Saturday, October 19, 2013

கட்டுரை, பகுதி- 2

                                  மெய்படுமா க(ள,ல,ன)வுகள்                                                 பகுதி- 2

“ஏம்பா, நான் ரோட்ல  உட்கார்ந்து குடிக்கிற மாதிரியாவது கனவு காணக்கூடாதா?  ரோட்ல படுத்துங்கெடக்கிற மாதிரியா கனவுகண்ட.  துணி, கிணி போட்டுங்கீறனா, இல்லியா.“

“துணிலாம் போட்டுங்கீறணா.“ கொஞ்சம் சிரித்துவிட்டு  “என்னடா இது, அண்ணன இந்தமாதிரி பார்த்தோமேன்ணு மனசு ஒரு மாதிரியா இருந்துச்சி“ என்றான்.

“ஆமாம்பா, காலம் எப்படியெல்லாமோ மாறிப்போச்சி. பதினெட்டு வருஷமா, உன்னாண்ட டீசாப்பிடுற ஆளாவே பார்த்திருக்கிற. போரடிச்சிப்போச்சி. கொஞ்சம் மாத்தி யோசித்திருப்ப, அதான் ராத்திரியில என் படம் பார்த்துட்ட' என்று நானும் சிரித்தேன். 

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்படுகிற விஷயம் மனதை உலுக்குவதாகக்கூட மாறிவிடுகிறது. நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் மெல்லிய  குழப்பம் வராமல் இல்லை.  கனவு கண்ட பையன்   தெய்வத்தையல்ல, சடங்கையே தெய்வமாக வழிபடுகின்றவன்.  அவன்  கனவு   மெய்பட்டுவிடும்  என்ற தொனியில்  சொன்னதும் . சற்று வருத்தம் இருந்தது. 

எதைக்  குடித்தால்,  குடிகாரன்  பேர் வரும் தெரியாது. சிறிய வயதில் சில நாட்களில்  ‘கள்‘ குடித்திருக்கிறேன். ஒரு முறை   அருவடை  நாட்களின்போது,  கிராமத்தில்  ஆப் பிராண்டியை மூவராக பகிர்ந்துகொண்ட  நாபகம் இருக்கிறது.  நகரத்திற்கு வந்தபோது கல்வி சுற்றுலா சென்ற  நாளில், சில ஆசிரியர்கள் பாசமாக வேண்டியபோது நான் தொழில் முறை குடிகாரன் இல்லை என்பதை நிரூபிக்க. எனக்கு பீர் மட்டும்போதும் என்றேன்.

கடைசியாக ‘பூட்டப்படாத வீடும் வெளியும்‘ என்ற என்  சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியைப்  பகிர்ந்துகொள்ள கிழக்கு நோக்கியப்  பயணத்தில் போகிற போக்கில் நண்பர்கள்  தாபா ஓட்டலை தேர்ந்தெடுத்தார்கள். என்னுடன் ஆறுபேர் கொண்ட குழு. சுக்கா ரொட்டி, கறி, முட்டை குறுமா, வெஜ் மசாலாக்குழம்பு, வந்துகொண்டே இருந்தது. பிராண்டி, பீர்போதுமான அளவு இருந்தது. அங்கேயும்  என் தேர்வு பீராகத்தான் இருந்தது. நான்குபேர் பாணங்களைப்  பகிர்ந்துகொண்டோம்.  ஆறுபேர் கொண்ட குழுவில் என்னைத்தவிர்த்து நான்குபேர் கதைகள் நல்லா இருக்கிறது என்று குடிக்காத முன்பே சொல்லியிருக்கிறார்கள். அதிலும்  நான் விருந்துக்கு அழைக்காததற்கு முன்னமே சொன்ன வார்த்தைதான். அந்நிகழ்வில் இருவர் குடிக்கவில்லை, எப்போதுமே  குடிப்பதில்லை என்பது அன்றுதான் தெரிந்துகொண்டேன். முன் நாட்களில் குடித்த பழக்கம் உண்டு என்பதை அந்நிகழ்வுக்குப் பிறகு அறிந்தேன். இருவரில், ஒருவர் கதை நல்லா இருக்கிறது என்பவர். இன்னொருவருக்கு கதை பரவாயில்லை என்ற மேலோட்டமான எண்ணம் இருந்தாலும், இடையில் என் செயல்பாடு அருக்கு பிடிக்காமல் போனதால் தற்போது கதையோடு என்னையும் முற்றிலும் பிடிப்பதில்லை. இருந்தாலும் சுக்காரொட்டி வந்துகொண்டேயிருந்தது. இந்த நிகழ்வில்தான் கடைசியாக நான் குடிகாரனாய் இருந்தது. நடந்து ஏறக்குறைய இரண்டு வருஷங்கள் முடிந்திருக்கிறது.  

 "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator) படத்தில், சார்லி சாப்ளின் ஹிட்லருக்கு உரைக்கவைக்கும் தன் கடைசி உரையை நிகழ்த்தியிருப்பார். அந்த உரையை கடந்த மாதம் ‘தின இதழ்’ என்ற பத்திரிக்கை தமிழில் மொழிபெயர்த்திருந்தது. அது அற்புதமான கட்டுரை. அதிலிருந்து இந்த வரிகள்தான் பிடித்தமானது என்று தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் எதார்த்மாக என்னை யோசிக்க வைத்த வரி 'நாம் அதிகமாக யோசிக்கின்றோம், அதனால் மக்களிடம் இருந்து விலகியிருக்கிறோம்‘ 

நாம்கூட அப்படித்தான் இருக்கிறோமோ? அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று அதிக நேரம் யோசித்தேன்.   எல்லா மக்களிடம் நெருங்குகிறவன், சமய சித்திகொண்ட ஏற்ற, இறக்கங்களின் பசையாக இருக்கவேண்டும். பழகும் நபர்களின் முகங்களை வாசிக்கிறவன் ஒருபோதும் பெரும்பாலானவர்களிடம் விலகியே இருக்கமுடியும். நல்ல வேளை ‘சார்லி‘ ஒட்டுமொத்த மக்கள் என்று சொல்லவில்லை. பொதுவாக மக்களிடம் என்று சொல்லுகிறார். சமூகத்திற்காக பேசுகிற குறைந்த நபர்களுக்கு சாதகமாககூட  குறிப்பிட்டிருக்கலாம்.   அதிகாரமற்ற தனி மனிதனும்  குறைந்தபட்ச மக்களிடம்கூட,  தற்போது விலகி நிற்பது என்பதுதான் சமூகத்தின் வர்க்கப் பிரச்சனையின் தொடர்நிலை.

 குடும்பம், பணி, சமூகம் பிணைந்த வர்க்கப் பிரச்சனையின் உச்சமாக  டீக்கடை  பையனின்  கனவிற்கு என்னைக் கொண்டு வந்துவிடுமா? 

ஜேடி

No comments: