Monday, July 22, 2013

சினிமா,

மரியான்

கடல் சார்ந்த பகுதியின் சராசரி வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார்கள். இளமையான ஆண், பெண் காதல் மையம் என்றாலும் அதுமட்டுமே கதையல்ல. எல்லை கடந்த பிரச்சனை, உலகலாவிய இயக்கங்களின் தேசப்பற்றினைத் தொட்டுச்செல்வது, மதம் சார்ந்த விஷயங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதது. விளைநிலங்கள் பொய்த்துப்போவதுபோல் இயற்கைச் சீற்றங்களால் கடலை நம்பி வாழ்வோரின் வாழ்வாதாரப் பிரச்சனை இவைகளை உள்ளடக்கிய ஒரு படம்தான் மரியான்.

ஒவ்வொரு கிராமங்களில் தேடினாலும் இப்படி ஏதாவது ஒரு காதல் ஜோடிக் கட்டாயம் இருக்கும். இவர்கள் இவ்வளவு அய்க்கியமாக இருக்க பெரிய கற்பிதங்கள் எல்லாம் இருக்கத் தேவையில்லை. ஒரு உறவுசார்ந்தோ அல்லது அக்கிராமத்தில் இளைஞர்களின் (ஆண், பெண்) தனித்தன்மை சார்ந்தோ ஒருவர் விருப்பம் இல்லாமல்கூட, இன்னொருவர் காதல் வயப்பட்டு எதிர்பாலர்மீது ஆதீதமான அன்பு வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் பனிமலர், (பார்வதி) மரியான் மீது அன்புவைத்திருக்கிறாள். அப்படி அன்புவைக்க சரியான பின்புலம் இல்லை என்றெல்லாம் நாம் சொல்லமுடியாது. நம்ப முடியாத அளவிற்கு வீரவசனம் பல்டி, குட்டி கரணம் போடும் காதல் என்று எங்கும் இல்லை.

பார்வதி, மரியானை சற்று அதிகப்படியாக நேசிக்கிறாள். மரியானுக்கு (தனுஷ்) இயல்பாகவே ஒரு சோகம் படர்ந்திருக்கிறது. ஏன் அப்படி இருக்கவேண்டும் என்றகேள்வி எழலாம். உண்மையிலேயே அந்தப்பாத்திரம் அப்படி இருக்க நிறைய சாத்தியம் இருக்கிறது. அவன் சிறுவயதிலேயே தந்தையை இழந்திருக்கிறான். தன் தாய் இளம்வயதிலேயே விதவையாக இருக்கிறாள். இவன் முற்றிலும் ஊதாரி கிடையாது. பொறுப்பாக வேலை செய்கிறவன். சற்று சிந்தனை உள்ளவன் இப்படி இருக்கிறவன் நிச்சயம் வாழ்வை ஒரு மேலோட்டமான ஒன்று, என்று நினைத்து சிலதோடு ஒன்றிப்போகாமல் வெறுமையை நம்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த நிலையில்தான் அப்பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பாத்திரத்தை தனுஷ் சிறப்பாகவேச் செய்திருக்கிறார்.

ஒப்பனை அலங்காரம் சிறப்பாக அமைந்திருக்கிறது குறிப்பாக ஆப்ரிக்கநாட்டில் வேலை செய்கிறமுதல் காட்சியில் தனுசின் மீசை முதற்கொண்டு சொல்லலாம் சாதாரன மனிதனுக்கு குச்சி குச்சியாய் நீட்டி வைப்பதுவரை அவ்வளவு இயல்பாக அமைத்திருப்பார்கள். கிராமத்தில் சில பொறுப்புள்ள வாலிபர்கள் அடுத்த நாள் பிழைப்பு எப்படி போகுமோ என்ற நிலையில் தங்கள் வாழ்வை கடத்துவதால் பெரும்பாலானவர்கள் தங்களைச் சுற்றிச் சந்தோஷங்கள் தேடிவந்தாலும் அதை உணராமலே வாழ்வைக் கடத்திவிடுவார்கள். அப்படித்தான் தனுசுக்கும் நேர்ந்துவிடுகிறது. தன்னை ஒரு அழகான பெண் சுற்றிவந்தபோதும் அவள் மீது பெரிய ஈர்ப்பு இல்லை. ஆனால், அதே நபர்கள் யாராவது பேசும்போதோ, அல்லது காட்சியாக எதையாவது பார்ப்பதாலோதான், தமக்கு இவ்வளவு நாள் இது தெரியாமலே போச்சே என்றளவில் செயலில் இறங்குவார்கள்.

அப்படித்தான் கடலில் மீன் பிடிக்கச்செல்லும்போது, பனிமலர் தந்தை மரியான் வாழ்க்கையில சாதிக்க நினைக்கிறவனுக்கு பொம்பளக் காற்று பட்டுகினே இருக்கணும்டா, என்பதுபோல சொல்லுவார். அவனுக்கு அந்த இடம் ஷாக் ட்ரீட்மெண்ட்போலதான். தனுசுக்கு காதல் தொடங்குகிறது.

