியது. இவ்வளவு சீக்கிரத்தில் அதன் வாழ்வு முடங்கி, மூலையில் உறங்கும்படியானது  ஏன்?.  எனக்கு  அந்நிலையில்  அந்தப் பூந்தளிரைப் பார்த்தும் இனிப் பிழைக்காதா... எதற்காக இந்த ஜீவன் பிறந்தது. அது என்ன சாதித்தது. ஏன் இப்படி திடீரென ஆபத்து நேர்கிறது என்று மிகவும் வேதனையாக நினைத்தேன்.

அப்போதுதான் மீண்டும் அக்கோழிக்குஞ்சுகளிடம் போகக்கூடாது என்று எச்சரிக்கும் விதமாகக் கையில் ஒரு குச்சியை எடுத்தேன். கோழிக்குஞ்சியைக் கடித்த நாய்க்குட்டி மீதுதான் எனக்குக் கோபம். அது மீண்டும் வேறு கோழிக் குஞ்சியிடம் போனால் ஒரு அடிகொடுக்க வேண்டும் என்று நின்றேன். ஒருவேளை கோழியை வீட்டிற்குள் ஓட்டிவிட்டிருந்தால் நாய்க்குட்டிகள் கடிக்க வாய்ப்பில்லை என்று நினைத்தேன். ஆனால் நாம் இல்லாதபோது சுதந்தரமாய்க் குஞ்சுகளைத் துரத்திக் கடிக்க நேருமல்லவா? அதனால் கோழிக் குஞ்சியிடம் போகக் கூடாது என்பதை ஒரு பயிற்சியாக்க வேண்டுமென்றே நின்றேன். கோழி தன் குஞ்சுகளுடன் பதட்டமாய் ஒரு நிலையில் இல்லாமல், சுற்றிச்சுற்றி தன் பார்வையை நாலாப் பக்கமும் செலுத்தியிருந்தது. பக்கத்தில் நாய்க்குட்டிகள் பால் இல்லாத தன் தாயின் மடியை மோதுவதும் கோழிக்குஞ்களிடம் வருவதும் திரும்புவதுமாக இருந்ததன. இருப்பதிலேயே சற்று அழகு என நினைத்த குட்டிதான் திடீரென ஓடிவந்த கோழிக்குஞ்சைப் பிடிக்கத் தாவியது. அப்போதுதான் அடித்து விட்டேன். இத்தனைக்கும அந்தக் குட்டி கோழிக்குஞ்சைக் கவ்விக் கடிக்கவில்லை. ஓடிவந்தது ஆனால் குஞ்சு தப்பிவிட்டது. வாழ்க்கையை என்னவென்று சொல்லுவேன்?  பூந்தளிரான குஞ்சைக் கடித்தது ஒன்று, நான் தவறுசெய்ததற்குத் தண்டனைத் தரத் தயாராக நின்றபோது, வேறொன்று குறுக்காக வந்து அடிவாங்கிக் கொண்டது. அடித்தமாத்திரத்தில் இடுப்பிலிருந்து செயலிழந்த விதமாக இழுத்துக்கொண்டு முன்னங்கால்கள் இரண்டில் நடந்தது. திடீரென்று நோயுற்ற முகமாக சோகத்தில் ஆழ்ந்தது. இருகண்களின் இரப்பை ஓரத்தில் கண்ணீர் சொட்டாக வழியாமல் ஈரம் கோர்த்திருந்தது.

நான் அதிர்ச்சியுடன் அய்யய்யோ இத்தனை கொடுஞ்செயலை செய்து விட்டேனே, சப்பை நகர்ந்து விட்டதா? குழந்தைக்குட்டி கொஞ்சநேரம்தான் வலிதாங்காமல் கத்தியது. அதன்பிறகு கத்துவதை நிறுத்திவிட்டு ஓரமாக ஒதுங்கியது. இவ்வளவு நேரமாக ஒன்றோடு ஒன்று ஓடியாடிக்கொண்டிருந்த குட்டிகளில் ஒன்று திடீரென இந்நிலைக்குச் சென்றுவிட்டதை மற்ற குட்டிகள் உணரவில்லை. அவைகள் எப்போதும்போல் அதன் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருக்கின்றன.

நான் கொம்பைக் கீழே போட்டு குட்டியைக் கையில் தூக்கினேன். கால்கள் ஏதாவது ஒடிந்து விட்டதா? இரு கால்களையும் மடக்கி மடக்கி நீவி உருவினேன். அதன் உடல் உதறல் எடுத்துவிட்டது. லேசான முனகல் மனிதன் குளிர் ஜீரத்தில் நடுங்குவதுபோல் இருந்தது.  ஒரு வாரத்திற்குப் முன்பு கிராமத்திலிருந்து  வந்த அண்ணன் மகன் குட்டிகள் அழகாக இருக்கிறதென்று கண்கள் விழிக்காதபோதே இரண்டு குட்டிகளைத்  தூக்கிச் சென்றுவிட்டான். அவைகளில் இதுவும் ஒன்று. கண்விழிக்காதக் குட்டிய ஏண்டா தூக்கியாந்த என்று திட்டியிருப்பார்கள்போல.  மீண்டும் கொண்டுவந்து இங்கேயே விட்டுவிட்டான். அதை மீண்டும் கொண்டுவராமல் இருந்திருந்தால் இப்படி அடிவாங்கியது தவிர்க்கப்பட்டிருக்கும். இடுப்பு செயலிழந்துவிடுமா? இப்படிச் செயலிழந்த ஒரு நாயை வேறு தெருவில் பார்த்திருக்கிறேன். இரண்டு முன்னங்கால்களால்தான் நடக்கும். அதன் இடுப்புப் பகுதி தரையில் தேய்த்துக்கொண்டு போகும். அதைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கும். இந்த ஜீவன் இப்படி வாழ்வதில் என்ன பலன் இருக்கிறது என்று நம் எண்ணங்கள் கேட்கலாம். ஆனால் நான் அப்படி வாழ்வதில் உங்களுக்கு என்ன சிரமம் என்ற கேள்வியை  எழுப்பும் விதமாக பல வருஷங்கள் அந்தப் பகுதியின் எல்லா இடங்களிலும் சுற்றிக்கொண்டே இருந்தது. அதைப் பார்க்கிறவர்கள் எல்லாம், எந்த மாபாவி இந்த வாயில்லா ஜீவனை இந்த நிலைக்குக் கொண்டுவந்தானோ என்று திட்டாத ஆளே இருக்க மாட்டார்கள். என்னைப் பொருத்தமட்டில் எந்த கோர்ட்டுக்கும, பஞ்சாயத்துக்கும் போகாமல் அதன் பாட்டுக்கு வாழ்ந்து, அதற்குக் கொடுமை இழைத்தவனுக்கு தினந்தோறும தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். அப்படித்தான் இந்தக் குட்டியின் நிலைமையும் ஆகிவிடுமா? கீழே விட்டுப் பார்த்தேன். அப்படித்தான் இடுப்பு இழுத்துக் கொண்டு நடந்தது. எனக்கு காலையில் ஏன் இதன் பாவத்தில் விழுந்தோம் சர்ச்சிக்குப் போகிற நேரத்தில் இப்படியாகி விட்டதே. அடிப்பட்டு ரத்தம் கொட்டியிருந்தால் கூட ஏதாவது கட்டுபோட்டு வைக்கலாம், தோல் மூடிய உடலுக்குள் என்ன நடக்கிறது தெரியவில்லையே. அதன் நிலை மோசமாக மாறியது.

மலம் கழிக்கின்ற இடம் உப்பிக்கொண்டு வந்தது. நுரையும் தண்ணீருமாகக் கழிய ஆரம்பித்தது. எனக்கு இன்னும் பயம் கூடிவிட்டது. அய்யோ செத்துவிடுமோ, ஒரே ஒரு அடியில் பல வருஷம் வாழ வேண்டிய உயிரை எடுத்துவிட முடியுமா? அப்படி ஒன்றும வலுவாகக்கூட அடிக்கவில்லை என்றுதான் என் உள் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் எப்படியோ தவறுதலாக கை அழுத்தத்தைக் கூட்டி அடித்துவிட்டிருக்கிறது. ஒருவேளை எனக்குள் இருக்கும் வன்முறையாளனின் முகம் இப்போதுதான் எனக்கே தெளிவாகத் தெரிகிறது. பிள்ளைகள் நாளையோ, மறுநாளோ குட்டிகளை எங்காவது கொண்டுபோய் விட்டுவிடலாம் என்று பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். அப்படி யோசனை வரக் காரணம் வீட்டுவாசல், சிலநேரம் விட்டிலேயேக்கூட மலத்தை, சிறுநீரைக் கழித்து விடுகிறது. மேலும் அவ்வளவையும் பராமரிக்கமுடியாது என்ற  எண்ணம்தான். அப்படி நடந்துவிட்டிருந்தால்கூட  இந்த துக்க செயல் நடந்திருக்காது. அநியாயமாக அதன் உயிரை எடுக்கிற அதிகாரத்தை நான் எடுத்துக்கொண்டேனே. மீண்டும் எடுத்து அதன் கால்களை லேசாக மடக்கி முதுகை உருவி விட்டேன். ஒருவேளை பள்ளி நாட்களென்றால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. காலையில் பரபரப்பாக வேலையிருக்கும். அதை முடித்து ஓடுவதிலேயே கவனம் இருக்கும். இக்கொலைச் செயல் தவிர்த்திருக்கலாம்.

நான் குளிக்க வேண்டுமே என்று நினைத்தபோதுதான் இந்த சம்பவம் ஞாபகம் வந்தது. தண்ணீர் காயவைத்து அதன் இடுப்பின்மேல் ஊற்றினால் என்ன என்று தோன்றியது. அப்படிச் செய்வது சரியா, தவறா என்று அப்போது  தெரியவில்லை. இருந்தாலும் செய்து பார்க்கலாம்  என்று தோன்றியது. தற்போது இருக்கிற சூழலில் எந்த நிலைக்கெல்லாம் போகவேண்டி இருக்கிறது. நீங்களேப் பாருங்கள் வீட்டோடு இருக்கிற தென்னை மரங்களில் விழுகிற ஓலைகள் தென்னை மட்டைகள் இவைகளை எல்லாம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. என் அம்மா அப்படித்தான் வீட்டின் வாசலுக்கு வெளியே அடுப்பு வைத்து சமைப்பாள். காலையும், மாலையும் அப்படிப் பற்றவைக்கிறபோது வீட்டின் வாசலுக்கு மின் விளக்கே தேவையில்லை. சாப்பாடு முடித்துவிட்டாலும் வெறும் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பின்மீது வைத்து லேசாக எரியவிடுவாள். அந்தத் தண்ணீர் சில நேரம் வெறுமனே அதிலேயே கிடக்கும். அம்மா ஏன் அப்படி வெறுமனே அடுப்பை எரியவிடுகிறாள் என்று குழப்பமாக இருக்கும். இப்போது ஓரளவு ஊகிக்க முடிகிறது. அடுப்பு லேசாக எரியும்போதே, நாங்கள் எல்லோரும் அந்த வெளிச்சத்திலேயே சாப்பிட்டு முடித்திருப்போம்.  திடீர்திடீரென வீட்டின் பூட்டை உடைக்கும் இன்றைய விலைவாசியின் பயத்தால்  தற்போது பையன் வீட்டிற்கு வெளியே கல்லை வைத்து அடுப்பு வைத்துள்ளான். அதிகாலையில் குளிப்பதற்குத்  தண்ணீர் சுட வைத்தல் போன்ற காரியங்களுக்கு சுலபமாய் இருக்கும். அந்த அடுப்பில்தான் அவசர அவசரமாக சின்ன பாத்திரத்தில் தண்ணீர் போட்டேன். தீ அடுப்பிலும் என் மனசிலும் ஒருசேர எரிந்தது. குட்டியைப் பார்த்தேன்.  கூனியதுபோல் உட்கார்ந்திருந்தது. மற்ற குட்டிகள் வந்து அதன் மீது விழுந்து விளையாடின. இதற்கு முன்பு அதன் மீது விழுந்தால் எதிர்க்குரல் கொடுக்கும், அதிலும் வெள்ளையும் செவிளியும் கலந்த குட்டி அதன் கழுத்தை விளையாட்டாகக் கடித்து புரளும்போது சடாரென்று ஒரு போர்வீரனைப்போல் முதுகு மயிரெல்லாம் குத்திநின்று கரகரப்பான குரலில் முரட்டுத்தனமாகக் கத்தி முறைத்து நிற்கும்.  மீண்டும் சற்றுக் கோபம் தணிந்து விளையாடும், ஆனால் இப்போது அது  மெதுவாக ஒதுங்கிவிடுகிறது.

