Thursday, June 30, 2011

முளைக்கும் விதைகள்


                        பாடும் பறவை -2


பாலும், பாதுகாப்பும் குழந்தைகளின் நரம்பை முறுக்கேற்றினார்கள். வளர்ந்தவன் கிழங்களின் கழுத்தை இறுக்க நரம்பை கயிறாக்கி காத்திருக்கிறான்

யாருக்கும் தெரியாது நான் உன்னைக் காதலிப்பது. நல்லதுதான். சுலபமாய் விலகிக்கொள்ள பயன்படும்.

மக்களுக்கும் பழிவாங்கத்தான் தெரிகிறது, திருத்தத்தெரியவேயில்லை. அதற்காக யோசிப்பதும் இல்லை. மாறி மாறி ஜெயிக்கும் அரசியவாதிகளைப்போல்.  

வெற்றியின் துணை எப்போதும் அன்பில் கூட்டங் கூடுவதனாலே கிடைக்கும். பிழைப்புக்கான கூட்டம் பல நேரம் தோல்வியை தரிசிக்கும்.

தாழக்கிடக்கிற வானத்தின் நட்சத்திரங்களை பறிக்கிறான் தகப்பனிடம் பாகம்பிரித்தவன். தொங்கும் மாங்கனி தூரமென ஏங்குகிறான் பரம்பரை தரித்திரன்.

முகத்தை தீய்க்க கதிர்களை பாய்ச்சுகிறாய், நீ சூரியனாக இருந்தாலும் பயமில்லை. என் வீட்டு தென்னை மரத்தின் கீற்றால் நீ மறைந்துவிடுகிறபோது.

ஆரோக்கியதிற்காக வருஷம் தவறாது தன்னை எக்ஸ்ரே எடுத்துக்கொள்கிறதா? ஆடகளைக்கலைந்து அம்மணமாய் நரம்புகள் தெரிய இலையுதிர்ந்து நிற்கும் மரங்கள்.

துரோகம்,ஏமாற்று,ஊழல், பகலில் சுற்றி கொக்கறித்து நடமாடும்ஆவிகள். நேர்மை,இரக்கம்,உண்மை பித்தென விலங்கிட்டுகதவுக்கு ஆணிவைத்தோம்.இது தற்காலம்

கழிவிலும், ஒதுக்கப்பட்டதிலும் மனமுவந்து தனக்கானதை எடுக்கும் பன்னி முற்போக்கு செயலை கடைபிடிக்கிறது. நல்ல இலக்கியவாதியின் குரு பன்னிதான்.

பரந்த சிறுமணல் மனதின் மகிவைத்தூண்டும். பசி எழுப்பும் உணர்வின் நுனியையும் தணிக்காது.வாசல் கத்தும் காக்கையின் முகத்தில் துப்பும் மனிதன்போல்

முகத்தோடு முகம் முட்டி,தான் கண்ட களஞ்சியத்தின் குறிப்பு சொல்லி விலகும்,வரிசையில் வரும் எறும்பு. ஒழுங்கோடு பகிர்தலும் நாம் எறும்பிடம் கற்கவேண்டும்.

நீரை விழுங்கியிருக்கும் காற்று காமத்தை தூண்டுவதேயில்லை. இருந்தாலும் தொடர்கிறேன் காற்றை, வாழ்வைப்போல

காமத்தில் துரத்தும் கூட்டு நாய்களுடன் ஒரு நாயாக வருகிறான். காதலுடன், எந்த உறவையும் மறுக்கிறான். மேல் பாரம் முற்றிலும் குறைந்த என்னிடம்.

அறைமூடி உறங்கியும் பொறுப்புள்ள ஆண்மாக்கள் வெளிஉலகின் எல்லை கடந்த பிம்பங்களை தரிசிக்கிறது. வெளிச்சிதறல்களை கிரகித்து உலவும் பிம்பம்.

கைவிடுதலை சகித்து வாலியில் விழும், குழாயில் கசியும் சொட்டுநீர். புதிய செயல்கான வீரியமுடன் முன்னோரில் கலக்கிறது.மனிதனுக்கு வழிகாட்டியாய்.

மெளனமான இரவின் ஒத்தை அறையில் இடைவெளிதுரந்து புழங்காத தம்பதிகள் கூட்டு வாழ்வின் விலகளை வளர்பிரையாய் தொடர்ந்து, கடந்து முடிவை எட்டுகிறார்கள்.


ஜேடி


Monday, June 27, 2011

கவிதை

ரோஜாவின் 
நகல், தீயின் ஜூவாலை


ஒளிவியா
ஒரு ஓட்டுநரின்
முக்கிய அவயங்கள் எல்லாம்  
அவர் இயக்கி்ச் செல்லும்
வாகனத்தில் கவனமாய் இருப்பதுபோல்
செம்மறி ஆட்டுக்குட்டியின்
குணம்கொண்ட என்னை
வெடிகுண்டை கண்டறியும் 
கருவியாக
சோதனையிடுகிறதே உன் கண்கள்.

ஒளிவியா
தினந்தோறும்
நீ
கழிவுகளை வெளியேற்ற
கழிவறைக் குழியை
சரியாக அவதானிக்க உதவும்
ஜிரோவாட்ஸ் பல்பை
அற்பமாய் எண்ணுகிறாயே
உன் மாடிவீட்டின் வெளியை
அலங்கரிக்கும்
ஜரிகைப்போட்ட வாடகை விளக்குகளில்
மயங்கி
அற்புதம் என்று ஆர்ப்பரிக்கின்றாயே
அவைகள் விழா முடிந்ததும்
அதன் சுவடே இல்லாமல்
அவிழ்த்து  சென்றுவிடுவான்
நீ
அறியவே இல்லையா.

ஒளிவியா
எதையுமே பொருட்படுத்தாது
அஞ்ஞாணிகள் பொருள் சேர்த்தார்கள்
பிரபஞ்சத்தில்
எதுவுமே பொருட்டல்ல  என்று
ஞாணிகள் சான்றளித்தார்கள். 
அதை
திரும்பத் திரும்ப படிக்கின்றாய்
ஆனால் கடைபிடிக்க
நான் மட்டும்தான் இளிச்சவாயியா
என மீண்டும்
அஞ்ஞாணிகளின் கல்வி சாலைக்கே போகின்றாய்

ஒளிவியா
அதிகாலையில் பூத்து
இப்போதுதான்
அதன் சிவந்த இதழ்கள்
விரிந்து  இருக்கிறது
அது உண்மையிலேயே அழகிய ரோஜா என்று
 நீ
கிட்டத்தில் போகின்றாய் 
அழகிய ரோஜாவை
நகல் எடுத்த தீயின் ஜூவாலை
உன் வாசம் நிறைந்த கூந்தலை
கருக்கியபோதுதான்
பதறுகிறாய். 





Friday, June 24, 2011

கவிதை



     வாழ் குகை    

கவிழ்ந்த 
வெள்ளைப் பானையின்
விகாரமான பிண்டத்தின்கீழ் 
நடப்பதெல்லாம் விசித்திரமானது.

பூமியில் புதைந்து நிற்கும் 
தோலுரிந்த மரம் 
தன் வேரை
நீர் நிலைகளைத்தேடி
நீளச்செய்வதில்லை.

காற்று, மழை, வெயில் 
பயன்பாடு, பயனற்றவை 
என பிரித்து 
தனக்கானதென்று எதையும் 
சேர்த்து ,விலக்கிக்கொள்ளும் 
பாசாங்கான வேலையை 
ஒரு நாளும் செய்யவில்லை  

பூமியின் வசீகரத்தில் 
தன்னை உட்ப்படுத்திக் கொள்லாதவனைப்போலவே.
ஆனால் எதோ ஒரு  ஊன்று கோளோடு திரிகிறான்
                             
வெள்ளாடு கூட்டத்தை 
கோலால் துரத்தும் 
மேய்ப்பன்போல் 
காற்று மேகத்தை ஒருமுகமாக 
துரத்திச்செல்கிறது
மேகமும்
நடை பயிலும்
ஒரு பிஞ்சிக்குழந்தையின் பயணம் போல நகர்கிறது.
அது
என் வாயில் ஊதும் காற்றால் நடக்கிறது 
வானவில்லே நான் போட்டதுதான் 
என மார்த்தட்டித் திரிந்தவன் 

சாலையில் நடக்கும்போது 
எதேச்சியாக ஒரு சின்ன கல்தான் தடுக்கிவிட்டது
மூளையின் நூளிழைக்கோலாறு
விற்கப்படாத பொருளாக, ஒரு நாள் கடந்தால் 
அழுகிவிடும் தன்மையிலும் 
வியாபாரியின் கடைக் கூடையில் இருக்கிறான்
இதுவோ  வாழ் குகை
                      ..........................
 ஜே டி 


 


 

  

Saturday, June 18, 2011

சினிமா

                              அவன்-இவன் 

      சாமான்யனைக் கொல்லும் பாலா

பாலாவின் படங்களை ரிலீசான வாரத்திலேயே தற்செயலாகப் பார்த்து விடும்படியாக அமைந்து விடுகிறது. அப்படித்தான் நண்பரின் அழைப்பின் பேரில் அவன்-இவன்  பார்க்க நேர்ந்தது. டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது, மார்பின் நேர்க்கோட்டில் இருந்த சூரியனின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் நாற்பது  வாலிபர்களுக்குப் பிறகு  நின்றிருந்தேன்.  முன்று மணிக்கு நின்ற நான் முன்று இருபத்தைந்துக்கு டிக்கட் வாங்கினேன். ஏறக்குறைய முப்பது நிமிட வரிசையின் காத்திருப்பில், பெண் வருசையில்  ஐந்து, ஆறு பெண்கள்தான் இருந்தனர். இளைஞர்கள் வருகை அதிகமானது. பொதுவாக அதில் பள்ளி, கல்லுரி  மாணவர்களும் அடக்கம். பாலாவின் படத்துக்கு இளைஞர்கள் அதிகமாக வருகிறார்களே, அவர்களின் எதிர்கால வாழ்வின் முறைக்கு பாலா காட்டுகின்ற வழி என்ன? இப்படத்தில் ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்வியோடு படத்திற்கு வருகிறேன்.

தொடக்கத்திலிருந்தே கதையோட்டமில்லாமல் வெறும் நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட காட்சியாய் தொடர்ந்து நகர்கிறது. கதை  எந்தப் பகுதியில் நடக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, படத்தில் அறிந்துகொள்ள முடியவில்லை. 1919 - 1920 களின் பகுதியில் ஆங்கிலேயர்கள் வந்து தங்கள் பகுதியில் வசித்த மக்களை குற்றப்பரம்பரையாக அறிவித்து, ஒரு இழிவான வாழ்வு முறைய  அவர்களின் பால் கட்டமைத்தது. அவன்-இவன் அக்கால வாழ்வு முறைகளில் ஒன்றை தற்போது வெளிப்படுத்திக்காட்டுவது போன்று உள்ளது.  

அக்காலக்கருவை எடுத்திருந்தாலும் மனிதனின் வாழ்வுமுறை அத்தன் மையை எட்டுவதற்கு என்ன காரணம்? சமூகத்தில் அதற்கான குறைபாட்டுக்கு தீர்வு என்ன? என்பதை பாலா கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஒரு பின்நவீனத்துவத்தை போல் ஒரு முழுமையை துக்கள் துக்களாக கிழித்துப் போட்டு, மீண்டும் ஒரு முழுமையைக்கான ஒழுங்கமைத்தும்  எதோ ஒரு முழுமையைக்கூட கதையில்  காணமுடியவில்லை.  

சமூகம் என்பது பொதுப்படையாக உன்னதத்தன்மை வாய்ந்தது. என்று கற்பித்து வைத்திருக்கிறது. அது பெரும்பாலும் வாழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறவர் களிடத்திலேயே பெருமைக்குரியதாய். போற்றப்பட வேண்டியதாய் போதிக்கப்படுகிறது. பேசவைக்கப்படுகிறது. ஆட்சியாளர் களோ,  பணமுதலாளிகளோ மயிரளவேனும் மதிப்பதில்லை. 

