Monday, July 22, 2013

சினிமா,

மரியான்

கடல் சார்ந்த பகுதியின் சராசரி வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார்கள். இளமையான ஆண், பெண் காதல் மையம் என்றாலும் அதுமட்டுமே கதையல்ல. எல்லை கடந்த பிரச்சனை, உலகலாவிய இயக்கங்களின் தேசப்பற்றினைத் தொட்டுச்செல்வது, மதம் சார்ந்த விஷயங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதது. விளைநிலங்கள் பொய்த்துப்போவதுபோல் இயற்கைச் சீற்றங்களால் கடலை நம்பி வாழ்வோரின் வாழ்வாதாரப் பிரச்சனை இவைகளை உள்ளடக்கிய ஒரு படம்தான் மரியான்.

ஒவ்வொரு கிராமங்களில் தேடினாலும் இப்படி ஏதாவது ஒரு காதல் ஜோடிக் கட்டாயம் இருக்கும். இவர்கள் இவ்வளவு அய்க்கியமாக இருக்க பெரிய கற்பிதங்கள் எல்லாம் இருக்கத் தேவையில்லை. ஒரு உறவுசார்ந்தோ அல்லது அக்கிராமத்தில் இளைஞர்களின் (ஆண், பெண்) தனித்தன்மை சார்ந்தோ ஒருவர் விருப்பம் இல்லாமல்கூட, இன்னொருவர் காதல் வயப்பட்டு எதிர்பாலர்மீது ஆதீதமான அன்பு வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் பனிமலர், (பார்வதி) மரியான் மீது அன்புவைத்திருக்கிறாள். அப்படி அன்புவைக்க சரியான பின்புலம் இல்லை என்றெல்லாம் நாம் சொல்லமுடியாது. நம்ப முடியாத அளவிற்கு வீரவசனம் பல்டி, குட்டி கரணம் போடும் காதல் என்று எங்கும் இல்லை.

பார்வதி, மரியானை சற்று அதிகப்படியாக நேசிக்கிறாள். மரியானுக்கு (தனுஷ்) இயல்பாகவே ஒரு சோகம் படர்ந்திருக்கிறது. ஏன் அப்படி இருக்கவேண்டும் என்றகேள்வி எழலாம். உண்மையிலேயே அந்தப்பாத்திரம் அப்படி இருக்க நிறைய சாத்தியம் இருக்கிறது. அவன் சிறுவயதிலேயே தந்தையை இழந்திருக்கிறான். தன் தாய் இளம்வயதிலேயே விதவையாக இருக்கிறாள். இவன் முற்றிலும் ஊதாரி கிடையாது. பொறுப்பாக வேலை செய்கிறவன். சற்று சிந்தனை உள்ளவன் இப்படி இருக்கிறவன் நிச்சயம் வாழ்வை ஒரு மேலோட்டமான ஒன்று, என்று நினைத்து சிலதோடு ஒன்றிப்போகாமல் வெறுமையை நம்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த நிலையில்தான் அப்பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பாத்திரத்தை தனுஷ் சிறப்பாகவேச் செய்திருக்கிறார்.

ஒப்பனை அலங்காரம் சிறப்பாக அமைந்திருக்கிறது குறிப்பாக ஆப்ரிக்கநாட்டில் வேலை செய்கிறமுதல் காட்சியில் தனுசின் மீசை முதற்கொண்டு சொல்லலாம் சாதாரன மனிதனுக்கு குச்சி குச்சியாய் நீட்டி வைப்பதுவரை அவ்வளவு இயல்பாக அமைத்திருப்பார்கள். கிராமத்தில் சில பொறுப்புள்ள வாலிபர்கள் அடுத்த நாள் பிழைப்பு எப்படி போகுமோ என்ற நிலையில் தங்கள் வாழ்வை கடத்துவதால் பெரும்பாலானவர்கள் தங்களைச் சுற்றிச் சந்தோஷங்கள் தேடிவந்தாலும் அதை உணராமலே வாழ்வைக் கடத்திவிடுவார்கள். அப்படித்தான் தனுசுக்கும் நேர்ந்துவிடுகிறது. தன்னை ஒரு அழகான பெண் சுற்றிவந்தபோதும் அவள் மீது பெரிய ஈர்ப்பு இல்லை. ஆனால், அதே நபர்கள் யாராவது பேசும்போதோ, அல்லது காட்சியாக எதையாவது பார்ப்பதாலோதான், தமக்கு இவ்வளவு நாள் இது தெரியாமலே போச்சே என்றளவில் செயலில் இறங்குவார்கள்.