தண்ணீர் சூடாகிவிட்டது.  குட்டியை இடதுகையில் தூக்கினேன். அதன் மலம் கழியும் வழியில் வெண்ணிற கண்ணாடி ஜவ்வு போல் கழிந்து. ஒட்டிக்கொண்டிருந்தது. நான் என்னத்த சொல்றது...?  மனசில் வேதனை கூடிக்கொண்டுதான் இருந்தது. அதற்கு முன் சில நேரம் தூக்கும்போது குட்டி வாலை ஆட்டிக்கொண்டு அதன் விசுவாசத்தைக் காட்டும் விதமாக என் முகத்தையோ கால்களையோ நக்க முயற்சிக்கும். இப்போது மிகமௌனமாக இருந்தது. அந்த மௌனந்தான் என்னைக் குற்றவாளி என்று முத்திரைக் குத்தி காட்டிக் கொண்டிருந்தது. வயிறு ஏதாவது கொளாப்ரேஷன் ஆகியிருக்குமா? வலது கையால் தண்ணீர் அள்ளி அதன் முதுகின் மீது ஊற்றி உருவினேன். வலிதாங்க முடியாமல் விட்டு விட்டு முனகி  லேசாகக் கத்தியது.  நல்ல சூடுதான் மீண்டும் மீண்டும் தண்ணீரை அள்ளி முதுகையும், கால்களையும் உருவினேன். குட்டியின் மீதிருந்து ஆவி புகைபோன்று கிளம்பியது. உடல் உதறல் அதிகமானது. கால்கள் எலும்பு முதுகு  எலும்பு நன்றாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. ஆனால் கால்களை ஊன்ற முடியவில்லையே. இந்த நேரத்தில் கடவுளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு மூலையில் விட்டுவிட்டேன். நான் மனநிறைவாகச் செய்யும் எந்த வேலையும் அன்று செய்யமுடியவில்லை. நாய்குட்டியின் பரிதாப நிலை மனதை சஞ்சலப் படுத்திக்கொண்டே இருக்கிறது.  எப்படியாவது பின்னங்கால் சற்று ஊன்றுகிறதா? அப்படி நகர்ந்து விட்டால் போதுமே.  எங்காவது கொண்டுபோய் விட்டுவிடலாம் பிழைத்துக்கொள்ளும்” என்று மனம் அங்கலாய்த்தது.

அப்போதுதான் என் மகள் வெளியே வந்தாள். “என்ன பண்ண. என் சின்ன குட்டி டாமிய. அடிச்சியா?” என்றாள். அவள் வீட்டிலிருந்தவாறே முதலில் கத்திய சத்தத்தை அறிந்தவள் என்பதால் அப்படிக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்லுவதென்றே தெரியாமல் சற்று மௌனமாய் இருந்தேன். ஒரு வேளை செத்துத்போனால் குழந்தைக் குட்டியை அடித்துக் கொன்றுவிட்டார் என்று பிள்ளைகள் பேசிக்கொள்வார்களா? அப்படியே நடந்துவிட்டாலும் எனக்கான நியாயத்தை முன்கூடடியே சொல்லி வைத்தால் நல்லதுதான் என்று சொல்ல ஆரம்பித்தேன்.

“ஹீம்... அடிக்காம முத்தம் கொடுப்பாங்களா? அது உயிர் வாழற துக்கான உணவு கிடைக்குது. அதுவும் பத்தாம  கொழந்தக் கோழிக்குஞ்சைக் கடிக்கலாமா? அது மட்டும் உயிர் இல்லையா? அதுவும் வாழவேண்டாமா? என்று சொல்லும்போதே அவர் இந்த உலகத்தைக் கடந்து வேறு ஏதோ ஒன்றைப் பேசுகிறார். அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று நகர்ந்து விட்டாள். ஆனால் போகும்போது கோழிக்குஞ்சை கையில் எடுத்து உதட்டின் கிட்டத்தில் வைத்து “குட்டி டாமி, உன்ன கடிச்சிடுச்சாமா?.அந்த டாமி அடிக்கிறேன். நீ போ உங்கம்மா அதோபோறா பாரு” என்று கோழியின் கிட்டத்தில் விட்டாள்.

தான் செய்த செயலுக்கு மறைமுகமாக சற்று ஆதரவைத் தந்ததுபோல் இருந்தது. நான் வெளியில் கிளம்பிவிட்டேன். இருந்தாலும் கடைசியாக ஒருபார்வையை அதன் மீது செலுத்திவிட்டுத்தான் சென்றேன். இப்போது மொத்தக் குட்டியும் ஒன்றன் மீது ஒன்று மூட்டமாக ஏறிப் படுத்திருந்தன. அடிப்பட்ட குட்டியும் மற்ற குட்டிகளில் தன் முகத்தை சொருகிக் கொண்டிருந்தது. பின்னங்கால் சற்று ஊன்றி எழுந்து படுத்தது.

நான் சற்று நிம்மதியுடன் வெளியேறினேன். நல்லவிதமாக நடந்துவிட்டால் ஒரு குட்டியைக்கூட வைக்கக்கூடாது. எல்லாவற்றையும் எங்காவது சற்றுத்தொலைவில் கொண்டுசென்று விட்டுவிட வேண்டும். அவைகள் குட்டியாய் இருக்கும் வரைதான் ஓரளவுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறது.    சோற்றுக்கு நான்முந்தி நீ முந்தி என்று அடித்துக்கொள்ளாமல் எந்த சத்தம் போடாமலும் சாப்பிடுகிறது.  அவைகளே வளர்ந்து விட்டபிறகு தனித்தனியாகப் போடவேண்டியிருக்கிறது. அப்படியே போட்டாலும் அவைகள் தின்று முடிக்கும் வரை பக்கத்தில் நின்றால் ஓரளவு பிரச்சனை இல்லை. சற்று ஏமாந்து விட்டால், ஆத்திரமுள்ள ஒன்று இரண்டு வாயாக சாப்பிட்டுவிட்டு மற்றதையும் திங்க ஓடிவருகிறது. அந்த சமயம் இரண்டு நாய்களும் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு ராட்சசிளைப் போல் ஆக்ரோசமாக சண்டைபோடுகின்றன. அப்போதெல்லாம் கூட்டு வாழ்க்கைக்கு நாய்கள் பயனற்ற மிக மோசமான ஜந்துவாகக்தான் என்னால் காண முடிகிறது. வளர்ந்துவிட்டால் வீட்டிற்குப் பாதுகாப்பிற்குக் குறைவில்லை.

ஒரு நாயைமட்டும் தனியாக வைத்திருந்து அதன் வயிறை நிறைத்துக் கொண்டிருந்தால், எஜமான் மீது விசுவாசத்தைக் கூட்டிக்கொண்டேயிருக்கும். நாய்களைப்பற்றி இவ்வாறான புரிதல் எனக்கு ஏற்கனவே இருப்பதால் ஒரு குட்டியையும் வைக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். மேலும் வீட்டுவராண்டா முழுவதும் கண்ட இடங்களில் மலம் கழித்துவிடுவதால் அவைகளைத் துரத்திவிடுவதில் என் பையனும் முனைப்புடன் இருந்தான். குட்டியில் அழகாய் இருப்பதால் கட்டாயம் யாராவது எடுத்து வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும்  இருந்தது.

எப்போதும் உட்காரும் இடத்திற்கே சென்று சர்ச்சில் உட்கார்ந்தேன். குட்டிக்குழந்தையை அடித்துவிட்டேன். அப்பா, அது மிகுந்த வேதனையைத் தனக்குள்ளே வைத்து வேதனைப்படுகிறது. அதைக் காப்பாற்று என்று மனசுக்குள் வேண்டினேன். எந்த விடுமுறை நாளிலும் பொதுவாக நூலகம் செல்லவே மனம் கூடுதலான கவனம்கொள்ளும். அன்றும் அப்படியே சென்று விட்டேன். மாலை ஐந்து மணிக்குத்தான் வீட்டிற்கு வந்தேன். வரும்போதே நாய்குட்டியைத்தான் பார்த்து வந்தேன். நாய்குட்டிகள் காணவில்லை. அவைகள் சுற்றின இடம் யாவும் காலியாக இருந்தது. சற்று பதட்டமாகச் சென்று மகளைக்கேட்டேன் “நாய்க்குட்டிகள் எங்கே”  என்று. அவள் “நீ அடிச்சியே நாய்க்குட்டி அது நல்லா ஆயிடுச்சி டாடி, எல்லாமே மெத்தமேல கொண்டுபோய் விட்டுவச்சியிருக்கிறேன்” என்றாள்.

“அப்படியா? நல்லா நடக்கிறதா?” என்றேன். “ஓடுது” என்றாள். சின்னப்பையன் “நான் மொத்தத்தையும் கொண்டுபோய் விட்டுட்டு வந்திடுறேன்” என்றான். மகள் “இருடா பாவம், கடைசியாக நம்ம வீட்டு மீன் குழம்பு சோறு சாப்பிட்டுவிட்டு போட்டம்” என்றாள். எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.  நான் மெத்தைக்கு வேகமாக நடந்தேன். பையன் என்னைவிட வேகமாகச் சென்று குட்டியைத் தூக்கிவந்தான். நான் “கீழே விடு” என்றேன். அவன் என் பக்கமாக விட்டான். இருந்தாலும் அது என் பக்கமாக வரவில்லை. வேறுதிசையில்  ஓடியது. எப்பாடா, பரவாயில்லை. குட்டி தப்பித்துக் கொண்டது என்று பெரும் மூச்சுவிட்டேன். எல்லாக் குட்டிகளும வயிறுமுட்ட சாப்பிட்டிருந்தன. நான் சற்று சத்தமாக “டே எல்லாத்தையும் எங்கியாவது தூக்கிம்போய் விட்டுடுடா” என்றேன். மகள் பாவம் என்று சொல்லிக்கொண்டே ஒரு கட்டைப் பையை எடுத்துவந்தாள். “பாவமாம் பாவம்... வராண்டா முழுதும் பேணுவைக்கிதே, என்னதானே பெருக்கச் சொல்றே. நீ பெருக்கினியானா உனக்கு வருத்தம் தெரியும்” என்றான்.

சற்று கொஞ்சுதல் வார்த்தையோடு ஒவ்வொன்றாக ஓடிப்பிடித்து பையில் போட்டாள். குட்டிகள் பையை உதைத்து உதைத்து எழுந்து பையின் வாய்ப்புரத்தில் தலையைத் தூக்கிப் பார்த்தன. அப்போது  குட்டிகள் ஒவ்வொன்றும் செல்லமாக லேசாக விசில் சத்தத்தோடு முனகின.

மகள் “அய்யய்யோ... செல்லங்கள் போகுதே, செல்லங்கள் போகுதே” என்றாள். பையன் பையைத் தொங்கவிட்டு நடந்தான். எனக்கும் மனசு சங்கடமாய் இருந்தது. பையன் வீட்டுகேட்டைத் தாண்டி நடந்தான். தெருவின் பாதையைத் தொட்டு நடந்தான். “டே தம்பி இருடா. அடிப்பட்டுதே நாமக்காரக்குட்டி அதை மட்டும் விட்டுடுடா” என்றேன். மகள் சற்று வேகமாகச் சென்று பைக்குள் கையைவிட்டு அந்தக் குட்டியைத்  தூக்கினாள். குட்டி அவள் கைக்குள் அடங்காமல் திமிறி கீழே இறங்கி வேகமாக ஓடிவந்து என் கால்களை முத்தமிட்டு நக்கியது.

ஜேடி

Saturday, December 24, 2011


                                                      வாழ்த்துக்கள்


பூக்களின்
நுண்ணிய வாசத்தை
விரும்புகிறவர்களே

நிலங்களின் பரப்பை
அழகால் நிரப்ப
பூக்களை விளையச்செய்கிறவர்களே

பூக்கள்
தனக்கு கிடைக்கும்
ஒரே நாளை
பிறர் மகிழ்வுக்காக, பெருமைக்காக
ஒப்புவிக்கிறதே!

நம் வாழ்வு
நீண்ட நாட்களல்வா?
.................................................................


அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Thursday, December 1, 2011








‘பூட்டப்படாத வீடும் வெளியும்’ சிறுகதைகள் தொகுப்பு, ஒரு நீண்ட  மனக்கசப்புகளுக்கு நடுவே வந்திருக்கிறது. வெளியீடு இல்லை. பயனுள்ள அல்லது மனிதனை அதிர்வுக்குள்ளாக்கும் வாழ்வின் வெளிப்பாடு எந்த நாட்டின் மூலையையும் சென்று அடைகிறது. அந்த நம்பிக்கையில் இதை உங்கள் முன் வைக்கிறேன்.

தொகுப்பு நூற்று முப்பத்தியாறு பக்கம், பதினாறு கதைகள் கொண்டது. நூறு ரூபாய்  விருப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்- 9445726354. மின்னஞ்சல்- nampuzhuthi@gmail.com
ஜேடி

Friday, November 18, 2011

சிறுகதை

                                                     கல் மரம்
                                          வேர் ஊன்றுகிறது


  கங்கா தூங்கவில்லை. மல்லாந்து படுத்திருந்தாள். இடதுகாலுக்கு அதிகமான கணத்தைக் கொடுத்து நீட்டியிருக் கவில்லை. ஒரு வேளை அப்படி அழுத்தம் கொடுத்திருந்தால், வலதுகால் இழுத்து மடித்து நிறுத்தியிருக்கும்போது நைலான் பாய் சுருங்கியிருக்காது. அவள் வலதுகாலை மடித்து வைத்திருக்கும்போது அவளின் பளிங்குத்தொடை மினுங்கியது. ஆனால் பாவாடையுடன் சுருங்கியப் புடவை ஓரளவு தற்காப்புடன் நின்றது. அதற்கு என்னவிதமான பாடம் கற்பித் திருக்கிறாளோ, இரு கைகளும் கூட வெறுமனேதான் இதுவரை உயிரற்ற பொருள்போல பாயில் கிடந்தது.  உடலைத் திருப்புவதுபோல சைகையால் வலதுகையை நெற்றியில் மடித்து வைத்தாள். அதை வேகமாக செய்தபோது ஒற்றை மார்பின் முந்தானை விலகி இறங்கியது. உடனே இடது கையை வயிற்றின் மேல்வைத்து முடிந்தளவு வயிற்றின் மறைவுகளை விலக்கி வைத்தாள்.

இரண்டு ஆள் தாராளமாகப் படுக்கின்ற பாயின் ஓரத்தில்தான் இத்தனை நிகழ்வுகளையும் நடத்திக்காட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் எல்லாமே நல்ல தூக்கத்தில் நிகழ்ந்ததுபோலவே யதார்த்தமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்படித்தான் நிகழ்த்தினாள். இத்தனை நாள் சுவற்றில்  அந்த மெல்லிய விளக்குகூட அணைத்து விடுவார்கள். இன்று அது எரிந்திருந்தது. அந்த விளக்கின் வெளிச்சம் யாருக்கும் கிறக்கத்தை ஏற்படுத்தும்.

செல்வம் எப்போதும் போல் தூங்கவில்லை. பாயில் இந்த கடைசிப் பக்கம் கங்காவைப் பார்த்தபடியாக ஒருகளித்துப் படுத்திருந்தான். முடிந்தளவு இரவில் யாரும்போர்வையை போர்த்திக்கொள்வதில்லை. குருப்பவுஸ் வீடு என்பதால் பகல்முழுக்க தாங்கிய வெயில் குளிர்காலத்திலும் வீட்டின் கூரை கோழி அடைகாப்பதுபோல் வைத்திருக்கும் தூங்கும்வரை புழுக்கம் தெரியும். அதற்குப் பிறகு வெயிலின் சுவடு இருக்கும், ஆனால் தூங்கியவிட்டபிறகு அதுவே சுகம் என்று சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை.  பகலிலேயே செல்வத்தின் கண் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிவது கஷ்டம் இரவில் எங்கே தெரியப்போகிறது. செல்வம் உடல் சூடாகியது அவன் பார்வை கங்காவின்மீது மேலும், கீழுமாக இருந்தது. கண்களை நன்கு திறந்தேப் பார்த்திருந்தான். லேசான நடுக்கம் வந்தது. முகம் சற்று வேர்த்துக்கொண்டே இருந்தது. கை நீளுவதற்கு முயன்றது. இப்படி புரளுவதுபோல் திரும்பி கங்காவை நோக்கி நகர்ந்தான்.  

அவனின் சிறு அசைவுகளையும் அறிந்தவளாக கண்களை திறந்து மூடினாள். இப்போது செல்வம் பக்கமாக திரும்பினாள், ஆனால் கால்களை எக்காரணத் தைக்கொண்டும் அசைக்கவில்லை. இரு கால்களையும். மல்லாந்து வைத்துக் கொண்டு, இடுப்புக்குமேல் உடலை ஒருகளித்தாள். அவளுக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஏறக்குறைய தேர்ந்த யோகா கற்றவளாகவே தன்னை உறுமாற்றினாள். தொடர்ந்து பயிற்சி எடுப்பவர்கள். தங்கள் உடலை எப்படி வேண்டுமென்றாலும் முறுக்கலாம். பயிற்சி இல்லாதவர்கள் அப்படி முறுக்கினால் சில நேரம் எலும்புகூட உடைய வாய்ப்பிருக்கிறது. அது கங்காவுக்கு தெரியாது. இருந்தாலும் அந்நேரம் மிகுந்த இயல்பாக கைகூடியது. அவள் ஒருகளித்தபோது மார்பின் மொத்த முந்தானையும் கீழே விழுந்தது. 

செல்வம் இன்னும் சற்று நகர்ந்தான். இப்போது முகம் முன்பைவிட அதிகமாக வேர்த்திருந்தது. மெல்லமாக கையை நீட்டினான். இன்னுங்கொஞ்சம் நீட்டினான். தன்னை நோக்கி நீண்டு வரும் கையை கங்கா பார்த்துக் கொண்டே யிருந்தாள். செல்வத்தின் கை நெஞ்சின் மேல் வளர்ந்திருந்த மார்பைப் பிடித்தது. கங்கா அசையவேயில்லை. அப்படியே இருந்தாள். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. 

                                                        2
செல்வம்மேல் நோக்கியப்பார்வையால் சுவர்களின் மூலைகைளையே பார்த்துக்கொண்டிருந்தான். அடிக்கடி தன் கன்னத்தின் இருப்பக்கத்தையும் சொரிந்துகொண்டும் சில நேரம் முகத்தை தேய்த்துக் கொள்கிறான். அவனைப் பார்க்கும்போது மனிதர்கள் கற்றுத்தரமுடியாத எதையோ சுவர்களிடம் கற்றுக்கொள்கிறான். என்பதுபோல் இருக்கும. அவனை அழகற்றவன் என்று சொல்ல முடியாது. பெண்களை வசீகரப்படுத்தும் அழகுள்ளவன் என்றும் சொல்லமுடியாது. கீழ் உதடு மட்டும் சற்று தடித்து இருக்கும். இந்த ஒரு வாரமாகத்தான் முகச்சவரம் செய்யவில்லை. இதற்கு முன்பெல்லாம் அவன் வயதொத்தவர்கள் குடும்பம், பிள்ளைகள் என்று இருந்தாலும், அவ்வப்போது தெருவிற்கு அழைத்து அரட்டை பேசுவார்கள். செல்வம் எல்லாரிடமும் கலகலப்பாக பேசி ஜாலியாக இருப்பான் என்பதற்காக அவனை அழைக்க மாட்டார்கள். யார் எப்படி எவ்வளவு கிண்டலாகப் பேசினாலும் மௌனமாகவும், லேசாக சிரித்தும் கிடப்பான். அதற்காகவே அவனை சூசகமாகப் பேசி அழைத்துச் செல்வார்கள். 

அப்படியிருந்தவன் இந்த மூன்றுமாதத்தில்  நாளாவது முறையாக வீட்டைவிட்டு ஓடிவிட்டான். இரண்டுமுறை ஒருவாரம் கழிந்து அவனாக வந்துவிட்டான். மூன்றாவது முறை ஏதோ ஊரில் சந்தேகப் படும்படியாக சுற்றியிருந்ததால்  போலீஸ் பிடித்துவிட்டார்கள். அவன் தந்த தகவலின் பிரகாரம் போலீஸ் வீட்டிற்கு தகவல் அனுப்பியது. இந்த முறைதான் யாருக்கும் தெரியாமல் கிளம்பி உள்ளுர் ரயில்வே ஸ்டேசனை அடைந்த போது, செல்வத்திற்கு அறிமுகமானவர்கள் பார்த்து விசாரித்து அழைத்து வந்தார்கள். அவர்கள் அழைத்தபோது செல்வம் எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்கள்கூடவே வந்துவிட்டான். இப்படி அழைத்தவுடன் வருபவன் எதற்காக அவ்வளவு தூரம்போனான் என்பதைக்கேட்டால் அவனிடம் பதில் இல்லை. வெறித்தப்பார்வையில் எதையோ தேடுவதுபோலவே சுற்றிச் சுற்றிமேலும் கீழும் பார்க்கிறான். பரந்த வெளியில் போனால் எப்படிப்பார்க்கிறானோ, அப்படித்தான் இன்று வீட்டிற்கு வந்தபிறகும் இருக்கிறான். வீட்டிலேகூட அவனால் நடப்பதை நிறுத்த முடியவில்லை.

செல்வம் மறுபடியும் ஓடிவிட்டானாம், நம்ம பக்கத்துத் தெரு முனுசாமிதான் பார்த்து அழைத்து வந்திருக்கிறான். பிரபு வந்து விசாரித்தான். செல்வம் எப்போதும்போலவே சொந்த உறவுகளைக்கூட மலங்க மலங்கப் பார்கிறான். “செல்வம் ஏண்டா இப்படிப்பண்றே. உனக்கு என்னவேணும். எதுனா சொன்னாத்தானேடா தெரியும் அப்படிப்பார்த்து சின்னதாக ஒரு ஊங்காட்டு தலுடன் உட்கார்ந்து விட்டான். அடுப்படியிலிருந்து ஸ்டவ் எரிகிற சத்தத்தையும் மீறி கங்கா அழுகிற சத்தம்கேட்டது. சிலர் தெருவிற்கு வெளியே நின்று செல்வத்தை பரிதாபத்துடன் பார்த்தார்கள். 

நானும் ஒருமாதமாகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் காதிலேயே போட்டுக்கொள்வதில்லை. கேட்டா இப்பதான் அங்க, இங்க கடன்வாங்கி வீட்ட கட்டிடேன்கிறே. மொதல்ல நம்ம வருமானம் என்னவோ அதுக்குள்ள வாழறதுக்காண வழிய ஆரம்பத்தில இருந்தே செய்திருக்கணும்,  அதவிட்டுட்டு பத்து, பாஞ்சி வட்டிணு வாங்கி வீடுகட்டினது தப்பு. இப்ப எல்லாரும் எங்கள கேவலப் படுத்துறாங்கோணு, நீங்களா யாருக்கிட்டேயும் பேசாம ஒதுங்கியிருக்கிறது தப்பு. அதப்பாத்துதான் அவனும் யாருக்கிட் டேயும் பேசுறதக்கொறச்சிக்கினான். அதுக்கப்புறம் கடங்காரனுக்கு எப்படி பணத்தத்திருப்பி குடுக்கிறது என்ற பயம் அவனுக்குள்ளவும் வந்திருக்கும் அதுக்கெல்லாம்மேலாக நான் ஒண்ணு சொல்றேன், அவனுக்கு ஒரு கலியாணத்த பண்ணினா இப்படி நடக்கிறது சரியாயிடும். அதத்தான் அப்போதுதிருந்தே சொல்லுகிறேன்” என்றான்.

கங்கா வைத்திருந்த சோற்று உலை பொங்கிற்று. நான் என்ன பண்ண முடியும். எவ்வளவுதான் கஷ்டப்பட முடியும். என்மாரே கட்டியா மாறிக்குணு வருதாம் டாக்டர் சொல்லிட்டார். என்னப்பாக்குற ஆணும், பொண்ணும் என் மாரு குத்திநிக்கிறதாதான் பாக்கிறாங்க. என் ரத்தத்த  எல்லாம் இழுத்துக்கொண்டு, கல்லா மாறிய வலி தினமும்  சாகடிக்கிறது எனக்கு மட்டுந்தான் தெரியும்.’ இப்படி சொல்லிக்கொண்டிருந்தாலும் கங்கா பிரபு முகத்தைப் பார்க்கவில்லை. அவள் பாட்டுக்கு சோற்றை இறக்கி வடித்தாள். குழம்பு செய்யப்பாத்திரத்தை வைத்தாள். அவள் குனிந்து பாத்திரம் சூடாகிவிட்டதா என்று பார்க்கிறபோது, கண்களிலிருந்து  சட்டியில் கண்ணீர் துளிக்கொட்டியது.   அது சுர் என்று தீய்ந்தது. இப்போது எண்ணையை ஊற்றினாள்.

"ஆயிரம் கஷ்டம் இருக்கட்டும் அந்தக் கஷ்டத்தோட இது ஒண்ணா, நல்லதோக் கெட்டதோ ஒரு பொண்ணப் பார்த்து கட்டிவச்சிட்டா, அவன் மனநிலை சரியாப்போயிடும், நான் கண்டிப்பா சொல்றேன். ராத்திரியில ஒரு பொண்ண கட்டிப்புடுச்சி படுத்திருந்தான்னா, மனச்சுமை எல்லாம் கொறஞ் சிடும். நான் மறுபடியும் அதத்தான் திரும்பத் திரும்ப சொல்லமுடியும். அது நடக்காதவரை இப்படித்தான் எதையோ இழந்துட்டாமாதிரி இருப்பான். கங்கா நல்லா யோசனைப் பண்ணிப்பாரு அது நடக்குறதுக்கான வழிய நீதான் ஏற்படுத்தித் தரணும்” என்று சொல்லி விட்டுப்போனார்.

ஒரு வேளை இதனால்தான் இப்படி இருக்கிறானா? எனக்கு வாய்ச்சதெல்லாம் இப்படியா இருக்கும். கட்ணவன் ஒரு ஆம்பளயா தன்னிச்சையா குடும்பத்த நடத்துற திறமையில்ல. அக்கம், பக்கத்திலும் யாரும் உதவிச்செய்ய நாதியில்ல. எதேச்சியா பேசப்போனாலும் அவளாண்ட பேச்சிக்கொடுத்தா கடனா காசுக்கேட்டுடுவா என்று ஒதுங்கிப் போயிடுறாளுங்க.  எதுக்கெடுத் தாலும் நான்தான்னா என்ன செய்யமுடியும்’ என்று கங்கா நொந்துக் கொண்டாள்.

ஒரே அறைப்போன்ற வீட்டில் ஒரு குறுக்குச் சுவர் மட்டும் இருந்தது. சற்று பெரியதாக இருக்கும் ஹால்போன்ற இடத்தில்தான் செல்வம் எப்போதும் படுத்துக்கொள்வான். இன்று கங்கா உள்பக்கமாக பூட்டிவிட்டாள். சமயல் செய்கின்ற ஒதுக்குப்புறமாக கங்கா படுத்திருப்பது வழக்கம். அவளோடு கணவன் தொடர்பே இல்லாது மூலையில் படுத்துவிடுவான்.“ இங்கப்பாரு, பையன் எங்கனா எழுந்து போயிடப்போறானு  உள்ளபக்கமா பூட்டியிருக்கேன் சாவி  என்னாண்ட இருக்குது நீ வெளிய போணும்னா என்னாண்ட கேளு. அவன் எழுந்தான்னா, வெளிய கூட்டிம்போக நானு அந்த பக்கம் படுக்கிறேன்’ கங்காவின் கணவன் எந்த நாளும் அவள் பேச்சை இமியளவும் தட்டியதில்லை. மரியாதை நிமித்தமாக இல்லை. கலியாணம் நடந்ததிலிருந்து அவள் கருத்துக்கு மறுப்பு பேசாமல் தான் இருக்கிறான். விடிகிற ஒவ்வொரு நாளும் உழைப்பது, ஒரு பைசா குறைவில்லாமல் கொண்டுவந்து அவளிடம் சேர்ப்பதுதான் அவனின் வழமை. அக்கடமையை நிறவேற்றியவனாக வந்த களைப்பில் எந்த மனக்குறைவும் இல்லாமல் சீக்கிரமாகவே தூங்கிவிட்டான்.

வீட்டில் மங்களான ஜீரோவாட்ஸ் பல்ப் எரிந்துகொண்டுதான் இருந்தது.  நைலான் பாயின் ஓரமாகப் படுத்துவிட்டாள். கங்காவின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்கவேயில்லை. செல்வம் இன்னும் விட்டுவிட்டு கங்காவின் முலையை அழுத்தினான். அது கெட்டியாக இருந்தது. அவள் அசைய வேயில்லை. அவன் இப்படி பக்கத்தில் படுத்த எத்தனையோ இரவுகளில் பால் ஊட்டியிருக்கிறாள், அந்த குழந்தைத் தருணங்களில் பசியாறியிருந்தது. கங்காவிற்கு மனது நிம்மதியாயிருக்கும. இன்று அந்தக்காட்சிதான் நினைவு வந்தது. செல்வம் சற்று நேரத்தில் பழையபடி இருந்த இடத்திற்கே நகர்ந்துவிட்டான். கங்கா வெகு நேரங்கழித்து பூட்டியிருந்தக் கதவைத்திறந்து வெளியேச் சென்று மௌனமாக அழுதுத் தீர்த்தாள்.

கங்கா அவள் கணவன் இருவரும் காலையில் பிரபுவிடம் சென்றார்கள்.‘என் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து எப்படியாகிலும் ஒரு வாரத்திற்குள் பணம் வாங்கிக்குடுங்க நீங்க சொன்னதுபோல ஒருப்பொண்ணபாருங்க ஏதாவது கோயில், குளத்திலயாவது வச்சி முடிச்சிடலாம்’ என்றாள்.
  
வாழ்க்கை கைகூடுகிற வீடு தானாகவே அலங்காரத்தைக் கட்டிக்கொள்கிறது. இதமான பொழுதை வழிமொழியும் தும்பிகளாக வீட்டில் கூடுதலான ஆட்க்கள் நடமாடி ஓய்ந்துவிட்டது. செல்வத்தின் மனைவியாய் வந்தவள் நல்ல குணசாளியான பெண்தான் என்று தெருவெங்கும் பேசிக்கொண்டார்கள். அவள் செல்வத்தைவிட கறுப்புதான். ஆனால் முகக்களையாகத்தான் இருந்தாள். சுருட்டை மயிர் என்பதால் நெற்றியில் இரு பக்கமும் பிரிந்திருந்த வளையம் போன்ற மயிர்கூட அழகாகத்தான் இருந்தது. வீட்டுவேலைகளை சரியாக செய்வதற்கு தெரிந்து வைத்திருந்தாள். சற்று சுறு சுறுப்பாய் வேலைகளை செய்தாள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கங்கா வீட்டில் சின்ன வேலையானாலும் இப்போதுதான் வேகமாக நடக்கிறது. இதுகுறித்து கங்காவிற்கு பெருமையாக இருந்தது. இருந்தாலும் தன் மனசுக்குள்ளேயே வைத்துக்கொண்டாள். செல்வத்திற்கு அப்படி விஷேசமாக எந்த அபிப்பிராயமும் தெரியவில்லை. பொதுவாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கங்காவிடத்தில் சரியாக பேசுவதில்லை என்றாலும், செல்வத்தின் மீதுள்ள அனுதாபத்தினால் ராதாவிடம் நல்லபடியாகச் சொன்னார்கள். “பையன் ரொம்ப நல்லப் பையம்மா, கொஞ்ச நாளா ஒடம்பு சரியில்ல அதனால ஒருமாதிரியா இருப்பான். போகப்போக சரியாகிடும்மா’ என்று தெருக்குழாயில் தண்ணீர் எடுக்க வரும்போது சொல்வார்கள். அது உண்மைதான் ஆயிரம் காலத்து பயிர் என்கிறார்கள். நாம இப்பதான் மண்ணுல விதயை விதைச்சிருக்கிறோம், பொறுமையாகத்தான் பசுமை திரும்பட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டுதான் எந்த மனஸ்தாபத்தையும் வெளியேக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

தீவிரமான முன்னெடுப்பு இதுவரை நடக்கவில்லை என்பது கங்காவிற்கு தெரிந்திருந்தது. “ கொஞ்சம பொறுமையாகக்கூட நடக்கட்டும்மா. அவனா நெருங்கி வரட்டும், ஏன்னா மெரண்டு, கிரண்டு போயிடப்போரான். பக்குவமா நடந்துக்கம்மா’ என்று அநேக இரவுகளில் சொல்லியிருக்கிறாள்.

எந்த முன்னேற்றமும் இல்லாமலே மூன்று மாதங்களை கடந்துவிட்டதால் இப்போதெல்லாம் முகத்தில் விரக்த்தி தெரிந்தது. வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் ராதாவிற்கு இப்போது இல்லை. செல்வம் முன்பைவிட குண்டாகிவிட்டான். காலையில்  சைக்களில் சென்று இரண்டு குடம் தண்ணீர் எடுத்துவருதோடு அவன் பணி முடிந்துவிட்டது.  மூன்று வேளை சாப்பிடுவது, யாரிடமும் பேச்சிவார்த்தையே இல்லாமல் வீட்டிற்குள் ளேயே சுற்றுவது. ‘டி வி’ பார்ப்பது என்று நேரத்தைக் கழிக்கின்றான். நேரம் வீனாக கழிகிறதென்று எந்த நேரத்திலும் நினைத் திருக்கமாட்டான் என்று திடமாக நம்பலாம். அவன் திட்டமிட்டே அப்படிக் கழிக்கிறான் என்றும் சொல்லி விடமுடியாது. ஆனால் பிரபு சொன்னதுபோல், மனிதர்களைப் பார்த்தால் மலங்க மலங்க விழிப்பதிலிருந்து மீண்டுதான் இருக்கிறான். அமைதியாய் இருப்பது அவனின் ஆரம்ப இயல்பு, அதை மீட்டுக்கொண் டவனாகவே இருந்தான். உண்மையில் அவன் என்னதான் செய்கிறான் என்று கேட்கிறவர்களுக்கு மட்டும் சொல்கிறேன். தற்போது மனிதனாக செய்வது காலையில் சற்று தூரம் சென்று மலம் கழிப்பது, மூத்திரம் பெய்வதற்கு அதிகபட்சமாக வீட்டின் சுவர்பக்கமாகவே மறைவான இடத்திற்கு வருவான். பல்லைத் துலக்கிக்கொள்வான். இப்போது சற்று பராவாயில்லை. கூடுதலாகவே கடைகளுக்கு சேம்பு, பால்பாக்கட், ஏதாவது பதார்த்தம் வாங்கிவர மார்கெட்டுக்குச் சென்றுவருகிறான். இந்த ராத்திரி மட்டும் ஏன்தான் வருகிறதோ, பகளிலேகூட வேண்டுமென்றே ஆணையும், பெண்ணையும்  ஏன்தான் தனியாகவிடுகிறார்களோ? என்று வருத்தப்படுவது போன்று தலையை தொங்கப்போட்டுக்கிடப்பான்.

ராதா இப்போதெல்லாம் பேச ஆரம்பித்தாள். “உனக்கு என்னதான்வேணும். ஏன் ஒரு ஆம்பளையா இருக்கமாட்டேங்கிற. ஊராமூட்டு பொண்ண கட்டியாந்து இப்படி சாகடிக்கிறீங்களே. என்னப் புடிக்கலையா. இல்ல என்னவிட அழகான பொண்ணு வேணுமா ஏதாவது சொன்னாத்தானே தெரியும்” என்று சத்தமாகவே பேசினாள். செல்வம்,  அவள் வேறு யாரிடமோ  பேசுகிறாள் என்பதுபோல் இருந்தான். மன ஆருதலுக்காகக் கூட ஒன்றையும் சொல்ல வில்லையே என்று ராதாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது.

கங்காவிற்கு குடும்பம் கூடியது என்று ஒருபக்கம் மனத்திருப்தி இருந்தது. கூடவே வீட்டை அடமானம் வைத்து வாங்கிய வட்டிக்கடன் சுமையை எப்படிக் கட்டுவது,  அசலை எப்படித்திருப்பித்தருவது என்பதிலேயே மனம் அதிகமாக சிந்தனை செய்தது. கங்காவின் கணவன் எப்போதும்போல் உழைக்கச் சென்றுவிடுவான். மகனின், மருமகளின் போக்கு இப்படியிருக் கிறதே  என்று உள்ளுணர்வில் நினைத்தாலும் எந்த விதத்திலும் வெளிக்காட் டுவதே இல்லை. காலையில் ‘டீ’க்கொடுத்தால் குடிப்பான், கொடுக்கவில்லை என்றாலும் ஏன் இல்லை என்று கேட்கமாட்டான். ஒரு ஒயர் பையில் மதிய சாப்பாடு  போட்டுக் கொடுத்தால் உடனே கிளம்பிவிடுவான். அதோடு மாலையில் எந்த காரணத்தைக் கொண்டும் ஒரு பைசாக்குறையாமல் கங்காவின் கையில் கொடுத்துவிடுவான். இரவில் படுப்பதற்கு சிறு மூலை இருந்தால் போதுமானது. விடிந்ததும்  மீண்டும் நேற்றைய வேலையே புதிதாகத்தொடருவான்.

ராதா ‘நானும் ஏதாவது வேலைக்குப் போகுறேன், வீட்டில் இருப்பது சங்கடமாய் இருக்கிறது.’ என்று ஆரம்பித்தாள். சில நேரம் எந்த காரணத்திற் காகவோ, எந்த செயல்பாடுகளின் குறைபாட்டாளோ ஒருவர் மீது ஒருவருக்கு பனி படர்ந்த தோற்றம்போல் மனக்கஷ்டம் மேலோட்டமாக இருக்கிறது. இருந்தாலும் வெளிப்படுத்த ஏதோ ஒரு தடை  சாத்தியத்தில் முந்திக்கொண்டு நிற்கிறது. சில நேரங்களில் தொடர்ந்து அப்படி இருக்க முடியாமல் ராதா வெளிப்படையாக “இந்த குடும்பத்தில் வந்து என்ன சுகம் கண்டேன். தண்டமாக சம்பளமில்லாத வேலைக்காரியாகத்தான் என்னால் இருக்க முடிகிறது. என் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டீர்கள்.  எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.” என்று  செல்வத்தின் முகத்திற்கு நேராகவே, பேசித்தீர்த்தாள்.

இது கங்காவின் காதில் விழும். “ஏம்மா இப்படியெல்லாம் பேசுற. குடும்பம்னா அப்படி, இப்படிதான் இருக்கும் அதுக்கெல்லாம் மனசு வெறுத்துக்குவியா என்ன? உனக்கு என்ன குறை வச்சியிருக்கோம் குடும்பத்தில ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் உன் வயித்த காயப்போடுறோமா?” என்கிற விதமாக கங்காதான் கேட்டாள்.

“ஏம்மா, என்னம்மா ஒண்ணியும் தெரியாத மாதிரி கேக்கிற,  நீயும் என்னப்போல பொம்பளதானே. என் வயசத்தாண்டிதானே வந்திருக்கே. வந்த நாள்லயிருந்து என்ன அனுபவிக்கிறேன்னு தெரியாதா? எந்தப் பொண்ணுக்கும் இந்த நெலம வரக்கூடாது. ஆம்பள பொம்பளப் பொறுக்கியா, குடிகாரனா, ஏமாத்துக்காரனா கூட  இருக்கலாம். அவன திருத்தி அவனோட குடும்பம் நடத்திட முடியும் என்ற நம்பிக்கைவைத்து வாழத்தொடங்குவாள். எரிகிற நெருப்பில கையக் காட்டி  கன்னத்தில ஒத்திக்கிணா குளிரு மொத்தம் போயிடுமா? நானு காலத்துக்கும் அப்படியே இருக்கணும்னு, எனக்கு என்ன தலை எழுத்து.” என்று ராதா கடுமையாகவே பேசினாள். அந்த பேச்சி வீட்டிற்குள்ளேயே நடந்தது. எந்த ஒளிவு மறைவும் இன்றிதான் பேசினாள்.  செல்வம். உட்கார்ந்து கொண்டுதான் இருந்தான். அவன் இருக்கிறான் என்று சத்தம் கூட்டியோ குறைத்தோ பேசவில்லை. மிகவும்  இயல்பாகப் பேசினாள். செல்வத்திற்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்வில்லை. அவன் சாதாரணமாக உட்கார்ந் திருந்தான். கங்காதான் அவனை கோபமாக “ஏண்டா எனக்கு புள்ளையா வந்துப் பொறந்தே. எல்லாப் புள்ளையும் எப்பிடியிலாம் இருக்குதுங்க. நீ மட்டும் ஏண்டா?” என்று கேட்பாள். அதற்குகூட செல்வம் ஒரு வார்த்தைப் பேசுவதில்லை.

ராதாவின் வாழ்முறையில் பெரிதாக மாற்றம் ஏதுவும் இல்லை. இப்போதெல்லாம் சின்னச் சின்ன வாக்குவாதம் தொடர்ந்து கைகூடுகிறது. “நான் எங்க வீட்டுக்கு போய்விடுகிறேன். என்னை நல்லபடியாக அனுப்பிவிடுங்கள். மருமகளின் வாழ்க்கை, குறைந்த பட்சம் ஒரு சந்ததியை உருவாக்குவதில்தானே முற்றுபெறுகிறது. இங்கே, அதை நிச்சயமாக என்னால்  உங்களுக்கு தரவே முடியாது. நீங்கள் வைத்திருக்கும் பெருந்தன் மையால் அது உங்களுக்கு தேவையில்லை என்றுகூட சொல்லாம், ஆனால் என் குணநலன்களை எச்சமாக விட்டுச்செல்லவும், அல்லது எதிர்காலத்தில் முடியாதபோது பல நேரங்கள் துரத்தினாலும், சில நேரம் கடமைக் காகவாவது என் மேல் கரிசனைகாட்டுக்கிற சொந்தங்களை உருவாக்கிக் கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது.” என்று பேசினாள். இவைகள் எதுவுமே செல்வத்திடம் நேரடியாக கேட்கும் கேள்வியாக இல்லாததால் அவன் எப்போதும் போல் அமைதியாய் இருந்தான். ஒருவேளை அவன் முகத்துக்கு நேராக என்ன சொல்றே என்றிருந்தால் “ஊம், சரி.” என்ற பதிலாவது வந்திருக்கும். 
 
திட்டமிடுகிற வாழ்க்கை, பல நேரம் திட்டமிடாத யதார்த்த வெளியில் நமக்கெதிராக எழுந்துதான் நிற்கிறது. கங்கா மிகவும் சோர்ந்து விட்டாள். ராதாவை ஏமாற்ற வேண்டும்மென்பது அவள் திட்டமள்ள. மனிதத் தன்மைகளை எதைக்கொண்டு தீர்மானிக்க முடிகிறது. இன்னுங்கொஞ்சம் வாழலாம் என்று கண்ணுக்கு தெரிந்துவரும் பாதகங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே மனம் பலவழிகளை தூண்டி உதவிசெய்கிறது. இப்போது அவள் மார்புகள் வெடித்துவிடுகிற தன்மையை உணர்த்துகிறது. அவசர அவசரமாய் அடமானம் வைத்த வீடு வட்டியும் அசலுமாய் கூடுகிறது. எப்படியாவது நம் குலத்தை மீட்டெடுத்துவிடலாம் என்று  எண்ணிய  ஆசை கேள்விகுறியாக இருக்கிறது. சில நேரம் செத்துப்போகலாம் என்ற ஆவல் கூடுகிறது’ இப்படித்தான் நீண்ட யோசனையுடன். தினந்தோறும் திறந்து மூடும்  நாட்களைக் கழித்தாள்.

பொதுவாக  இப்பூமியில் வாழ்ந்து கடந்தவர்களை, ஏன் கடந்தார்கள்? எப்படிக்கடந்தார்கள் என்று மேலோட்டமாக திரும்பிப் பார்த்தபோது ‘வலுக்கட்டாயமாக தனக்குள் சந்தோஷத்தை புகுத்துகிறதால் 25 விழுக்காடு,  சரியான துணை அமையாமல் 15 விழுக்காடு, நல்ல பிள்ளைகள் அமையாததால் பெற்றோருக்கு 30 விழுக்காடு’ என்கிற வகையில்  ஆயுசை குறைத்துக்கொள்கிறார்கள். இன்னும் கூடுதலாக வாழவேண்டிய மனிதனு டைய ஆயுசு,  மனித ஞானத்துக்கு புலப்படாத, கண்ணுக்கு தெரிந்தே கொலைகளாக நடந்தேறுகிறது.  கங்கா, தான் மரித்துவிட்டால் வெகு சீக்கிரத்தில் கங்கா என்கிற குடும்பம் இங்கே இருந்ததற்கான தடமே இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது என்று நிச்சயமாக நம்பினாள்.

இப்போதெல்லாம் ஒரு திடமான உறுதியுடன்தான் மாறிவிட்டிருக்கிறாள். ராதா அவளுக்கு பிடிக்காத விஷயத்தை செய்தாலும் அதை இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறாள். ‘அப்படி செய்தது சரிதாம்மா’ என்று ஒத்துக்கொள்கிறாள். ராதாவிற்கு எதிராகவே செல்வத்தை திட்டுகிறாள். காலையில் எழுப்பி ஒரு நடைக்கு பதிலாக இரண்டு நடைத் தண்ணீர் எடுத்துவரச் சொல்லுகிறாள். குடிதண்ணீர் ஒரு நடையிருந்தாலே போதும், மற்ற செயல்பாட்டிற்கு பக்கத்தில் தெருக்குழாயில் வருகிறது. ஆனால் வேண்டுமென்றே அனுப்புகிறாள். கலியாணம் முடிந்தபிறகு நண்பர்கள் யாரும் செல்வத்தை வந்து அழைப்பதில்லை. அவன் நண்பர்கள் என்று விஷேசமாக அமைத்துக் கொண்டதில்லை. வீதிப்பிள்ளைகள் நண்பர்கள், பழகியவர்கள் தான். கங்கா அவன் நண்பர்களிடம் சென்று ‘டே, ராஜா. அவன் நல்லா இருக்கச் சொல்லலாம் , வீட்டாண்ட வந்து கூட்டிம்போவீங்க. இப்பலாம் அவனைக் கண்டுக் கிறதேயில்லை.  அவன ஏதாவது வேலைக்கு கூட்டிம்போங்கப்பா. நீங்க தங்கி செய்யிற வேலையாயிருந்தாலும் பரவாயில்லை.’ என்றாள். அவனும் “இப்ப உள்ளுர்ல வேல இல்லமா வெளியூர்லதான் தங்கிசெய்யிரோம். அனுப்புரதா இருந்தா சயந்திரமே அனுப்புங்க”  என்றான்.

ராதா உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.  பெருங்கஷ்டத்தை சகித்துக்கொள்கிறாய். எங்களின் எந்த வேண்டுகோளையும் உனக்குப் பிடித்தமானதாய் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில் இருக்கிறாய். அதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இன்று எங்களுக்கு கலியாண நாள். இந்த நாள்ல இதுக்கு முன்னால் குடும்பத்தில வாழ்ந்தவங்கள நினைப்பது வழக்கம். அன்னிக்கு சின்னப் படையல் போடுவது வழக்கம். உனுக்கு பொடவ எடுத்தாரேன்,  என்ன கலர்வேணும்னு சொல்லுமா’ என்றாள். ராதா ‘எனக்கு எதுக்குமா பொடவ’ என்று எரிச்சலானாள். கங்கா, ராதாவின் பதிலை பார்த்து நின்றதால்   ‘நீங்களாப் பார்த்து எந்த  கலர்னா  எடுத்தாங்க.’ என்றாள் ராதா.

கங்காவும் அவள் கணவனும் கிளம்பினார்கள். ‘இங்கப்பாரு கடைக்கிட்ட வந்து நீதான் நாபகப்படுத்தணும்’ என்றாள். அவள் கணவன் இன்று நல்ல வேட்டி சட்டை அணிந்திருந்தார்.  செருப்பை கழுவி போட்டுக் கொண்டு நடந்தார். அவர்கள் வாழ்வில் இந்தமாதிரிச் சென்று வெகுநாட்களாகிவிட்டது. மாலையில் சற்று சோர்வுடன்தான் வந்தார்கள். கங்கா கையில் ஒரு பை இருந்தது. அவள் முந்தி வேகமாக நடந்துவந்தாள். பையை ஹாலில் வைத்துவிட்டு வெளியை வந்து கைகால்களை அலம்பிக்கொண்டடாள். வந்து காய்கறி கூடைகளில் பிரித்துப் போட்டாள். கங்காவின் கணவன் இப்போதுதான் வாசலை நெருங்கினான். அவன் கையில் புதுத்துடப்பம்,  இன்னொரு கையில் பிளாஷ்டிக் கவர் இருந்தது. ராதா பக்கத்து பாத்ரூமில் குளித்துவிட்டு தலையில் டவளை கட்டிக்கொண்டு வீட்டில் நுழைந்தாள். கங்கா ‘அந்தக்கவரை ராதா கையிலக்குடு’ என்றாள். அவன் துடப்பத்தை கதவோரமாக வைத்துவிட்டு கவரை ராதாவிடம்  கொடுத்தான். ராதா வாங்கி ஓராமாக வைத்துவிட்டு தலையைத் துவட்டினாள். தலைமயிரை தொங்கவிட்டு  டவளால் தட்டியபோது தலையில் இருந்த ஈரப்பசை பனிபோல் காற்றில் கலந்தது.

“ராதா, வாளக்கருவாடு வாங்கிவந்திருக்கிறேன், இன்னக்கி நீ அடுப்பாண்ட போகாத நானே செய்யிரேன். நீ மாமா குடுத்த கவர்ல பொடவ இருக்கிதுபாரு அதை எடுத்து கட்டிக்கோ, பூவும் அதுல இருக்குது வச்சிக்குணு, காமாட்சி விளக்குல எண்ணைய ஊத்தி போட்டோ மாடத்தாண்ட வையிமா. அப்படியே ஊதுபத்தி கொளுத்திடு. சாம்ராணிப்போட்டு வீடு முழுக்கக்காட்டு’ என்றாள். ராதா, கங்கா சொன்னதையெல்லாம் செய்துகொண்டிருந்தாலும், மனசுக்குள் ஏதோ கசப்புத்தன்மை இருந்துகொண்டே இருந்தது.

கங்காவின் கணவன் வேலை செய்து வரும் நாளில் உடல் வலியை குறைக்க சூடாகத்தண்ணீர் போட்டுக் குளிப்பான். இன்றுகூட அப்படித்தான் குளித்தான், குளிப்பதற்கு கூடுதலான காரணம் நடுவீட்டின் படையலை சாப்பிடவேண்டும். நாட்கள் எப்போதும்போலவே அலங்காரத்துடன்தான் பிறக்கிறது, கழிகிறது, மனுஷன்தான் ஒவ்வொரு நாளையும் வெவ்வேறு மாதிரி அனுபவிக்கிறான். சாப்பிட்டபிறகு கங்காவின் கணவன் வாசலுக்கு நேராக வெளியில் நின்று கொண்டிருந்தான். வீட்டில் எரிந்த வெளிச்சம் அவன் மீது பிளாஷாகியிருந்தது. கங்கா ‘என்னத்துக்கு வெளியப் பாத்துங்கிற வந்துபடு, காலையில வேலைக்குப் போகவேண்டாமா’ என்றாள். ராதா ஏற்கனவே உள் அறையில் படுத்துவிட்டிருந்தாள்.

கங்கா அவள் கணவன் ஹாலில் படுத்தார்கள். ஜீரோவாட்ஸ் பல்பு அணைந்தது. இதுவரை கண்ணுக்கு உண்ணதமாய் புலப்பட்ட எதுவுமே இப்போது தெரியவில்லை. ஆனால் நிர்பந்திக்கப்பட்ட எல்லாம் இருக்கும் நிலையிலேயே இருக்கிறது. கங்கா அவன் கிட்டத்தில் நெருங்கினாள். ‘சாணி மாதிரி படுத்துங்கிறான் பாரு, யோ, எந்திரியா.போயி அவளாண்டப்படு’ அவன் சற்றுநேரம் மிரண்டு  இருந்தான்.  மறுபடியும் கங்கா ‘எந்திரிடா, நக்கினப்பையா போயி படுடா. இல்லனா நாம குடும்பம் நடுத்தெருவுக்குத்தான் வரும்’ என்றாள். அவன் ஒன்றும் பேசாமல் எழுந்து சமையல் அறைக்குப் போனான். 

‘தெய்வமே நீதான் என் குடும்பத்தை விளங்கச்செய்யணும்’ என்று கங்கா மனதுக்குள்  வேண்டினாள்.

(குறிப்பு- வாழ்வின்  நடைமுறையில் இருந்துதான், புதுப்புது வார்த்தைகள் பிறந்துகொண்டே இருக்கிறது. மனிதனுக்கு இயலாமை ஏற்படுகின்றபோது சமூகம் கட்டமைத்துள்ள மிகக்கடினமான சடங்குகளை உடைத்தெறிந்து வெளிவரும் வார்த்தைகள். பல நேரம் மிகச் சரியான வாழ்வியலை காட்டிவிடுவதை மறுக்கமுடியாது.)

ஜேடி


Thursday, November 10, 2011

கட்டுரை

                                      ஜெயமோகனின் ‘அறம் கதைகள்’
                                    ‘ழ’ இலக்கிய அமைப்பு  காஞ்சிபுரம்.
                                           வாசிக்கப்பட்ட கட்டுரை


மதிப்புக்குறிய ஜெயமோகன் அவர்களின் அறம் கதைகளில் என் புரிந்துணர்வு. இணைய தளத்தில் ஜெயமோகனிடம் கேட்டபோது “இன்று வரை நம் நவீன இலக்கியம் கொண்டுள்ள இலக்கணங்களை வைத்து அறம் கதைகளை மதிப்பிடமுடியாது” என்கிறார். மேலும்  அவரே அறம் கதைகள் “இலட்சிய வாதத்தை நோக்கி ஒரு சமகால மனம் கொள்ளும் எழுச்சியைப் பதிவு செய்யும்” என்கிறார். அதை நினைவில் வைத்துக்கொண்டே  என் புரிதலை சொல்லுகின்றேன்.

ஜெயமோகன் ஒரு பரந்துபட்ட பிம்பம். அவரின் எழுத்துக்களின் வீச்சி  ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை போன்றது. அந்நெடுஞ்சாலைக்கு இடையில், குடிசைகள், மாடிகள், பூந்தோட்டம், நிழல் தரும் மரங்கள், நல்ல நிலங்கள், கால் வைத்தால் இழுத்துக் கொள்ளும் செற். தொழில் நுட்ப்பவளாகம், உலக நாடுகளின் விபாரஸ்தலங்கள் என்று தன்னகத்தே கொண்டுள்ளவையாகும். அவர் வளரும் எழுத்தா ளராகவோ இல்லை. எதையும் விவாதத்தின் மூலம் தன் நிலையை தெளிவுசெய்கிற நிலையில் இருப்பவர். ஆக, நன்றாக இருப்பதை மேலும் நன்றாக வைப்பது அழகுநிலையத்தின் வேலை. நான் அதை செய்யப்போவதில்லை. ஒரு மருத்துவரின் நிலையிலிருந்தும் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அதற்கான தகுதி என்னிடத்தில் குறைவுதான். சிறு மளிகை கடைக்காரனுக்கு லேசான தலைவலி, சாதாரண காய்ச்சலுக்கு எந்த மாத்திரை கொடுத்தால் நோவு நிற்கும் என்று தெரியும், அந்த தகுதியுடன் இக்கதையில் மனித மனதுக்கு சிறு நோவைத்தரக்கூடிய  சிலதை மட்டும் சுட்டிக்காட்ட  விரும்புகிறேன்.

அறம் கதையின் போக்கு மனித வாழ்வின் நம்பகத்தன்மையுடனும், வாசித்தலுக்கு சிறிது சோர்வும் தட்டாமல் செல்கிறது. பொதுவாக அவரின் எல்லாக்கதைகளுமே அத்தன்மை கொண்டதுதான். சில இடங்களில் யதார்த் தங்களை மீறி வலிந்து புனைவை யதார்த்தம் போன்று, அதுதான் உண்மை என்று நம்பவைக்கிறத்தன்மை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக செட்டியாரின் மனைவி, செட்டியாரிடம் புலவருக்கு சேரவேண்டிய பணத்தை உடனடியாக கொடுக்கவேண்டும் அப்படி கொடுக்காதவரை நான் இந்த இடத்தை விட்டு எந்திரிக்கமாட்டேன் என்று சுட்டெரிக்கும் சாலையில் உட்கார்ந்துவிடுகிறாள்.  எரிக்கிற வெயிலில் அவளின் சேலை தீய்ந்து புட்டம் வெந்து கொப்பளித்தது என்று சொல்லுகிறார். இந்த இடம் நம்பகத்தன்மை மீறுகிறது. அந்த இடத்தில் செட்டியாரம்மா வேணாம்மா எந்திரிச்சி வாம்மா. செட்டியாரு பணம் கொடுக்கத்தான் போயிருக்கிறாரு என்று ஒருவருமே சொல்லியிருக்கமாட்டார்களா? என்கிற கேள்வி சாதாரணமாக எழுகிறது. மேலும் அவளை கண்ணகியளவுக்கு அல்லது ஒரு கடவுள் தன்மையளவுக்கு நிறுத்துவது தேவையா?

அறம் கையாள்கிறவர்கள் என்று காட்டப்படுகிற இலக்கியவாதியான பெரியவ்ர், என்னதான் குடும்பத்தில் வறுமையிருந்தாலும்  நூறு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறபோது. நல்ல அறப்பண்பு உள்ளவராக இருந்தால் அக்காலகட்டத்தில் எத்தனையோ திறமைசாலிகள் இருந்திருப்பார்கள், இவரைவிட கஷ்டத்தில்கூட இருந்திருப்பார்கள். அவர்களையும் சேர்த்துக்கொண்டு, நான் இத்தனை எழுதுகிறேன். நீங்கள் இத்தனை எழுதித்தாருங்கள் என்று சக படைப்பாளிகளை கேட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, நூறு புத்தகத்தையும் நானே எழுதித்தள்ளி விடுகிறேன் என்பதில் என்ன அறம் இருக்கிறது.

ஜெயமோகன், பெரியவர் உரையாடலின்போது தனக்கு வயதாகிவிட்டது என்பதை சுட்டும் விதமாக “இந்த வயசுல ஓடுறப் பெண்ணப்பார்த்து ரசிக்கமுடியுமா?” என்கிறார். 
ஜெயமோகன் “குதிரைய ஓடுறப் பமட்டுந்தானே ரசிக்கமுடியும்” என்று  எந்த வயசுக்கும் ரசிப்புத்தன்மை வற்றாத ஊற்று என்பதை சூசகமாக சொல்லுகிறார்.

இக்கதையில் வரும் அத்தனைப் பேரைக்காட்டிலும் செட்டியார் மனைவியின் செயல்பாடே முழுமையான அறம் சார்ந்த செயல்பாடாகும். இச்செயல்பாடு கதைகள் மூலமாக, சொல்லாடல்கள் மூலமாக வருவது நல்லதுதான்  சமூகத்தை ஒரு புதிய பாகுபாடற்ற தன்மைக்கு இட்டுச்செல்ல வழி சுட்டுவது போலவாவது இருக்கும்.

சோற்றுக்கணக்கு


‘கூரிய முள்தைத்து வைத்திருக்கும் யானைப்பாகனுக்கு பிரமாண்டமான யானைகட்டுபட்டு நடப்பதுபோல்’ ஜெயமோகன் பேனாவின் மூடியை திறந்தவுடன் அதன் அதன் வாழ்வியல் கதாபாத்திரங்களுக்கு தகுந்த விதமாக திசையறிந்து பாயும் காற்றைப்போல், அமைதியான இருண்ட மேகத்தின் மழைபோல் நிறம்பிப் பாய்கிறது.

கெத்தேல் சாகிப் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டுமென்றோ, எதிர்காலத்தின் ஏற்ற இறக்கங்களை நினைத்தவராகவோ இல்லாமல். பசி என்று வருவோர்க்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் சாப்பாடு போடுகிறார். அதற்காக பிரித்தியேகமாக பைசா எதுவும் வாங்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். உண்டியலை மைட்டும் வைத்திருப்பார். விருப்பம் உள்ளவர்கள் அதில் போடலாம். கறிக்குழம்பு, மீன்குழம்பு, வறுத்தக்கறிக்குழம்பு இப்படி சலிக்காமல் அள்ளி அள்ளி போடுவார் என்கிறமுறையில் கெத்தேல்  சாகிப்பின் வாழ்வுமுறை போகிறது.

