அதீதத்தின் ருசி மனுஷ்ய புத்திரன்
கிழ்காணும் கவிதை குறிப்பை வாசித்துவிடவும்
சமீப நாட்களாக வலைதளங்களில் வெளிவருகின்ற பலருடைய கவிதைகளையும், சில பெண் கவிஞர்களின் கவிதைகளையும் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். தற்போதைய நிலையில் கவிதையுலகில் சுட்டிக்காட்டப் படுகிற சிலரின் கவிதைகள் தொகுப்பாகவும், நெட்டிலும் வாசித்துவருகிறேன். அந்த தேடலில் கிடைத்ததுதான் மனுஷ்யபுத்திரன் கவிதைகள். அவர் கவிதைகளை உயிர்மையில் வாச்சித்தும் தெளிவான பிம்பம் தெரியாமல் சற்று தூரத்தில் பிடிபடாமல் இருந்தது. அது நான் கவித்துவத்தை அறிந்துகொள்ள முடியாமை அல்லது அதில் அவ்வளவாக கவனம் செலுத்தாமை காரணமாக இருந்திருக்கலாம் என்றே கருதுகிறேன்.அனேகமாக 2011 மார்ச் அல்லது எப்ரல் மாதத்தின் உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் கவிதையில் சாலையை கடக்க உதவி கோருதல் அடிப்படையில் ஒரு சின்னக்கவிதை வரும் அக்கவிதையை வாசித்தபோது 'எனக்கு நெருக்கடி மிகுந்த சிக்னலின் மையத்தில் அக்குள் இரண்டில் கட்டையை வைத்துக்கொண்டு, சாலையை கடக்க ஒருவரை உதவிக்காக பக்கத்தில் நிற்கவைத் திருப்பது போல் காட்சி புலப்பட்டது. அந்த நபர் தயவுசெய்து சாலையை கடக்க உதவி செய்வீர்களா. சாலையின் அந்தபகுதிக்கு போகவேண்டும், அந்த பகுதில் எனக்கானது ஒன்றுமே இல்லை. வெறுமனே தான் அவ்வளவுதூரம் போகவேண்டும், நடந்துபார்க்க வேண்டும் எனும்படியாக என்னிம் கேட்பது போன்று இருந்தது. எவ்வளவு ஆழமான ஒரு சோகம். இந்த சாலையை கடக்கமுடியாத நபர்களின் ஆழ்மனது எப்படி இந்த சாதாரண விஷயத்துக்காக ஏங்குகிறது. அவன் இப்படியான சோகத்தில் இருப்பது, அவசர அவசரமாய் அவனை கடந்து ஓடுகிற யாருக்காவது தெரிகிறதா? மிகச் சாதாரண வாக்கியத்தில் அசாதாரணமான அர்த்தங்கள் பொதிந்ததாக எனக்கு புரிந்தது. அதன் பிறகுதான் நண்பரிடம் அதீதத்தின் ருசி யை வாங்கி வாசித்தேன்.
நாவல், சிறுகதை தொகுப்பை எடுத்தால் நேரம் ஒதுக்கி வாசிக்கலாம். இன்று வாசித்துவிட்டு இரண்டு நாள் கழித்துகூட மீண்டும் விட்ட இடத்திலிருந்து வாசித்து கதையில் ஒன்றி போய் கொண்டேயிருக்கலாம். முடித்தபிறகு அவற்றிலிருந்து ஒரு பிம்பத்தை உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது. அனால் கவிதையில் அப்படி முடிகிறதா?
பொதுவாக மூளையை கசக்கிப் பிழிந்து சாறு எடுப்பது போலவும், இயல்பாகவே மிதமிஞ்சிய கவிமூளையில் இருந்து வழியும் அலங்கார மொழியுடன் கவிதையாக வருகிறது. அவைகளை அனுபவமில்லாமல் வாசித்தவுடன் விளங்கிக்கொள்ள முடியாது. தற்போதயக் கவிதையை வாசிக்க அதிக சிரமம் எடுத்துக்கொண்டால் தான் புரியும், அதற்கான மெனக்கெடுதல் இல்லை யென்றால் புரியாது. தொடர்ந்து அதனுடன் ஊடாட வேண்டும் என்று கட்டமைக்கிறார்கள். பள்ளிப் பாடம் ஏன் அப்படி இருக்கவில்லை? நம் பிள்ளைகள் உயர் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே நல்ல கம்பெனிகளில் வேலை வாங்கிக்கொள்வது ஏன்? இந்த கேள்விகள் மனசுக்குள் இருந்தாலும் பலமுறை சிரமப்பட்டு கவிதையை வாசிதுப்பார்க்கிறேன் மொழியின் அழகியல் தெரிகிறது.எனக்கான புரிதலாக இப்படியாக இருக்குமோ? என்ற பனிமூட்டமான ஒரு பிம்பம் தெரிகிறது. ஆனால் ஆசிரியன் எதை நினைத்து எழுதினான். அதன் உண்மையான பொருள் என்ன? என்பதை பலருடைய பலகவிதைகளில் தெரிவதே இல்லை. கவிதை விளங்க தேவையில்லை. அவரவர்க்கு விளங்கும்படி விளங்கிக் கொள்ளவதே கவிதை என்று வாதிடுவது தான், தற்போதைய கவிதை உலகின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். இந்ததிர்வுதான் கவிதை படைப்பாளரை ஏனோதானோ என்று மேம்போக்கான கவிதையை படைக்க தூண்டுகிறது.
வாழ்க்கையில் நம் பிள்ளைகளையோ, மனைவியையோ, கணவனையோ அவரவர் விருப்பப்படி மனம் போனபடி வாழ்ந்துவிட்டு போ 'என்று விட்டுவிடுகிறோமா? வாழ்க்கைவேறு கவிதைவேறா? கவிதை வாழ்க்கை யிலிருந்து கசிவதில்லையா? கவிதைக்கு வழங்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதன் வீரியத்தை அழிக்கிறார்கள்.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது.
புதிதாக வாசிக்கும் வாசகனுக்கு சீக்கிரம் விளங்காது. அவனே சற்று சிந்தித்து வாசித்தால் அதன் உண்மையான அர்த்தம் 'பறவை இருந்தது. அதன் இருப்பை மனிதன் கண்டுகொள்வதில்லை. அதுவாக வாழ்ந்து, அதுவாகவே இல்லாமல் போகிறது.' அதன் சோகத்தை சொல்லுவதாக புரிகிறது. இன்னொருவர் இன்னொருவிதமாக புரிந்துகொள்ளட்டும் தவறில்லை. ஆனால் அந்த பறவையின் சோகத்தை மறுக்கமுடியாது. அதன் உண்மையான அர்த்தத்தை மறைக்கக்கூடாது.
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் வாழ்வியலை கடக்க எளியவழி, முழுக்க மனதின் உள் உணர்வுகளை அறிந்து கொள்ளும் உளவியல் பின்புலங்களை விவரிக்கின்ற கவிதைகளாகத்தான் இருக்கின்றது. பொதுவாக அவர் கவிதைகள் ஆழமாக சிந்திக்க வைக்கிற சூழலை மிக எளிமையாக உருவாக்கித்தருகிறது. நூற்றில் ஒன்று இரண்டைத்தவிர மற்ற எல்லா கவிதைகளும் உணர்ந்து அதன் உண்மையான அர்த்தத்தை அறிந்துகொள்ளச் செய்கிறது. அதன்மூலம் செயல்பாடுகளில் இறங்க தூரிதமாக சிந்திக்கின்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.
அவர் கவிதைகள் ஏற்கனவே சொன்னதுபோல ஒன்றிரண்டைத்தவிர மற்றெல்லாம் அளவுகடந்து விவரிக்கக்கூடியது. நீங்கள் வாசித்தால் உணர்ந்துகொள்ளலாம். நான் ஒரு சில மட்டும் 'என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்'.
.......
'உங்கள் வரவேற்பறையில்
நான் ஒரு செடியைப்போல் அமர்ந்திருப்பது
இது பதினேழாவது முறை
உங்கள் முற்றத்தில்
மீன் தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும்
மீன்களோடு ஒரு மீனாக
உங்கள் கருணையை நோக்கி
நீந்திக்கொண்டிருக்கிறேன்....
இது கவிதையின் ஒரு பகுதி தொடர்ந்து கைவிடப்படுகிற மனிதனின் கோரிக்கையை இதைவிட ஆழமாக வைக்க முடியுமா? எளியவன்மீது ஏகாதிபத்தியத்தின் நிராகரிப்பை, சூன்ய நிலையில் இருப்பவன் தன் சுயமரியாதையை மனசாட்சியை அடமானம் வைத்து மீண்டும் மீண்டும் அவனிடமே கையேந்தும் நிலையை இச்சமூகம் மறைமுகமாக கட்டமைத்து செயலாக்குகிறது. இத்தன்மையின் வெளிப்பாட்டை கவிதை விரித்துக் கொண்டேபோகிறது. பல கோணங்களில் ஆழ்ந்த உள்ளீடுகளை தரிசிக்கமுடிகிறது.
பயித்தியக் கவிதை -5
.....
என்னை பைத்தியம்
என்று நிறுவ விரும்புகிறவர்கள்
தவறான அளவுகளில்
என் ஆடைகளைத் தைக்கச்சொல்லுகிறார்கள்
என்னைப்பற்றி
தப்பபிராயங்கள் விலகவேண்டும் என்பதற்காக
நேர்த்தியாக உடுத்திக்கொள்ள
கொஞ்சம் நேரமாகிவிடுகிறது
.......
என் சருமம் பற்றி எரியும்போது
என் ஆடைகளை
பாதுகாப்பாகக் களைந்து எடுத்துவைக்கிறேன்
பயித்தியம் பயித்தியம் என்று
அலறுகிறார்கள்
சகமனிதனால் தான் பயித்தியங்கள் உறுவாகின்றன என்பதற்கு இக்கவிதை தான் சாட்சி. பயித்தியங்களை உற்று பார்க்கின்றபோது. எதோ ஒன்றை பிதற்று கிறார்கள்' என்று நினைப்பது தவறு. அவர்கள் கடந்த காலங்களின் வாழ்க்கையை நிகழ்காலங்களில் வாழ்கிறார்கள். விபச்சாரி பட்டங்கட்டிய தன் கணவனின் முகத்தை தெருவீதிகளில் பார்த்து முரைக்கிறாள். அவள் குழந்தை மாமியார் மீது மூத்திரம் பெய்ததைப்பார்த்து வயிறு நோக சிரிக்கிறாள். கணவன் வீட்டிலில்லாதபோது மாமனார், மைத்துணன் பாலுறவுக்கு வர்ப்புருத்துவதைப் பார்த்து திட்டிக்கொண்டே இருக்கிறாள். இக்கவிதையை வாசித்தபிறகும் இப்படியான பின்புலங்களை வாசகனால் ஆராய்ச்சி செய்யாமல் இருக்கமுடியாது.
சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்
சக்கர நாற்காலியின் வசதி வாய்ப்புகளைச் சொல்லும் போது அதன் பின்புலத்தில் அதில் அமர்ந்திருபவரின் வேதனை நிறைந்த வலி காட்சிப்படுகிறது. அதுமட்டுமல்லாது நாட்டின் ஆட்சி அதிகாரத்தின் நடைமுறையில் இருக்கும் செயல்பாடுகள், கட்டளைகள், நிர்பந்தங்கள் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கும் சிரமங்களைக் காட்சிப்படுத்துகிறது.
வலி நிவாரணம்
.......
வலியையே
நினைத்துக்கொள்ளாமல் இருந்தால்
வலி ஒரு பிரச்சனையே இல்லை
......
அற்புதமான கவிதை இது வலியை குறிப்பிடவில்லை. வாழ்வியல் முறையை எப்படி சாதரணமாக சாத்தியப்படுத்துவது என்று கற்றுக்கொடுக்கிறது. அதன் பரந்துபட்ட பல முகங்களை காண்பிக்கிறது. அதை மேற்கொள்ளுவதற்கான வழிகளை கண்டுபிடித்துச் சொல்லுகிறது. எந்த உபாதைகளும் இல்லாமல் சாதாரணமாக மல ஜலம் கழிப்பதுபோல் வாழ்வை கடந்துபோகக்கூடிய சாத்தியத்தை நிறுவுகிறது.
வெளியே வரலாம்
உறவுகள் பூஜிக்ககூடிய ஒன்று என்று கற்பிக்கபட்டு வருகிற நிலையில். கைமாறி கைமாறி அவரவர் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுகிற போதுதான் வாழ்வு எப்போதும் ருசியுள்ளதாக நிதானிக்கிறார்கள். அதை தங்களுக்கு தாங்களே போற்றிக்கொண்டு, ஆறுதல் அடைந்து, வாழ்வை சலிப்பில்லாமல் கடந்து போகிறார்கள். தன்னுடைய மனநிலையை நல்ல செயல்பாடுகளில் வைத்திருக்கிற ஒருவன் இந்த சமூகத்தில் தனிமைபடுத்தப் படுகிறான். எந்தத்திக்கிலும் அவனுக்கான ஆறுதல் கிடைப்பதில்லை. அவன் மனம் வெறுமனே சுற்றித்திரிவதில் நிம்மதி காண்கிறது. சமூகம் உண்மையா னவனை பொய்யாக்கி பிச்சைக்காரனைப்போல் தூரத்துரத்துகிறது. இக்கவிதை ஒரு மரணத்திற்கு ஈடான ரகசியங்களை கண்டுபிடித்தல். உயிர்த்தெழு தலுக்கான கொண்டாட்டங்களை வெளிப்படுத்துதல் .
மனுஷ்யபுத்திரனின் கவிதை உலகம் சாதாரண வார்த்தைகளை கொண்டு ஒரு குயவனைப்போல் தன் பண்பாட்டின் சாரம் மறைந்து போகாமல் புதிய உத்திகளை புதிய ஆளுமைகளை வெளிக்காட்டுகிறது. ஒட்டுமொத்த சமூகங்களில் படிந்துகிடக்கும் அவலங்களை மெல்லியை வலித்தீர்க்கும் ஊசியின் மருந்தை அவர் கவிதையை வாசிக்கும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஏற்றுகிறது. இப்படியான கவிதைகள் தமிழகத்தில் வளரும்போது, வரும்போது கவிதையின் தளத்தை யாராலும் கட்டுப்படுத்தமுடியாது. அதன் போராட்ட குணத்தை முடக்கிவிடமுடியாது. கவிதையின் உண்மையான உணர்வை புரிந்துகொள்ளும்படியாக கவிதை படைக்கிறார். உண்மையான பொருள் மறையாமல் வைக்கிறார். அதன் மறைபொருளை பலதளங்களில் ஊடாடவிடுகிறார். மெனக்கெட்டு வார்த்தைகளை கொக்கிபோட்டு இழுத்துவரவில்லை. அதனால் வாசகனாக நான் அவர் கவிதை ருசித்து, ஒரு போராளியின் குணத்தை எனக்குள் ஊடுருவிக்கொள்ள செய்கிறேன் .
குறிப்பு:
கவிதையின் வீரியத்தை இளைஞர்களின் பார்வைக்கு வைக்கவே இதை தெரிவுசெய்தேன். இது வாசகனாகிய நான் வாசகனுக்கு அடையாளப் படுத்துவதற்கான முயற்சிதான். நான் கவிதையில் தேர்ச்சியைக் கடந்தவன் அல்ல. முயன்றுகொண்டே இருப்பவன்.
ஜே டி
2 comments:
ம.பு.கவிதைகள் கவிதைகளே அல்ல.வரிகளை கோர்த்து போல் உள்ள எழுத்துக்கள்.எந்த் உணர்வையும் தராத வரிகள்.புத்தக சர்வாதிகாரியின் முகமே எனக்கு தெரிகிறது.வனப்பேச்சிகளை வைத்து ஆட்டம் ஆடியவர்கள் அடுத்த ஆட்டத்திற்கு தயார் செய்கிறார்கள்.உயிர்மையின் பக்கங்களை மட்டுமே ரொப்புகிறது.கசடறவை கிழித்து அனுப்பி தனக்கு மலச்சிக்கல் என்பதை தெளிவு படுத்தி,கவிதை தெளிவை மறந்தவர்
எனக்கும் ஆதங்கம் உண்டு நண்பரே, ஆனால் அவர் கவிதை எழுப்புகிற விரிந்த அர்த்தங்களை எனக்குள் மறைத்துவிட முடியவில்லை. அப்படி செய்வது நல்ல படைப்பை தன் சுயத்திற்காக வேண்டுமென்றே குறைசொல்வதுபோல் தோன்றுகிறது.
Post a Comment