Friday, January 24, 2014

விமர்சனம்,



அதிகாரத்தின் தலையில் பாம்பின் விஷம்

“உப்பு இருக்குதா, என்னதான் கொழ்பு செய்யிறியோ“ எனும் குடும்பத்தின், கடவுளின் தரிசனங்களிலேதான் ஆண்மா வாழ்கிறது எனும் மதவாதியின் அன்பற்ற அரக்கத்தனத்தை சகித்து அரைவயிறு, கால்வயிறு நிரம்பியும் நிரம்பாமலும் வாழ்ந்துவிடலாம்.

ஒரு நிறுவனத்தின் தலைமையையும், நாட்டின் சர்வ அதிகாரங்களையும் பெற்றவர் கொஞ்சம் பெருமை, சாதாரண போக்கிரித்தனம் இருந்துவிட்டாலும் போதும். தன்மானம் உள்ளவனை புற்றுநோய்போல அறித்துவிடுவான்/வாள். அதில் ஆண்,பெண் பேதமில்லை. 

இன்று காலையில் ஒரு கிறித்தவ சிகிட்சை மையத்தின் கடைநிலை ஊழியனைப் பார்த்தேன். சற்று பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே அந் நிறுவனத்தின் கொத்தடிமை பிரயோகம் நிர்வாகத்தை அறிந்தவன். என்பதால் “அண்ணே, எப்படி இருக்கிறீங்க. வேலை எப்படி இருக்கிறது“ என்றுதான் கேட்டேன்.

கொஞ்சம் அதிவினோத விஷம் இருந்தால் அருந்திவிட்டு நாண்டுகொண்டு சாகலாம் அவ்வளவு துக்கத்தை, கொத்தடிமைத்தனப் புழக்கத்தை அடுக்கிக்கொண்டே போனார். அவர் துக்கத்தை சொல்ல நாம ஏன் சாகணும் என்பது நியாயமான கேள்விதான். ஆனால், ஒரு மனிதன் அல்லது ஒரு வர்க்கம் கண்னெதிரே படும் வேதனையை பார்த்து, கேட்டு சகித்துக்கொண்டு இருப்பது சாவதை விட லேசான காரியம் இல்லை.

“என் முப்பது வருஷ சர்வீஸ்ல இந்தமாதிரி ஒரு அரக்கத்தனத்தின் நிர்வாகத்தை நான் கண்டதேயில்லை. வாரத்தில எத்தனை முறை உபவாசம், எத்தனை முறை ஜெபப்பிரசங்கம்,  அத்தனை முறையும் எங்கள் தன்மானத்தை ஒடுக்குவதற்காகப் பயிற்சி எடுக்கிறார்களோ என்றுதான் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

தங்களுடைய நியாயத்தை விளக்கக்கூட என் முன்னே, பேசுவது இருக்கக்கூடாது. இளம்பெண்கள் ஓய்வுநேரத்தில் யாரிடமாவது எதேச்சியாக பேசினால் ‘அவனோடு ஓடிப்போவதற்கு போவதற்கு திட்டம்போட்டுட்டு வருகிறாயோ‘ ‘அங்க ஏன் நிக்கிற.‘ தண்டம்போட்டு சம்பளத்தை பிடிப்பது. கடைநிலை ஊழியர்களைக் கொத்தனார் வேலை செய்யவைப்பது. பணியாளர்களை ஜென்மம் சிந்திப்போகிற வார்த்தைகளால் திட்டுவது. இரத்தம் உறிஞ்சும் மிஷின் மிஷன்நிர்வாகம் செய்தால் நரகத்தை பூமியிலேயே அனுபவிக்கிறோம். எங்களை விடுவிக்க நாதியற்று நிர்கதியாய் நிற்கிறோம். வயிற்றுப் பிழப்புக்காகத்தான் தினந்தோறும் இத்தனை  வேதனைகளைச் சகிக்கவேண்டியுள்ளது. நிர்வாகத்தின் துதி பாடிகள் செழித்து வாழ்கிறார்கள். தாய் உள்ளம் கொண்டவள் பெண் என்கிறார்கள். அதிகாரம் கிட்டாதவரைதான்போல் இருக்கிறது“ என்றார்.

என்னால் மேலும் கேட்கவே முடியவில்லை. “அண்ணா, நான் வருகிறேன் என்று விரைவாக வந்துவிட்டேன். ‘யோபுவின் நேர்மைக்கு சாத்தானின் கடவுள் அனுமதிபோல‘ சிறு குழு நிர்வாகங்களின்  கடைசி அய்ந்து வருஷ நிர்வாகத்தை, கடவுள் சாத்தானின் தலைமையில் விட்டுவிடுவாரோ? என்று நினைத்துக்கொண்டேன். 

வேலையிலிருந்து வீடு திரும்பும்போது. கையில் பைசா இல்லை. நாளைய பொழுது எப்படி போகுமோ என்று நண்பரிடம் பேசிக்கொண்டே வந்தேன். “போடா. கடவுள் சும்மா விடமாட்டார். இஸ்ரவேல் மக்களை நாற்பது வருஷம் எவ்வளவு மகத்துவமாய் நடத்திவந்தார். நம்மை சும்மா விட்டுவிடுவாரா? என்றார். 
 
எனக்கு சட்டென காலையில் அந்தக் கடைநிலை ஊழியரின் வேதனைக் குரல்தான் நாபகம் வந்தது. ஆமா மயிரு. நாலு வருஷமா நிர்வாகத்துல மக்கிச் சாவுரவனைப் பற்றிப் பேச எந்தக் கிறிஸ்ததவனுக்கும் துப்பில்லை. இஸ்ரவேல் மக்களுக்கு பூட்டாணுங்க.“

டேனியல்  

Wednesday, January 15, 2014

கவிதை,

நிழல்

கறுப்பு மரம் தினந்தோறும்
அதன் வீரிந்த கிளைகளில் இருந்து
பூக்களைப்பூக்கிறது

வேர்களைச்சுற்றியத்
தரைப்பகுதி மலக்குவியல்,
சாக்கடை ஓடையென பரவிக்கிடக்கிறது

அதிகாலையில் மிகுந்த வாசத்துடன்
பூத்து உதிரும் அறிதான பூக்கள்
மெல்லியத் தென்றலைத் தழுவிக்கொண்டே
கீழே விழுகிறது

ஒன்று
தன் அழகிய இதழில் சாக்கடை குடித்தவாறு
வாசத்தைத் தொலைத்து நகர்கிறது.
இன்னொன்று
மலத்தில் நடவு செய்ததுபோல்
அமர்ந்து முகத்தைக் காட்டுகிறது
அதிலிருந்து எழும் நாற்றத்தின் வாடை
திசை நிறப்பி உலவுகிறது.

