மசுரு ஊடு
"கடவுளே இன்னக்கி ஒரு நாளு மட்டும் மழை வராம இருந்தா போதும் கோடிக்கும்புடு போடுவேன்" மும்மாறி, பருவம் என்கிற சொலவடை எல்லாம் பொய்யாகிப்போன காலகட்டத்தில் சூளையில் அடுக்கின எல்லாக்கல்லும் வெந்திடனும் என்ற ஆதங்கத்தில் வேண்டினார் ஜெகனாதன்.
ஒரு காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவன். (மன்னிக்கணும் ஜீவனை தாழ்த்தப்பட்டவன் என்று நானே சொல்லுவதில் வெட்கப்படுகிறேன்.) பொருள் இல்லாமல் இருந்தான். அத்திப்பூத்தார் போல யாரேனும் ஒரு சிலர் ஜீவனத்துக்கு போதுமானபொருள் சுயமாய் உற்பத்தி செய்கிறவனாக இருந்தாலும், சாதியில் ஊறி இருக்கும் உயர்வகுப்பு மதம் தாழ்த்தப்பட்டவனை மதித்ததில்லை. காலப்போக்கில் வரலாறு யாருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. இப்போதெல்லாம் உயர்ந்தவர்களாக சமூகம் அங்கீகரித் தவர்கள் சாதிய பார்வையும், உயர்ந்துவிட்ட தாழ்த்தப்பட்டவன் அவனுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களை இழிவாய் நினைத்தலும் மறைமுகமாக நடந்தேருகிறது. பொருள் வைத்திருப்போர் யாராயினும் அவரிடம் வெளிப்படையன மதிப்பு இருசாராரும் வைக்கிறார்கள். அதை அங்கீகரிக்கும் விதமாகத்தான் மன்னார்சாமி உடையார் ஜெகனாதனுக்கு சூளைபோட்டுக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.
"யோவ் பொக வெளிய போகுதுபாருயா. சேத்தவாரி பூசுயா. சூளைகல்லு வேகறவரைக்கும் தண்ணி சாப்பிடாதேனு சொன்னா கேக்கிறியாய்யா, மண்ணாபோன மன்னார்சாமி." என்று சத்தம்போட்டார் ஜெகநாதன்.
எந்த சூழளிலும், எல்லா நேரத்திலும், சாதியிலும் நகைச்சுவை மனிதர்கள் இருக்கிறார்கள் போல. சாதிக்கொடி குரூரமாக பறக்கும் சமயத்திலும், இவர் சேரிக்கு வரும்போது அவரால் யாருக்கும் மனக்கஷ்டங்கள் ஏற்பட்டதில்லை. ஒருவேளை அச்சமயத்தில் சேரிகளிலும் குத்தகைக்கோ, சொந்தமாகவோ ஒருசிலர் கழனிகளை பயிர்செய்தனர். அதில் மன்னார்சாமி அரிகளை வாரிக் கொள்ளவருவார். அதனாலோ என்னவோ அவரால் எந்த பிரச்சனையும் சேரியில் வந்ததே இல்லை. எல்லோரிடத்திலும் நகைச்சுவையாய் பேசுவார். வாலிபர்கள், பசங்கள் அவரிடம் உரிமையாக சித்தப்பா, மாமா, யோ, என்று அவரவர் வயதுக்கு ஏற்றார்போல உறவு வைத்து அழைப்பார்கள். இருந்தாலும் உயர்சாதிக்காரர் என்பதை அவர்கள் மனசு சொல்லிக்கொண்டே இருக்கும். பசங்களே அவரிடம் அப்படி உரிமை எடுத்துக்கொள்ளும்போது. கூலி கொடுக்கும் முதலாளியான ஜெகநாதன் சற்று ஏச்சிப்பேசுவது இயல்பானது தான்.
தள்ளாடியபடியே மன்னார்சாமி குழைத்த சேற்றை இரு கைகளாலும் அள்ளி பூசினார்.சூளை நான்கு பக்கமும் நெருப்பு பிடித்துவிட்டது போல. ஈரமாய் இருந்த சேறு தீட்சனையில் வறண்டிருந்தது. அவர் வேட்டியில் யாரோ பூசி விட்ட சேறாகத்தான் இருக்கும், அங்கங்கே திட்டு திட்டாய் கறைபடிந்திருந்தது. "யோ. பொக எங்க போது, நீ எங்க பூசுறயா." என்று கத்திய ஜெகநாதன் வேலை செய்தவர்க்கு கூலியை எண்ணி கொடுத்துக்கொண்டிருந்தார்.
சூளை போடுவதற்கு ஐந்தாயிரம் பணம் தன் அப்பாவிடம் கொடுத்துவிட்டதால் சூளையில் தமக்கும் பங்குண்டு என்ற எண்ணத்தோடு பார்வையிட வந்திருந் தான் ஜீவன்.சூளையிலிருந்து வெண் புகை வானம் ஏறியது. கடைசி நாள் வேலை என்பதால் வேலைசெய்த எல்லோருக்கும் சாப்பாடு போட்டார்கள். சாப்பிட்ட இலைகள் அவரவர் மனசு சொன்னபடி அங்கங்கே சுருட்டி வீசி இருந்தார்கள். ஒரு சில இலையில் கத்திரிக்காய் தோல் கிடந்தது. கருவேப் பிலை மனித நாவின் ருசிக்காக கொதிக்கும் எண்ணையில் புரண்டு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளாமல் மணத்தை குழம்பில் கரைத்துக்கொள்கிறது. குழம்பு தாளிப்புக்கு முக்கியமானதாய் தேடுகின்ற கருவேப்பிலை. சாப்பிடும் போது ஒதுக்கிவிடும் அவலம் நடந்துவிடுகிறது. தேவைப்படும்போது முக்கியமாய் நினைத்து பயன் படுத்திவிட்டு, முடிந்த பிறகு அறிமுகமில்லாத எதோ ஒன்றுபோல பயனற்றதாய் ஒதுக்கிவிடுவது போன்ற ஒரு கொடூர செயலை மனிதனைத்தவிர எந்த உயிரினத்தாலும் செய்யவேமுடியாது. ஆக ஒவ்வொரு மனிதனும் எதோ ஒன்றை ஒதுக்கி, ஏதோ ஒன்றின் மீது தன் சர்வாதிகாரத்தை திணித்துக்கொண்டு தான் இருக்கிறோம். புற்களின் மீது கிடந்த எச்சில் இலையை நாய் ஒன்று நக்கிக்கொண் டிருந்தது.
ஜீவன் வந்ததை பார்த்த ஜெகநாதன் "இவன்தான் என் சின்னபையன் டவுனுல வேலைசெய்றான். அங்கியே தங்கியிருக்கிறான்". என்று சூளையை பார்க்க வந்த பக்கத்தூர் கன்னியப்பனிடம் அறிமுகம் செய்துவைத்தார். இதை பார்த்துவிட்ட மன்னார்சாமி வந்தவன் சூளைக்கு சொந்தக்காரன் என்று கண்டு "வா தம்பி நல்லபடியா சூளைய கொளுத்தியாச்சி. என்னா வெறுங் கையோட வரே வரும்போது ஒரு மினி பாட்டிலாவது வாங்கி வரக்கூடாது." என்று இன்னும் தடுமாற்றம் குறையாத நிலையில் கேட்டார்.
