Thursday, July 19, 2012

கவிதை


தனிமையானவரைச் சுற்றியிருக்கும்
மூன்று குடும்பங்கள்.

வெள்ளிக்கிழமை இரவுகேவிக் கேவி
இறந்த மூதாட்டியை
சனியன்று மாலை
யாரோ கண்டெடுக்கிறார்கள்
இத்தனைக்கும் மூதாட்டி
வாசல் திறந்தேப் படுத்திருக்கிறாள்
நீ
எப்போதும் எதிர்
வீட்டுக்காரனாகவே இருக்கின்றாய்.


சட்டம் இல்லை
ஆக, ஏன் விசாரிக்கனும்
வாதமாய் வைக்காதே
உறவற்ற மனிதர்
பக்கத்தில் தனியாய் இருத்தலை
விசாரிக்காத உன்னை,
சுற்றத்தாரை 
புதியச் சட்டங்களால்
தண்டிக்க
அதிகம் நேரம் பிடிக்காது

சாக்கும்  சொல்ல 
நீயாக உரிமை கோருகிறாய்
காலையில் முகம் கழுவ
சோப்பைக் கண்டெடுப்பதுபோல்
வீட்டு வாசலில் விட்ட
செருப்பைக் கவனிப்பதுபோல்
உங்களை வாழ்வித்துக்கொண்டே
அவர்களின்
மௌனமானத் தகவுகளை
சேகரிக்க மறந்துவிடுகிறீர்கள்.

குறைந்தது
மூன்று குடும்பம்தான்
பொறுப்பாளி
தனிமை வாசிக்கு
பக்கத்து வாசியாய் இருப்பதால்

உறவற்றவர்
எங்களிடம் சங்கடப்படுகிறார்
என்பதை கணக்கில் கொள்ள முடியாது
மூன்று குடும்பம்
எதை வைத்தாவது
ஒழுங்கமைத்துக்கொள்ளுங்கள்
அவர்
உங்கள் தொடர்பில் இருப்பதை.

குறைந்த பட்சம்
உறவற்ற நம்மை
இச்சமூகம் கவனிக்கிறது என்ற
நிம்மதியுடனாவது போக
உங்கள் விசாரிப்பை
அன்புடையதாக்கு

உறவற்றவர்க்கு
பணப்பாதுகாப்பைத்தர
நிர்பந்திக்கவில்லை
அவர்களால் முடியாத பட்சத்தில்
குறைந்தது
அரசின் இலவச முகாம்களையாவது,
ஆபத்தைத் தடுக்கும்  எச்சரிக்கையாவது
கண்டடையச்செய்து
கடுமையான புதிய
சட்ட தண்டனையிலிருந்து
தப்பிக்கொள்ளுங்கள்

தனிமையானவரைச் சுற்றியிருக்கும்
மூன்று குடும்பங்கள்.

ஜே.டி

 .



Monday, July 16, 2012

நாவல்

நாவல்                                                    ஆல்பம் 
தொடர்-சரளா 6

அவள் ஒவ்வொரு கட்டத்தைக் கடக்கும்போதும் அண்ணனையோ, அப்பாவையோ எந்த நிர்பந்தத்துக்கும் ஆளாக்கவில்லை. ஏற்ற வயதில் பூப்படைந்தாள். சடங்கு முடிந்ததும் மற்றப் பெண்களைப்  போலவே கூலி வேலைகளுக்குப் போனாள்.  அவளுக்கு எந்த நடிகைகளின் முன்மாதிரியும் கிட்டவில்லை.  நாங்கள் முழு பாதுகாப்புத் தருகிறோம் என்று இப்போது கம்பெனிகள் வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்வதுபோல் அப்போது அவளை எந்தக் கம்பெனியும் அழைக்கவில்லை. ஒரு தலையாரியின் வீட்டில் டேப்ரிக்காடரை சுற்றி நின்றிருந்த பெண்களும், ஆண்களும் “உள்ள ஆளு இருக்கிறாங்கடி அதான் அவன் சொல்றத, அப்படியே திருப்பிச் சொல்லுது“என்று அதி மேதாவித்தனமாக எல்லோரும் சொல்லிக் கொள்ளும்போது, சரளாவும் ஆச்சரியப் பட்டவர்களில் ஒருத்தியாக இருந்தாள்.

வாழ்க்கை அமைவதற்கு சிலருக்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது, சிலருக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் மிகச்சுலபமாக முடிந்துவிடுகிறது. மிகச் சுலபமும் அல்ல. மிகக் கஷ்டமும் அல்ல. சரளாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தேரின. அந்த நாட்களில் அவளுக்கென்று தனியான விருப்பம் வைத்துக்கொண்டதில்லை. அதற்காக அவளுக்கு எந்த ஆசையும் இருக்கவில்லை என்று கறாராகவும் சொல்லிவிடமுடியாது. குடும்பத்தை அதிக வருத்தப் படுத்துவதில் அவளுக்கு விருப்பம் குறைந்திருந்தது.

ஒரு  சுவையான தேநீரில் கூட ஒரு குடும்ப உறவு  உருவாகிறது. அப்படி இணைகிற ஆயிரக்கணக்கான ஜோடிகளில் சரளாவும் ஒருவள். வாழ்நாள் முழுவதும் சிறிது கருத்துவேறுபாடும் இல்லாமல் வாழவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டவள் அல்ல. அவள் வருமானத்தை எதிர்பார்க்கிற கணவனாய் இருந்தாலும், கணவன் செய்கிற எந்த வன்முறைகளையும் நல்லவைகளையும் பிரித்து புரிந்துகொள்கிறவள். ஆனால், நேர்மாறான வன்தான் அவளுக்கு வாய்த்தான். மேலும் உழைக்கத் தெரியாதவன் என்றாலும், இவள் உழைத்துவந்ததையும் சேர்த்து குடித்தழிக்கும் பன்புள்ளவன். சரளா குழந்தைப் பருவத்திலிருந்தே அதிகச் செல்வாக்கு இல்லாமல் போனாலும், வயிறு காய்ந்து வளரவில்லை. எட்டாவது வரை பள்ளி அனுபவம் உண்டு.

தந்தை, அவள் திருமணத்தை நல்லபடியாகத்தான் நடத்தினார். அவள் மிக மென்மையாகவே இருந்தாள். ஆனால், அவளுக்கு ஏற்பட்ட இரவு அனுபவங்கள் மிகக்கொடூர மிருகத்தைக்காட்டியது. அவள் சகிப்புத் தன்மையை மீறித்தான் முடியாமல் அடிக்கடி வெளியில் ஓடிவருகிறாள். அப்படி ஓடி வரும்போது புடவையைச் சுருட்டிக்கொண்டு, ஜாக்கட் வாய்பிளந்த நிலையில் பதட்டத்துடன் இருப்பாள். அவனின் பெற்றோர்கள் ஏதாவது பேயின் தொடுப்பு இருக்குமா என்று ஆலோசனைச் செய்து மீண்டும் அறைக்குத் துரத்தினார்கள். கணவனைவிட இவர்களுக்கு அது தினம் தினம் நிரைவேறவேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். சரளாவை அந்த அறைக்கு அனுப்புவதுகூட அவளுக்கு மனக்கசப்பைக் கொடுக்கவில்லை. இன்பத்தில் திளைக்கிற ஒரு நிகழ்வு, இந்தளவு மன நோவைக் கொடுக்க என்னக்காரணம், யாருக்கும் தெரியவில்லையே என்று வேதனைப்பட்டாள். இதற்கிடையில் அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று பரப்பப்ட்டது. இது ஒருவகையில், இரவுத்துன்பங்களில் இருந்து விடுபட சரளாவுக்குச் சரியான மருந்தாகவே இருந்தது. இதன் பாசாங்குகளைச் சற்றே கடைபிடித்தாள். அதுவே, அவளைத் தாய்வீட்டுக்கு அனுப்பக்காரணமானது. அது சரளாவுக்குச் சந்தோசம்தான். இருந்தாலும் இரு பக்கத்தூற்றலும் அவள் காதுகளைப் புண்ணாக்கிக்கொண்டே இருந்தது.

காதுகளின் புண் இதயம் வழியாகப் பாய்ந்து உடல் முழுதும் உள் ரணமாகிக்கொண்டே இருந்தது. ஆனால், அவளின் தோல் பளபளப்பாகவே இருக்கிறதென்று பார்க்கிறவர்கள் சொல்லிக்கொண்டார்கள். கல்யாணம் செய்துகொள்ளாமல் மனித வாழ்வு நிறைவு பெராதா? கடைசிவரை வாழ்வதற்கு  மனிதன் ஏன் ஆசைப்படவேண்டும். எல்லா உயிர்களும் தன் வாழ்நாளை தக்கவைத்துக் கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறதா? அல்லது அப்படி செயல் இப்படி எல்லாம் அவள் யோசித்தாள். உனக்கு என்னத் தெரியும் அவள் சிந்தனையில் புகுந்தாயா? என்ற கேள்வியை எழுப்பவேண்டாம். அப்படிச் சிந்தனை இருந்ததால்தான், எந்த வலிக்கும் தொடர்ந்து சகஜமாக வாழ்கிறாள்.அவளிடம் ஒருநாளும் மாறுபட்ட செயல் வெளிப்பட்ட தேயில்லை.  சின்ன பிள்ளைகள்கூட அவளை சரளா என்றே அழைப்பார்கள். சில நேரம் கிண்டல்செய்வார்கள். கிண்டல் செய்கிறார்கள் என்று அந்தப் பிள்ளைகளிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருப்பதில்லை. யாரிடத்திலும் புகார் சொல்லுவதும் இல்லை.

அவள் மற்றப்பெண்களைப்போலவே நல்ல உடை அணிகிறாள். நன்றாக வேலை செய்கிறாள். அந்தப்பணம் வீட்டில் கொண்டுவந்துக் கொடுத்தால்தான் அண்ணனும் அண்ணிக்கும் முகம் மளர்கிறது. இல்லை என்றால் இரவு சாப்பாட்டுத்தட்டில் பாதி வயிறுக்கும் பங்கம்தான். பதார்த்தங்களாக ஊறுகாய்கூடக் கிடைப்பதில்லை. கல்யாணம் செய்துக்கொண்டவனுக்கும், தாயின் குடும்பத்திற்கும் வித்தியாசமேத் தெரியவில்லை. எதையும் அந்தந்த சந்தர்ப்பத்தில் வாழ்ந்துத் தீர்ப்பதுதான் வாழ்க்கை என்பதுபோலவே அவள் நடைமுறை இருந்தது. ஆறுமாதம் கழித்து மிக நல்லவனாக மாறிவிட்டான். இப்படித்தான் அவனின் அடிபொடிகள் சொன்னார்கள்.  சரளாவின் தகப்பன் சண்முகம்கூட அனுப்பிவிடலாம் என்றுதான் முடிவுசெய்தார். இதன்மூலம் தன் பிள்ளை, மருகளிடம் படுகின்ற பாடுகளைச் சற்றேனும் காணாமல் இருக்கலாம் என்று நம்பினார். 

சரளா, சண்முகத்திடம் பேசினாள். “அப்பா, நான் போவதில் உங்கள் யாருக்குமே வருத்தமில்லாதபோது நான் எங்குப்போனால் என்ன?. அண்ணன், குழந்தைப் பருவத்தில் பிஞ்சுக்கரங்களைப் பிடித்துத் தூக்கி, என் கன்னங்களை முத்தம் செய்தானா என்பது என் நினைவில் இருக்கவே யில்லை. தாயின் குடம்தூக்கித் தேய்ந்த இடுப்பில்தான். என் பிறப்புறுப்பும் தேய்ந்திருக்கிறது. நடை பயிலும் தருணங்களில் என்றாவது நீ, என்னைக் குளுப்பாட்டித் துடைத்தபோது என் பிறப்புறுப்பை கிள்ளி முத்தம் செய்திருக்கிறாயா? இவைகள் குழந்தைப் பருவத்திலேயே எனக்கு நடந்தேராதபோது. இந்நாளில் உங்களிடம் அதிகபட்ஷமாக  அன்பான சிறு உரையாடலையும் எதிர்பார்க்கமுடியாது. அப்பா, உங்களில் அம்மாவின் முகம் தெரிவதால் கூச்சமற்ற வார்த்தைகளை வெளிப்படுகிறேன். நீங்கள் எனக்கு கணவனைத் தெரிந்தெடுத்தற்காக உங்கள் மீது வருத்தப்பட வில்லை. தொண்ணுத்தொண்பது நபர்கள் ஒரே தன்மையில் இருக்கும் போது யாரிடத்தில் உண்மையைத் தேடமுடியும். ஆனால், வெளிப் படையாக, மிகச்சுலபமாகத்தெரியும் அவன் குணங்களை தெரியாததுபோல் இருந்துவிட்டீர்களே அதுதான் என்னால் தாங்கமுடியவில்லை. நான் மீண்டும் தவறு செய்கிறேன். நீங்களும் தொண்ணுத்தொண்பது பேரில் ஒருவர் என்பதை அடிக்கடி மறந்துபோகிறேன். உங்களுக்கு நாபகம் இருக்கிறதா? கல்யாணம் ஆன அதேவாரத்தில் தண்டுபோல் இருந்த கைகளில், முழங்கைக்குமேல் கறுத்தக் கொப்பளங்கள் காட்டியிருக்கிறேன். அப்போது எனக்கிருந்த கூச்சத்தினால் அதேக் கொப்பளங்கள் என் தொடையின் இரு பக்கங்களிளும் புண்ணாய்க்கசிந்தன அதைச் சொல்லவில்லை. அப்பா, இப்போது சந்தர்ப்பத்துக்காய் நான் பொய் சொல்லவில்லை. என் தொடைகளில் அதன் தழும்புகள் இன்னும் சாட்சியாய்  இருக்கின்றன. 

அப்பா, நீங்கள் நன்றாக யோசித்துப்பாருங்கள். உங்களால் தாங்க முடியாதபடி ஏதாவது பாரத்தை ஏற்றிவைத்தேனா? உங்கள் வாழ்வாதாரத்துக்கான பொருளை விற்று ஜிமிக்கி வாங்கியதால் நீங்கள் போட்ட அரை சவரன் ஜிமிக்கிக்கூட எனக்கு பாரமாகவே இருந்தது. தோல்களின் மேல் படிந்துக்கொள்கின்ற எதுவுமே என்னுடன் கடைசிவரை வரப்போகிறதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அப்பா, உங்கள் முகத்துக்கு மறைவாகச் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும், நேரடியாகவே சொல்லிவிட்டேன். பேய்ப் பிடித்தவள் என்றக்கட்டுக்கதை எனக்குச் சில சுதந்தரத்தைக் கொடுப்பதால் அந்தப் பட்டத்தை கவனமாகப் பாதுகாக்கிறேன். இதற்கு மேலும் போ என்றால், உங்கள் ஆசைப்படி போகிறேன். மீண்டும் வருவேனா? என்பது என்கையில் இல்லை.” என்றாள். சரளாவின் கண்கள் கலங்கி வடிந்தது. சண்முகம் அழுது வடிந்தார். 


நல்லவன் வேஷந்தரித்து வந்தவன் சரளா இல்லனா ஒரு கமலா என்று வேகமாக நடையைக்கட்டினான். 


தாய்மாமன் மகன் வெளியூரிலிருந்து வந்தபோது “எப்ப வந்தே மாமா, அக்கா எப்படி இருக்கிறது“ என்றாள். அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மூன்றுமாதம் முன்புதான் “என் சின்ன மாமாவ விட்டுட்டுபோக எப்பிடிக்கா மனசு வந்தது. பிஞ்சும் பூவுமா விட்டுட்டு போயிட்டியே அக்கா“  என்று அடித்துக்கொண்டு அழுதாள். இப்போதெல்லாம் சரளாவை யாருமே கூலி வேலைக்கு அழைப்பதில்லை. தன் பெரியப்பா வீட்டில், தன் தாய்மாமன் வீட்டில் ஏதாவது சொல்லும் வேலையைச் செய்துக்கொண்டு அவர்கள் போடும் சாப்பாடுகளைச் சாப்பிடுவாள். நாளுக்கு நாள் உருகிக்கொண்டே வந்தாள். அவள் அண்ணன், குடும்பத்தில் தண்டச் சோறுகள் கூடிவிட்டது என்று சாடிக்கொண்டிருந்தான். சண்முகத்தை பாதுகாத்துக்கொள்ளவே அவரால் முடியவில்லை. அவள் யார் வீட்டிலாவது பிழைத்துக்கொள்வாள் என்று சண்முகம் விட்டுவிட்டார். அண்ணன், குறிசொல்பவர்கள், பேய் ஓட்டுபவர்கள் கைகளில் சரலாவை ஒப்புக்கொடுத்தான். இன்னொரு மூன்று மாதங்களில் சரளா ஓடானாள். ஒண்டித்திண்ணையில் ஒரு நாள் பிணமானாள்.  சாவுக்கு வந்த தாய்மாமன் மகன் சரளாவின் முகத்தைப் பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் ஒரு இளம்பெண்ணின் வாழ்வு இல்லாமல் போவதற்கு யார் காரணம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

ஜே.டேனியல் 


Sunday, July 15, 2012

நாவல்


   நாவல்
 தொடர்-5                    ஆல்பம்

மாலா தன் கிராமத்தின் மண் சாலையைக் கடந்து பிரதான சாலையை நெருங்கியபோது, கௌரி புளியமரத்தின் கல்லிளிருந்து எழுந்து வந்துக்கொண்டிருந்தாள். முதலில் மாலாதான் கௌரியைப் பார்த்தாள். ஆனால், கௌரிதான் ‘மாலா நல்லா இருக்கிறியா’ என்று கேட்டாள். மாலாவின் கணவன் பிரபு சற்று முன் நடந்துக் கொண்டிருந்தான். கெளரியின் வளர்ந்த பிள்ளைக் கிராமம் நோக்கி ஓடினான். மணலும், ஜல்லிகளும் பெயர்ந்த சாலை ஊராட்சி மன்றத் தலைவரை நினைவுப்படுத்தியது. கௌரி இன்னொரு குழந்தையை இடுப்பில் வைத்திருந்தாள். மாலாவை விட, கௌரி நல்ல கலர்தான். ஏதோ வேண்டுதலுக்காக மொட்டை போட்டிருப்பாள் போல. குழந்தைகளுக்கும், அவளுக்கும் ஒரே மாதிரி மயிர் வளர்ந்திருந்தது. கௌரியின் காதுகளில் இரண்டு மூன்று இடத்தில் பொன் நகைகள் மாட்டியிருந்தாள். குண்டு ஜிமிக்கித் தொங்கிக்கொணடிருந்தது. வரும் வழியில் பாலுக்காக குழந்தை அழுதிருக்கும் போல’ புளியமர நிழலில்  பால் கொடுத்து எழுந்திருக்கிறாள். மார்புக்குக் கீழ் ஜாக்கட்டின் இரு கொக்கிகள் மாட்டப் படாமல் வெள்ளைப் பனங்காவின் அடி நிறமாக இருந்தது. அதன் இடையில் வாழசீப்பு, மாங்கா, குண்டு, நாணக்குழை, கால்சவரன் சேர்ந்து சரமாகத் தொங்கியது. 

மாலாவைப் பார்த்ததும் கௌரியின் முகத்தில் ஒரு வாட்டம் தோன்றியது. கௌரியின் இடுப்பிலிருந்து குழந்தையை மாலா வாங்கினாள். கௌரி கொக்கிகளைப் போட்டுக்கொண்டாள். மாலா குழந்தையின் வாயோடு தன் வாயை வைத்து முத்தமிட்டாள். குழந்தையின் வாய் பால் வாசம் வீசியது. நீண்ட நேரம் யோசித்தவள்போல ‘நல்லா இருக்கிறியா கௌரி’ என்றாள் அதில் மறக்க முடியாத ஆயிரம் கேள்விகள் இருப்பது இருவருக்கும் தெரிந்திருந்தது. ‘செக்கு மாடா சிக்குனபிறகு ஊட்டியில மேயமுடியுமா?’ எதோ இருக்கிறேன் என்றாள் கௌரி. இருவருக்குள்ளும் சம்ரதாயமான விசாரிப்பு முடிந்தது. கடந்து போன இளமைப் பருவத்தின் ஏமாற்றங்கள் இருவர் நெஞ்சுக்குள்ளும் முட்டிக்கொண்டிருந்தது. அவைகளைக் கிளரினால் ரணங்கள் இல்லாமலே வலித்துத் தொலைக்கும் என்று கௌரி பேச்சை மாற்றினாள்.

“எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னாங்க அதான் பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன். மாலா உன்னப்பத்திக் கூட கேள்விப்பட்டேன். வேணாம் மாலா ‘எரிந்து கரியானது காத்துலதான் பறக்கும்’ தட்டுல விழுந்ததுதான் வயித்த நிரப்பும் பார்த்து நடந்துக்க வரட்டுமா? உங்க வீட்டுக்காறர் ரொம்ப நேரமா நிக்கிறாருபாரு போய்வா” என்று குழந்தையை வாங்கினாள். மாலா குழந்தையை கொடுத்தபோது அதன் பிஞ்சு கால்களின் இதமான ஸ்பரிசத்தை உணர்ந்தாள். அந்த ஸ்பரிசம் ஞானராஜ் மாமா மகன் விக்டரைத்தான் மாலாவுக்கு நினைவுப் படுத்தியது.  

அப்போதெல்லாம் சேரியில் முப்பது நாற்பது வீடுகள்தான் இருந்தது. அதை வீடுகள் என்று சொல்ல முடியாது. கொட்டகைகள் என்றுதான் சொல்லவேண்டும் ஒரு குடிசையில் நுழையவேண்டுமென்றால் உடலை மடித்தால்தான் உள்ளே நுழைய முடியும், ஏறக்குறைய எல்லா வீடுகளுமே அப்படித்தான் இருந்தது. இதில் ஒன்று இரண்டுதான் தூலக்கட்டு வீடாய் இருக்கும். அப்படி தூலக்கட்டு வீடாய் இருப்பவர்கள்தான் சேரியில் வசதிபடைத்தவர்கள். அதிலும் உபரி சொத்துக்களாக எருமையோ அல்லது ஒரு ஜோடிக் கடா மாடுகளோ வைத்திருப்பவர்தான். தூலக்கட்டு வீட்டுக்காரரைவிட பணக்காரராகக் கருதப்படுவர்.

அப்படி எருமை மாடுகளை வைத்துக்கொண்டுதான் சேரியின் நிரந்தர பணக்காரர் லிஸ்ட்டில் கருப்பன், ஏகாளி அண்ணன் தம்பிகளின் கூட்டுக்குடும்பம் இருந்தது. அண்ணனுக்கு மூன்று பிள்ளைகள், ஒரு மகள் தம்பிக்குப் பிள்ளைகள் இல்லை. எல்லோரும் நல்ல உழைப்பாளிகள். கருப்பன் சேரியின் இரண்டாவது தலையாரியாக இருந்தாலும் எருமை மாடுகள்தான் ராசியான செல்வம் என்கிறக் கணிப்பை குடும்பத்தில் எல்லோரும் நம்பினார்கள். தம்பி கூலிக்கு ஏர் ஓட்டுவது. பெண்கள் மாட்டுக்கு புல் அறுத்துவருவது சாணத்தை வறட்டியாக்குவது என்று ஓயாமல் உழைப்பை நம்பினார்கள்.

சேரியில் முதல் முதலாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியது கருப்பன் குடும்பம்தான். இன்னும் நான்கு வருஷம் கழித்து மூன்று ஏக்கர் அதே இடத்தின் பக்கத்திலேயே வாங்கினார்கள். அந்நிலத்திற்குக் கீழ் திசையில் புறம்போக்கு நிலம் மூன்று ஏக்கர் மடக்கினார்கள். முதலில் நீர் பாசன ஏரிக்கும் அந்நிலத்துக்கும் மிகத்தொலைவானாலும் போகம் தவராமல் பயிர் செய்தார்கள். சிக்கனமும், உழைப்பும் குடும்பத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தது.

எருமை மாடுகள் விற்கப்பட்டன. பசுமாடுகள் கரவை மாடுகளாயின. கடாமாடுகள் காணவில்லை. செவளைக்காளை கூர்மையான கொம்புடன் குதிரையின் தேகத்தை ஒத்து கொழு கொழுவென்று இருந்தது. இதன் கழுத்தில் இரண்டு மூன்று மணிகள் சேர்ந்தார்போலக் கட்டியிருந்தார்கள். அதன் வயிற்றிற்கும், முன்னங்காலுக்கும் இடையில் இரு பட்டையாக கறுப்பு கயிறு கட்டியிருந்தது. உதிரிபாகங்களைப் பூட்டிக்கொண்டு மாடுகள் வெளியில் போகும்போதும், வரும்போதும் வாய்ப்பிளந்து பார்ப்பார்கள்.

பொன்னியும், ஐ. ஆர். ஐம்பதும் கருப்பன் வீட்டை நிரப்பியது. கௌரி இங்குதான் மூன்றாவதாகப் பிறந்தாள். அவள் வளர, வளரத்தான் செல்வம் கொழிக்கிறதென்று சேரியில் பேசிக்கொண்டார்கள். கௌரி இளமையின் பட்டத்தைத் தொட்டுவிட்டாள். முழுக்க முழுக்க நவீன தொழில் நுட்ப்பத்தோடு பராமரிக்கும் பூந்தோட்டத்தைபோல் இருந்தாள்.

கருப்பன் வீட்டுக்கு முன்தெருவில்தான் ஞானராஜ் இரண்டு மகன்களுடன் இருந்தார். இவர்களும் உழைப்பில் சளைக்காதவர்கள்தான். ஆனால், நாம் சாப்பிடுவதுபோல நம் கண்முன் திரியும் மக்களும் குறைவில்லாமல் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம்தான் ஞானராஜின் குடும்பத்தில் செல்வம் சேராமல் அடிக்கடிக் குறைத்துவிடுகிறது. இதுதான் காரணம் என்று தெரிந்தாலும் அதை ஞானராஜ் கண்டுகொள்வதேயில்லை. அப்படி இருந்ததால் சேரியில் ஞானராஜிக்கு மரியாதை கூடியிருந்தது. 

ஞானராஜின் மகன் விக்டர் தன் தந்தையின் மரியாதை, கருப்பன், மாமாவின் செல்வத்தைக்காட்டிலும் ஒன்றும் குறைந்ததல்ல. கௌரியை எந்தத் தடையும் இல்லாமல் நமதாக்கிக்கொள்ளலாம் என்று நம்பினார். கொளரியும் மனம் ஒத்து, விக்டரை அடிக்கடி  சந்தித்துப் பேசினாள். ரமேஷ் கௌரியின் அண்ணன். ரமேஷ்  விக்டரின் நண்பனும் கூட், அதனால் ரமேஷ் அவர்கள் நட்பை ஏற்றுக்கொண்டார். நண்பர்களின் முடிவு எப்போதும் பெற்றோர்களின் முடிவுஅல்ல. கருப்பன், விக்டருக்கு கௌரியை மறுத்தார்.

விக்டரின் நியாயமான ஆசையைப் புரிந்த ஞானராஜ் கருப்பனிடம் கையேந்தினார். முடியவில்லை. விக்டர் தன் தகப்பன் மனதைச் சஞ்சலப்படுத்தாமல் காதலில் இருந்து வெளியேறினார். விக்டர் வெளியேறுவதற்கு முன்பே கௌரி தேநீர் தந்து வெளியூர் பெரியவர்களுக்கு வந்தனம் செய்திருந்தாள். இந்தக் கடந்த காலங்கள் சீரான ரத்த ஓட்டம்போலவே, தங்கள் உடலுக்குள் எப்போதும் செயல்பட்டாலும் கன நேரம் அழுத்தம் தந்து இயங்கியது. அந்த நினைவை எந்த நோயும் தீண்டுவதில்லை. என்ற பார்வையோடு மாலாவும், கௌரியும் பிரிந்தார்கள்.

ஜே. டேனியல்

Thursday, July 12, 2012

கவிதை


தண்ணீறற்ற சாலையில்
அண்ணங்கள்
புல்லை மேய்கிறது.

பசுவும், ஆடும்
குட்டைச்  சுவரின்
போஸ்டர்களைத் தின்கிறது

இயற்கை
மாற்றங்களுக்கு
உட்பட்டே காலந்தள்ளுகிறது.

ஜேடி

Monday, July 9, 2012

கட்டுரை

                                     இரண்டு நாள் இலவச குறும்படப் பயிற்சி
                                                             இனிதே முடிந்தது.

  தமிழ் ஸ்டுடியோவின் அருண் இரண்டு  நாள் இலவசப் பயிற்சி நடத்த ஒப்புக்கொண்டார். அதிலிருந்து பயம்தான் கூடிவிட்டது. எப்படி இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது. ஆட்கள் வருவார்களா? என்ற பயம்தான். ஏற்கனவே தொடர்ச்சியாக இலக்கிய நிகழ்வுகள் நடத்தியவர்கள் பணத்தை செலவுசெய்தும் நிகழ்வுக்கேற்ற சரியான ஆட்கள் வராமல் ஏமார்ந்த கதையைத்தான் சொன்னார்கள். இருந்தாலும் சற்று கடினமாகத் திட்டமிட்டு களமிறங்கினால் ஒருவேளை வெற்றி கிட்டும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை கைக்கொடுத்தது. ஆனால், உள்ளூர் வாசிகள் திட்டமிட்டு நபர்கள் வருகையை கட்டுப்படுத்த வேண்டு மென்பதற்காகவே தங்கள் வருகையை நிறுத்திக்கொண்டார்களோ  என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

 சிலர் தாங்களே வேதாந்திகள் என்று கருதிக்கொண்டிகிறார்கள். எல்லாம் கற்றறிந்தவர்க் கூட, கற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லுகிற வார்த்தையை தங்கள் மனப்பதிவுகளில் இருந்து மறைத்து வைக்கிறார்கள். அதனால், இழப்பு இருதரப்பிலும் நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாமலேப் போகிறது. அழைப்பிதழ் கொடுக்கும்போது முகத்துக்கு நேராக நிச்சயமாகக் கலந்துகொள்கிறேன் என்று வாக்குறிதி தந்துவிட்டு நோட்டீஸ் கொடுத்தவர் கிளம்பும்போது கிழித்துக் குப்பையில் போடுகின்ற நபர்களாகத்தான் சிலர் இருக்கிறார்கள். அப்படிச் செய்வது ஏனோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருக்கிறது. ஆனால், இவர்கள் மற்றவர்களை இரக்கமற்றவர்கள், தகுதியற்றவர்கள் என்று கோஷமிடுகிறார்கள்.

மனித மூளையில் சின்ன வீம்பு, பெரிய ஆசையை, சக மனிதனோடு இணைந்து வருதலை மழுங்கடித்துவிடுகிறது. திரைப்படங்களில் ஈடுபாடு வைத்திருக்கிற உள்ளூர் நபர்கள் (தரை அரங்கம் சார்ந்த நண்பர்கள் தவிர்த்து) வரவேயில்லை. இதை குற்றமாகக் கூறவில்லை. வருவதும்,  வராததும்  அவர்கள் விருப்பம், இதில் ஒன்று மட்டும் வெளிப்பட்டு விடுகிறது. நல்ல சிந்தனை என்பதை அரிதாரம் பூசிக்கொள்ளும் போது மட்டும் வெளிப்படுத்துகிறார்களா? என்றே கேட்கத்தோன்றுகிறது. அவர்களால்   ஒரு சுமூகமான சமுதாயத்திற்கான வழியைக் கோடாகக்கூட போடமுடியுமா?.

   காஞ்சிபுரம் ‘தரை அரங்கம்’ இணைந்து நடத்திய இரண்டுநாள் இலவச குறும்படப் பயிற்சி (பத்திரிகை மொழியில் சொல்ல வேண்டும் என்றால் வரலாறு காணாத வெற்றி) காஞ்சிபுரம் அளவில் ஒரு இலக்கிய நிகழ்வு இத்தனைப் பொறுப்புடன் மிக நேர்த்தியாக, பயனுள்ளதாக, மிக முக்கியமாக மேடை ஒழுங்கை புறந்தள்ளி  நான் பார்த்தவரை நடந்ததில்லை.

பொதுவாக அருண்,  மாற்று சினமாவைக் குறிவைத்து அதற்கான முன்னோட்டப் பயிற்சியாக பல இடங்களில் தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் தன்னுடைய கற்றல், கற்பித்தல்  முறையை மிக இயல்பாக பார்வையாளர்களுக்கு கொடுக்கமுடிகிறது.  முதல் நாள் பயிற்சி தொடங்கியதும் நகரத்தின் மையப்பகுதில் மீட்டிங் ஒழுங்கு செய்ததால் வாகனங்களின் சத்தம் சற்று தடையாய் இருந்தது. கூர்ந்து கவனித்தவர்களுக்கு  அது ஒரு தடையாய் இல்லை.  இந்தப் பயிற்சியின் அடிப்படை நோக்கம் இரண்டு நாளில் கற்றுதேர்ந்துவிடுவதல்ல. இத்துறையில் ஆர்வமுள்ளவர்களை, அத்துறைக்குச் சரியான பாதையில் திருப்பிவிடுவதுதான்.  என்ற உள் கருத்தோடு நிகழ்வு தொடங்கியது. அருண் தன்னுடைய திறமையை நாள்முழுதும் வெளிப்படுத்தினார். முதலில் இத்துறைக்கு வருபவர்கள் இலக்கிய புத்தகங்களை வாசிக்கவேண்டும். வாசித்தல் மூலமாகத்தான் ஒரு நல்ல படைப்பாளியாக வரமுடியும், அதோடு பொதுவெளியில் மக்களின் செயல்பாடுகளை, எதார்த்தமாக வெளிப்படுத்தும் உணர்வுகளை கவனித்து அறிதல் வேண்டும். தொடர்ந்து தேடல் இருக்கவேண்டும் என்கிற கருத்தாடல்களை முன்வைத்து முதல் நாள் பயிற்சி இருந்தது.  மேலை நாடுகளில் திரைக்கதை எப்படி உருவாக்குகிறார்கள். அதற்கான அளவுகோள்கள் என்ன?  காட்சிப்பிரித்தல் எப்படி செய்யப்படுகிறது. என்னென்ன ஷாட்கள் இருக்கிறது.  வெளியில் இருக்கும் பிம்பத்தை பிரேமுக்குள் சரியாக அடக்குவது எப்படி?. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி  ஒருவர் சொல்லும் காட்சியை உள்வாங்கிக்கொண்டு எப்படி நடிக்கவேண்டும். போன்ற பல விஷயங்களை முதல் நாளில் கற்பித்தல் வழியாகத் தந்தார். மேலும் ஒரு குட்டிக்கதையைச் சொன்னார்.  அதற்கு, நீங்களே திரைக்கதை எழுதவேண்டும் என்றார்.  பத்து பத்து நபர் கொண்ட மூன்று குழுவைப் பிரித்து  அதில்  இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என்று தேர்வுசெய்தார். மறுநாள் அக்குழுவின் இயக்குநர் லொக்கேஷன் தேர்தெடுத்துப் படங்கள் எடுத்து வரவேண்டும் என்பதோடு ஒருநாள் நிகழ்வு நிறைவுற்றது.

இரண்டாம் நாள் மீண்டும் பல தொழில் நுட்பங்களை சொல்லிக்கொடுத்தார்.  பிறகு படம் எடுக்க குழுக்களை அனுப்பினார். மூன்று குழுக்களும் தங்கள் தங்கள் குழுநண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள். அதோடு மூணரை மணிக்கு மீண்டும் கூடியது. மூன்று குழுக்களும் எடுத்தப்படத்தை திரையில் வரிசைப் படுத்தி காண்பித்ததோடு அப்படம் எப்படி வந்திருக்கிறது. எப்படி வந்திருக்கவேண்டும். இது ஒரு குறும்படம் ஆவதற்கான தகுதியிருக் கிறதா? என்றெல்லாம் பேசினார். எடுத்தப்படங்களில் குறும்படமாக வருவதற்கு வாய்பிருக்கிறது. அதுவும் முயற்சியின் தன்மையில்தான் எடுத்துக்கொள்ளமுடியும். ஆகச்சிறந்ததாக படம் வரவேண்டுமென்றால் தொடர்ந்த முயற்சி வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்தார். வந்திருந்த ஆர்வளர்கள்கள் மிக உற்சாகமாய் தங்கள் ஆக்கங்கள் முதல் முதல் திரையில் காண்கிறோம் என்ற பெருமிதத்தோடு இருந்தார்கள். சிறு பிள்ளைகள் வருங்கால படைப்பாளர்களாக மினுங்கினார்கள்.

எந்த நோக்கத்தை முன்நிறுத்தி பயிற்சியைத் தொடங்கினோமோ அது நிறைவேறியது என்பதற்கு ஆதாரமாக இரண்டாம் நாள் நிகழ்வின் இறுதியில் பல நண்பர் பகிர்ந்துகொண்ட வாசகங்களில் சில-

 “நான் குறும்படம் எடுக்க ஏறக்குறைய ஒரு வருஷமாக முயன்றுவருகிறேன். அதற்கான செயலபாடுகளும் துவங்கிவிட்டோம். அதற்குமுன் இந்நிகழ்வின் அறிமுகம் கிடைத்தது. இரண்டுநாள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் இதுவரையில் எது குறும்படம் என்று நினைத்திருந்தேனோ அந்த எண்ணமெல்லாம் தகர்ந்துவிட்டது. இனி ஒரு நல்ல குறும்படம் எடுப்பதற்கான முயற்சியை புதிதாகத் துவங்கப்போகிறேன்.” என்றார்.
(வெங்கடேசன், சென்னை. வழக்குரைஞர்)

“நான் திருக்கழுக்குன்றத்திலிருந்து வந்தேன். எனக்கு சினிமாவின் மீது அதிகான காதல். நான் எப்படியாவது படத்தை இயக்கவேண்டும் என்ற அதிகமான ஆசையால் சீஷன் டிக்கட் எடுத்துவிட்டு தினந்தோறும் கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் சுற்றுவேன். பல இயக்குநர்களின் வாசல் படிகளில் காத்துக்கிடந்தேன். அவர்களெள்லாம் சினிமா பெரிய பிரமாண்டம் அது சிக்கிரம் உனக்கு பிடிபடாது என்றே அலட்சியப்படுத்திவிட்டார்கள். அப்படி இருந்த நிலையில்தான் தினமலரில் இச்செய்தியைப் பார்த்தேன். கலந்துகொண்டேன். அருண்சார் சொன்னது எதோக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டோம் இதுவேப்போதும் நேராக்ச்சென்று படம் எடுத்துவிடலாம் என்று இல்லாமல் தொடர்ந்து இலக்கியப் புத்தகங்களைத் தேடிப்படிப்பேன். இதைப்போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வேன். வாய்ப்பு வரும்போது நல்ல படம் எடுக்க முயற்சி செய்வேன்” என்று உணர்ச்சி மிகுந்த நன்றியால் சொன்னார்கள்.

இதுதான் இந்நிகழ்வின் வெற்றியாக நான் கருதுகிறேன். உள்ளூர் நண்பர்களுடன் வெளியூர் நண்பர்கள்  சேர்ந்த இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு செயல்பாடுகளில் இறங்கி செயல்படவேண்டும் என்ற வேண்டுகோளோடு   இந்நிகழ்வை ஏற்பாடு செய்தலில் இருந்து என்னுடன் ஒத்துழைப்புத்தந்த நண்பர் லோகநாதன், தரும, ரத்தினகுமார், காமராஜ், சிவா, பேனா முனைஅச்சக நண்பர் சண்முக சுந்தரம். உணவு ஏற்பாடு செய்துத்தந்த திருமதி. கவிதா இடம் அளித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. பாலாஜி. மீனம் நகலகம் உரிமையாளர் திரு. ராஷேஸ் ஆகியோருக்கும்.  
‘தினமலர்’ பத்திரிகையின் காஞ்சிபுரம் பொறுப்பாளருக்கும் தரை அரங்கின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். முக்கியமாக வெளியூர்களில் இருந்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

ஜே.டேனியல்








Sunday, June 17, 2012

கவிதை

                  
    கூர் தீட்டிய ஆயுதம்.

வானத்திலிருந்து அடிக்கடி நட்சத்திரங்கள்
தலைகீழாய்  விழுகிறது

பூமிப் புழுதியைக் கீறி
கிளம்பும் மூளையின் யோசைனைகள்
தன்  சுகவாழ்வை இழத்தல்
‘உயிர் இழத்தல்போல்’ கணக்கிடுகிறது 
இப்போராட்டத்தின் ஊடாகவே
கொத்துக்கொத்தான பூமியின் ஆவிகள்
வான் பயணம் ஏறுகிறது

நட்ச்சத்திரம்
விழாமல் இருப்பவைகளுடன்தான்
விழுகிறவைகளும்  இருந்தது
தன் இருப்பிடம் பரிக்கப்பட்டதா?,
விழுவதற்காகவே  அமைக்கப்பட்டதா?
விழுதலின் மன பாரத்தை 
சுமந்துகொண்டேவிழுகிறது.

ஏற்றம், இரக்கங்களுடன்
சந்தித்துக்கொள்ளும் நட்சத்திர +ஆவிகள்
உரையாடல் தொடங்குகிறது

விழாமல் இருப்பவைக்கு
விழுதலின் 
பாரமான நினைவலை வருகிறது, ஆனால் 
இதுவரை விழவில்லையாதளால்
என் வழியே 
நல்லதென்று நிம்மதி கொள்கிறது
அந்நிம்மதியே
விழுந்தவையின்
விழுதலை ஏற்றுக்கொள்கிறது

உரையாடல் இப்படித் தொடங்குகிறது
யாராலோ தள்ளப்படுகிறோம்
தள்ளுமளவுக்கு 
வஞ்சினம் என்ன செய்தோம்
விழுகிற நட்ச்சத்திரம் 
உள்ளுக்குள்அழுகிறது.

அழுகிற வல்லமை 
உனக்கு இருக்கிறது
அடடா இது நல்ல உத்திதான்
அழுகிற குழந்தை
பெற்றுக்கொள்ளாமல் 
இருப்பதில்லை

நீ எப்படிக் 
குழந்தைத் தனமானாய்
அன்பைக் கிரயமாக 
வைத்திருப்பவனிடம்
சாத்தியப்படலாம்
அனைத்தும் எனகென்பவன்
அழுகையை மதிப்பானா?

அழுகையில்
சாதித்த சாத்தியங்கள் உண்டுதான்
அழுகிறவரின்
வாழ்வைப்பொறுத்து
அரங்கேறுகிறது வெற்றி
போதிமரப் புகழ்
ஒரு வகை அழுகையின்
வெளிப்பாடுதானே 

கணவாய்களை, தீவுகளை 
கண்டவன் அங்கங்கே கொடிநாட்டி
கொள்ளையிட்டபோது
வெள்ளைத் துப்பாக்கியை
வெண் புறாவாக்கியது
ஒரு வகை அழுகையின் வெளிப்பாடுதான்

2006ன் சோகக் கடற்கரையில்
மணலில் புதையுண்டவள்
கைகள்
வெளியில் 
விரிந்து கிடந்ததே
அது கடசிப்பயனத்தின்  
முடிவற்ற அழுகையின் வெளிப்பாடுதானே 
 
அழுகையின் வெற்றி
அன்புடன் நட்பையும் வளர்க்கிறது
நீண்ட நாட்கள் கடந்தும்

இருட்டுக்குள்
விரிந்து திரியும் 
கூர் தீட்டிய ஆயுதங்கள்  
மிரட்டி  கொல்லும் 
சற்று நாளில் 
கூர் மீண்டும்
பாய்ச்சியவன்  
பக்கமாக மாறிக்கொள்கிறது
திரும்பவும் கொல்லுதலையேச் செய்கிறது
கூர் தீட்டிய ஆயுதம்.

ஜேடி


 

Monday, June 4, 2012

சிறுகதை

             தமிழாசிரியரின் காதுக் கருவி


நம்மையே, நம்பி இருப்பவரைக் கொலை செய்ய நினைக்கிறோம், சீக்கிரமாகவே மரணித்துப் போகிறார்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுகிறபோது. புலவர் என்ற பட்டப்பெயருக்கு முழுத்தகுதிவாய்ந்த தழிழாசிரியர். நேற்றுதான் இறந்துபோனார். ஒரு குடையின் கீழ் எல்லா இடங்களையும் கால் நடையாகவே கடந்துவிடுவார். வயதுக் கூட இருந்தாலும், இறந்து போகிற வயது இல்லை.  ஒருதனியார்ப் பள்ளியில் பணிபுரிந்து 1993ல் ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்றாலும் பள்ளி அலுவலகத்தில் தன்னார்வமாக பணிசெய்தார். அரசின் எந்தச் சிக்கலான அரசாணைகளையும் வாசித்துத்  தெளிவான விளக்கம் தருவார். அதேபோல, அவசர தபால்களை எழுதி அனுப்புவதற்கு அவரை விட்டால் ஆளில்லை. சில நேரம் முதன்மைக் கல்வி அலுவலகமோ, மாவட்டக் கல்வி அலுவலகமோ  அவசரக் கடிதத்திற்கு பதில் கோருவார்கள். அந்தநேரம் தலைமை ஆசிரியர் எங்காவது மீட்டிங் சென்றிருப்பார். அந்நெருக்கடியைத் தீர்க்க, தலைமையாசிரியராக நின்று அச்சுப் பிசகாமல் குறித்தநேரத்தில் தபால் அனுப்பிவைப்பார்.

பள்ளியில் எந்தத் தேர்வுகளையும் நடத்துவதற்குச் சிறப்பான முறையில் திட்டமிடுவார். காலையில் பூத்த ரோஜா இதழ்களில் பனிமுத்து ஒட்டியிருப்பதுபோல் அவரின் கையெழுத்து இருக்கும். ஒரு தலைமை  கிளர்க் செய்கிற பணிக்கு, எந்த வகையிலும் குறைவில்லாமல் செய்வார். அதற்காக பள்ளியில் மிகக்குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. வெண்மையான வேட்டி, முழுக்கை சட்டைதான் எப்போதும் அணிவார். வேட்டியை வயிற்றின் நடுப்பகுயில் ஏற்றிக் கட்டுவார். ஒருமுறைக் கட்டிவிட்டால், அவிழ்வதற்கு பயப்படும். பள்ளி வளாகத்திற்குள் வந்ததும் குடையை மடித்து ஊன்றிக்கொண்டு வருவார். இடக்கையில் ஒரு மஞ்சள் பை இருக்கும். அலுவலகத்தில் வந்ததும் குடையை ஒரு ஜன்னல் கம்பியில் மாட்டுவார். சீட்டில் அமர்ந்திருக்கும் கிளர்க்குகள் வணக்கம் வைப்பார்கள். அந்த வணக்கங்களில் வேலை இருக்கிறது  என்ற கெஞ்சல் இருக்கும். கிளர்க்குகள் இல்லாத என்னைப்போன்ற நபர்கள் வைக்கும் வணக்கங்களில் சிறு கிண்டல் இருக்கும். ‘சில உதவியாளர்கள் எதுக்கு இந்தக்கிழவன் வருது, வயசான காலத்தில் எங்கனா வீட்டில் இருக்காம’ என்று முணுமுணுப்பார்கள். ஆனால், எனக்கு அரசு ஊதியம் வாங்குகிறவர்களை வேலை செய்யவைக்காமல் பாவம் எல்லாவற்றையும் இவர் செய்துகொடுக்கிறாரே என்ற வருத்தம் இருந்தாலும், அவர் வந்தால் சந்தோசம்தான். நான் அவரிடம்  நண்பனிடம் கிண்டல் செய்து மகிழ்வதுபோல பேசுவேன். அவர் அதற்கு, எதிர்பதமாக கிண்டலடிப்பார். சில நேரம் தாமாசாகவே குத்தியும் காட்டுவேன். உதாரணமாக “அய்யா, ஒரு வேலைக் கற்றுத்தராதீங்க. எதுக்கு எல்லா வேலை நீங்களே இழுத்துப்போட்டு செய்யிறீங்க. உங்களுக்கு வயசாயிடுச்சி. இப்பள்ளியில்  உங்களால ஒரு வாரிச உருவாக்க முடியலையே?'' என்பேன். அதை ஒப்புக்கொண்டவராக “ஏம்பா நானா செய்யக்கூடாதுன்னு சொல்றேன். நீங்ளா வந்து கத்துக்கணும்.” என்பார். இந்த உரையாடல் சிலநேரம் அவரை உறுத்தும். அதற்காகவே என்னை அடிக்கடி முக்கிய வேலைகளில் ஈடுபடுத்துவார்.

மஞ்சள் பையை தான் உட்காரும் சேருக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்வார். 'அய்யா, பையில் என்ன பலமாக இருக்கிறது. என்று  பார்க்கமுற்படும்போது. ‘ஏ புளியாவெரை, ஒண்ணும் இல்லடா? கோயிலுக்கு போயிவரேண்டா’ என்பார். பையில் முழுத்தேங்காய் இருபாதியாக இருக்கும் சிறிதளவு பூவும், சில பழங்களும் இருக்கும். சில நேரம் காலையில்  கோயிலுக்கு சென்று வருவார்.

அரசுத்தேர்வு நேரத்தில் விடைத்தாள் பண்டல்செய்வோம்,  அப்போது  பைத் துணியின் வாய்ப்புறம் சற்று நீண்டு இருக்கும் அதைக் கிழித்து அய்யாவிடம் காட்டுவேன். 'அய்யா, கோவணத்திற்குச் சரியாக இருக்கும்' என்பேன். “டே, புளியாவெரை நீயே வச்சிக்க. உனக்கு உதவும் என்பார்”.

இதெல்லாம், ஒரு ரகசியம் போலவே தமாசாக நடக்கும். சற்றுத் தள்ளி பண்டல்களையே கவனித்துக்கொண்டிருக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் போகாது. இருந்தாலும் வேலை நடந்தால் சரி என்று அமைதியாய் இருப்பார்கள்.

அய்யா, உள்ளாடையாக கிழித்தத் துண்டை கோவணமாகக் கட்டி அதற்குமேல் பட்டாப்பட்டி டிராயர் போடுவார். கைவைத்த வெள்ளை பணியன்தான் அணிவார். அந்தப் பணியனில்  இடது மார்பில் சிறு பாக்கட் இருக்கும். அதில் காதுக்கருவி வைத்திருப்பார். ஆப்ஒயிட்டும், மஞ்சளும் கலந்த நிரத்தில் அக்கருவி இருக்கும். இரண்டு செல்போடவேண்டும். செல்போடுகிற இடத்தில் அதன் மூடி சற்று மூளியாக உடைந்திருக்கும். அதனால் சிலநேரம் செல் மேலே வந்துவிடும். அதற்காக ரப்பர் பேண்டை இரண்டு மடிப்பாகப் போடுவார். அலுவலகத்தின் சீட்டில் உட்கார்ந்த உடன் சிலர் அவரிடம் பேச்சுக் கொடுப்பார்கள். அப்போது இடக்கையால் காதை மடித்து வாயைத் திறந்த நிலையில் வைத்துக்கொண்டு ‘இன்னாமா’ என்பார். பக்கத்துச் சீட்டுக்காறர் கேட்கும்போதுகூட அப்படியேக்கேட்பார். கேட்பவர்கள் இரண்டு மூன்று முறைக் கேட்டபிறகு சற்று முகம் சுழிப்பதுபோல் பேச்சை நிறுத்தி விடுவார்கள். அதன் பிறகு, சட்டையின் பட்டனைக் கழட்டி பணியனில் இருக்கும் காதுக்கருவியை எடுத்துச் செல்லை சரியாகப்பொருத்துவார். அதன் மேல் பகுதியில் சத்தம் கூட்டும் பொத்தானை திருகி காதின் ஒயரை சரிசெய்வார். அதற்குப் பிறகு பேச்சை நிறுத்தியவர்கள் தொடருவார்கள்.
 
நெற்றியில் திருநீறு பட்டையாக அடித்து இரு புருவத்துக்குச் சற்று மேல் நடுவில் குங்குமப்பொட்டு வைத்திருப்பார். இடது மூக்குதுவாரம் சற்று அழுந்தியிருக்கும். வேலைத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் ஷண்முகம் பட்டணம் பொடிபோடுவார். பொடி, வேலையை சரியாய்ச் செய்ய கற்றுத்தருகிறதோ என்று நான்  சந்தேகப்படுவேன். மூக்கடைந்து ஒரு மெல்லிய ராகத்தோடு பேச்சு வெளியேறும். அவர் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து இடவேண்டியதில்லை என்றாலும்  ஒரு நாள் தவறாமல் பள்ளிக்கு வந்துவிடுவார்.