இருந்தாலும் கறுப்பு மரத்திலிருந்து
பூ உதிர்வதும் நிற்கவில்லை.
சாக்கடை ஓடுவதும் நிற்கவில்லை
மரணமும்மற்று, உயிர்த்தெழுதலுமற்று
நிலை கொண்டிருக்கிறது
பூமியின் சுழற்சிபோல் என்னைச் சுற்றும் நிழல்.

டேனியல்

Tuesday, January 7, 2014

விமர்சனம்,

'பூக்குழி'                                 பெருமாள்முருகன்

“மை வெச்சாளோ மாய்மாலம் பண்ணாளோ. பொய் ஆயிருச்சே…. போங்காலம் வந்திருச்சே.” அம்மாவின் அதிர்வு வசை கடைசிவரை புகையும், நெருப்புமாக தொடர்கின்றது. இந்த வசை தன் ஜென்ம விரோதிக்கு எதிரானதில்லை. தன் மகன் சம்மதம் இல்லாமல் நகர்புரத்தில் இருந்து இளம்பெண்ணை மணம் செய்து அழைத்து வந்துவிட்டான். 

இங்கிருந்து தொடங்குகிறது பெருமாள்முருகனின் “பூக்குழி” நாவல். குமரேசன் சற்று படித்தவன், தன்னுடைய வாழ்வாதாரத்தை தானே பூர்த்திசெய்துகொள்ளும் திறமையும், தங்குவதற்கான குடிசையும் அவனுக்கு சொந்தமாக இருக்கிது. ஆனால்,  கூரை வீட்டில் இருந்து தெருவில் போனால் “இன்னா குமரேசா, எங்க கௌம்பிட்ட.  வெய்யில் அதிகம் இல்ல, மழைவருமா?“ போன்ற வெறும் வார்த்தைகள்தான் எதிர்படுகின்ற கிராமத்தின் மாமனோ, மச்சானோ சிறவயதிலிருந்து பழகிய நண்பர்களோ அதிகபட்ச ஆருதலாக பேசப்போகிறார்கள். இதுகூட கிடைக்கவில்லையே என்பதுதான் குமரேசனுக்கு வருத்தம். கிராமத்தார் பற்றிக்கூட கவலையில்லை. பெற்ற தாயே முரட்டுத்தனமாக எதிர்ப்பதுதான் பெரும் வேதனை. குமரேசன் பரவாயில்லை. ஒருவேளை கிராம மக்களை வெள்ளந்தியானவர்கள் என்று நம்பி தன் சொந்த உறவுகளை விட்டு, குமரேசன் மீது இருந்த ஆவல், மற்றும் நேசத்தின் அடிப்படையில், வந்த இளம்பெண் சரோஜா நிலமையை நினைத்தால் அவ்வளவு வேதனை.

நாவல் பெரிய அடுக்குகளை நிறுவுகிறது. சமூகத்தின் பல நிலைகளை புகுத்தி வெளிக்கொண்டுவருகிறது. சாதிப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தின் தொடக்கப்புள்ளியாக விரிகிறது என்கிற பகட்டை எல்லாம் சொல்லமுடியாது. அது எடுத்துக்கொண்ட விஷயம் மிக… மிக லேசானது, நாம் அன்றாடம் ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் கேள்விப்படுவதுதான், ஆனால், அதைக்கொண்டுசென்ற விதத்தில்தான் அதன் சுவாரசியம், சாதாரண கிராமத்திலும் உச்சாணியில் குடிகொண்டிருக்கும் அதிகார வீச்சம், சாதியக்கட்டுமானம், பொறாமையின் வர்த்தகம் என்று மிக.. மிக விரிந்திருக்கிறது.

காதலிக்கிற ஆண், பெண் தன்னிச்சையான முடிவை எடுப்பதற்கு முன் ஒரே ஒரு முறை பூக்குழியை வாசித்துவிட்டு சுதந்தரமான முடிவை எடுக்கவேண்டும். சரோஜா நகர்புரத்தின் ஒரு சாதாரண கூலி தொழிலாளியின் மகள்தான். தாய் இல்லை. தகப்பன், ஒரு சகோதரன் இருக்கிறான். குமரேசனுக்கு தாய் மட்டுந்தான். மிகவும் பின் தங்கிய கிராமம். நிறைய ஆடுகள் வைத்திருக்கிறாள். குமரேசன் ஒரே பிள்ளை.  கிராம இளைஞர்களோடு வேலைக்கு அனுப்பாமல், குமரேசனை நகர்புரம் அனுப்புகிறாள். ஒரு சோடா கடையில் வேலைசெய்யும்போது காதல். திடீரென்று இருவரும் குமரேசன் கிராமம் வந்துவிடுகிறார்கள். அங்கு பாசத்துடன் வளர்த்ததாயும், கிராமமும் காதலர்களை ஏற்றுக்கொண்டதா அவர்கள் நிலை என்ன என்பதுதான் உச்சம்.