ஜீவன் கிராமத்தில் வாழ்ந்தபோது கேலி கிண்டல் செய்து பழகியவர்கள் பேசியவர்கள். வெளியூரில் தங்கி வேலை செய்து திரும்பியபோது மரியாதை தருகிறார்கள். மரியாதை பெற்றுக்கொள்ள நினைக்கிறவன் எத்தனை பேரின் சுதந்தரத்தை பறிக்கவேண்டி இருக்கிறது. மரியாதை மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் பயன்படுகிறது?. ஜீவன் அப்பாவிடம் பேசிவிட்டு "நேரமாச்சி நான் வரேம்பா" என்று கிளம்பினான்.
இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரந்த பூமி பசுமையாய் தெரிந்தது. நீலமும், வெண்மையும் கலந்த வளைவான வானம் சுற்றி பூமியில் சொருகி வைத்திருந்தது. இயற்கையில் லயித்துப்போன ஜீவன் கற்பனையில் முழ்கினான். அப்பாவிடம் கல்லுவாங்கி, நகரத்தின் ஒதுக்குப்புறமாய் தான் வாங்கிய பிளாட்டில் எப்படியாவது ஒரு வீடு கட்டிவிடவேண்டும். வீடு பூமியில் வாழநினைக்கிற ஒவ்வொருவருக்கும் கனவு திட்டம்தான். அதுவும் பெண்களுக்கு எதிர் வீட்டைவிட கூடுதலான பரப்பு வேண்டும். கற்பனை எவ்வளவு தூரத்தையும் மின்சாரப் பாய்ச்சலாய் தொட்டுவிடுகிறது. ஜீவன் நகரத்தின் வீடுகளை மாடளுக்காக பார்த்துக்கொண்டே வந்தான்.
உயிர் ஊசலாடுகிறபோது உறவுகளின் உதவிகள்போலவும், அரசிடம் யானை, குதிரை எல்லாமில்லாமல், கோழி மேய்க்கிறவர்கள் சிக்கனமாய் இருந்தாலும் மிஞ்சப்போகிறது கூடுதளாக ஒன்றுமில்லை. பாக்கட் பிளைடு வாங்கி முகத்தில் அங்கங்கே ரத்தம் கசிய வீட்டில் சேவிங்செய்வது, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அசைவம் காட்டுவது இப்படியான கெடுபிடிகளை கடைபிடிக்கும் போதுதான் சில தள்ளு சீட்டு, சில்லு தங்கக்காசு சேர்க்க முடிகிறது. நீண்ட நாள் தவத்திற்கு பிறகு இவைகளை வைத்து ஜீவன் கட்டடம் உருவாக்கி விட்டான். இரும்பு கிரில்போட்டு வைத்திருந்தான். அறைகளுக்கு கதவு போட்டிருந்தான். தற்செயலாக வந்த நண்பர் வீட்டை பார்த்துவிட்டு "டே என்னடா வீட்ட இப்படி வச்சிங்கிற. கெவர்மென்டுல எதுக்கெடுத்தாலும் லோன்தரான். ஆப்பீஸ்ல சேலரி சர்டிகேட் வாங்கி, லோன போட்டு பூசு வேலை எல்லாம் முடிச்சி. மேல ரெண்டு ரூம்போட்டு. கிரகபிரவேசம் வைடானா. வீட்ட இப்படி வெச்சிங் கிறியே." என்று இலவசமான சலுகையாக ஆலோசனைகள் வழங்கினார்.
சாப்பாடு பரிமாறிக்கொண்டு இருந்த ஜீவன் மனைவி 'இவ்வளவு சுலபமான வழி இருக்க ஆறு, ஏழு மாசமாக வீட்டு வேலையே செய்யாமல் போட்டுவச்சிக் கிறாரே இந்த ஒதவாக்கர மனுஷன்' என்று தன் மனதில் திட்டிக்கொண்டிருந் தாள். நண்பர் போனபிறகுதான் கத்தி, கரண்டி வார்த்தைகளாக பறக்கப் போகிறது ஜீவன் அவசரமாய் நண்பருடனே கிளம்பிவிட்டான். ஜீவன் மனைவி "நீங்க எங்க போறிங்க. அண்ணன்தான் வண்டி எத்தாந்துகிறாரே."
"இல்ல...இல்ல போயிட்டு வந்திடுறேன்." என்று இருவரும் கிளம்பினார்கள். சற்று தொலைவில் வந்தவுடன் "ஏம்பா என் ஒய்ப் முன்னாடி அவ்ளோ ஈசியா சொல்லிட்டே லோன் கெடச்சிடுமாபா"
"நாளைக்கே பேங்குல போய் கேளு. மேனேஜர் நம்ம ஆபீசுக்கு அடிக்கடி வரவர்தானே கண்டிப்பா கெடைச்சிடும்."
நம்பிக்கை யூட்டும் வாரத்தைகள் மனிதனுக்கு எவ்வளவு உத்வேகத்தை கொடுக்கிறது. ஜீவன் இன்று பேங்கில் நுழையும் வரை அந்த வேகம் நீடித்திருந்தது. வங்கி வாசலில் அவன் தேவைக்கு அதிகமான லட்சங்கள் கடனாக தரப்படும் என்ற விளம்பரபேனர் புத்தம்புதிதாக தொங்கியிருந்தது. எந்த இடத்திலும் தனிப்பட்ட முறையில் அறிமுகமான ஆள் இருந்தால், அங்கு சுலபமான முறையில் பயனடைய மனசு அங்கலாய்க்கிறது. அறையில் மேனேஜரை பார்த்ததும் ஜீவனுக்கு உள்ளுக்குள் சந்தோசம். வணக்கம் செலுத்தி உள் நுழைந்தான். "இன்னாப்பா, இன்னா விஷயம்" என்றார் மேனேஜர்.
"வீடுக்கட்ட லோன் குடுக்குரீங்களானு, கேக்கலாம்னு வந்தேன் சார்."
"யாருக்கு லோனு"
"எனுக்குதான்யா.ஏற்கனவே ரெண்டு ரூம் போட்டிருக்கேன். ஆனா பூசுவேலை சன்னல் கதவு எதுவுமே செய்யல நீங்க லோன் குடுத்தா. இன்னும் ரெண்டு ரூம் போட்டு வீட்ட முடிச்சிடுவேன்."
தன் மேசைமீது சில பைகளும், ஷ்டேட்மென்டும் பில்லுகளும் நிறைந் திருந்தது. தொலைபேசியில் அழைப்பதாக உதவியாளர் சைகை காட்டுகிறார். அடிக்கடி கணினியில் பார்வையிடுகிறார். பேங்கு வேலை சாதகமாய் அமைவதற்கு மேனேஜரின் மனநிலை இனங்கண்டு வாடிக்கையாளர் பேசவேண்டி இருக்கிறது. இவைகளை கடந்து உன் மொத்த சம்பளம் எவ்வளவு என்று கேட்டவர் "அந்த சம்பளத்துக்கெல்லாம் அவுசிங் லோன் வராது. வேற ஏதாவது வருமானம் உண்டா."
"என் ஒய்ப் வீட்ல கடை வச்சிங்கிராங்க"
"அப்பிடியா சரி நான் சொல்றத எல்லாம் கொண்டுவா" என்று லிஸ்ட்டு போட்டார். ஆடிட்டரின் அஸஸ்மென்ட் வாங்கி எனச்சி, உன் ஆபீஸ்ல பே சர்ட்டிபிகேட் வாங்கிவா பிறகு பார்க்கலாம்." உறுதியாக ஆவணங்கள் சேகரிக்க சொல்லுகிறவர், பார்க்கலாம் என்ற வார்த்தையை கூடவே சேர்த்து சொல்லுவது ஜீவனுக்கு பயமாக இருக்கிறது. சமாளித்து "சரி வரேன்யா"என்று கிளம்பினான்.
தான் பனி செய்யும் இடத்திலும் போராடித்தான் தனக்கானதை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாரிகளின் செயலை காதலாக ஏற்றுக்கொள்வதும், மேடையில் வாழ்த்துக்கவிதை பாடவும் செய்கிறவர்களுக்கே நல்லமுட்டை. மற்றவர்க்கு நல்ல ஓட்டுக்குள் கெட்டகருதான் மிஞ்சுகிறது. பே சர்ட்டிபிகேட் வாங்கிவந்தவன் வங்கியில் நுழைந்தான்.
"என்னய்யா சர்டிகேட் வாங்கிட்டியா."
"அமாம் சார்" என்றவன் ஜீவன் சர்ட்டிபிகேடை மேனேஜரிடம் நீட்டினான்.அதை சரி பார்த்த மேனேஜர் "சரி இதோடு உன் பிளாட் பட்டாவையும் வைத்து எண்ணை விற்கும் தெருவில் இருக்கும் எங்க மெயின் பிரான்ச் மேனேஜர் பத்மனிடம் கொடு. இப்பவே போ நான் போன் பண்ணிபேசுகிறேன்." என்றார். ஒரு பேங்கு இன்னொரு பேங்கை கைகாட்டினாலும், பத்மன் என்றதும் ஜீவ னுக்கு சந்தோசம். நல்ல அறிமுகமானவர் உடனே அந்த பிரான்ச் போனான்.
"இன்னாப்பா லோனா. நீ நேரா இங்க வரவேண்டித்தான". என்று ஜீவன் கையில் இருந்த பேப்பரை வாங்கினார். இதை எல்லாம் வச்சிக்கோ இன்னும் எங்க இஞ்ஜினியர் கையில பிளான்வாங்கு, பிளாட்டுக்கு அப்புருவல் வாங்கு இதெல்லாம் வாங்கினு எங்க பேங்க்வக்கிலிடம் ஒப்பீனியன், வில்லங்கம் எல்லாம் வாங்கி வந்தாலும் உன் பேவுக்கு முன்று லச்சமெல்லாம் கெடைக்காது. இரண்டு லச்சம்தான் தருவேன். எல்லா பேப்பரும் ரெடி பண்ணிக்கினு வா" என்று லோன் பாம் கொடுத்தான்.
பாம் கையில் வந்ததும் ஜீவனுக்கு சந்தோசம். இருந்தாலும் எல்லா பேப்பர் தயார் செய்யவேண்டுமே, பணம் எப்படி சமாளிப்பது என்று சங்கடப்பட்டான். பணம் வருகின்ற வழி தெரிந்ததும், தைரியமாக முன் பணம் கடனாக வாங்கினான். நாவலில் வரும் கிளைக்கதைகள் போல் ஒவ்வொரு பேப்பர் கேட்டு ஒவ்வொரு பணமுதலாளிகளின் வீடுகளில் கால்கடுக்கவும், திரும்பத் திரும்ப வரவைத்தும் கடைசியில் . ஒண்ணு, சங்கரலிங்கம் இஞ்சினியருக்கு ஆயிரத்து ஐநூறு. இரண்டு, அரசின் கெடுபிடிகளை காட்டி பஞ்சாயத்து தலைவர் நான்காயிரம் பெற்றபிறகே பிளான் அப்ருவல் பேப்பராக வந்தது. முன்று, சட்டத்தின் ஓட்டைவழியாக வந்த பங்களாவா? என்று வியக்கு மளவுக்கும் உயர்வகை நாயின் மிரட்டல் இருந்தது. அதற்கு பயந்த பிறகே பணம் ஆயிரம் கை மாறுகிறது. பிறகு லீகல் ஒப்பீனியன் ஒரு ஜெராக்ஸ் பிரிதியாக கைக்கு வருகிறது.
எல்லா ஆவணங்களும் கைக்கு வந்ததில் நிம்மதியாய் இருந்தாலும். பேங்கின் வாசலை மிதிக்கும் போது பதட்டம் கூடிவிட்டது. ஜீவன் உள்ளே நுழையும் போது பத்மன் வெளியே வந்தார். "வணக்கய்யா. எல்லா பேபர்சும் கொண்டாந் திட்டேன்."
"ஏம்பா (நடந்துகொண்டே) என்ன பாக்காதே நான் போயிக்கிட்டே இருப்பேன். உள்ள பீல்டாபீஸரு இருப்பாரு, அவருகிட்ட காமி." மொத்த பேன்களும் வேகமாக சுற்றுவதை வைத்து வங்கி பரபரப்பாக இயங்கிறது என்று கணக்கிடு கிறார்கள் போல. ஆளில்லாத இடத்திலும் பேன் சுற்றியது. அந்த இடத்தில் தனக்கு சாதகமாக ஒரு காரியத்தை சாதித்துக்கொள்ள நினைக்கிறபோது. தேவையில்லாமல் (பதட்டம் என்பதைவிட) பணிவு அதிகமாக வருகிறது. ஏன் அப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தான். லோனை நம்பி ஐயாயிரம் கடன் வாங்கியிருப்பதை நினைத்துக்கொண்டான். முதல் தாக்குதல் அவன்மீது நடத்தவே எந்த இடத்திலும் கடைநிலை உழியரை வாசலில் நிற்கவைக்கிறது அதிகாரகங்கள். எதோ பயில் கொண்டுவந்தவனும் அந்த வங்கிக்கு அவனைத்தான் வாரிசாக நேமித்திருப்பதுபோல், வங்கி அதிகாரம் அவனிடம் பிரயோகிக்கும் அதிகாரத்தை, அவன் வங்கி வருவோரிடம் அப்பாவியாக பயன்படுத்துகிறான்.
"யாருபா.என்ன வேணும்" என்றான்.
"பீல்டாபீஸரை பாக்கணும் சார்."
"அதோ ரூம்ல ஒக்காந்து இருக்காரு பாரு அவர்தான். அப்படி கதவோரமா நில்லு. பாப்பாரு."
கதவோரம் நிற்பவர்கள் அதிக மனஉளைச்சலை சந்திக்கவேண்டியிருக்கும். ஜீவனும் சந்தித்தான். வந்தவர்கள் சிலர் நேராக உள்ளே நுழைந்தார்கள். நேரம் கழித்து அழைப்பு வந்தது. உள்ளே நுழைந்தான். "சார் மேனேஜர் உங்களை பார்க்க சொல்லிட்டு போனார்சார்". என்று பேபர்சை நீட்டினான்.
அடுக்காககொடுத்த பேபர்சை மொத்தமாக ஒருமுறை எந்திரன் 'சிட்டி'யைப் போல் பார்த்துவிட்டு. ஜீவன் பே சர்டிபிகேட்டின் பதவியின் பெயரை மட்டும் இரண்டாம் வகுப்பு தமிழ் வழியில் மனப்பாடம் செய்யும் குழந்தைபோல் திரும்ப திரும்ப பார்த்தார். அதன் மீது அவர் செலுத்திய இழிவான பார்வை அவர் கண்ணில் தெரிந்தது. அப்பார்வையின் அர்த்தம் விளங்கிக்கொண்ட ஜீவனுக்கு வாங்கிய கடந்தான் நாபகம் வந்தது.
"ஏம்பா உனக்கெல்லாம் ஐம்பதாயிரம் தான் வரும்." என்றவர் உடனே பேப்பரை தூர வைத்துவிட்டார்.
"சார்.மேனேஜர் ரெண்டு லட்சம் தரேன்னார்சார்."
"யோ அவரு தரேன்னு சொன்னா அவராண்ட போய் வாங்கிக்க. உனுக்கு அவ்ளோதான் வரும். இஷ்டம்னா இங்க வாங்கிக்க. இல்லனா வேற பேங்குல போய் வாங்கிக்க."
மறுநாள் ஜீவன் பத்மனைப் பார்த்து பேசினான். "ஏம்பா பீல்டாபீஸரிடம் என்னமோ மொரப்பா பேசினியாமே. அவரு சீனியர் மேனேஜரிடம் பேசினாராம், உனக்கு அவ்வளவுதான் வருமாம். போதும்னா சொல்லு. பாக்கலாம். அதுகூட இப்ப ஒன்னும் பேசமுடியாது. நாளைக்கு வா." என்றார். ஒரு சுமுகமாய் நடக்கிற விஷயமென்றால் அதற்கு சாக்கு போக்குகளே கிடையாது. நடக்காத விஷயத்துக்கு காரணங்கள் புதுசு புதுசாக முளைக்கிறது. இரண்டு முன்று நாள் கடந்து மீண்டும் மேனேஜர் சொன்ன தேதியில் வந்து நுழைந்தான்.
நிமிர்ந்து பார்த்தவன் "என்னவேணும்" என்றான். அதற்குள் கணவனும் மனைவியுமாக மேனேஜர் அறையில் நுழைந்தார்கள். இருவரும் பளபளப்பாய் இருந்தனர். இவர்கள் நேற்று வந்தவர்கள் தானே என்று ஜீவன் யோசித்தான். "தம்பி கொஞ்சம் வெளிய இரு கூப்பிடுறேன்" என்றான். ஜீவன் வெளிய வந்தான்.
"நாளை உங்கள் வீடு விசிட்டிங் வருவார்கள். மறுநாள் உங்களுக்கு செக்கு குடுத்துடுவோம்." என்று சிரித்தான். கணவன் மனைவி சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது. கணவன் பக்கத்தில் இருந்தபோதும் அவன் மனைவியை மேனேஜர் அண்ணம்போல் அழகாக பிரித்து பார்வையால் மேய்ந்துகொண்டிருந்தார். பார்வையை மேயவிடுவதற்கு அனுமதிப்பதற்காகவே அக்குடும்பத்துக்கு பல லட்சம் தாரளாமாய் அனுமதிக்கப்படுகிறது. பெண் தனியாக செல்வதில் கூட சில நேரம் பெண்ணுக்கு சாதகமாகவோ சாதகமில்லாமலோ நடந்துவிடலாம். கணவன் மனைவியாக சேர்ந்து, அதுவும் ஆண் தலைமை ஏற்றிருக்கும் இடத்துக்கு செல்லும்போது, எந்த வேலையும் தொண்ணுறு விழுக்காடு அவர்களுக்கு சாதகமாகவே முடியும்.
வெளியே வந்து கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருந்த ஜீவனுக்கு கோபம் தலைக்கேறியது. விளங்க்கிகொள்ளமுடியாத திருட்டை கண்டுபிடிக்க குற்றவாளியின் நினைவுகளை அறிந்துகொள்ள எந்திரம் வைத்து சோதனை செய்வதைவிட. ஒரு அதிகாரியாய் வருவோரிடம் அவன் பழிவாங்கும் குணம் உடையவனா? புகழ்ச்சியை அதிகமாக விரும்புகிறானா? பெண் போதைக்கு அடிமையா? என அவன் தலையை சோதனை செய்துவிட்டு அதிகாரியாய் நியமித்தால் சிறப்புடையதாய் இருக்கும். என்று நினைத்தான். அக்குடும்பம் வெளியே போனதும் ஜீவன் உள்ளே நுழைந்தான்.
"ஏம்பா நான் உனக்கு எப்படியாவது லோன் தரணும்னு நெனைச்சேன். பீல்டாபீஸர மொரச்சிட்டயாமே. சே. உனக்கு உதவி செய்யலாமுன்னு நெனைச்சேன் இப்படி பண்ணிட்டியே. இனிமே என்னால ஒன்னும் செய்ய முடியாது.வேற எங்கனா முயற்சி செய்துபாரு."என்றான்.
"சார் வேற எங்க போகமுடியும். நீங்க தரேன்னு சொன்னதுனாலதான சார் பேப்பர்லாம் ரெடிபன்னேன். தெரிஞ்சவரே இப்படி சொல்றீங்களே. எல்லா பேப்பர்லயும் கொட்டையா போடுறான், எஜுகேசன் லோன் எந்த பேங்கும் இல்லன்னு சொல்லகூடாதுன்னு. போய் கேட்டா உன் வார்டு எது, அங்கபோய் கேளுன்றான். வருஷாவருஷம் வட்டி கட்டனும். கெவர்மென்டு தள்ளிடும்னு கனவுலாம் கானக்கூடாது. லோனுனு கேக்கும்போதே அவன் சொல்ற ஆயிரத்தெட்டு ரூல்ஸ கேட்டு கஞ்சிக்கு செத்த பெற்றோர் தலதெறிக்க ஓடாம இருக்கவே முடியாது. இல்லையே சார் நேத்துகூட மந்திரி பேட்டி குடுத்தாறேனு கேட்டா. எங்க ஜி.ஒ காட்டு. மந்திரி சொன்னா மந்திரிய போய் கேளுன்னு சொல்றாங்க. படிக்கிற லோனுக்கே அவ்ளோ பிரச்சனை இருக்கு. வீட்டுக்கு எப்பிடிசார் குடுப்பாங்க. நீங்களே ஒதவி பன்னுங்கசார். அனேகமாக கெஞ்சினான். அந்த நேரம் சுயமரியாதை, ஒரு மயிரும் தெரியவேயில்லை.
மேனேஜர் சீட்டு, ஜீவனை அறிமுகமில்லாதவனாக மாற்றி துரத்தியது. 'விளம்பரங்களுக்காக தனியார் மட்டுமல்ல, அரசும் தங்களை வாழ்வித்துக் கொள்ள ஆடையில்லா நடிகையின் உடலைத்தேடுகிறது '.என்று நினைத்தவன் காலங்கடந்து குடும்ப நல சேமிப்பு நிதியிலிருந்து கடனாக எடுத்து இருப் பதையேசரிசெய்து குடிபுக முடிவு செய்தான். நடந்தும் அதுதான்.
முன்கதவின் குறுக்கே கட்டப்பட்டு கட்செய்த ரிப்பன் இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்தது.வெளியே வாழைமரத்தில் கட்டப்பட்ட நல்வரவு சீரியல் பல்பு இன்னும் எரிந்தது. "யோ.யார்யா இந்த வீடு கட்ட மண்ண கல்லாக்கியதே நான்தான்யா எனக்கே டிப்பன் வைக்கலையா கூப்பிடுடா அந்த ஜீவன" என்று சத்தம் போட்டார் மன்னார்சாமி.
பக்கத்து இலையில் உட்கார்ந்திருந்தவன் "யாம்பா வச்சியிருக்குற எடத்த உட்டுட்டு. வைக்காத எடத்துல தேடுனா எங்கே இருக்கும்" என்றான்.
கைக்கு வந்ததை சாப்பிட்டு கை கழுவ சென்ற மன்னார்சாமி வீட்ட பார்க்கணும் என்று அடம்பிடித்து உள் அறையில் நுழைந்தான். சாபிட்ட குழந்த தண்ணீரை சிந்திவிட்டிருந்தது. அதன் மீது கால் வைத்ததும் மன்னார்சாமிக்கு வழுக்கி விட்டது.
"டே, இன்னாடா மசுரு ஊடு கட்டிக்கிறான் நடக்கும்போதே நகுறுது." என்றார் மன்னார்சாமி.
மன்னார்சாமி சொன்னது உண்மை என்பது ஜீவனுக்கு மட்டுந்தான் புரிந்தது.
நம்புழுதி
No comments:
Post a Comment