பாவம் வட்டி கொடுக்கிறவன்தான் கொஞ்சம் ஓவர் அசிங்கமாக ஒப்பனை செய்திருக்கிறார்கள். அது வேண்டுமென்றே செய்ததாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கந்து வட்டிகொடுக்கிறவர்கள் தோற்றம் அழகாக இருக்கலாம். ஆனால், அவர்கள் இதயம் அசிங்கமானதற்கு ஒப்பாகும். இதை வெளிப்படுத்தான் இந்தப்படத்திலேயே ஒரு அசிங்கமான ஒப்பனையை வில்லத்தனத்திற்கு கொடுத்தார்களோ என்று யோசிக்கவைக்கிறது.
பார்வதி தான் அதிகமாக விரும்புகிற ஒருவன், ஆபத்தான நிலையில் கடலுக்குள் போயிருக்கிறான் என்று சொல்லும்போது அவளின் முகம் காட்டும் அதிர்ச்சி சிறப்பான நடிப்பு படம் முழக்க பார்வதி மிக அற்புமதமாக நடித்திருக்கின்றார்.

ஏற்கனவே மரியான் அம்மா அடிக்கடி வெளிநாடு போகச்சொல்லியிருப்பாள். அப்போதெல்லாம் மகன் ஏதோகாரணம் சொல்லித் தவிர்ப்பான். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. உதாரணமாக அம்மாவைத் தனிமையாக விட்டுச் செல்ல முடியாத நிலமை, போதிய வருமானம் இருந்தால் மகனுக்கு சீக்கிரம் துணையின், வழியைக் காட்டிவிடலாமே என்ற எண்ணம் தாய்க்கு. இந்த நிலமையைப் பார்வையாளனால் ஊகிக்க முடிகிறது. ஆனால் படத்தில் இதை வெளிப்படுத்தாமல் உணர்த்தும் உத்தியைக் கையாண்டிருப்பது சிறப்பு.

ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகமாகும் போது தவிர்க்க முடியாமல் வெளிநாட்டுக்குப் போகிறான். (வெளிநாடு சென்றவர்கள் இரண்டு வருஷம்னா, சொன்னபடி சரியாக இரண்டு வருஷத்தில் திரும்பிவிடுவது எதார்த்தத்தில் சரியாக அமைகிறதா தெரியவில்லை.) பணியை முடித்துத் திரும்பும்போது தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். ஆப்ரிக்கவில்லன்கள் அதிவேகமாக சர் சர் என்று வருவதும் போவதும் தவிர்த்து மிக இயல்பானப் போக்கைக் கையாண்டு இருக்கிறார்கள். பசியின் கொடுமையில் கடந்த காலத்தை நினைத்து மீன் சாப்பிடும் கற்பனை நிகழ்வுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்திருக்கவேண்டும். கடத்தல் இடத்தில் தனுஷ் கத்தி “என்னடா வேணும் நீங்களும் ஏழை. நாங்களும் ஏழை“ என்று ஆவேசமாக பேசிவிட்டு கடல் ராசா நான் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு பாடல் சோகத்திற்கும், சந்தோஷத்திற்கும் கச்சிதமாக ஒரே நேரத்தில் ஈடுகொடுத்திருப்பது சிறப்பு. இன்னொரு இடம் தீவிரவாதிகள் கம்பெனிக்கு போன்போடச் சொன்னபோது, தனுஷ் பார்வதிக்கு போன்போட்டு பேசும் நிகழ்வு மிக உருக்கமானது, இருவரும் அந்தத் தருணத்தை அற்புதமாக உள்வாங்கி, போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். தனுஷ் உதடுகள் காய்ந்துபோய் வரி வரியான வெடிப்புகளுடன் கீழ் உதட்டை மடித்து பேசாமல் வார்த்தைகளை உள்ளார்ந்த வலியுடன் பேசுவது நெஞ்சில் ஈரமுள்ள யாரும் போற்ற வேண்டியத் தருணம்.
ஒரு வழியாக தனுஷ் தப்பித்து கிளம்புகிறபோது, பார்வதி தன் அப்பாவிடம் சொல்லுகிற விதம் உயிரோட்டம் உள்ளது. தனுஷ் கிளம்புகிற பிம்பத்தை தரிசிப்பாள். இது ஏதோபார்வையாளரை ஏமாற்றும் வித்தையல்லை. சில நேரங்களில் ஆத்மார்த்மாய் நேசிப்பவர்கள் இப்படியான தரிசன தருணங்களை சொல்லுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதைவிட முக்கியம் இப்படத்தில் அந்தக் காட்சியமைப்பு அவ்வளவு அருமையாக ஒன்றியிருக்கும்.

வாழ்வில் எதையுமே அனுபவிக்காத ஒருவன் தான் விரும்பிய வாழ்வு கைக்கெட்டி வரும்போது, கண்களைச்சுற்றி ஒன்றுமே இல்லாத நிலை மிகவும் வேதனையானது. அந்த பாலைவனங்களைக் கடக்கிறபோது நெஞ்சே எழு பாடல் மயில் இறகாய் மனதைத்தடவி விடுகிறது. பாடலின் இடையிடையில் பார்வதி வருவது ஒன்றும் குறையாகத் தெரியவில்லை. ஏனென்றால், பார்வதி தேவதையாய் புடவையை படரவிட்டு குறுக்கும் நெடுக்கும் வந்தாலும், திக்குத்தெரியாமல் அலையும் தனுஷின் முகத்தில் எந்த சந்தோஷமும் வருவதில்லை அதுதான் முக்கியம். ஒருவேளை சற்று பிசகி தன் முகபிம்பத்தை மாற்றி சந்தோஷ பிம்பத்திற்கு மாற்றியிருந்தாலோ மொத்த படமும் நம்பும்படியாக அமைந்திருக்காது. பல இடங்களில் பரத்பாலா மிக நுணுக்காமாக கையாண்டு இருக்கிறார். அதாவது அந்த இடம், உள் மனம் தன் காதலியின் பிம்பத்தைத் தரிசித்தாலும், நிஜத்தில் அவன் இன்னும் ஒரு விடிவைக் கண்டடையவில்லை. அதிகமான மன உளைச்சளின் சாயலிலே இருக்கிறான், ஆக, அப்பாடலின் இடையில் பார்வதி வருவது என்பது எனக்கு சரியாகவேப்படுகிறது. ஒரு வழியாக ஆத்தாவை (கடலை) கண்டபிறகு, பார்வதியை அடைகிறான்.
ஒட்டு மொத்தமாக பார்க்கிறபோது மரியான் சோடை போன படமல்ல இது ஒரு நேர்த்தியான படம்தான். இதற்கு முதன்மையான சாட்சி வெகுஜனமக்கள் அநேகமாக இதைக் கொண்டாடவில்லை என்றே நினைக்கிறேன். வெகுஜனமக்கள் கொண்டாடுகிற சிங்கம் போன்ற படங்களை, மாற்று சிந்தனைக்குறிய சினிமாவை விரும்புகிறவர்கள் கொண்டாடுவதில்லை. வெகுஜனமக்கள் கொண்டாடாததை, நாம் கொண்டாடியே ஆகவேண்டும். இரண்டையும் நாம் ஒரே தட்டில் வைப்பது சரியல்ல.

மரியானில் குறைபாடுள்ள இடங்களாக நான் கருதுவது. தனுஷ் வெளிநாட்டுக்கு போகிற சந்தர்ப்பம் என்பது பெரும் பாதிப்புகளுக்கு இடையில் நடப்பதாக இல்லை. இரண்டு வருஷம் தானே, சாதாரனமாக போய்விடும் என்ற தொனியில் காதலர்கள் இருவரும் பேசிக்கொள்வார்கள். பிறகு தனுஷ் விடைபெற்று கிளம்புகிறான். பார்வதி அதே இடத்தில் நின்று உயிர் போகக் கத்தி அழைப்பார். இது சற்றும் பொறுத்தமற்றதாக இருக்கிறது. இன்னொரு இடத்தில் அப்புகுட்டி இறந்து கிடக்கும்போது கிராம மக்கள் எல்லாம் கதறி அழுவார்கள் ஆனால், தனுஷ் அந்த இடத்தில் சரியாகச் செய்யவில்லை. அல்லது, அது சிரியாக வராத நிலையில், இயக்குநர் தனுஷையே சற்று நேரம் தொடர்ச்சியாக காட்டியிருக்கக்கூடாது.

ஆப்ரிக்கவில்லன்களிடம் இருந்து தனுஷ் தப்பித்துவந்தார் என்பதோடு நிறுத்தியிருக்கலாம் தேவையில்லாமல் ஆப்ரிக்க இளைஞனை கடலுக்குள் இழுத்து கொலைசெய்தது, நம் கதாநாயகன்களுக்கு மதிப்பு உடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே வைக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது. மேலும் அது படத்திற்கு எந்தக் கூடுதல் சக்தியையும் கொடுக்கவில்லை.

இவ்வளவு அற்புதமாக நடித்துள்ள, நயன்தராவின் சாயலாக உள்ள இந்தப் பார்வதி யார் என்று தேடியபோது சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். ‘பூ‘ படத்தின் கதாநாயகி அவ்வளவாக அறியப்படவில்லை என்ற நிலையிலும், சிலர் நான்கு வருஷங்களாக நீங்கள் படங்கள் ஏதும் நடிக்கவில்லையே என்று கேள்வி கேட்டபோது. மிக தைரியமாக “உண்மையில் சொல்லப்போனால் நான்கு வருஷங்களும் நிறையபடங்கள் என்னைத் தேடிவந்தது. ஆனால், எல்லாமே குப்பைப் படங்கள்“ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

ஒரு நடிகை தற்கால படங்களை குப்பைப்படங்கள் என்று நிராகரித்து இப்படத்தைதேர்வு செய்து நடித்திருக்கிறார் என்றாள், இது போன்ற கலைஞர்களைப் பாராட்டாமல் நாம் மாற்று சினிமாவை கட்டமைக்க முடியாது.

வசனம்கூட ஒன்றும் தரம்குறைந்ததில்லை, சுருக்கமாகவும் இயல்பாகவும் இருக்கின்றது. இரண்டு, மூன்று பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றது, நிறைய படைப்பாளிகள் பங்கு கொண்டு படைத்துள்ள மரியான். என் மனதில் மரியாமல் இருக்கின்றது.

ஜேடி

Friday, July 19, 2013

கவிதை,



 புகார்ப் பெட்டி

ஒவ்வொருவரின்
இதயம் உரசும் பாக்கட்டிலும்
மூன்று பிரதான புகார்க்கடிதங்களை
வைத்திருக்கின்றார்கள்.

எல்லாமே கண் கண்டு
மூளைப் பத்திரப்படுத்தியதுதான்

ஒன்றை வைத்தபோது
வீடற்றவர்களாக
உறவற்றவர்களாக
மாறிப்போக வாய்ப்பிருக்கிறது.

இன்னொன்றை வைத்தால்
உழைப்பைச் செலுத்தமுடியாதவர்களாக
பிழைப்பற்றவர்களாகிப்
போக வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவதாக வைத்தால்
நாதியற்றவர்களாக
நாடற்றவர்களாக
இப்பூமியையே இழந்தவர்களாகவும்
போக வாய்ப்பிருக்கிறது.

இருந்தாலும்
மூன்று நிலைகளுமே
தைரியமாகச் சொல்லுகிறது
குறைகள் இருந்தால்
வெளிப்படையாகச் சொல்லவும் என்று.

வாழப் பக்குவப்படுத்திக்கொண்டவர்கள்
பாக்கட் புகார்களைச் சமயம்பார்த்து
மென்று விழுங்கிவிடுகிறார்கள்.

வாழ்வைப் பதியம் போடத்தெரிந்தவர்கள்
சமயம்பார்த்து வெளியிடுகிறார்கள்.

ஜேடி

Sunday, June 23, 2013

கவிதை,

    
விபத்து

தற்செயல்விபத்துக்களில்
சிக்கிக்கொண்ட  உடல்கள்
சிதைவற்றதாகவேக் கிடக்கின்றது
காலம் முழுக்க

முரண்பட்ட காலங்கள்
யுகவேகமாகக் கடந்துபோக
விபத்துக்கானக் காரணங்கள்
கண்டறியப்படவில்லை
அதற்கான  நிர்பந்தங்களும்
இருந்ததில்லை.

தனித்தனி பாதைகளில்
தனக்கான நியாயத்தைப்
புகுத்திக்கொண்டே
புதிய தடங்களைக் கண்டுபிடிக்கிறது
 

ஒன்று
அறநெறித் தேவையற்றது,
எதற்கும் பயனற்றது எனத்தள்ளி வைக்கிறது

இன்னொன்று
அதை மீறுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை என்கிறது.

ஆனால்,
உடல்கள் கடந்த  காலத்தின்
தற்செயல் விபத்தின் மனசிதைவுகளை
மறுக்கவோ, மறக்கவோ, மாற்றவோ
முடிவதேயில்லை

உடல்கள் அலைகிறது
புதிய ஜீவியத்திற்காக
தூய சமூகம்
விபத்துக்களை நடத்தாதிருக்குமா?.

ஜேடி

Monday, June 17, 2013

சினிமா,

          

                                                                      Kuma 

சென்னை பிலிம் பெஸ்டிவலில் இப்படத்தைப் பார்த்தேன். இரண்டு  நாள் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்தநேரம் எழுதவேண்டும் என்றிருந்தேன். ஏதோ, காரணம் தள்ளிபோய்விட்டது. (இல்லனாலும், ஆயிரம்பேர் படித்துவிட போகிறார்களாக்கும்) மீண்டும் அப்படத்தை பார்த்தேன்.  எழுதாமல் இருக்கமுடியவில்லை.

(குறிப்பு- ‘வாதங்களும் விவாதங்களும்‘ தொகுப்பில், கட்டுரைகளை வாசித்தபோது ஒரு படத்தைப்பற்றிச் சொல்லும்போது அதன்  கதையை சுருக்கமாக சொல்லிவிட்டுதான் விமர்சனம் செய்யவேண்டும் என்று வெ.சா குறிப்பிடுவார் என்பதை சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது எனக்கு பிடித்ததாகவும், நியாயமானதாகவும் படுகிறது. அதன் அடிப்படையில் இப்படத்தின் சிறு குறிப்பு.) 

முஸ்தபா, பாத்மா தம்பதிகளுக்கு வாலிப நிலையில் ஆண், பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். பொதுவாகப் பெரிய குடும்பம். பாத்மாவிற்கு முற்றிய கேன்சர். பிள்ளைகளையும், குடும்பத்தையும் பார்க்கவேண்டும். துர்கிஸ் நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து ஆயிஷா என்ற பெண்ணை முஸ்தபாவிற்கு இரண்டாவது மனைவியாக கட்டிவருகிறார்கள். கொஞ்ச நாளில் எதிர்பாராமல் முஸ்தபா இறந்துவிடுகிறார். இதற்கிடையில் ஆயிஷாவிற்கு குழந்தையும் பிறக்கிறது. வாலிப பெண்ணின் வாழ்க்கை நிலை என்ன? என்பதுதான் கதை.

முதல் காட்சியில் வெறுங் கண்ணாடிதான் இருக்கும், பின்னணியில் நோயாளியின் தன்மை ஒத்த இருமல் ஒலி கேட்கும். வயதான பாத்திரம் தன் உதடுகளை கர்ச்சிப்பால் மெதுவாக ஒற்றிக்கொள்கிற பிம்பம் கண்ணாடியில் தெரியும். இவர்தான் பாத்மா. அவர் ஒரு நோயாளி என்பதை அதிகச் சிரமேற்கொண்டு வசனங்களாலோ, பெரிய காட்சிப்படுத்தலாலோ பார்வையாளருக்கு புரியவைக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மிகச் சரியாக அதன் பணியை நிறைவேற்றும் காட்சி. 

அடுத்து துர்கீஸ் கிராமம். தெருவில் கோலாகலமான நடனங்கள் சிறு பிள்ளைகள், கூச்சல்கள் அதிகமாக இருக்கும். ஒரு வீட்டின் முதல் தளத்தில் மணமகளை அலங்கரித்துக்கொண்டிருப்பார்கள் அவள்தான் ஆயிஷா. கீழே வட்டமாக நடனம் ஆடுவார்கள். அதில், வாலிபன் சற்று விசேஷ உடை அணிந்திருப்பான். ஆயிஷாவும், அந்த வாலிபனும் ஒருவரை ஒருவர் நோக்குவார்கள். அதில் ஏதோ இருக்கிறது என்ற உணர்வு பார்வையாளனுக்கு ஏற்படும். மேலும், இவர்கள்தான் மணமக்கள் என்ற எதிர்பார்ப்பு வலுக்கிறது. ஆனால் அது நிஜமல்ல, அடுத்தக் காட்சியில் வழுக்கை தலையுடன் முஸ்தபாதான் மாப்பிள்ளை என்பது தெரிகிறது. 

இன்னொரு நியதியை இயக்குநர் அங்கு கட்டமைக்கிறார். ஆயிஷாவும், வாலிபனும் தங்களைப் பார்த்துக்கொள்ளும்போது, இவர்கள்தான் உண்மையானத் தகுதியுள்ள ஜோடிகள். ஆனால், இச்சமூக நடைமுறைகள், வாழ்வின் நிர்பந்தம். எப்படி எல்லாமோ புரண்டுபோகிறது என்பதை மிக எதார்த்தமான வலியுடன் வைக்கிறார்.

ஆயிஷா தன் கிராமத்தை விட்டுச் செல்கின்றபோது எல்லாவற்றையும் இழந்து செல்வதுபோன்ற முகபாவத்தைக் காட்டி தன் முழு திறமையையும் வெளிப்படுத்துகிறார். அரபுநாடுகளில் மலைகளுக்கு இடையில் மிக அகலமான நெடுஞ்சாலைகள் நல்ல அழகியலை வெளிப்படுத்துகிறது. முஸ்தபா குடும்பம் அப்பார்ட்மென்ட்டுக்கு வந்துவிடுகிறது.

முஸ்தபா, ஆயிஷா முதல் இரவை நடத்தவேணடியுள்ளது.  கலியாண வயதில் இரண்டு பெண், ஒரு ஆண் இருக்கிறார்கள். இரவு நெருங்குகிறது. மணமக்களை தனியாக விடவேண்டும். அந்த அறையில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறும்போது. அவர்களின் மன ஓட்டத்தை அற்புதமாகப் படம்பிடித்திருக்கின்றார். அதாவது, முஸ்தபாவின் மகள் வெளியேறும்போது, ‘நம் தந்தைக்கு இவ்வளவு சிறிய பெண் மணமகளாக வந்ததை ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால், தந்தையை கேள்வி கேட்கமுடியாது. அந்தக்கோபத்தை ஆயிஷாவின் மீதுதான் வைக்கமுடிகிறது. அதேபோல மகணுக்கு, ஆயிஷா தனக்கு ஏற்ற பெண் அவளை இரக்கமில்லாமல் தந்தை கட்டிக்கொள்கிறாரே என்ற வருத்தம் உள்ளூர இருக்கிறது. இருந்தாலும் அம்மாவும், அப்பாவும் விருப்பப்பட்டு செய்கிற செயலை தடுக்கமுடியாத சூழலில் மகன் மனம் நொந்து வெளியேறுவது தெளிவாகத்தெரியும். கடைசியாக பாத்மா படுக்கைகளை சரிசெய்துவிட்டு ஆயிஷாவிற்குப் புத்திசொல்லிக் கிளம்புவாள். ஆயிஷாவிற்கு பத்திசொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவள் தனக்குக்கிடைத்த வாழ்வு, வாழ்வதுதான் சிறந்தவழி என்பதை நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறாள். அறையை விட்டு வெளியேறியவர்கள். எல்லோருமே பக்கத்து அறைகளில் தூக்கம் இல்லாமல் விழித்திருப்பார்கள். ஆயிஷாவின் அறையில் சிறிய முனகல் சத்தம் மட்டும் கேட்கும். அவர்களுக்குள் உடல் சேர்க்கை முடிந்துவிட்டது என்பதை மிகச்சுலபமாக விளங்கவைப்பார்.

இப்படத்தின் எடிட்டிங் மிகச்சிறப்பாக உள்ளது. எந்தக்காட்சியையும் தெவையில்லை என்று சொல்லிவிடமுடியாது. பல இடங்களில் இசையே இல்லை. அல்லது இசைப்பதே கேட்கமுடியாது. தேவையான இடங்களில் இஸ்லாமியத்திற்கே உரிய தங்கம் சிதறுவதுபோன்ற இசையைத்தான் கேட்கமுடிகிறது.
அறிமுகமில்லாத மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றபோது முரண்பாடுகள் அதிகமாகத்தோன்றும். பிறகு பழகப்பழக அவர்களைவிட அன்பானவர்கள் இருக்கமுடியுமா? என்கிற பற்றுதல் உண்டாகிவிடும். அப்படித்தான் முஸ்தபா மகள்கள் ஆரம்பத்தில் தனக்குப் பிடிக்காத நபர்போல ஆயிஷாவை வெறுப்பார்கள். கொஞ்ச நாளில் அவளின் அன்பான உள்ளத்தைப் புரிந்துகொண்டு ஆயிஷாவிற்கு இன்னொரு தாய்ஸ்தானத்தைக் கொடுக்கிறார்கள். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றாள் ஆயிஷாவிற்கு ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொடுப்பாள். ஆயிஷா எழுத்தைக்கூட்டிக் கூட்டி படிப்பாள். அவளை முதலில் வெறுத்தவள் இப்போது புன்முறுவலுடன் திருத்தி படிக்கக் கற்றுக்கொடுப்பாள். ஒரு கூட்டுக்குடும்பத்தில் உறவுகள் முரண்படவும், அன்புகூறவும் எப்படி சாத்தியமாகிறது என்பது சிறப்பாக வந்திருக்கிறது. 

கேன்சரில் இருக்கும் பாத்மா இறந்துவிடுவாள் என்றுதான் ஆயிஷாவை கொண்டுவருவார்கள். ஒரு கட்டத்தில் சீரியசான நிலமையில் பாத்மா மருத்துவமனையில் இருப்பாள். மருத்துவர் அவளின் ஆபாயக்கட்டத்தை அறிவிப்பார். அந்த அதிற்சியில் எதிர்பாராத விதமாக முஸ்தபா இறந்துவிடுவார். இந்தக் காட்சியை இயக்குநர் மிக நுட்பமாக வைக்கிறார். ஆதாவது, மருத்துவமனையின் பெஞ்சில் முஸ்தபா பக்கத்தில் ஆயிஷா மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் கூட்டமாக இருப்பார்கள். உள்ளே இருப்பது யாரென்பதையேக் காட்டவில்லை. அந்தச்சூழல் மிகவும் பதட்டமாக இருக்கும். மருத்துவ அறையில் இருந்து மருத்துவர் பதட்டமாக வந்து செய்தியைச் சொல்லுவார். அடுத்தக்காட்சி மயானத்தில் கூட்டமாக அழுவதைக் காட்டுவார்கள். பார்வையாளனுக்கு செத்தது யாரென்று தெரியாமல் பதட்டம் கூடுகிறது. ஒவ்வொரு மகள் முகத்தையும், மகனையும் அழுவதைக் காட்டுவார்கள். இன்னும் செதத்து யாரென்பது தெரியாது. இதற்குமேல் பார்வையாளன் தாங்கமாட்டான் என்று ஒரு மகளை வாப்பா என்று கதறி அழவைப்பார். செத்தது வாப்பா என்றாள், பாத்மா எங்கே என்கிற கேள்வி எழுகிறபோது கடைசியாக பாத்மா அழுகிறக்காட்சி வரும். அவ்வளவு அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியம் உள்ளதாகவும், எதார்த்தமாகவும் நடைபெறும் நிகழ்வாக இருக்கும்.

பெண்களை இரண்டாந்தரமாக கொண்டுவரும் சூழல் மலினமாக நடைபெறுகிறபோது; முஸ்தபாவை இறக்கவைப்பது முக்கியமான கட்டமைப்பாகவும்; கதையின் சிக்கலை வலுவூட்டும் தன்மையாகவும் இயக்குநர் வைக்கிறார். இன்னொரு பக்கம் ஆணாதிக்கச்  செயலை வெளிப்படுத்துவதாகவும். மதவாத முக்கியஸ்த்தர்கள்கூட மறைமுகமாக இச்செயலுக்கு தூபமிடுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறார். மேலும், ஆணின் குடும்பத்திற்கு நன்றாகவரும் பெண் ஓய்வற்று உழைக்கிறாள், இடையில் நோய்வாய்ப் படுகிறபோது, (அவள் இறந்துவிட்டால்கூடப் பரவாயில்லை ஏதோ நியாயம் இருக்கலாம்) ஆண் சமூதாயம் மிகச்சுலபமாக அவளின் இயலாமையைக் காரணம் காட்டித் தனக்கு இன்னொரு துணையை தேடிக்கொள்கிறார்கள். இந்தக்கேடான நிலமையை உடைத்திருக்கிறார். இந்த மனசாட்சியற்ற செயலால் ஒரு அப்பாவிப்பெண்ணின் வாழ்வு எவ்வளவு சிக்கலைச் சந்திக்கவேண்டி இருக்கிறது, இவ்வளவு விஷயங்களை காட்சிப்படுத்தலில் குவித்திருக்கிறது.  

இப்படத்தில் உருகவைக்கும் பல காட்சிகளில் ஒன்று. முஸ்தபா இறந்துவிடுகிறார். ஆயிஷாவிற்கு குழந்தைப்பிறக்கிறது. பிறகான நாட்களில் முஸ்தபா மகன் ஆயிஷாவிடம் குறும்புடன் பேசுகிறான். உறவினர்களில் சிலருக்கு ஐயம் வருகிறது. குறிப்பாக சகோதரியே, சகோதரனையும், அம்மா ஸ்தானத்தில் இருக்கும் ஆயிஷாவையும் நோட்டம் இடுகிறாள்.  ஒரு கட்டத்தில் ஆயிஷாவிடம், சகோதரன் மிக நெருங்கி பேசுவதும். அதற்கு ஆயிஷா மௌனமாக சிரிப்பதும் அதிகமாகும்.  சகோதரி, சகோதரன் தனியாகப்போகிறபோது எச்சரிப்பாள். இதை ஆயிஷாவும் கவனிக்கிறாள்.

ஒரு இரவு ஆயிஷா மகன் ஸ்தானத்தில் இருக்கும் வாலிபன் அறைக்குச் செல்வாள். நீ அப்படி ஏதாவது அர்த்தத்தில் என்னுடன் பேசுகிறாயா? என்றளவில் பேச்சைத்தொடுப்பாள். அவன் மெல்லக் கதவை சாத்துவான். இவள் மெதுவாகப் பின்னிடுவாள். மாறாக அவன் அழத்தொடங்குவான். உன்னை கிராமத்தில் பார்த்ததிலிருந்தே அளவுக்கு அதிகமாக விரும்பினேன். ஏங்கினேன் என்கிற விதமாக அழுது சொல்வான். அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு அழுகையை அடக்கிக்கொள்ளமுடியாது. எவ்வளவு உன்னதமான அன்பு வைத்துக்கொண்டு ஒரேக்குடும்பத்தில் வாழ்ந்திருக்கிறோம் அழுதுபுலம்புவாள். கடைசியாக ஒரு பிரியமான குழந்தைக்கு தாய்த்தருகின்ற முத்தம்போல் உதடுகளில் மென்மையாக அந்த வாலிபனுக்கு முத்தமிட்டு வேகமாக வெளியேச்சென்றுவிடுவாள். இவைகைள் எல்லாம் வாழ்வை அணு அணுவாக உணர்ந்து வைக்கப்பட்டிருக்கிற அற்புத காட்சிகள். 

ஆயிஷா எல்லோரையும் அன்பொழுக நேசிக்கும் பக்குவமுடையவள். அதுவே சிலநேரம் சிக்கலைக் கொண்டுவருகிறது.  சிக்கல் சீக்க்கிரமே நடந்தும் விடுகிறது. ஆயிஷா பக்கத்தில், கடை ஒன்றில் வேலைக்குப் போகிறாள். அங்கு ஒரு வாலிபன் இயல்பாகவே அவளை நேசிக்கிறான். கடையில் ஒரு இடுக்கமான நிலையில் இருவரும் எதிரெதிராக நிற்கிறார்கள்.அதுவே சந்தர்ப்பமாகிறது. வாலிபன் அதை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறான். அவளின் அன்பான குணம் அதை அசட்டை செய்யமுடியவில்லை. அவளுக்கேக்கூட அது தேவையாய் இருக்கிறது. அங்கே உடல் இணைகிறது. அதன் பிறகு இயல்பாகவே ஆயிஷா சற்று சந்தோஷ மனநிலை அடைகிறாள். வீட்டிற்கு போனபோது இரவு நேரங்களில் பாத்மாவின் எதேச்சியான அறிவுரைகளினால் சற்று தடுமாறுகிறாள். 

ஒரு நாள் மீண்டும், அந்த வாலிபன் கடையில் ஆயிஷாவுடன் உறவிற்கு வருகிறான். முதல் முறை ஆயிஷாவிற்கு விருப்பமில்லை என்பதுபோல் ஜாடை செய்தால், விலகிவிடுவதுபோன்று இருந்த வாலிபன்.  இப்போது வேண்டாம் வேண்டாம் என்கிறாள். பொருட்படுத்தாமல் அவளை அனுபவிக்கும் வேகத்தைக் கூட்டுகின்றான். அன்று மதியம்தான் அந்தக்கடையில் ஆயிஷா குடும்பத்தார்,  பொருள் வாங்கிச்சென்றார்கள். அப்போது ஆயிஷாவும், அந்த வாலிபனும் நேருக்கு நேர் பார்வையில் படும்படியாக வேலையில் இருந்த்தைப் பார்த்து. பாத்மா வாலிபனிடம் ஆயிஷாவை பார்த்துக் கொள்ளும்படியாக சொல்லிவிட்டு சென்றிருந்தாள், பொருள் வாங்கிக்கொண்டு சென்றவர்கள். சற்று தொலைவில் சென்றதும் ஏதோ பொருள் மறந்துவிட்டதாக மீண்டும் வருகிறார்கள். இரவு நெருங்கிவிட்டது. கடை மூடும் நேரம். யாரையும் காணவில்லை. கடையின் இன்னொரு நபர் கடையைவிட்டு வெளியே போகின்றான். பொருள் விட்டுவிட்ட விஷயத்தைச் சொல்லி கேட்கிறார்கள். கடைநபர் ஆயிஷாவும் உள்தான் பொருள்கள் மூடிக்கொண்டுவருவார்கள் போய்ப்பாருங்கள் எனும் விதமாகச் சொல்லுகிறான். இவர்கள் கடையின் ஒவ்வொரு பகுதியாய் ஆட்களைத்தேடி வருகிறார்கள். ஒரு மூலையில் ஆயிஷாவும், வாலிபனும் அலங்கோலமாய்  பிடிபடுகிறார்கள்.

அந்தநேரம் ஆயிஷாவாக நடித்தவள் அற்புதமான அதிர்ச்சியை தன் நடிப்பில் மெருகேற்றுவாள், அந்தக்காட்சியில் மட்டுமல்ல. படம் முழுக்க அந்தச் சின்னப்பெண்ணின் அப்பாவியான முகம், இனிமையான குரல், முதிர்ந்த நடிப்பு இயல்பாக அமைந்திருக்கிறது. பெண்ணாக இருந்தாலும் எந்த பின்புலத்தையும் யோசிக்காமல், குடும்பத்திற்கு மாபெரும் தவறு இழைத்துவிட்டதுபோல் பாத்மா போட்டு நொறுக்கிவிடுவாள்.

இரண்டுநாள் கழித்து மீண்டும் பாத்மா அறைக்கு ஆயிஷா உணவு எடுத்துச்செல்வாள். என் வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்திக்கவைத்தது யார் என்கிறவிதமாக பேசுவாள். பழைய அன்பைத் தொடருவதாக பாத்மாவின் கரங்களைத்தழுவ எத்தனிப்பாள். பாத்மா கையை இழுத்துக்கொள்வாள். ஆயிஷா ஏமாற்றத்துடன் கண்ணாடிக்கதவைச் சாத்திக்கொண்டு வெளியே வருவாள். அறைக்குள் இருக்கிற உருவம் மெல்ல எழுந்து கண்ணாடிக்கதவை நெருங்கிவரும். மெல்ல கதவின் தாழ்பால் மீது கைவைக்கும். இதை மிக அழகாக கண்ணாடிவழியாகவே குளோஷப்பில் காட்டுவார். எப்படியும் ஆயிஷாவை ஆதரிப்பாள் என்ற புரிதலுடன் படம் நிறைவடைகிறது. 

மிக அற்புதமான படம்  KUMA  (இரண்டாம் மனைவி)

(குட்டிக்குறிப்பு: படம் சப்டைடல் இல்லாமல் பார்த்து எழுதியது) 

ஜேடி


Friday, June 14, 2013

கவிதை



      ஈனுதல் 

ரத்த நரம்புகள் ஓடும் இலையாய்
நீண்ட காதுகளைக்கொண்ட
வெண் முயல்.
குளித்து வாசம் பூசிய
ஆறுமாதக் குழந்தையாய்த் 
தூக்கி முத்தமிட்டுவிடலாம்.
வெடித்துப்  பறக்கும் பஞ்சை
தன் மேனிக்குள் சொருகியிருக்கிறது.

இன்று, 
முதல் பிரசவத்தைப் பிரசவிக்கத்
தன்னைத்தானே மருத்துவச்சியாய்
மாற்றி வருகிறது.
அறைக்குள்தான் கிடக்கிறது
சூரியன் தன் பாட்டுக்குப் போகிறது,
மாதங்கள், வாரங்கள், நாட்கள்
சுவர் கடிகார டங் சத்தம்
எதையுமே அறிந்திருக்கவில்லை.

ஆனாலும், 
மறுநாள் அதிகாலைப் பிரசவம்
விரசமில்லாத பால் காம்புகள்  
கண்மூடிக்கிடக்கும் குழந்தைகளுக்கு
வயிற்றுப்பகுதித் தெளிவாய்த் தெரிய
தன் பஞ்சு மயிர்களைச்
சுத்தமாய் வழித்த பிறகு 
எல்லையில்லா நோவுகளைச் 
சத்தமில்லாமல் கடந்து
ஈன்றுவிடுகிறது.
இத்தனைக்கும்,
தாயைக்காக்கச் சக்த்தியற்ற  
பிள்ளைகளை.

தாயே
உன் அன்பு பெரியதடி.

ஜேடி


Monday, June 10, 2013

கவிதை,



எனதருமை நாஸ்தென்கா

முந்தய வெண்ணிற இரவில்
உன் தோளைத்தொட முயன்ற
காமக்கிழவனின்  
கிளர்ந்த கரத்தைத் தடுத்து
துரத்தியபின், 
மனதிற்குள் வணங்குகிறேன்
அக்கிழ கரங்களை.
இல்லையானால், 
துணையற்று
நாள்தோறும் கமழ்ந்தழும் 
என் இதயத்தில்
மென்சூடுக் கிளம்பி
உன் பிஞ்சு விரலின்  
ரத்தஓட்டப் பாய்ச்சலை நுகர்ந்திருக்குமா?

வெண் நிலவின் ஓரத்தில் பாயும் மேகங்கள் 
கணப்பொழுதில் மஞ்சள்தழுவி,
கடல் நீரின் மினு மினுப்பை அணியும்போது
கரையோர பெஞ்சில் அமர்ந்தவாறே,
அவன் ஏமாற்றுக்காரன்
உன் கரத்தைக்கொடு என்றாயே!
எனதருமை நாஸ்தென்கா.

நான்காம் இரவு
நல் ஜாமம் தொடங்கும் முன்
இன்பமேயற்ற கடந்த காலத்தைப்போல்
கொடியதாக்கினாயே எதிர்காலத்தையும்.
இருந்தபோதிலும்,
என் இருப்புகளிலெல்லாம் 
அக்கரையோர பெஞ்சில்
உனக்கும் எனக்குமான
உரையாடலின் ஓசைக்கேட்டுக்கொண்டே,
எங்கோ இருக்கின்றேன்
எதற்காகவோ இருக்கின்றேன்
எப்படியோ இருக்கின்றேன்
ஏனோ இருக்கின்றேன்
எப்போதும் இறக்காமலே இருக்கின்றேன்
எனதருமை நாஸ்தென்கா.

ஜேடி