படத்தில்  ஒரு கணவன்,  அவருக்கு இரண்டு மனைவிகள் அவர்களுக்கு தலா ஒரு விஷால்-ஆர்யா ஆண்பிள்ளைகள். எலி பொந்துகள் போல் பக்கத்து பக்கத்து (வீடுகள்  அல்லை ) அறைகள். அதில் சில நேரம் சண்டை,  (முடியைப் பிய்த்துக் கொள்வதே இல்லை)  சிலநேரம் கொஞ்சல் ( பக்கத்து  கோயிலுக்கு கூட ஒன்றாகப் போனதில்லை)  தாய்களே பிள்ளைகளை திருடவும், கொள்ளை இடவும், குடிக்கவும் தூண்டுகிறவர்களாக இருக்கிறார்கள்.

சமூகத்தில்  நலிந்தவர் மத்தியில் எவைஎல்லாம் நீதிக்கு எதிரானவைகள் என்று பாடமாக்கப் படுகிறதோ, அவைகளை எல்லாம் தங்களுடைய வீரியமிக்க நீதியின் செயல்பாடுகலாய் கடைபிடிப்போம். என்று ஆணித்தரமாய் சொல்லுகிற தைரியம் பாலாவுக்கு நிறையவே இருக்கிறது.

பாலா விளிம்பு நிலை மக்கள் ஏன் ஒழுங்கிற்கு கட்டுப்படவேண்டும் என்ற கேள்வியை வைத்தால். அவர் படத்தில் காட்டுவதுபோல், கொமாளிகலாய் தங்களை காட்டிக்கொண்டு   மாட்டிரட்ச்சிகாரனை வெறித்தனமாய்  கொன்று விட்டு ஜாலியாக பாட்டுப்பாடிக்கொண்டு போவதுபோல், ஒரு சாமான்யன் சமூகத்தில் வாழ்ந்துவிட முடியுமா? விளிம்பு நிலை மக்களுக்கு இப்படியான மோசமான செயல்பாடுகளின் முலமாக ஆசைக்காட்டுதல்,  பணமுதலாளி களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ மறைமுகமாக அடிமையாக்க ஒப்பந்தம் செய்வதாகவே அர்த்தம்.

ஒரு திருட்டுக்குடும்பத்தோடு  ஜெமிந்தார் பரம்பரையில் வந்தவர் தொடர்ந்து நட்ப்பு ரீதியில் உறவு வைத்திருக்கிறார்.  கதையில் தேவையில்லாமல் உள் நுழைவாய் வரும் வெள்ளையர்களை,  ஜி.எம்.குமார் மலைகளை சுற்றிப் பார்க்க அழைத்து வருகிறார். வழியில் கண்காணிப்பு கேட்முடப் பட்டிருக்கிறது, பாரஸ்ட் அதிகாரியிடம் கேட்டைத்திறக்கும்படி கேட்கிறார். பாரஸ்ட் அதிகாரி முறையான அனுமதி பெற்றுள்ளீர்களா என்கிறார்.  ஜி.எம்.குமார் தன் பெருமையைக் காட்ட  அதிகாரியிடம் சற்று முரட்டுத்தனமாக பேசுகிறார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சுற்றுளா இடத்தை பார்க்காமலே  திரும்பிவிடுகிறார். 

 அதற்கு பழிவாங்கும்படி  விஷால் - ஆர்யாவை ஏவிவிடுகிறார்.  அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட கடமையை நியாயமாக நிறைவேற்றியதற்காக, சாதாரண மனக்கசப்பின் செயலுக்கு,  ஒரு நாட்டின் நிலப்பகுதியை அபகரிக்க வந்ததுபோல் பாரஸ்ட் அதிகாரியை அடித்து துவம்சம் செய்கிறார்கள். கோடி ரூபா   மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை விஷால் கடத்திச்செல்கிறாரா? அல்லது உயிரை காப்பாற்றிக்கொள்ள வாகனத்தை எடுத்துச்செல்கிறாரா? எந்த தகவலும் இல்லை. இருந்தும்  அதற்காக அதிகாரிகள் பதட்டப்படுவதெல்லாம் வெறும் காட்சிக்காகவே இருக்கிறது?

முக்கியமாக ஒன்றே ஒன்று சொல்லவேண்டும் என்பதற்காகவே இப்படம் முழுக்க எல்லா நடிகர்களையும் கஷ்டப்படுத்தி எடுத்திருக்கிறார். மாட்டிரட்சிக்காக மாட்டை விற்கிறவர்கள் எல்லாம் கொல்லப்படவேண்டும். இது ஒன்றுதான் படத்தின் ஆணிவேர். அரசுக்கு எதிராக ஒருகோடி மதிப்புடைய பொருளை கொள்ளையடிப்பவன் பரவாஇல்லை விட்டுவிடலாம். மாட்டைக் கொல்லுகிறவனை  ஈவு இறக்கமில்லால்  கொன்றுவிடலாம். இதுதான் பாலாவின் அவன்- இவன்.

பாலா அறப்புக்கு வருகின்ற மாடுகளின் நிகழ்கால வாழ்வை ஒரு நாளும் கவனித்தவராக இருந்திருக்கமாட்டார். மாட்டை அறுக்கின்ற இடத்தையும்  அவ்வளவாக   அறிந்திருக்க மாட்டார்  என்பது  அவர் அமைத்திருக்கும் மாட்டு கொட்டடியிளிருந்து தெரிகிறது. ஏனென்றால்  கொட்டடிகளில் உள்ள மாடுகள் எல்லாமே நூற்றுக்கு நூறு   கொழு, கொழு வென்று எருதுகளாகவோ, பசுக்களாகவோதான்  இருக்கிறது.

அறப்புக்கு வருகின்ற மாடுகள் தொண்ணுறு விழுக்காடு மாடுகள் தங்கள் வாழ்வில் இனி மனிதனுக்கு எந்த பலனும் இல்லை என்று ஒதுக்கப்பட்டபிறகே வருகிறது. பாசமாய் வளர்க்கின்ற பசு, பல கன்றுகளை ஈன்று  இனி அது கன்று  ஈனாது எனும் நிலை வரும்போது, இது வரை உழைத்த உழைப்புக்கு மரியாதை தந்து, உரிமையாளர்கள் அதை புத்துவிடுவது இல்லை. அதன் மூலமாக கடைசியாக எதோ ஒரு தொகை கிடைக்கட்டும் என்று அறப்புக்கு விற்றுவிடுகிறார்கள். விவசாயியும் அப்படியே செய்கிறான். பாலா மூளைக்கு எஸ். ராமகிருஷ்ணன்   வசனமாக சொல்லுவதுபோல் முதலில் மாட்டிரட்ச்சி சாப்பிடுகிற வனுக்கு தண்டனை குடுடா. என்பதாலோ, விபாரம் செய்கிறவனை துடிக்க துடிக்க கொல்லுவதாலோ சமுகத்தின் ஒழுங்கு வந்துவிடாது. ஒரு குழந்தை, தொழிலாளியாக மாறுகிறதென்றால் யார் முதல் குற்றவாளி? வேலை தருகின்றவனா? அந்த தகப்பனைத்தான்  முதலில் உதைக்கவேண்டும். அதைவிட்டு வியாபாரியை கொல்லுவது என்ன நியாயம்.

