Wednesday, October 2, 2013

சிறுகதை,



                             
                              நோக்கம்

இருபத்தியைந்து வருஷங்களுக்குப்பிறகு அத்தை மாமாவின் பிள்ளைகள் வந்திருக்கிறார்கள். தென்னேரியில்தான் அத்தைக்கு வாழ்க்கை அமைந்தது. நாங்கள் சிறுவயதாக இருக்கிறபோது, அத்தை, மாமாவுடன் வருவார்கள். மாமா கொஞ்சம் கறுப்புதான் ஆனால் நல்ல உயரம். மிலிட்டரியில் வேலைசெய்ததாக சொல்லிக் கேட்டஞாபகம் உண்டு. அத்தைக்கு அப்பாவுடன் சேர்த்து மூன்று அண்ணன்கள். தென்னேரி அத்தை வராங்கனா எதோ, எலிசபெத் ராணி வராமாதிரி அண்ணன்கள் வீடு தயாராகிவிடும். கிராமத்தில் அத்தையின் வயதொத்த ஆண்களும், பெண்களும் இருந்தார்கள். முடிந்தளவு நினைவுக்கூட்டிப் பார்க்கின்றேன். அத்தையின் இளம்வயதை கேலிக் கிண்டல், காதல்ஈர்ப்பு சார்ந்த வார்த்தைகளை எந்த நபர்களும் சொல்லிக் கேட்கவில்லை. அத்தைக்கு அந்தமாதிரியான அனுபவங்கள் கிடைத்திருக்க வாய்ப்புக் குறைவுதான். எனக்கு ஏறக்குறைய பதிநாலு வயது இருக்கும்போது அதிக நாள் இடைவெளியில் அத்தை பல முறை வீட்டுக்கு வந்தது நினைவிருக்கிறது.
அந்த முகத்தை நான் தரிசித்து இருக்கிறேன். இப்போதும்கூட அந்த முகத்தின் முழு வடிவமும் ஞாபகம் இருக்கிறது. ஏன்? அத்தையை விளையாட்டுக்குகூட கிண்டல் செய்து, யாருமே பேசவில்லை என்று இப்போது நினைக்கிறபோது. தெளிவாகப்புரிகிறது. உண்மையிலேயே அத்தையின் முகத்தையோ, கண்களையோப் பார்க்கும்போது, ஒரு மலிவான காதல் ஈர்ப்பைத் தூண்டுகிற விதமாக இருக்காது. மாறாக அத்தையின் முகத்தில் கண்கள் மிதப்பதுபோன்று இருக்கும். அக்கண்களால்தான் முகம் அத்தனை மென்மையாகத்தெரியும்.  இப்படி தெய்வீகம் கலந்த அமைதி ஒளிர்ந்ததால், அக்கால வாலிபர்களுக்கு ஒருவேளை பயம் இருந்திருக்கலாம். கடைசியாக அத்தையை தென்னேரியில் தலைநிறைய பூவும், கைநிறைய வளையல்களும் அணிந்து  மாமா உடலுக்கு முன்னால் அழுத முகம்தான் இன்னும் நினைவுக்குள் இருக்கிறது.

அதன்பிறகு பிள்ளைகள் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும். அத்தை பிள்ளைகளுடன் இருக்கிறார் என்றும், காலப்போக்கில் அத்தை இறந்துவிட்டார் என்றும் எல்லாம் செவி வழி செய்தியாகத்தான் இருந்தது. தொடர்பு சாதனங்கள் அற்ற நிலையில் அத்தை பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள். யார் இருக்கிறார்கள் எதுவுமே தெரியாமல் போனது.

இரண்டு வாரத்திற்கு முன் அக்காவிற்கு தற்செயலாக யார்மூலமாகவோ அத்தை மகன்களின் தொடர்பு எண் கிடைத்திருக்கிறது.  அதிலிருந்து குடும்பத்தில் ஒவ்வொருவரும் இவ்வளவு நாள் எங்கிருந்தீங்க எங்களைத் தொடர்பற்றவர்களாக விட்டுவிட்டீர்களே என்றெல்லாம் கேட்டு அத்தை மகன்களும், எங்கள் குடும்பமும் கைபேசித் தொடர்பெல்லைக்குள்ளாகவே இருந்தார்கள்.

