Thursday, October 3, 2013

சினிமா,




ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஒருகாலத்தில் கிருஷ்ணா, கண்ணன், ராஜா, லட்சுமி என்ற திரையரங்குகள் தங்கள் அளவில் காஞ்சிபுரத்தில் இயங்கிக்கொண்டிருந்து. செல்வ செழிப்புவாய்ந்த பண முதலை  ஏறக்குறைய பதினைந்து வருஷங்களுக்கு முன் ரயில்வே ரோட்டில் ஒற்றை திரையரங்கமாகத் துவங்கியபோது. அத்தனை பழைய அரங்குகள் மூடுவிழா கண்டுவிட்டது. இன்று மூன்று அரங்கத்தை ஒரே வளாகத்தில் வைத்து மக்களின் பணத்தைக் கொள்முதல் செய்யும் ஓநாயாக திரையரங்கமும், வசீகரத்தைக்கண்டு ஏமார்ந்துபோகும் ஆட்டுக்குட்டிகளாக பார்வையாளர்களும் இருக்கிறார்கள்.

நேற்று  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்க்க திரையரங்கத் திற்குப்போனேன். வயித்தெரிச்சலாக இருந்தது.  இந்த பணமுதலைகள் சமூகத்திற்கு என்ன பங்கை ஆற்றுகிறார்கள் என்று மனம் வேதனையடைந்தது. நான் தான் முதல் ஆளாக சீட்டு வாங்கினேன். வாங்கிக்கொண்டு வேகமாக போகிறேன் அதற்குள் படத்தை போட்டுவிட்டிருக்கிறான். எல்லாக் கதவும் திறந்த நிலையில் படம்போகின்றது. என்னடா படமா, இல்லை வேற ஏதாவது விளம்பரமா என்று மிரண்டுகொண்டே அரங்கில் நுழைந்தேன். தியேட்டர் முழக்க ஈரக் கமுரல் வாசனை. திரையரங்கம் ஆல்ட்டேசன் செய்கிறார்கள் போல சவுக்கு சாரங்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தது. ஒயர்கள் மொத்தம் பிரித்து வாலும் தோலுமாக கட்டப்பட்டிருக்கிறது. சேர்கள் உடைந்தும் தலைக்குப்புறவும் விழுந்தநிலையில் இருந்தது. பேன்கள் ன்றோ இரண்டோ மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு பார்வையாளனுக்கு படம் பார்க்கிற மனநிலையையே முற்றிலும் உடைக்கிற அரங்கமாகத்தான் அது தோற்றம் தந்தது. பொதுவாக அந்த திரையரங்கம் நல்ல மெயின்டனஸ் இருக்கும். சொஞ்சநாள் திரையிடுவதை நிறுத்தி அதன்பிறகுகூட ஏதாவது படத்தைப்போடலாம். ஆனால், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஏதோ போனால் போகிறது என்கிற அளவில் அதில் திரையிடுவது ஒரு மோசமான செயலாகும்.

என்னைப் பொறுத்தளவில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு அற்புதமான படமாகும். காவல் துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அத்துறைக்கே உள்ள ஒரு முரட்டுத்தனத்துடன், உண்மைத்தன்மை யோடு ஒத்து இருக்கிறது. மேலும் (கடைநிலை போலீஸ்காரர்கள், கர்த்தரே, முருகா, அய்யா என்று விழுகின்ற காட்சிகளைத்தவிர்த்து.) அதிகாரிகளாக வருகின்றவர்களின் முகங்களில் ஒரு போலியான வேசமற்று அந்தந்த காட்சிகளுக்கு ஏற்ற விதத்தில் யதார்த்ததோடு ஒன்றியிருக்கிறார்கள். இப்படத்தில் நான் வெற்றியாகக் கருதுவது படம் முழுக்க கொலைகள் நடந்தாலும் அது வன்முறையைப்போல் பார்வையாளனுக்கு துளியும் தோன்றச்செய்யாததேயாகும். 

மிஷ்கின் தன்னுடைய திறமையான திட்டமிடுதல் மூலம் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக ஒன்றிணைத்திருக்கிறார். ஆனால், நடித்த நபர்களுக்கு என்ன கதை, என்ன நடக்கிறது என்பது கடைசிவைரை புதிராகவே இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். வழக்கு எண் கதாநாயகனும் சிறப்பாகவே தன் பங்கை நிறைவேற்றியிருக்கிறார். ஷாஷி நிஜமான சிபிஐ அதிகாரியாகவே மாறிவிட்டார். அரவாணியாக வந்தவர். சொஞ்சநேரம் என்றாலும் அந்த குண்டடிப்பட்ட முகம் மறக்கமுடியவில்லை. பார்வையற்ற அம்மாவை ஏதாவது இக்கட்டான சூழலில் சில நேரம் நடக்க விட்டோ அல்லது தடுமாறி விழும்படியாக வைத்திருந்தால் கொஞ்சம் நம்பும்படியாக இருந்திருக்கும். காலில் சூடு பட்டிருப்பதற்காக எப்பபாரு முதுகில் சுமந்து கொண்டு அலைவது சற்று மிகையாக உள்ளது.
காட்சிகளைக் கலைத்துப்போட்டு, ஒரு கண்ணாடித்துண்டில் மொத்த கதையின் கருவையும் விளக்கியிருப்பது பார்வையாளனுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. மிஷ்கின் குழந்தைக்கு கதை சொல்லத்துவங்கும்போது படத்தின் ஒட்டுமொத்தக் கதையின் விளக்கத்தை கொடுக்கவேண்டிய நிர்பந்தம் இருந்ததால் என்னவோ கதை சொல்லும் ஆரம்பத்தில் சற்று ஒன்றிப்போகாத நிலை இருந்தது. கதை சற்று நகர்ந்து, காப்பாற்றிய ஆட்டுக்கூட்டியிடம் வரும்போது மொத்தக் கதையையும் ஒருங்கிணைத் துவிடுகிறார். ஆனால், மிஷ்கின் உணர்ச்சி வசப்படாமல் இருந்திருந்தால் அக்காட்சி இன்னும் சிறப்பாக கொண்டுவந்திருக்கமுடியும்.
இளையாராஜா இசை பல இடங்களில் மிக அற்புதமாக வந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் ஏன் இப்படி செய்கிறார் என்று தோன்றுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கல்லறையில் பார்வையற்றக் குடும்பம் மெழுகுவர்த்தியை கொளுத்த தடுமாறும்போது கொஞ்சம்கூட காட்சிக்கு ஒன்றாமல் ஒரே இரைச்சலாக இருக்கிறது. அதன் பிறகு அவ்வளவு மென்மையாக மாறிவிடுகிறது. 
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வசதி வாய்ப்பற்றவன் தாதாவாவதும் ரவுடியாவதும் தொடர்ந்து உழல்கின்ற கதைதான் என்றாலும் தான் எடுத்துக்கொண்ட பாத்திரத்திற்கு பெரிய கதாநாயகத்தன்மையை மட்டுமே தூக்கிக்கொடுக்காமல், பாத்திரங்களை முடிந்தளவு யதார்தமாக கொண்டுவந்திருக்கும் மிஷ்கினை பாராட்டவே செய்யவேண்டும். இந்தமாதிரி படத்திற்கு, பணமுதலைகள் ஒரு அலட்சியமான இடத்தை ஒதுக்குவதை என்னவென்று சொல்லுவது.
நான் கொஞ்சநாளாக  யோசித்துவருகிறேன். வெறும் பண சம்பாத்தியத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வெளிவருகின்ற படங்களுக்கு எதிரான வேலையாக. திரையிடப்படும் அரங்குகளின் வாசல்களில் அந்தப் படம் எப்படி மக்களை ஏமாற்றுகிறது. எவ்விதம் எதார்த்தமற்று இருக்கிறது  என்பதை படம் பார்க்க வருகின்ற மக்களிடம் துண்டு அறிக்கையாக விநியோகிப்பது. அப்படி விநியோகிப்பதில் பிரச்சனை வரும்பட்சத்தில் மறைமுகமாக (பயந்து அல்ல போராட்டமாக கொண்டு செல்வதற்கு ஏற்ற வழியா நினைப்பதால்) அது மக்களிடம் கொண்டு சேர்ப்பதை செய்தால் என்ன? என்றுத் தோன்றுகிறது. இந்த வேலையை எல்லா இடங்களிலும் செய்தால் நிச்சயம் மக்களுக்கு எது உண்மையான சினிமா எது வியாபாரத்திற்கான சினிமா என்கிற புரிதல் ஏற்படும். மக்கள் தானாக ஒரு மாற்றுப்பார்வையை எதிர்பார்ப்பார்கள். அப்போது இந்த பணமுதலைகள் குறைந்த பட்சம் நல்ல படங்களுக்கு மரியாதையையாவது தருவார்கள்.
இப்படத்தில் குறையாகவும், அரசியல் உள்நோக்கமாகவும் நான் கருதுவது.
கதையின் ஒட்டுமொத்த கருவுக்கும் காரணமான எட்வர்ட் கொல்லப்படுவது சந்தர்ப்ப சூழ்நிலை என்றாலும். ஒரே குடும்பத்தில் அத்தனை பேரையும் கதைக்காக பார்வையற்றவர்களாக வடித்திருப்பது ஏமாற்று வேலை யாகப்படுகிறது. மேலும் மிஷ்கின் இந்தி பேசுவது கதைக்கு என்னவிதமான புரிதலையும், பலதையும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அப்படினா இந்தி பேசுகிறவன்தான் எப்போதும் திறமை சாலியாக இருக்கமுடியுமா? 
கிறிஸ்த்தவர்களிலும் பணத்தாசைப்பிடித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கொலை செய்ய அலைகிறவனில் கிறிஸ்த்தவனும் இருக்கிறான் என்று பார்வையாளனுக்கு புரியவைக்க மிஷ்கினுக்கு வேறு வழியேத் தெரியவில்லை. அல்லது வேண்டுமென்றே அந்த நுட்பத்தை கையாண்டு இருக்கிறார். கிறிஸ்தவன் என்றுக் குறிப்பிட ஒரு டாலர் (அதுலாம் ரொம்பப் பழசுங்க என்று விட்டாலும்) அல்லது ஒரு வார்த்தைப்போதும். அப்படிக் காட்டியிருந்தால் அவன் கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவன் என்பது புரிந்துபோகும். அதை விடுத்து துப்பாக்கிக்கு மேல் பைபிள் இருப்பதுபோல் இரண்டு இடங்களில் காட்டுவது. கிறிஸ்த்தவத்தைக் குறை கூறுவதற்காகவே வைக்கப்பட்டதாக தோன்றுகிறது. மதமல்ல, மதம் சார்ந்தவர்களே தவறு இயைக்கிறார்கள். கதைப்படி கிறிஸ்தவர்களிலும் சந்தர்ப்பவாதிகள் இருக்கிறார்கள் என்று வந்தாலே கதைக்கு நல்ல பலம் கிடைத்து விடுகிறது. மிஷ்கின் இதை யோசிக்கவேண்டும்.

ஜேடி

No comments: