Tuesday, September 13, 2011

கவிதை

போனதுபோல் திரும்பாதே தம்பி

தார் பொங்கி நிற்கும் சாலையில்
நான் வெறுங்காலோடு
செய்துவிட்டு வந்துவிடுகிறேன்
நீ போனது போல் திரும்பி விடாதே தம்பி

சற்று
இளைப்பார உட்காரும் நேரத்தில்
பாலுண்டு கொண்டே
என் முகத்தை வாசிக்கும்
உன் ஓரக்கண்களில்
எதற்காகவோ எனனைப் பிடிக்காமல்
காணாது போன
உன் தகப்பனைக் காண்கிறேன்.

அதற்காக
ஒருபோதும் சிறு கோபத்தை
உன்னிடத்தில் காட்டிய தேயில்லை.
இருந்தாலும்
அதை நினைத்து
நான் வடித்தக் கண்ணீர்
நீ உண்ட பாலோடு கலந்ததை
எப்படி, உனக்கு அற்பமாய் தோன்றாமல்
என்னால் நினைவூட்டமுடியும்
என்று தெரியவில்லை.

நீ போனது போல்
திரும்பி விடாதே தம்பி

அண்ணனின் மேல்நிலைக் கல்விக்கு
கடைசியாக என் கயிறுக்குள்
தாலி மட்டும்தான் இருந்தது
உனக்குத் தெரியாததல்ல.
பக்கத்து வீடுகளிலும், எதிர்வீடுகளிலும்
கலர் கலரான
ஆடைகளோடு செல்லும் பிள்ளைகளை
நீ வெறித்துப் பார்க்கிறாய்
எனக்கும் தெரியாமல் இல்லை.

ஐந்து வருட நம்பிக்கைக்கு பிறகு
கேஷ் கடை முதலாளி
தொடர்ந்து வா
கொஞ்சம் ஏத்தித் தருகிறேன்
என்றதை நம்பித்தான்
துணிந்து 'இருபது' வட்டிக்கு வாங்கினேன்.

நாளை
நீ பள்ளிக்குச் செல்லும்போது
மற்ற பிள்ளைகளைப் போலவே
ஷுவும், டையும் உன்னை அலங்கரிக்கும்
பக்கத்து, எதிர் வீட்டின் தலைவிகள்
அவள் பிள்ளைகளோடு
நீ கைக்கோர்க்க அனுமதிப்பாள்.
இருந்தாலும்
அவைகள் வெறும் பிரமைதான் தம்பி
ஒருவேளை
கடைசிக் காலங்களில்
என் முதுகெலும்பு உடைவதை
உன்னால் தடுக்க முடியாமல்
போனாலும் பரவாயில்லை
எனக்கான கடமையை
சரியாக நிறைவேற்றினேன்
என்ற சொல்லாடலையாவது
நான் இழந்து விடாமல் இருக்க
நீ பள்ளிக்கு போனதுபோலவே
திரும்பிவிடாதே தம்பி.


ஜேடி

2 comments:

அய்யன்பேட்டை தனசேகரன் said...

"ஒருவேளை
கடைசிக் காலங்களில்
என் முதுகெலும்பு உடைவதை
உன்னால் தடுக்க முடியாமல்
போனாலும் பரவாயில்லை" பதறுகின்ற தாயின் உள்ளக் கிடங்கினை சிதறாமல் வெளிப்படுத்தியுள்ளார் அன்புத் தோழர் டேனியல். எருதின் வலி எருதிற்குத்தான் தெரியும். காக்கைகளுக்கு புரியுமோ...!!

DANIEL JAMES said...

நன்றி தோழர்.