இன்று காலையில்தான் பெரிப்பாவின் மூத்த மகன் இறந்துவிட்டார். அத்தை மகன்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது. இருவர் வந்திருந்தார்கள். பெரியப்பா மகன் பெரிய அண்ணன் திடீரென்று இறந்தது அதிற்சியாகத்தான் இருந்தது. பெரியப்பா இறந்து மூன்று வருஷங்கள் முடியவில்லை. மூன்று மாதங்கள் முடிந்திருக்கிறது, பெரியப்பாவின் சின்ன மகன் இறந்து. தம்பி இறந்த நிகழ்வில் அவர் முகத்தையேப் பார்த்து நின்றிருந்தவர்தான் தற்போது இறந்துவிட்டார். தம்பியின் பிணத்தைப் பார்க்கும்போது இவ்வளவு சீக்கிரம் ஏன் சாவு வரணும், நினைத்திருக்கக்கூடும். இப்போது  பெரிய அண்ணனை, உயிரோடு இருக்கிறவர்கள் நினைக்கவேண்டியிருக்கு. மனித வாழ்வியலில் தேய்மானம் என்கிற நாட்களைக்கடந்து, இறுதி சரக்கிருப்பு உயிர் ஒன்றதானே? ஏன் மரணமே நிகழக்கூடாதா? இறந்த உடலுக்கு செயற்கையாக உயிர் ஏற்றப்படுகிற நாள் வரும். அந்த நாளில் காட்டை அழிப்பதுபோல் பலவான், பலம் குன்றிய மனித வாழ்விடங்களை அழித்து தனக்காக புதிய குடியிருப்புகளைக் கட்டமைக்கும் நிகழ்வு நடக்காமல் இருக்கப் போவதில்லை. அதைவிட இயற்கை மரணம் ஒரு அற்புதம்தான். என்றெல்லாம் மன ஓட்டத்தில் வந்துகொண்டே இருந்தது.  

பெரியப்பாவுக்கும், பெரியம்மாவுக்கும், சின்ன பிள்ளைதான் ரொம்ப நல்லவன் என்ற பிடிவாதத்தை கடைசிவரைக் கைவிட்டதேயில்லை. தகப்பன் பிள்ளைகளிடம் வித்தியாசம் காட்ட வாய்ப்பிருக்கிறதா? இல்லை என்றும் நிரூபிக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தில் பெரிய அண்ணன், குடும்பத்திற்கு மிகவும் பொறுப்பானவர்தான். சோம்பேரி இல்லை. அந்தக்காலத்திலேயே. ட்ராக்ட்டர் ஓட்டுவார். நாய்க்கர்மார்களின் வாகனத்தை முதன் முதலில் தன் காலுக்குக்கீழ் மிதித்துக் கடத்தியவர் பெரிய அண்ணன் ஒருவர்தான். ஆண்டைகளுக்கு வாகனம் வாங்க பணம் இருந்தது. அதை ஓட்டுகிற திறமை அக்காலகட்டத்தில் அண்ணனிடம்தான் இருந்தது. அண்ணன் எங்கள் வீடுகளின் ஓரத்தில் இருந்த களத்துமேட்டில், ட்ராக்ட்டரால் கதிர்கட்டுகளை சுற்றி சுற்றி மையச்செய்வார். பின்னாக சுற்றும்போது ரஜினியின் ஸ்டயில் நாபகம் வராமல் இருக்காது.

அண்ணன் எவ்வளவு பெரிய ஆள். ஆண்டைகளின் வாகனத்தையே ஆளுகைச் செய்கிறாரே என்று ஆச்சரியமாக இருக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்தவரைத்தான் பெரியப்பா தன் வீட்டிலேயே இருக்கக்கூடாது என்றார். அப்படி என்ன தவறுசெய்துவிட்டார் என்று யோசிக்கும்போது, அதே கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்ததுதான். பெரியப்பாவும் ரொம்ப கெட்டவர் அல்ல. அண்ணன் அந்த பெண்தான் வேணும் பிடிவாதமாக இருந்ததால், கடமைக்காக காதலித்தவரையே கட்டிவைத்து என்வீட்டில் இருக்கக்கூடாது என்று வெளியே அனுப்பிவிட்டார். அண்ணி மிகச் சாமர்த்தியமாக அக்கிராமத்தில் பிழைத்தார்கள். அண்ணன் அப்பாவியாக இருந்தாலும். அண்ணியின் கையடக்கத்தில் நிறைவான வாழ்வை வாழ்ந்தார். எப்போதோ ஒரு முறை அண்ணியை, நாய்க்கர் ஆளுடன் இணைத்தப் பேச்சு கிராமத்தில் வளம் வந்தபோது,  இருந்த இரண்டுத்தெருவுக்கும் துரத்தித் துரத்தி அடித்தார் என்பதை இன்னும் மறக்கமுடியவில்லை. இடையில் கிராம உதவியாளராகவும் வேலையில் சேர்ந்தார். மூன்று பெண்பிள்ளைகள். ஒரு பையன். பெண்கள் எலோரும் குடும்பமாக கரை சேர்ந்துவிட்டார்கள். பையனுயும் கவலைப்படுகிற நிலையில் இல்லை. ஐம்பத்திஆறு வயது பூர்த்திசெய்த நிலையில்தான் இறந்துவிட்டார்.

பெரியப்பாவின் குடும்பத்தில், குடும்பத்தலைவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளைக்காண்பாய் என்ற ஆசீர்வாதம் ஏனோ குறைவாகவே அரங்கேறியிருக்கிறது. கெட்டவன், நல்லவன் என்கிற தகுதியுடன் ஒருவன் இறந்து போகிறபோது, பிணத்தை தத்தம் செய்ய வருகிற மக்களின் மனநிலையில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. அந்த வேறுபாட்டு மனநிலை சவம் எடுப்பதில் அல்லது சடங்கு செய்வதில் குறைவும், நிறைவுமாக வெளிப்படையாகவோ, சடங்குகள் மூலமாகவோ சூசகமாக நிறைவேறுகிறது. (1,“அட, சர்ச்சிக்குள்ளலாம் வேணாம் தூக்குங்கப்பா பொய்தாட போய் சேரட்டும்“ 2, “யோ. யாருயா அது. என் மாமான் கையால, தங்கச்சிக்கு மாலை போட்டதுக்கு அப்புறந்தான் ஜெபம் தொடங்கணும்“)  

அத்தை மகன்கள்  ராஜா, ராபர்ட் வந்திருந்தார்கள். ராஜா பெரியவர், ராபர்ட் சின்னவர். எங்கள் வீட்டில், அண்ணன் இறந்தது பெரிய மனம் வருத்தம் இருந்தது. ஆனால், ரொம்ப காலங்கடந்து அத்தையின் வாரிசுகள் வந்திருப்பதில் பிள்ளைகளைத் தவிர்த்து பெரியவர்கள் எல்லோருக்கும் சந்தோசமும் இருந்தது. அக்கா சாம்பார், ரசம், பொரியல் என்று செய்துத் தள்ளிருந்தாள். இதுவே இறப்பு இல்லாத நாட்களில் வந்திருந்தால் எப்படியும் இரண்டு நாட்டுக்கோழியாவது தன் உயிரைக்கொடுத்திருக்கும். அக்கா கோழிக்குழம்பு வைத்தாலோ, கிரேவியாக செய்தாலோ  அப்படியே கண்ணை மூடி ருசிக்கவைக்கும். கிரேவியாக இருக்கும்போது லேசாக சிவந்த நிறத்தில் கறுப்பும் கலந்து மிணுமிணுப்பாய், லேசாக எண்ணையில் முழ்கியிருக்கும் பீசை எடுத்து வாயில் வைத்து மெள்ளும்போது ,அடடா… ஆ..ஆ, என்று சொல்லவைக்கும். அந்த ருசியை பேராய அளவிலும், பாஸ்ட்டரேட் அளவிலும் அறியாத முக்கியஸ்த்தர்கள் இருக்கவே முடியாது. உங்களுக்கு சந்தேகமிருந்தால் அல்லது சாப்பிடவேண்டும் என்ற ஆவல் இருந்தால் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்கள், வாசகர்கள் யார்வேண்டு மென்றாலும் வரலாம். பொதுமக்கள் வேண்டாம் ஏன்னா நாங்களும் சமாளிக்கணும் இல்ல. விருந்து பரிமாரப்படும். அதற்காக நான் எழுதும் கதைகளைத் தூக்கிவிடவேண்டும், விமர்சனத்தில் சலுகை அளிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுமே என்று யோசிக்க வேண்டாம். முடிந்தளவு எந்தசாதிக்கும் நாங்கள் மரியாதைக்கொடுப்போம். முடியாத பட்சமாக இருந்தாலும், நீங்கள் விருந்துக்கு வரும்போதாவது சாதியின் மேல் அங்கியைக் கயட்டிவிட்டு வரவேண்டும். உங்கள் வயிறு மன நிறைவுடன் நிறைய ஏதுவாய் இருக்கும்.

அத்தை மகன்கள் சாவைப்பார்த்துவிட்டு வந்தார்கள். ராஜா, ராபர்ட் கண்கள் எதோ புதய தீவை சந்தித்ததுபோலவே ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தது. தாய்மாமன்  நிறைந்த வயதுடையவராய் கட்டிலில் படுத்திருந்தார். முன்னாடிச் சென்ற அக்கா, அப்பாவை எழுப்பி “உங்க தங்கச்சி புள்ளைங்க வந்திருக்கிறாங்க“ 

அப்பா மெல்ல விசும்பிக்கொண்டே எழுந்தார். “எப்பா. என் செல்வங்களே. இத்தனைக் காலம் எங்கிருந்தீங்க. வயசான மாமா இருக்கிறது தெரியுமா? இல்ல, அவங்கலாம் பூண்டத்துப்போயிருப்பாங்கனு வரலையா? ஏம்பா எங்களை எல்லாம் மறந்துட்டீங்க அழத்தொடங்கினார். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில்தான் அப்பா தான் தனிமை பட்டிருப்பதை வெளிப் படுத்துகின்றார். இத்தனைக்கும்  அவரின் சொற்களுக்கு வீட்டில், இன்னும் மரியாதை குறையவே இல்லை. இயல்பாகவே தன்னைப் பார்வையிட வருகின்றவர்களிடம் தன் உடல் நிலையைக்குறித்து பேசாமல் இருப்பதேயில்லை. அதைப்பார்க்கின்றபோது பேரப்பிள்ளைகள். “பாரேன், தாத்தா என்னென்ன ஆக்ஷன் பண்ணப்போறார்“ என்பார்கள். அவரின் உடல் என்னசெய்கிறதோ? பேரப்பிள்ளைகளுக்கு நிச்சயம் தெரியவாய்ப்பில்லை. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் ஓரவஞ்சனை டாக்டர்கள் “பெரியவரே உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கிறது. பிபிக்கு மட்டும் மாத்திரை மாத்தி எழுதியிருக்கிறேன்“ என்று சொல்லிவிடுகிறார்கள். அதோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. “வயசாகிடுச்சி இல்ல. காலுலாம் அப்படித்தான் வீங்குவதும் வாங்குவதுமா இருக்கும். நாமதான் பக்குவமா இருக்கணும்“ என்று சொல்லிவிடுகிறார்கள்.

எனக்குத்தான் கடவுள் புத்தியேக்கொடுக்க மறந்துட்டார். முந்தினவாரம் அப்பா ராஜாவிடம் கைபேசியில் பேசிவிட்டு என்னிடம் ஜாடையாகச் சொன்னார். “தங்கச்சி பசங்க, என்ன, நேர்ல பார்க்க வரும்போது, என்ன எதுனா நல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிம்போங்கப்பானு, கேட்கணும்“ என்றார்.

அப்பா என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்னு மரமண்டைக்கு தெரியறதால. “ஏம்பா, அவுங்க ஏதோக் காரணமாகக்கூட தற்போது உறவுமுறையை புதுப்பிக்க யோசித்திருக்கலாம். வந்ததும் அப்படிச் சொன்னா, அவங்களுக்கு சங்கடமாகக்கூட இருக்கும். அதெல்லாம் அவங்களக் கேட்காதீங்க. இப்ப நெலமைக்கு, உங்களுக்கு பசி எடுக்கல. ஒடம்பு ஒரு மாதிரி இருக்கிறது அதானே. இத ஒரு நோய்னு சொன்னா டாக்டர்கள் பழையபடிதான் சொல்வார்கள். அப்படி, ஆஸ்பத்திரிக்கு போகணும்னா லீவு வரட்டும், நாம வேற புதிய டாக்டராண்ட போவோம்“ என்று சொல்லியிருந்தேன். அதை நினைத்தோ என்னவோ உடல்நிலைக்குறித்து மேலோட்டமாகவே பேசினார். இருந்தாலும் அப்பாவிற்கு உள்ளூர எங்க நல்ல ஆஸ்பத்திரி இருக்குது. அங்கப்போய் பார்க்கலாம்.  நான் கூட்டிம்போரேன்னு யாராவது தேவத்தூதன் வாக்குபோல சொல்லுவார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது.

ராஜா, ராபர்ட் இருவருக்குமே யார் பேசினாலும் அதில் பெரிய அதிசயம் இருப்பதாக கருதினார்கள். இதற்குள் அறிமுகமான பொழுதில் சிறிய பிள்ளைகள்,முக்கியமான உறவாளிகள் என்பதை ஊகித்துக் கொண்டார்கள். ஒருவன் இரண்டு லிட்டர் குளிர்பாணம் வாங்கிவந்தான். இன்னும் சில சிறுசுகள் நான்தான் ஊத்துவேன். நான்தான் கொண்டுபோய்க் கொடுப்பேன் என்று போட்டி நடந்தது. பெரியப்பா பெண்கள்கூட சாவுவீட்டை விட்டு ராஜா, ராபர்ட்டை விசாரிக்க வந்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை விசாரித்தார்கள். ராஜாவின் முகத்தில் மாமாவின் சாயலும், அத்தையின் சாந்தமும் ஒன்றியிருந்தது. ஆனால் சற்று முதுமை அடைந்திருந்தது. ராபர்ட் முழுக்க அத்தையின் நிறத்தைப் பெற்றிருந்தார். அரை மணி நேரம் கடந்தது. விசாரிப்புகள் முடிந்ததும். ராபர்ட் பேசினார். “இந்த எடங்கள் எல்லாமே சுத்தமாக மாறிவிட்டிருக்கிறதே. அப்பெல்லாம். நம்ம வீட்டு பக்கத்திலே காவாய் இருக்கும். அதில் நெறைய தண்ணீர்போகும். அந்தக் காவா ஓரம் போனா அம்மா எங்களைப் புடிச்சி இழுத்துப்பாங்க. பக்கத்திலேயே வெளைச்சல் நெலங்களா இருக்கும்“ என்றார்

உடனே அக்கா எதிரில் இருந்த இடத்தைச் சொல்லி “இதுதான் அந்தக்கால்வாய். கால்வாக்கு அந்தப்பக்கம் இருப்பதெல்லாம் வெளைச்சல் இருந்த எடம்தான். இப்ப எல்லாம் வீடுகளாயிடுச்சி.“ என்றாள்.

நான் சற்று காற்றோட்டமாக வெளியே வந்தேன். பின்னாக ராபர்ட் வந்தார். என்னைவிட மூத்தவர் என்றாலும் சகஜமாகப் பேசத்தொடங்கனோம். “நீங்க சென்னையில எந்த இடத்தில் இருக்கிறீங்க.“ (ஆமாம் முகவரி சொல்லிட்டா, அப்பிடியே. அக்கிருட்டா யாரையும் கேட்காமப்போய் கண்டுபிடுச் சிடுவியாக்கும் என்று மனசுக்குளே சிரித்துக்கொண்டேன்.) ராபர்ட் முகவரி சொல்லிவிட்டு “உனக்கு எத்தனைப் பிள்ளைங்க“ என்றார்.

சமூகத்தில் எது மதிக்கப்படுகிறதோ அதைத்தான் முதலில் சொல்லுவார்கள்.எனக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. வரிசைக்கிரயமாக பையன் முதலில் வருவதால், “பையன் பொறியியல் முடிக்கப் போகின்றான். பெண் பனிரெண்டு, பையன் பத்து என்று இருக்கிறார்கள்“. என்றேன். ராபர்ட் எல்லாம் பெரியவங்களாயிட்டாங்க என்பதை ஊகித்துக்கொண்டார்.

நான் கேட்டேன். அவர், “மூன்று பெண்பிள்ளைகள். ஒருத்தி டிகிரி முடித்து கம்பெனியில் வேலைசெய்கிறாள். அடுத்து பனிரெண்டு, பத்து படிக்கிறார்கள்“ என்றார்.

“ராஜா மாமாவுக்கு“ என்றபோது  ராபர்ட், “அண்ணனுக்கு இரண்டு பிள்ளை ஒரு பெண்., தம்பிக்கு ஒரு பையன், ஒரு பெண் என்றார். அத்தையின் பேத்தி, பேரண்கள் எல்லாம் கலியாணத்திற்கு ஆளாகி விட்டார்கள்போல என்று நினைத்தேன். தனிப்பட்ட அக்கறையுடன் மாறி மாறி விசாரிப்புச் சென்றது. அதற்குள் சாவை எடுப்பதற்கு ஆட்களைத் தூரிதப் படுத்திக்கொண்டு வந்தார்கள். எங்கள் பேச்சுத் தடைபட்டது. கல்லறையில் அடக்கம் முடிந்துபிறகு, அவ்வளவு சீக்கிரம் எல்லாரும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகிறார்கள். பெண்களில் குட்டிக்குளுவான்கள் கூட தலை முழ்கி மயிர்களைக் காற்றாடவிடுகிறார்கள். ராஜா, ராபர்ட் இருக்கிறார்களா ஊருக்கு போயிட்டார்களா என்று இப்போதுதான் அப்பாக் கேட்டார்.  ஆயுசு நூறுனு இருவரும் வந்து நின்றார்கள்.

அப்பா வீட்டிற்கு முன் வராண்டா சேரில் உட்கார்ந்திருந்தார். மீண்டும் இந்த சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற சந்தேகம் எல்லோருக்குள்ளும் இருந்தது. ராஜா, ராபர்ட் இருவரும் சேர்ந்து அப்பாவிற்கு முன் நின்றார்கள். ‘இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் செய்வது எவ்வளவு இன்பமும். எவ்வளவு நீதியுமாய் இருக்கிறது‘ என்ற பைபிள் வாசகம்தான் நினைவு வந்தது. இக்காலகட்டங்களில் உடன் பிறந்தவர்கள்  பேசிக்கொள்வதுக்கூட எட்டாக்கனியாய் இருக்கிறது. பராவாயில்லை இவர்கள் செயலளவில் ஒருங்கிணைந்து போகிறார்களே என்பது மன நிறைவாக இருந்தது. அப்பாவிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்கள். சில உறவிர்கள் உங்க செல் நெம்பர் கொடுங்கனு வாங்கினார்கள். அவர்களும் சிலரின் முக்கிய எண்களைப் பதிவு செய்துக்கொண்டார்கள். “சரி மாமா“, மறுபடியும் வேறுஒருநாளில் குடும்பத்தோடு வருகிறோம். என்று கிளம்பினார்கள். ஒவ்வொருவரிடம் தனித்தனியாக முகப்பிரியத்துடன் விடைபெற்றார்கள்.

நான் ராஜா, ராபர்ட் இருவரையும் வண்டியில் அமர்த்தி பஸ் நிறுத்த இடத்திற்கு அழைத்துச்சென்றேன். வண்டியில் போகும்போது “நீ டவுனில் இருக்கிறாயா? வாடகையா? சொந்தமா? நீ சென்னை வந்தால், வீட்டுக்கு வா“. “இனிமேலாவது அடிக்கடி வந்து போங்க, கிராமப்பக்கம்னு விட்டுடாதிங்க“. “இனி தாய்மாமன் உறவை விட்டுவிடுவதாக இல்லை.“ போன்ற உரையாடல்கள் பிறந்தது. உரையாடல் வார்த்தைகள் யார், யாருடையது என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். (வண்டி வேகமாக போகிறது பராக்குப் பார்த்தால் விபத்து நேர வாய்ப்பிருக்கிறது)

மெயின் ரோட்டில் நிறுத்தியபோது, ராபர்ட் “உன் செல் நெம்பரை வாங்களையே. நெம்பர் சொல்“ என்றார். நான் எண் சொன்னதும், மிஸ்டுகால் கொடுக்க முயன்றார். பேலன்ஸ் இல்லாமல் சற்று நேரம் முணகிக்கொண்டிருந்தது. “பேலன்ஸ் போட வந்தபோது, பஸ் வந்துவிட்டது அதனால் காசு போடமுடியவில்லை“ என்றார்.

இவங்களும் நம்மைப்போலதான் இருக்கிறாங்கபோல ஏன்னா பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படி சமாளிக்கின்ற பதில்களை சொல்வதுண்டுதானே என்று யோசித்துக்கொண்டு. “இருங்க நான் போடுறேன், நீங்க எண்ணை சேவ் பண்ணிக்குங்க“ என்றேன்.

ராபர்ட் முகம் மலர்ந்து. “நான் சேவ் பண்ணிக்கிறேன். முதலில் நாம, நம்ம பிள்ளைங்களைப் பேசவிடுவோம்“

எனக்கு சட்டென்று இருபத்தியைந்து வருஷம் ஒரு உறவு காணாமல் போனதற்கும். அதே உறவு மீண்டும் திரும்பி வந்ததற்கும் கீழ் காணும் இந்த சொற்ப வாக்கியங்களா, நோக்கமாக இருக்கமுடியும்?

‘தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பான வாழ்வு அமையவேண்டும்‘. 

ஜே.டேனியல்



No comments: