Tuesday, October 4, 2011

கவிதை

                        இயல்பான முரண்


நான் பார்க்கிறேன்
பறப்பதில் தேறியப் பறவை
தன்னிலிருந்து உதிரும் சிறகை
கண்டுகொள்வதேயில்லை
நீயே சொல் 
இத்தனை நாள் அச்சிறகு
பயனற்றதாகவா 
அப்பறவையின் சதையில் தறித்திருந்தது

ஒரே அறையில் இருப்பதால்
எவ்வளவு அன்யோன்யமாக
பார் என்கிறாய்
உண்மையில்
அவர்கள் நாளொன்றுக்கு
நான்கு வார்த்தைகள்தான்
பேசிக்கொள்வார்கள்
பல நாட்கள்
அவ்வார்த்தைகள்கூட
கிட்டுவதில்லை என்கிறேன்
அதில் சிறிதும் உண்மையில்லை என
என் முகத்தை பார்க்க மறுக்கிறாய்

உன் இரண்டடி கூந்தலில்
இரண்டு மடிப்பாய் வைக்க
நான்கு முழப்பூவுக்கு
என் பேனாவால் தினமும்
முதலீட்ட முடியவில்லை
என்பதுதான் உண்மை
இருந்தாலும் 
ஒரு நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன்

நீ தினமும்
தலையில் வைத்த பூவால்
உன் மயிர்களில் வாசம் கூடுகிறது
உன் நாசியும் வாசத்தையேதான்
இதுவரை அதிகமாக நுகர்ந்திருக்கிறது

நீதான், 
ஒரு மேலைநாட்டு பெலிக்கன் பறவை
மார்பில் குத்திக் குத்தி
தன் சதைகளையே குஞ்சுகளுக்கு
உணவாக ஊட்டும்,
அதைவிட மேலாக
உனக்கு செய்வேன் என்றாய்

ஆனால் இவ்வளவு அவசரமாக
திருவிழாக்களின் அமைதியைபோல்
ஏன் நம் சினேகிதம் கானாமல் போனது

பறப்பதில் தேறியப் பறவை
தன்னிலிருந்து உதிரும் சிறகை
கண்டுகொள்வதேயில்லை

ஜேடி












Wednesday, September 21, 2011


குழந்தைகள் சூழ்ந்த வானம்                              பாரதிஜிப்ரான்

                                                                                                                  

எவ்வகை குடும்பங்களாக இருந்தாலும், அதின் பெற்றோர்கள் தங்கள் சுழநலத்தை கணக்கீடு செய்தே குழந்தை வளர்ப்பு முறையை கையாள் கிறார்கள். குழந்தைகள் அவர்கள் இயல்பு அடிப்படையில், பெரும்பாலும் சுதந்தரத்தை அனுபவிக்க விடுவதில்லை. இப்படியான சூழலில்தான், குடும்பங்களில் தங்கள் சாகசங்களை காட்டமுடியாமல், சமூக வெளிகளில் நடத்திக்காட்டி விடுகிறார்கள். அப்படி நடத்திக்காட்டுகிற குழந்தைகளின் உணர்வுகளை இயல்பு மாறாமல் நண்பர் பாரதிஜிப்ரான் தனது கவிதைகளில் பதிவு செய்கின்றார். 

....அன்று பிறந்த ஈரம் காயாத          
குழந்தைக்குக் கதகதப்பூட்ட.        

என்று முடிகிற கவிதையில், தற்காலத்தில் பிறக்கும் அநேகக் குழந்தைகள் கண்ணாடிப் பெட்டியை பார்க்காமல் வருவதில்லை, எல்லோருக்கும் முடிவில் ஒரு பெட்டி இருக்கிறது என்பதின் அடையாளமா? (குறிப்பு- பெட்டி என்பது, ஒப்புமைக்காக குறிக்கப்பட்டுள்ளது.) ஏன் இப்படி? யார் காரணம்? என்ன குறைபாடு? என்றே தெரியவில்லை. பொதுவாக பதினைந்து வருஷம் முன்பெல்லாம் குழந்தைகள் நேரடியாக தாயின் அரவணைப்பில் கத கதப்புடன் தூங்கும், இப்போதெல்லாம் பிஞ்சு குழந்தைகளுக்கு உடனே அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. அதனால் கவிஞர் கடல், மலைகள் கடந்து, பூக்களின்  வாசத்தோடு  சூரியனை அழைக்கின்றார். 

சாரைப்பாம்பாய் 
நெளிந்து நெளிந்து நீளும்
 ஒத்தையடிப்பாதைகளில்
வகுப்பறை மீண்டு
வீடு நோக்கி ஓடும்                                                                           
குழந்தைகளின் 
மகிழ்வின் நிழல் உரசி
மணக்க மணக்க விழுகின்றன
பனம் பழங்கள்.

உலகமயமாதல், பொருளாதாரக் கொள்கை, வல்லரசு என்கிற சூப்பர் ஈரோக்களின் புழக்கங்கள் அதிகமாக இருக்கும் இச்சூழலிலும் சரியான சாலையில்லாமல் கிராமக்குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இன்னும் பல மையில்கள் தூரம் ஒத்தையடி பாதையில்தான் நடக்கவேண்டியிருக்கிறது. தொழிற்கூடங்களில் முதலாளியின் சண்டித்தனங்களை பொறுத்துக்கொண்டு மனச்சோர்வுடன் பள்ளியிலிருந்து திரும்புகிறார்கள். வீட்டிற்கு போனாலும் அம்மா வந்து சமைக்கும் வரையிலும் வீட்டில் சாப்பிட ஒன்றுமே இருக்கப்போவதில்லை. என்று யோசித்துக் கொண்டேதான் செல்கிறார்கள் பல பள்ளிக் குழந்தை என்பதை அற்புதமாக சொல்லுகிறார். 

தங்களின் தன்நலமிக்க, குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் வாழ்வைக் கடத்துகிறவர்கள் யாருமே, பிறர் மனம் நோகுமென்று கணிப்பதேயில்லை. இவர்கள்தான்  மாற்றுத்திறனாளிகளை, முதியோர்களை குருடு, செவிடு, முடமென்று ஏளனமான வார்த்தைகளை சட்டென வீசிவிடுகிறார்கள் அதன் வலி தெரியாமல்’ என்று ஒரு கவிதையில் ஆதங்கப்படுகிறார்.

சாளரக் கம்பிகளில்
ஊஞ்சலாடுகின்ற நீர்த்துளிகள்....      என்று தொடங்கும் கவிதையில்

இயற்கையின் அழகை மிகவும் நுண்தன்மையுடன் ரசித்து வெளிக்கொண்டு  வருகிறார். ஒரு மழை நாளில், சன்னல் கம்பிகளில் வருசையான முத்துக் களைப்போல் தொங்கும் மழைத்துளிகளை ரசிக்கிறார். எப்போதும் போலவே அன்றயபொழுது தனக்குப் பிடித்தும் பிடிக்காமலும் நகர்கிறது. எப்படி இருந்தாலும் வயிற்றுக்கான தேவையை தேடவேண்டியிருக்கிறது,  தேடலின் பலனாக சற்று ஆசுவாசமும் ஏற்படுகின்றது. ஆனால் சுற்றி நடக்கும் நாடு கடந்த மனித வதைகளை நினைத்து மனம் பதைத்து விடுகிறது.

....இளைப்பாற பாறை மீதமர்ந்த
    கடவுளுக்குப் புடட்ம் புழுத்தது......

என்று உள்ளடங்கியக் கவிதையில் கடவுள் ஒரு அப்பாவியாக, மனிதன் திறமைசாளியாக சித்தரிக்கின்றார். ஒரு கட்டத்தில் கடவுள் மனிதனுக்கு பயந்து ஓடுகின்றார். அப்படி ஓடுகின்ற கடவுள் குழந்தைகள் கூட்டத்தில் நுழைந்து நாம் தங்கும் சரியான இடம் இதுதான் என்று நிம்மதி அடைகின்றார்.  இத்தொகுப்பிலேயே இதுதான் நீண்ட கவிதை. சற்று நெருடலும் ஏற்படுத் திவிடுகின்றது.  பிறந்த குழந்தையையும், சைக்கிள் டயரில் வண்டிப் பயணம் செய்யும் குழந்தைகளையும், குழந்தைகள் என்றேக் கணக்கிடுகின்றார். நடை முறையில் இருப்பதுபோல் சரிதான். ஆனால் தற்காலத்தில் ‘பிரிக்கேஜ்’ சேர்க்கும்போதே குழந்தைகளின் மூளையில் மெல்ல மெல்ல நச்சு வார்த் தைகள் உபதேசிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஐந்து, ஆறு வயதுகளுக்குள் பிறரைபழித்தல், தனக்கானதாக தனக்காக மட்டும்பொருளை பத்திரப்படுத்தல் போன்ற பொதுநோக்கற்றத் தன்மை பெற்றோர்களுடன் சேர்ந்து சமூகமும் கட்டமைத்து போதித்து வருகிறது. டயர் ஓட்டுகிற வயதொத்த குழந்தைகளிடம் கடவுள் புகுவது என்பது கடினம்தான். ஒருவேளை தற்காலச்சூழலில் தாயின் முலைக்காம்பை தன் வயிற்றுப் பசிக்காக இன்னும் மறக்காமல் இருக்கும் குழந்தைகளிட்ம் வேண்டுமென்றால் கடவுள் நுழைந்து ஐக்கியமாகும் வாய்ப்பு இருக்கலாம்.

....சாகும் மனிதர்களை
இலவச தொலைக்காட்சியின் வழியே
பார்த்துக்கொண்டே
மெல்ல நகர்கிறது
நம்முடைய இரவும் பகலும்.  


சூரியனாய், நிலவாய் மறைந்து மறைந்து தோன்றாமல், வானத்தின் உச்சியில் இரவும், பகலும்  ஓய்வே இல்லாமல் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் ஈழத்தின் ரத்த ஒழுகலை உலகமனைத்தின் கண்களும் ரசிக்கின்றதா? தங்கள் கோர முகத்தாலே அக்கொடூரத்தை காணமுடியாமல் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் பல கவிதைகளில் ஈழத்தின் வேதனையை அங்கு மனிதர்கள் வாழ்வதற்காக கண்ணீரை மட்டுமே அருந்தும் நிலையை கவிஞர் உரத்தக் குரலில் பதிவு செய்கிறார்.

....மழையில்லா இரவைவிட
மின் விளக்குகள் எரியாத இரவு
அவர்கள் மகிழ்வை நீட்டிக்கச் செய்கிறது .....
.......                                                                                            
மனைவியின் பூரண உடலைக் காணாத
கணவனும்
கணவனின் பூரண உடலைக் காணாத
மனைவியும்.


எல்லாம் இருக்கும் நாட்டில், தனக்கென்று எதுவுமே இல்லாமல்  எங்கள் நாடு எங்கள் நாடு என்று ஆக்ரோஷமாக ஆதரவு குரல் கொடுக்கிறார்கள் விளிம்பு நிலை மக்கள். இதே நாட்டில் எல்லாம் நிறைவாகப் பெற்றவர்கள் அம்மக்களைச் சுற்றியே வாழ்கிறார்கள். நிறைவாக பொருள் பெற்ற மனிதர்களும், அதிகாரம் கையகப் படுத்தியுள்ளவர்களும் அடிக்கடி விளிம்பு நிலை மக்களின் ரத்ததை தங்கள் நலனுக்காக பரிசோதித்து வைத்துக் கொள்கிறார்கள் என்ற கருத்தை ஆழமாக சித்தரிக்கிறது.

நண்பர் பாரதிஜிப்ரான் கவிதை உலகம், இத்தொகுப்பில் குழந்தைகளின் இருப்பை அதிகமாகப்பேசினாலும், கூடவே சமூகத்தில் நடமாடுகின்ற ஒரு சாரார் ஆதிக்கம், உலகநாடுகளில் வாழ்விழந்தோர் மேலும் தொடர்ந்து வலுவுள்ளோரால் கைவிடுதல்,  இத்தனைக் கொடூர மனித முகங்களை நினைத்து நினைத்து ரத்த அழுத்தம் ஏறி வாசகன் உடலை கெடுத்துக் கொள்ளாதபடி அங்கங்கே இயற்கையின் அற்புதமான அழகியலை அதன் நுண்கலை குன்றாமல் இச்சமூகப் பயன்பாட்டிற்கு படைத்து தந்துள்ளார்.


சில குறைபாடுகளாக நான் பார்ப்பது ஒரு பக்கத்தில மூன்றுவரி, நான்கு வரிக் கவிதைகள் பல தவிர்த்திருக்கலாம் அவைகள் இருந்துவிட்டு போகட்டும் என்கிற அளவுக்கு மற்ற கவிதைகளைப்போல சிரத்தை எடுத்து எழுதப்பட்டதாகவும் தெரியவில்லை. அட்டைப் படத்திற்கு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இவைகளைத் தவிர்த்து ‘குழந்தைகள் சூழ்ந்த வானம்’ தனித்து கவனம் செலுத்தவைப்பதாகவே இருக்கிறது.


ஜேடி




 





Tuesday, September 13, 2011

கவிதை

போனதுபோல் திரும்பாதே தம்பி

தார் பொங்கி நிற்கும் சாலையில்
நான் வெறுங்காலோடு
செய்துவிட்டு வந்துவிடுகிறேன்
நீ போனது போல் திரும்பி விடாதே தம்பி

சற்று
இளைப்பார உட்காரும் நேரத்தில்
பாலுண்டு கொண்டே
என் முகத்தை வாசிக்கும்
உன் ஓரக்கண்களில்
எதற்காகவோ எனனைப் பிடிக்காமல்
காணாது போன
உன் தகப்பனைக் காண்கிறேன்.

அதற்காக
ஒருபோதும் சிறு கோபத்தை
உன்னிடத்தில் காட்டிய தேயில்லை.
இருந்தாலும்
அதை நினைத்து
நான் வடித்தக் கண்ணீர்
நீ உண்ட பாலோடு கலந்ததை
எப்படி, உனக்கு அற்பமாய் தோன்றாமல்
என்னால் நினைவூட்டமுடியும்
என்று தெரியவில்லை.

நீ போனது போல்
திரும்பி விடாதே தம்பி

அண்ணனின் மேல்நிலைக் கல்விக்கு
கடைசியாக என் கயிறுக்குள்
தாலி மட்டும்தான் இருந்தது
உனக்குத் தெரியாததல்ல.
பக்கத்து வீடுகளிலும், எதிர்வீடுகளிலும்
கலர் கலரான
ஆடைகளோடு செல்லும் பிள்ளைகளை
நீ வெறித்துப் பார்க்கிறாய்
எனக்கும் தெரியாமல் இல்லை.

ஐந்து வருட நம்பிக்கைக்கு பிறகு
கேஷ் கடை முதலாளி
தொடர்ந்து வா
கொஞ்சம் ஏத்தித் தருகிறேன்
என்றதை நம்பித்தான்
துணிந்து 'இருபது' வட்டிக்கு வாங்கினேன்.

நாளை
நீ பள்ளிக்குச் செல்லும்போது
மற்ற பிள்ளைகளைப் போலவே
ஷுவும், டையும் உன்னை அலங்கரிக்கும்
பக்கத்து, எதிர் வீட்டின் தலைவிகள்
அவள் பிள்ளைகளோடு
நீ கைக்கோர்க்க அனுமதிப்பாள்.
இருந்தாலும்
அவைகள் வெறும் பிரமைதான் தம்பி
ஒருவேளை
கடைசிக் காலங்களில்
என் முதுகெலும்பு உடைவதை
உன்னால் தடுக்க முடியாமல்
போனாலும் பரவாயில்லை
எனக்கான கடமையை
சரியாக நிறைவேற்றினேன்
என்ற சொல்லாடலையாவது
நான் இழந்து விடாமல் இருக்க
நீ பள்ளிக்கு போனதுபோலவே
திரும்பிவிடாதே தம்பி.


ஜேடி

Sunday, August 28, 2011

கட்டுரை

த.மு.எ.க.சவும் பிரெஞ்ச் ஆய்வுஅரங்கமும் இணைந்து
நடத்திய இரண்டாம்,மூன்றாம் நாள் நிகழ்வு(12,8,11,13,811)

எழுத்தாளர் பொன்னீலன்

தன் வெண்நிற ஆடைகளைப்போலவே, கட்டை விரலை நிமிர்த்திப் பிடிக்கின்றது போல தன் கற்றை மீசையும், தலை மயிரையும் முதுமை வெண்தன்மையாய் மாற்றியிருந்தது. நாங்கள் சில நண்பர்களுடன் சேர்ந்து கல்கியின் பொன்னியின் செல்வனோடு, அதே கருத்து ஒற்றுமை கொண்ட இன்னொரு புத்தகத்தையும் வைத்துக்கொண்டு ஒன்றுக்கொன்று ஒப்பீட்டுத்தன் மையில் பக்கங்களை விட்டு விட்டுப்படிப்போம் காலப்போக்கில் ஊன்றிப் படிக்கின்ற பழக்கம் வந்தது நான் தாயாரிடமும், தந்தையிடமும் கதைகளை உள்வாங்கிக்கொண்ட அனுபவமுண்டு. என் தாயார் அதிகம் படிக்கவில்லை. ஆனால் ஆங்கிலம் உள்பட நான்கு மொழிகளைக் கற்றறிந்திருதார்.

நான் முக்கியமாக என் கரிசல் மண் சார்ந்த மக்களிடதிருந்தே என் நாவல்களுக்கான களங்களை தேர்வுசெய்கிறேன். வழியாக வழியாக வருகின்ற நாட்டார் பாடல்கள்,நாட்டார் வாழ்மொழி, நாட்டார் மரபு,நாட்டார் கதைகள் இவைகளில் இரத்தமும் சதையுமான மக்களின் வரலாறுகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து இலக்கிய நயத்துடன் வரலாறுகள் படைக்கமுடியும்.நான் அப்படியான படைப்பைத்தான் வைக்கிறேன். எந்த படைப்பையும் எழுத வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டு எழுதவில்லை. மேலும் என் படைப்புகள் மக்களின் வாழ்விலிருந்து எடுக்கப்பட்டதுதான். எழுதி எழுதி துளிர்த்ததுதான் என் எழுத்துக்கள். அதை ஏன் இப்படி எழுதினேன், அப்படி எழுதினேன் என்று கேட்பதை கேலிக்குறியதாகத்தான் நான் பார்க்கிறேன். எழுதவருகிறவர்கள் புத்தகங்களை நிறையப்படிக்கவேண்டும். கூடவே மக்களின் வாழ்வு முறை வரலாற்றை, நேரடியான மக்களின் வாழ்வை படிக்கவேண்டும். தொன் மங்களை உடைத்துப் பார்க்கவேண்டும். இப்படித்தான் என் இயக்கம் தொடர்ந்தது இயங்கிவந் திருக்கிறது‘என்றார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

வரலாறு என்றால் என்ன? ஒரு எழுத்தாளனாக வரலாறு ஏன் எனக்குத்தேவைப்படுகிறது.எது வரலாறு. அறியப்பட்ட வரலாறா? அறியப்படாத வரலாறா? அறியப்பட்ட வரலாறு என்றால் எப்படி அறியப்பட்டது. அறியப்படாத வரலாறு என்றால் எப்படி அறியப்படாதது. ராஜ ராஜ சோழனுக்கென்று ஒரு வரலாறு இருந்தது அது அறியப்பட்ட வரலாறு. அறியப்பட்ட வரலாறை யார் எழுதியது. அதற்கான பின்னனி என்ன? அறியப்படாத வரலாறு கடைநிலை மக்களின் வரலாறு, அதை யாரும் எழுதாமல் விடுதலுக்கான காரணம் என்ன?

வரலாறு என்றதும் ஒரு ஊர்ல ஒரு ராஜா,ஒரு ராணி என்று ஏன் சொல்லுகிறோம். ராஜாவுக்கு ஒரு வரலாறு இருக்கும்போது ராணி வரலாறு ஏன் இல்லை. ராணி எந்த ஊர். ராஜா வரும்போது அவர் மட்டுந்தான் வந்தாரா. ஒரு சமயல்காரன் கூட இல்லையா? அவனுடைய வரலாறு ஏன் விடுபட்டுப்போனது. வரலாறு என்றதும் ஏன் கோட்டைகள் நாபகம் வருகிறது. குதிரைகள் நாபகம் வருகிறது. அவ்வரலாற்றை பார்க்க நான் ஏன் அக்பர்காலத்தை,பாபர்காலத்தை நோக்கிப்போகவேண்டும். வலாறு என்றதும் ஏன் மிகவும் நீண்டதொலைவையே மனம் கற்பனை செய்கிறது. எனக்கு அருகாமையில் வரலாறு இல்லையா? ஒண்ணாம் நுற்றாண்டு, இரண்டாம் நூற்றாண்டு,ஏழாம் நூற்றாண்டுகளில் படிப் படியாகச் சொல்வதுதான் வரலாறா?

எனக்கு அப்படியில்லை. இன்றும் ஒண்ணாம் நூற்றாண்டு, இரண்டாம் நூற்றாண்டு,ஏழாம் நூற்றாண்டு இருக்கிறது, ஆனால் எங்கு இருக்கிறது என்று தான் தெரியவிலை. வரலாற்றை ஒரு காலத்துக்கும் இன்னொரு காலத்துக்கும் செங்கல் அடுக்குவதுபோல அடுக்கத்தேவை யில்லை. வரலாறு என்பது இருந்துகொண்டே இருப்பது. ஒரு வரலாற்றை,வரலாற்று ஆசிரியர்கள் எழுதும்போது ஒருவிதமாகவும், இலக்கியவாதிகள் எழுதும்போது வேறுவித மாகவும் எழுதுவது எப்படி?

என் ஊர் ஸ்ரீரங்கம் பக்கத்தில் இருக்கிறது, அங்கு ஆறு உண்டு அங்கு ஒரு குதிரையைப் பார்த்தேன். அதைப்பார்த்போது இந்த குதிரையில் யார் அமர்ந்திருப்பார்கள், அது யாருடைய குதிரை. எங்கிருந்து வந்தவர்கள். அதற்கு உரிமையாளர் இல்லையா, இது எந்தகாலத்துக்குதிரை அந்த காலத்தின் வரலாறு என்ன? இப்படி அடுக்கடுக்காக ஆராய்வதின் மூலமாகத்தான் என்னால் வரலாற்றை படைக்க முடியும். மேலும் வரலாற்றை கற்பனையில்லாமல் இலக்கிய நயத்தோடு என்னால் படைக்கவே முடியாது. ஒரு பொருளை பல்வேறு கோணங்களில் பார்ப்பாதற்கும், ஒரு நிகழ்வை பல்வேறு யூகங்களில் உள்ளடக்கிக் கொண்டு செல்வதற்கும் கற்பனை மிகவும் அவசியம். நிகழ்காலத் திலேயே என்னுடைய வரலாறு கண்முன்னே இருந்தும் ஆது வேறு வேறு திசைகளில், வேறு வேறு நிலைகளில் தங்கிக்கிடக்கிறது. அவைகளை கண்டுபிடித்து வெளிக்கொண்டுவருவதுதான் இலவாதிகளின் வரலாற்று ஆசிரியர்களின் பணியாய் இருக்கிறது‘ என்றார்.


கண்மணி குனசேகரன்

என்னால வெறுமனே சும்மா இதப்படிச்சிட்டு,அதப்படிச்சிட்டு எழுதிவிடமுடியாது. எதையும் கண்ணாலப் பார்த்தாதான் நமக்கு வேலைக்கு ஆகும். எழுதமுடியும். என்னுடைய இயல்பே வாழ்க்கையில நடக்கிற விஷயங்களை, பார்க்கிற செயல்களை போகிறப்போக்கில் முன்னப்பாதி, பின்னப்பாதி தள்ளிட்டு நட்டுவிடுற கரும்பைப் போலதான் என் படைப்பபுகளை படைக்கிறேன். என் கிராமத்தில் ஒவ்வொருவரிடத்திலும் கொட்டிக்கிடக்கின்றது எழுதித்தீராக் ஆயிரம் கதைகள். அவைகளையே நான் படைப்புகளாக்குகின்றேன்.

நான் அஞ்சலை நாவலை ஆக்கம் செய்வதற்கு எந்த வரலாற்று ஆவணங்களையோ புத்தகங்களையோ அதிகமாக தேடி அலையவில்லை. அஞ்சலைக்கு ஒரு ஏரியும் சுற்றி விளை நிலங்களும், ஒரு சிறிய கிராம், அதில் வாழும் மக்களும் வேண்டியிருந்தது. அதற்காக ஏரியின் படம், ஒரு சிறு கிராமம்,அதில் வாழ்கிற மக்கள் என்று சார்ட்டில் நானாக வரைந்து‘ சுவற்றில் ஒட்டிவிடுவேன். அதன் பிறகு நாவல் எழுதத்தொடங்குவேன்.அப்போது எனக்கு இன்னின்ன பாத்திரங்கள் அமைப்பதிலும், அதிலிருந்து ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னணியை விவரித்து கொண்டுசெல்வதிலும் எனக்கு எந்த சிக்கலும் வந்ததில்லை. நாவலை முடித்தபின் வேறு ஒரு நபரிடத்தில் காட்டினால் ஒருவேளை, அவர் இந்த இடத்தில் இப்படி இடிக்கிறதே என்றால்,எந்த காலத்தில் நடக்கிறது என்று தெரியவில்லையே முக்கியமாக அது வரவேண்டும் என்று சொன்னால்,ஒத்துவராத இடத்தை கட்செய்து தூக்கிவிட்டு, செர்க்க வேண்டிய இடத்தில் ஒன்றை கோர்த்துவிட்டுப்போவேன்‘. என்பதாக தன் படைப்பைக்குறித்து உரையாற்றினார்.

சு.வெங்கடேசன்

வரலாற்று நாவல் என்பது புனைவுகள் இல்லாமல் எழுதப்படமுடியாது என்பதுதான் என் நிலைபாடு.வரலாற்றுப் புனைவு என்பது வரலாற்றின் எழுச்சிகளுக்கு உட்பட்டது. எழுதப்பட்ட வரலாறு ராஜ ராஜன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினான் என்பது, கடைசியாக செங்கமலம் பச்சைபுடவை கட்டிச்சென்றாள் என்பது எழுதப்படாத வரலாறு இப்படித்தான் தமிழகத்தின் வரலாறுகள் இதுவரை இருக்கின்றன. எழுதப்படாத வரலாறு வாய்மொழியாக, புலக்கதைகள் மூலமாக, தலைமுறை தலைமுறையாக இருந்துவருகின்றது. இவைகள் சாமான்ய மக்களிடமே அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றது.எழுதப்பட்ட வரலாற்றையும், மக்களை கண்டுகொள்ளாமல் விட்டுப்போன எழுதப்படாத வரலாற்றையும் இனைத்து புதிய வரலாறுகள் எழுதும்போது உண்மையான வரலாறுகளை வெளிப்படுத்தமுடியும். என்று நினைக்கிறேன்.என் நாவல்களில் இருதளங்களையும் இனைத்துத்தான் வரலாற்றை கட்டமைக்கிறேன்.‘ என்பதாக உரையாற்றினார்.


தோழர் சோலை சுந்தரபெருமாள் உட்பட பேசியப்படைப்பாளர் யாவரும் தங்களுடைய படைப்புகளில் இலக்கிநயத்தோடு வரலாற்றை எப்படி இனைத்து படைப்பது என்பதை தங்கள் தங்கள் அறிவுத்திறமையால் கட்டமைத்துக்காட்டினார்கள். குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணன் ஏன்... ஏன்...என்று பல கேள்விகளை எழுப்பி, அந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிச்செல்கிற கூடுதல் பணியை வாசகனுக்கோ அல்லது படைப்பாளிக்கோ அல்லது யாருக்கும், தேவையானதாகவே வைத்தார்கள். தனக்கே உறிய பாணியில் ஒரு உலகலாவிய பார்வையாகவும் இருந்தது. இலக்கியத்திற்கு உள்ளடங்கிய எல்லா படைப்புகளையுமே, நேர்த்தியான நுணுக்கங்களைக் கொண்டு ருசியுள்ள, சாப்பிடும் பொருளாகக்கொடுத்தார். நல்ல படைப்பாளன் தரும் சாப்பாடு யாருக்குமே அஜீரணக்கோளாறை ஏற்படுத்தாது.சாப்பிட்டபிறகு ஒருவேளை வயிறு கலக்கிறதென்றால் ஏற்கனவே ஆகாதது எதோ வயிற்றில் தங்கியிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இலக்கியத்தை படைத்து மனிதனிடம் கொடுத்தால்,சிலருக்கு பசியாற்றுகிறது, சிலருக்கு உப்பே இல்லை, சிலருக்கு பிடிக்கவேயில்லை,ஒரு காகிதப்பூ போல(பசியாற்றாது,மனதுக்கு பிடிக்கும். ஆனால் பயன்பாடு என்று பார்த்தால்) இலக்கியம் இப்படி இருக்கவேண்டுமா? எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்று சோல்லுவது முட்டாள்தனம். மறைமுகமாகவோ வெளியரங்க மாகவோ எல்லாருடைய உணர்வுகளிலும் ஒரு நிறைவை கலக்கச்செய்வதாய் இருக்கவேண்டாமா?(எருமையினதோ,பசுவினதோ)பால்போல்‘


நானறிந்த வரையில்,முகம் சுழிக்கிற அளவுக்கு யாரும் பாலை பழிப்பதில்லை(பால் ஒருமணிநேரம் தாங்குமா இலக்கியத்தை எப்படி அதனோடு ஒப்பிடமுடியும் என்று கேள்வி எழும்புகிறது. ஆனால் அவரவர் நாக்கில் தங்கிய விருப்பத்திற்கு ஏற்ப, தன் ருசியை தகவமைத்துக்கொண்டு. எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்லுகிற வல்லமை பாலுக்கு உண்டல்லவா)அதனால் இலக்கியம் இப்படி இருக்கவேண்டுமா? எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்தவிகடனில் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் ‘கலாச்சாரம், வரலாறு, மதம், தத்துவம், அறிவியல், அரசியல், நுண்கலை, சினிமா, மொழி, சமகாலப்போக்குகள்‘ என்று பைபிளில் வருகின்ற பத்துக்கட்டளைப்போல ஒரு பத்து சாரம்சத்தை முன்மொழிகின்றார்.ஒருவேளை இதன் அடிப்படையில் படைக்கிறபோது இலக்கியத்தின் நிலை என்ன? மேலே கண்மணி குணசேகரன் சொல்வதுபோல் அடியத்தறித்து முனையைத்தறித்து போகிற போக்கில் படைப்பை நட்டுச்சென்றால் அதனுடைய நிலை என்ன? இரண்டுமே கிடைக்க முடியாத அற்புத இலக்கியம் என்றால், எல்லாம் படித்து அறிவுஜீவிகளாய் இருந்தாலும் ஒரேமேடையில் ஆரோக்கியமான விவாதமாக நகராமல், ஒருவரின் ஒருவர் மனதை தாக்கும்படியாக பேசுகின்ற நோக்கத்திறகான வழி ஏன் ஏற்படுகிறது? நானறிந்த வரையில் மேலேக்குறிப்பிட்ட பத்து சாரம்சத்துடன் ‘உண்மையாய்யிருத்தல்,நேசித்தல்,அரவனைத்தல்‘ ஆகிய இம்மூன்றும் பிரதானமாக ஒரு எழுத்தாளனுக்கு வேண்டும்.இச்சாரம்சத்தை போற்றும் விதமாக ஒரு எழுத்தாளனுக்கு இதயத்தில் ஈரத்தன்மை வேண்டும் என்று எழுத்தாளர் பொன்னீலன் பேசினார். மூன்றாம் நாளில் கருத்தரங்கில் பங்கேற்ற எழுத்தாளர்கள் ஜாகீர் ராஜா காமுத்துரை,மார்க் இன்னும் சில எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் சமூகசீர்கேடுகளை எவ்வாறு கட்டமைத்தோம்,அதற்காக நாங்கள் அனுபவிக்கும சங்கடங்கள் என்ன? எங்கள் குடும்பம் எவ்வாறு அவதூறுக்கு ஆலாகிறது என்பதைஎல்லாம் ஆராயப்பட்டது. பிரெஞ்ச் ஆய்வுக்கூடத்தில் இயங்கும் கண்ணன் மிகவும் நேர்த்தியா கட்டமைத்து நடத்தினார். தோழர் தமிழ்ச்செல்வன் கூட்டு நன்றிக்குப்பிறகு பயனுள்ளக்கூட்டம் நிறைவுற்றது.

ஜேடி

Thursday, August 18, 2011

கவிதை

எஜமானர்கள்

நீண்டநாக்குகளில்
உமிழ் நீரை
ஒழுகவிடும் நாய்கள்
எதற்காகவும்
பணம் வீசும்
எஜமானர்களின்
அழுக்கு படிந்து நாறும்
பாதங்களை
நக்கிக்கொண்டே இருக்கிறது

புணர்தளில்
மூர்க்கத்தை காட்டும் நாய்களைப்போல்
தன் எஜமானர்கள்
சிந்திவிடுகின்ற
துணுக்குகளை பொறுக்கிக்கொள்ள
முண்டியடித்துக்கொள்கிறார்கள்
தன்மானத்தைத் துறந்தவர்கள்

மாதம்
முக்கால் இலட்சம்
வாங்கும் கணவன்,மனைவிகூட
எஜமானர்கள் போடும்
கேவலம் ஒருவேளை
வயிற்றை நிறப்பும்
இலவச சோற்றுக்காக
அவர்கள் வழிக்கு வரமறுக்கும
அன்றாடங்காச்சிகளின்
குரல் வலையை நெறிக்க
பொய்சாட்சி சொல்கிறார்கள்

எஜமானர்கள்
வேறு யாருமல்ல
நேற்றுவரை
இவர் எடுத்தமுடிவுகளுக்கெள்ளாம்
மறுப்பு தெரிவித்தும்,எதிர்த்தும், ஆதரித்தும்
பேசியவர்களிலிருந்து வந்தவர்கள்தான்
இன்று
கூரிய ஆயுதங்களாய்
முளைத்த பற்களில் உதிரும்
வார்த்தைகளை
எல்லைக்கடந்து நிர்ணிக்கிறார்கள்
இப்போது எதற்கும்,எவரிடமும்
சிறிதேனும் மறுப்புக்கூடயில்லை
பலமாக கைமட்டுமேத்தட்டுகிறார்கள்

மண்ணில் எழும்பி
மனிதனில் கலந்து
அமானுஷ்யமாய் உழலும் வாசத்தை
துற்வாடை என்று புறந்தள்ளி
எஜமானர்களுக்கு
ஏற்ற வாசத்தை
அவர்கள் அறையில் நிறப்பி வைக்கிறார்கள்
எஜமானர்களுக்கேற்ற வாசத்தை
நிறப்பிவைக்கிறவர்களை
எஜமானர்கள் சிறிதும் யோசிக்கவிடுகிறதேயில்லை
தன் பெறுமை,புகழ் நிலைக்க
எப்போதும் நீதியையும்,உண்மையையும்
கொல்லுதலை எல்லாவெளியிலும்
நிறைந்திருக்கும் நியாயமான
உண்மைபோல்
உற்சாகமாகவே நிரந்தரமாக
கட்டமைகத்துவைக்கிறார்கள்

எஜமானர்கள்
எதையும் செயலாக்கம் செய்வதற்கு
வெறுமனே
வார்த்தைகளை உதிர்த்துவிட்டு நிற்கிறார்கள்
அவர்களுக்குச் சொந்தமானது
ஒன்றையும் இழந்துவிடுவதேயில்லை
இழப்பு இல்லையே தவிற
தங்களுக்குக் குவிவதை
தடைசெய்ததேயில்லை
எஜமானர்கள்
யுகங்களைக் கடந்து
நிற்க முயற்சிக்கிறார்கள்
நீண்ட காலம்
நீதியை நிலைநிறுத்த
மறுத்துக்கொண்டே.

ஜேடி





Saturday, August 13, 2011

கட்டுரை

பாண்டிச்சேரி பிரஞ்ச் ஆய்வு அரங்கம் மற்றும் த.மு.எ.க.சங்கம் இணைந்து நடத்திய வரலாறும் இலக்கியமும் கருத்தரங்க கூட்டம் (10,8,11) முதல் நாள்


தமிழக வரலாறும் இலக்கியமும்

பேரா. கே.என். பனிக்கர் சுந்தராமசாமியின் ‘புளியமரத்தின் கதை‘ சிவசங்கரன் பிள்ளையின்‘ ‘தோட்டியின் மகன்‘ ‘ஏணிப்படிகள்‘ இவைகளில் எல்லாம் சாதாரண மக்களின் வாழ்வியல் வரலாறு இருக்கிறது. உண்மையான வரலாறும்,இலக்கியமும் சமூக மாற்றத்திற்கான வழியாக இருக்கிறது.(இடைவேளையில் சாப்பிடும்போது ஒரு தோழர் சில பேராசிரியர்கள் பேசியஉரை சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார்.உடனே தோழர் தமிழ்செல்வன் ‘ஏப்பா எல்லாத்தையும் விட பனிக்கர் பேசினதுதாம்பா சிறப்பு, உமக்கு ஆங்கிலம் தெரியல என்று நகைச்சுவையாகச் சொன்னார். அது எனக்கும்மானது என்று நகைத்துக்கொண்டேன். பனிக்கர் உரையை முழுமையாக குறிப்பு எடுக்கமுடியவில்லை.)

பேரா.அருணன் வரலாறிலிருந்துதான் தத்துவம் பிறக்கிறது. கடந்தகால வரலாறும்,தத்துவமும் ஒன்றை ஒன்றுசார்ந்து இருக்கின்றது.ஆரம்ப காலகட்டங்களில் வரலாறு வாய்மொழியாகத்தான் இருந்தது. பிறகு விசாரித்து அறிந்ததிலிருந்து வரலாறு தொடங்குகிறது. வரலாறு அறிவு சார்ந்து இயங்குகிறது. இலக்கியம் அறிவு,உணர்வுசார்ந்து இயங்குகிறது. ‘சாண்டில்யன்‘ நாவல் தொடங்கிபார்த்தாலும் அதில் மக்களுக்கான உண்மையான வரலாறு இல்லை. வரலாறு என்பது குறிப்பிட்ட காலத்தின் மக்களின் வாழ்முறையில் நேர்மையான சாரத்தை சொல்லவேண்டும்.சரித்திர நாவல்கள் சமிபத்தில்தான் ஓரளவு உண்மைத்தன்மையுடன் உறுவாகிவருகிறது.ஆகையால் தற்போது இலககியத்தோடு கூடிய வரலாற்று பங்கை நாவல்கள் செய்துவருகிறது‘என்றார்.


பேரா.கே.இராஜன். சங்க இலக்கியம் தொல்லியல்

தொல்லியலில் கிடைக்கின்ற பொருள்களையும் சங்க இலக்கியங்களையும் வைத்துக்கொண்டு தமிழகத்தின் முழுமையான வரலாற்றை சொல்லிவிடமுடியாது. இந்தியளவில் காலங்காலமாய் நிறுவியிருக்கும் வரலாறுகள் அதிக அளவில் குறைபாடுள்ள வரலாறுகள்தான்.தமிழகத்தில் மூவாயிரம் ஊர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை இருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சரியாகக் கிடைக்கவில்லை. உயரமான நடுகல்கள் கண்டுபிடித்துள்ளோம், அதன்மூலம் மனிதன் குழுவாக வாழ்ந்திருக்கிறான் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பதுக்கைகள் கிடைத்திருக்கின்றன அவைகளை ஒரு தலைவனுக்குறிய படுகையாகருதுகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நெற்கதிர்கள் கண்டுபிடித்துள்ளோம். தமிழகத்தின் கிடைத்துள்ள சிலகுறியீட்டு ஓடுகள், பொருட்கள் இலங்கைப்பகுதியிலும் கிடைத்துள்ளது. எப்படியான பொருள் கிடைத்தாலும் பழமையான மக்களின் வாழ்வுமுறையின் சில கூறுகளை கானமுடிகிறது, ஆனால் அக்கால மனிதர்களின் உணர்வுகளை அறியமுடியவேயில்லை. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

பேரா.சுப்புராயுலு சோழர் கால வரலாறும் இலக்கியமும்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசர்கள்,சமயம் சாராதவர்களாய் இருந்தார்கள். தற்போது ஒரு சார்புடைய மதங்கள் ஓங்கியுள்ளதுபோல் அக்காலத்தில் இருந்ததில்லை. தமிழகத்தில் சமணம்தான் முதல் சமயமாக தோன்றி வளர்ந்தது. சங்ககாலத்தில் ஒரு மதம் பெருவாரியாக நிறுவனப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததில்லை. சமணர்தான் தமிழர்களுக்கு முதல் முதல் எழுத்தறிவு கொடுத்தவர்கள்‘ என்றார்.

பேரா. வேலாயுதம் பாண்டியர்கால வரலாறும் இலக்கியமும்

கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல்தான் பாண்டியர்கால ஆட்சி தொடங்கியது முதல் முதலாக பாண்டியர்களின் வரலாற்றை ‘நீலகண்டன்‘ வெளியிட்டார். பாண்டிய,சேர,சோழநாட்டின் முழுமையான உண்மையான வரலாறு இன்னும் வரவில்லை. அரசனை மையப்படுத் துவதுதான் வரலாறு என்று எழுதப்பட்டது, சமூகத்தில் நம்பப்பட்டது. சுதந்திரமான மக்களின் வரலாற்றை சொல்லப்படவில்லை. எழுத்தாளர்கள் சாதாரன மனிதர்களின் வாழ்வை எழுதுவதின் மூலம் உண்மையான வரலாறுகள் உறுவாகும்.

வா,கீதா இந்திய வரலாற்றியலில் வட்டாரங்களும் அவற்றில் இலக்கியங்களும்.

தமிழகத்தில் சு. வெங்கடேசனின் காவல்கோட்டம், தெலுங்கு பேசும் மக்கள் பிழைப்புத் தேடி தமிழகத்தில் வந்து தங்களை நிறுவிக்கொண்டதைச் சொல்லுகிறது. அது கூறுகிற தொடற்சியான தரவுகளில் இருந்து தமிழகத்தின் வரலாற்றை அறியமுடிகிறது. இதுவரை யாரும் சொல்லாதக் கருத்தை பல்வேறு தகவல்கள்மூலம் சொல்லியிருப்பது சிறப்புக்குறியது. தற்போதயநிலையில் உயர் சாதிக்கும் தலித்துகளுக்கும் நடக்கின்ற தீண்டாமையை பிரச்சனையை ஒடுக்கப்படும் நிலையை காவல்கோட்டம் சொல்லாமல் விட்டிருப்பது கேள்விக்குறியதாகத்தான் இருக்கிறது.


ஜோ.டி குருஸின் ‘கொற்கை‘ மீனவர்களின் வாழ்நிலையை மிகவும் சிறப்பாகச்செய்கிறது. இரு ஜாதிகளின் உயர்வு தாழவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. வணிகத்தில் ஒரு சாராரின் வாழ்நிலை உச்சம், ஒரு சாராரின் சரிவுகளை சொல்லுகிறது. இப்படியான ஆண்கள் எழுதும் நாவல்கள் வரலாற்றின் நிகழ்வுகளைப் பதிவு செய்தாலும் பெண்களுக்கான வாழ்வியல் வரலாற்றை சொல்லவில்லை.பெண்களே தன்னிச்சையாக தங்கள் நடைமுறை வாழ்வை நடத்திச்செல்லுகிற விதமாக வரலாற்றை அமைக்க அச்சப்படுகிறார்கள். ஒரு சராசரி பெண் ஒரு சராசரி ஆணைப்போல் நேரடியாக சமூகத்தில் இறங்கி செயல்பட முடியவில்லை. இப்படியான சூழலில் எதைப்பிடிப்பது. சமமான வரலாற்றை எப்படி கட்டமைக்க முடியும். பாமா தலித் என்பதால் தலித் என்ற நிலையிலேயே பார்கிறோம் அவர்கள் படைப்புகளில் கல்விக் குறித்து நிறையஇருக்கிறது‘என்றார்.

10,8,11 அன்று நடந்த கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அத்துனை ஆளுமையாளர்களில் முழுமையான பேச்சை நான் இங்கே தந்துவிடவில்லை. எனக்கு ஈர்ப்புடையதாக இருந்தவைகளை மட்டும் நான் பிடித்துக்கொண்டேன். அவைகளைத்தான் தந்துள்ளேன். பாண்டிச்சேரி பிரஞ்ச் ஆய்வு அரங்கம் மற்றும் த.மு.எ.க.சங்கம் இப்படி ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்தியது சிறப்பு, த.மு.எ.க.ச வால் மட்டுமே எந்த பாகுபாடுமின்றி இப்படியானக்கூட்டம் நடத்தமுடியும் என்று நினைக்கிறேன்.(ஆனால் அங்கேயும் ஒரு சார்புநிலை இல்லாமல் இல்லை) மேலும் எனக்குள் எழுந்த கேள்விகள். மேற்பேசிய பேராசிரியர் உட்பட மிகவும் பிரபளமாய் இருக்கிற நாவல்களைப் பற்றியேயும் அதிலிருந்தே வரலாறுகளை கட்டமைக்கிறார்கள். நாவல்களோ தொல்லியல் பொருள்களோ கிடைக்காத தமிழகத்தின் வரலாறு என்ன? ஒரு சில மாவட்டங்களிலிருந்து வருகிற தகவல்கள்தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் வரலாறா? வா.கீதாவின் உரையில் அனேகமாக இரண்டு நாவல்கள் குறித்தே பேசினார்கள். ஒர், இரு மாவட்டத்தின் வரலாற்றுத் தகவல்கள் எப்படி முழுமையான தமிழக வரலாறு என்று ஏற்கமுடியும். ஒருவேளை வா.கீதா உள்நோக்கத்தோடு பேசியிருந்தால் மீண்டும் தவறான வராலாறு அமைய வழிவகுக்காதா? என்ற கேள்வியோடு வெளியேறினேன். ஆனால் மிகவும் சிறப்பான புரிதல்களை கூட்டம் ஏற்படுத்தியது.


12.8.11 கருத்தரங்கம் பின் எழுதுகிறேன்.

ஜேடி







Monday, August 8, 2011

கவிதை

வெறும் பூஜ்ஜியம்

பாசிப்படர்ந்த
குட்டையில் உலவுகிறது
மூன்று வாத்துக்கள்

மழை,வெயில்,பகல்,இருள்
எல்லாம் வந்துபோகின்றது
இவற்றில் எதையுமே
அவைகள் விஷேசமாக எண்ணியதேயில்லை

எங்கு இருக்கிறோம்
எதற்காக வாழ்கிறோம்
வெறும் நடமாட்டம்தான் வாழ்வா
ஒரு கணம் கூட யோசிக்கவேயில்லை

வயிற்றுப் பசிக்காக
குட்டை வளர்க்கும்
பாசிகளைச் சப்பிக்கொள்கிறது
அதனால் அதற்கான வயிறு
நிறைவதேயில்லை
நாளுக்கு நாள்
எலும்பை மூடிய சதைப்பற்று
சுறுக்கம் அடைகிறது
விஷேசமான இறக்கை இருந்தாலும்
சற்று தூரமேனும் பறக்குமளவுக்கு
திறமையைக் கொடுக்காத
கடவுளைச் சாடவும் தெரியவில்லை
இருந்தாலும் குட்டையில்
நீந்துவதை நிறுத்தவில்லை

திபுதிபுவென
தூசிப் பறக்க ஓடிவந்த
எருமைகள் குட்டையில் முழ்கின
தங்கமீன்கள்,காந்தி நோட்டுகள்
லேடனின் வார்ப்புக்கூட்டாளி
இவைகளை
வாயின் இடுக்குகளில் வைத்து
தின்றுக்கொண்டு எழுந்தபோது
எருமைகளின் கொழு கொழுத்த
உருவம் பிரமாண்டமாய் இருந்தது

சதிகாரக் குட்டை
இதுநாள் வரை
பார்வைக்கு பசுமையான
பாசியை ஈந்தளித்ததே என்று
மிரட்சியுடன் பார்த்தபோதுதான்
மிகவும் சுலபமாக
அதன் மூன்று கழுத்தையும்
ஒரே கையில் அடக்கிச்சென்றான் ஒருவன்

மூன்று வாத்துகளின்
ஆறு கண்களும்
வானத்தையே தீர்க்கமாய் பார்த்தது
எப்போதுமே எங்களுக்கு
வானமும் தரையும்
வெறும் பூஜ்ஜியம்தான்.

ஜேடி