சில நேரம் வீட்டிற்கு ஏற்றிச்செல்வேன். டூவீலரில் இருந்து இறங்கியதும் வலக்கையை என் தைலைக்கு மேல்தூக்கி ஆசீர்வதிப் பதுபோல் செய்துவிட்டு வீட்டில் சென்றுவிடுவார். வாசலில் அவர் துணைவியார்  உட்கார்ந்திருப்பார். அவருக்கு வணக்கம் வைக்கும்போது இந்த மரியாதைதான் அவர்மூலமாக எனக்குக்கிடைத்தது என்பதுபோல் பார்ப்பார். “பிள்ளைகள் நல்லாயிருக் குதுங்களா? வீட்டில ஒரு பொம்பளை இருந்தா நல்லா இருக்கும் யோசனைப் பண்ணு.'' என்றதோடு என் விசாரிப்பை முடித்துக்கொண்டு ‘ஏம்பா, வயசான நேரத்துல உன்னால முடியாது நீ போகவேணாம்ணு சொன்னா கேக்கமாட் டிங்கிறாருபா. அந்தப்பள்ளிக்கு ஒழைச்சதுபோதாதா? நேத்துகூட ரோட்டோரமாப் போன பையனை  கார்காரன் இடுச்சிட்டான். இவரு வீடு வந்து சேர்ரவரைக்கும் எனக்கு கொலை நடுங்கிப் போகுது” என்பார்.

முந்தய காலத்து பெண்கள் எவ்வளவுதான் மாபெரும் உருவங்களாக இருந்தாலும், தங்கள் கணவன்மார்களுக்கு ஒரு கோழி குஞ்சுகளைப்போல் எப்படித்தான் அடங்கிப்போகிறார்களோ? என்று நினைத்து ஆச்சரியப் படுவேன்.  அம்மையாருக்கு  நல்ல திடகாத்திரமான உடல்! அய்யாவைவிடக் கூடுதலான உயரம்! ஆனால், தற்போது அடிக்கடிக் கால் வீங்க தவிக்கிறார்.

பொழுதுபோக்குக்காக வேலை செய்கிறேன் என்று அவர் வயதொத்த வர்களிடம் வெளியில் சொல்லிக்கொண்டாலும் தன்னுடையப் பனிரெண்டு பிள்ளைகளை கட்டிக் கரைசேர்க்கவே தொடர்ந்து அப்பணியைச் செய்துவந்தார். பிறந்தது பதினாறுப் பிள்ளைகள். மணல் கொள்ளையடித்தது நான்கு. தற்போது மனித மந்தைக்குள் தங்கியிருப்பதுதான் பனிரெண்டு. மழை, சுழல்காற்று, பூகம்பம் எல்லாவற்றையும் கடந்துதான் பிள்ளைகளை கரை சேர்த்தார். கரைசேர்த்தபிறகும் தான் ஒரு குடும்பத்தலைவன் என்ற பொறுப்பை எந்த பிள்ளைக்கும் கொடுக்கவில்லை. அய்யாவுக்கு மனசு இல்லை என்று அர்த்தமில்லை. ஒரு பிள்ளைக்கூட சொல்லிக்கொள்ளும் படியாக அரசாங்க உத்தியோகமோ நிறையப் படித்தவர்களோ அல்ல. எல்லோரையும்தான் தான் பணிசெய்தப் பள்ளியிலேயேப் படிக்கவைத்தார். இருந்தாலும் யாரும் மேல்நிலையைத் தாண்டவில்லை. சில பிள்ளைகள் அதுகூட இல்லை. எல்லாரும் கைத்தொழில்தான். ஒருவன் டூவீலர் மெக்கானிக், டெய்லர், போர்வெல் போடுவது என்று எல்லோரும் தொழில்தான்  நம்பியிருக்கிறார்கள். 

அய்யா, யாரையும் பிரித்துவிடவில்லை. கலியாணம் ஆக ஆக அவர்களாக அக்கம் பக்கம் சென்று குடியேறிவிட்டார்கள். இருந்தாலும், வீட்டிற்கு வந்து காலையில் பெரிய மருமகள் எண்ணை ஊற்றிச்சென்றாள். மதியம் சின்ன மருமகள் மிளகாய்த்தூள் கொட்டிச்செல்வாள். இன்னொருத்தி மாலையில் பருப்புக்கொட்டிச் சென்றாள்.  வேரொருவள் இரவில் சாப்பாடுப் போட்டுச் செல்வாள். பென்சஷன் வந்தவுடன் என்னிடம்  தம்பி போலாமா என்பார். நான் மளிகைக்கடைக்கு அழைக்கிறார் என்று தெரிந்துகொள்வேன். தொடர்ச்சியாக பலமாதம் நான்தான் அழைத்துச்செல்வேன். சில மாதம் கூடாமலும் போகும். பள்ளியில் மாலை நேரத்தில் ஒரு நீண்ட லிஸ்ட் எழுதுவார். நான் ''அய்யா இவ்வளவா வாங்குவீங்க என்று ஆச்சரியமாகக்கேட்பேன். ‘புளியாவெரை இது பதினைந்து நாளுக்கு வராது என்பார். அவரை கடைக்கு அழைத்துச்செல்ல இருக்கும் இந்தச்சாக்கில் “அய்யா, அந்தக் காலத்துல டியூஷன், கீஷன் இல்லையா? பள்ளி முடிச்சிட்டு போனதும், அந்தம்மாவ சொம்மா உடமாட்டிங்களா? வேற வேலையே இல்லையா? உங்கபாட்டுக்கிணு தள்ளிட்டு இருக்கிறீங்களே. என்பேன். மேலும் எப்படிக் காப்பாத்தினீங்க எனும்போது” எழுதுவதை நிறுத்தி இரண்டு கைகளாலும் புத்திப் போட்டுக்கொள்வார்.

பதினோரு பிள்ளைகளுக்கும் தன் கடமையை நிறைவேற்றியது அவர் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனைதான். கடைசியில்  பெண்பிள்ளை, மட்டும்தான் டிகிரி முடித்திருக்கிறாள். அவளின் கலியாணத்தை முடித்து விட்டால் வாழ்வின் பயன் தீர்ந்துவிடும். பெண்பிள்ளைக்கு நல்ல இடத்தில் வரன் வந்துவிட்டதால் அதையும் முடித்துவிடப் போராடினார். கொஞ்ச நாளாகப் பள்ளிக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். பிள்ளைகள் திட்டுகிறார்கள் என்றுக் காரணம் சொன்னாலும். காரணம் அதுவல்ல என்றே எனக்குத் தோன்றியது. பெண்ணுக்கு கலியாண நோட்டிஸ் கொண்டு வந்தபோது கிளர்க்கிடம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சொல்லி கண்ணீர்விட்டு அழுததை நான் கவனித்தேன். “பிள்ளைகள் அந்தக்கொழந்தைக்கு செய்ய தயங்குறாங்கமா. எல்லா எடத்துக்கும் இந்த வெயிலில் போய்வரது தலை வெடிச்சுப்போதுமா” என்றார்.

அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும் பத்திரிகை வைத்தார். என்னிடம் வந்தபோது “இன்னா புளியாவெரை எப்பிடியிருக்கிற” என்றார்.  உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை திசைத் திருப்ப ''நல்லா இருக்கிறேன்யா. அய்யா, எதிர் ஸ்கூல் கொண்டக்கார டீச்சர் கேட்டாங்க.' என்று சிரித்தவாறு கேட்டேன்’ அவருக்கு சரியாகக்கேட்காமல் இடக்கையால் காதை அழுத்திக் கொண்டு ‘இன்னாமா’என்றார். நான் ‘அய்யா அந்த மிஷின் எங்க’ என்று சைகைசெய்து கேட்டேன். ‘ஆங்’ என்று வாயைத் திறந்தே ‘அதுவா, சரியா வேலை செய்யிலமா’. என்று உள்பணியனில் கையைவிட்டு அக்கருவியை  எடுத்து அதன் தலைமீது செல்லமாகத் தட்டி, லேசாக சத்தம் கூட்டும் பொத்தானை திருகினார். ‘அய்யா, அதைத் தூக்கிப்போட்டுட்டு வேற ஏதாவது மாத்தக்கூடாதா?’  என்று மிகச் சுலபமாகக் கேட்டேன். உதட்டை லேசாக மடித்து உச்சுக்கொட்டினார். அதுதான் பதிலாக இருந்தது. பிறகு தன் பிம்பத்தை விட்டுக்கொடுக்காதவராக “ஆமாம்பா, சுத்தமா போயிடுச்சிபா. ஏதோ புது மிஷிணு வந்திருக்குதாம், ரொம்ப நாளுக்கு முன்னால என்னிடம் படிச்ச ஒருத்தர் வாங்கியாந்துக் குடுக்கிறேன்னு சொன்னாரு பாக்கலாம்” இந்த பதிலையே இதற்கு முன் இரண்டு முறை என்னிடம் சொல்லியது மீண்டும் நாபகம் வந்தது.

ஆட்டோக்காரன் வெளியில் நின்றிருந்தான். அந்த அவசரத்தில் சென்றார்.  குடையை மறதியாக டேபிளில் விட்டுசென்றார். அவசரமாக எடுத்துக்கொண்டு ஓடினேன். அவர் போனபிறகு, பணிக்காலத்தை சிறிதுநேரம் அசைபோட்டனர். ஒருவர் அவரிடம் படித்து அதேப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவர் சொல்லும்போது, பிள்ளைகள் வீட்டுப்பாடம் சொல்லலனா, கையின் முட்டிக்கும், தோல்பட்டைக்கும் இடைப்பட்ட சதையைப் பிடித்து திருகுவார். ஒன்றுமே செய்யாதவர் போலதான் அவரின் முகம் இருக்கும் ஆனால், உயிர்போவதுபோல வலிக்கும். சில நேரம் காதைப்பிடித்து திருகுவார். அந்த வலியை எந்தக்கொம்பாலும் கொடுக்கமுடியாது. மேல்நிலைத் தழிழ்யாசிரியர்கூட, அவரிடம்தான் பிழைத்திருத்தம் செய்ய அணுகுவார்கள். ஏன் பள்ளியே புரியாத தமிழ் வார்த்தைகளுக்கு அவரிடம்தான் அர்த்தம் கேட்பார்கள். அவர் ஓவியம் சிறப்பாக வரைவார்.” என்று சொல்லிக்கொண்டே வந்தார். 

இடையில் ஒரு கிளர்க் “பள்ளியில் யாரு ஓய்வுபெற்றாலும், அவர்தான் வாழ்த்து மலர் எழுதுவார்.”என்றார். நான், ‘வேறு எதாவது எழுதியிருக்கிறாரா? என்றபோது யாரும் பதில் சொல்லவில்லை. வீட்டுக்கு போனதும் வேறவேலையில இறங்கிடுவார்போல என்று நான் சிரித்துக்கொண்டே மெதுவாகச் சொன்னேன். அது என் அளவில் இருந்த ஊழியர்கள் கேட்டுசிரித்தார்கள்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு நான் டூவீலரில் போகும்போது ராமாஸ்கேப்பின் அருகே ஓரமாக நடந்துகொண்டிருந்தார். சற்று வேகமாகச்சென்று முன்னாடி நிறுத்தினேன். லேசாக சிரித்தவாரே என் முதுகைத் தட்டிக்கொடுத்தார். வாய்த்திறவாமலே, நன்றாக இருக்கிறாயா என்று கேட்கும்விதமாக வலதுகையை மேலேத் தூக்கினார். நான் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ‘வாங்கையா ஃகாபி சாப்பிடலாம்’ என்று அழைத்தேன். முன்பெல்லாம் ‘டீ’ சாப்பிட நான் அழைத்தாலும், அவர் அழைத்தாலும் பில் கொடுக்கிறபோது அவர்தான் தருவார். 'அய்யா, நான் தருகிறேன்' என்றுப் பணம் எடுத்தால்கூட ‘டே வையிடா. நீயே கொறைஞ்ச சம்பளம் வாங்குறே’ என்பார்.

இந்தநேரம் அநேகமாக, அவர் பாக்கட்டில் பணம் இல்லாமல் இருக்கவேண்டும். 'வேணாம்மா, இப்பதான் சாப்பிட்டேன்' என்று சற்று மெல்ல இழுத்தார். ‘அய்யா வாங்க, ஒருரே ஒரு ஃகாபி மட்டும்’ என்று அழைத்துச் சென்றேன். அவருக்கு எப்போதுமே ராமாஸ்கேப் ஃகாபிதான் பிடிக்கும். சற்று காலியாக இருந்த இடத்தில் அமர்ந்தோம். சர்வர் வந்தார். 'அய்யா, ரசவடை சாப்பிடுறீங்களா?' தயக்கம் காட்டினார். முகம்   சாப்பிடலாம் என்று சொல்வது தெரிந்தது. ஆளுக்கு ஒரு ரசவடை சொல்லிவிட்டேன். அவரை இயல்பு நிலைக்கு மாற்ற பேச்சுக்கொடுத்தேன். எப்போதும்போல் ‘இன்னாமா’ என்று வாய்திறந்தார். பிறகு கருவியைச் சற்று நோண்டினார். இப்போது மிக மோசமாக இருந்தது. நான் பேசுவதை புரிந்துகொள்ள மிகவும் சிறமப்பட்டார். அதைபோல நான் சொல்வது எல்லாம் வீணாகவே காற்றில் மிதந்துபோனது. சிலது அரைகுறையாக அவருக்கும், எனக்கும் விளங்கயது. ஆளுக்கொரு ஃகாபி சாப்பிட்டோம். பின்பாக்கட்டிலிருந்து நூறுபாய்த் தாளை எடுத்து பில் கட்டினேன். பில் கட்டுவதற்காகவே அவரைவிட சற்று முன் நடந்தேன். பணம் செலுத்துமிடத்தில் பணத்தை நீட்டியபோது,  ‘இருமா, நான் தரேன்’ என்றார். இருக்கட்டும் ‘வாங்கையா’ என்று அழைத்துச்சென்று வீட்டில் விட்டேன். அவருக்கும் எனக்கும் எந்த புரிதல்  இல்லாமல் போன சந்திப்பனாலும், நிச்சயமாக இருவருக்கும் மன திருப்தி இல்லாமல் போகவில்லை. நான் போகும்போதெல்லாம் வாசலில் உட்கார்ந்திருக்கும் அவர் துணைவியார் காணவில்லை. எனக்கு அப்போது விசாரிக்கத் தோன்றவேயில்லை. எதோ அவசரவேலையாக சென்றுவிட்டேன்.

கடந்த வாரம் சென்னையில் ஒரு கவிதை நூல் வெளியீட்டுக்கு சென்றிருந்தபோது நண்பர் மாலையில்தான் சொன்னார். ‘தம்பி அய்யாவின் துணைவியார் இரவு இறந்துவிட்டார்களாம் மாலையில் எடுத்துவிடுவார்கள்’. என்றார். மறுநாள் பள்ளிக்கு வந்து விசாரித்தபோது அய்யா அப்படி அழுதாராம். சிலர், இனி அய்யாவை கவனிப்பார் இல்லை. என்றப் பேச்சு பரவலாகவே பேசினார்கள். ஒரு ஆணுக்கு மாறுபட்ட பால் துணை எவ்வளவு அவசியம் என்று தோன்றியது. இந்த நிலையில்தான், அய்யா நேற்று இரவு இறந்துவிட்டதாக சொன்னார்கள். சற்றும் எதிர்பார்க்காத பேச்சாகதான் இருந்தது. நான் அதிர்ந்துபோனேன்.  நாளைக்கு  அந்தம்மாவின் கருமாதி என்று நினைவு படுத்தினார்கள்.

பள்ளியில் முக்கியப்பணியிருந்தாலும் எப்படியாவது அய்யாவைப்பார்த் துவிடவேண்டும்  என்ற ஆவல் கூடிக்கொண்டேயிருந்துது. பிறகு அலுவலகத்தில் தலைமையாசிரியர் உள்ளிட்ட நபர்கள் மாலையுடன் குழுவாகச் சென்று பார்த்தோம். வழியெங்கும் ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக இருந்தனர். பதினோரு பிள்ளைகளும் அய்யாவின் சாயலாகவே அங்கங்கு பேசியிருந்தார்கள். தலைமையாசிரியரைப் பார்த்ததும் பிள்ளைகள் சூழ்ந்து வந்தார்கள். பலருக்கு துக்கமுகம் இருக்கவில்லை. குளிரூட்டப்பட்ட பெட்டி வைத்திருந்த இடத்தில் இருந்தப் பெண்களில் யாரோ ஒருவள் மட்டும் நாங்கள் நுழைந்தவுடன் அழுதாள். எல்லோரும் அய்யாவைப்பார்த்தார்கள். நான் எல்லாருக்கும் பின்னால் நின்றிருந்ததால் சரியாகத்தெரியவில்லை. அய்யாவின் கடைசி மகள் மட்டும் தலைமாட்டில் சோகமே உருவாக நின்றிருந்தாள். எனக்கு இடம்கிடைத் தபோது பாக்ஸின் பக்கத்தில் சென்று அய்யாவின் முகத்தையே உற்றுப்பார்த்தேன். எதையோச் சொல்ல நினைக்கிறதுபோல அவர் முகம் இருந்தது. அவர் நடமாடிய நாட்களில், இவ்வளவு சோகமாக அவர் முகத்தைப் பார்த்ததேயில்லை. நான், பெரிய மனபாரத்தோடு நிமிர்ந்தபோது, அலமாரியில் செல்கள் கழட்டப்பட்டு ஒயர் அதன் பொருத்து துவாரத்திலிருந்து தனியாக பிடுங்கப்பட்டிருந்தது. யாருடைய தொடுதலும் இல்லாமல் காதுக்கருவி அலங்கோலமாய்க் கிடந்தது.

ஜே. டேனியல்



.