அப்படித்தான் கடலில் மீன் பிடிக்கச்செல்லும்போது, பனிமலர் தந்தை மரியான் வாழ்க்கையில சாதிக்க நினைக்கிறவனுக்கு பொம்பளக் காற்று பட்டுகினே இருக்கணும்டா, என்பதுபோல சொல்லுவார். அவனுக்கு அந்த இடம் ஷாக் ட்ரீட்மெண்ட்போலதான். தனுசுக்கு காதல் தொடங்குகிறது.

பாவம் வட்டி கொடுக்கிறவன்தான் கொஞ்சம் ஓவர் அசிங்கமாக ஒப்பனை செய்திருக்கிறார்கள். அது வேண்டுமென்றே செய்ததாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கந்து வட்டிகொடுக்கிறவர்கள் தோற்றம் அழகாக இருக்கலாம். ஆனால், அவர்கள் இதயம் அசிங்கமானதற்கு ஒப்பாகும். இதை வெளிப்படுத்தான் இந்தப்படத்திலேயே ஒரு அசிங்கமான ஒப்பனையை வில்லத்தனத்திற்கு கொடுத்தார்களோ என்று யோசிக்கவைக்கிறது.
பார்வதி தான் அதிகமாக விரும்புகிற ஒருவன், ஆபத்தான நிலையில் கடலுக்குள் போயிருக்கிறான் என்று சொல்லும்போது அவளின் முகம் காட்டும் அதிர்ச்சி சிறப்பான நடிப்பு படம் முழக்க பார்வதி மிக அற்புமதமாக நடித்திருக்கின்றார்.

ஏற்கனவே மரியான் அம்மா அடிக்கடி வெளிநாடு போகச்சொல்லியிருப்பாள். அப்போதெல்லாம் மகன் ஏதோகாரணம் சொல்லித் தவிர்ப்பான். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. உதாரணமாக அம்மாவைத் தனிமையாக விட்டுச் செல்ல முடியாத நிலமை, போதிய வருமானம் இருந்தால் மகனுக்கு சீக்கிரம் துணையின், வழியைக் காட்டிவிடலாமே என்ற எண்ணம் தாய்க்கு. இந்த நிலமையைப் பார்வையாளனால் ஊகிக்க முடிகிறது. ஆனால் படத்தில் இதை வெளிப்படுத்தாமல் உணர்த்தும் உத்தியைக் கையாண்டிருப்பது சிறப்பு.

ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகமாகும் போது தவிர்க்க முடியாமல் வெளிநாட்டுக்குப் போகிறான். (வெளிநாடு சென்றவர்கள் இரண்டு வருஷம்னா, சொன்னபடி சரியாக இரண்டு வருஷத்தில் திரும்பிவிடுவது எதார்த்தத்தில் சரியாக அமைகிறதா தெரியவில்லை.) பணியை முடித்துத் திரும்பும்போது தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். ஆப்ரிக்கவில்லன்கள் அதிவேகமாக சர் சர் என்று வருவதும் போவதும் தவிர்த்து மிக இயல்பானப் போக்கைக் கையாண்டு இருக்கிறார்கள். பசியின் கொடுமையில் கடந்த காலத்தை நினைத்து மீன் சாப்பிடும் கற்பனை நிகழ்வுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்திருக்கவேண்டும். கடத்தல் இடத்தில் தனுஷ் கத்தி “என்னடா வேணும் நீங்களும் ஏழை. நாங்களும் ஏழை“ என்று ஆவேசமாக பேசிவிட்டு கடல் ராசா நான் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு பாடல் சோகத்திற்கும், சந்தோஷத்திற்கும் கச்சிதமாக ஒரே நேரத்தில் ஈடுகொடுத்திருப்பது சிறப்பு. இன்னொரு இடம் தீவிரவாதிகள் கம்பெனிக்கு போன்போடச் சொன்னபோது, தனுஷ் பார்வதிக்கு போன்போட்டு பேசும் நிகழ்வு மிக உருக்கமானது, இருவரும் அந்தத் தருணத்தை அற்புதமாக உள்வாங்கி, போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். தனுஷ் உதடுகள் காய்ந்துபோய் வரி வரியான வெடிப்புகளுடன் கீழ் உதட்டை மடித்து பேசாமல் வார்த்தைகளை உள்ளார்ந்த வலியுடன் பேசுவது நெஞ்சில் ஈரமுள்ள யாரும் போற்ற வேண்டியத் தருணம்.
ஒரு வழியாக தனுஷ் தப்பித்து கிளம்புகிறபோது, பார்வதி தன் அப்பாவிடம் சொல்லுகிற விதம் உயிரோட்டம் உள்ளது. தனுஷ் கிளம்புகிற பிம்பத்தை தரிசிப்பாள். இது ஏதோபார்வையாளரை ஏமாற்றும் வித்தையல்லை. சில நேரங்களில் ஆத்மார்த்மாய் நேசிப்பவர்கள் இப்படியான தரிசன தருணங்களை சொல்லுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதைவிட முக்கியம் இப்படத்தில் அந்தக் காட்சியமைப்பு அவ்வளவு அருமையாக ஒன்றியிருக்கும்.

வாழ்வில் எதையுமே அனுபவிக்காத ஒருவன் தான் விரும்பிய வாழ்வு கைக்கெட்டி வரும்போது, கண்களைச்சுற்றி ஒன்றுமே இல்லாத நிலை மிகவும் வேதனையானது. அந்த பாலைவனங்களைக் கடக்கிறபோது நெஞ்சே எழு பாடல் மயில் இறகாய் மனதைத்தடவி விடுகிறது. பாடலின் இடையிடையில் பார்வதி வருவது ஒன்றும் குறையாகத் தெரியவில்லை. ஏனென்றால், பார்வதி தேவதையாய் புடவையை படரவிட்டு குறுக்கும் நெடுக்கும் வந்தாலும், திக்குத்தெரியாமல் அலையும் தனுஷின் முகத்தில் எந்த சந்தோஷமும் வருவதில்லை அதுதான் முக்கியம். ஒருவேளை சற்று பிசகி தன் முகபிம்பத்தை மாற்றி சந்தோஷ பிம்பத்திற்கு மாற்றியிருந்தாலோ மொத்த படமும் நம்பும்படியாக அமைந்திருக்காது. பல இடங்களில் பரத்பாலா மிக நுணுக்காமாக கையாண்டு இருக்கிறார். அதாவது அந்த இடம், உள் மனம் தன் காதலியின் பிம்பத்தைத் தரிசித்தாலும், நிஜத்தில் அவன் இன்னும் ஒரு விடிவைக் கண்டடையவில்லை. அதிகமான மன உளைச்சளின் சாயலிலே இருக்கிறான், ஆக, அப்பாடலின் இடையில் பார்வதி வருவது என்பது எனக்கு சரியாகவேப்படுகிறது. ஒரு வழியாக ஆத்தாவை (கடலை) கண்டபிறகு, பார்வதியை அடைகிறான்.
ஒட்டு மொத்தமாக பார்க்கிறபோது மரியான் சோடை போன படமல்ல இது ஒரு நேர்த்தியான படம்தான். இதற்கு முதன்மையான சாட்சி வெகுஜனமக்கள் அநேகமாக இதைக் கொண்டாடவில்லை என்றே நினைக்கிறேன். வெகுஜனமக்கள் கொண்டாடுகிற சிங்கம் போன்ற படங்களை, மாற்று சிந்தனைக்குறிய சினிமாவை விரும்புகிறவர்கள் கொண்டாடுவதில்லை. வெகுஜனமக்கள் கொண்டாடாததை, நாம் கொண்டாடியே ஆகவேண்டும். இரண்டையும் நாம் ஒரே தட்டில் வைப்பது சரியல்ல.

மரியானில் குறைபாடுள்ள இடங்களாக நான் கருதுவது. தனுஷ் வெளிநாட்டுக்கு போகிற சந்தர்ப்பம் என்பது பெரும் பாதிப்புகளுக்கு இடையில் நடப்பதாக இல்லை. இரண்டு வருஷம் தானே, சாதாரனமாக போய்விடும் என்ற தொனியில் காதலர்கள் இருவரும் பேசிக்கொள்வார்கள். பிறகு தனுஷ் விடைபெற்று கிளம்புகிறான். பார்வதி அதே இடத்தில் நின்று உயிர் போகக் கத்தி அழைப்பார். இது சற்றும் பொறுத்தமற்றதாக இருக்கிறது. இன்னொரு இடத்தில் அப்புகுட்டி இறந்து கிடக்கும்போது கிராம மக்கள் எல்லாம் கதறி அழுவார்கள் ஆனால், தனுஷ் அந்த இடத்தில் சரியாகச் செய்யவில்லை. அல்லது, அது சிரியாக வராத நிலையில், இயக்குநர் தனுஷையே சற்று நேரம் தொடர்ச்சியாக காட்டியிருக்கக்கூடாது.

ஆப்ரிக்கவில்லன்களிடம் இருந்து தனுஷ் தப்பித்துவந்தார் என்பதோடு நிறுத்தியிருக்கலாம் தேவையில்லாமல் ஆப்ரிக்க இளைஞனை கடலுக்குள் இழுத்து கொலைசெய்தது, நம் கதாநாயகன்களுக்கு மதிப்பு உடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே வைக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது. மேலும் அது படத்திற்கு எந்தக் கூடுதல் சக்தியையும் கொடுக்கவில்லை.

இவ்வளவு அற்புதமாக நடித்துள்ள, நயன்தராவின் சாயலாக உள்ள இந்தப் பார்வதி யார் என்று தேடியபோது சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். ‘பூ‘ படத்தின் கதாநாயகி அவ்வளவாக அறியப்படவில்லை என்ற நிலையிலும், சிலர் நான்கு வருஷங்களாக நீங்கள் படங்கள் ஏதும் நடிக்கவில்லையே என்று கேள்வி கேட்டபோது. மிக தைரியமாக “உண்மையில் சொல்லப்போனால் நான்கு வருஷங்களும் நிறையபடங்கள் என்னைத் தேடிவந்தது. ஆனால், எல்லாமே குப்பைப் படங்கள்“ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

ஒரு நடிகை தற்கால படங்களை குப்பைப்படங்கள் என்று நிராகரித்து இப்படத்தைதேர்வு செய்து நடித்திருக்கிறார் என்றாள், இது போன்ற கலைஞர்களைப் பாராட்டாமல் நாம் மாற்று சினிமாவை கட்டமைக்க முடியாது.

வசனம்கூட ஒன்றும் தரம்குறைந்ததில்லை, சுருக்கமாகவும் இயல்பாகவும் இருக்கின்றது. இரண்டு, மூன்று பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றது, நிறைய படைப்பாளிகள் பங்கு கொண்டு படைத்துள்ள மரியான். என் மனதில் மரியாமல் இருக்கின்றது.

ஜேடி

No comments: