Sunday, July 15, 2012

நாவல்


   நாவல்
 தொடர்-5                    ஆல்பம்

மாலா தன் கிராமத்தின் மண் சாலையைக் கடந்து பிரதான சாலையை நெருங்கியபோது, கௌரி புளியமரத்தின் கல்லிளிருந்து எழுந்து வந்துக்கொண்டிருந்தாள். முதலில் மாலாதான் கௌரியைப் பார்த்தாள். ஆனால், கௌரிதான் ‘மாலா நல்லா இருக்கிறியா’ என்று கேட்டாள். மாலாவின் கணவன் பிரபு சற்று முன் நடந்துக் கொண்டிருந்தான். கெளரியின் வளர்ந்த பிள்ளைக் கிராமம் நோக்கி ஓடினான். மணலும், ஜல்லிகளும் பெயர்ந்த சாலை ஊராட்சி மன்றத் தலைவரை நினைவுப்படுத்தியது. கௌரி இன்னொரு குழந்தையை இடுப்பில் வைத்திருந்தாள். மாலாவை விட, கௌரி நல்ல கலர்தான். ஏதோ வேண்டுதலுக்காக மொட்டை போட்டிருப்பாள் போல. குழந்தைகளுக்கும், அவளுக்கும் ஒரே மாதிரி மயிர் வளர்ந்திருந்தது. கௌரியின் காதுகளில் இரண்டு மூன்று இடத்தில் பொன் நகைகள் மாட்டியிருந்தாள். குண்டு ஜிமிக்கித் தொங்கிக்கொணடிருந்தது. வரும் வழியில் பாலுக்காக குழந்தை அழுதிருக்கும் போல’ புளியமர நிழலில்  பால் கொடுத்து எழுந்திருக்கிறாள். மார்புக்குக் கீழ் ஜாக்கட்டின் இரு கொக்கிகள் மாட்டப் படாமல் வெள்ளைப் பனங்காவின் அடி நிறமாக இருந்தது. அதன் இடையில் வாழசீப்பு, மாங்கா, குண்டு, நாணக்குழை, கால்சவரன் சேர்ந்து சரமாகத் தொங்கியது. 

மாலாவைப் பார்த்ததும் கௌரியின் முகத்தில் ஒரு வாட்டம் தோன்றியது. கௌரியின் இடுப்பிலிருந்து குழந்தையை மாலா வாங்கினாள். கௌரி கொக்கிகளைப் போட்டுக்கொண்டாள். மாலா குழந்தையின் வாயோடு தன் வாயை வைத்து முத்தமிட்டாள். குழந்தையின் வாய் பால் வாசம் வீசியது. நீண்ட நேரம் யோசித்தவள்போல ‘நல்லா இருக்கிறியா கௌரி’ என்றாள் அதில் மறக்க முடியாத ஆயிரம் கேள்விகள் இருப்பது இருவருக்கும் தெரிந்திருந்தது. ‘செக்கு மாடா சிக்குனபிறகு ஊட்டியில மேயமுடியுமா?’ எதோ இருக்கிறேன் என்றாள் கௌரி. இருவருக்குள்ளும் சம்ரதாயமான விசாரிப்பு முடிந்தது. கடந்து போன இளமைப் பருவத்தின் ஏமாற்றங்கள் இருவர் நெஞ்சுக்குள்ளும் முட்டிக்கொண்டிருந்தது. அவைகளைக் கிளரினால் ரணங்கள் இல்லாமலே வலித்துத் தொலைக்கும் என்று கௌரி பேச்சை மாற்றினாள்.

“எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னாங்க அதான் பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன். மாலா உன்னப்பத்திக் கூட கேள்விப்பட்டேன். வேணாம் மாலா ‘எரிந்து கரியானது காத்துலதான் பறக்கும்’ தட்டுல விழுந்ததுதான் வயித்த நிரப்பும் பார்த்து நடந்துக்க வரட்டுமா? உங்க வீட்டுக்காறர் ரொம்ப நேரமா நிக்கிறாருபாரு போய்வா” என்று குழந்தையை வாங்கினாள். மாலா குழந்தையை கொடுத்தபோது அதன் பிஞ்சு கால்களின் இதமான ஸ்பரிசத்தை உணர்ந்தாள். அந்த ஸ்பரிசம் ஞானராஜ் மாமா மகன் விக்டரைத்தான் மாலாவுக்கு நினைவுப் படுத்தியது.  

அப்போதெல்லாம் சேரியில் முப்பது நாற்பது வீடுகள்தான் இருந்தது. அதை வீடுகள் என்று சொல்ல முடியாது. கொட்டகைகள் என்றுதான் சொல்லவேண்டும் ஒரு குடிசையில் நுழையவேண்டுமென்றால் உடலை மடித்தால்தான் உள்ளே நுழைய முடியும், ஏறக்குறைய எல்லா வீடுகளுமே அப்படித்தான் இருந்தது. இதில் ஒன்று இரண்டுதான் தூக்கட்டு வீடாய் இருக்கும். அப்படி தூக்கட்டு வீடாய் இருப்பவர்கள்தான் சேரியில் வசதிபடைத்தவர்கள். அதிலும் உபரி சொத்துக்களாக எருமையோ அல்லது ஒரு ஜோடிக் கடா மாடுகளோ வைத்திருப்பவர்தான். தூக்கட்டு வீட்டுக்காரரைவிட பணக்காரராகக் கருதப்படுவர்.

அப்படி எருமை மாடுகளை வைத்துக்கொண்டுதான் சேரியின் நிரந்தர பணக்காரர் லிஸ்ட்டில் கருப்பன், ஏகாளி அண்ணன் தம்பிகளின் கூட்டுக்குடும்பம் இருந்தது. அண்ணனுக்கு மூன்று பிள்ளைகள், ஒரு மகள் தம்பிக்குப் பிள்ளைகள் இல்லை. எல்லோரும் நல்ல உழைப்பாளிகள். கருப்பன் சேரியின் இரண்டாவது தலையாரியாக இருந்தாலும் எருமை மாடுகள்தான் ராசியான செல்வம் என்கிறக் கணிப்பை குடும்பத்தில் எல்லோரும் நம்பினார்கள். தம்பி கூலிக்கு ஏர் ஓட்டுவது. பெண்கள் மாட்டுக்கு புல் அறுத்துவருவது சாணத்தை வறட்டியாக்குவது என்று ஓயாமல் உழைப்பை நம்பினார்கள்.

சேரியில் முதல் முதலாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியது கருப்பன் குடும்பம்தான். இன்னும் நான்கு வருஷம் கழித்து மூன்று ஏக்கர் அதே இடத்தின் பக்கத்திலேயே வாங்கினார்கள். அந்நிலத்திற்குக் கீழ் திசையில் புறம்போக்கு நிலம் மூன்று ஏக்கர் மடக்கினார்கள். முதலில் நீர் பாசன ஏரிக்கும் அந்நிலத்துக்கும் மிகத்தொலைவானாலும் போகம் தவராமல் பயிர் செய்தார்கள். சிக்கனமும், உழைப்பும் குடும்பத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தது.

எருமை மாடுகள் விற்கப்பட்டன. பசுமாடுகள் கரவை மாடுகளாயின. கடாமாடுகள் காணவில்லை. செவளைக்காளை கூர்மையான கொம்புடன் குதிரையின் தேகத்தை ஒத்து கொழு கொழுவென்று இருந்தது. இதன் கழுத்தில் இரண்டு மூன்று மணிகள் சேர்ந்தார்போலக் கட்டியிருந்தார்கள். அதன் வயிற்றிற்கும், முன்னங்காலுக்கும் இடையில் இரு பட்டையாக கறுப்பு கயிறு கட்டியிருந்தது. உதிரிபாகங்களைப் பூட்டிக்கொண்டு மாடுகள் வெளியில் போகும்போதும், வரும்போதும் வாய்ப்பிளந்து பார்ப்பார்கள்.

பொன்னியும், ஐ. ஆர். ஐம்பதும் கருப்பன் வீட்டை நிரப்பியது. கௌரி இங்குதான் மூன்றாவதாகப் பிறந்தாள். அவள் வளர, வளரத்தான் செல்வம் கொழிக்கிறதென்று சேரியில் பேசிக்கொண்டார்கள். கௌரி இளமையின் பட்டத்தைத் தொட்டுவிட்டாள். முழுக்க முழுக்க நவீன தொழில் நுட்ப்பத்தோடு பராமரிக்கும் பூந்தோட்டத்தைபோல் இருந்தாள்.

கருப்பன் வீட்டுக்கு முன்தெருவில்தான் ஞானராஜ் இரண்டு மகன்களுடன் இருந்தார். இவர்களும் உழைப்பில் சளைக்காதவர்கள்தான். ஆனால், நாம் சாப்பிடுவதுபோல நம் கண்முன் திரியும் மக்களும் குறைவில்லாமல் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம்தான் ஞானராஜின் குடும்பத்தில் செல்வம் சேராமல் அடிக்கடிக் குறைத்துவிடுகிறது. இதுதான் காரணம் என்று தெரிந்தாலும் அதை ஞானராஜ் கண்டுகொள்வதேயில்லை. அப்படி இருந்ததால் சேரியில் ஞானராஜிக்கு மரியாதை கூடியிருந்தது. 

ஞானராஜின் மகன் விக்டர் தன் தந்தையின் மரியாதை, கருப்பன், மாமாவின் செல்வத்தைக்காட்டிலும் ஒன்றும் குறைந்ததல்ல. கௌரியை எந்தத் தடையும் இல்லாமல் நமதாக்கிக்கொள்ளலாம் என்று நம்பினார். கொளரியும் மனம் ஒத்து, விக்டரை அடிக்கடி  சந்தித்துப் பேசினாள். ரமேஷ் கௌரியின் அண்ணன். ரமேஷ்  விக்டரின் நண்பனும் கூட், அதனால் ரமேஷ் அவர்கள் நட்பை ஏற்றுக்கொண்டார். நண்பர்களின் முடிவு எப்போதும் பெற்றோர்களின் முடிவுஅல்ல. கருப்பன், விக்டருக்கு கௌரியை மறுத்தார்.

விக்டரின் நியாயமான ஆசையைப் புரிந்த ஞானராஜ் கருப்பனிடம் கையேந்தினார். முடியவில்லை. விக்டர் தன் தகப்பன் மனதைச் சஞ்சலப்படுத்தாமல் காதலில் இருந்து வெளியேறினார். விக்டர் வெளியேறுவதற்கு முன்பே கௌரி தேநீர் தந்து வெளியூர் பெரியவர்களுக்கு வந்தனம் செய்திருந்தாள். இந்தக் கடந்த காலங்கள் சீரான ரத்த ஓட்டம்போலவே, தங்கள் உடலுக்குள் எப்போதும் செயல்பட்டாலும் கன நேரம் அழுத்தம் தந்து இயங்கியது. அந்த நினைவை எந்த நோயும் தீண்டுவதில்லை. என்ற பார்வையோடு மாலாவும், கௌரியும் பிரிந்தார்கள்.

ஜே. டேனியல்

No comments: