எனதருமை நாஸ்தென்கா
முந்தய வெண்ணிற இரவில்
உன் தோளைத்தொட முயன்ற
காமக்கிழவனின்
கிளர்ந்த கரத்தைத் தடுத்து
துரத்தியபின்,
மனதிற்குள் வணங்குகிறேன்
அக்கிழ கரங்களை.
இல்லையானால்,
துணையற்று
நாள்தோறும் கமழ்ந்தழும்
என் இதயத்தில்
மென்சூடுக் கிளம்பி
உன் பிஞ்சு விரலின்
ரத்தஓட்டப் பாய்ச்சலை நுகர்ந்திருக்குமா?
வெண் நிலவின் ஓரத்தில் பாயும் மேகங்கள்
கணப்பொழுதில் மஞ்சள்தழுவி,
கடல் நீரின் மினு மினுப்பை அணியும்போது
கரையோர பெஞ்சில் அமர்ந்தவாறே,
அவன் ஏமாற்றுக்காரன்
உன் கரத்தைக்கொடு என்றாயே!
எனதருமை நாஸ்தென்கா.
நான்காம் இரவு
நல் ஜாமம் தொடங்கும் முன்
இன்பமேயற்ற கடந்த காலத்தைப்போல்
கொடியதாக்கினாயே எதிர்காலத்தையும்.
இருந்தபோதிலும்,
என் இருப்புகளிலெல்லாம்
அக்கரையோர பெஞ்சில்
உனக்கும் எனக்குமான
உரையாடலின் ஓசைக்கேட்டுக்கொண்டே,
எங்கோ இருக்கின்றேன்
எதற்காகவோ இருக்கின்றேன்
எப்படியோ இருக்கின்றேன்
ஏனோ இருக்கின்றேன்
எப்போதும் இறக்காமலே இருக்கின்றேன்
எனதருமை நாஸ்தென்கா.
ஜேடி
No comments:
Post a Comment