Monday, August 8, 2011

கவிதை

வெறும் பூஜ்ஜியம்

பாசிப்படர்ந்த
குட்டையில் உலவுகிறது
மூன்று வாத்துக்கள்

மழை,வெயில்,பகல்,இருள்
எல்லாம் வந்துபோகின்றது
இவற்றில் எதையுமே
அவைகள் விஷேசமாக எண்ணியதேயில்லை

எங்கு இருக்கிறோம்
எதற்காக வாழ்கிறோம்
வெறும் நடமாட்டம்தான் வாழ்வா
ஒரு கணம் கூட யோசிக்கவேயில்லை

வயிற்றுப் பசிக்காக
குட்டை வளர்க்கும்
பாசிகளைச் சப்பிக்கொள்கிறது
அதனால் அதற்கான வயிறு
நிறைவதேயில்லை
நாளுக்கு நாள்
எலும்பை மூடிய சதைப்பற்று
சுறுக்கம் அடைகிறது
விஷேசமான இறக்கை இருந்தாலும்
சற்று தூரமேனும் பறக்குமளவுக்கு
திறமையைக் கொடுக்காத
கடவுளைச் சாடவும் தெரியவில்லை
இருந்தாலும் குட்டையில்
நீந்துவதை நிறுத்தவில்லை

திபுதிபுவென
தூசிப் பறக்க ஓடிவந்த
எருமைகள் குட்டையில் முழ்கின
தங்கமீன்கள்,காந்தி நோட்டுகள்
லேடனின் வார்ப்புக்கூட்டாளி
இவைகளை
வாயின் இடுக்குகளில் வைத்து
தின்றுக்கொண்டு எழுந்தபோது
எருமைகளின் கொழு கொழுத்த
உருவம் பிரமாண்டமாய் இருந்தது

சதிகாரக் குட்டை
இதுநாள் வரை
பார்வைக்கு பசுமையான
பாசியை ஈந்தளித்ததே என்று
மிரட்சியுடன் பார்த்தபோதுதான்
மிகவும் சுலபமாக
அதன் மூன்று கழுத்தையும்
ஒரே கையில் அடக்கிச்சென்றான் ஒருவன்

மூன்று வாத்துகளின்
ஆறு கண்களும்
வானத்தையே தீர்க்கமாய் பார்த்தது
எப்போதுமே எங்களுக்கு
வானமும் தரையும்
வெறும் பூஜ்ஜியம்தான்.

ஜேடி

No comments: