Tuesday, October 4, 2011

கவிதை

                        இயல்பான முரண்


நான் பார்க்கிறேன்
பறப்பதில் தேறியப் பறவை
தன்னிலிருந்து உதிரும் சிறகை
கண்டுகொள்வதேயில்லை
நீயே சொல் 
இத்தனை நாள் அச்சிறகு
பயனற்றதாகவா 
அப்பறவையின் சதையில் தறித்திருந்தது

ஒரே அறையில் இருப்பதால்
எவ்வளவு அன்யோன்யமாக
பார் என்கிறாய்
உண்மையில்
அவர்கள் நாளொன்றுக்கு
நான்கு வார்த்தைகள்தான்
பேசிக்கொள்வார்கள்
பல நாட்கள்
அவ்வார்த்தைகள்கூட
கிட்டுவதில்லை என்கிறேன்
அதில் சிறிதும் உண்மையில்லை என
என் முகத்தை பார்க்க மறுக்கிறாய்

உன் இரண்டடி கூந்தலில்
இரண்டு மடிப்பாய் வைக்க
நான்கு முழப்பூவுக்கு
என் பேனாவால் தினமும்
முதலீட்ட முடியவில்லை
என்பதுதான் உண்மை
இருந்தாலும் 
ஒரு நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன்

நீ தினமும்
தலையில் வைத்த பூவால்
உன் மயிர்களில் வாசம் கூடுகிறது
உன் நாசியும் வாசத்தையேதான்
இதுவரை அதிகமாக நுகர்ந்திருக்கிறது

நீதான், 
ஒரு மேலைநாட்டு பெலிக்கன் பறவை
மார்பில் குத்திக் குத்தி
தன் சதைகளையே குஞ்சுகளுக்கு
உணவாக ஊட்டும்,
அதைவிட மேலாக
உனக்கு செய்வேன் என்றாய்

ஆனால் இவ்வளவு அவசரமாக
திருவிழாக்களின் அமைதியைபோல்
ஏன் நம் சினேகிதம் கானாமல் போனது

பறப்பதில் தேறியப் பறவை
தன்னிலிருந்து உதிரும் சிறகை
கண்டுகொள்வதேயில்லை

ஜேடி