அதே ஊரில் நல்ல வசதி வாய்ப்பை மாமா, மாமி குடும்பம் பெற்றிருக் கிறார்கள். அங்கு தங்கி படிக்கவருகின்ற சொந்தக்கார பையனிடம் தினம் சாப்பிடுவதற்கு கணக்குப் போட்டு பைசா கேட்கிறாள் அவன் மாமி. பையன் கொஞ்சநாள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறான். மாமி புத்தகத்தை பிடுங்கி வைத்துக்கொள்கிறாள். இப்படியான ஒரு மனிதப் பிறவி. இச்சூழளில் பையன், கெத்தேல் சாகிப்பின் உணவகத்தில் சிலநாள் காசுகொடுத்தும் பலவருஷம் காசு கொடுக் காமலும் சாப்பிடுகிறான்.

பையனின் குழந்தை பருவம் முதலே, அவன் வாழ்வியல் பின்னணி மிகவும் சோகம் நிறைந்ததாக இருக்கிறது. அவைகள் எல்லாம் கதையின் உச்சம். பிறகு அவன் படித்து உயர்ந்துவிட்ட நிலையில் நிற்கிறான். மாமியின் வாழ்வு இப்போது பாதாளத்தில் உள்ளது. கெத்தேல் சாகிப் எப்போதும்போல் சாப்பாடு போடுகிறார். பையன், மாமி தனக்கு உப்பிட்டதை மறவாமல் அவள் மகளை மணந்துகொள்கிறான். தான் முதல் முதல் சம்பாதித்த மொத்தப்பணத்தையும் கெத்தேல் சாகிப் உண்டியில் போட்டுவிடுகிறான்.  

 கெத்தேல் சாகிப் ஆறடி உயரம், கை கால்கள் தூண் தூணாக இருக்கும் .ஒரு ரௌடி நடுரோட்டில் ஒரு பெண்ணின் முலையை பிடித்து கசக்கிவிட்டான். அதைப்பார்த்த கெத்தேல் சாகிப் ஓங்கி ஒரு அரைவிட்டான், ரௌடிக்கு காது செவிடாகி ஆறுமாதம் படுக்கையில் கிடந்து இறந்தேவிட்டான். இவைகள் எல்லாம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனிடமும் அறக்கூறுகள் வற்றிப்போகும் நிலை இருக்கத்தான் செய்கிறது. அவைகளை மீட்டமைக்கும் கதைகளாகத்தான் நான் இவைகளைப் பார்க்கிறேன். இருந்தாலும் இதிலேயும் எனக்கு சாதாரணமாக சில சந்தேகங்கள் எழுகின்றது.

கெத்தேல் சாகிப்பின் சாப்பாட்டு முறைமைக்கும், முணியாண்டி விளாஸ் ஓட்டலுக்கும் ஏதாவது தொழில்முறை தொடர்பு இருக்குமா? ஏனென்றாள் முணியாண்டி விளாஸில் சாப்பிடும்போதுகூட எத்தனை முறைக்கேட்டாலும் இல்லை என்றுசொல்லாமல் சாப்பாடு வைத்துக்கொண்டே இருப்பார்கள். அதற்காக டிப்சாகக் கொடுத்தது வெறும் இரண்டு ரூபாய்தான். தினந்தோறும் அப்படித்தான். ஓட்டலுக்கு வரும் எல்லாரும் அப்படித்தான். அதில் புதிதாக வருபவர்கள் சிலர் கொடுக்காமல் செல்வதும் உண்டு. ஆனால் எல்லோருக் கும்போல் அவர்களுக்கும சாப்பாடுபோடுவார்கள். (தற்போது ஐந்துரூபாயாக தருகிறார்கள். அதுகூட அவர்கள் கேட்கவில்லை. விலைவாசி ஏறிவிட்டதால் கஸ்டமராக ஏற்றிக்கொடுக்கிறார்கள். நானும் அதிகநாள் அதில் சாட்பபிட்டு இருக்கிறேன்.)

கெத்தேல் சாகிப் ஒற்றை  மனிதனாக இருந்து கொண்டு, உதவிக்கு ஒரே ஒரு பையனை வைத்துக்கொண்டு பல வருஷங்கள் கறிகுழம்பு, மீன்குழம்பு, வறுத்தக்கறி இப்படி பலவிதமாக செய்து தினந்தோறும் சிறிதும் சலிப்பில்லாமல், சாப்பிட வருவோரிடம் எந்த முகஸ்துதியும் இல்லாமல் சாப்பாடு போட்டார் என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. இன்னொன்று அத்தனை வருஷங்கள் சாப்பாடு போட்டதாக சொல்லப் படுகிறபோது. எந்த இடத்திலும் ஒரு பிச்சைக்காரனோ, பயித்தியக்காரனோ வந்து சாப்பிடவே இல்லையே  ஏன்?

தன் கனவனை இழந்துவிட்டாள், கூலிக்கு போகிறாள். கலியாண வயதில் இருபெண்கள் இருக்கிறார்கள். அந்த சூழலிலும் மாமி ‘நீ கதியில்லாம நிக்கச்சொல்லோ கஞ்சி ஊத்தியிருக்கிறேண்டா, அந்த நன்றிய நினைக்கலனா நீ அழிஞ்சி போயிடுவே’ என்று தைரியமிக்கவளாக அப்பாத்திரத்தை வைத்திருப்பது பாராட்ட வேண்டிய ஒன்றுதான். ஆனால் பையன் முதல் முதல் சம்பாதித்த பெரும் தொகை மொத்தத்தையும் உண்டியலில் போட்டான் என்பது சற்று பொருத்தமற்றதாக இருக்கிறது. இவைகள் போன்ற மிகைப்படுத்தலான  விஷயங்களின் மூலமாக அறத்தை நிறுவமுடியும் என்று நம்புகிறாரா? அல்லது புதிய அறத்தோற்றத்தை நிறுவுவதற்காக இப்படி அமானுஷ்யமான விஷயத்தை கையாள்கிறாரா?

யானை டாக்டர்

காட்டின் நிசப்தமான மொழியையும் அதன் அழகையும், விலங்கினங்களின் வாழ்வியல் முறை, அவைகளின் அறிவுநிறைந்த செயல், அதன் இயல்புகள் குறித்த புள்ளிவிவரங்கள். அவைகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதரின் சுகதுக்கங்கள் இவைகளின் சாதுர்யமான தேடல்களே இக்கதையின் வெற்றி.

 “...யானையின் சடலம் அவிழ்க்கப்பட்ட கூடாரம்போல் நான்கு பக்கமும் பரப்பியிருந்தார்கள்...” “...மேலும் சில கணங்களில் அதில் அசைவுகள் கண்டேன். சேறு நுரைக்குமிழ்களுடன் கொதித்துக்கொண்டிருந்ததுபோல தோன்றியது. அது முழுக்கப் புழுக்கள். புழுக்கள் அவரது கால்களிலும் முழங்கைவரை மொய்த்து ஏறி உதிர்ந்து கொண்டிருந்தன...” என்று
காட்டில் செத்து புழுத்துக்கிடக்கும் யானையின் காட்சியை அப்படியே காட்சிப்படமாக வாசகனுக்கு காட்டிச்செல்கிறார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் காட்டிற்கு மிருக டாக்டராக வந்தவர். காட்டிலேயே தங்கிவிட்டார் ஆயிரத்துககும் மேற்பட்ட யானைகளுக்கு அறுவைசிகிச்சை, முந்நூறுக்கும் மேலாகபிரசவம், நூறுக்கும்மேலாக சடலங்களை பரிசோதனை செய்தார் என்பது ஆச்சரியம்தான். கதை பல்வேறு ஆய்வியல் கூறுகளை சாதாரணமாக சொல்லிக்கொண்டே போகிறது.

“மனுஷன்தான் இருக்கிறதிலே வீக்கான மிருகம். மத்த மிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்குறதுல  இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும்.” இவைகள் எல்லாம் மனிதனிடம் சகிப்புத்தன் மையை வளர்த்துக்காட்டும் முயற்சி.

அடிப்பட்டுக்கிடக்கின்ற செந்நாயின் கிட்டத்தில் சென்று மருந்து கட்டுகிறார். அச்சமயம் நாய்கள் சூழ்ந்து வருகிற பதற்றத்தையும், அவைகளின் உடல்மொழிகைளையும் மிகவும் யதார்த்தமாக, உண்மைத்தன்மையுடன் சித்தரிக்கிறார். மிருகங்கள் பரிமாறிக்கொள்கிற அநேக விஷயங்களின் புள்ளிவிவரம் அதிகமாகக் கிடக்கிறது.

‘‘எல்லா புழுவும் கைக்குழந்தைதான். நடக்க முடியாது. பறக்க முடியாது. அதுபாட்டுக்கு தவழ்ந்துண்டு இருக்கறது. அதுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், சாப்புடறது. தின்னுண்டே இருக்கும். சின்னப்புள்ளைங்ககூட அப்டித்தான்…” இப்படியான டாக்டரின் வரிகள் மனதை நெகிழ வைக்கிற வார்த்தைகள்.

கடைசியாக ஒரு குட்டியானை முள்தைத்து தவிக்கும் அதை பார்த்துவிட்ட டாக்டர் அதற்கு நீண்ட நேரம் வைத்தியம் பார்கிறார். அப்போதெல்லாம் யானைகள் கூட்டம் தேடிவந்ததற்கான அறிகுறியே இல்லாமல். டாக்டர் வைத்தியம் பார்த்து வீடு செல்லும் தருவாயில் பத்து இருபது யானைகள் கூடி நன்றி வாழ்த்து தெரிவிகிறது, 



“தேவதுந்துபிகள் முழங்கின! வான்முரசுகள் இயம்பின! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானைமுக வானவர்களின் புன்னகை நிறைந்திருந்தது”
என்று நடைமுறையின் சாத்தியக்கூறுகளுக்கும் மேலாக இம்மாதிரியாக அறத்தன்மையை நிறுவும்போது மீண்டும் கண்மூடித்தனமான நம்பிக்கையை கட்டமைப்பதாக ஆகாதா?

நூறு நாற்காளிகள்

அறம் கதைகள் முழுக்க கடந்த காலங்களின் அழிக்கப்பட்டுபோன அல்லது மறந்துவிட்ட அதற்கும்மேலாக வாழ்நாள் முழுவதும்,  தான்வாழ்ந்த நிலையில் போராட்டங்களை சந்தித்து அதன் மூலமாக சமூகத்துக்கு எதோ ஒரு கற்பிதங்களை விட்டுச்சென்ற சாமான்ய மனிதர்களின் வாழ்வியலை தற்போது தோண்டி எடுக்கும் விதமாக அவர்கள் அனுபவித்த வலி சற்றும் குறைவில்லாமல் ஜெயமோகன் வெளிப்படுத்துகின்ற சாதுர்யம், அதோடு தற்காலத்துக்கு ஏற்றவிதமாக யதார்த்தம், தத்துவங்கள், வறலாற்று நிகழ்ச்சிகளை இணைத்து  படைக்கின்ற விதம் மிகவும் சவாலானதுதான்.


இக்கதையில் ஆரம்ப காலகட்டங்களில் ஆதிதிராவிட மக்கள் அனுபவித்த கொடுமைகளைவிட மனித இனத்துக்கே நடக்கக்கூடாத அவலம் ‘நாயாடிகள்’ என்கிற இனத்துக்கு நடந்திருப்பதை பார்கிறபோது. இதயமே பதைக்கிறது. 


“நாயாடிகள் அலைந்து திரியும் குறவர்களில் ஒரு பிரிவு, இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று நம்பிக்கை இருந்ததால் அவர்களை வெளியில் பார்த்தவுடன் கல்லால் அடித்து கொன்றுவிடுவார்கள். அதனால் நாயாடிகள் பகல் முழுதும் காடுகளில் புதர்குழிகளில் தங்கள் குழந்தைகளுடன் படுத்துக் கிடப்பார்கள்” என்று  வறலாற்று ஆதாரங்களுடன் வைக்கிறார்.  அப்படிப்ட்ட பட்டியலில் இருந்து வந்த ஒருவன் டாக்டராகிவிட்டான். மனநிலை சரியில் லாமல் எப்போதோ  காணாமல் போன தன் தாய் ஒரு கட்டத்தில் அவன் பணி செய்யும் மருத்துவமனையில் மூச்சிபேச்சி இல்லாமல், தெருவில் ஆனாதையாகக்கண்டு நகராட்சி நபர்கள் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். சக டாக்டர் எப்போதும்போல் நோயாளிகளை அலட்சியமாகவே கவனிக்கின்றார். (நல்லவேளை எஸ்.சி டாக்டர் அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறார்) மகன் அதிர்ச்சி அடைந்து, அவள் என் தாய் என்று உண்மையை கூறி சரியாக கவனிக்கச்சொல்லுகிறார். டாக்டர் உயர் வகுப்பு பெண்ணை காதலித்து மணந்து குடும்பத்துடன் வாழ்பவர். அவளுடைய உயர்வகையான விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டே  அம்மாவை காப்பாற்ற முயலுவதும்,  மகனுக்கும், தாயிக்கும் இடையில்  ஏற்படுகிற நெகிழ்ச்சிமிக்க போராட்ட வாழ்வை ஜெயமோகன் தருகிறார்.


மனிதன் கட்டமைத்து வைத்துள்ள சமூக அமைப்பு  நாளுக்கு நாள் சகமனிதனை நேசிக்கும் தன்மையிலிருந்து சரிந்துகொண்டே போகிறது. அதன் வலுவைப் பார்க்குமபோது அணுகுண்டைக்காட்டிலும் பயப்பட வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். அதனால்தான் பெற்றத்தாயை பேணிக்காப்பாற்ற கூடடுதலாக அதிகாரம் கொண்ட ‘நூறு நாற்காளிகள்’ வேண்டுமென்று கூக்குரல் இடுகிறார்.


இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. நாயாடிகள் என்கிற குறவர்களானாலும், கோட்டாவில் படித்துவிட்டு கீழ்த்தரமாக கெஞ்சும் ஆதிதிராவிடனானாலும் தற்போதைய சூழளில் ஒரு சகமனிதனோடு சமமாய் பழகுகிற பிம்பம் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டாலும், அப்படித்தான் பரப்புரை செய்ய வேண்டும். (அழுக்கே போகாத குளியல் சோப்புக்கு ஆயிரம் இடங்களில் விளம்பரம் செய்தபோது, அதைவிட நல்ல சோப்பேஇல்லை என்று பேசுகிறார்கள் அல்லவா? விற்பனையும் எகிறிவிடுகிறதல்லவா?) அதைவிடுத்து சாதிகள் இல்லை என்று டீக்கடையில் போர்டை வைத்து டீக்கொடுக்கிறான். இப்போதுபோய் குறவர்களை தெருவில் பார்த்தாலே கல்லால் அடித்துக் கொல்வார்கள், என்று சொல்லும்போது சகஜமாய் பழக நினைக்கிற புதிய தலைமுறைக்கு பழைய கீழ்நிலையை புதியதாக நினைவூட்டுவதாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. 


மெல்லிய நூல்

ஜெயமோகன் இதை சமீபமாக எழுதியது இல்லை. 1999 ல் வெளி வந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் சிறுகதை இதை சமீபத்திய கதைகளுடன் இணைத்திருக்கிறார்கள். தற்போதைய ஜெயமோகனைக் காட்டிலும் அப்போதைய இளய ஜெயமோகன் பொதுத்தன்மையுடன் வாதங்களை வைக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுக்கான நியாயமாகவும், ஆளுகை செய்கிற சக்தியுள்ளவர்களை ஓரளவு சாட்டையடிகொடுக்கவும், தைரியமாக வெளுத்தும் வாங்கியிருக்கிறார்.

அய்யன்காளி ஆந்திராவில் பின்தங்கிய வகுப்பினர். தன் சாதியின் விழிப்புணர்வுக்காக சிறு போராட்டக்குழுவை வைத்திருந்தார். அத் தலைவர், தன் குழுவுடன்  1937-ல் காந்தியடிகளை சந்திக்கும் ஒரு நிகழ்வை சித்தரிக்கும் கதை.
காந்தி நாடுமுழுதும் சுற்றுப்பயணம் செல்லுகிறார். அச்சமயம் ஆந்திராவிற்கு வருவதைக் கேள்விப்பட்ட அய்யன்காளி தன் குழுவுடன் சென்று சந்திக்கின்றார். அய்யன் காளி குழுவினர் தரையில் உட்கார்ந்து தங்கள் நிலையை விளக்குகிறார்கள். "உயர் வகுப்பு மக்கள் தன் சாதி மக்களை மிகவும் கொடுமைப் படுத்துகிறார்கள். இதற்கு நீங்கள்தான் ஒரு வழி செய்யவேண்டும் இத்னைக்கும் நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை, கோயிலுக்குள் தெரியாமல் ஓடிவந்த எருமை மாட்டை பிடிக்கச்சென்ற மாடனை திருவட்டார் கோயிலைச்சுற்றி கரை நாயர்கள் பதினெட்டு முறை மன்தரையில் போட்டு  இழுத்தார்கள்" என்கிறார்கள். 

இதை கேட்கும் காந்தி எந்த சலனமற்றவராக அமைதியாக ராட்டை நூற்றுக்கொண்டு இருக்கிறார். சற்று அமைதிக்குப் பிறகு  “ஆயிரம் வருடங்கள் நீங்கள் கொடுமைப்படுத்தப் பட்டீர்கள் என்றால் அதற்கு முதற்காரணம் நீங்கள்தான்...”  நீண்ட உரையாடல் இப்படி தொடர்கிறது. அய்யன் காளி இதுவரை ஒரு வார்த்தைக் கூட காந்தியிடம் பேசவில்லை. அக்குழுவில் ஒருவன்தான் அவர் சார்பாக பேசினான். இதுவரை நடந்த பேச்சுவார்த்தை அய்யன் காளிக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. அய்யன் காளி திடீரென எழுந்து நின்று கடைசியாக காந்தியிடம் பேசினார் “ உங்கள் நியாயங்கள் எதுவும் எனக்கு புரியவில்லை” என்று பேச்சை முடித்து கிளம்புகிறார். காந்தி இப்போது புன்னகைக்கிறார். அய்யன்காளி போகும் தருவாயில் “ஆக உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். வெல்லும் தருணங்களில் இருக்கும் இதே மனவலிமை தோற்கும்போதும், புறக்கணிக்கப் படும்போதும், கொல்லப்படும்போதும் உங்களுக்கு இருக்கவேண்டும். நீங்கள் இதுவரைக் கேட்டகுரல்கள் எல்லாம் வானத்திலிருந்து வந்தவைகள். இது பாதாளத்திலிருந்து வருகிறகுரல் வருகிறேன்” என்று நெஞ்சை நிமிர்ந்த  தலையுடன் திரும்பி நடந்தார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயசாய்வு விழுக்காடு அடிப்படையில், அதிலும் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் குறைவாக இருந்தால் நல்லது, ஆனால் பெரும்பாலும் பொதுத்தன்மையில் அக்கறை, ஒடுக்கப்படுகிற மக்கள்மீது கூடுதல் கவனம் வேண்டும். அதை இக்கதையில் ஜெயமோகன் சரியாகச் செய்துள்ளார். அய்யன்காளியின் ஆள் காந்திடம்  கேட்கிற கேள்விக் கெல்லாம், பாதிப்புடன் வந்திருக்கிறார்களே என்றுகூட இல்லாமல். காந்தி நையாண்டியுடனும், சாதாரண நிலையிலும் பதில்சொல்வதாகவும். ஒரு கட்டத்தில் ஜெயமோகனின் கோபம் கொப்பளித்ததுபோல் “நிறுத்துடா கிழட்டு நாயே” என்று கத்துவதுபோன்ற பிரமை அவருக்குகேற்பட்டதுபோல் இருந்தது” என்று குறிப்பிடுவார். (தற்போதுய காந்தியடிகளின் கட்டுரைகள், விவாதங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது )

கடைசியாக அய்யன்காளி கேட்டுச்சென்ற கேள்வியில் காந்தி நிலைகுலைந்து அக்கேள்வியில் உண்மை, நியாயம் இருக்கிறது அக்கேள் விக்கான பதிலை அவரால் சொல்லவே முடியவில்லை என்கிறவிதமாக காந்தி நூற்கும ராட்டை அடிக்கடி அறுந்து போகுகிறது, இதுவரை எந்த சலனமும் இல்லாமல் நூற்றவரால் இப்போது நிம்மதியாக இருக்க முடியவில்லை.” என்று யதார்த்தமாக காந்தியின் மன உளைச்சலை வெளிப்படுத்துவார், நீண்ட நேரத்திற்கு பிறகே காந்திக்குள் ஒருமுடிவு கைகூடிவருகிறது என்பதை மெல்லிய நூலாக ராட்டையில் இழைவருகிறது என்றுமுடிப்பார்.

ஆக ஆதியிலேயேஜெயமோன் சிறந்த படைப்பாளி என்பதை உணரமுடிகிறது.

பெருவலி 

வாழ்நாள் முழுவதும் கலைஞனாக, ஒரு படைப்பாளியாக வாழ்க்கையை நிறைவுசெய்கின்றபோதும். திடீர் நோய்தாக்கினாலும், வயதான நேரங்களி லும் பலவிதமான மனக்குழப்பம் குடைந்துகொண்டே இருக்கும். எதை சாதித்தோம் எதைவிட்டுச் செல்கிறோம் என்ற கேள்விகளால்தான் வாழ்வை கடத்தமுடிகிறது. கோமல் சாமிநாதனின்  அப்படியான  வாழ்வியல் துன்பங்கள் அவ்வாழ்வியலுக்கு அப்பால் என்ன இருக்கிறது? புதிய வாழ்வியலைக் காண இதுவரை வாழ்ந்த வாழ்வு பயன்படுமா? வாழ்வு முடியும் தருவாயில் எதற்காக அதை தரிசிக்கவேண்டும்? என்கிறகேள்விகள் வாசகன் மத்தியில் எழுகிறது. இக்கேள்விகளின் மூலமாக வாழ்வியலில் சிறிதள வேணும் புதிய புரிதல் ஏற்பட்டால் அது படைப்பாளனுக்கு வெற்றிதான்.

தமிழக இலக்கியத்தில் ஜெயமோனின்  பங்கை யாராலும் தள்ளிவிட முடியாது. கோமலின் வாயாக இருந்து சொல்லும் வார்த்தைகள் எத்தனை நேர்த்தியாகவிழுகிறது. “இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டது. எப்பப்பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ஆனா இது என்னோட வலி ,என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேல ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போரது வளத்து ஆளாக்கிடுவோம் என்ன?” இப்படியான அற்புதமான வாழ்வியல் புரிதல்கள் ஜெயமோகன் கதைகளில் அநேக இடங்களில் கிடக்கிறது. 


எப்பேர்ப் பட்ட மனிதனாக இருந்தாலும், எதைசாதித்து வானுயர நின்றாலும் மரணம் என்பதை. குழந்தைக்கு, தாயின் பால் வடியும் முலைக்காம்புபோல, ஆணும், பெண்ணும் ஏற்றக்காலத்தில் மணந்துகொள்ளுதல் போல, மிகுந்த விருப்பத்துடன் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எந்த தரிசனங்களும் மரணத்தை சீக்கிரம்  கொடுத்துதவுவதில்தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது, என்பதாகத்தான் என்னால் விளங்கிக்கொள்ளமுடிகிறது.


மதிப்புக்குறிய ஜெயமோகன் அவர்களின் அறம்கதைகள் தற்காலத்தில் மிகத்தேவையான ஒன்றுதான்.  இக்கதைகள் முழுக்க முழுக்க பெரும்பாலான மனிதனின் நீர் கோர்த்த இதயத்தை, சிரஞ்சி கொண்டு நீரை இழுத்து மறுஊட்டமாக அவரவற்கான ரத்தத்தை செலுத்தும் முயற்சிதான்.   ஆனால் சாதாரண மனிதன் நம்ப  மறுக்கும் விஷயத்தைக்கூட பெரும் சான்றுபோல், தெய்வீகம்போல் தினிப்பது  சற்று மிகையாக இருக்கிறது.


ஜேடி