Friday, February 21, 2014

விமர்சனம்,



வெள்ளையானை 4                        ஜெயமோகன்

//பேயுருவங்கள் போன்ற மனிதர்கள். கல்லறை திறந்து கிளம்பி வருபவர்கள் போல பாதி மட்கிய உடல்கள்// தற்சமயம் இந்த வார்த்தைகளை புகழ்ச்சி வார்த்தைகளாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நான் வேண்டுமென்றே உழைப்பாளி மக்களின் சார்பாக நின்று மோசமான வார்த்தைகளாகத் தேடித்தருவதாகக்கூடத் தோன்றும். ஒன்றிரண்டு இடங்களில் குழந்தைகளைக் குறிப்பிடும்போது மட்டும் ஆசிரியரின் பெருந்தன்மையால் இலக்கியத்தன்மை வெளிப்படும். மற்றபடி கடைநிலை மக்களை மேற்குறிப்பிட்டபடிதான் பெரும்பகுதி நாவல் பேசுகிறது.

அக்கால மதராஸப்பட்டினத்தைச் சுற்றி புற நகர் இடங்களின் கோரைப்பாய் தயாரிப்புக்காக விதைக்காமல் அறுக்கும் பயிர்களாக கோரைகள் ஏரிகளில் பரந்துகிடந்ததும், அறுப்பதும்  உள்ளூர் தொழில்வளாகம்போல் ஏரிகளே இருந்ததும் உணரமுடிகிறது.

ஏய்டன் ஏரிப்பகுதிகளைப் பார்க்கும்படியும், அதில் குடியிருக்கும் மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காகவும் காத்தவராயனை உடன் அழைத்துச்செல்கிறார். ஏய்டன், காத்தவராயன் ஒரு பக்கமும். குப்பத்தின் ஒருசில மனிதர்கள் எதிரிலும் நிற்கிறார்கள்.  ஏய்டன்  ‘நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில்கேட்டுச்சொல்‘ என்று பணிக்கிறார். ஆரம்பத்தில் காத்தவராயன் ஒன்றிரண்டு வார்த்தைகளை மொழிபெயர்த்துச் சொல்வார். தடாலென்று காத்தவராயன் வாயை முடக்கிவிட்டு ஆசிரியர் உதவியுடன் ஏய்டன், குப்பத்தின் மக்களின் மொழி தெரிந்தவர்போல் நேரடியாக பேசத்தொடங்கிவிடுகிறார். காத்தவராயன் வாயை முடக்கி ஏய்டன் சாயலாக ஆசிரியர் பேசவேண்டிய காரணம் என்ன? 

நாவலில் வருகின்ற இரண்டு நபர்களின் தன்மைக்குறித்து பார்க்கவேண்டியிருக்கிறது. நாவல் வெளியில் அவர்கள் செயல் எப்படியிருக்கிறது. ஆனால் அவர்கள் இயல்பைக்குறித்து ஆசிரியர் வைக்கிற ஆய்வு சரியானதா? உள்நோக்கம் இல்லையா? அறம் என்பது, இருப்பவன் இல்லாதவன் காசுக்கு ஏற்றபடி கூத்தாடுவதா? நீங்கள்தான் சொல்லவேண்டும்.

//காத்தவராயனைப் போன்றவர்கள் நடைமுறைவாதிகள். அன்றாட யதார்த்தத்திற்கு அப்பால் பார்வையை விரித்துக்கொள்ளாதவர்கள்// என்று ஏய்டன் சொல்லுவதுபோல் வருகிறது. ஆசிரியரின் கட்டுக்கோப்பை மீறி தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் நாவலின் பாத்திரமான ஏய்டன் நேரடியாக பேசுகிற பல இடங்களில் காத்தவராயன் அறிவுத்திறமையை மெச்சி பேசி இருக்கிறார். அவர் மீது மரியாதை இருந்ததால்தான் தன் அரண்மனையில் தனக்குச் சமமான இருக்கையில் அமரச்செய்து பேசிய நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கிறது. மேலும் காத்தவராயன் ஏய்டனுடனான பேச்சில் //பிரிட்டீஷ்  ஆட்சி என்பதே அதிகாரிகளும், பண்ணை உரிமையாளர்களும், குத்தகைதாரர்களும் சேர்ந்து அடிக்கும் ஒரு மாபெரும் கூட்டுக்கொள்ளை மட்டுந்தானே// 

//1. இந்திய முதலாளிகள் எந்தக்கொடுமைக்கும் அஞ்சாதவர்கள்.
 2. அமெரிக்கர்கள் கெட்டபேருக்கு பயப்படுவார்கள். ஆகவே நேரடியாக
    கொடுமைகளைச் செய்ய இவர்கள் துணியமாட்டார்கள்.
  3. இந்தியாவின் உயர் சாதியினதைவிட மிகமிக மேலான மனசாட்சியும், பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர்கள்//  என்று காத்தவராயன் ஒரு பரந்துபட்ட (நாடுகள் அளவில்) விஷயத்தை ஏய்டனுடன் பல இடங்களில் பேசியிருக்கிற நிலையில், காத்தவராயனை நடைமுறைவாதி யதார்த்தத்துக்கு அப்பால் பார்வையை விரித்துக்கொள்ளாதவர் என்பது யாருடைய குரலாக இருக்கும்.

ஒருவேளை காத்தவராயன் உள்ளூர்காரர்களைத் தாழ்வாகவும், வெளியூர்காரரை உயர்த்தி பேசியிருக்கலாம். அப்படி அவர் யோசித்ததற்கான காரணம் எதன்மூலம் வந்தது.

ஜெயமோகன் என்கிற ஆளுமையின் சமீபத்திய பல தொகுப்புகளை வாசித்து நண்பர்களுடன் பேசியிருக்கிறோம். ஆனால், இந்த நாவலை ஏதாவது நிர்பந்தத்தின் அடிப்படையில் எழுதினாரா தெரியவில்லை. நாவல் அங்கங்கே மேலும் நகரமுடியாமல் நிற்கிறது. அங்கு நாவலுக்கு ஒரு அபத்தமான  வாக்கியம் தேவைப்படுகிறது. அந்த இணைப்பு வாக்கியத்தைக் கொடுத்ததும்  நாவல் வேகத்துடன் தொடர்கிறது. குறிப்பாக “தொப்பியை எடுத்து தலையை நீவிக்கொண்டான்“, “ஏய்டன் பெரு மூச்சுவிட்டான், பெரு மூச்சுடன் எழுந்தான்“ என்கிற வாக்கியம் மட்டும் நாவல் முழுக்க ஏறக்குறைய இருபது இடங்களில் வருகிறது, இவைகளே நாவலை தொடர்ந்து நகர்த்த துணையிருக்கும் இணைப்புச்சொல்லாக இருக்கிறது.….

அடுத்த பதிவோடு முடியும்

குறிப்பு- விமலாதித்த மாமல்லன் இப்பதிவைக் குறிப்பிட்டதற்கு நன்றி. நாவலில் இருந்து வெளியேச்சென்றால் அவரேக்கூடக் குட்டுவார் என்ற புரிதலும் இருக்கிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நியாயமற்ற காரணத்திற்காக இவ்வழியைப்  பின்பற்றுவதில்லை.
உண்மையிலேயே எனக்கு  ஜெயமோகனும் பிடித்தமான எழுத்தாளர்

டேனியல் 



.

Wednesday, February 12, 2014

விமர்சனம்,



வெள்ளையானை      ஜெயமோகன்  3

“நீ வைணவன் என்று சோன்னாய், ஆனால் காத்தவராயன் என்றால் சைவப்பெயர் இல்லையா?“ ஏய்டன் இந்தியாவிற்கு வந்து அதன் சூழல்களை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையில். இந்தியாவின் மத பேதங்களை அதன் பிரிவுகளை அவ்வளவு நுணுக்கமாக ஏய்டன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் காத்தவராயன் மீது சந்தர்ப்பவாதி என்ற பிம்பத்தை நிறுவ ஆசிரியரின் குரல் லேசாக சேந்திருக்கிறது என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

இந்திய பிரிட்டீஸ் அரசாங்கம் அடிமையாக வாய்த்த மக்களின் ரத்தத்தைக்குடிக்கிறது என்கிற விஷயத்தை ஏய்டன், மிக்கின்ஸீடம் ஆலோசிப்பார். அதற்கு மிக்கின்ஸ் “பறையர்களை எல்லாரும்தான் கொல்கிறார்கள்.“ என்று மிக லேசாக பிரச்சனையை பொதுப்படையாக்கிப் பேசுவான். அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்களின் வர்க்கத்தில் இந்திய ஒட்டுமொத்த மக்கள்மீதும் (சில வகையில் எற்றத்தாழ்வுகள் இருந்தாலும்) ‘இவர்கள் கறுப்பினத்தவர்கள்‘ என்கிறப் பொதுப்படையான கருத்தும், அவர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதே பிரதானம் என்ற சூழல் இருந்திருக்கிறது. அக்காலகட்டங்களில் மிக்கின்ஸ் இந்திய உயர் சாதியினருக்கும், செல்வந்தர்களுக்கும் பயந்து குறிப்பிட்ட விஷயத்தை பொதுப்படையாக்கிச்சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.  ஆனால் ஆசிரியர்தான் இந்திய உயர்சாதி, செல்வந்தர்கள், பறையர் மீதான தலையீட்டை மறைத்து அது மேலோட்டமான வியஷயம்போல பொதுப்படையாக கட்டமைக்கிறார்.

அடிமைப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவிட்டால் ''சொந்த சகோதரர்களையும், தாய்த் தந்தையர்களையும் துறந்து விடுகிறார்கள். அவர்களிடம் வறட்டு ஆணவம் தலைத்தூக்கிவிடுகிறது.“ என்கிற தர்கத்தை வைத்துச்செல்கிறார். அதில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், ‘எந்த இனக் குழுவிலிருந்து பெற்றோர்கள், அதிகமாக வெளியேத் துரத்தப்படுகிறார்கள். தன் சொந்த சகோதரனுக்கு சிறிதளவில் செலவுசெய்தப் பணத்தைக்கூட வட்டிக்கடன்போல கணக்குபோட்டு திருப்பிக்கொடுப்பது, அல்லது கேட்பது, எந்த சமூகத்தில் தற்போதும் இருக்கிறது‘ என்கிற புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் எல்லா மனிதனிடமும் இந்த மட்டமான புத்தி இருக்கிறது என்பது தெளிவாகிவிடும். இதில் பறையர்களிடம் மட்டுமே இக்குணம் சிறப்பம்சம் பெற்றிருக்கிறது என்பதுபோல கட்டமைப்பு ஆசிரியரின் புரிதல்.

பொதுவாக ஜெயமோகன் சாருக்கு அடித்தட்டு மக்களின் பிம்பங்களை நுணுக்கமாக, ரசனைத்தன்மையுடன் உள்வாங்குதல் கைக்கூடி வருவதில்லை. நாவலில் வருகின்ற அடிமைப்பட்ட சிறு பிள்ளைகளை வர்ணிக்கும்போது  ‘நிர்வாணம், அழுக்கு, புண், கறுப்பு, நாற்றம்‘ இப்படியான பிம்பங்களைத்தான் தொடர்ந்து வைக்கிறார். இந்த பிம்பத்தை, சாதாரண, மனிதனை நேசிக்கத்தெரியாத  மேட்டுக்குடி மனிதன்கூட இயல்பாக சொல்லிவிடுவான். அதைத்தாண்டி படைப்பாளியாக அந்தப்பிள்ளைகளின் மூக்கு எந்த விதத்தில் ஒழுகிக்கொண்டு இருக்கிறது. ஒழுகிய மூக்கை இடக்கையாளும், வலக்கையாளும் தேத்துத்தேய்த்து கன்னத்தில் ஏடு கட்டிக்கிடக்கும் கோணத்தின் நிலை என்ன? தலைமயிர்கள் சுருட்டையா? சேறு, சகதியில் விளையாடிய கால்களின் முழங்கால்வரை சேற்றின் வெடிப்பு இருந்ததா‘ போன்ற சாதாரண அவதானிப்புக்கூட கிடையாது.

ஆசிரியர்தான் பாத்திரத்தைப் படைக்கிறவன். எல்லாவற்றுக்குள்ளும் அவன் ஆளுமை இருக்கவேண்டும். ஆனால், அவனவனுக்குள், (பாத்திரங்கள்) அதற்குள் சென்று, அவனவனாக, அவைகளாகவே வெளியே வரவேண்டும் என்பது ஆசிரியருக்குத் தெரியாததல்ல. ஆனால், ஜெயமோகன் சார் இந்நாவலில் கணக்கற்ற இடங்களில் மிக வெளிப்படையாக தானே பாத்திரமாகவும், ஆசிரியராகவும் மாறிமாறி வருகிறார். ஏய்டன் வாசகம் “பிரமாண்டமான வெடிமருந்து மாலையுடன் வா“ நன்றாக கவனிக்கவேண்டும் இது நிச்யமாக ஏய்டனின் மூளையில் உதித்த வாசகமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் cபெருமந்தூர் நிகழ்வுக்கு முன் உலகின் எந்த மூலைபோராளிக்கும் மாலைபோட்டு அழிவை ஏற்படுத்துகிற உத்தி தெரிந்திருக்கவில்லை.

ஏய்டன் பஞ்சத்தை நேரில் கண்டு ஆய்வுசெய்ய செங்கல்பட்டு போகிறார். உள்ளூர் தாசில்தாரை பார்க்கவேண்டும் என்கிறார்.  “தாசில்தார் நீண்ட நாமம் போட்டிருந்த பிராமணர் வந்ததும்“ இருவரும் பேசுகிறார்கள். ஏய்டன் இங்கேத் தங்கவேண்டும் இடம் ஆய்த்தப்படுத்துங்கள் என்று சொல்லாத பட்சத்திலேயே உள்ளூர் தாசில்தார் “இன்ஸ்பெக்ஷன் பங்ளாவில் இன்னொரு தாசில்தார், அவர் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அவரை உடனே காலி செய்யச்சொல்லிவிடுகிறேன். நீங்க தங்கி இளைப்பாருங்க“ என்று தாமாகவே சொல்லுகிறார். 

குருட்டுத்தனமாக அதிகார மையங்களுக்கு அடிபணிந்து போவதால்தான். குடும்பத்துடன் குடியிருக்கும் தன் சக பணியாளனை நிர்தாட்சணையாக உடனே காலிசெய்துவிடுகிற யோசனையை உள்ளூர் தாசில்தார் முன்மொழிகிறார். ….

மேலும் பார்க்கலாம்….

டேனியல்

(குறிப்பு- இப்பமட்டுமென்ன வாய்தாம். வாதாடுவதில் நியாயமே இருந்தாலும். வாதாடும் வாய் எது? அதைப்பொறுத்துதானே எல்லாம் நடக்கிறது)

Monday, February 3, 2014

விமர்சனம் 2

வெள்ளையானை                                                      ஜெயமோகன்
……………………….
குறிப்பு-
என் இனமக்கள் எல்லாரும் புனிதமானவர்கள், உயர்சாதி மொத்தமும் வக்கிரம் புடிச்சவர்கள் என்று எப்போதும் ஒற்றைக்காலில் நிற்கமாட்டேன். இரண்டிலும், இரண்டும் கலந்து இருக்கிறது. இரண்டாலும் நான் தொடர்ந்து மனபலவீனம் அடைந்திருக்கிறேன். எனக்கு பிராமணியத்திலும் நல்ல நண்பர்கள் நெருக்கமாகவும், சற்று தொலைவிலும் இருக்கிறார்கள். என்சமூகத்தில்  பக்கத்திலும், நெருக்கமாகவும் பகைவர்களும், சொந்தங்களும் இருக்கிறார்கள். இத்தன்மையையுடன்தான் என்னுடைய படைப்பும், பிறரின் படைப்புகளையும் அணுகுகிறேன். இதில் விருபற்றவர்கள் என்னை நிராகரித்துபோகலாம்.
……………………………………………………………..

“சுளீரென்று சாட்டை நாக்கு எழுன்று வந்து மெல்லிய சதையை
 நக்கிச் சென்றதுபோல உணர்ந்தான் ஏய்டன்“ இந்த வாசகம் ஏய்டனும், காத்தவராயனும் சந்தித்துக்கொள்கிற முதல் உரையாடலில் வருகிறது. காத்தவராயன், வெள்ளை அடக்குமுறையாளரை நம்புகிற அளவுக்கு உள்ளூர் கங்காணிகளையும், பலம் வாய்ந்தவர்களையும் நம்பாமல் தாங்கள் படும் இன்னல்களை ஏய்டனிடம் வைக்கிற சூழலில். ஆசிரியர் ஏய்டன் சார்பாக நின்று வைக்கிற மிக அற்புதமான உவமானம். ஆனால், இந்த வாசகம் காத்தவராயனின் நியாமான வாதத்திற்கு எந்தவிதத்திலும் வலு சேர்க்கவில்லை. மாறாக நன்மை செய்ய எத்தனிப்பவர்கள் முன் எப்போதுமே துடுக்குத்தனமாக பேசுகிறவர் என்ற தொனியைத்தான் அவருக்கு உடுத்திவிடுகிறது.

ஏய்டன் கடற்கரை சாலையில் குதிரையில் போகிறார். ஒரு இடத்தில் காத்தவராயன் சந்திக்கிறார். அதற்கு முன் இருவரும் சந்தித்தது இல்லை. இருந்தாலும் ஆசிரியர் தயவால் காத்தவராயன் மீது ஏய்டனுக்கு நன் மதிப்பு கூடுகிறது. அரண்மனைக்கு அழைத்துச்செல்கிறார். ஏயடன் இருக்கையில் அமரச்சொல்கிறார். உரையாடல் தொடர்கிறது.  வாசகன் பாத்திரங்களின் வழியாக இந்நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை உணர்ந்துகொள்வதற்கோ, அல்லது காட்சிப்படுத்தல் மூலமாக சூழலை ஊகித்துக்கொள்ளவோ வாய்ப்புத்தரப் படவேயில்லை. இந்த இடம் மட்டுமல்ல நாவலில் அநேகமான இடங்களில் அப்படித்தான் இருக்கிறது. ஏன் இப்படி அமைந்துவிட்டது என்று நானே யோசித்தேன். என் அறிவுக்கு எட்டியது நாவல் நடக்கும் காலகட்டத்தின் ஆவணங்களை அதிக அளவில் அலசி ஆராயாமல் போயிருக்கலாம், இன்னொன்று கடந்தகால கடைநிலை மக்களின் உணர்வுகளில் அனுபவப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொள்ளாத நிலை இருக்கலாம். அல்லது அங்கங்கு கிடைத்தத் தகவல்களை வைத்துக்கொண்டு அதிவேகமாக நிகழ்த்தப்பட்டதாக இருக்கலாம், என்பதாகத்தான் என்னால் ஊகிக்கமுடிகிறது.

ஏய்டனின் எதிர் இருக்கையில் காத்தவராயன் அமரும்போது ஆசிரியர் ‘பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் இருக்கையில் அமரும்போது நெளிவார்கள், இருக்கை நுனியில் தங்களை ஒடுக்கிக்கொள்வார்கள் எதிரில் இருப்பவர்கள் தங்களை மெச்சவேண்டும் என்று நினைப்பார்கள் என்கிறத் தத்துவங்களை தாராளமாக சொல்லுவார். நான் கேட்கிறேன் பல இடங்களில் கங்காணிகள் வருகிறார்கள், வியாபாரிகள் வருகிறார்கள் வெள்ளையர் எதிரில் அமரும் சந்தர்ப்பம் நாவலில் பலநேரம் வாய்க்கிறது. அப்போதெல்லாம் இந்தத் தத்துவங்கள் உதிர்த்தால் என்ன? காத்தவராயன் இருக்கையில் அமரும்போது அந்தத் தத்துவத்தை உதிர்ப்பதால், பஞ்சத்தில் செத்த மக்களின் உள்ளதுக்கங்களை, அவர்களின் பரிதாபமான சூழல்களை ஆசிரியர் உணர்ந்துகொள்ளமுடியவில்லை. இருக்காய்

இருக்கையில் அமரும் தத்துவத்தை பொதுவாக எடுத்துக்கொண்டாலும் ஆசிரியர் ஏன் ஒற்றைத்தன்மையுடன் தூக்கிப்பிடிக்கவேண்டும். மனதில் செருக்கு, எதிர் இருப்பவர்களை எப்போதும் துச்சமாக கருதுபவன். பிறரை மதியாதவன். நானே சிந்தனைப் பிரிதிநிதி.  ஆளும் தகுதி எல்லாம் எனக்கு  என்கிற மேட்டிமையினால்கூட அத்தன்மை வர வாய்ப்பிருக்கிறது அல்லவா? அப்படி இருக்க அமருவதற்கே இப்பேர்ப்பட்ட தத்துவத்தை ஒரு பிரிவுக்கு உயர்த்தியும், ஒரு பிரிவுக்கு தாழ்த்தியும் சுமத்துவது எந்தவகையில் ஏற்புடையது?……

மேலும் பார்க்கலாம்…..

டேனியல்

Sunday, February 2, 2014

விமர்சனம்

வெள்ளையானை                                                                    ஜெயமோகன்

இந்த நாவலைக்குறித்து எனக்குள் எழுகிற கேள்விகளை ஏன் விமர்சனமாக வைக்கவேண்டும். அதனால் ஆகப்போவது எதுவுமில்லை என்று யோசித்தேன். எழுதிக்கொண்டிருக்கிற இலக்கியங்களால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடுகிறது. வேளிங்காத்தான் முள்ளுகளுடன்தான் விளைகிறது. வலுத்தவனின் அதிகாரம் சமூக நீதியாகத்தான் சற்றும் தொய்வில்லாமல் நடைமுறையில் தொடர்கிறது. எல்லாமே அதனதன் த...ொனியில், அதனதன் இடத்தில் தடையற்றதாய் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்ற வார்த்தைகளை ஆருதலாக எடுத்துக்கொண்டாலும், இந்நாவலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் மருந்து கட்டுதல் என்பது வெளிப்படையான பார்வைக்குள் இருந்தாலும், அம்மக்களைக் கீழ்மைபடுத்துதலும் மறைமுகமாக இருப்பதால் அதை எனக்குத்தெரிந்த வகையில் வெளிபடுத்தாமல் இருக்கமுடியவில்லை.

ஏய்டன் என்ற அயர்லாந்து வாலிபர் மதராஸப்பட்டினத்திற்கு ராணுவ தளபதியாக வருகிறார். வந்த சொற்ப நாட்களிலேயே நாட்டின் அடித்தட்டு மக்கள் மீது கரிசனை வருகிறது. அந்த வாலிபர் ஆங்கிலேயப்படையின் கேப்டன் என்பதின் வீரியம் குறைவாகவே இருக்கிறது. மாறாக ஜெயமோகன் என்ற படைப்பாளரின் மென்மையே அப்பாத்திரம் முழுக்க ஒளிர்கிறது. கேப்டனின் ஆளுகைக்குக்கீழ் எத்தனை படைப் பிரிவு, அப்பதவிக்கான அதிகாரத்தின் வலிமை என்பதெல்லாம் மேலோட்டமாகக்கூட சொல்லத்தவறிவிட்டது என்றே நினைக்கிறேன்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தங்கள் சுகபோக வாழ்விற்காக பஞ்சத்தில் சாகும் மக்களை மேலும் கொடுமைப்படுத்துகிறார்கள். அதற்கு உள்ளூர் நிலச்சுவாண்தாரர்கள், மொத்தமாக வணிகம் செய்யும் செல்வந்தர்கள், ஆங்கிலேய அதிகாரங்களுக்கு நெருக்கமாக இருந்த பிராமணர்கள் அனைவருமே சேர்ந்து பஞ்சத்தில் அழிந்துகொண்டிருந்த மக்களைக் காக்கிறார்களா? அல்லது ராஜபக்ஷேவின் நவ நாகரீக இனவழிப்பை 1887லேயே தமிழகத்தில் செய்தார்களா? என்பதையே நாவல் சித்தரிக்கிறது. அதில் ஆசிரியரின் பங்கு எந்தளவுக்கு வெள்ளை நாகரீகத்தோடு இயந்து இருக்கிறது. லட்ச லட்சமாக பஞ்சத்தில் அழிந்தவர்களுக்காக ஆசிரியரின் நீதியுணர்ச்சி என்ன? தொண்நூறு விழுக்காடு ஆங்கிலேயரின் கலாச்சாரச்சூழல் எழுத்துதொனியில் வராமல், ஜெயமோகனைத்தவிர வேறு யாராவது எழுதினால் அதை கலைப்படைப்பாக ஏற்றுக்கொள்வார்களா?

ஏய்டனின் பேச்சுமொழியில் “டொரசாமி“ என்கிற ஒரே ஒரு வார்த்தையைத்தவிர (ஆங்கிலம் தெரியாது என்பதால் ஷெல்லியின் கவிதைகள் மற்றும் ஏய்டனின் ஓரிரு ஆங்கில வாசகத்தை விட்டுவிட்டேன்) நாவல் முழக்க ஆசிரியரின் தொனியே ஓங்கியிருக்கிறதே அது சரியா? ஏய்டனின் மன வெளிப்பாட்டை தன் இயல்போடு, நீதியுணர்வையும் மிக நீளமாக கட்டமைக்கிற ஆசிரியர். காத்தவராயனுக்கு அவர் பேச்சை மட்டுமே மிக சுருக்கமாக வைப்பது கடந்த காலத்தில் காத்தவராயனின் உண்மை நிலைதானா?

வெள்ளையானை வெளிப்படையாக ஐஸ்கட்டி, மறைமுகமாக வெள்ளை நிற ஆட்சியாளர்கள் என்பதாகத் தெரிகிறது அது ஒருவகையில் மதிப்புக்குறியதாகத் தென்படுவதால் கலைநயத்தின் குறியீடு என்றேகூட வைத்துக்கொள்ளலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களையே உள் அட்டையில் கோரம் நிறைந்த நாய்களாகச் சித்தரிப்பது சரிதானா?....

பிறகு பார்க்கலாம்...

டேனியல்