Sunday, May 15, 2011

கவிதை

   சிசு கொலையில் அவன் பெயர் எழுது.


நான்  பாசாங்கு இல்லாமல்தான் நேசித்தேன்
பொருள் படைத்த உன் தந்தையால் 
எளிதில் நம் காதலை முறியடிக்க முடிந்தது.

குடும்பத்திற்கு அடக்கமான பிள்ளையாய் 
சீக்கிரத்தில் மாறிவிட்டாய்.

உன் மனைவி வந்தபிறகுதான் 
எனக்கே விளங்கியது
எந்த ஆண்மகனும் 
அவளின் பெருத்த முலைகளுக்கு 
அடிமையாகத்தான் செய்வார்கள் என்று .

நான் மனக்கசப்புடந்தான்
சிலநாட்கள் தவித்தேன் 
குடும்பத்தில் மிஞ்சியிருக்கும் 
என் தாயாலும், என்னாலும் என்னதான் செய்யமுடியும். 
என்னக்காக நானே 
எந்த மாப்பிள்ளை தகப்பனிடம் பேசமுடியும் 
கலாத்தை என் வழிக்கு முடக்கமுடியாததால்
அதன் வழிக்கு பயணப்படத்தான் 
கம்பெனிகளுக்குள் என்னை நுழைத்தேன்.  

மீண்டும் ஏனோ என்
முந்தானையை நெருங்கினாய் 
அப்போதே கேட்டேன் இல்லையா 
ஏன் உன் மனைவியின் முலைகள்
எவ்வளவு பிசந்தாலும் கரைவதே இல்லையா?
அதை நிர்வகிப்பதில் உனக்கு சிரமம் வந்துவிட்டதா?

எதற்காக என் குருத்து முலைகளின் மீது 
திடீரென ஈர்ப்பு வந்தது.

நான் சொல்லுவது கூட தவறுதான்.
காதலில் தள்ளாடிய 
கடந்த காலத்திற்கு வேண்டுமென்றால் 
மேல் குறிப்பிட்ட வாசகம் பொருந்தும்.

உடலோடு கரைந்து  
காணாமல் போக காத்திருக்கும்
தற்போதைய என் முலைகள் 
உனக்கு எந்த சுவாரசியமும் தராது
இதை பலமுறை உன்னிடம் சொல்லியும் 
மண்டிக்கிடக்கும் தும்பைச்செடிகளை 
சுத்தப்படுத்துவதாக 
யோனியில் படர்ந்த கருமையை ஒதுக்கி சுவைத்தாய்.

இதுவரை கிணற்றுக்குள் கல்லாயிருந்த நான் 
எதயோதேட, எதோ வந்ததுபோல் 
தற்போது காற்றும் என்னை தழுவிச்சென்றது
இப்போது இதற்காகதான் இவ்வளவுநாள் 
ஏங்கியும் இருக்கிறேன் என அறிகிறேன் 
இருந்தாலும் உள்ளுர ஏனோ வெறுமை
அதனால் கண்களை இருக மூடிக்கொண்டேன்.

நீயாகவே
வேகமாக ஆடைகளை களைந்து விட்டாய் 
சில நாழிகை
நீ உலகை மறந்து மிதக்கின்றாய் 
பல நிமிட தூண்டுதலில்
சில நேரம் நானும் மெய் மறந்து 
தரையில் அறையப்பட்டுக்கிடக்கிறேன்
இருவர் கஷ்ட்டப்படுதளிலும் 
ஒரு நீதியை கண்டுபிடித்து வைத்திருந்தேன். 

நீ எனக்குள் ஏற்றுமதி செய்த 
அணுக்கள் உயிர் பெற்று நெளிகிறது 
இதை முதலில் 
உன்னிடம்தான் வார்த்தைகளால் வெளிப்படுத்தினேன்.

உடனே 
நான் போர் குற்றமே செய்யவே இல்லை 
என சாதிக்கின்றாய்.

எல்லா ஆண்களுக்கும் கடவுள் 
இரண்டு விதைபையை வைத்திருக்கிறான் 
ஆண்குழைந்தகளிடம் கண்டிருக்கிறேன் 

உனக்கு ஒத்தை விதைப்பைதான். மேலும் 
காமத்தின் பாதிப்பு ஏற்படாத போது
நேராக தோற்றமளிக்கும் உன் குறி 
என் அம்மணத்தை பார்த்தமாத்திரத்தில் 
ஒரு தொரட்டு கத்தியைப்போல் 
வளைந்துவிடும் 

இதை உன்னோடு கலவிகொண்டதற்கு 
சாட்சியாக வைக்க நினைக்கிறேன் 
அப்போது உண்மை சொல்லுகிறாள் என்று 
ஏற்றுக்கொள்வாயா?   

நீ இக்கருவுக்கு சொந்தமில்லை 
என உறுதியாக மறுக்கும் பட்சத்தில் 
என் இடது கையை கொண்டு 
உன் எலிக்குட்டி கருவை 
தலை நசுக்கி எறிந்துவிட்டு
அங்கிகாரம் பெற்று 
யாரையும் சுமக்கவோ அல்லது 
நடைபிணமாகி மீண்டும் 
கம்பெனிகளை நாடுவதோ தொடங்கிவிடுவேன்.

அனால் பரிதாபமான சிசுகொலையின் காரணியாக 
உன் பெயரைத்தான் பரிந்துரைப்பேன்.


ஜே.டேனியல்   
 

Monday, May 9, 2011

கவிதை

                              அம்மா                                   

அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை 
எதையுமே செய்யமாட்டேன்
என்று தெரிந்தும் என்மீது
எப்போதும் அன்பாகவே இருந்தாய்
அன்பாக இருக்க உன்னால்மட்டும்
எப்படிமுடிந்தது.

கலைத்துப்போட்ட 
அப்பாவின் இரக்கமில்லாத 
இரவை 
ஆயுதமில்லாத போர்வீரனாக இருந்தும் 
எதிரியை வெற்றிகொண்டதுபோல் 
வெள்ளிக்கிழமை விடியலை 
குளித்து வாசல் அமர்ந்தாய்.

நான் கேட்காமலே 
பசியாயிருப்பேன் இருப்பேனென்று
மடிமீது கிளத்தி பாலுட்டினாய் 
உன் ரத்தம் கலந்த பால்
வயிறு முட்டிக்கொண்டது 
இருந்தாலும் 
என் வயிறை தடவிக்கொண்டே இருந்தாய்.
நான்
இரக்கமில்லாமல் உன்மேல்மலம் கழித்தேன்
உனக்கு கோபமே வரவில்லை
நாற்றமெடுத்த என் கழிவைப்பார்த்து 
நீ முகம் சுளிக்கவுமில்லை.

அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை.

அப்பாவிடம் கெஞ்சி,கெஞ்சி
குழம்புக்கு வாங்கிய
இரண்டு ரூபாயைக்கொடுத்து
அன்னாச்சிக்கடைக்கு போக
என்னெய் கெஞ்சுவாய்
அடுப்பு புகைவதைப்பார்த்து
கமிஷன் கொடுத்தால் போவேன்
என அடம்பிடிப்பேன்.
நீ செல்லம், ராஜா என்று கெஞ்சினாலும்
மறுத்து நிற்பேன்.

சோறு போடமாட்டேன் போ என்று
நீயே கடைக்கு போவாய்
நான் நிர்த்தாட்சனையாய்
விளையாட ஓடிவிடுவேன்
இரவு சாப்பிட
இரண்டாவது தெருவிற்கு வந்து அழைத்து நிற்பாய். 

அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை.

என் பிள்ளைக்கு கலியாணம் பண்ணிடு 
என் கண் குளிர பார்த்துவிடுகிறேன் 
என்று அப்பாவை தொந்தரவு செய்ததால் 
நடந்தேறியது
முணாம்மாசம் 
மாமியார் வீடு போன நான்
திரும்பவே இல்லை
மண்ணைசுமக்க இறங்கியபோது 
நானும் உன்மீது மண்ணை சுமத்தினேன்.
அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை.

இடைவெளி நிறைந்த 
வானையும் மண்ணையும் 
இனிமையாக இசைத்து
நிரப்புகிறது பறவைகள்
அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை.

ஜே.டேனியல்

Friday, May 6, 2011

கட்டுரை

                               மகேந்திரவர்மனின் வாரிசுகள் 

காஞ்சிபுரம் நகரத்திற்குள் எந்த பக்கம் நுழைந்தாலும் துரப்பார்வையில் நிச்சயம் கோபுரங்கள்தன் கொண்டையில் தங்கத்தையும் வெங்கலத்தையும் வரிசை யாக சொருகி வைத்திருப்பது தெரியும். காஞ்சிக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. எல்லா நகரத்திற்கும் வரலாறு உண்டுதான். அனால்  மறக்க முடியாத நினைவுச் சின்னங்களை உருவாக்கி வைத்திருக்கும்  பல்லவர்களின் செயல் சிறப்புக்குறியதுதானே!   

பல்லவ அரசர்களின் நீண்ட வரலாற்றை பார்க்கின்றபோது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர்கள் அடிப்படையில்  கல்வியில், கலையில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மகேந்திர வர்மன்  இலக்கியம்  படைப்பவராகவும். மக்களை இலக்கியத்தில் பங்குகொள்ளச் செய்தவராகவும் இருந்திருக்கின்றார்.

நான்காம்  நுற்றாண்டின் கால கட்டங்களில் காஞ்சியில் பல்வேறு கல்லூரிகள் இருந்திருக்கிறது. காவேரிப்பாக்கம் பெருமாள் கோயிலையடுத்து ஒரு கல்லூரியும்,  கடலூரிலிருந்து புதுவைக்குச்செல்லும் வழியில் பாகூரில் ஒருகல்லூரியும், பழய சீவரத்தையடுத்த பகுதியில் ஒருகல்லுரியும் இருந்திருக்கிறது.  அனால் அனைத்தும் வடமொழி கல்லுரிகளாகவே இருந்திருக்கிறது. கடிகை ஏன்ற கல்லூரியில் 'கதம்ப அரசமாலை' இயற்றிய மயூர சம்மன் என்பவன் கல்வி கற்றிருக்கிறான்.

கல்லூரிகளில் அறுபத்து நான்கு கலைகளில் சிலவற்றை பாடமாக வைத்துள்ளார்கள். வேதங்கள் உபநிடதங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அரசர்கள் மாறினாலும் கல்வியை கண்காணித்து போற்றி வந்துள்ளனர். கல்லூரிகளில் தர்க்கம், தத்துவம், மருத்துவம், விருப்பபாடமாக வைத்து, கலைகளை பொதுவான பாடமாக வைத்துள்ளனர்.மேலும் ஆராய்ச்சி கல்வியும் கல்லூரியில் வழங்கியுள்ளார்கள். 

காஞ்சியின் முக்கிய சிறப்பு. நாளந்தாப் பல்கலைகழகத்தின் பேராசிரியரான தர்மபாலர் இக்காஞ்சி மண்ணின் மைந்தர். புத்தர் காஞ்சிக்கு வந்து பலரை பொளத்தராக்கினார். இந்த சிறப்புக்குரிய தகவல்களை சீன யாத்திரிகர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். பல்லவர்கள்  பிற்பகுதியில்தான் தமிழ்மொழியை ஆதரித்துள்ளனர். குறிப்பாக மகேந்திரவர்மன் காலத்தில்தான் தமிழ்  கல்வியும் கலையும் சிறப்படைந்து இருக்கிறது. மகேந்திரவர்மன் நாடகம், நடனம், ஓவியம் என்கிற இலக்கியத்துறையை சார்ந்தவைகளில்  ஈடுபாடுடன் இருந்திருக்கின்றான். 

மகேந்திரன் 'மத்த விலாசப்பிரகசனம்' என்ற நகைச்சுவை நாடகத்தை இயற்றினார். அதை அரங்கேற்றி மகிழ்ந்துமிருக்கிறார். நாட்டை ஆளும் அரசன்  நகைச்சுவையை வெளிப்படையாக மேடைஏற்றியதும்,ஆன்மீக கோபுரங்களை  சிற்பங்களை உருவாக்கியதும் நாட்டின் அமைதிநிலை பொருத்தா?  கலையை உருவாக்குகிறவர்கள் எந்த சூழ்நிலையிலும்  அலட்டிக்கொள்ளாமல் இருப்பதாலா? மகேந்திரன் யாழ் இசை  மீட்டுவதில் கூட  தேர்ந்தவராய் இருந்திருக்கிறார். மகேந்திரவர்மன் முக்கியமாக பெண்களை இசைக்கவும், பாடவும் அழைத்திருக்கிறான்.  நடனங்களை பயிற்று விப்பதற்காக பல கோயில்களில் பெண்களை நியமித்திருக்கிறான். அவர்களுக்கு நிலங்களை மானியங்களாகத்தந்து பிழைப்பிற்கு வழிசெய்திருக்கிறான். அவன் காலத்தில் ஓவியங்களிலும் சிறந்து விளங்கினான். சித்தன்ன வாசல் குகை ஓவியங்களை எடுத்துக்கொள்ளாம்.

பல்லவர்களில் ஒருவனான நந்திவர்மன் அரசாண்டபோது  தன் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன்,  நந்திவர்மனின் ஆட்சிய கவிழ்த்து தான் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்தான். ஒருநாள் நந்திவர்மன் நாட்டை பார்வையிட வீதியில் நடந்தான். அவன்தம்பி, அரசன் வரும் வழியில் ஒரு பெண்ணை கவிபாட பணித்தான். அவளும் பாடினாள்.  கேட்ட அரசன் கவிதையில் மயங்கி பெண்ணே இப்பாடலை யார் இயற்றியது இன்னும் பாடல்கள் உள்ளதா என்றான். இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது அவரிடம் என்றாள். தம்பி உன்னிடத்திலா இத்தனை திறமை இருக்கிறது. நாளைக்கே இந்த பாடல்களை அரங்கேற்ற வேண்டும். நாளை அரசவைக்கு கொண்டுவா என்றான்.  

தம்பி இப்போது சற்று மனம் வருந்தி அண்ணா இதில் வசை பொதிந்த வார்த்தைகளை கோர்த்து பாடியுள்ளேன். இந்த பாடலைப்பாடும்போது தாங்கள் இறந்து விடுவீர்கள். அதற்காகவே   அப்படி இயற்றினேன் என்றான்.  தம்பி நீ இயற்றிய கவிதையை கேட்காவிட்டால் நான் வாழ்வதில் என்ன பயன் என்றான்.  உடனே தம்பி ஒரு நிபந்தனை வைக்கிறான். நான் இயற்றிய கலம்பகம் நூறுபாடல் கொண்டதாகும். அரண்மனையிலிருந்து  சுடுகாடுவரை குறிப்பிட்ட அளவு இடைவெளியில் நூறு பந்தல் அமைக்க வேண்டும். அதில்  புலவர்களையும், அறிஞர்களையும்  விலை உயர்ந்த ஆடை, அணிகலன் உடுத்திவந்து அமரச்செய்ய வேண்டும். ஒரு பாடல் பாடி முடியும்போது   அந்த பந்தல் எரிந்து சாம்பலாகும். அதன் பிறகு அடுத்தப்பந்தல் இப்படியாக அனைத்துப்பந்தலும் எரிந்தபிறகு கடைசியில் சுடுகாட்டில் உயரமாகக் கட்டைகளை அடுக்கி அதன்மீது நீ படுக்கவேண்டும் பாடல் முடியும்போது கட்டையோடு நீயும் சாம்பலாவாய் என்றான். 

அதை கேட்டபோது  நந்திவர்மனுக்கு  எந்த பதட்டமும் இல்லை. உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்றான். தம்பி பாடல்பாடப் பாட ஒவ்வொரு பந்தலாக எரிந்தது. அரசன் மிகவும் மகிழ்ந்து தம்பியை வாழ்த்தினான். சுடுகாட்டில் கட்டைகள் அடுக்கப்பட்ட இடம் வந்தது. தம்பிக்கு மிகவும் வேதனை அண்ணா நான் தவறு செய்துவிட்டேன் இதோடு நிறுத்தி கொள்வோம் என்றான். தம்பி நீபாடிய பாடல்களால் என் இருதயம்  பூரிப்படைந்தது. கடைசி பாடலை கேட்காமல் போனால்  எனக்கு நிம்மதியே இல்லை. நீ பாடாவிட்டாலும் நான் இங்கேயே மரிப்பது உறுதி என்றான். அரசன் விறகுமீது  படுத்தான். தம்பி பாடினான். அரசன் சாம்பலான். இந்தளவு பல்லவர்கள் கலையை நேசித்து வளர்த்தார்கள்.  

தற்போது காஞ்சிபுரத்தின் நிலை என்ன? பல்லவர்களின் வேரானவ்ர்கள் எங்கே? தற்கால தமிழகத்தில் அவர்களை தேடும் பணியை யார்செய்கிறார்கள்? என்ற கேள்வியை கேட்டால் பதில் மீண்டும் கேள்விதான்?          

தற்போது காஞ்சிபுரத்தில் கலை இலக்கியப்பணி இயக்கத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை வைக்கிறபோது. பரவலாக தெரிந்த முகமாய்   மானங்காக்க நம் மத்தியில் புழங்கி கொண்டிருக்கும்  நா.முத்துக்குமாரைத்தான் சொல்ல வேண்டும். சினிமா என்கிற மாபெரும் ஊடகம் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கிறது. அதில் முழுவதும் அதன் மூர்க்கத்தனமான போக்குக்கு முற்றிலும் தன்னை இழந்து விடாமல். தனக்கான தனித்தன்மையை நிருபித்துக்கொண்டுதான் இருக்கிறார். இருந்தாலும் உறுதியான எலும்புகளுக்கு இடையில் ஊடாடும் ரத்தமும், அழகியலை போர்த்தி நிற்கும் சதையுமான கதைகள்  உருவாக சினிமா ஒரு தடையாக நிற்கிறதே என்று நினைக்கும்போது வருத்தபடத்தான் வைக்கிறது. 

'நுகம்' தந்த எக்பர்ட் சச்சிதானந்தம் ஒரு தீவிரமான படைப்பாளிதான். அவர்  ஏறக்குறைய நாற்பது வருஷமாக காஞ்சிபுரத்தை  ஆழ்ந்து உள்வாங்கியிருக்கிறார். அதனால் காஞ்சியின் அடையாளமாக எடுத்துக்கொள்ளலாம். அனால் காஞ்சியின் தனித்த அடையாளமாக இருப்பதில் அவருக்கு சற்று தயக்கம்தான். ஏனென்றால் பிறந்து சுமார் இருபத்தியெட்டு வருஷம் தன் சொந்த மதுரை கிராமத்தின் சிறுவயது நிகழ்வுகளோடும், மண்ணோடும் இன்னும் நினைவு களை சுமந்துகொண்டு தான் இருக்கிறார். அது அவரின் நுகம் தொகுப்பின்  மதுரையும், காஞ்சியும் மாறி மாறி  கதைகளாக கைகூடுவதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். பல்லவர்கள் காஞ்சியில் சிலகாலகட்டங்களில் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் கோபுரங்கள், சிற்பங்கள் என்று கலைகளின் வழியாக ஒரு அமைதியான வாழ்வுமுறையை கட்டமைத்து சென்றுள்ளார்கள். அது காலம் கடந்து இன்னும் நடைமுறையில் இருப்பதால், அந்த வாழ்வுமுறை அவருக்கு பிடித்தும் இருக்கிறது.  ஒரு பத்து வருஷம் தனியார் நிறுவனம் தன் கிடுக்கு  பிடியில் காற்று வசதில்லாத அறையில் அடைத்து விட்டது. தற்போது மீண்டும் தீவிரமான படைப்பாளியாய்  கலையின் கழுகு பார்வையில் காஞ்சியை சுற்றிவருகிறார். எதோ ஒருநாளில் எதோ ஒரு  அசோகமரத்தின் சரித்திரங்கள் கலையாகத்தான்போகிறது. 

குறும்படங்களை இயக்க ஒருகாலத்தில் அதிகமான பணத்தேவை இருந்தது. அச்சூழலில் பணத்தோடு   உழைப்பையையும் பொருட்படுத்தாது. நண்பர்களோடு இணைந்து குறும்படத்தை முடித்தார். தரும. ரத்தினக்குமார். தற்போது தரை என்கிற திரை அமைப்பை நண்பர்களுடன் இயக்குகிறார். அமுதகீதன் கவிதை கட்டுரை தொகிப்பின் மூலம் தன்   காஞ்சியின் கலைகள் வாழ்வதற்கு நீர் ஊற்றி இருக்கிறார். உலக சினிமா திரையிடுவதற்கு தன் சொந்த வீட்டின் ஒரு பகுதியில் இடம்தந்து காமராஜ், லோகநாதன் அவர்களின் மனைவிகள்  தொடர்ந்து உதவிவருகிறார்கள். உலக படத்தை பார்வையிட உள்ளுர்க்காரர் நா.முத்துக்குமார் புரொஜெக்டர் தந்துள்ளார். இதையும் தாண்டி முன்னெடுப்பின் பணி தொடர்ந்து நடக்கிறது.  இப்படியான  பல்லவர்களின் வாரிசுகளால்தான் காஞ்சிபுரத்தில் புதிய இளைஞர்கள் படிக்கவும் உலகப்படத்தை பார்க்கவும் தொடர்ந்து குவிந்துகொண்டே இருக்கிறார்கள்  இரண்டு முன்று பேருக்கு மிகாமல். ஒண்ணாங்கிளாஸ் பையன் தவறாமல் டுயூஷன்   போகிறான்.  இளைஞர்களிடம்  இலக்கிய புறக்கணிப்பு ஏன்?  யாரிடம், எங்கே கோளாறு?
                   

Thursday, April 28, 2011

சிறுகதை

சிறுகதை

                                                   நூற்கும் உயிர் 


எவ்வளவு சொல்லியும் தாத்தா  செத்துவிட்ட அவருடைய பால்ய சிநேகிதர் முகத்தை பார்த்துவர மறுத்துவிட்டார்.' செத்துட்டானா, செத்துட்டானா இனிமே என்ன கிடக்கு உச்சு கொட்டுதலோடு கட்டிலில் காலைத்தொங்கபோட்டு, இரு கைகளையும் ஊணிக்கொண்டு தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். அவர் நண்பர் கொஞ்சநாள் உடல் நலமில்லாமல் படுத்துக்கிடந்தார். அப்போது தன்வீட்டில் விசேசமாய்  டிப்பனோ, கறிக்குழம்போ செய்தால்  முதலில்  சூடாக எடுத்துச்செல்வார். 'ஏம்பா கொஞ்சம்  சாப்பிடு. அவர் பேசும் நிலையில் இல்லை யென்றாலும் இவராகவே பேசுவார். அவருக்கு கட்டில் இல்லை. தரையில்தான் படுத்திருந்தார். இடதுகையின் விரல்கள் கோணல் மாணலாக இருந்தது. முழங்கை வயிற்றில்  ஒட்டிக்கொண்டு இருந்தது. முரட்டுத் தனமான வெள்ளையும் கறுப்பும்  கலந்த மயிர் முகத்தின் தோலை  மறைத்திருந்தது.  

தாத்தா வலதுகையில் கொஞ்சமாகபிட்டு ஊட்டினார். அவரால் வாயை அதிகமாக திறக்க முடியவில்லை.  முரட்டு மயிர்கள் தாத்தாவை  குத்தியது. வலியை   வெளிப்படுத்தும் விதமாக முகத்த விளிப்பார்.  நண்பருக்கு முன்று பிள்ளைகள்  சென்னையில் ஒருவன்,  பெங்களூரில் ஒருவன்,  காஞ்சிபுரத்தில் ஒருவன் என தன் மனைவிப் பிள்ளைகளோடு பிழ்ப்புத்தேடி சென்று விட்டார்கள்.  வயதான மனைவி மட்டும் தன்னால் முடிந்த சேவகத்தை செய்துவருகிறாள் .தாத்தா கறியை  பிய்த்து ஊட்டும்போது  வேகமாக மென்று முழுங்கிவிட்டு இன்னும் கறிக்காக காத்திருப்பது போல வாயை வைத்துக் கொள்வார். தாத்தா கறி, மீன், விசேஷமான நேரத்தில் அவரே கொண்டுவந்து உட்டிவிடுவதோ, நண்பரின் மனைவியிடம்  கொடுத்துவிடுவதோ  செய்வார். மற்ற நேரங்களில் அடிக்கடி தன் மருமகளையோ, பேத்தி சங்கீதாவையோ தொந்தரவு செய்து சாப்பிட  கொடுத்துவிட்டு வாங்கமா என்று வற்புருத்துவார். நண்பர் தற்போது இறந்துவிட்டார். அவரை நேரில் பார்த்துவர  தயக்கம் காட்டினார். சிலர் வந்து இன்னாணா போய் பார்க்கவில்லையா? அவர் பிள்ளைங்க  எல்லோரும்  வந்திருக்காங்க. 'எங்கப்பன எப்பிடி எடுக்கிறோம் பாருங்கடா?பேசிங்கிராங்கணா.போயித்தான் பாரேன் என்பார்கள். நான் இப்படி யோசித்தேன் ஒருவேளை உயிரோடு இருக்கும்போது எவனும் வந்து பார்க்க வில்லை இப்போது வந்து மார்த்தட்டுகிறார்களா? தாத்தாவுக்கு காரணம் அதுமட்டுமில்லை என்றுமட்டும் உறுதியாய் தெரிந்தது. தாத்தா எனக்கு தலை வலிக்குதும்மா. மயக்கமா இருக்குது. மார்வலிக்கிறாமாதிரி தெரியுது என்றார். எனக்கு மட்டும் தாத்தாவுக்கு அப்படி வலி இருக்கிறதா  என்பதில் சந்தேகம்தான். பிணத்தை எடுத்துவிட்டார்கள் என்றதும் தாத்தாதான் முதல் ஆளாக தலைக்குளித்து வந்தார். .

தாத்தா கோவணம் கட்டிகொண்டு, வெள்ளை காடாத்துணியில்  டிராயர்  போட்டு மேலே நாலுமுழ வேட்டியை கட்டிக்கொண்டார். தலைமயிர் முழுமையாய் கொட்டிவிடாமல், அடர்த்தியாய் அடைத்துக்கோண்டும் இராமல் வெண்ணிறத்தில் இளமைகால ரஜினியைப்போல் ஹேர் ஸ்டெயில் இருந்தது. அவரை உற்று பார்த்தபோது தலையோடு சேர்ந்து முகத்தில் முளைக்கும் ஒவ்வொரு பகுதி மயிர்கள் மனித  வாழ்க்கையை சொல்லுகிறதா?  தலைப்பகுதி பூமியின்  அழகியலையும், மீசை தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வின் வீரியத்தையும், தாடி தரை நோக்கியப் பயணத்தை சுட்டுவதாகவும் மனிதனின் மயிர் வளர்ச்சி இருப்பதாகத் தோன்ருகிறது. தாத்தாவின் வெண்ணிற காய்ந்த மயிர்கள் அப்படித்தான் காட்சியளித்தது.


அப்பா எங்கள் குடும்பத்துக்கு ஒருகுறையும் வைக்கவில்லை. அம்மாவிற்கு வேண்டிய அனைத்தையும் சீராக நிறைவேற்றினார். சிறப்பு காவல்படையில் குக்காக இருப்பதால் ஓரளவு எல்லோரையும் நிம்மதியாகவே வைத்திருந்தார். அப்பாவிற்கு உடலைக்கெடுக்கிற, மனசை ஏங்கவிட்டு அல்லல் படுத்துகிற எந்த பழக்கமும் இல்லை. அம்மாவுக்கோ, தங்கைக்கோ சிறுக,சிறுக ஏதாவது பொன்னாலான நகைகளை எடுத்துக்கொடுப்பார். நான்கு பிள்ளைகள், அத்தை மகள், அம்மா, அப்பா, தாத்தா இருந்தாலும் எப்படி இவன்மட்டும் கஷ்டமில்லாமல் குடும்பம் நடத்துகிறான். ஊரார் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். சிலநேரம் அப்பாவின் பாக்கட்டில் இருக்கும் சில்லரைகள் தயவுதாட்சணியம்  இல்லாமல் கொள்ளைபோகும். அச்சமயம்  கடிந்துகொள்ளும் விதமாக  அப்பா சொல்லுவார். சில்லரை யாருடா எடுத்தது. ஒத்த பைசாவாக இருந்தாலும் குருவி தென்ன மட்டையில்  பின்னியிருக்கும் நாரை பிய்த்துவந்து கூடு கட்டுவதுபோல சேர்த்து வைக்கிறேன். அத சொல்லாமக் கொள்ளாம  எடுக்கலாமா. நான் வெளியப்போனா, ரெண்டுரூபாக் கொடுத்து  'டீ' குடிக்கக் கூட யோசிப்பேண்டா. நீங்க வீனா செலவு செய்யிறீங்க. என்பார்.  அப்போதுதான் இவ்வளவு கஷ்டப்படுகிறாரா என்று எனக்கே புரியும்.



அப்பா சிக்கனமாக  இருக்க தாத்தா  கற்றுக்கொடுத்திருப்பாரா யோசித்தேன். அதற்கு சாத்தியமே இல்லை. நாங்கள் இருக்கும் இடத்தில் தாத்தாவின் நண்பர்களாய்  இருந்தவர்கள், யாருக்கும் படிக்கத்தெரியாதாம் கூலி வேலைதான்  செய்தார்களாம்,   கிராமத்தில் நான்கு, ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி தன் பிள்ளைகளுக்கு வைத்து இருக்கிறார்களாம். தாத்தா அந்த காலத்தில நன்று படித்தவராம், பத்து ஏக்கர் வாரத்துக்கு பயிர்  வைத்தவராம். கடைசிவரை ரெண்டு செண்டு நிலம் வாங்க வில்லை. 'ஊராருக்கு கொடுத்து என்று சொல்லுவதைவிட அவர்கள் நமைபெற திரிந்ததால் ஒன்றும் சம்பாதிக்காம உட்டுட்டாரும்மா. வயசான நேரத்தில்  பாக்காம உட்டுடாதிங்கமா. பாட்டி சாகும்முன்பு அம்மாவிடம் சொன்னதாக, அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாள்.


அம்மா சொன்னது பொய்யில்லை. ஊரிலேயே தாத்தாவின் வீட்டுமனைதான் நீளம், அகலத்தில் பெரியதாம். ஒரு நேரத்தில் அப்பாவையும், சித்தப்பாவையும் சம்மதிக்கவைத்து மனையில் பாதியை பிரித்து கோயிலுக்கு எழுதிவச்சிட்டாராம். அதற்கான பணமும்  வாங்கவில்லையாம். வீட்டு முன்பு கோயில் இன்றும் இருப்பதால் முற்றிலும் உண்மை என்பது உறுதியாகிறது.



தாத்தா எண்பதைக்கடந்தாலும் எங்களை சுதந்திரமாய் கையாள்வதிலும். அத்தைமகள் சங்கீதாவை உபசாரங்கள் செய்யவைப்பதிலும். குடும்பத்தின் முக்கியவிஷயங்களில் ஆலோசனை சொல்லுவதிலும், அதையே செயல்படுத்துவதற்கு  எடுத்துக்கொள்கிற   விதமாக,  ஆளுமைசெளுத்துகிற நபராகவே குடும்பத்தில் தாத்தா இருக்கிறார். அவர்  விருப்பப்படி தெருப்பக்கம்  அறையில் படுக்கையை அமைத்துக்கொண்டார். அடிக்கடி முத்திரம்போக வசதியாக இருக்கிறது என்றார். கிழக்கு சூரியனை பார்த்தவாசல்.  கட்டிலில் கதவு முட்டுமளவுக்கு கதவைத்திறந்தால் அதிகாலை இரத்தாம்பர வெளிச்சம் தாத்தாவின் முகத்தை துடைத்து நிற்கும். பிள்ளைகளில் நான்தான் பெரியவன். தாத்தா உடல் சுகவீனப்பட்டால் கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் செல்வது. மாத்திரைகள் சாப்பிடும்போது சந்தேகம் வந்தால் விளக்கம் தருவது. காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது. என்று தாத்தா பெரும்பாலும் என்னைத்தான் அழைப்பார். சிலநேரம் தம்பிகளை அழைத்தால் காது கேட்க்காத மாதிரி நழுவிவிடுவார்கள். எப்போதாவது ஒருதரம் இன்னாத் தாத்தா என்று வருவார்கள். தாத்தா சொல்லும் வேலையை அரைகுறையாக செய்துவிட்டு மறைந்துவிடுவார்கள். தாத்தாவுக்கு திருப்த்தியாய் இருக்காது. தங்கச்சி சின்னப் பொண்ணு என்பதால் யாராவது எடுத்துவரும் தின்பண் டங்களில் கொஞ்சம் கொடுக்கவும், சங்கீதாவை கூப்பிடு, கடைக்கு போயி ஒருதைல டப்பா வாங்கியா. பள்ளிக்கோடம் போனியா? இப்படியான வேலைகளையும், கேள்விகளையும்தான் தங்கச்சியிடம் கேட்ப்பார், சொல்லுவார்.



அப்பாவிடம் 'என் பெரிய பேரன்தாம்பா நல்ல புள்ள, ரெண்டாங்கெட்டான். மத்ததுங்க கெருவிங்க ஒரு வேல சொன்னாக்கூட மறச்சிக்கினு ஓடிபூடுதுங்க.' என்பார். அந்த நேரத்தில் தம்பிகள்   இருந்துவிட்டால்  என்னடா கொழுப்பு பெரியவங்க ஒருவேல சொன்னா செய்யமாட்டிங்களா. ஒரு நாளைக்கு தோல உரிச்சிடுறேன் என்று கண்டிப்பார். அப்பாயிருக்கும்போது தாத்தா வேலை சொன்னால்  தம்பிகள் 'இன்னாங்க தாத்தா' மிகவும் பவ்யமாகபோவார்கள். ஓரளவுக்கு வேலையும் திருப்த்தியாக செய்வார்கள்.

 

அந்த இடத்தில் கட்டில் போட்டு ஏறக்குறைய பத்துவருடங்கள் கடந்துவிட்டது. படுக்கையில் எறும்பு ஏறுகிரதென்று  கட்டிலின் நான்கு கால்களுக்கு அடியில் தட்டு வைத்து தண்ணீர் உற்றிவைக்கச்சொல்வார். ஒருநாள் பேச்சிவாக்கில்  கட்டில் செய்து முப்பது வருஷமாகிறது. நான் வாரத்திற்கு  பயிர் செய்த பம்ப்பு செட்டில் பிரித்தபோது  கொண்டுவந்த கைத்துண்டு. ஊர்ல இருந்த ஆச்சாரிதான் செய்துகொடுத்தார். நல்ல வேலைக்காரர். 'கடுக்கா மரம்பா உன்காலத்த பார்த்து,  பேரன் காலத்தையும் பாக்கும்னு' சொன்னார். நீயும் பாத்துட்டே. சொல்லும்போது அவர் முகத்தின்  சுருக்கம் குறைந்திருந்தது. சட்டென்று மாறியது. நான் பயன்படுத்த மாட்டேன் என்று கணித்தார்.



கட்டில் நான்கு அங்குலம் இடைவெளியில் வரிசையாக குறுக்கு சட்டம் போட்டிருந்தது. நீளம், குறுக்கு சட்டங்கள் இணைக்கும் இடத்தில் ஆப்புகள் சில கழண்டு இருந்தது. சரிசெய்கிற ஆச்சாரி தற்போது ஊரில் யாரும் இல்லை.  நீள, குறுக்கு   சட்டங்களை இணைக்கும் இடங்களில் இரும்பு கம்பிகள் போட்டு  இறுக்கிவைத்திருந்தார். அப்பா பணிசெய்யும் பெட்டாலியன் டெல்லியில் தங்கியிருந்தது. ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் வருவார். அப்போதெல்லாம் உயர்ரக கம்பிளிகள், பெர்ச்சிட்  வாங்கிவருவார். 


புதிதாக வாங்கிவரும்போது நானும், தம்பிகளும், அம்மாவும் ஆளுக்கொன்று எடுத்துக் கொள்வோம். நாங்கள் போட்டிபோடும்போது பெர்ச்சிட்டுக்கு தேவையே இருக்காது. ஆனால் எனது, எனது என முத்திரை குத்திவைத்துக் கொள்வோம். நாட்கள் கழிந்தபின்பு 
பெர்ச்சிட் எங்கெல்லாமோ கேட்ப்பாரற்றுக் கிடக்கும். அவைகள் தாத்தாவின் கட்டிலுக்கு சென்று சேர்ந்துவிடும். குறுக்கு சட்டங்கள்மேல்  கனமான அட்டைகள் போட்டு அதற்குமேல் பெர்ச்சிட் போட்டிருப்பார். அப்பொழுதும்  கல்லின்மேல் படுபதுபோல் இருக்கும். அதற்காகவே ஆறு, ஏழு கம்பிளிகள், பெர்ச்சிட்டாவது மடித்துப்போட்டிருப்பார். தலைப்பக்கம் ஒரு தலையணை கால்பக்கம் இரண்டு தலையணை இருக்கும். கால் வீக்கம் எடுத்துவிடுவதால் காலை சற்று ஏற்றத்துடன்  வைத்து படுப்பார். தலையணைகள்  முன்றுமே தலைவைக்கும் இடம்தவிர்த்து அழுக்கு படிந்திருந்தது. கம்பிளிகள், பெர்ச்சிட்  மெத்தையின் அளவிற்கு  இருந்தது. வெட்டப்பட்ட மரம் காலங்கடந்து  கல்மரமாகி விடுவதைப்போல் தாத்தாவின் படுக்கை இறுகியிருந்தது. படுக்கையின் இடம் தவிர்த்து சுவர் ஓரத்தில் இரண்டு, முன்று சின்னச்சின்ன அட்டைப்பெட்டிகள் வரிசையாக  இருந்தது. ஒரு தகரப்பெட்டி பூட்டிக்கொள்ளும்படியாக இருந்தது. அட்டைப்பெட்டிகளில் ஏதேதோ மாத்திரை சீட்டுகள், உடைந்த கண்கண்ணாடி இருந்தது. அதில் கட்டியிருந்த  கயிர் மாத்திரை அட்டைகளில் பின்னியிருந்தது. இன்னும் காலி  டப்பாக்கள். இன்னொருபெட்டியில் துணிகள் ஒருசில புத்தகங்கள் இருந்தது. தகரப் பெட்டியின் சாவியைமட்டும் யாரிடத்திலும் கொடுப்பதேயில்லை.


என் அத்தைமகள் சங்கீதா வேளாவேளைக்கு சாப்பாடு கொடுப்பது, அவரின் துணிகளை துவைதுக்கொடுப்பது, குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீரை  காச்சிக்கொடுப்பது போன்ற பணிகளை தவறாது செய்தாள். சங்கீதா கலியாண வயதை கடந்துவிட்டாள்.  தோதாக ஒருபயலும் வரவில்லையென தாத்தா ஆதங்கப்பட்டார். அந்த கொழந்ததான்  என்னை கவனிச்சிக்குது. இல்லை யென்றால் போனவருஷம் வயிற்று போக்கில் விழுந்தேனே அப்பொழுதே  போய்செர்ந்திருப்பேன்.  வருவோர் தாத்தாவை நலன் விசாரிக்கும்போது அடிக்கடி சொல்லுவார்.



நான் பன்னிரண்டாவது படித்து தவறிவிட்டபோது என்னடா இப்படி பண்ணிட்டியே. பாஸ்செய்திருந்தா  மேல படிச்சிருக்கலாமே உட்டுட்டியடா. சங்கடப்பட்டார். மறுபடியும் முன்று முறை எழுதியும் கரை சேரமுடிய வில்லை. நன்றாகத்தான் எழுதினேன். திருத்துகிறவர்கள் என்ன மனநிலையில் திருத்துகிறார்களோ? அரசுத்துறை அவர்களை சுதந்தரமான மனநிலையில் விட்டுவைக்கிறதா? எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. அப்பா என்மீது நம்பிக்கை இழந்துவிட்டார். என் சித்தப்பா எதற்கும் உருப்படாத மனிதராகவே இருக்கிறார். அவர் பணிசெய்யும்  பள்ளியில்தான் மூன்று முறை எழுதினேன். ஒவ்வொரு முறையும் நல்லா எழுதுடா. டியூஷன் ஒழுங்கா போறியா? வீட்டில படிக்கிறியா? வெறுமனே சுத்துரியா? கேட்டுவிட்டு தனித்தேர்வரின் அட்மிஷன் கார்டை தேடிக்கொடுப்பார். மீண்டும் நல்லா எழுதுடா என்று பத்துரூபா கொடுத்தனுப்புவார். என் மூளையில் இருந்து உதிராமல் தேர்வுத்தாள் எழுத்தால் நிறைவதற்கு எப்பொழுதும் உதவியதே இல்லை.


இப்போது அவருக்கும் தெரிந்துவிட்டது. இனி  தேரமாட்டான் ஏதாவது வேலையில் அமர்த்திவிடவேண்டும்  நினைத்திருப்பார் போல. சென்னை  கம்பெனிக்கு முகவரி தந்து விசாரிக்க அனுப்பினார். தாத்தா,  அப்பாவிடம் 'ஏம்பா வேணாம்பா. எங்க அவ்வளவு தூரம் அனுப்பபோற. காலம் ரொம்ப கெட்டுப்போய் கிடக்குது' என்றார். மறுநாள் சித்தப்பா போன்செய்து  கேட்டார். தாத்தா வேண்டாம்னு சொல்லிட்டாருங்க என்றுதான் பதில் சொல்ல முடிந்தது. 


படிப்பு இனி வேலைக்கு ஆகாது என்றுதான் பட்டது. நான் நண்பர்களிடம் சொல்லிவைத்தேன். நண்பன் ஒரு வாரம் தங்கி இன்சுரன்ஸ் பயிர்ச்சி எடுக்கவேண்டி அழைத்தான். காஞ்சிபுரத்தில்  ஆறுபேர்  அதில் நீயும் ஒருவன் என்றான். அப்பாவிடம் அதற்கான அனுமதி பெற்று தயாரானேன். தாத்தாவிடம் சொல்லிவிட்டு செல்லுவது வழமையாதளால் தெரிவித்தேன். 'எங்கோபோய்  ராத்தங்கி வேலைசெய்யனுமா? உங்க அப்பன் குடும்பத்த விட்டுட்டு கண்காணாத எடத்துக்கு போய்வேலைய புடிச்சான். நீயும் அப்படிபோரியா?  வேலையும் வேணாம் ஒன்னியும் வேணாம் போடா! சித்தப்பன் வரட்டும் காஞ்சிபுரத்திலேயே ஒரு வேலைய பாக்கலாம். தினமும் வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கும்' என்றார்.



எனக்கு தாத்தாவின் மீது கோபமாக வந்தது. தாத்தா உலகம் தெரியாதவர் இல்லை. பேருந்து வசதி குறைவாக   இருந்த  காலத்திலேயே  தமிழ்நாட்டின்  பல ஊர்களை சற்றிவந்தவர்தானாம். அவருக்கு பயம் என்பது தெரியாது. அவரது சாகசங்கள் இன்னும்பலரால் பேசப்படுகிறது. நேர்முக புகழ்ச்சி அதிகமாய் இருக்கிறதென்று நான் சலித்தும் இருக்கிறேன். அவர்காலத்தின் நகரத்திற்கும் தற்போது உள்ள நகரத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.  திடீரென்று மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது, அதைக்குறித்து  எந்தவிதமான ஆச்சரியத்தையும் வெளிப்படுத்துவதே இல்லை. எந்த மருத்துவர் இருப்பாரோ? உடல் இப்படி செய்கிறது, அப்படிசெய்கிறது என்பார். அப்படி சொல்லும்போது  ஏனோ எனக்கு பதற்றம் ஏற்படுவதே  இல்லை. மருத்துவம் பார்த்துக்கொண்டு நேராக வீட்டுக்கு போகலாம் என்பார். தாத்தா என்னை இன்னும் சின்னப்பையனாகவே கருதுகிறாரா?



சித்தப்பா லீவில் கணினி பயிற்சிக்கு போ என்றார். எனக்கும் அது தேவையாய் இருந்தது. அப்பா அதையாவது முழுசா முடிடா என்று கட்டணம் கொடுத்தார். தாத்தாவுக்கு தெரிந்துவிட்டது. ஆமாண்டா கம்பியூட்டர் கத்துக்குனு வெளிநாட்டுக்கு போயிடு. நாங்க இங்க சாகுறோம். என் ஈடு ஆட்கள் எல்லாம் எங்கி எங்கியோ போனான். ஒண்ணும்மில்லாம திரும்பி வந்தான்.  தண்ணி கெடைக்காத பஞ்சத்திலையும்  இந்த ஊரைவிட்டு போகல. நான் பொழைக்காமையா போயிட்டேன். அப்பன் காட்டுன வழியில அவன் புள்ளங்க போனாங்க.திரும்பி வரல.அப்பனுங்க  ஊர்ல அனாதையா செத்தாங்க' என்றார்.



அப்பா கிராமத்தை கை கழுவி விடுவதை  விரும்பாதவர். பல நேரம் தாத்தாவின் பேச்சை தட்டமாட்டார். அதற்கு முக்கிய காரணம் இருந்து. அப்பாவுக்கு கலியாணம் முடிந்தவுடன் ஆவடி  கேம்ப்பில்  வேலை கிடைத்துவிட்டதாம்.  வாரம் ஒருமுறைதான் வீட்டுக்கு வருவாராம். பிறகு கேம்ப்பு ஐந்துவருஷம் டெல்லி சென்றுவிட்டதாம். அப்போதெல்லாம் தாத்தா ஊரில் எந்த பழிப்பேச்சும் இல்லாமல் அம்மாவை பார்த்துக்கொண்டாராம். 


எங்களை வளர்த்தது சின்ன அத்தை என்றாலும். வீட்டில் வயதானவர்  இருப்பது நான்கு பூனைப்படைக்கு சமமாகத்தான்  நினைக்கிறேன். நாங்கள் வளர்ந்ததில் தாத்தாவுக்கு பொறுப்பு இருப்பதை என்னாலும் மறுக்கமுடியாது. பெற்றுக்கொள்வதிலும், திருப்பிசெலுத்துவதிலும்தான்  மனித இயக்கம் அடங்கியிருகிறது. அந்த அடிப்படையில்தான் எதையும் அலட்ச்சியபடுத்துகிற வயதானபோதும்,நான் தாத்தாவை மதித்து நடக்கிறேன். நானே மதிக்கும்போது, அப்பா தாத்தாவின் பேச்சை தட்டாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை.



நான் உருவத்தில் சற்று குள்ளமாக இருப்பதால் என் திறமையின்மீது தாத்தாவுக்கு நம்பிக்கை வரவில்லைபோல. தொடை இடுக்குகளில் வளர்வதை கத்திரிக்கும் நிலையில்  வந்துவிட்டதால் எதிர்காலத்தை நினைத்து திறமை நிருபிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். தாத்தாவின் கண் புரை உரிக்கவேண்டும், மருத்துவரின் ஆலோசனை எனக்கு வாய்ப்பாக அமைந்தது. பாண்டிச்சேரி அரவிந்த் மருத்துவமனைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எங்களூரில் யாரும் அந்த மருத்துவமனையை அறிந்தவர்கள் இல்லை. எனக்கும் வழி தெரியாது. விசாரிப்பு அடிப்படையில் சென்று முன்று நாள் தங்கி தாத்தாவுக்கு சிகிச்சை முடித்து அழைத்து வந்தேன். பலர்வந்து தாத்தாவை விசாரித்து. கெட்டிக்கார பேரன். வாழ்த்து மழையில் குளிக்கவைத்தார்கள். இதுவரை தாத்தா மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. அன்னம்மா  பாட்டி வந்தாள். தாத்தாவை நலன் விசாரித்தாள். 'ஆறுமாசமா முத்திப்போன கண்ணை உரிக்க வழிதெரியாம தவிக்கிறேன். பரவா இல்ல  உன் கண்ண  பேரன் காப்பாத்திட்டான்' என்றாள்.


தாத்தாவின் கறுப்பு கண்ணாடியின் கிழ்பகுதியில் கண்ணீர் வழிந்தது. அந்த கொழந்த இல்லனா யாருமா என்ன கூட்டிம்போவாங்க?  அதுக்குத்தான் கூடவே வச்சிங்கிறேன். தாத்தா எதற்கு அழுகிறார் என்பது புரியவே இல்லை. அவரை பார்க்காதுபோல் வாசலுக்கு வெளியே வந்தேன். வாசலில் இருந்த தென்னைமரத்தின் கீற்றில், இரு ஓலைகளுக்கு இடையில் சிலந்தி வலை இருந்தது. வேகமான காற்றின் மோதலில் தன் இருப்பை முடிந்தவரை, இழந்து விடாமல் இருக்க சிலந்தி ஓயாமல் இழைகளை நூற்திருந்தது.


ஜே.டேனியல்        

Monday, April 18, 2011

லெந்து நாட்கள்


எப்ப வருவீங்க

தூரத்தில்
நட்சத்திரம்
முளைக்காத வானம்

வெறுமையாய் இருக்கிறது.

அடையாளம் ஏற்றவன்
உம்கொள்கைக்கு உடன்படிக்கை பெட்டியை  திறந்து வைக்கின்றான் உம் வார்த்தை முலாம் பூசிக்கொண்டவன்    முட்புதர்கள்,கற்பாறைகள்,பறவைகள் முன்னிலையில்
விதைக்கின்றான்.

இப்போதெல்லாம்
ஜலப்பிரளயம்
ரத்தமின்றி
மொத்தமாக அழிப்பதில்லை.
 

ரத்த பற்றுக் கொண்ட அதிபர்களுடன் கூட்டுசேர்ந்து பிசாசுகளாய் அவதரித்துஆடை அவிழ்த்து, சதைகளை வெட்டி,
கண்களைப்பிடுங்கி, மூளைச்சிதறி
இவைகள் நல்லது' என்று கண்டு
புழுப்பிடிக்கும் குப்பைகளாக மனிதர்களை
எடுத்துச் செல்கின்றார்கள்
கழுகுகள் கூடாத  இடத்திற்கு  
கூட்டங்கூட்டமாய்
குடங் குடமாய்
சிந்தும் ரத்தம்
மண்ணை விழுங்கி
தன்னை வெளிப்படுத்தி
வரண்டு கிடக்க,
சிறு கேள்வியையும்
எழுப்பாதது ஆச்சரியம்தான்.
 
அழுகிய நாற்றத்தோடு
எழுகின்ற பேச்சுக்கள்
நித்திய மல்லியின்
வசத்தோடு வெளிவருகிறது மனசிலிருந்து.
 
அந்தரங்கமாய் திட்டமிடுவதில்லை
போக்கு காட்டவுமில்லை
இரண்டு எட்டு நடந்து
தேநீர் ரசித்து சாப்பிடுவதாகவே

கொள்ளையும், ஏமாற்றும்  
பாக்கட் மணியாகவும்
தனி கொலைகள்
கலை  நேர்த்தியுடன்
வெட்டவெளியில் அரங்கேற்றமாகிறது.

இப்போது வாசித்தாலும் 
ஏமாற்றம் தராத வசனம் 
சீக்கிரம் வருவேன்
என்றுதான் இருக்கிறது
எப்போது வருவீங்க.
வந்தாலும் எப்போதும்போல் நீங்களே எங்களுக்கா கொலையாகிவிடும் நோக்கம்தானா?        

Sunday, April 10, 2011

கட்டுரை

                        அம்பேத்கர் தன் மக்களால் கலங்கப்படுகிறார்.

''சாதியை நீங்கள் விரும்பவில்லை. அப்படியானால் நீங்கள் உருவாக் குகிற சமூகம் வேறு என்ன என்ற கேள்வி எழுகிறது. என்னை கேட்டால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றறை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் நான் உருவாக்க விரும்புவது.''   

அம்பேத்கர்  இப்படி ஒரு நீண்ட உரையை எல்லாத்தரப்பு மனிதர்களுக்காக பேசியிருக்கிறார். இவரை எப்படி தலித்துக்கு மட்டும் சொந்தமான தலைவர் என்று உரிமைகொண்டாடமுடியும்? மன்னர் கொடுத்த சொற்ப உதவித்தொகை ரூ.1500 யையும், தான் இரண்டாண்டு  கால ஆசிரியப்பணியின் முலம் சேகரித்த பணத்திலும் வெளிநாடு சென்றார்.  அப்படி ஆரம்ப நிலையிலேயே தன் வருமானதிற்குள்ளும், நீதி, நேர்மையை கடைப்பிடித்து வாழவும் தன்னை தயார்படுத்திக்கொண்டார்.

சாதி அடையாளத்தின் வழியாக  தலித்தானவர்களுக்கு, அதிகாரம் படைத்த மதவாதிகள் கொடுத்த துயரம் தாளாது, வக்கிரம் நிறைந்த செயல்பாடுகளை  கண்டு கொதித்தார். மன வேதனை அடைந்தார். அதனூடாக பெரும்பாலும் அவருடைய கண்டனங்கள் மனித இனத்தை வஞ்சனையுடன், ஒரு சிலர் சொகுசாய் சிலரை அடிமையாய் மணுதர்ம சட்டத்தின் பெயரில் கையாண்டவர் களுக்கு எதிராக இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் நிலை முற்றிலும் மாற்றப்படவேண்டும் என்ற முனைப்பு அவர் செயலில் இருந்து. அதற்காக ஓயாத கலகக்குரலை எழுப்பினார். இருந்தபோதிலும் எல்லா மனிதர்களுக்கான உரிமையை கெடுத்தவராக ஒருபோதும் இல்லை. சமூகத்தின் ஒட்டுமொத்த மக்களும்  சகோதரத்துவத்துடன் இருக்க வாதிட்டார்.  அதன் பலனாக வெற்றியும் கண்டார். ஒன்றை நிதானமாக ஆய்வு செய்ய வேண்டும். ஒருவன் ஒத்த சார்புடையவனாக இருந்தால், நிச்சயமாக எல்லோரும் ஜனநாயக முறைப்படி ஏற்றுக்கொள்ளும் நீதியை கட்டமைக்க முடியாது. 'பாம்பு கடித்து சிகிசைக்கு வந்தவனும், ஜலதோசமென்று  வாசல்ப்படியில் முதலில் நிற்பவனையும் விசாரித்த மருத்துவர், பாம்புகடித்தவனை முதலில் அழைத்தார். முதலில் சிகிச்சைப்பெற்றவன் மருத்துவர் எனக்கானவர்  நீ  சென்று வேறு ஒருவரிடம் மருத்துவம் பார் என்று சொல்லமுடியுமா?  நல்ல மருத்துவர் பாம்புகடித்தவனை  கண்டிக்காமல் விடுவாரா?' அம்பேத்கரின்  செயல்பாடு அப்படித்தான் இருந்திருக்கிறது. அவரின் பெயரை சொல்லி தனக்கான உரிமையை பெற்றுக்கொண்டவர்கள். 'பசித்தவன் நாவு ருசி அறியாது' என்பதுபோல்  அம்பேத்கர் சொன்ன, கடைபிடித்த நீதி, நேர்மை, நேசித்தல் போன்ற வாசகங்களை புறந்தள்ளிவிட்டு. தங்கள் வாழ்வை முன்னேற்றிக்கொள்ள  என்ன வழிமுறைகள் அவர் உழைப்பின் மூலமாக கிடைத்ததோ அதை மட்டும் போற்றி பேசினார்கள். கடைபிடித்தார்கள். 

தெளிவாக சொல்லவேண்டுமென்றால்  அம்பேத்கரின் மன ஒழுக்கம், உண்மை, எதிர்ப்பார்ப்பு இல்லாமல் சகமனிதனை நேசித்தல் சார்ந்த விஷயங்களை புறந்தள்ளிவிட்டு. அரசியல் சலுகைசார்ந்து அவரைப்போற்றினார்கள். தெய்வம் என்றார்கள். எங்களுக்கான ஒரே தலைவர் என்று உரிமைகொண் டாடினார்கள். ஒரு வேளை அக்காலகட்டத்தில் ஆண்டைகளின,  பார்ப்பனர்களின் பொருள் சக்த்திக்கு, சூழ்ச்சியான மத சடங்குக்கு கட்டுப்பட்டவர்களாய்  தலித்துகள் இருந்தபோது. 'வேட்டையாடத்துரத்தும்  சிங்கத்தின் பாய்ச்சலுக்கு குட்டி காட்டுமாடு கரடு முரடுகளை, தேய்ந்த பாதை என  கடக்க முற்படுவதுபோல்'  பொய்களை, எமாற்றுகளை, சமயத்துக்கு மாறும் தன்மையை சமூக ஒழுங்கென்று  கடைபிடித்திருக்களாம். உயர்சாதி மதங்களும், அறிவாளிகளும் இத்தனைக்காலம்  நாம் செய்த வேலையை இப்போது அவர்கள் செய்கிறார்கள் என்று மவுனமாய் இருந்துவிட்டார்கள். ஆனால் அம்பேத்கர் நிச்சயமாக அப்படிப்பட்டத் தன்மையை ஒருபொதும் தம் மக்களுக்கு கற்பித்தவரல்ல.

''ஒரு தனிமனிதன் மற்றவர்களை அன்புடன்னும், மரியாதையுடனும் நடத்தி உடன் வாழ்  மனிதருடன் ஒன்றுபட்டு வாழவிரும்பும் மனநிலையே சகோதரத்துவம் எனப்படுவது." 

இப்படியான அம்பேத்கரின் வாசகங்களை தலித்துகளுக்கான வழிகாட்டி தான்தான், என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்கிறவர்கள் பொது மேடையிலாவது பேசியிருக்கிறார்களா?  என்றால் கேள்விக்குறிதான்.  அம்பேத்கரின் பெயரை தனக்காகவும், தன்குடும்ப வாழ்வுக்காகவும் பயன் படுத்தாமல், மேற்குறிப்பிட்ட பொதுத்தன்மை வாய்ந்த வாசகங்களை  அவரின் நற்பெயரை பிரதானப்படுத்தும்படி பேசியிருந்தால்,  அவர் அன்பு மகன்களை இழந்து, மனைவியை இழந்து உழைத்த உழைப்பை மதித்து கடைபிடித் திருந்தால். பெரும்பாலான மக்களிடம்  அம்பேத்கர்  இன்னும் சாதித் தலைவராக   பேசப்படுவாரா? 

"தேர்தல் அரசியல் நமக்கு வேண்டாம். அரசியல் தற்குறிக்களைத்தான் உருவாக்கும்! லஞ்ஜலாவன்யங்களுக்கு ஆட்படுத்தும்! தன்னலத்தையே மென்மேலும் வளர்க்கும்!" என்று 1999 க்கு முன் மதுரை மண்ணில் கொடியேற்றி தன் கட்சியை அறிமுகப்படுத்தியதோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நியாயமாய் போராடுகிற தன்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சி முடித்துக்கொண்டது.  அதன் பிறகான நெடுந்தூர அரசியல் பயணம் திரு.திருமாவளவன் மேற்குறிப்பிட்ட  தீர்க்க தரிசனம்போல் இன்றும் அவருக்கே கூட  நேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்பேத்கர் குறிபிடுவதுபோல்  "தாழ்த்தப்பட்ட மக்களின் கேடுகளுக் கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூரியாகவேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது."  அம்பேத்கர் மறைந்து அரைநூற்றாண்டை  கடந்துவிட்ட நிலையில் சமூகத்தில் தலித்துகள் ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேறியிருக் கின்றார்கள்.  பல நகரங்களில் உயர்சாதி இருப்பிடங்களோடு ஒன்றியிருக் கிறார்கள். அனால் ஒட்டுமொத்தமாக சமுதாயத்தில் பொதுவாக தலித்துகள் சார்ந்த மதிப்பீடு பார்க்கின்றபோது. தலித்துகள் மிக மோசமானவர்கள், சுயநலவாதிகள், நீதியை கடைபிடிக்காதவர்கள் என்கிற ஆரம்பகால அடிமைப்படுத்தலில் ஏற்பட்ட மனவலியை விட ஒரு மோசமான நிலைபாட்டை சுமத்தி வைத்திருக்கிறது. அதற்கான தீர்க்கமான மறுப்பை என்னுடன் சேர்த்து பெரும்பாலான  தலித்தும் துணிந்து சொல்வதற்கு இல்லை. இப்படியான நிலை தொடர்ந்து நீடிக்குமானால் இரவு பகல் பாராது தன் மக்களுக்காய் உழைத்த  அந்த மாமேதைக்கு தலித்துகள் திருப்பி செய்த கைம்மாறு என்ன? 

"ஒரு சமூக அமைப்பானது. தனக்கு தேவையான- தகுதியான மனிதர்களைப் பெருமளவில் தேர்ந்தெடுக்க விரும்பும் பட்சத்தில் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே அது முடிந்தவரை எல்லாரையும் சமநிலை கொண்டவர்களாக ஆக்கினால் மட்டும்தானே அது சாத்தியம் ஆகும். ஆகவேதான் நம்மால் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்கிறேன்."

தலித்துகளிலே பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறவர்கள், பொருளாதா ரத்தில்  தங்களுக்கு கீழான தலித்தவர்களை ஏலனமாய் நடத்துகின்ற நிலைமை இருக்கின்றது. அம்பேத்கர் மேல் குறிப்பிட்ட பொன் மொழிகளை எந்த தலித்தலைவர்களும் தங்கள் சந்ததிக்கு நினைவூட் டியதுமில்லை. பொருளாதா ரத்தில் உயர்ந்துவிட்ட தலித்தவன், அவனுக்கு ஈடாக பொருளாதாரத்தில் எழும்பி நிற்கும் மற்ற  சாதி நபரால் மதிக்கப்படுவதால்,  பொருள் சக்த்தி பெற்ற தலித்கடந்த காலத்தை மறந்துவிட்டு சற்று நேர்மையாய் நடக்க முயற்சிக்கின்றான். ஆனால் அவனேகூட தனக்கு கீழானவனுக்கு நீயாமாய் நடப்பதற்கும், வாழ்வாதாரம் பெற்றுக்கொள்வதற்கும் ஒரு வழியையும் காட்டுவதில்லை. தலித்தவர்களுக்கு வழிக்காட்ட  பொது வெளிக்கு வருகிறவர்கள். இனியும் பொதுத்தன்மையுடன் நேர்மையையும், நீதியையும் கையிலெடுத்து  பேசாத பட்சத்தில்  உயர்வகுப்பாய் இருக்கிற பெரும்பான்மை வாய்ந்தவர்கள்  தலித்துகளை கடமைக்காக மட்டுமே சேர்த்துக்கொள்வதும். ஆக்கமான பணிகளில்  ஒதுக்கிவிடுவதும். நாவலவிலே மட்டும் பேசுவது, நிகழ்ந்துவிடுவது நிரந்தரமாகிவிடும். முற்போக்கு சிந்தனையுடைய இலக்கியத்துறையிலும் கூட எந்த ஒரு தலித் எழுத்தாளர் களையும் திறந்த மனதுடன் தோள்மீது கைப்போட்டு நடப்பு பாராட்டுவதே இல்லை. நிற்பந்தகளின் அடிப்படையிலேயே 'அவர்களின் நிழலை பொருட்டாக எண்ணாமல் இருப்பதுபோல' தலித்துக்களை கணக்கிடுகிறார்கள்.தற்போதைய சமூகத்தில் மதத்தின் மூலமாக அடிமைப்படுத்துவது இரண்டாம் பட்சமாகத் தான்  இருக்கின்றது. பொருள் சார்ந்து  அடிமைப்படுவதுதான் முதலில் இருக்கிறது. அதற்கு சான்று ஆளுங்கட்சியும்,  எதிர்க்கட்சியும்  மாறி மாறி இலவசங்களை அறிவிப்பது.

"சமத்துவம், சகோதரத்துவம்- எல்லாவற்றுக்கும் மேல் நியாயம் என்கிற உணர்வுகளால் துண்டப்பட்டே செயல்படுகிறார்கள். என்கிற உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, எந்த ஒரு மனிதனும் மற்றவர்களுடன் ஒன்றினைவான் என்றே எனக்குத்தோன்றுகிறது." 

இந்த உண்மையான வாக்கை ஒவ்வொரு தலித்துகளும்   ஏன் ஒட்டு மொத்த சமூகமும் கடைபிடித்தாகவேண்டிய  நிலையில் இருக்கிறோம். அப்படி செய்ய தவறுகின்றபோது  'நேற்று யாரும் கண்டுகொள்ளாத அடிமையாய் இருந்தான். இன்று இவனே இவனை அடிமையாய் இருக்கவிட்டு, தலித்தாய் கண்டுபிடித்து, சிலர் பார்ப்பனிய மணுசாயம் பூசிக்கொண்டு நிற்கிறான். நாளை சாயம் பூசிக்கொண்டிருந்தவன் முழு பார்ப்பனிய மணுசட்டத்தை தரித்துக் கொண்டவனாய்  அவன் பாட்டன் வயிற்று பிள்ளையை  எனக்கு முன்னாள் செருப்பு போடுகின்றாயா? சேவகம் செய்யகிற அடிமை நாயே என்று அரங்கேரும் அபாயம் இருக்கிறது.  இந்நிலைக்கு திரும்புகிற பட்சத்தில்  ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி அறைநூற்றாண்டு களப்பணி ஆற்றி உழைத்தவர். அதன்முலமாக ஒட்டுமொத்த அரசு நடத்தும் வழிமுறைகளை அமைத்துதந்தவர். உலகமே போற்றி புகழ்ந்தாலும் அதில் பெருமைகொள்ளாது. ஒடுக்கப்பட்ட  இனத்திற்கு இயன்றளவுக்கு சுதந்தர வாழ்வை அனுபவிக்கச்செய்ததின் முலமாக இதயம் நிறம்பிய மகிழ்ச்சியை உணர்ந்தார். ஏறக்குறைய அறுபது ஆண்டுகால உழைப்பு, அறுபது ஆண்டுகால அவரைப்பற்றின பேச்சி, படிப்பு  எல்லாவற்றையும் மறந்து தலித்துகளே அம்பேத்கரை உயர்சாதி ஓட்டிச்செல்லும் மாட்டுவண்டியில் ஏற்றிவிடு கின்றனர். பள்ளிப்பாடங்களை கற்றுவர கையில் கோணிகொடுத்து அனுப்புகிறார்கள்.

"இக்கருத்தை அதிகாரம் படைத்த- புகழ்படைத்த ஒருவனின் கருத்து அல்ல இந்த நாட்டில் உள்ள ஏழை எளியவர்களின்- அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை ஓயாத போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஒரு சாமானியனின் கருத்தாக எடுத்துக்கொள்ளுங்கள்."

அனேகமாக எந்த லாபநோக்கும் இல்லாமல் அம்பேத்கர் இதயத்திலிருந்து புறப்பட்ட வார்த்தைகளாகத்தான் இது இருக்கவேண்டும். வெறும் பேச்சில் மட்டுமில்லாது. அதையே நடைமுறையில் கடைபிடிக்கிற, எதிராளியையும்  நேசிக்கிற,  மதிக்கிற ஒருவரால் மட்டும்தான் இப்படியான வார்த்தைகளை வெளிபடுத்தமுடியும். அத்தன்மையில் தலித்துகளை வழிநடத்துகிற தகப்பனும் தாயும்  இல்லாமல் மனம்போனபடி வாழ்கின்றவர்களாகவே தலித்சமூகம் உலவிக்கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த சமூக நிலையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வுகாணும் நோக்கைபபார்த்தால் அம்பேத்கர் மனம் நிறைந்து சொன்ன 'சமத்துவம்,  சகோதரத்துவம், நியாம் என்ற அடிப் படையில் ஆராய்ந்து, தலித்துகளும் சமூகமும் கடைபிடிக்காவிட்டால் தலித் துக்கள் அம்பேத்கர் என்று தங்கள் வாயால் உச்சறிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மொத்த சமூகமும் தான்.


குறிப்பு   
'சாதியை ஒழிக்கும் வழி'.  டாக்டர் அம்பேத்கர்.
'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை'  தொல்.திருமாவளவன்.
தலித்முரசு-புதியகோடாங்கி

ஜேடி
 

Tuesday, April 5, 2011

கடிதம்

நேரு சிறையிலிருந்த போது தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம்
                                தமிழாக்கம்: ஒ.வி.அளகேசன்  

புக்ஸ் (இந்தியா)பிரைவேட் லிமிடெட் 
135, பவழக்காரத்தெரு சென்னை-௧
............................................................................................................................

செல்வம் எங்கே செல்கிறது?                    ஜனவரி,18, 1931. 

       நீ முசூரியிலிருக்கும்போது நான் உனக்கு ஏழுதிய கடிதங்களில் மனிதன் முன்னேற்றம் அடைய அடைய எப்படிப் பல வகுப்புகள் தோன்றின என்று சொல்லியிருக்கிறேன். ஆதிகாலத்து மனிதர்கள் வயிற்றுச் சொற்றுக்குக்கூடத் துன்பப் பட்டு பாடு படவேண்டியவராயினர். பழங்களையும் கொட்டைகளையும் சேகரித்தார்கள். உணவைத்தேடிப் பற்பல இடங்கள் அலைந்து திரிந்தார்கள். நாளடைவில் கூட்டம் கூட்டமாகச்சேர  ஆரம்பித்தார்கள். இக்கூட்டங்களை பெரிய குடும்பகள் என்றே  சொல்லவேண்டும். தனியாக இருப்பதை விடக் கூடியிருப்பதில் பாதுகாப்பு அதிகமென்று கருதி அவர்கள் சேர்ந்து வாழ்ந்தும் வேட்டையாடியும் வாந்தார்கள்.  பிறகு ஒரு பெரிய மாறுதல் நிகழ்ந்தது. உழவுத்தொழில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பழைய நிலைமையை அடியோடு மாற்றிவிட்டது. காலம் முழுவதும் வேட்டையாடி பிழைப்பதைவிட நிலத்தை உழுது பிழைப்பாத்து மிகவும் எளிது என்று மக்கள் கண்டுகொண்டார்கள். நிலத்தை உழுதல், விதைத்தல் அறுத்தல் முதளிஎன செய்வதற்கு, ஓரிடத்தில் குடியிருக்க வேண்டும்; பழையபடி கண்ட கண்ட இடங்களில் அலைந்து திரியமுடியாது. ஆகவே, அவர்கள் தங்கள் தங்கள் நிலங்களுக்கருகில் நிரந்தரமாக வாழவேண்டி ஏற்பட்டது. இவ்வாறே ஊர்களும் பட்டணங்களும் உண்டாயின.

பயிர்த்தொழிலினால் பல்வேறு மாறுதல்கள் விளைந்தன. நிலத்திலிருந்து விளைந்த உணவுப்பொருள் முழுவதும் அவ்வப்பொழுதே பயன்படுத்தத் முடியாமல் மிச்சம் ஏற்படலாயிற்று. இம்மிச்சத்தை அவர்கள் சேமித்து வைத்தார்கள். வேட்டையாடிப் பிழைத்த பழைய வாழ்க்கையைவிட இத்தகைய வாழ்க்கையில் சற்று சிக்கல் அதிகமாயின. சில வகுப்பார் அந்த வேலையை மேற்பார்வை செய்து நிர்வகிக்கத் தலைப்பட்டார்கள். இந்த நிர்வாகிகளும்  நிரு  மாணிப்போரும்   சிறிது சிறிதாக வலுப்பெற்று நாட்டான்மைக்காரகளும் (Patriarchs),  சிற்றரசர்களும் (Rulers), அரசர்களும், பிரபுக்களும்  (Nobles) ஆகிவிட்டார்கள். அவர்கள் கையில் அதிகாரம் இருந்தமையால் விளைந்த உணவுப்பொருளில் செலவழிந்ததுபோக மிகுதியில் பெரும்பாகத்தை தங்களுக்கென்று வைத்துகொண்டார்கள். இவ்வாறு அவர்கள் செல்வம் மிகுந்துவர, வயல்களில் வேலை செய்து வந்தவர்களுக்கு உயிர் வழ்வதற்கு மட்டும் போதிய உணவு கிடைத்து வந்தது. பின்னர் இந்த நிருவாகிகளும், நிருமாணிப்போரும் தங்கள் வேலையைச் செய்வதற்குக் கூடத் திறமையற்றவர்களும்  சோம்பேறிகளும் ஆனார்கள். அவர்கள் ஒரு தொழிலும் செய்யாமல் தொழிலாளர்களின் உழைப்பினால் விளைந்த உணவில் பெரும்பகுதியைத் தங்களுக்கென்று எடுத்துக்கொள்வதில் மட்டும் அக்கறை காட்டி வந்தார்கள். தாங்கள் ஒன்றும் செய்யாமல் பிறருடைய உழைப்பினால்  வாழ்வதற்குத் தங்களுக்கு உரிமை  உண்டு  என்று அவர்கள் அவர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.

ஆகவே,மனிதர்கள் உழுதுண்டு வாழத் தலைப்பட்ட பிறகு அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாறுதல் நிகழ்ந்தது என்பது தெரிகிறதல்லவா? உணவு தேடும் முறையை வளர்த்து அஃது எளிதில் கிடைக்கும்படி செய்த காரணத்தால் உழவுத்தொழில் மனித சமூகத்தின் அடிப்படையை அடியோடு மாற்றி விட்டது. அதனால், மக்களுக்கு ஒய்வு கிடைத்தது. வெவ்வேறு வகுப்பினர் தோன்றினர்; அவரவர் உணவை தாமே தேடவேண்டும் என்னும் அவசியம் இல்லாததால் சிலர் வேறு வேலைகள் செய்ய முடிந்தது. பல தொழில்களும் கைத்தொழில்களும் தோன்றின. அதிகாரம் மட்டும் எல்லாவற்றையும் நிருவகிக்கும் வகுப்பாரிடையே இருந்தது.

பிற்காலச் சரித்திரத்திலும்,  உணவையும் பிற தேவைகளையும் உற்பத்தி செய்வதற்கு புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதை நீ காணலாம்.

உணவைப்போலவே  மனிதன் வேறு பல பொருள்களையும் விரும்பத் தொடங்கினான். ஆகவே, உற்பத்தி முறைகளில் ஏற்படும் பெரிய மாறுதல்கள் சமூகத்திலும் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தின. இதற்கு ஒரு நல்ல உதாரணம் சொல்லுகிறேன். நீராவியின் சக்தி கண்டுபிடிக்கப் பட்டதும் தொழிற்சாலைக்கு அதை பயன்படுத்தத் தொடங்கினார்கள். நீராவியின் உதவியால் புகைவண்டிகளும் கப்பல்களும் ஓட ஆரம்பித்தன. இதனால், பொருள்களை உற்பத்தி செய்யும் முறையிலும் பகிர்ந்தளிக்கும் முறையிலும் பெரிய மாறுதல் ஏற்பட்டது. தொழிலாளி சாதாரணக் கருவிகளைக்கொண்டு கையினால் செய்வதைவிட மிக விரைவாக நீராவித் தொழிற்ச்சாலைகள் பல பொருள்களை உற்பத்தி செய்யமுடிந்தது. இயந்திரம் உண்மையில் ஒரு கருவியே ஆகும். இரயில் மார்கமாகவும் நீராவிக் கப்பல்கள் மூலமாகவும் உணவுப்பொருள்களும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட பொருள்களும் தொலைவில் உள்ள நாடுகளுக்கு விரைவில் போய்சேர்ந்தன. இம்முறை உலகம் முழுவதும் எத்தகைய மாறுதலை விளைவித்திருக்க வேண்டுமென்பதை நீ எளிதில் அறியலாம்.

உலகில் உணவுப்பொருள்களையும் மற்றபொருள்களையும் மேலும் மேலும் விரைவாக உற்பத்தி செய்யும் புதிய சாதனங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த உற்பத்தி முறைகளைக் கையாளுவதால் உற்பத்தி மிகவும் அதிகரிக்குமென்றும் அதனால் உலகில் செல்வநிலை உயர்ந்து எல்லாருக்கும் நலம் உண்டாகும் என்றும் நீ நினைக்கலாம். ஓரளவுக்கு நீ நினைப்பது சரி: ஓரளவுக்கு அது சரியன்று. உற்பத்தி முறைகள் வளர்ச்சியடைய அடைய உலகத்தில் செல்வம் பெருகியிருக்கிறதென்பதில் தடையில்லை. அனால் உலகில் யாரிடம் அச்செல்வம் சென்று தங்கி இருக்கிறது? நமது நாட்டில் மிக்க ஏழ்மையும் துன்பமும் இருப்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் செல்வம் நிறைந்த நாடாகிய இங்கிலாதிற்கூட நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஏன் இவ்வாறு   இருக்க வேண்டும்? செல்வம்மெல்லாம் எங்கே செல்கிறது? நாடோறும் செல்வம் வளர்ந்துகொண்டே இருக்க, ஏழைகள் எழைகளாவே இருப்பது வியப்பாக இல்லையா? சில நாடுகளில் ஏழைகள் சிறிது நலம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் உற்பத்தியாயிருக்கும் புதிய செல்வத்தோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பின் அவர்கள் பெற்ற  நலம் மிகவும் சொற்பமே. இச்செல்வம் பெரும்பாலும் யாரிடம் செல்லுகிறதென்று நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம். வழக்கம்போல் நிருவாகிகளும் நிருமாணிப்போரும் நல்ல பொருள்கள் எல்லாவற்றிலும் பெரும்பகுதியை எடுத்துக்கொள் கிறார்கள். இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் பிறர் உழைப்பின் பயனில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும் இவ்வகுப்பினரே மற்றவர்களால் பெருமைப்படுத்தப் படுகிறார்கள். . அறிவிலிகள் சிலர், ஒருவன் தன் வாழ்க்கைக்கு தான் உழைப்பது இழிவென்று கருதுகிறார்கள். உலகில் எல்லாம் இவ்வாறு தலைகீழ்ப் பாடமாய் இருக்கின்றன. நிலத்தில் பாடுபட்டும் தொழிற்சாலையில் வேலை செய்தும் உலகத்துக்கு உணவையும் செலவத்தையும் அளிக்கும் குடியானவனும் தொழிலாளியும் ஏழைகளாய் இருப்பதில் ஏதேனும் ஆச்சரியமுண்டா? நமது நாட்டுக்கு உரிமை வேண்டுமென்று கேட்கின்றோம். ஆனால், இப்போது இருக்கும் தலைகீழ்பாடத்தை ஒழித்து உழைப்பின் பயனை உழைப்பவனுக்கு அளிக்கமுடியாவிட்டால் சுதந்திரத்தின் யாது பயன்? அரசியலைப்பற்றியும், அரசாங்கத்தை நடத்தும் முறையைப்பற்றியும், பொருளியளைப் (Eoonomics) பற் றியும் நாட்டின் செல்வம், எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பதைப் பற்றியும் பெரிய பெரிய புத்தகங்கள் எழுதப்பட்டிருகின்றன.1 கற்றறிந்த ஆசிரியர்கள் இவற்றைப்பற்றி பேசுகிறார்கள். இவ்வாறு பேச்சும் விவாதமும் நடந்துகொண்டிருக்கும்போது உழைப்பவர்கள் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புகழ் பெற்ற பிரஞ்சி ஆசிரிராரிகிய வால்டேர் என்பவர் அரசியல் வாதிகளைப்பற்றி பின்வருமாறு  கூறினார். "நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழுது பாடுபட்டுப் பிறர் உயிர்வாழ உதவிபுரியும் மக்களைப் பசியினால் சாகடிக்கும் முறையை இவர்கள் தங்களுடைய அருமையான அரசியலில் கண்டுபிடித்துள்ளனர்".

பழங்காலத்து  மனிதன் சிறிது சிறிதாக இயற்கையை அடிமைப்படுத்தி முன்னேறினான்; காட்டை அழித்து வீட்டைக்கட்டி, நிலத்தைப் பயபடுத்தினான். ஓரளவுக்கு மனிதன் இயற்கையை வென்றுவிட்டதாகக் கருதப்படுகிறான். இயற்கையை பலர் வென்றுவிட்டதாக பலர் பேசுகிறார்கள். இது வெறும் பேச்சு; இது சரியன்று. மனிதன் இயற்கையை அதிகமாக உணர உணர, அதனுடன் ஒத்துழைத்து அதைத்தன் செயல்களுக்கு பயன்படுத்திக்கொண்டான். என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். பண்டையகாலத்தில் மக்கள் இயற்கையையும் இயற்கையின் தோற்ற வேறுபாடுகளையும் கண்டு அஞ்சினர். அவர்கள் இயற்கையை உணரமுயலாமல், ஒரு காட்டுவிலங்கைச் சமாதானம் செய்து இன்புறுத்துவதுபோல, அதற்கு வழிபாடு செய்து வணங்க ஆரம்பித்தார்கள். இடியும் மின்னலும் கொள்ளைநோய்களும்  அவர்களை அச்சுறுத்தின.பொங்கலிட்டு வழிபடுவதே இவற்றறை தடுப்பதற்கு வழி என்று அவர்கள் எண்ணினார்கள். சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்பட்டால், அதை பெரிய பீடை என்றும்  பலர் தெரியாமல் நினைக்கிறார்கள். அது ஒரு சாதாரண இயற்க்கை நிகழ்ச்சி என்று அறிந்துகொள்ளாமல் மக்கள் அதைப்பற்றி கவலை அடைந்து குளித்து முழ்கிப் பட்டினியிருந்து சூரியனையும் சந்திரனையும் காப்பாற்ற முற்படுகிரார்கள்!     சூரியனையும் சந்திரனையும் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வன்மை  பெற்றிருக்கின்றன. நாம் அவற்றைப்பற்றிக் கவலைப்படவேண்டுவதில்லை.

மக்கள் கிராமங்களிலும் பட்டணங்களிலும் குடியேறி வாழ ஆரம்பித்தவுடன் கலை நாகரீகங்கள் தோன்றி வளர்வதைப்பார்த்தோம். உணவுப்பொருள் அதிகமாகக் கிடைக்கவே ஒய்வுநேரமும் அதிகமாயிற்று. வேட்டையாடு வதிலும் உண்பதிலுமே போழுதைபோக்காமல் வேறு நிகழ்ச்சிகளைப்பற்றியும்  அவர்கள் சிந்திக்க தொடங்கினார்கள். சிந்தனை வளர வளரக் கைத்தொழிகளும்,  கலைகளும்  சிறுது சிறிதாக வளரத்தொடங்கின. மக்கள் தொகை பெருகவே ஒருவருக்கொருவர் நெருங்கி வாழலானார். பல செயல்களின் பொருட்டு எபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துப்பழகி  வந்தார்கள். மக்கள் சேர்ந்து வாழவேண்டுமானால் ஒருவர் மற்றவர் மனத்தை அறிந்து ஒழுகவேண்டும். அண்டை அயலார், தோழர்கள் ஆகியோருடைய மனம் புண்படும்படியான செயலைச்செய்யக் கூடாது. செய்யின் சமூதாய வாழ்வு நடைபெறமுடியாது.  உதாரணமாக, ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள். குடும்பம் சிறு சமூகம் போன்றது. ஒரு குடும்பம் இன்பமாக வாழ்க்கை நடத்தவேண்டுமானால் அதைச்சேர்ந்தவர்கள் ஒருவரோடொருவர் இணங்கி நடக்கவேண்டும். ஒரு குடும்பத்தச் சேர்ந்தவர்கள் அன்பு அத்தளையால் பினைக்கப்பட்டிருந்தால், இஃது  எளிதாகும். அப்படியிருந்தும் சில சமயங்களில் அதை மறந்து அநாகரிகமாக நடந்துகொள்கிறோம். குடும்பத்தைவிட ஒரு பெரிய கூட்டத்திற்கு இது பொருந்தும். நம் அருகில் வாழ்வோர் நமது நகரத்தைச் சேர்ந்தவர்கள். நம் நாட்டு மக்கள் இன்னும் மற்ற நாட்டவர் எல்லோருக்கும் இது பொதுவானது.

ஆகவே மக்கள் தொகை மிகுதியானதனால் தன்னடக்கத்துடன் பிறர் நோக்கமறிந்து செல்லும் குணம் சமூக வாழ்க்கைக்கு சிறந்தது. கலை நாகரீகங்கள் என்பன  இன்னின்னவை என்று அறுதியிட்டு சொல்லுவது கடினம். நான் அக்காரியத்தை மேற்கொள்ளப் போவதுமில்லை. நாகரீகம் குறிக்கும் பல பண்புகளில் தன்னடக்கமும் பிறர் மனமறிந்து ஒழுகுதலும் சிறப்பாக அடங்க்கியிருக்கிறன. ஒருவன் தன்னை அடைக்கிப் பிறர் மனமறிந்து ஒழுகானாகின், அவனை நாகரிகமற்றவன் என்று ஐயமின்றி கூறலாம்.