அதிகாரக் குரூரத்தை
அறியாமலே, தப்பிக்க பழிசுமத்தும்
சாமானியர்கள்
மூன்று நாளைக்கு முன் என் மகள்,
“பக்கத்துவீட்டு செல்வியக்காவை மூணாவது வீட்டு அமுதா, அவுங்க அம்மா இரண்டுபேரும்
சேர்ந்து அடிச்சிட்டாங்க. தெருவில நிறைய பொம்பளைங்க, நின்னு பாக்கிறாங்க. யாருமே
வெலக்கி விடல. என்றாள்.
நான் “ஏன், என்ன சண்டை“ என்றேன்.
உடனே என் மகன் ‘’அமுதா
வீட்டுக்காரர்கூட அப்படியே நிக்கிறார். அப்புறந்தான் செல்வியக்கா, அவுங்க பையன்
தாஸ் ஓடிப்போயி “ஏய் எங்கம்மாவையா அடிக்கறீங்கனு, அமுதாவை எட்டி ஒரு ஒதை விட்டான்.
அதுல யாரோட வளையலோ உடைந்து அமுதக்கா, அம்மாவின் நெற்றியைக் கிழித்துவிட்டது.
ரத்தம் கொட்டிடுச்சி. அப்புறம் அமுதக்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி, இரும்பு ராடால எங்கம்மா மண்டைய ‘தாஸ்‘ ஒடைச்சிட்டாணு மொதல்ல கேசு
குடுத்துச்சாம். போலீஸ் வந்து தாஸ அலேக்கா
தூக்கிம்போயிடுச்சாம். அப்புறம் படிக்கிற பையன்னு மாலையில விட்டுட்டாங்களாம்“
என்றான்.
பதினோராம் வகுப்பு படிக்கும் தாஸ, போலீஸ் புடிச்சிம்போச்சி என்பதை
பிள்ளைகள் சற்று கிண்டலாக சொல்லிச் சிரிச்சதால, நான்கூட ஏதோ லேசான சண்டைன்னு
நெனைச்சிட்டேன்.
பக்கத்து வீட்டில் மூணு ஆண் பிள்ளைகள். ஒருத்தன் பிஈ
முடிக்கப்போகிறான். இன்னொருவன் பிகாம் இப்போதுதான் சேர்ந்திருக்கிறான். கடைசி பையன்தான்
தாஸ் பதினோராவது படிக்கிறான். பக்கத்துவீட்டுக்காரர் மேஸ்திரி வேலை செய்கிறார்.
வேலையில் கெட்டிக்காரர்தான். மூணு பிள்ளைகளையும் பள்ளியில் சேர்ப்பதிலிருந்து,
எதாவது சந்தேகங்களை அடிக்கடி கணவன் மனைவியுடன் வந்து என்னிடம் ஆலோசனைக்கேட்பார்கள்.
அவர் மனைவி, குழந்தைகளிடம் ஒரு குழந்தையாகவே விளையாடுவார். நல்ல
அறிவாளியும்கூட. எங்களின் விஷேச நாட்களில்
அவர்கள் பிள்ளைகள் எங்கள் வீட்டில் சாப்பிடுவார்கள். இந்து பண்டிகைகளில்
செல்வியக்கா அவர்கள் வீட்டில் விஷேசமாகச் செய்கிற பலகாரங்களைக் கொண்டுவந்து
கொடுப்பார். இப்படித்தான் ஏறக்குறைய பதிமூன்று வருஷங்கள் பக்கத்தில் பக்கத்தில்
இருக்கிறோம். எப்புதாவது சின்ன சின்ன பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அதைத்தாண்டி நல்ல உறவு உண்டு. இவர்கள் இனத்தால் வன்னியர்கள்.
மூணாவது வீட்டுக்காரர் ஏதோ அரசு மருத்துவமனையில் உதவியாளராக இருக்கிறார்.