தகுதியான நேரத்தில் தன் பிள்ளை தகுந்த அழகுப்பெண்ணை நியாயமாக திருமணம் செய்து அழைத்து வந்திருந்தாலும், பெற்றத்தாய் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏன் தொடர்ந்து வருகிறது.  தாயிடம் முன் அனுமதி கேட்கவில்லையே என்ற காரணம் மட்டுமா? காலத்துக்கும் ஊரார் அவச்சொல்லில் நிற்கவேண்டுமே என்ற ஆதங்கமா? மேல் தட்டு, நடுத்தட்டு, கீழ்தட்டு எந்தத்தட்டாக இருந்தாலும் சாதி என்று வருகிறபோது, அது வெறும் சாணி அள்ள பயன்படுத்தும் அழகற்ற, அழுக்குப்படிந்தத் தட்டுதான் என்பதை அழகாக சொல்லிச்செல்கிறார்.

வெவ்வேறு சாதியில் இருந்து கலந்த காதல்தான் நாவலின் களம் என்றாலும்,  எந்த ஒரு இடத்திலும் ஒரு சாதியத்தை உயர்த்தி ஒன்றை தாழ்த்தி வைக்கிற பொம்மலாட்டங்கள் இடம்பெறவில்லை. ஆசிரியர் மிக நேர்மையாக சாதிய வித்தியாசங்களை கறுப்பு வெள்ளையாக வைக்கிறார். நிறத்தை வைத்தாலும் இரண்டுக்குமான உயர்வு, தாழ்வுகளை சுட்டவில்லை அதுதான் மிக.மிக முக்கியம். இன்னும் சொல்லப்போனால் கொச்சை சொல்லாகப்பேசும் பாத்திரங்கள்கூட எந்த இடத்திலும் முகம் சுளிக்கும்படியான சாதிய உயர்வு, தாழ்வுகள் பேசவில்லை.

மேலும் நாவல் இந்த வருஷங்கள்தான் என்பதை உறுதியாக சுட்டவில்லை என்றாலும், ஏறக்குறைய முப்பது வருஷத்து முந்தைய பழைமையும், தற்போது நகர்புரங்களிலும் புதிய வர்ண்ணம் தரித்து பரவி யிருக்கும் வாழ்க்கையை விளக்குகிறது என்று சொல்லிவிடலாம். ராமாயி ஒப்பாரி வைக்கும் கிராமியப்பாடல்களும், வட்டார வழக்கில்  மைறைந்துபோன அற்புதமான பழமொழிகள், தற்போது அருவருப்பாக எண்ணப்படும் பழைமையான அற்புத சொற்களை வாசிக்கிறபோது, வாசிப்பாளனை மீண்டும் தம் தம் பழைய வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்தை நினைவூட்டாமல் விடாது.  

சரோஜா வெண்நிறத்தில் மயங்கிய கிராமத்தின் ஆண்கள், பெண்கள் அவர்களோடு ஒட்டவும் முடியாமல், தள்ளிவிடவும் முடியாமல் தவித்துக்கொண்டு சுற்றும் தோரனை, ரசனை வாய்ந்தது. நாளுக்கு நாள் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை, நீரில் மறைந்திருந்து தீடிரென தலை தூக்கும் சாதிய நம்பிக்கைக்கொண்ட முதலைகளிடம்  தன்னை நம்பி வந்த ஜீவனைக்காத்துக்கொண்டும், தினமும் வயிற்றுப்பிழைப்பைப் பார்க்கவும் வேண்டிய சுழலில், சரோஜாவை இரண்டு நாள் தன் வீட்டில் விட்டு நகர்புரம் போகிறான். பத்திரமாக இரு நான் இரண்டு நாளில் வந்துவிடுவேன். என்று கடைசியாக சொன்ன வார்த்தைதான் சரோஜாவுக்கு ஆருதல். என்ன நடக்குமோ என்ற நிலையில் சரோஜாவிற்கு வயிறு கலக்குகிறது சற்று இருலடைந்த புதர் பக்கமாக மலம் கழிக்கப்போகிறாள். அங்கு தன் மாமியார் அவளை கொல்வதற்காக கிராமத்தலைகளுடன் ரகசியமாக பேசிக்கொண்டிருக்கிறாள். அய்யோ தன்னுடைய மாமியாரின் குரல்தான் இருள்டைந்த புதருக்குள் குலை நடுங்கி… நடுங்கி மறைகின்றாள். எல்லாத்தையும் நானே சொல்லிடுவேனு நினைக்காதிங்க. புத்தகத்தை வாங்கி அதன் உச்சத்தை நுகர்ந்து சந்தோஷத்தால் மனதைப் பூர்த்தியாக்குங்கள், உங்கள் ஆயுசுநாட்கள் சற்று நீண்டிருக்க.

எனக்கு குமரேசன்  அம்மா பாத்திரத்தை சரியாக சொல்லவில்லையோ என்பதாகப்படுகிறது. தன் மகனை படிக்கவைத்து கிராம பிள்ளைகளோடு போனால் கெட்டுவிடுவான் என்கிற அளவுக்கு பாசத்தை வைத்திருந்தவள், கலியாணம் பண்ணிக்கொண்டு வந்தபிறகு ஏறக்குறைய ஆறுமாதம் ஆனபிறகும் தன் நிலையில் இருந்து சற்றும் மனம் மாறாது தீவிரமாக சரோஜாவையும், குமரேசனையும் பரம எதிரிபோல் பாவிப்பதற்கு வேறுகாரணம் இருக்குமோ? ராமாயி இருபது வயதிலேயே கணவனை இழந்தவள். குமரேசன் படித்துவிட்டு இருந்தபோது  நகர்புரம் சோடா கடையில் சேர்க்க உதவிய நாட்டுக்கோழி முட்டை வாங்கும்பாய். கிராமத்திற்கு வரும்போதெல்லாம் ராமாயி வீட்டில் தங்குவதும் இருந்திருக்கிறது. குமரேசன் தன் ஜோடியை கூட்டிவந்த பிறகு பாய் வருவதேயில்லை. இதற்கும் ராமாயி கோபத்துக்கும் தொடர்பு இருக்குமா? அல்லது சாதி சனங்கள் ஊர் கூடி வாழமுடியவில்லையே என்ற வருத்தம் மட்டும்தானா? இப்படியான மிக நுணுக்கமான விஷயங்களை நாவல் சொல்லாததால் சற்று வருத்தமும் இருக்கிறது.

பழக்கப்பட்ட கதையம்சமாக இருந்தாலும் யார்கண்ணிலும் படாத பல விஷயங்கள் நாவல் வைத்துச்செல்வது சிறப்புக்குரியது.

         ஆசிரியர்              வெளியீடு               விலை

      பெருமாள்முருகன்        காலச்சுவடு.             ரூ.130/-

டேனியல் 

Tuesday, December 24, 2013

கவிதை,



எல்லாமே முடிந்து விட்டது
இனி நடப்பதை ஏற்றுக்கொள்வதினால்
என்ன மிஞ்சப்போகிறது.

ஒன்றுமில்லாமல் உருகுலைந்த பிறகு
புதிய நம்பிக்கை எதன் அடிப்படையில்
துளிர்விட சாத்தியம் இருக்கிறது.

போதும், நினைவிலிருக்கிறதை
ஒரு மின்னணுவின் தவறுபோல
துடைத்தழித்திவிட்டு
வெற்று மனம்கொண்டு
உடல் கணம் பூணும் முடிவாயிற்று.

தண்டவாளங்களை நம்பி வந்து,
பயணத்தை முடித்துக்கொண்டு
முற்றிலும் வெறுமையாகி
மீண்டும் தொடங்குகிறது
புதிய இலக்கு நோக்கி
இருதலைகொண்டு நீண்டு நிற்கும் ரயில்

கட்டணமற்ற வழிகள்
வீதியில் விருதாவாய் கிடக்கிறது
கண் பார்த்ததால்
மேலும்,வாழமுடிகிறது.

ஜேடி

அனைத்து நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு
 நல் வாழ்த்துக்கள்.

Monday, November 18, 2013

குறிப்பு,

                                                    90 விழுக்காடு


கிராமம் முழுக்க ஊதாரி குடிகார வாலிபர்கள்  90 விழுக்காடு உருவாகிவிட்டனர். என்று நினைக்கிறேன்.  இந்த சமூகம் என்னதான் பயிற்றுவிக்கிறது தெரியவில்லை.  அதற்கு யார் காரணம்? எது காரணம் அருதியிட்டு சொல்லவே முடியவில்லை.  சொஞ்சம் கூட சிந்திக்கிற அறிவை பயன்படுத்தவே இல்லையா? தாயின் மனவேதனையைப்பற்றி, தகப்பனின் பொருளாதார சிக்கலைப்பற்றி எதையாவது யோசிக்கிறார்களா? நம்முடைய வாழ்வில் யாரையெல்லாம்  மன வேதனைக்குள்ளாக்குகிறோம். நாம் உழைக்கிறோமே அந்த உழைப்பு சுரண்டப்படுகிறதா?  அல்லது சரியாகத்தான் கிடைக்கிறதா?   வஞ்சனையுடன் நம்மை ஆளுகை செய்கிறவர்கள் யார்? நமக்குள்ளே நம்மை காட்டிக்கொடுக்கிறவன் யார்?   அதிகாரம் யாரிடம் இருக்கிறது? அது நினைத்தால் சமான்யன்  ரோட்டில் நடமாடுவது சாத்தியமா? விடியும் நாட்கள் எல்லாம் சந்தோசம் மட்டுமே இருக்கும். அதை மீறி எதுவுமே நடக்காது என்ற தைரியமா?  இப்படி எதையுமே யோசிக்கத் திராணி அற்றவர்களாகத்தான் மேற்கூறிய 90 விழுக்காடு கிராம வாலிபர்கள் வளர்த்தெடுக் கப்படுகிறார்கள்.  இதற்குத்  தாய்த்தகப்பனாக  உலகமயம், ஊடுகளில் விரியும் ஊடகம் இருந்து வருகிறது.

பையன்கள் படிக்கும்போதே சகலத்தையும் செயலாக்கத்திற்கு கொண்டுவருகிறார்கள். பெரும்பாலும் முடிந்தவரைப் படிப்பது, வரவில்லை என்றால்  பாட்டன் வீட்டு பயிர் நிலம்போல தெரிந்த கம்பெனிகளுக்கு போவது. ரத்தம்  உறிஞ்சினாலும் பரவாயில்லை அவன் போடும் பிச்சைக்காசைக் கொண்டுவந்து வீட்டுக்கு கொஞ்சம் போட்டுவிட்டு, கூட்டாக சேர்ந்து தண்ணி அடிப்பது. சீட்டாடுவது. ரவுடித்தனங்களில் தன் பேச்சை நகர்த்துவது. சில நேரம் அதை செயல்படுத்தி பார்ப்பது.  தொடர்ந்து  இந்தக்  காரியங்களில் ஈடுபடுகிறார்கள். 

இவர்களை யார், எந்த அமைப்பு, எந்த மதம், எந்த பண்பாடு நல்வழிப்படுத்துகிறது? அது தேவை இல்லையா? ஏன் தேவையில்லை? இப்படிப்போனால் மிருகத்தைவிட கேவலமான                   நிலமைக்கு  மனித இனம் மாறுவதற்கு வாய்ப்பில்லையா? 

அப்பட்டமான முட்டாள் தனங்களை  மதங்கள் மூலமாக மனிதனுக்கு புகுத்துகிறார்கள் என்பதற்காக   கடவுளர்களை வெறுத்துவிடலாம், அந்த வெறுப்பின் கருத்துப்  பரப்பல்தான் நியாயமான நம்பிக்கையினால் ஏற்படுகின்ற அறத்தைக்கூட மனிதனிடம் இருந்து முற்றிலும் எடுத்துப்போட்டுவிட்டதா? 

மனிதனின் வாழ்வியலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்ற மூடத்தனங்கள் முற்றிலும் ஒதுக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், மனிதனிடம்  நியதியை  கட்டமைப்பதற்கு என்ன வழிவகை, எதின் மூலம்  வழிகாட்டப்படுகிறது. சமூகத்தில் அதற்கான தகுதி எந்த அமைப்பிடம், எந்த அரசிடம், எந்த இனக்குழுவிடம் இருக்கிறது. வழிகாட்டி இல்லாமல் புதிய புதிய சட்டங்கள் இயற்றப்டுவதால் மட்டும் நியதியை சமூகத்தில் மனிதனிடம் நடைமுறைப்படுத்த முடியுமா? 

குறைந்த பட்சம் பள்ளிகளில் அதற்கான   கொள்கை முடிவுகள் எதுவும் இல்லையா? அல்லது அதை உருவாக்க சாத்தியமே கிடையாதா? ஒரு மொழியை பயிற்றுவிப்பதுபோல் பிஞ்சு மனதில் தங்கும்படி மனித வாழ்வியல் நியதியைக் கற்றுக்கொடுப்பது குற்றமா? கலை பண்பாடுகளில், இலக்கியங்களில் அறம் சார்ந்த விஷயங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. மனித மனத்தை யோசிக்கச்செய்வதற்குக்கூட நியதிகளை படைப்புகளில் சேர்க்கக்கூடாது. அப்படிச் சேர்த்தால் அது படைப்பு கிடையாது என்று குப்பையில் தள்ளுகிற நிலைதான் தொடர்ந்து இருக்கிறது. 

மனிதனின் மனம் இல்லாமல் வெறும் காகிதங்களை  உற்பத்தி செய்துகொண்டிருந்தால் எதிர்காலத்தில்  அவனின் நிலை என்னவாக இருக்கும். கடந்த காலங்களில்  நீதிக்கதைகள், அறநெறி புத்தகங்கள் அதிக புழக்கத்தில் இருந்தபோதும், அதைப்பற்றி பேச்சுக்கள் தாராளமாய் நடமாடியபோதும்.   அக்கால மக்களின் மனநிலை எப்படி இருந்தது. ஒரு வேளை தற்போது அறிவுஜீவிகளால் அத்தன்மை வாய்ந்த எழுத்துக்களை புறந்தள்ளுவதால்தான்  மனிதத்தன்மை அருகிவருகிறதா? கலை, இலக்கியப் படைப்புகளில் தேவைப்படாத ஒழுக்கவிதிகள், அறநெறிகள் தனிப்பட்ட மனிதன் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும் என்று கூறுவது சரியா? இலக்கியங்களுக்கு மனிதனின் வாழ்வை சீர்படுத்துகிற வல்லமை உண்டு என்று வாதாடும்போது   அதில் நெறிபடுத்துகிற எழுத்துக்களை காய் மறைவாய், இலை மறைவாய் மனிதனின் மண்டையில் பதியவைப்பதில் என்ன தவறு? 

இப்படியான பயிற்றுவித்தலை எந்த சமூக அமைப்பும், கலை, இலக்கியங்களும் தற்கால இளைய   சந்ததிக்குக்  கற்றுக்கொடுக்கவே இல்லை. அதன் சாபக்கேடுதான் பொதுவாக, சற்று கூடுதலாக கிராமங்களில் 90 விழுக்காடு இளைஞர்கள்  காட்டு மிருகங்களாக உருவாகும் சூழல் பெருகிக்கொண்டே வருகிறது.

காரணம் என்ன? எது?ஏன்?  பேசவேண்டும்.

ஜேடி 




Friday, November 8, 2013

ஆங்கில எழுத்துரு வந்தால் ஜெயமோகன் அம்பானியாகலாம்

  ஆங்கில  எழுத்துரு  வந்தால் ஜெயமோகன் அம்பானியாகலாம்

தி இந்துவில் ஜெயமோகன் அவர்களின்  கட்டுரை வாசித்தபோது, சரி. பல வருஷஙகளுக்கு முன்பிருந்தே ஆங்கிலவழி படிக்கின்ற மாணவர்களிடம்  சாதாரணமாக புழக்கத்ததில் வைத்திருப்பதைத்தான் சொல்லுகிறார் என்று இருந்தேன். அதன்பிறகு பெருவாரியாக எழுகின்ற விவாதங்களைப்  படித்தேன். ஜெயமோகன் எழுதிய விளக்கக் கட்டுரையை வாசித்தேன். இரண்டாவதாக மீண்டும் தி இந்துவின் கட்டுரையை வாசித்தேன். எவ்வளவு சுலபமாக தன் குறைபாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ளமுடிகிறது என்று வியந்தேன்.

ஞாநி, தமிழ்செல்வன் போன்றவர்கள் ‘தற்காலத்தில் தமிழுக்கான பிரச்சனை என்ன? அதைத்  தீர்ப்பதற்கான முடிவு என்ன என்பதை சொல்லாமலே இதுதான் தீர்வு என்று வைக்கிறார்‘ என்றும். தமிழை உள் நோக்கத்தோடு சீரழிக்க முனைகிறார்  என்றும் தங்கள் வாதத்தை வைத்திருந்தார்கள்.

ஜெயமோகன் அவர்களின் விளக்கக்கட்டுரையில்  எதிர் தரப்பினரின் கேள்விகளுக்கோ, வாதங்களுக்கோ சரியான பதிலைத் தேடவேண்டி இருக்கிறது. பிராமி, சமஸ்கிருதம், மாலாய், தென்னாப்பிரிக்கா, ரோமன், காலனியம்  நிலபிரபுத்துவம், பெரியாரியம்,  எல்லாவற்றையும் பேசி எதிர் தரப்பினரை மிரட்டி வைத்துவிடுகிறார். அவர்கள் எழுப்பிய வாதத்திற்கோ, கேள்விக்கோ பதிலாக மிகக்குறைவான வார்த்தைகளையே விடுகிறார்.

விளக்கக்கட்டுரையில்  'ஒரு கருத்தை முன் வைத்து  எதிர்வினையை பார்ப்போம், முற்போக்கினர் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள். எத்தனைபேர்  பகுத்தறிவுடன் பேசுகிறார்கள்' என்று கணக்கிடுவோம். என்று சொல்வதே மிகவும் மோசமான தப்பிக்கின்ற உள்நோக்கம் கொண்டது.

ஜெயமோகனின் இந்தக்கூற்று ஞாநி, தமிழ்செல்வன் மேலும் தழிழ் பற்றாளர்களின் எதிர்ப்புக்கு வைக்கப்பட்ட நழுவும்  பதிலாகத்தான் புலப்படுகிறதே ஒழிய ஒரு விவாதம் வரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதல்ல என்று உறுதியாக சொல்லமுடியும். ஏனென்றால், மொழியை முற்றிலும்  முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள், தமிழ் பற்றாளர்களின் கைகளில் மட்டுமே இல்லை என்பது அவருக்கு தெரியாததல்ல.

ஒரு வேளை  தமிழ் நிலையின் எதிர்காலத்திற்கான உறுதியான  முன் மொழிவை சொல்வதென்றால், முக்கியமாக அரசின், உயர் கல்வியாளர்களின், கல்வி நிறுவன முதலாளிகளின்     கவனத்தை திசை திருப்ப முக்கியமான கருத்தோட்டங்களை தி இந்துவின் முதல் கட்டுரையில் வைத்திருக்க வேண்டும்.  உண்மையில் இதுவே நோக்கம் என்றால் நிச்சயம் புத்தக விர்ப்பனைக்கான  புள்ளி விவரம் வந்திருக்காது.  ஒரு வேளை  அதிகம் எழுதுபவராக இல்லாமல்  சொல்லியிருந்தால். அது ஒரு குறிப்பாக மட்டுமே  உணரப்பட்டிருக்கும்.


ஒரு நாட்டில்  நினைத்த மாத்திரத்திலே வேற்று மொழியை, தான் நினைத்த படி, நாடு முழுதும் பரப்பிவிடுகிற அரசுகளிடம், உயர்கல்வி நிறுவனங்களிடம் தன் வாதத்தை வைத்து பதிலை பெற நினைக்காமல், எண்ணைக்கு காஞ்ச தலையில் எரி நெருப்பைக் கொட்டி, புண்ணு சீக்கிரம் ஆரட்டும் என்று பொன்     மொழிகளைக் கொட்டுகின்றார்.

இவைகளை எல்லாம் முடித்துக்கொண்டு கடைசியாக இரண்டாம் முறை தி இந்துவின் கட்டுரையை வாசித்தபோது. எடுத்த எடுப்பிலேயே ஆங்கில புத்தகம் வந்த நாளிலேயே 2000 ஆயிரம் பிரிதிகள் விற்கின்றது. வாலிபர்களில் அதிகம்பேர் ஆங்கிலத்திலேயே வாசிக்கிறார்கள் என்று வியந்து வியந்து எழுதுகிறார்.

தமிழில் அதிகமாக எழுதுகிறவர் என்ற அடிப்படையில் தம்முடைய புத்தகம் ஆங்கில எழுத்துருவில் வந்தால் வாலிபர்கள், ஆங்கில மொழி கற்கும் பிள்ளைகளால் விற்பனை எகிறிவிடும் என்ற யோசனையின் அடிப்படை ஆர்ம்பப் புள்ளியாகக்கூட இருக்கலாம் என்று கருதத்தோன்றுகிறது. உண்மையிலேயே விவாதத்தை எதிர்நோக்கி எழுதி இருந்தால் நிச்சயம் ஜெயமோகன் கட்டுரையின் தளம் இன்னும் கருத்தாழம் மிக்கதாக வந்திருக்கும். இங்கு புத்தகம் விற்பனைப் பற்றியோ, எவ்வளவுபேர் ஆங்கிலத்தில் வாசிக்கின்றார்கள் என்ற கணக்கெடுப்போ வந்திருக்காது.


க.  KA வையும் ஒரே நேரத்தில் இரண்டையும் படிக்க சிறமப்படுகிறார்கள். ஜெயமோகன் அவர்கள்  இதைச்சொல்லுவது ஆச்சரியமாக இருக்கிறது. (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்) சைதைன்யா எஸ். ராமகிருஷ்ணனின் அவ்வளவு கதைகளை மொழிபெயர்த் திருக்கிறாளாமே கேள்விப்படவே இல்லையா? தற்கால சிறுவர்கள்  வெகு சீக்கிரத்தில் பல விஷங்களை ஒரே நேரத்தில் புரிந்து கொள்கிறார்கள். எப்போதும்போல, அரசின் சரியான கண்காணிப்புகள் இல்லாமல், கிராமத்தின் குழுந்தைகள் தான் சிறமப்படுகிறார்கள்.

''AMMAA  INGKEE  VAA  VAA''   உலகம் சுருங்கி வருகின்ற நேரத்தில் ‘அம்மா, இங்கே‘ ஆங்கில எழுத்துருவில் எழுதும்போது எழுத்துக்கள் எண்ணிக்கை கூடுகிறது.  மேலும்   இந்த முறையில் புழக்கத்தில் வந்தால் ஆங்கிலமும் சரியாக  கற்றுக்கொள்ளமுடியாது,  தமிழ் புழக்கத்தில் இருக்குமா என்பதும் சந்தேகம். 

எழுத்துரு மாறினாலும் அது தமிழின்  அர்த்தம்தானே.  வேற்று மொழிக்காரன் நம்மொழியை அறிந்து கொள்வதில் இன்னும் சிக்கலை ஏற்படுத்தாதா?  அப்போது மொழி  தக்கவைப்பது எப்படி?  ஒரு மொழியை எழுதுவதற்கு  தமிழ் தெரியணும், அதற்கான ஆங்கில எழுத்துருவும் தெரியணும். சரி அப்படியே நடந்தாலும் ஆங்கில மொழியை உருப்படியாக கற்காமல் வேலை வாய்ப்புகளில் என்னத்தை சாதிக்கமுடியும். பணக்கார பிள்ளைகள் எப்படியும் ஆரம்பம் முதலே உயர் தரமான மெட்ரிக் ஆடையை அணிந்து கொண்டு மேலை நாடுகளுக்கு பயணிப்பார்கள். ஒண்ணும் இல்லாதவன் ‘ஏ பி சி.டி‘மட்டும் வச்சிக்கிணு குண்டாஞ் சட்டியிலேயே சுத்தி வரணுமா?.

தன் கல்வி நிலையை உயர் தகுதியாகக்  கருதும் மெட்ரிக் கல்வி நிறுவனங்கள் தங்கள் பிள்ளைகளையும், கிராமங்கள், நகரங்களின் ஏழை எளிய பிள்ளைகளையும்  சமமாக்கும்  நிலை ஏற்படுமா? படிக்கும்  பிள்ளைகள் எல்லாரும் எல்லா பள்ளிகளில் சேரவும், தங்களுக்கு பிடிக்காதபோது எந்த அச்சுருத்தளும் இல்லாமல் விலகவும்  முடியுமா?  இருக்கிற சொச்சம் சிறுதொழில்களையும் ஒரு அப்பாவித்தமிழன் தன் வாழ்வா தாரத்திற்காக,  அதை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? அறுபது ஆண்டுகாலம் மாறி மாறி மக்களின் உணர்வுகளை மீறி ஆட்சி செய்யும் கட்சிகள் முடங்கி, சமூக அக்கறைக்காகவே உழைக்கும் ஒரு ஓட்டாண்டி தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்புக்கு வரமுடியுமா?  முக்கியமா தமிழுக்கு உரிய மொழியின், அழகிய, ஆழமான, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல், வெறும் ரெடிமேட் வத்தக்குழம்பு போல ஆங்கில எழுத்துருவில் வார்த்தைகளை வீசுவதாக இருக்குமா?

இவைகளுக்கு எல்லாம் சந்தேகமே மிஞ்சினாலும், புத்தகம் விற்பனை எகிறினால்  ஒட்டு மொத்த தமிழகமும் முன்னேறி விடுமா என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது.?


ஜேடி
‘





Wednesday, November 6, 2013

தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது எல்லாம்..... எனக்குள்ளும் இருக்கிறது.


தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது எல்லாம்.....
எனக்குள்ளும் இருக்கிறது.

கொஞ்ச நாளுக்கு முன்பு,  எந்தச்சூழ்நிலையிலும் நான் பெரிதும் மதிக்கும் உள்ளூர் படைப்பாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது. ஒரு விஷயத்தைச் சொன்னார். புதிதாக எழுத வருகின்றவர்கள். ஏன் அவசரப்படுகிறார்கள். சீக்கிரத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அப்போது நானும், அவரும் படைப்பைக்குறித்து விவாதமாக முரண்பட்ட  கருத்தை போனில் பேசிக்கொண்டிருந்தோம். 

(அவசரப்படுதல், வெளிப்படுத்தல்) வாக்கியம் என்னைக் குறித்தேப் பேசினார்.  ஆனால், அவரில் இருந்து புறப்பட்ட வாக்கியம் என்னை நேரடியாக காயப்படுத்துவதுபோல் வரவில்லை. அவரிடம் உள்ள மிக நெருக்கமான பண்பு அது. எதிர் வாதம் செய்கிறவர்களுக்கு, உவமானங்களின் மூலம் புரிதலை உணர்த்துவார். எதிர் நபருக்கு பெரிய அளவில்  மன உளைச்சலை ஏற்படுத்தாது. பெரும்பாலும் அவருக்குச்  சாதகமாகவே முடியும். நூற்றில் பத்து விழுக்காடுதான், எதிர் நபரின் கருத்தை ஆமோதிப்பதாக இருக்கும். ஆச்சரியம் என்னவென்றால் எதிர் நபரே மன திருப்தியாய், அவரின் கருத்தே சரி என  ஒப்புக்கொள்வார்.   பத்து விழுக்காடு அவராக, போனால் போகிறது என்று விடுவதுதான். 

 அப்படியா? விளம்பர விரும்பியா? ஒரு வேளை அவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்குமோ?  தன்னை ஒரு எழுத்தாளன் என்று காட்டிக்கொள்வதின் மூலமாக,  குறைந்த பட்சம் பக்கத்து தெருவில் இருக்கும் ரேசன் கடையில் கார்டு இல்லாமல் அரிசி கொடுப்பார்களோ?  அல்லது எதிர் வீட்டின்  நாட்டார் கடையில், 'இந்த மாசம் சம்பளம் வரல.  ஐம்பது ரூபா, ஒரு வாரம் கழிச்சித்தரேன்' என்றால் இவனெல்லாம் என்ன மனுஷன் என சொல்லாமல் விடுவார்களோ? அவர் சொன்னதை  வெகுநாட்களாக யோசித்துத்துக் கொண்டே இருந்தேன். 

மேலும், அந்த வாசகம்  உறுதிப்படும்படி  அந்த நேரங்களில் பல காரியங்களை செய்துகொண்டிருந்தேன். அதாவது பல சிறு பத்திரிகைகளுக்கு கதைகளை அனுப்புவது. தொடர்ந்து எழுதுவது. உச்ச கட்டமாக இணையத்தில் வரும்போது பழக்கமில்லாத தளங்களாக இருந்தாலும்,  சில நேரம் கதைகளை அனுப்புவது. அப்படிதான்   ஒரு முறை  மாமல்லனுக்கு, ஒரு கதையை அனுப்பியபோது “அலோ, மிஸ்டர் இனிமே கதை, கிதை அனுபுற வேலை எல்லாம் வச்சிக்காத என்று திருப்பி அனுப்பினார்.  இன்னொரு முறை மலைகள் இதழுக்கு, கதையை அனுப்பியபோது, சிபி செல்வன் நண்பரே  உங்கள் எழுத்தில் பிழைகள் வருகிறது. ஒரு எழுத்தாளன் ஒவ்வொரு முறையும் அகராதியைப் பார்த்துப் பார்த்து  எழுதமுடியாது என்றார். மேலும் உங்கள் அவசரத்துக்கு மலைகள் பயண்படாது என்ற தொனியில் சொல்லிவிட்டார்.   

ஆமாம், ஒவ்வொரு முறையும்  பார்த்து பார்த்து எழுதுவது மிகக்  கஷ்டம்தான். என்று உணர்ந்தேன். சற்றுநேரத்தில்  இல்லையே, ஒரே மூச்சாய் அகராதியை முழுதுமாக படித்துவிட்டால் எழுதுவது மிக மிக சுலபம்தானே என்று யூகித்தேன். ஆனால், அதை மெயிலில் அனுப்பவில்லை. நாம முட்டாள் தனமாகத்தான்  நடந்துகொண்டோம் வருந்தினேன். எதற்காக வருந்தினேன் என்றால் சிபி செல்வன் நண்பருக்கு  இரண்டு மூன்றுமுறை சாட்டில் கதைப்பற்றிக்  கேட்டுவிட்டேன். (அந்த சமயம் என் மெயில் முகவரி  யாரோ ஒருவரால் திருடப்பட்டு.  பல முறை விளம்பரச்  செய்தி என் மெயிலில் இருந்து எனக்கே வந்துகொண்டிருந்தது. அதனால், அனுப்பிய கதை போச்சோ இல்லையோ என்கிற பயம் இருந்தது, நிச்சயம் அவருக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன்.) 

இப்படி எல்லாம் செய்வதுதான் அவசரப்படுதல்  என்று ஆகிவிடுகிறதோ? தன்னை வெளிப்படுத்திக்கொள்ள துடிப்பதாக அர்த்தமோ?  என்று புரிந்துகொண்டேன். பிறகு என் அறியாமையை நானே வெறுத்து நொந்துகொண்டேன் இருந்தாலும் நாம்,அலங்காரத்தையோ, விளம்பரத்தையோ ஒருபோதும் கொள்ளையடிக்க விரும்புவதில்லை என்று, மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனாலும், இலக்கியம் என்று வருகிறபோது ஏன் இப்படி செயல்படுகிறோம் திரும்பத் திரும்ப யோசித்தேன். 

வாழ்வியல் நடைமுறைச் சார்ந்த அணுகுமுறையும், இலக்கியச் சஞ்சாரமும் ஒரேத்தன்மையான பழம் என்று எண்ணுவது சரியான பார்வையல்ல. என்கிற புரிதல் ஒரு மெல்லிய இழையாக விளங்கியது. என்றாலும்,  இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் மதிக்கத்தக்கவர் சொன்னது போல நாம் விளம்பர விரும்பிதானோ என்கிற ஐயம் இருந்துகொண்டே இருந்தது. 

மீண்டும் கொஞ்ச நாள் கழித்து,  நான் மதிக்கத்தக்வர்  புதிதாக இணையத்தை பயன்படுத்தத் தொடங்கினார். அவருக்கு கணினியின் செயல்கள் எல்லாமே புதிது.முதல் முறையாக அப்போதுதான் கைப்பழக்கமாகிறது.  சில நண்பர்களை வைத்துக்கொண்டு பழகினார். உடனே முகப்புத்தகத்தைத் தொடங்கினார்.  அதில் எப்படி எல்லாம் செயல்படலாம் என்று தன்னைவிட வயது குறைவானவர்களிடம் கேட்டுக்கேட்டு, தானே பேஸ்புக்கில் எழுதவும் கமெண்ட் போடவும் கற்றுக்கொண்டார். 

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், நன்றாக எழுதக்கூடியவர். ஒன்றிரண்டு கதைகள் எழுதியிருக்கிறார். அந்தக்கதையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. 'ஏங்க நீங்களாம் எழுதினால், என்னைப்போன்ற உதவாத ஆட்கள் எழுதுவதை விட்டுவிடுவோம். ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதவில்லை. கேட்டபோது. எங்க தம்பி, நாற்பத்தி இரண்டு வயசாகிடுச்சி இனிமே என்னத்த எழுதி நான் பேமஸ் ஆகப்போகிறேன் என்று சலித்துக்கொண்டு முடித்தார்.  

ஆனால், நான் குறிப்பிடுபவர் எழுபது வயதை தொடுகின்றவர். நினைத்தாலே ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு, இனிமேல் எதையாவது முயன்று பெறவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமே இல்லை. பேராசை இல்லாத தனி மனிதனுக்கு பூரணமாகக் கிடைக்கவேண்டிய எல்லாமே நிறைவாகப் பெற்றுக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். ஆனால், முகப்புத்தகத்தில் நண்பர்களைத் தேடவேண்டும். அவர்களின் பதிவுகளை வாசித்து  கமெண்ட் போடவேண்டும். சாலை வழியாக நடந்து செல்லும்போது இயற்கை அழகின் பிம்பங்களை படம் பிடித்து உடனே  தன் பக்கத்தில் பகிரவேண்டும். அடிக்கடி தனக்கு விருப்பமானதை எழுதவேண்டும். தட்டச்சு செய்வதில் சில நேரம் தவறு ஏற்பட்டாலும் தொடர்ந்து  பதிவுகளை போட்டுக்கொண்டே இருந்தார்.

அப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. அவர் செய்வது எல்லாமே தன்னை விளம்பரபடுத்திக் கொள்ளவோ,  அவசரப்படுகிறார் என்ற ஒற்றை அர்த்தத்துக்குள் மட்டும் அடக்கிவிடமுடியுமா? அவருக்கு அந்த விஷயம் மிகவும் பிடித்திருக்கிறது. செய்வதற்கான வாய்ப்பு வாய்க்கிறது. செய்யும்போது மனம் நிம்மதியை அடைகிறது. அந்த நிம்மதியை அடையத்தான் சற்று வேகமான செயலில் இறங்குகின்றார். என்று புரிந்தது. ஆனால், நான் யாரையுமே திருப்பிக்கேட்கவில்லை.

குறிப்பு- நகைச்சுவைக்காக மட்டுமே (புதியவர்களுக்கு வழிந்தா, தக்காளிச் சட்டினி. தேர்ந்தவர்களுக்கு  என்றால் மட்டும்  ரத்தமா?)

ஜேடி