இப்படத்தில் பாலாவுக்கு பயந்து எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறாகள். அனால் பாலா மாட்டிரட்சிக்காரனை கொல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்தை தன் மூளையில் ஆழமாய் பதித்து வைத்ததால்  ஒரு கதையை உருவாக்குவதில் கோட்டை விட்டுவிட்டார். இதைவிட சமூகத்தை சீரழிக்கிற குறைபாடுகள் எங்கும், எதிலும் இல்லையா?  கோழி சப்பிடுவோரை, ஆடு சாப்பிடுவோரை என்னசெய்வது?

விஷாலும், ஆர்யாவும் போட்டியில்லாமல் அவரவர் இயல்புக்கு முழு திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். விஷால் பெண்தன்மை, திருடும் நேரம் செண்டிமேன்ட்டுக்காக கொல்லையிடாமல் செல்லுவது. மேடையில் நடிப்புத்துறையின் பல பரிணாமங்களை நடிப்பில் காட்டுவது. சிலநேரம் கொமாளியைப்போல் மாறிவிடுவது, கண்ணையும், முகபாவத்தையும் மாற்றுவது என்று எல்லா இடங்களிலும்  சிறந்த நடிப்பை விஷால் வெளிப்படுத்தியுள்ளார். ஆர்யாவும் முரட்டுத்தனம் வெளியிலும்,  மனதளவில் சாதுவாகவும் போக்கிரித்தனம் இல்லாமலும்  மிகவும் சிறப்பாக செய்துள்ளார். ஜி.எம். குமார் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவாக முடித்துள்ளார். சின்ன பையனை  பேசவிட்டே கெடுத்துவிட்டார்கள். பெண்பாத்திரங்களில் அம்பிகா உள்பட தாய் நடிப்பு சிறப்புக்குரியது. நாயகிகளுக்கு உணர்வுப்பூர் வமான காட்ச்சிகளே இல்லை.


நா.முத்துக்குமாரின் பாடல்களை முழுமையாக கேட்கவிடாமல் இடையி டையில் குறுக்கீடு செய்து என்ன பாடல் என்பதையே கேட்கவிடாமல் செய்துவிட்டார்கள். யுவன் சங்கர் ராஜா வின் பின்னணி இசை கேட்கும்படியாகவே இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணன் வசனம் காட்சிளில்  ஒன்றும்படியாக  இருக்கிறது. அப்படி யதார்த்தமாகன  வசனம் இல்லை என்றால் படத்தை பார்க்கமுடியுமா? என்பது சந்தேகம்தான். இருந்தாலு ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்ன கதை என்பதை ஒரு முறையாவது படித்துவிட்டு வசனம் எழுதவேண்டும். இயக்குனரின் ஓட்டத்திற்கு பின்னாடியே வார்த்தைகளை கொட்டிச்செல்லுவது பொறுப்புள்ளவர்களின் பணியாகாது. வில்லன் மூலமாக மாட்டிரட்சியை சாபபிடுகிறவனையும், குர்பானிக்கு ஒட்டகத்தை வெட்டுகிறவனையும் சம்பந்தப்படுத்தி வசனம் எழுதுவது நல்ல எழுத்தாளன் பிம்பத்தை தகர்க்கும்.

முடிவாக அவன்-இவன் இளைஞர்களின் எதோ ஒரு மூலையில் ஒட்டியிருக்கும் நேர்மையான் எண்ணங்களை சீரழிக்கப்பபயன் படுவதாகவும். ஒரு சாமான்யனை  கொல்லுவதிலே  பாலா துடிப்பு மிக்கவராய் இருக்கிறார் என்பதையுமே இப்படம் சொல்லுகிறது. 

ஜே டி   
            

Wednesday, June 15, 2011

கவிதை

போனதுபோல் திரும்பாதே தம்பி


தார் பொங்கி நிற்கும் சாலையில்
நான் வெறுங்காலோடு
செய்துவிட்டு வந்துவிடுகிறேன்
நீ
போனதுபோல் திரும்பி விடாதே தம்பி

பால் உண்டுக்கொண்டே
என் முகத்தை வாசிக்கும்
உன் ஓரக்கண்களில்,
எதற்காகவோ 
பிடிக்காமல் காணாது போன
உன் தகப்பனை நினைத்து
நான் வடித்தக்கண்ணீர்
நீ யுண்டப் பாலோடு கலந்ததை
எப்படி
உனக்கு அற்பமாய் தோன்றாமல் 
நினைவூட்டமுடியும்
நீ
போனதுபோல் திரும்பி விடாதே தம்பி

அண்ணனின்
மேல்நிலைக் கல்விக்கு
கடைசியாக
என் கயிறுக்குள்
தாலிமட்டும்தான் இருந்தது
உனக்குத் தெரியாததல்ல.
 
 
பக்கத்து வீடுகளிலும், எதிர்வீடுகளிலும்
கலர் கலரான ஆடைகளோடு
செல்லும் பிள்ளைகளை
நீ வெறித்துப் பார்க்கிறாய்
எனக்குத் தெரியாமல்  இல்லை.
 
ஐந்து வருட நம்பிக்கைக்கு பிறகு
கேஷ்க் கடை முதலாளி 
தொடர்ந்து வா கொஞ்சம் 
ஏத்தித்தருகிறேன்  என்றதை 
நம்பித்தான் 
துணிந்து 'இருபது' வட்டிக்கு வாங்கினேன்.

நாளை நீ பள்ளிக்குச்செல்லும்போது
அவர்களைப் போலவே
ஷுவும், டையும் உன்னை அலங்கரிக்கும்
பக்கத்து, எதிர் வீட்டின் தலைவி
அவள் பிள்ளைகளோடு 
நீ கைக்கோர்க்க அனுமதிப்பாள்
 
அவைகள் வெறும் பிரம்மைதான் தம்பி
எல்லாமும்
நான் இழந்துவிடாமல் இருக்க
பள்ளிக்கு போனதுபோலவே
திரும்பிவிடாதே தம்பி

ஜேடி   
  

    

         

Monday, June 13, 2011

சிறுகதை

   தொடர்ச்சி -2                                   படிமங்கள்

அவளிடம் உண்மையை வரவைக்க முகத்தைச் சற்று கடினமாக்கி "டேய் அத்தையாண்ட அனிதா வயசுக்கு வந்துவிட்டதாக சொன்னீங்களாம்" உண்மையை  அறிதலில்  படபடப்பானது. கோபத்தை வெளிப்படுத்தி உண்மை யை வரவைத்துவிடலாம் என நினைத்தேன்.  கோபத்தால் பல நேரம் தோல்விதான்.

இப்படிக்கேட்டதும் மகள் கெக்...கெக்...கெக்கே  என்று அடைக்க முடியாமல் சிரித்தாள். ஆண் பிள்ளைகளும் அச்சிரிப்பில் கலந்துக்கொண்டனர். எதற்கு சிரிக்கிறார்கள் என்பது தெரியாமல் நானும் சிரிப்பில் கலந்துக்கொண்டேன். ஒன்று மட்டும் விளங்கியது. எந்த நிர்பந்தமும் இல்லாமல் மனம் ஒன்றி விசாரிக்கும்போது. சுலபமாய் விடைக் கிடைக்கிறது. "வயசுக்கு வந்து ரெண்டு நாலாயிடுச்சாம்".என்று பையன் உடைத்தான். பழையப் படங்களில் உருக்கமான காட்சிக்கு கடல் பொங்கி அப்படியே நிற்குமே, அப்படியான பிம்பம் என்கண் முன் தோன்றியது.

என் மகளிடம் சிரிப்பின் வேகம் குறைந்தது. "இல்ல டாடி இந்தக் குள்ளப்பையன் சொம்மா சொல்றான்" என்றாள்.

பையன் சொல்லுவது உண்மையாய் இருந்தால் எவ்வளவு சோகம் நிறைந்த விஷயம். பெண் தன்மையை எட்டுகின்றபோது எத்தனை விசேஷமாகக் கொண்டாடுவார்கள். இதை ஏன் மறைத்தார்கள்.  ஒருவேளை பிள்ளைகளின் பிறந்த நாளையும், எந்த பண்டிகை நாளையும் இதுவரை பிரித்தியேக நாளாய் கொண்டாடியதே இல்லை. "அப்பா எனக்குப் பிறந்தநாள் வருக்கின்றது. இந்தப் பண்டிகைக்கு எனக்கு இரண்டு டிரஸ்."  எனச்சொல்லும்போது, நீங்கள் மட்டும்தான் இந்த நாளில் பிறந்து இருக்கிறீர்களா? இதே நாளில் பிறந்த நாள் தெரியாது, பெற்றோரே யாரென்று தெரியாது, இல்லாது  எத்தனை  பிள்ளைகள் நாட்டில் இருக்கிறார்கள் தெரியுமா?  பண்டிகை நாளில் தான் புதுத்துணி உடுத்தவேண்டுமா? உடுத்தத் துணியே இல்லாமல் எத்தனைப் பிள்ளைகள் வீதியில் திரிகின்றார்கள் பார்க்கவில்லையா?. என்று எப்போதும் எதிர்மறையாக பேசுவதால் இதையும் விசேஷம் இல்லை என்று நினைத்து விட்டார்களா? மகள் பெரியப் பொண்ணாக ஆளானது உண்மையா? இல்லையா?  நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.

ஆளாவதற்குத் தகுதியான வயதுதான்.  எப்படி அறிந்துக்கொள்வது. சட்டென ஊகித்தேன். அது அவளுக்குள் நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக பள்ளிக்கு செல்ல மறுப்பாள். என நினைத்து,  நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்கிறதா? போகனுமா? என்றேன்.

அவள் சவாலாக நினைத்தாளோ என்னவோ "ஆமாம் நாளைக்கு பசுமைப்படை ஒர்க் இருக்கிறது. "காலை  எட்டு மணிக்கெல்லாம் போகவேண்டும். என்னை ஏழு முப்பதிற்கெல்லாம் எழுப்பிவிடு" என்றாள்.  நான் காலையில் தண்ணீர் சுடவைத்திருந்தேன். இன்று நான் எழுப்பாமலே அதிகாலையில் அவள் எழுந்து விட்டாள்."டாடி சேம்பு வேனும்,  குள்ளன வாங்கியாரச்சொல்லு" என்றாள்.

மாதம் ஒருமுறை யுத்தக்களமாகும் பெண்களின் வயிற்றை, அதிலிருந்து வெளியேறும் வேதனையின் கறைகளை என் மனைவியிடம் கண்டிருக் கிறேன். மனைவி  அதை  யாருக்கும் தெரியாமல் கழித்துக் கொண்டிருப்பாள். எப்படி மறைத்தாலும் ஏதாவது ஒரு தடம் எனக்குப்புரிபடும். அப்படித்தான் அன்று மகளின் நடையில்  சற்று  வித்தியாசம் தெரிந்தது. அனால்  பள்ளிக்கு போகவேண்டும் என்கிறாளே, உண்மையை அறிய எவ்வளவுப் போராட வேண்டியிருக்கிறது.  மாலையில் அக்கா வந்துவிட்டால் எல்லாம் உண்மை விலங்கிவிடும்.

நான் வெளியில் நின்று பல் துலக்கினேன் மகள் பாத்ருமில் குளித்துக்கொண் டிருந்தாள். "ஏய் அனிதா சீக்கிரம் வா. எவ்வளவு நேரம் குளிப்பே. நேரமாவுது இல்ல" என்றேன்.

அவள் இயல்பாகவே நேரம் கடந்து, பள்ளி உடையில் வந்தாள். வெள்ளை நிறக்கோடும், நீலமும்  கலந்த மங்கிய டவலில் தலையை வெகுநேரம் துடைத்தாள். கொடியில் போட்டுவிட்டு வீட்டில்  நுழைந்தாள். நான் தற் செயலாக திரும்பியபோது  டவல் கண்ணில் பட்டது. இரண்டு, முன்று இடங்களில் திட்டுத்திட்டாக அதன் அடையாளம்  தெரிந்தது.     நான் பிள்ளை களைப் பிரியமாய்  கொஞ்ச எத்தனிக்கும்போது பன்னி, எரும என்று பேசிவது வழக்கம். அப்படியே பழகிவிட்டதால்  அது கொச்சை வார்த்தையாகவே எனக்குப் படவில்லை. பிள்ளைகளும் அதற்குப் பழகிவிட்டிருந்தார்கள்.  சற்று பொய் கோபத்தோடு  மகளை வெளியே அழைத்து டவலைக்காட்டி  "பன்னி இது இன்னா சோப்புப் போட்டு தேச்சி எடுக்கிறத்தானே" என்று கேட்டேன். பெரிய மனுசியானதை இப்போது அவளால் மறைக்க முடியவில்லை. உண்மை வெளிப்பட்டதால் அவள் சட்டென வீட்டில் நுழைந்தாள்.

நான்  சற்று நிம்மதியானேன். இருந்தாலும் இப்போதுதான் என் துக்கம் அதிகமானது. ஒரு அகதியின் மன வலியோடு அச்சடங்கைக் கடந்திருப்பாளா? எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருந்திருக்குமா? இரு சக்கர வாகனத்தில் செல்வோரின் சைடுஸ்டாண்டை தள்ளும்படி சுட்டிக்காட்டும் சாதாரணக் கரிசனையாக; பள்ளியில் பெண் ஆசிரியர்கள், மாணவிகள் பெண் தன்மையைக்கடக்க காத்திருக்கும்போது அவர்களின் குடும்பச் சூழலை அறிந்து எதிர்க்கொள்ளவேண்டிய ஆலோசனைகளை கொடுத்திருப்பார்களா?  "ஏய் அனிதா சைக்கிளை விட்டிட்டு வா, வண்டியில போலாம்." என்றேன்.  அவளும்  புரிந்துக் கொண்டு  அமைதியாக வந்தாள்.

அவசரக்காற்று தள்ளிச்சென்றது. நான் வெறுமனே பேச்சிக்கொடுத்தேன். "வீட்டில் ஒரு செடியைக்கூட வைக்க மாட்டேங்கிற, நீ பசுமைப்படையில சேர்ந்துட்டு காலையில கெளம்பிட்ட. அத்தை சயந்திரம் வந்திடுவாங்க. சனி, ஞாயிறு லீவு வருது, திங்கள் மட்டும் லீவு போட்டிட்டு போதும் சரியா." என்றேன். மகள் ஏற்றுக்கொண்டதைப் போல் தலையாட்டினாள். நான் மீண்டும் "சரி உங்க ஸ்கூல்ல பாத்ரூம் நிறைய இருக்கா?

திடீரென்று எதற்குக் கேட்கிறார் என்று நினைத்திருப்பாள். அவள் ஊங் காட்டிவிட்டு  "இருக்குது" என்று தலையசைத்தாள்.

 "தண்ணி நல்லா வருமா?"

எல்லாப் பள்ளிகளிலும் குடிநீர், பாத்ரூம் துப்புரவு என்பதுதான் மிகவும் பிரச்சனைக்குரிய தாகவே இருக்கிறது. நிறையக் குறைபாடு இருக்கத்தான் செய்கிறது.  ஏதற்காக இப்போது கேட்கிறார் என்று நினைத்திருப்பாள். சற்று மனத்தயக்கத்துடன்  "வரும்" என்றாள்.

மீண்டும் கேள்வியைத் தொடங்கினேன். "சரி அந்த நாப்கின் எவ்வளவு இருக்கும்" நான் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறேன். ஆண்பிள்ளைகளை விட அவள்தான் என்னிடம் மிகவும் அரவணைப்புடன் இருப்பாள். அவள் குழந் தையாக இருக்கும் போது கால், கழுவி இருக்கிறேன். குளிக்கவைத்திருக் கிறேன். இந்த நிகழ்வை மேற்கொள்வதில் குழந்தையாகவே இருக்கிறாள். நான் தாயாக மாறினேன். அப்போது வார்த்தைகள் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு மெல்லிய அர்த்த முள்ளக் கவிதையாக வந்தது.

"அனிதா,.நாப்கீன் ஒண்ணு வாங்கிப் பயில வச்சிக்கோ. ஸ்கூல்ல போன உடனே, பாத்ரூமுக்குப் போய் நாப்கீன  பிரிச்சி ஒண்ணு எடுத்து வச்சிக்கோ. வேஸ்ட்டஎடுத்து ஒரு கவரில் போட்டு, பின் பக்கம் குப்பை இருக்கும் இடத்தில் போட்டுட்டு" என்றேன்."சரி' என்றாள். கடையில் வண்டி நின்றது. ஒரு நாப்கின் குடுப்பா என்றேன். கடைக்காரன் பார்வையில் எதோ கேள்வியை வைத்துக் கொண்டு கொடுத்தான். நான் கருப்பு கவரில் போட்டுக்கொடுக்கக் கேட்டேன். கறுப்புக்கவர் ரகசியங்களை வெளிப்படுத்தத் தயங்குகிறது. பெண் பிள்ளைகள் பள்ளியின் நுழைவாயிலை கடக்கிறார்கள். நான் பார்த்தேன் இதில் எத்தனைக் குழந்தைகள் தங்கள் முதல் அனுபவத்தை பாரத்தோடு கழித்தார்களோ!  "சரி அனிதா நான் போகட்டுமா? உள்ளப்போய் நான் சொன்னதை முதலில் செய்." என்று கிளம்பினேன்.  அவள் நாப்கினை இருக்கிறதா என்று  தொட்டுப்பார்த் தாள்.  பாத்ரூம் இருக்கும் பக்கம்  சற்று வேகமாக  நடந்தாள்.

மற்ற நாட்களுடன் வித்தியாசம் காட்டவே ஞாயிறில் கூடுதளாக தூக்கம் வருகிறது. பிள்ளைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் காலையில் எழுந்திருக்கும்போதே சற்று முரட்டுத்தனமாக "டேய் கோயிலுக்கு போகணுமே எதுனா பயமிருக்கா. எந்திரிங்கடா போய் குளிச்சிட்டு கெளம்புங்க. என சத்தம் போட்டேன்."  வாழ்வின் நிர்பந்தம் சிலவற்றிற்குக் கட்டுப்பட வேண்டிதான் இருக்கிறது. அவசரமாய் பிள்ளைகளை  எழுப்பி, சீக்கிரம் வாங்க என்று சொல்லிவிட்டு  நான் முதலில் சென்றுவிடுவேன்.


நான் எப்போதுமே பிரசங்கத்தை மட்டும் ஆழ்ந்து கவனிப்பேன். ஆயர் சில நாட்களில் சபையாரின் பிறந்த நாளையும், மண நாளையும் முதன்மைப்படுத்தி வாசிப்பார்கள். சில நாட்களில் பிரசங்கம் முடிந்தபிறகு பிறந்த நாள். மணநாள் வாசிப்பார்கள். இது எந்த அடிப்படையில் நடக்கிறது. ஒருவேளை வசதி படைத்தவர்கள் பிறந்தநாள் என்றாள் கடவுளின் வார்த்தைக்கு முன்னே வாழ்த்துக்களா? எனக்குக் கேள்வியாகவே இருந்தது.  சிலர் தலையும் இல்லாமல், காலும் இல்லாமல் பிரசங்கிப்பார்கள். அப்போதெல்லாம் பாதியில் எழுந்து வந்துவிடுவேன்.

ஒரு நாள் ஆயர் அரசாங்கம் உங்களுக்கு அகவிலைப்படி எல்லாம் வாரி வழங்குகிறது. நீங்களும் கடவுளுக்கு அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாக கொடுங்கள் என்று பாதிப் பிரசங்கம் காணிக்கை பற்றியே இருந்தது. 'ஏறிய ஊதியத்திற்கு ஏற்றார்போல் விழுக்காடு ஒதிக்கீடு செய்து லிஸ்ட் தந்து விட்டால், பாவம் ஆயருக்கு இவ்வளவு சிரமம் இருக்காதே' என்று நினைத்தேன்.

இப்படியான எரிச்சலான பிரசங்கத்தின் போதெல்லாம் பாதியில் எழுந்து வந்துவிடுவேன். ஆசீர்வாதம் முடியும் வரை ஒரு ஞாயிறும்  இருந்ததில்லை. அதனால் தான் என் நண்பன் சொன்னதுபோல நான் சபிக்கப்பட்டவனாக  உறுவாகி இருக்கிறேனா?

புரண்டு, புரண்டு படுத்தேன். என் மனசாட்ச்சி எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறவர்களுக்கு வாழ்வு முழுவதும் வசந்த காலம். ஆனால் வாழ்ந்த சுவடே இருக்காது.  நீ சட்டென்று எழுந்து   இவைகளை ஒரு காகிதத்தில் கிறுக்கிவை என்றது.

நான் சட்டென்று கண்விழித்தபோது வெளிச்சம் அறையை நிறைத்திருந்தது. என் தலைமாட்டில் வெள்ளைக்காகிதங்கள் படிமங்களாவதற்கு  காத்திருந்தன.

ஜேடி

முடிந்தது.
                                                                                                       
         
 
    
        
         

Friday, June 10, 2011

கடிதம்

                       அன்புள்ள அண்ணனுக்கு


    அன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது. நாங்கள் இங்கு  நலமுடன் இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி சொல்வதில் உண்மை இல்லை என்பது உனக்கு தெரியும். இருந்தாலும் உன் மனம் புண்படக் கூடாதென்றே அப்படி குறிப்பிட்டேன். ஒரே மாதத்தில் நீ எழுதியக் கடிதங்கள் மூன்றும் கிடைத்தன.  ஆனால் பதில்  எழுதக்கூடிய மனநிலை எனக்கு வரவே இல்லை. உன் கடைசி கடிதம் படிக்கும்போது என் கண் பொங்கி எழும்பாத கடலாக மாறி சமநிலை கொண்டதாகவே ததும்பிக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கடிதத்தின் எழுத்துக்கள் பழுதுபட்ட கண்ணிற்கு தெரிவதுபோல் மங்கலாகவே தெரிந்தது.

நீ குறிப்பிட்டதுபோல யார் இழப்புகளையும் ஓரளவு சீக்கிரத்தில் சமாளிக்கலாம் குடும்ப தலைவியின் இழப்பைத்தவிர, என்ற உன் வார்த்தை மீண்டும் மீண்டும் என் மனதை ஏங்கவைத்துவிட்டது. என்னை ஆறுதல் படுத்த எழுதிய உன் வார்த்தைகளே, நான்  பதில் எழுதமுடியாதபடி என்னை துக்கத்தில் ஆழ்த்திவிட்டது.

அன்புள்ள அண்ணா, என் இழப்பை தாங்கிக்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. உலகில் எதுவும் நிரந்தரம்மல்ல  என்பதை அறிந்த   உடன் பிறப்புகள் ஆபத்தில் உதவிக்கொள்கிற பண்புடையவர்கள் என்பதை உன் ஆறுதல்,  உதவிகளின் மூலமாக புரிந்து கொண்டேன். உன் உதவிக்கரம் இல்லாமல் இருந்திருந்தால்  எண் நிலமையை எண்ணிப்பார்க்கவே முடிய வில்லை. ஒரு கட்டத்தில் என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். இப்பொழுது மற்றவர்களின் வாழ்வை உற்று நோக்குகின்றேன். நீ சொன்னதுபோல சிறு வயதில் நம் கிராமத்தில் எல்லா தகப்பனும் தங்கள் பிள்ளைகளை பொறுப்பில்லாமல் கூலி  வேலைகளுக்கும், ஆண்டை வீடுகளுக்கும் அனுப்பினார்கள். படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் அநேகருக்கு வரவே இல்லை. அக்காலங்களில் நம் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தாலும், அப்பா படி, படி என்று பள்ளி படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து  அனுப்பினார்.

நமக்கென்று சொத்து எதையும் வைக்கவில்லை என்றாலும், ஒரு வேலையை பெறுகிற தகுதிக்கு படிக்கவைத்துவிட்டார் என்பதை எப்போதும் நினைக்கத் தான் வேண்டியிருக்கிறது. மேலும் சிறுவயதில் சகோதரன், சகோதரி எல்லோ ரிடத்திலும்  அன்பு செலுத்துதல் என்ற உறவின் மகத்துவத்தை அடிக்கடி பேசி வளர்த்தார். அந்த வளர்ப்புதான் இந்த நாள்வரை  நம்  சகோதரத்துவத்தில் முற்றிலும் பிரிவினை இல்லாது வாழ்வை கடத்தமுடிகிறது.  சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் இருக்கலாம், அது பெரிய பாதிப்பை இதுவரை ஏற்படுத் தவில்லை. அப்படி இருப்பது மிகவும் உன்னதமான நிலைதான்.

அண்ணா நீ டில்லியிலிருந்து தமிழ் நாட்டுக்கு சீக்கிரம் மாறுதல் பெற்றுவர வேண்டும், ஏனென்றால் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்.  உன் பிள்ளைகள், என் பிள்ளைகள் என்று இதுவரை பிரித்து பேசியதே இல்லை. சிறுவய திலிருந்து என்னிடம் வளருவதால் என்னையும் ஒரு தகப்பன் தகுதியில்தான் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுடைய எண்ணங்கள் மனிதனு டைய  இயல்பான வாழ்வைக் கெடுக்கின்ற பல ஊடகங்களில் பதிந்து தீவிரமாய் அலைகிறது. தற்போது வளர்ந்த பிள்ளைகளை கட்டுப்படுத்துவதில்   என்னிடம் சுணக்கம் இருக்கிறது.

இந்த நேரத்தில் தான் தகப்பனின் கண்டிப்பு, கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஒருவேளை நீ ஊதியத்தில் குறைவு ஏற்படுமோ என்று தயங்கினால், எதிர்காலத்தில் பிள்ளைகளால் அதிக இழப்பை சந்திக்க நேரிடும். இதை என் பாரம் கழித்துக் கொள்ளசொல்லவில்லை. பள்ளிக்கு வருகிறேன் என்று தினந்தோறும் வீட்டிலிருந்து வந்து,  பள்ளியை கட்டடித்துவிடும் பிள்ளைகள் ஒருகட்டத்தில் வருகை பதிவேட்டால் மாட்டிக்கொள்ளும்போது  தலைமை ஆசிரியரிடம் விசாரனைக்கு வருவார்கள். அப்படி வருகிற பிள்ளைகளின் தகப்பன்கள், நீண்ட நாள்  இடைவெளிவிட்டு வீட்டிற்கு வருகிறவர்களாக இருக்கிறார்கள். அல்லது தகப்பனே இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். தாய், தகப்பன் இருந்தும் ஓயாத கவனிப்பில் இருக்கிற பிள்ளைகள் பள்ளியை கட்டடிக்கவில்லையா? என்ற கேள்வி உனக்கு எழலாம். அனால் அப்படி நடப்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

மேலும் அண்ணன் அறியவேண்டியது. நம் பெரியப்பா மிகவும் உடல் சுகவீனப்பட்டுவிட்டார். எந்த நேரத்திலும் அவர் மூச்சி நிற்கலாம். இதை இவ்வளவு அலட்சியமாக சொல்லுவதற்கு காரணம், முதிர்ந்த வயது  காரணமாய் இருந்தாலும், அவர் குடும்பத்திலேயே பெற்ற பிள்ளைகள் இருவரையும் சமமாக கருதவில்லை. ஏமார்ந்தவனை  தூரதிலேயும், உதைப்பவனுக்கு சொகுசையும் தந்துவிட்டார்.  இதனால் சகோதரர்களுக்குள் நிரந்தர பகைமையை வைத்துவிட்டார்.  அதனாலே எனக்கு அவர்மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

உறவுகளை, அதற்குள்  கடமையை நிர்நித்தவன் யார் என்றே தெரியவில்லை. அவன் மிகவும் புத்திசாலியா அல்லது  உலகை  கெடுக்க  வழிவகுத்தவனா? ஒவ்வொருவருக்குமான கடமைக்கான செயல்பாட்டால்தான் வாழ்வியல் அடுக்குகள் உறுதியாய் நிற்கின்றன. அதன் மூலமாகவே எல்லா பேதங்களும், வஞ்சனைகளும், அழித்தொழிப்புகளும் சார்பு நிலைகொண்டு நடந்தேறுகிறது. மனித வாழ்வியலுக்கு ஒரு பொதுத்தன்மையான புதிய உறவுமுறையை கட்டமைத்தால் என்ன? என்று கூட தோன்றுகின்றது. கூட பிறந்திருந்தாலும் அப்போது நான் உனக்கு தம்பியாக இல்லாமல் போகலாம். உனக்கு யாரோ ஒருவர்  அண்ணனாக்கூட வரலாம். அண்ணா, என்ன சிரிப்பு வருகிறதா?  பயன் தராதபோது   தகப்பனாக. தாயாக, தங்கையாக இருந்தாலும் உறவை சீக்கிரம் துண்டித்துவிடுகிற மனிதன்,  லாபம் தருகின்ற உறவை கணவனாக, மனைவியாக பற்றுறுதியுடன் ஏற்றுக் கொள்கிறபோது. அதைவிட லாபம் தருகின்ற ஒரு புதிய உறவின் அமைப்பை, காலப்போக்கிலாவது   உருவாக்கிக்கொள்ளமாட்டன் என்பதில் என்ன நிச்சயம்?


அண்ணா நீ சீக்கிரம் மாறுதல் பெறுவதற்கு முயற்சி செய். மற்றவை நேரில். நேரில் இவ்வளவு சுதந்தரமாய் பேசமுடியுமா என்று மனதிற்குள்  நினைக்கிறேன். நீ இயல்பாய் பேசுவாய் நான்தான் சற்று சங்கடப்படுவேன்.  நேரம் கிடைக்கும்போது பதில் எழுதவும்.

                                                                                           இப்படிக்கு
                                                                        உன் அன்பை மறவாத தம்பி.
ஜே டி