அவரும் அடிக்கடி வந்து என்னிடம் பேசுவார். “அரசு அகவிலைப்படி ஏத்தியிருக்கு. உங்களுக்கும்
இருக்கா? என் மாப்பிள பாம்பேயில இருந்து கட்டில், பிரோ வாங்கினாரு. உங்களுக்கு
வேணும்னா சொல்லுங்க, ரொம்ப சீப்பா வாங்கித்தருவாரு. சார் உங்க ரூமு, இப்பத்தான் சார் நல்லா இருக்கு“
என்பது போன்று பேசிக்கொண்டிருந்துவிட்டு போவார். அவர் வந்துபோனால் என் பிள்ளைகள்
அய்யோ அருவைக்கேசு வந்துடுச்சா? என்பார்கள். ஆனால் எந்தக் கொடுக்கல், வாங்கல் இருந்ததில்லை. பொதுவாக நானாக எங்கும் (சினிமா, புத்தகக்கடை தவிர) போவதில்லை. அவர்கள் அழைத்தால் போகாமல் இருப்பதில்லை. இவர் இனத்தால் ஆதிதிராவிடர்.
இந்த நிலையில்தான் சண்டை நடந்திருக்கிறது. சண்டை நடந்த மறுநாள் மாலை
பக்கத்துவீட்டு பையன் தாஸ், அவன் அண்ணன் இன்னொரு பையன் மூவராக வந்து, என்வீட்டில்
விளையாட்டாக என் பையனோடு பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வந்ததும் “அணா, எங்கப்பா
விடுநர், பெறுநர் மட்டும் எழுதி வாங்கிவரச்சொன்னார்“ என்று தலையும் இல்லாமல்,
வாலும் இல்லாமல் சொன்னான். நான் சண்டை சம்பந்தமாகத்தான் இருக்கும் என்று
புரிந்துகொண்டேன். ஆனால், “போலீஸ் ஸ்டேசனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதப்போறீங்களா?
அல்லது நீங்க கேஸ்குடுக்கப்போறீங்களா?“ என்றேன். பசங்களுக்கு விவரம் தெரியவில்லை.
சரியாக்கேட்டுவர போனார்கள்.
எந்த விஷயத்துக்கும் முழுத்தகவலையும் சொல்லி, எழுதிச்செல்லுகிற நபர்.
இந்தமுறை விடுநர், பெறுநர் மட்டும் கேட்கவேண்டிய நிலைக்கு ஏன் வந்தார். என்று
யோசித்தேன். ஒருவேளை மூணாவது வீட்டுக்காரன் இனமும், நானும் ஒரே இனம் என்பதால் அந்த
இனத்துக்கு எதிராகவே என்னால் எழுதி கொடுக்கமுடியாது என்று நினைத்திருக்காலாம்.
அல்லது மூணாவது வீட்டுக்காரன் அடிக்கடி வந்து பேசுவதால் நான் அவர்கள்
சார்பாகத்தான் நிற்பேன் என்று ஊகித்தருக்கலாம். சரி எப்படியோ, நம்மிடம் வரவில்லை
என்றால் நல்லதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.
சற்று நேரத்தில் பக்கத்துவீட்டு மேஸ்திரியும், பிள்ளைகளும்
வந்தார்கள். அது ஒண்ணும் இல்லிங்க. மகளிர்
சங்கம் மூலமா கேஸ் குடுக்கத்தான்“ என்றார். “ஓ அப்படியா“ என்றாலும் எனக்கு தர்ம
சங்கடமாகத்தான் இருந்தது. நான் ஒன்றும் பேசவில்லை. “நமக்கு தாலுக்கா ஸ்டேசன்தானேடா’’ என்று அவர் பையனை சும்மாக்கேட்டேன்.“ விடுநர் எழுதி, யார் கேஸ்
குடுக்கப்போறீங்களோ அவுங்க முகவரியை எழுதிக்குங்க.“ என்று சொல்லிவிட்டு போலீஸ்
ஸ்டேசன் முகவரியை பெறுநர் இடத்தில் எழுதி மேஸ்திரியிடம் கொடுத்துவிட்டேன். அவர்
நன்றி சொல்லிக் கிளம்ப எத்தனித்தபோது. மேஸ்திரியிடம் பேசினேன் “ ஏங்க. மறுபடியும் ஏன்,
கேஸ் அது இதுன்னு போறீங்க. நாம எல்லாம் பக்கத்தில பக்கத்தில இருக்கிறோம். பேசி சமாதானமாக போக யோசித்துப்பாருங்க. கேசுனு
போனீங்கனா உங்களுக்கும், நிம்மதியில்லை. அவங்களுக்கும் கஷ்டம்தான்“ என்றேன்.
தீவிரமாக இருந்த மேஸ்திரி சற்று சுதிகுறைந்து. ''இல்லசார் சாமாதானமா போகறதுதான். இருந்தாலும் ஒரு
எச்சரிக்கைக்காகத்தான் கொடுக்கப்போகிறோம்.''
''சரி யோசனைப்பண்ணி செய்யுங்க“ என்று
முடித்துக்கொண்டேன். மேஸ்திரி முகத்தில் தீவிரம் குறைந்திருந்தது. “சரி வரங்கே“ என்று சென்றார்கள்.
அதிகாலையில் மூணாவது வீட்டுக்காரர் வந்துவிட்டார். எதோ வீர தீர செயல்
செய்துவிட்டதுபோல சற்று பெருமைதோய்ந்த தொனியுடன் சொன்னார். அதில் இவன் நம்ம ஆளு
என்ற உரிமை இருந்தது. “இன்னாங்க கேள்விப்பட்டீங்களா. அந்தாளோட பையன் தம்மாதுண்டு
இருக்குதே. அது வந்து என் மனைவிய ரத்தம் வரா மாதிரி அடிச்சிடுச்சிங்க. சாதியை
வச்சி திட்டுதுங்க. அதான் போனேன். கேஸ் குடுத்தேன். போலீஸ் அந்த பையனை
தூக்கிம்போச்சி“ என்றார்.
நீங்க அவசர அவசரமாக கேசு குடுத்தாலும் அவன் படிக்கிற பையன் அவனை
ஒண்ணும் செய்யமாட்டாங்க. அவன் ஜாலியா டிவி பாத்துக்கிணு. மதியம் பிரியானி
வாங்கிக்குடுத்தாங்களாம் சாப்பிட்டுதான் வந்திருக்கான். ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்குங்க.
நமக்கு சாதகமா இருக்கிதுண்ணு, அனாவசியமா எடுத்து பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை நாம
பயன்படுத்தியது உண்மையில்லைனு தெரிஞ்சா அதுவே நமக்கு பாதகமா திரும்பிடும்.“
“அப்ப அவன் சாதிய வச்சி கேவலமாக பேசுவான், நான் கேட்டுக்கிணுபோகனுமா?“
“அப்படி அவர்கள் பேசவேயில்லை என்று தெருவில் பார்த்தவர்கள்
சொல்றாங்களே. ஒரு வேளை, அவர்கள்
வன்மத்தோடு கேட்டிருக்கக் கூடுமானால் அதற்காக அவர்கள் வருத்தப்படவேண்டும்“
இதை மூணாவது வீட்டுக்காரர் எதிர்பார்க்கவில்லை. என் மனைவியின் மண்டையை
ஒடைச்சான் நான் கேஸ் குடுத்தேன் என்று என்னிடம் உரையாடுவதை தவிர்த்து விலகினார்.
அதற்குள அமுதா வந்தாள். வரும்போதே “அணா, உங்க பையனும் தாசும் பிரண்டுங்க இங்க
பேசரதக்கொண்டுபோய் அங்க சொல்லிடப்போறான் கொஞ்சம் சொல்லிவையிங்கணா“ என்றாள்.
அவள் ஆரம்பப்பேச்சே சரியில்லை என்று பட்டது. நான் பொறுமை இழக்கவில்லை.
இங்க பாருமா. நான் யாருக்கும் சாதகமானவன் இல்லை. உனக்கு பிடிக்கலைனா எல்லாரும்
தப்பானவங்கனு நினைக்காதே. இந்த சின்ன விஷயத்திலேயே நீ தப்பாவே யோசிக்கிறனு
தெரியுது.“
அவள், அவளுக்கு நியாயமாக படுகிற விஷயங்களை சத்தமாக படபடவென்று “அவுங்க
நாய் வளக்கிறாங்க, பூனை வளக்கிறாங்க அதுங்கலாம் நடு ஊட்டிலயும், வாசல்லயும் வந்து
பேளுதுங்க. அப்படியிலாம் உங்க வீட்லசெய்தா நீங்க பொறுத்துப்பீங்களா? பேசிக்கொண்டே
இருந்தாள். எனக்கு ரேசாகிக் கொண்டேயிருந்தது. நான் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறேன். நீ அனாவசியப்பேச்சுக்கள் நிறைய பேசுவதை நானே அடிக்கடிக்கேட்கிறேன். இந்த
ஏரியாவுக்கு உனக்கு முன்னாடி வந்தவன், எனக்கு செல்வியக்காவைப்பத்தி நல்லா தெரியும்.
மேஸ்திரி துடுக்காக பேசுவார், ஆனால், மோசம் என்று சொல்லமுடியாது. செல்வி
அப்படிப்பட்ட ஆளு இல்லை. நல்ல குணசாலியான பெண்தான். அவுங்க சின்ன பசங்களைக்கூட நா கூசுகிற வார்த்தைகளை வைத்து பேசமாட்டாங்க.“
பாத்தியா நீங்ககூட நாங்கதான் சண்டைக்குபோகிற ஆளுங்கனு நெனைக்கிறீங்க. எங்க
ஊட்டுக்காரு அங்கவேலை செய்யிறாரு, எங்கப்பா எனக்கு எவ்வளவு செலவு செய்யீறாரு. நாங்க ஏன்னா
மத்தவங்க சண்டைக்கு போகப்போகுறோம்.
“ஏம்மா. இங்கபார். நாமெல்லாம் பக்கத்தில பக்கத்தில இருக்கிறோம் ஒருத்தரை
ஒருத்தர் அனுசரித்துதான் வாழவேண்டியிருக்கிறது. சாதியக் குறிப்பிட்டு சொல்லாத்தை,
நீ சொன்னதாக போய் கேசு குடுப்பே. அப்புறம் அவன் சாதியில நாலுபேரு வக்காலத்துக்கு
வருவான். உன்சாதியில இருந்து நாலுபேரு வருவான். எடையில ஒண்ணும் அறியாமல் இருக்கிற
குடும்பமெல்லாம் சாகணுமா? உங்களுக்கு அறிவில்ல. தவறே செய்தாலும் அதற்கு ஒரு நியாம்
இருந்துன்னா. ஆயீரம்பேரு ஆதரவா வந்து நிப்பான். இந்தமாதிரி அபாண்டமா பழிய சொல்லி
உன்ன மட்டும் தற்காத்துக்கணும்னு நெனைச்சா, உனக்கு எதிரா நானே வந்து சாட்சி
சொல்லுவேன். என்று மிக சத்தமான கோபத்துடன் சொன்னேன். அமுதா வாயின் இரு ஓரங்களிலும்
நுரைகிளம்பப் பேசிக்கொண்டிருந்தவள். மருண்டு பார்த்தாள். நடந்தது நடந்துபோச்சி இனி
அப்படியெல்லாம் இருக்கவேண்டாம் போலீஸ் விசாரிச்சாக்கூட சமாதானமா போற வழியப்பாருங்க“
என்றேன்.
அமுதாவின் அப்பா “சரி சரி விடு அவரு வேலைக்கு போகிறாரு. போகட்டும்
விடு“ என்று கிளம்பினார்கள்.
நான் அரசு மருத்துவமனையில் இருந்த செல்வியக்காவைப்பார்த்து
விசாரித்துவிட்டு பள்ளிக்குப் போனேன்.
ஒரு வாரம் கடந்துவிட்டது. எந்த பிரச்சனையும் இதுவரையில்லை.
பக்கத்துவீட்டு பையன், பள்ளி முடிந்து வந்ததும், மாலையில் வந்து என் பையனை தட்டசு பயிற்சிக்கு அழைத்துச்செல்கிறான்.
ஆனால், அமுதா வீட்டில் என்னைப்பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நம்பிக்கையிருக்கிறது. நான் தவறு செய்யவில்லை
என்பதை புரிந்துகொள்வார்கள் என்று.
ஜேடி
No comments:
Post a Comment