Wednesday, November 17, 2010

சிறுகதை




                                                         தெருஓரம்

போக்குவரத்து காவல் நிலையத்தின் பூட்டிய கேட்டுக்கு வெளியே இரண்டாவது படியில் உட்கார்ந்திருந்தாள். முதல் படியில் கால்களை நீட்டிக்கொண்டு இடது முழங்கையில் அழுக்கை தேய்த்துக்கொண்டிருந்தாள். அழுக்குச்சுருள் பிசைந்து உருட்டிய மாவின் குட்டிகளாக கிழேவிழுந்தது.  அவளை நேரில் பார்த்தால் நீங்களும் அந்த முடிவுக்குத்தான் வருவீர்கள் கொஞ்ச நாளுக்கு முன்வரை இப்படியான அழுக்கை பார்த்திருக்க மாட்டாள் என்று.  உறுதிசெய்ய முடியாத கணிப்பில் எடுத்துக்கொண்டால் கூட ஓரளவு  வசதி வாய்ப்பு இருக்கிறவளாகத்தான் இருந்திருப்பாள். சூரியன் வீசும் தீட்சனையை கூட்டி குறைக்கும் தன்மைகொண்டதா? இன்று மண்ணே ஈரமில்லாமல் சுண்டிவிடுகிற அளவுக்கு காய்கிறது. அவள் தாங்கமுடியாத எரிச்சலளால் உடலையும் தலையையும் அடிக்கடி சொறிந்துக் கொண்டிருந்தாள்.


அவன் கைபேசியின் கட்டளைக்கு கட்டுப்பட்டவனாகவே வந்தான். சமூகம் தூசி என்று புறம் தள்ளிவிடுகின்றவைகள் அவன் கண்களில் இயல்பாகவே ஒட்டிக்கொள்கிறது. தற்செயலாகத்தான் அவளை பார்த்தான். அவள் முழங்கயில் இன்னும் அழுக்கு தேய்துக்கொண்டிருந்தாள். அவனை பார்த்ததும் நிறுத்திவிட்டாள். அந்த நிலையிலும் அவளுக்கு தன் சுய கவுரவத்தில் உறுதியாயிருக்கிற எண்ணம் இருந்தது. அவன் கவனிக்காதவன் போல் அவளை பார்த்தான். அதேநேரத்தில் அவளும் பார்த்துவிட்டாள். அவள் பார்வை 'ஒருத்தியையும் மிச்சம் வைக்கமட்டானுங்க  இந்த ஆம்பளைங்க என்று கேட்பதுபோல்' இருந்தது. நல்ல அழகுதான். நல்ல கலருங்கூட. அனால் திருஷ்டி பொட்டு வைத்ததுபோல் இடது கண் பூ பட்டு  வெள்ளையாயிருந்தது. மொட்டை அடித்த தலையில் மீண்டும் கைக்கு பிடிபடாத அளவு மயிர் வளர்ந்திருந்தது. மேல் துப்பட்டா இல்லாமல் சுடிதார் போட்டிருந்தாள். அழுக்கு என்று சொல்ல முடியாதபடி அவள் டிரஸின் டிசைன்  இருந்தது. ஏறக்குறைய  அய்ந்தடி உயரம்  எட்டுகின்றவள். எண்ணில் எழுதுகின்ற கால்மணி நேரம் தான் அவள் வயதாக இருக்கும். அவள் முக அமைப்புக்கு மார்பின் சதைகள் மற்றவர்களை ஈர்க்கும்படியாகவே இருக்கவேண்டும்,  ஏனோ அப்படி இல்லாமல் இருந்து.  செருப்பில்லாமல் நடக்க முடியவில்லை போல எதோ கண்ணில் கிடைத்ததை காலுக்கு போட்டிருந்தாள். அதில் ஒன்று மூளியாகவும்  ஒன்று ஆணின் செருப்பாகவும் இருந்தது.

யாரை நொந்து கொள்வது. ஏன் இப்படி வாழ்வு எதிர்பாராமல் சரிந்துவிடுகிறது? கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டிருக்கிற  பூமியின் கால்களை உடைத்து இதற்கு தீர்வு சொல்லி விட்டு போ என்று கேட்கவேண்டும் போலிருக்கிறது.   ஒரு வேளை அவன்  அந்த கேள்வியை யாரிடமாவது  கேட்டால் எந்த சங்கடமும் இல்லாமல் அவளோடு  வழியனுப்பிவைக்கும் இந்த சமூகம். அவள் எழுந்து எதையோ நோட்டமிட்டாள். பார்வை தரையை சுற்றியது. பக்கத்தில் ரோஜாச் செடிகளை விற்கிறவர்கள் தொட்டிகளிலும் பிளாஸ்டிக் பாக்கட்டுகளிலும் வரிசையாக ரோஜாக்களை அடுக்கியிருந் தார்கள். ஒரு சிலச்செடியிலிருந்து வசீகரம் இல்லாத ரோஜாக்களும் வீரியம் இல்லாத மொட்டுகளும் யாராலும் பரிக்கப்படாமல் பரிதாமாக இருந்தது. மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைகளுக்கு கூட இதுதான் நிலையோ?  செடிகளை ஒட்டி இரண்டு மூன்று பிளாஷ்டிக் குடத்தில் தண்ணிர் இருந்தது. செடியை விற்பனைச் செய்கிறவர்கள் சற்றுத் தள்ளி கணவனும் மனைவியும் நிழலில் உட்கார்ந்திருந்தனர்.

அவள் கிழே கிடந்த பிளாஷ்டிக்  'டீ' டம்ளரை எடுத்துக் கொண்டு  சற்று மெதுவாக போவதும் வருவதுமாக இருந்தாள். செடிகளுக்கு உரிமை கொண்ட பெண் இவளைப் பார்த்து  தன் கணவனிடம்  பரிதாபமாக  ஏதோ சொன்னாள்.   

இவள் தண்ணிர் குடத்தை பார்க்கிறாள். அவர்களையும் பார்க்கிறாள். குடத்தை நோக்கி சற்று கிட்டத்தில் போகிறாள். செடியாளர்களைப் பார்த்து திரும்பி விடுகிறாள். பூந்தொட்டி விற்கிறவள் தண்ணிருக்குத்தான் வருகிறாள் என்பதை ஊகித்துவிட்டு அமைதியாய் இருகிறாள். இவள் குடத்தையும் அவர்களையும் மாறி மாறிப் பார்த்து வேகமாகச்சென்று  'டீ' டம்ளரில் மொண்டு வாயில் ஊற்றிக்கொண்டாள். உரிமையாளர்களை பார்க்கிறாள். மெதுவாக நடந்து சென்று இன்னொரு முறை முயற்சி செய்தாள்.  இப்போது சற்று தள்ளி வந்து மீண்டும்   உற்றிக்கொண்டாள்.    ஓட்டையில் ஒழுகியது போக ஒரு வாய் தண்ணிர் முழுமையாக விழுங்கவில்லை. குடத்து தண்ணிர் செடிகளுக்காக நகராட்சி கழிவறையில் இருந்து கொண்டு வந்திருந்தார்கள். குடத்தில் தூசிகள் மேலேமிதந்திருந்தது. இன்னும் தாகம் அடங்கவில்லை போல பார்வை குடத்தின் மீதே இருந்தது. என்ன நினைத்தாளோ சடாரென்று பிளாஷ்டிக் டம்ளரை கீழே போட்டு நடந்தாள். எதற்காகவும் எப்போதும்  நகரத்தின் இயக்கம் நிற்கவில்லை. மனிதனின் துக்கத்தை, அலுவலகத்தின் இழுத்தடிப்புகளை, வியாபாரத்தின் ஏமாற்று வேலைகளை  அதிகாரிகளின் ஆணவத்தன் மைவாய்ந்த அடக்குமுறைகளை கண்டுகொள்ளாமல் அதன் போக்கில் மென்மையான காற்றைப்போல்  இயங்கிக்கொண்டு இருந்தது. அவள் அவைகளை மேலோட்டமாக  சுற்றிப்பார்த்துவிட்டு  சிரித்துக்கொண்டே போகிறாள். அவன் அவள் போகிற பக்கமாகவே போகிறான். அவளை தொடர்ந்து கவனித்துக்கொண்டே நடந்தான். 

அவள் சாலையோரமாகவே  நடக்கிறாள். வாழ்ந்து திருப்தியானவர்கள் வீசி எறிந்த பொருட்களையே இவள் கண்கள் தேடுகின்றன. சாலையில் நசுங்கிக் கிடந்த வாட்டர் கேனை எடுத்துத் திறக்கிறாள். யோசிக்கவே இல்லை. மூடியைத்திறந்து வாயில் ஊற்றிக்கொள்கிறாள். கேனில் சுற்றியிருந்த லேபிலை பிரித்து போட்டு நடக்கிறாள். போட்டிருந்த செருப்பு  இவள் சின்ன காலுக்கு வெளியே கிடந்தது. இவள் தாங்கித் தாங்கி நடக்கும் போது செருப்புகள் இடித்துக்கொள்கிறது. தீர்ப்புகளை பொருட்படுத்தாது சீமாட்டி தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு முகப்பிலேயே நிற்கிறாள். அவளைக் கடந்து காலி பிளாட் ஓரமாக நடக்கிறாள்.

நான்கு சக்கர தள்ளு வண்டியின் கண்ணாடி தடுப்பில் மூட்டையாக பேல் பூரி, பொரி, சம்ஷா விபாரம் நடந்தது. நான்கு அய்ந்து வாலிபர்கள் சின்ன தட்டு நிறைய வாங்கி சப்பிடுகிறார்கள். நடந்தவள் கடையைப் பார்த்து கிட்டச்சென்று அமைதியாக நின்றாள். கடைக்காரன் பார்த்தான். வாலிபர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவள் வெகு நேரம் கடையே வெறித்து  பார்த்திருந்தாள். 

கண்காணித்தவன்  சற்று தூரத்தில் நின்று அவளையும், பேல் கடையையும் அடிக்கடிப் பார்த்தான். இவன் அந்த பெண்ணை பார்ப்பதை பேல் கடைக்காரன் பார்த்தான். இவனுக்கு தர்மசங்கடமாய் இருந்தது. திடீரென மீண்டும் செல்போனை எடுத்து பெசுவதுபோல் இருந்தான். வேகமாக வாகனங்கள் போய்க்கொண்டிருந்தது. நடுவயதை கடந்தவர் சடாரென்று "டே...டே.... யோ... ஸ்டாப்...ஸ்டாப்" சத்தமாக கத்திக்கொண்டு சாலையைக்  கடந்தது. சிரிப்பை ஏற்படுத்தும் படியாக இருந்தது. அவன் சிரித்துவிட்டான். கடையையே பார்த்திருந்தவள் அந்த சத்தத்தை கேட்டதும் கடைக்காரன் பார்த்து விடாதபடி திரும்பி சிரித்தாள் மீண்டும் கடைப்பக்கம் திரும்பி இயல்பாய் இருந்தாள். கடைக்காரன் மும்முரமாக விபாரம் பார்த்தான். வாலிபர்கள் சாப்பிட்டு  கைகழுவினார்கள். எச்சில் தண்ணிர் தெரித்து. சிறுதுளிகல் அவள் கால்களை நனைத்தது.  அவள், மேல் பல்வரிசை சீராகத் தெரியும்படி நேரடியாகவே சிரித்து விட்டுப்போனாள். அவள் அமைதியாகவே தரையை தேடிக்கொண்டு போனாள்.


பிச்சை எடுப்பவர்கள் வேண்டுமென்றே இரண்டு, முன்றுபேர் நின்று பேசிக் கொண்டிருக்கும் போதும்  இல்லை, தனியாய் இருக்கும் போதும் அதிகமாய் நச்சரிப்பார்கள். இயல்பில்லாமல் தங்கள் முகபாவங்களை முறுக்கி, கோணலாக்குவார்கள். கொடுத்துவிட்டபிறகு அடுத்த நொடியே எந்த பிரிதிபளிப்பும் இல்லாமல் விலகிவிடுவார்கள். இவர்கள் தேர்ந்த தொழில் முறையை கற்றுக்கொண்ட பிச்சைக்காரர்கள். சிலர் யார் கொடுக்கிற முகம் என்று தேடி அவர்கள் கிட்டத்தில் சென்று சற்று தயங்கித் தயங்கி நின்று சத்தமில்லாமல் கேட்பார்கள். கொடுத்தபிறகு சற்று நின்று வணக்கம் செலுத்திவிட்டு போவார்கள். இவர்கள் புதிதாய் பிச்சை எடுக்க பழகுபவர்கள். சிலர் பெற்றுக்கொண்டு நன்றாக இருக்கனும் என்று மனசு நிறைஞ்சி வாழ்த்துவார்கள்.  இவர்கள் எதேச்சியாய் கேட்பவர்கள்.  அவன் இப்படித்தான் பிச்சைக்காரர்களைப் பற்றி தன் மனதில் மதிப்பீடு செய்துவைத்திருந்தான். 

அதையும் கடந்து ஒரு நாள் சின்ன பையன் வயிற்றை தடவிகாட்டி கடைகாரன் காலைதொட்டு கடை கடையாய் கேட்டான். எல்லோரும் துரத்தினார்கள். அவன் மனிதர்கள் இவ்வளவு கல் நெஞ்ஜம் படைத்தவர்களா என்று பையன் பின்னாகவே   நடந்து பையனை நிறுத்தி  ஏன் படிக்கவில்லை ?  குடும்பம் எங்க? அப்பா அம்மா உறவு இல்லலையா? இலவசமான புத்திமதி! சொல்ல.  பையன் பக்கத்து தெரு தான், அம்மா அப்பா தொரத்திட்டாங்க என்றதும், அவன் அமைதியானான்.  பையன், அவன் கை பாக்கட்டுக்கு போகிறதா  என்பதையே கவனித்தான்.  தக்காளி சாதம் வங்கிக்கொடுத்து கையில் அய்ந்து ரூபாய்   கொடுத்தான்.  ஸ்டைலாக வாங்கிக்கொண்டவன் சற்று தூரம் சென்று தன் கால்சட்டை  பாக்கட்டிலிருந்து பான் பராக் எடுத்து வாயில்  கொட்டிக்கொண்டு போனான்.'ஏமாற்றுபவர்கள் எதிராளியைத்தான் முட்டாளாக்குவார்கள் போல' அவளைப்பார்த்த போதுதான் ஒரு செயல் பாட்டை பல பரிமானங்களில் தங்கள் தேவைக்கேற்ப செயல் படுத்தப்படுத்திக்கொள்ள முடியும் என்பது விளங்கியது. நாம் ஏன் அவள் பின்னாக சென்று கண்காணிக்கவேண்டும் என்று தன்னை கேட்டுக்கொண்டான். அவனே உலகின் எல்லா செயல்பாட்டையும் காரணம்  தெரிந்தா  செய்கிறோம் என்று தன்னை தேற்றிக்கொண்டு சென்றான் . அவள் நடந்தாள். நாம் கூட்டிக்கொண்டு போய்விடலாமா? உறவுகள் அவ்வளவு சுலபமாய் கிடைத்துவிடுமா?  தெருவில் அலைந்து திறிகின்ற நாய்குட்டியாகதானே   இவளும் சுற்றிக்கொண்டு கிடக்கிறாள்.   மஞ்சல் ஆறு சாதி, மதத்தை, மனித அவலங்களை சிக்கலில்லாமல் சமப்படுத்திக் கொண்டு சென்று கொண்டிருந்தது.


அவள் பேக்கிரி எதிரில் நின்றாள். வாசலுக்கு வெளியே எதோ குப்பை க்கொட்டி இருந்தார்கள். ஆனால் குப்பை இல்லை  அது பிஸ்கட் தூளைப்போலவும்  கலந்திருந்தது.  எதையோ கிளறினாள் அதில் ஒன்றும் கிடைக்கவில்லை .பக்கத்தில் மிரண்டா பாட்டில் காளியாக இருந்தது . அதில் கிடந்த சிறு துளிகளுக்காக அவசரமாய் எடுத்தாள். திறந்து அவசரமாய் சாய்த்தாள். ஒரே சொட்டு உருண்டு வாயில் விழுந்தது. மீண்டும்  கடையைப்பார்த்தாள். பணத்தை நீட்டுகிறவர்கள் கைக்குத்தான் பொருட்கள் கைமாறுகின்றன. அவள் ஞானியைப்போல் சிரித்து விட்டு நடந்தாள். காளத்தி சைவ உணவகம் எதிரில் கழிவுநீர் மேடையில் தியானம் செய்பவள் போல் உட்கார்ந்தாள். ஸ்தம்பித்து போன வாகன நெரிசலை முதுகில் சுமக்கும் சாலை மிரண்டுபோனது. அவள் இதுவரை யாரிடத்தில் எதுவும் கேட்கவில்லை .அவன் அவளைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அவள்  உண்மையான கைவிடப்பட்டவள்தான். ஏதாவது கைமாறு செய்துவிட்டு கிளம்ப நினைத்தான். பக்கதில் கடை ஏதும் இல்லை அவளை கடந்து போகவேண்டும், கவனிப்பாளோ?  மனிதர்களில் நல்லவர்கள்  யாருமே இல்லை என்ற முடிவில்தான் அவள் இருப்பாள். ஆயிரம் பேர் போகிறார்கள் வருகிறார்கள் அவனுக்கு மட்டும் தான் அவளை கடக்கும்போது  குற்ற உணர்வு. அதுவும் அல்லாமல் ஏதாவது வாங்கி வருவதற்குள் வேறு எங்காவது போய் விடுவாளோ? வேகமாக போனான். சற்று தூரத்தில் தான் ஓட்டல் இருந்தது. ஒரு செட் பரோட்டா வாங்கி வந்தான். அவள் அங்கு இல்லை .அவன் பதட்டமடைந்தான். எங்கே போனாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் எந்த தடயமும் இல்லை. வாழ்வில் உயர்ந்து விட்டவர்கள் அநேகர் வந்த வழியை திரும்பி பார்க்கமாட்டார்கள். பயித்தியங்கள் வந்த வழியை திரும்பத்  திரும்ப ஆராய்கின்றன. அவள்  வந்த வழியை பார்த்தான். மீண்டும் திரும்பி சற்று நடந்தான். நான்கு வழி சாலை சிக்னல் எல்லோரையும் கண்காணித்தது.  அரசியல் தலைவர்களின் கை உயர்ந்த  பேனருக்கு கீழே  ஒரு 'டீ'க்கைடையின் வாசலில்   நின்றிருந்தாள். 

தினந்தோரும் பல ஏமாற்று பேர்வழியை பார்த்திருப்பார்கள் போல கடைக்காரன் எந்த சலனமும் இல்லாமல் இருந்தான். அவள் எப்போதும் போல் வெறுமையாய் திரும்பினாள். அவன் கையில் வைத்திருந்ததை கொடுத்தான். அவள் சிரித்துக்கொண்டே வாங்கினாள். ஏன் சிரிக்கிறாள். உன்னைப்போல் பயித்தியக்காரன் இருக்கமாட்டான் என்கிறாளா? அவள் சிரிப்பதைப்பார்த்து கடைக்காரன் சிரிக்கிறானே. அவனுக்கு சற்று அவமானமாகத்தான் இருந்தது. அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. கிளம்பிவிட்டான்.

சற்று தூரம் வந்தபிறகு நின்று விட்டான். அவள் அதை சாப்பிடுவாளா? சேர்வா மிகவும் சூடாக இருந்ததே. அதை பிரிக்கத்தெரியுமா? எந்த பக்கம் போயிருப்பாள். திசையை அறிந்து போகிறவளா அவள். நேராக போனமாதிரிதான் இருந்தது என்று திரும்பினான். அவன் கண்கள் ஒதுக்குப்புறமான ஓரங்களையே தேடிச்சென்றது. வருவோரும் போவோரும்  பூட்டிய செருப்புக்டையை பார்த்தார்கள். மனித இயல்பு ஏன் தான் இப்படி பின் தங்கியிருக்கிறதோ? பேருந்தில் சுண்டல் விற்றால் கொஞ்சநேரம் யாருமே வாங்கமாட்டார்கள், பிறகு யாராவது ஒருத்தர் வாங்கினால் அதன் பிறகு பட படவென வாங்குவார்கள். தெருவில் வித்தை காட்டினால் முதலில் யாருமே கூடமாட்டார்கள். அதன் பிறகு கீழே மலம் இருப்பது கூட்த்தெரியாமல் கூடிவிடுவார்கள். இது இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை. அவன்  விதிவிலக்கா என்ன. அந்த திசையை நொக்கிப்பார்த்தான். அவள் பிளாட்பாரத்தின் மீது உட்கார்ந்து பார்சலை பிரித்தாள். சேர்வாவை பிரித்து ஊற்றிக்கொண்டு கொஞ்சமாக தொட்டு சாப்பிட்டாள். மிச்சம் வைத்த சேர்வா குடிகாரனைப்போல் சாய எத்தனித்தது. சாய்ந்து விடாமல் பத்திரமாக வைத்தாள். பரோட்டாவை சின்ன சின்ன துண்டுகளா பிட்டு அழகாக சாப்பிட்டாள். அவன் இதுவரை அவள் பின்பக்கமாகவே  நின்றிருந்தான். மொட்டை அடித்து வளர்ந்திருந்த அவள் தலையின் சுழி அடர்ந்த காட்டில் விழுந்துவிட்ட நிலவைப்போல் இருந்தது. அவன் பஸ்சுக்காக காத்திருப்பவன் போல பாவனை செய்து நின்றிருந்தான். அவள் சாப்பிடுவது சரியாக தெரியவில்லை. சாலையில் இறங்கி வழிப்போக்கனைப்போல்  நடந்தான். மீண்டும் எதிர் திசையில் நடந்து வந்தான். அவள் நிதானமாக சாப்பிட்டாள். அவன் இப்போது சற்று பதட்டமாகவே அவள் முகத்தை உற்றுப்பார்த்தான். அசலாக அவன் மகளின் சிரித்த முகம் தெரிந்தது.  அவளைக் கடந்து வந்து விட்டபின்பும். 

நம்புழுதி.

Sunday, November 7, 2010

கவிதை

          கப்பலைக் கடத்தும்  துடுப்பு         

எனக்குச் சொந்தமான கப்பலில்

துடுப்புடன் கடலில் பயணிக்கிறேன்.
(திசைக் காட்டும் கருவி  இருக்கிறது)
முடியாது என்று சொல்லிவிடாதீர்கள்
அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

என் முன்னோர்களிடம் 
பழகிய சிலதுளி நாழிகையில் தான்
என்னை தைரியப்படுத்திக்கொண்டேன்.

நான் கண்ணுக்குப்  புலப்படாத
எதையோ தேடிக்கொண்டே இருக்கிறேன்.

நிதானமில்லாமல் முந்தி முந்தி முட்டிக்கொள்ளும்
கூட்டங்களைக் கண்டு மிரண்டு ஒதுங்குகிறேன்.

வாழ்விடங்கள் 
பயனற்று ஒட்டிக்கொண்டு

கூடவரும் நிழலாக
நினைக்கதோன்றுகிறது.  

பணங்காய்க்காத
பல கிளைகளைக்கொண்ட
ஒரு சில மரங்களுடன்
அதன் இலைகள் பேசும் சத்தத்தில்
நாள் முழுக்க காத்துக்கிடக்கிறேன்.

இவைகளின் உந்துதலால்தான்
எனக்குள்ளக்  கப்பலை
கிடைத்த  துப்புக்கொண்டு ஓட்டுகிறேன்.

கடல் யாருக்கும் சொந்தமானதல்ல
ஒரு மாயையான எல்லை வேண்டுமென்றால்
வரைந்து வைத்திருக்கலாம் --அதனால்
முடியாது என்று சொல்லி விடாதீர்கள்.
திசைக்காட்டும்  கருவியை வைத்துக்கொண்டு
மேலும் ஆராய்கிறேன்.

வாழ்வாதாரம் தவிர்த்து
ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
அது ஒன்றே போதுமென்று 
பெருமையாய் நினைக்கிறேன்
துடுப்பு கையிலேதான் இருக்கிறது.
    
நம்புழுதி

Monday, November 1, 2010

சிறுகதை

                           யூதாஸோடு அழிந்தப்பண்பு
எருசலேம் தேவாலயத்தில் இன்னும் பரபரப்பு அடங்கவில்லை. நடு இரவை கடந்து விட்டபோதும் அங்கங்கே கூடிக்கூடி ஒருவரோடொருவர் நியாய அநியாயங்களை சத்தம் வெளியில் கேட்க்காமல் விவாதித்தனர். மேல் காற்று சற்று உருமலுடன் புழுதியைக் கலந்து வீசிக்கொண்டிருந்தது. ஆலயத்தின் உயர்ந்த சுவர்களில் அங்கங்கே தீப்பந்தம் எரிந்திருந்தது. காற்று சற்று வேகத்தை எட்டும்போது மட்டுமே தீப்பந்தம் அலை பாய்ந்தது. தூரப்பார்வைக்கு இருட்டு வான்வெளியில் நட்ச்சத்திரங்களைப்போல் ஆலயத்தின் வளாகம் தெரிந்தது. கிட்டத்தில் வரும்போது மின்னலாக அலைபாயும் மஞ்சல் வெளிச்சத்தில் பரந்த எல்லைக்குள் தேவாலயம் பிரமாண்டமாய் தெரிந்தது. ஆலயத்தின் எதிர் முனையில் நூற்று அய்ம்பதடி நீலமும் நூற்றுஅய்ம்பதடி அகலமும் கொண்ட பலிபீடமேடையும் இரண்டேகால் நீளம் இரண்டேகால் அகலம் ஒன்றரை அடி உயரமான தனியான கல்  பலிசெலுத்தும் மேடையில் நான்கு இடத்தில் இருந்தது. வீசி எறியப்போகும்  மாமிசத்துக்காக கூண்டில் காத்திருக்கும் வேங்கையாக பலி மேடை அந்த இருட்டிலும் ஆவேச முச்சிவாங்கிக் காத்திருந்தது.

யூதாஸ் ஏறக்குறைய இரண்டு  நாட்களாய் சாப்பிடவில்லை. பெத்தானியாவில் குஷ்டரோகியாய் இருந்த சீமோன் வீட்டில் கடைசி ராபோஜன பந்தியில் சாப்பிட்டதோடு சரி. அதன் பிறகு பிரதான ஆசாரியன்  வேதபாரகன் இவர்களிடத்திற்கும் அதன் பிறகு ஒலிவமலைக்கும்  கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறத்தில் உள்ள தோட்டத்திற்கும் அலைந்து  அலைந்து மிகவும் சோர்ந்துபோய் இருந்தார். ஏறக்குறைய ஆலய வளாகத்தில் இருந்த அநேகருக்கு அவர் முகம் அடையாளப்பட்டிருந்தது. மொத்த உடலும் சோர்வடைந்திருந்ததால் அவர் தொங்கள் ஆடை இன்னும் தடை செய்தது. இன்னேரம் விழுந்திருப்பார். புழுதியில் புதைந்திருந்த கல் ஒன்று தட்டியது. தடுமாறினார் விழவில்லை இரு கைகளிலும் மார்போடு  அணைத்திருந்த அந்த சிறிய மூட்டையை விடவில்லை.
ஆலய வாசலைக் காக்கிறவன் இவர் முகத்தை அறிந்திருந்ததால்  சற்று பேசாமல் இருந்தான். வந்தவர் ஆலயத்தின் பலிபீடத்தையே உற்று பார்த்து நடந்தபோதுதான் வாசல் காக்கிறவன்  ''அய்யா இந்த நேரத்தில்  யாரைப் பார்க்கப் போகிறீர்கள் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் பரிசேயரும் பரிசுத்த ஆடையிலே பலிபீடத்தண்டையில் இருக்கிறார்கள். பரிசுத்த ஆடை கலைந்து வீட்டுக்கு வருவார்கள் அப்போது வேண்டுமென்றால் நீங்கள் பார்க்கலாம். இபோது  நீங்கள் வேருயாரையாவது அவசரமாய் காட்டிக் கொடுக்க வேண்டுமா தெரிந்தால் நான்  பிரதான ஆசாரியரிடத்தில் அனுமதி கேட்டு வருவேன்.  அதை கேட்டதும் ஆலய வாசலுக்கு நேர் எதிராகமுகம் குப்புற விழுந்தார். கையில் வைத்திருந்த சிறு முடிப்பில் தன் நெற்றியை இடித்துக்கொண்டு அழுதார். வேகமாக எழுந்தார்  கேருபீன்களும்  பேரிச்சை மரங்களாலும் சித்தரிக்கப்பட்ட  ஆலயத்தின் பிரமாண்டமானக் கதவை திறந்தார். பிரதான ஆசாரியர் பரிசேயர் வேதபாரகர் அதிகாலை  முதல் வேலையாக இயேசுவை பிலாத்துவிடம் ஒப்படத்து விடுவதைப்பற்றி  பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் எப்படியான தீர்ப்பு கொடுப்பாரோ  ஒரு வேளை அவருடைய தீர்ப்பு  நமக்கு அதிருப்தியாய்  இருந்தால் மக்களை பேசவிட்டு நமக்கு சாதகமாக காரியத்தை சாதிக்கவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். பலிபீடத்தில் குத்துவிளக்குகளில் எண்ணைக் குறைந்து சுடரொளியும் குறைந்திருந்தது. சுகந்த வசனையின் புகை எழும்பிக்கொண்டிருந்தது.

யூதாஸ் நிராயுதபாணியான ஒரு அடிமையைபோல் அவர்களுக்கு நேராக விழுந்து ''அய்யா நான் தவறு செய்துவிட்டேன்.நீங்கள் கொடுத்தப்பணம் இதோ அப்படியே இருக்கிறது நான் இந்த பணத்தின் முகத்தை கூட பார்க்கவில்லை இதை எடுத்துக்கொண்டு ஒருதவறும் செய்யாத அவரை விட்டுவிடுங்கள்.'' 

''யூதாஸ் நீ மட்டுமா இயேசுவுக்கு சீஷனா இருந்த மற்ற பதினோரு பேரு எங்க  அவுங்கயாரும் வந்து ஒரு வார்த்தை கூட கேட்கலியே காட்டிகொடுக்கறதுகும்  கோள் சொல்றதுக்கும் கூட சில நியாயமான காரணமிருக்கும் ஆனா உயிர் நன்பனாப் பழகியிருக்கான் குருவாயிருந்திருக்கான் உங்களோடு உண்டு உறங்கியிருக்கான் அப்படிப்பட்டவன் ஆபத்தில சிக்கினபோது அனாதையா விட்டிடுட்டு ஓடுனாங்களே அதுதான் மிகப்பெரிய கொலைப்பாதகச்செயல்  அவுங்களுக்கு வராத பாவம்  உனக்கு வராது போ. அந்த காச வச்சி இனிமேலாவது எதாவது பொழைக்கிற வழியப்பாத்துக்ககோ."

"அய்யா நீங்க சொல்றது நாயமாதெரியிது. ஆனா அவுரு ரொம்ப நல்லவருய்யா  எனக்குத் தெரிஞ்சி ஒரு குத்தமும்  செய்யலையா இந்த ஒரு முறை உட்டுடுங்கையா.  நீங்க கொடுத்தப்பணம்  அப்பிடியேயிருக்குதுய்யா  இந்தாங்க. எடுத்துக்குங்க."

"அவுரு ரொம்ப நல்லவர்தான் எங்களுக்கும் தெரியும் அவுரு நல்லவரா இருந்தா நாங்க எல்லாரும் நல்லவங்களா இருக்கமுடியுமா? எங்கள் ஒட்டு மொத்தமா கெட்டவங்கனு அவுருசொல்லலாமா? நாங்க எங்க மூதாதையர் காலத்திலிருந்து வழிவழியா  ஆசாரியப்பணி செய்துவருகிறோம் இவுரு எப்ப வந்தாரு பத்து பேருக்கு மத்தியில் எங்கள தரகுறைவா பேசலாமா? நாங்க பாத்துக்கிட்டு சும்மாஇருப்போமா? யூதாஸ் இவ்ளோ நேரம் உன்கூடபேசினதே நாங்க கஷ்டப்பட்டு செய்யவேண்டிய  வேலையை நீ சுலபமாக் கினியேனுதான். அதெல்லாம் எங்க கைய மீறிப்போச்சி இனி நாங்க ஒன்னும் செய்யமுடியாது. போ...போ... போ போய் வேலையப்பாரு. நாங்க சொல்றத கேக்கலனா அதுக்கப்புறம் உன் பாடு" என்று பக்கத்தில் இருந்த அறைக்குச் சென்று பரிசுத்ததிற்குரிய ஆடையை கலைந்து பொதுவான ஆடையை உடுத்திக்கொண்டு பிரதான ஆசாரியன் வீட்டில் இருக்கும் இயேசுவின் காவலை இன்னும் பலப்படுத்தி விழிப்புடன் இருக்கும்படி எச்சரித்து விட்டுப் போனான். 

யூதாஸ் மிகவும் மனமொடிந்து கையறு நிலையானபோது பண முடிப்பைதூக்கி எறிந்தார். பண முடிப்பு எறிந்த வேகத்தில் ஆலயத்தின் பாடல் குழுவில் வாசிக்கப்படும் தம்புரு கின்னரங்களின் இசையைபோல் ஒலித்தது. ராயனுடைய தலையும் சின்னங்களும் ஒரு போர் சிதைவை சந்தித்ததுபோல் நாலாபக்கமும்  சிதறி முட்டி மோதி ஒன்று தலை தெரியும்படியாகவும் ஓடி விழுந்தது. ஆலயத்தை காவல் காக்கிற ஆசாரியன் பிரதான ஆசாரியனிடத்தில் ஓடிச்சென்று " அய்யா யூதாஸ் வெள்ளிக்காசுகளை பலிபீடத்திற்கு நேராக வீசி எறிந்துவிட்டார்." என்ற காவலன் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தான் ஆசாரியனுக்கு சாதகமானவன் என்பதை உணர்த்துவதில் கவனமாய் இருந்தான். 

"அவன் பயித்தியக்காரன் வீசி எறியட்டும் அந்தகாசை பொறுக்கிவை  வேறு எதாவது பயன்பாட்டுக்கு  வைத்துக்கொள்ளலாம். முதலில் யூதாஸை ஆலயத்திலிருந்து விரட்டிவிடுங்கள்."

ஆலய காவலன் உள்ளே வருவதற்குள் இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் வந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டு  ஆலய வளாகத்தில் குடியிருந்தவர்ளின் வீடுகளிலிருந்து ஒரு சிலர் கூடி விட்டார்கள் 'இவன்தானே காட்டிகொடுத்தான். இப்போ  இவனே வந்து  உட்டுங்கோ என்கிறானே. இவன் இன்னா   பயித்தியமா' என்று பேசிக்கொண்டார்கள். யூதாஸ் ஆலயத்தின் உள் வடிவத்தை  சற்று ஆழ்ந்து பார்த்துக்கொண்டுவந்தார். சன்னல் வழியாக காற்று வேகமாக வீசியது. சன்னலின் திறைச்சீலைகளும் தலைவாசலின் சீலைகளும் பறந்தது. பறந்தது மூடியது. அரங்கத்தின் தூன்களில் உயரத்தில் கேருபீன்  பேரிச்சை மரங்களால் சித்தரிக்கப்பட்ட மனித முகம் யூதாஸை பார்த்து ஏலனமாய் சிரித்தது. மறுபக்கம் சிங்கத்தின் முகம் ஆவேசமாய் கர்ஜுசித்ததுபோல் இருந்தது.  பலகையில் சித்திர வேலைபாடுடன் அலங்கரிக்கப்பட்ட உள் அமைப்பு மெளிதான மஞ்ஜல் வெளிச்சத்தில் மின்னியது. ஆந்தையை விரட்டும் காக்கைபோல 'ஆலயத்தை விட்டு வெளியே போ...வெளியே  போ...' என்று விரட்டினார்கள்.

யூதாஸ் மெளனமாக வெளியே நடந்தார். பிரதான  ஆசாரியன் வீட்டுக்கு  சற்று  தள்ளி சிறு கூட்டம் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துக் கொண்டிருந்தார்கள்.  ஆண்களும் சில பெண்களும் போர்வையோடு நின்று கொண்டிருந்தார்கள்.  ஒருவர் அந்தகூட்டத்தில் ஒன்றியிராமல் நெருப்பின் கதகதப்பை உணர்ந்தவராக தனிமையில் தவித்தார். பிரதான ஆசாரியனின் பக்கத்து வீட்டில் ஒருவன் தன் கூண்டிலிருந்து கோழிகளை திறந்துவிட்டான். அதில் சேவல் ஒன்று எதிர் வீட்டில்  இன்னும் திறக்காமல் இருக்கும் கோழியின் வரவை பார்த்துகத்தியது. சேவலின் சத்தம் கேட்டதும் அவர் மட்டும்  கூட்டத்திலிருந்து விலகிச்சென்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதார். அழுதவர் நிமிர்ந்தபோது தள்ளாடிச்சென்ற யூதாஸைப்பார்த்தர். அவர் யூதாஸைப் பார்த்ததும் முகத்தைதிருப்பிக்கொண்டார். யூதாஸ் தள்ளாடும் நடையை வேகப்படுத்தினார். நடந்துகொண்டேயிருக்கிறார். நகரத்தின்  எல்லை முடிந்தது. வழித்தடங்கள் இல்லாமல் பாறைகளும் முட்செடிகளும்  மரங்களும் கண்ணுக்கெட்டிய தூரம் மலைகளுமாய் இருந்தது. கரும் மேகங்கள் கல்லாகிவிட்டதைப்போலவும் ஒழுங்கின்மையாய் இருந்தது. யூதாஸ் ஏதோ திசையில் நடந்தார்.  தனக்கு  தானே பேசினார்.

"ஆண்டவரே எல்லா சீஷனைப்போலவே நானும் இருந்திருக்கக்கூடாதா என்னிடத்திலே எதற்கு  வரவு செலவு கண்ககை கொடுக்கனும் நீங்க எல்லா நேரத்திலும் நீதியாய் இருந்தீங்க  அதனால வருமானம் சரியானபடி இல்ல சில நேரத்தில நான் சிக்கனமா இருக்கவேண்டிய சூழ்நிலை வந்துச்சி அதனால தான்  கடைசி ராபோஜனத்துல அந்த பொம்பள விலை அதிகமான பரிமளத்தைலதை  உங்க  தலை மீது ஊத்தும்போது கொஞ்சம் சத்தம் போட்டேன்."  என்று நடந்தவர் திடிரென ஒரு சமமான பாறைமீது உட்கார்ந்தார்.  உட்கார்ந்தபோது காலளவு  தொங்கியிருந்த ஆடை பக்கத்திலிருந்த சிறிய முள்ளுச்செடியில் சிக்கிக்கொண்டது.  சடார்ரென்று பிடித்து இழுத்தார் . எதற்காகவும் வருந்தவில்லை . இழுத்தவேகத்தில் செடி  அடிவரை சாய்ந்து நிமிர்ந்தது. அங்கிருந்து சிறிய பாம்பு ஒன்று பாறை இடுக்குகளில் புகுந்தது. அதை பார்த்ததும் என் ஆண்டவனையே அசைத்துப் பார்த்தவனாச்சே நீ  இந்த பூமியில் எத்தனை ஆயிரம் தலைமுறையானலும் நீ மட்டும் எப்போதும் இளமையாகவே இருந்து புதுமையான அழிவுக்கும் வளர்ச்சிக்கும்  துனைபோகிறாய் போ... போ... என்று எழுந்து நடந்தார். 

நடையில் தளர்ச்சி ஏற்பட்டதால் இரு பாறைகளுக்கு  இடையில் நுழைந்து போனார். பாறையில் கைவைத்து தாங்கியபடி நடந்தார். பாறை  சூடேறியிருந்தது. புல்லும் பூண்டும் காற்றின் திசைக்கேற்ப சந்தோசமாய் சாய்ந்தாடியது. அதை அவர் கவனிக்கவேயில்லை. வேகமாக நடந்தார்." ஆண்டவரேநான் புத்தி கெட்டு செய்துவிட்டேன்  ஆனா இப்படி செய்வாங்கனு நெனைச்சிப்பாக்கலையே நீங்க இந்த நாட்டுக்கு ராஜாவா வருவீங்கனு  நாமலும்   ஒரு நெலமைக்கு வந்திடலாமுனு நெனைச்சேன் ஆனா அதெல்லாம் நடக்காதுங்குறா மாதிரி நீங்க தேவலயத்துல பிரதான ஆசாரியனையும் உயர் பதவியில் இருக்கிறவர்களையும்  கடிந்துகொண்டீர். அப்போதே என் மனசு ஒடஞ்சிப்போச்சி. பிரதான ஆசாரியன் உங்கமேல கோபமாயிருந்ததால்  அதிகாரத்தில் இருக்கிறவர்கள் முலமாகவே உங்களுக்கு சிறிய கஷ்டங்கள் கொடுத்தால்தான் உங்களுக்கு அதிகாரத்தின்மீது ஆசை ஏற்படும். நீங்க மனசு மாறுவீங்க அதுவுமில்லாம ஒரு முறை சூம்பின கையையுடைய ஒருவனை ஓய்வுநாளில் குணமாகினபோது பரிசேயர் எல்லாம் உங்களை கொலைசெய்ய வைகை தேடினாங்க அந்த நேரம் அவுங்க கண்ணுக்கு மறைஞ்சி போயிட்டீங்க. அதப்போல இப்பவும் போயிடுவீங்கனுதான் நான் உங்களை முத்தம் செய்தேன் . இப்படி  கொலைசெய்ய துனிவாங்கனு நெனைக்கலையே. ஒரு கொலைகாரன்னு சொன்னாக்கூட பரவாயில்லையே காட்டிகொடுத்தவன்னுதானே வரும் சந்ததி என்னைப்பழிக்கும்" என்று தன்னைத்தானே தலையில் அடித்துக்கொண்டார். அவர் கால்களுக்கு எந்த இலக்கும் இல்லாமல் இருந்தது.    

ஆண்டவரே பிலாத்து என்ன தீர்ப்பு செய்தானோ! மொத்த அதிகாரிகளும் ரொம்ப தீவிரமாய் இருந்தார்களே. பூரனமான நல்லவர்களை இந்த உலகம் பக்கத்தில வச்சிக்கவே மாட்டுங்குதே அதுக்கு நானும் காரணமாயிட்டேனே கொஞ்ஜ நாள் முன்னாடி உங்களை சிலுவையில் ஒப்புக்கொடுக்கப் போறாங்கனு நீங்க சொன்ன போது  உங்க பக்கத்தில இருந்தபேதுரு அது நடக்கக் கூடாதுனு சொன்னார். அதுக்கு கோபமா ' அப்பால போசாத்தானேனு ஏன்சொன்னிங்களோ' என்றவர் மரத்திடம் வந்துவிட்டார். அதை சற்று நேர நிதானத்திற்கு பிறகுதான் உணர்ந்தார். நிமிர்ந்து  மரத்தைப் பார்த்தார். மரக்கிளையின் இடைவெளியில் வானத்தின் இயல்பு நிலையில் சற்று மாற்றம் தெரிந்து. தொடையின் புஜம்போல வெளியில் தெரிந்து பூமியில் மரைந்திருந்த மரத்தின்வேர் மீது உட்கார்ந்தார் .மரத்துக்கு மேலே உயரத்தில் வல்லூறுகள் சுற்றிக்கொண்டிருந்தன. மரத்தின் கிளைகள் படர்ந்து மிகவும் தாழ்வாக இருந்தது. மரத்தின் நிழல் அவர் உட்கார்ந்திருந்த எல்லைக் குள்ளேயே இருந்தது. அவர் உணரவில்லை. 

"ஆண்டவரே நான் உம்மோடு இருந்தபோது  கணக்கில்லா ஆண் பெண்ணுக்கு மன்னிப்பும் பாவ நிவாரணம் தந்து நல்ல வழ்வையும் தந்தீர் எனக்கு அடிப்படிப்பட்ட மண்ணிப்பு கிடைக்குமா உம் முகத்தை பார்த்தல் என் மீது மனம் இறங்குவீர் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனால் என்னை குற்றப்படுத் திக்கொண்டே இருப்பார்கள். நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை "என்று மரத்தை அன்னாந்து பார்த்தார். மரத்தின் கிழ்பகுதி மிகவும் கனமாயிருந்தது. என் ஆண்டவர்.இதை எல்லாம் எனக்கு பழக்கப்படுத்த வில்லையே நான் என்ன செய்வேன். நான் எப்படி ஏறுவேன் குழம்பினார். எப்படி மாய்த்துக்கொள்வது ஒன்றும் விளங்கவில்லையே என்று அழுதார்.

கண்களில் தேங்கியிருந்த தண்ணிரால் எந்தபிம்பமும் சரியாய் தெரிய வில்லை. கண்ணுக்கெட்டியதூரம் வெறுமையாய் கிடந்தது பூமி. கண்ணிரை துடைத்தபோதுதான் கொல்கதா மலை மிகவும் தொலைவில் பிரமாண்டமான யானையின் முதுகைபோல் கிடந்தது அவர் பார்வைக்கு.

எழுந்து தன் மேலாடையை உருவினார்.உயரம் தாழ்வானகிளையை எட்டினார் .எட்டவிலை. இரு கல்லை மரக்கிளைக்கு நேரகப்போட்டு அதன் மீது ஏறி முடிச்சிப்போட்டார்.சட்டையின் கைபகுதி தன் கழுத்தில் மாட்டிக்கொண்டார். கல்லின் மீது ஏறி நின்றார். மரக்கிளையில் கட்டியிருக்கும் கயிறு சரியா என்று சற்று அழுத்தம் கொடுத்துப்பார்த்தார். சரியாக இருந்தது. ஆண்டவரே என்னை மண்ணித்துவிடு என்று கல்லிலிருந்து குதித்தார். குதித்ததும் மரக்கிளை தாழ்ந்து  அவர் கால்கள் தரையில் நின்றது. கழுத்தின் முனை சரியாக இ\றுகவில்லை  மீண்டும் செய்தார். அதேபோலவே கால்கள் தரையில் நின்றன. தன்னை அறியாமல் கைகள் மேலே உயர்ந்தது. கட்டுப்படுத்தி கீழே இறக்கினார். 

கால்களை தரையில் தேய்த்தார் மரக்கிளை தாழ்ந்து தாழ்ந்து எழும்பியது. எவ்வளவு சிக்கல் இருந்தாலும் மனதை மிகவும் வலுக்கட்டாயமாக முறுக்கேற்றினார். மிகவும் உயரத்தில் பறந்த வல்லூறுகள் இப்போது கிட்டத்தில் பறந்தது. யூதாஸ்பெரு மூச்சாக காற்றை உள்ளுக்குள் இழுத்து வெளியில் விடாமல் மிகவும் இறுக்கமாக்கினார்.கைகள் கால்கள் புடைத்து. இறுக்கமாக்கிக்கொண்டே இருந்தார். இதயதுடிப்பு அதிகமானது. முகம் உப்பி காற்று வாய் வழியாய் வருவதற்கு அழுத்தம் கொடுத்தது. அவர் புயல் கற்றையே அடக்கும் சக்திகொண்டு அடக்கினார். வயிறு விரிந்துகொண்டே வந்தது. இன்னும் இருக்கினார். 'டமார்' என்றது. அதிக காற்று ஏறிய பலுனைப்போல் வெடித்தது. ரத்தமும் குடலும் சறிந்து விழுந்தது. வல்லூருகள் இறங்கி சுற்றிலும் அமர்ந்தது. ''வாங்க என்ன சாப்புடுங்க" என்றபோது மரக்கிளையின் கட்டுகள் அவிழ்ந்தது. தலைகீழாக விழுந்தார். கிருத்தவத்தில் தவறுக்கு வருந்துகிற பண்பின் வார்த்தைகள் மெல்ல மெல்ல அடங்கியது.          
       
   நம் புழுதி                                                                    



நன்றி  'புதியகோடாங்கி'

         

Tuesday, October 19, 2010

சிறுகதை

                                               முக்கிளை  பூ

கட்டாந்தரையாய் கிடந்தாலும் லேசான தூறலுக்கே வேண்டுதளில்லாமல்  புல்லுகள் உயிர்தெழுந்துவிடுகிறது. வரப்பில் பலவிதமான புல்லுகளும், பூண்டுகளும் பசுமையாய் இருந்தது. அங்கங்கே தும்பைச்செடிகளின்  பூ வானத்தை தனக்குள் இழுத்துக்கொள்ள காத்திருப்பதுபோல் வாயை திறந்திருந்தது. வரப்பின் மீது அடர்பச்சை படுத்திருந்தது. கழனியை ஒட்டியே சாலை. சாலையில் போவோரையும் வருவோரையும் வேடிக்கை பார்த்தவாரே எப்போதும் தன் பணியைச்செய்யும் கழனி. கிராமங்களை கடந்து சாலையில் வரும்போதுதான் பயணிகளின் உண்மையான பிம்பங்கள் வெளிப்படும். புது மாப்பிளைகள், மற்றும் புது மருமகள்கள் தன் மாமனார் வீட்டில் தங்கி கிளம்பும்போது அங்கு பேசமுடியாத பல விஷயங்களை சில்மிஷமாகவும், உண்மையான சண்டையாகவும் நடத்திக்கொண்டு  போவார்கள். தங்கள் தங்கள் வீடுகளில் சாக்குப்போக்கு சொல்லிவிட்டு வாழ்க்கையை பற்றி புரிதல் இல்லாத காதல்கள் முன்னும்  பின்னுமாக வந்து, இந்த கழனியை நெருங்கும்போதுதான் கை கோத்துச்செல்வார்கள். குடும்ப பாரம் தாங்காத முதிர்வயதுடையோர் புலம்பிக்கொண்டு போவதையும் கழனி வெட்ட வேளிச்சமாய் பார்த்துக்கொண்டிருக்கும்.

ஜோதி ஏக்கம் நிறைந்த கண்களுடன்  சைக்கிளில் பார்த்துக்கொண்டுவந்தான். கழனியின் சத்தை விவசாயி உரிஞ்சிக்கொள்வதால் கழனிகூட பிள்ளை பெற்ற தாயைப்போலதான். புல்லுகளில் முக்கிளைக்கொண்ட பூ பூத்திருந்தது. அதன் பக்கத்தில் உட்கார்ந்து இரண்டு கைகளாலும் புல்லுகளை சேர்த்தவாரு தழுவினான்.நிறைந்த மரியாதையுடன் வணக்கம் செய்வதுபோல் குனிந்து நிமிர்ந்தது. ஜோதி புல்லுகளை தழுவினான். அவன் கண்கள் மூடிக்கொண்டது. 

"டேய் ஜோதி இன்னும் இன்னாடா யோசனை அந்த புல்லை கீழ போடுடா, சின்னப்பசங்கமாதிரி கையில உருட்டிங்கிற. இனி வெவசாயமெல்லாம் வேலைக்காகாது. இந்த பட்டிக்காட்டுல போய் இந்த வெலக்குடுத்து வாங்க வந்திருக்கானுங்க. பணங்கொழுத்த பணக்காரனுங்க. இதுதான் நேரம் சட்டு புட்டுனு முடிச்சிடுடா" என்றார்கள் சித்தப்பா மகன்கள் மகா, மாசிலாமணி.சற்று தூரத்தில் வெள்ளை அம்பாசிடர் கார் வந்தது. நேற்று பெய்த துறளால்     தரையில் ஈரம் இருந்தது. தூசிகள் பறக்கவில்லை. பருவநிலை மாற்றத்தால் எப்போது பொழியும் எப்போது வெயில்காயும் என்று தெரியாத நிலையில்தான் நேற்று பொழிந்தது. கார் பக்கம் வந்ததும் ஜோதி உள்ளிட்டோர் படபடத்தனர். மற்றவர்கள் தங்களுக்குறியதை இழந்து விடுவதில் நிம்மதியடைபவன் தான் மாசிலாமணி. இபோதும் அவன் தான் முந்திக்கொண்டு  " ஜோதி ஏதாவது ஒரு முடிவை சொல்லு. தலைவர் ஆளக்கூட்டியாந்துட்டார். நல்ல வெல வருது இதை எழந்துடாதே. சொல்லிட்டேன். "அவனே மருபடியும் ஜோதியின் கவனத்தை  ஈர்க்க "பணத்தை வாங்கிம்போய் டவுனுல நல்ல  ஸ்கூலாப்பாத்து பய்யனை சேத்துடு மீதிய பேங்குலப்போட்டு வட்டிய வாங்கி சாப்பிடுபா" என்ற 
வீயாபாரத் தந்திரத்தை வீசினான்.

ஜோதி அவர்கள் இருவரையும் விட்டு சற்று  தள்ளிச்சென்று யூரியன் போவதுபோல் உட்கார்தான். கண்களில் முக்கிளை பூ தென்பட்டது. "அப்பா கடா மாடுகளை பூட்டி கலப்பை வைத்துக்கொண்டு ஏர் ஓட்டவந்தார். ஜோதி பின்னால் கால் சட்டையை மாட்டிக்கொண்டு வந்தான். அவன் கையில் புல்லை வைத்து திருகிக்கொண்டுவந்தான். கழனிவந்ததும் ஏர் பூட்டி ஜோதியிடம் கொடுத்தார். ஜோதிக்கு புழுதி ஓட்டுவதென்றால் சந்தோசம். தண்னீர் இருக்கின்ற கழனியில் இறங்கச்சொல் வதால் அப்பாவை போடா என்று சொல்லிவிட்டு எந்த மூலைக்காவது ஓடிவிடலாமா என்று தோன்றியது. இருந்தாலூம் 'டேய்.. ராஜா, வாபா' என்று கொஞ்சும் வார்த்தைகள் பொழிந்தார். அதில் வேறு வழியின்றி கழனியில் இறங்கினான்.காலையில் கழனித்தண்ணீர் அய்ஸாக இருந்தது. அதன் குளிர்ச்சி மூளைவரை எட்டியது. அவன் அப்பா அண்டைவெட்டினார். ஜோதி ஏர்  ஓட்டினான். கலப்பையில் கைவைத்திருப்பது போலவே தூங்கிக்கொண்டே நடந்தான். கலப்பை மாட்டின் காலில் பட்டு தடுமாறிவிழுந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்டு கலப்பையை பிடித்து ஓட்டினான். "டேய் தூங்க்கினே ஏர் ஓட்டுரியா" என்ற குரல் கேட்பதுபோல் உணர்ந்து திடுக்கிட்டான். "ஜோதி எவ்ளோ நேரம் ஒக்காந்திருப்பே" என்று மகா அழைத்தான் அதன் பிறகு எழுந்து வந்தான்.

கறவேட்டி  கட்டிய சாரங்கனோடு இன்னும் இரண்டுபேர் வந்தார்கள். சாரங்கன் ஜோதியோடு நான்காவது வரை படித்தவன். ஜோதி நான்காம் வகுப்போடு நின்றுவிட்டான். சாரங்கன் மேலும் அய்ந்து வகுப்புக்கடந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கிவிட்டான். தீவிர விவசாயியாக மாறிவிட்டான். அவன் அப்பா ஊர் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். முறையாக  பிள்ளைகளை ஒவ்வொரு திராவிடக்கட்சிகளிலும் நுழைத்து வளர்த்து விட்டார். சாரங்கன் வயது குறைவாக இருந்ததால் விவசாயம் பார்த்தான். நல்ல வாலிபத்தில் கலியாணம் நடந்தது. கலியாணம் முடியும்வரை அரசியல் மீட்டிங்கோ, கட்சியின் உறிப்பினராகவோ இருந்தவன் இல்லை. மாமனாரும் அரசியலில்  முகியமான நபர்தான். குறுகிய  நாளுக்குள் ஊராட்சி மன்றத் தலைவராய் இன்று மினிஸ்டர் ஒயிட்டில் வந்து நிற்கின்றான். 2005- 2006களின் தொடக்கத்தில்தான் கம்பெனியாளர்கள் எனக்கு இரநூறு  ஏக்கர் எனக்கு முந்நூறு ஏக்கர் முடிச்சிக்கொடு என்று பெட்டிப்பெட்டியான பணத்தை அட்வான்ஸாக கொடுத்தார்களாம். அந்த வியாபாரத்தின் தொடக்கமாக ஜோதியிடம் வந்தார்கள். தனக்கு சாதகமான இருவர் எதிரில் இருக்கும்போது ஒருவரை முகியப்படுத்தினால். தன் வேலை பின்னடைவு ஏற்பட வாய்புள்ளது என்று எண்ணியவன் "இன்னா மகா, மாசிலாமணி, ஜோதி இன்னா சொல்றாரு" என்று சாரங்கன் கேட்டதும், சரியான முடிவு கிடைக்கவில்லை என்பது போல் அமைதியாய் இருந்தார்கள். சாரங்கனே பேசினான். "ஜோதி சுத்து வட்டாரத்துல எல்லா ஊர்லயும் ஆளுங்க போய் பேசிக்கிட்டே இருக்காங்க. உன் கழனிப்பக்கத்தில எல்லா கழனிக்கும் அட்வான்ஸ் குடுத்தாச்சி பணம் இப்போ அப்போனு இழுப்பறிலாம் கிடையாது. பேசனுமா அட்வான்ஸ் புடுச்சிக்கோ, ஒரு வாரத்தில மொத்தப்பணமும் செட்டில். இப்படித்தான் போகுது. அதனால டக்குனு சொல்லு,"

இடையில் குறுகிட்ட சந்தானம் "ஜோதி கம்பெனிக்காரனுக்கு தேவையான நெலம் கெடைச்சிட்டா. அதுக்கப்புறம் இவ்ளோ வெலலாம் போகுமானு சதேகம்தான். இது தங்களுக்கு சாதகமானா  பேச்சி என்பதில் ஜோதியைத் தவிர்த்து சந்தோசப்பட்டார்கள்.

"அதுக்கு இல்லை தலைவரே எனக்கு இருக்கிறதே இந்த ஒரு ஏக்கர் அஞ்சி செண்டு  நெலம் மட்டும்தான். இத வித்திட்டா எனக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தமில்லாம பூடுமே அதான் கஷ்ட்டமா இருக்குது."

"இன்னா ஜோதி, அப்பிடிசொல்லிட்டே. நமெல்லாம் அப்பிடியா பழகுறோம் தாயா, புள்ளயா அண்ணந்தம்பியாயில்ல பழகுறோம் சம்மந்தமில்லாம போயிடுமா?" என்ற சாரங்கனின் வார்த்தை ஜோதியின் மனசை திசைதிருப்பியது. சரங்கன் சொன்னதில் உச்சிக்குளிர்ந்து விட்ட மாசிலாமணி "தலைவரே அவன் இப்படித்தான் பேசிங்கெடுப்பான் அட்வான்ஸ் குடு " என்றான். 

"ஏம்பா அவசரப்படுறே, செண்டு இன்னா வெலனுலாம் சொல்லிட்டியா" என்றான் மகா. சாரங்கன் கூட இருந்தவன் "இவருக்குமட்டும் இன்னா கொறைச்சா குடுக்கப்போகிறோம், அதேவெலதான். செண்டு மூவாயிரம். "என்பதோடு மொத்த நிலத்தையும் கணக்கு செய்து. மொத்த அமோண்டை சொன்னான். மகா, மாசிலாமணியும் இவ்ளோ பணமா என வாயைப் பிளந்தார்கள். கிரமத்தில் இதுவரை செண்டு இருநூற்றி அய்ம்பது, அதிகபட்ச்சமாக முன்னுற்றி அய்ம்பதுதான். புழக்கத்தில் இருந்தது. ஜோதியை செர்ந்தவர்கள் ஒரு சிலர் நான்கைந்து எருமைமாடுகளை வளர்த்து பால் ஊற்றினர் மற்றும் நகரத்தின் வசதியான நில முதலாளிகளின் நிலங்களை தாங்கள் விளையச்செய்ய மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் விளைச்சலில் பெற்றுக்கொண்டனர். அதன் மூலம் பெற்றலாபத்தில் இரண்டு ,மூன்று அய்ந்து என்று செண்டு கணக்கில் நிலங்களை தங்களுக்கு சொந்தமாக்கினர். அப்படி சேர்த்ததுதான் ஜோதியின் நிலமும். தற்போது அன்னிய முதலீடுகளை அங்கிகரித்தவுடன் கடைகோடி மூலையின் இடுக்கில் இருக்கும் கிராமத்தின் கை மண் கூட விலை அதிர்ச்சியைத் தருகின்றவை என்பதை மகா, மாசிலாமணி, ஜோதியும் அறியவில்லை.  கோடாலி விழுந்த குளத்தில் தேவதை எழுந்து செல்வங்களை கம்பெனி மூலமாக வாரி வழங்குகிறார்கள் என்று நினைத்தனர். ஜோதி இதுவரை ஒரு ஆயிரத்தை மொத்தமக பார்த்ததில்லை. இருந்தாலும் இவ்வளவு பணத்தை கண்டு அவன் மனம் சந்தோசப்பட்டது  போலவும் தெரியவில்லை. பணத்தை மடியில் வைத்து கட்டிக்கொண்டான். வியாபாரம் முடிந்துவிட்டாதால் எல்லோரும் காரை நோக்கிச்சென்றார்கள். இப்போது மகா, மாசிலாமணியின் நடை முந்திச்சென்றது. 

ஜோதி பின்பக்கம் பார்த்தான். ஜோதி களம் செதுக்கிக் கொண்டிருந்தான். பையை தோளில் போட்டபடி பள்ளியிலிருந்து ஜோதியின் மகன் வரப்பின் மீது ஓடிவந்தான். அசைந்தாடிக் கொண்டிருந்த விளைச்சளிலிருந்து குருவிகள் கத்திக்கொண்டு பறந்தது. "அப்பா நம்ம வீட்டில குருவிங்களுக்கு நெல்லு கட்டிவெக்கப்போறேன். கதிரு கீச்சிக்குடுப்பா" என்றான் ராஜா 

"பள்ளிக்கோடம் உட்டாங்களா, சரி சரி போய் கதிரு கீச்சிக்கோ" என்று சொன்னதும் குதித்து குதித்து ஓடிவந்து  விளைச்சளில் முற்றிய கதிராய் பாலின் ஈரம் காயாமல் இருந்ததை கிழித்துச்சேர்த்தான். தன் கையளவுக்கு அடங்கும்படியாய் கதிர் இருந்தது. பயை எடுத்துக்கொண்டு ஜோதிக்கு கதிர்களைக்காட்டி "அப்பா நான் வரேன்" என்று மீண்டும் ஓடிடான். ராஜா கதிர்களை தூக்கி ஆட்டியபோது எதோ தேவதையின் காதில் ஆடும் தங்க ஆபரணங்கள்போல் தெரிந்தது. ஜோதி களம் செதுக்குவதை விட்டு நிமிர்ந்து கையசைத்து டாட்டா காண்பித்தான். முன்னாடி சென்ற சாரங்கன் "இன்னா ஜோதி யாருக்கு டாட்டா காண்பிக்கிற" 


"ஒ..ஒ..ஒன்னுமில்ல தலைவரே"

காரின் ஓட்டுநர் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தார். முன் சீட்டுக்கு மேலே பன்னீர் திராட்சை நேர்த்தியாக தொங்கியது. ரப்பரில் இருந்தது. கட்சி வாரிசுகளின் போட்டோக்கள் பேதமில்லாமல் பளிச்சென்று பார்வையில் படும்படியாக இருந்தது. சாரங்கனைச் சேர்ந்தவர்கள் முன்சீட்டிலும் ,ஜோதியைச் சேர்ந்தவர்கள் பின் சீட்டிலும் உட்கார்ந்தார்கள். சந்தானம் வெள்ளைத்தாளில் அக்ரிமெண்ட் எழுதினான். பின் சீட்டுக்குச்சென்றது. மாசிலாமணி மகாவை படிக்கச்சொன்னான். மகா தன் பங்கை பதிவு செய்ய கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். தனக்கு படிக்கத் தெரிந்திருப்பது பற்றி தானே பெருமைப்பட்டான். அதை நிருபிக்கும் விதமாக சத்தமாகப்படித்தான். தனக்கு படிக்கத்தெரியவில்லை என்றாலும் தான் மற்றொன்றில் திறமைசாலி என்பதை காட்டும்விதமாக மகா படித்து முடித்ததும் "இம் குடு ஜோதி கையெழுத்து போட்டு குடு நாங்க சாட்சி போடுறோம்" என்றான். பின்சீட்டில் இருந்தவர்கள்.இறங்கினார்கள். கையெழுத் தான பேப்பர் ஒரு நோட்டில் வைத்து சாரங்கன் தூக்கி பின் சீட்டில் போட்டான். நெளிந்து வளைந்த ஜோதியின் கையெழுத்து வெளிதெரிந்தது. 
அதையே உற்றுப்பார்த்தான். கழனியில் கூழ் குண்டானில் ஏடாய் இருந்ததை எடுத்துவிட்டு அதில் வெறும் விரலால் ஜோதி என்று எழுதினான். அவன் அம்மா எழுத்தைப் பார்த்து  'தன் பிள்ளை என்னமா படிக்குது' என்று பெருமை பட்டாள். 
 ஜோதிக்கு கட்டியாகப்போட்டு கருவாட்டுக்குழம்பு ஊற்றினாள். ஜோதியின் அப்பாவுக்கு கூழ் கரைத்து ஊற்றினாள். மூவரும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அந்த காட்சிகள் மறையவேயில்லை. கார் கதவை ஜோதி கையில் பிடித்திருந்தான். கார் ஸ்டார்ட்டானது. ஓட்டுநர் கதவு சாத்துங்க என்றபோது பின் சீட்டில் அம்மா அப்பாவும் உட்கார்திருந்தார்கள். கார் வேகமெடுத்தது. ஜோதி திடுக்கிட்டு சற்று ஓட்டமெடுத்து நின்றான்.

ஜோதி இந்த பணத்தவெச்சி உன் பையனை பதினொன்னாவது டவுனுல நல்ல பள்ளிக்கூடமா சேத்துடுபா அப்புறம் எங்களுக்கும் கமிஷன் இதிலேயே குடுத்துடுபா" என்று கூடவே பேசிக்கொண்டு வந்தார்கள். இரவின் சத்தங்கள் காற்றைவிட மென்மையானது.ஆனால் இருட்டைவிட கனமானதாக இருந்தது. சிறிய கூரைவீட்டின் குறுக்கில் நான்கு அடிஉயரம் கொண்ட குறுகுச்சுவர் இருந்தது. அவற்றின் மேல் சிம்னி விளக்கு எரிந்தது. கூரைக்குகீழ் பரவிக் கிடந்த மங்கிய வெளிச்சம் மூங்கில்களை கூரையின் நரம்புபோல் காட்டியது. கோரைப்பாயில் இரு முதுகுகள் ஒட்டியபடி  ஒடுங்கிப்படுத் திருந்தார்கள்.
"நாம வாழறதுக்கு அதவுட்டா இன்னா வழி இருக்கிது. அதயும் வித்தாச்சி இனிமே எப்படி வாழப்போறோம்" என்றாள் மஞ்சுளா.

"கவலப்படாதே நம்ம பையன் நல்ல மார்க் எடுத்துக்கிறான் டவுனுலயே பெரிய ஸ்கூலாம் அங்கியே பாம் வாங்கியாந்துட்டான். பணம் செலவானாலும் பரவாயில்ல அந்த ஸ்கூல்ல சேத்துட்டா பையன் நல்ல நெலமைக்கு வந்துடுவான். அங்க படிச்ச ஆளுங்களாம் பெரியப்பெரிய ஆளுகளாத்தான் இருக்காங்களாம். நம்ம பையனும் பெரியாளா வந்துடுவான். அதுக்கப்புறம் நமக்கு ஒரு வேள  தண்ணியாவது  ஊத்தமாட்டானா" 

"அய்ய புள்ளய இன்னா அப்பிடி சொல்றே. நாமோ அப்பிடியா அவனை வளத்துக்கிறோம் மஞ்சுளா திரும்பினாள். ஜோதியின் முதுகில் இடைவெளி இல்லாமல் சதைகள் அழுந்தின. அவனும் திரும்பினான் .விளக்கு அனைந்தது. 

தலைமையாசிரியருக்கு ஒரு டேபில் சேர் இருந்தால் கூட பள்ளியை நிர்வகிக்கமுடியும் என்பது வருகிற பெற்றோர்களுக்கு எங்கே தெரிகிறது. சிம்மாசனம் போன்ற சேரையும் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையையும் பார்த்தவுடன் மிரண்டு போகிற அப்பாவிமக்கள் சேர்க்கை நாடக கூட்டத்தில் யார் யார் வாய் எவ்வளவு கேட்பினும் கொடுத்துவிட்டு போகிறார்கள். ராஜா பாம் வாங்க பள்ளிக்கு வந்திருந்தாலும் தலைமையாசிரியர் அறைக்கு வருவது இதுதான் முதல் முறை ஜோதியும் ராஜாவும். அறைக்கு முன்னால் நின்றார்கள். கதவை அடிக்கடி திறந்து மூடும்போது. செத்த பிணத்திலிருந்து  வருவது  போல் ஒரு வாடை வந்தது. அறை தெளிவில்லாமல் புகைமூட்டமாய் இருந்தது. வருகிற பெற்றோரின் தோற்றத்தின் அடிப்படையில் மரியாதை கூடியும் குறைந்தும், சுத்தமாக பிடிங்கியும் விட்டுக்கொடுத்தும்  சேர்க்கை நடக்கிறது என்பதை ஜோதி உணர்ந்தான். 

"அய்யா கொஞ்ஜம் கொறச்சிகுங்கோ" என்று தொடங்கும் முன்னே  "தோபாருயா கேக்குறத கட்டிடு போ" என்றவர் "வெளியில கூட்டத்த பார்த்தே இல்ல பேசாம கட்டிட்டு கெளம்பு" என்றது. சேர்க்கைக்குழு ஒருவேளை நம் மார்க்கை சரியாக கவனிக்காமல் கேட்கிறார்களா என்று சந்தேகப்பட்ட ராஜா "சார் நானுத்தி இருபத்திநாலு  மார்க்சார்" என்று சற்று பெருமையாகவும் சொன்னான். சுயமரியாதைக்கு கலங்கம் ஏற்பட்டு விட்டதைபோல் மையத்திலிருந்தவர் சற்று கோபமாக "டே எங்க பையன் 155 பேர் நாணுத்தி முப்பதுக்கு மேலடா. அதுவும் உங்க ஸ்கூல்ல நானுத்தி அய்ம்பதுன்னா எங்க ஸ்கூலுக்கு இரநூத்தி அய்ம்பதுதான் அதன் மதிப்பு. பணம் கட்டுனா கட்டு இல்லனா கெளம்பு காத்து வரட்டும். அவன் T.Cய குடுத்துடுங்க சார்" என்றார். பையன் சற்று அதிர்ந்து போனான். ஜோதிக்கு கனவெல்லாம் நிறைவேறாம போயிடுமா என்று பதட்டப்பட்டான். ராஜா காத்து வரட்டும் என்ற உபதேசம்  நிறைய செய்தித்தாள்களில் படித்த நாபகம் வந்துக்கொண்டிருந்தது. ஜோதி தன் பாக்கட்டை காலியாக்கிக்கொள்ள கெஞ்சினான். உள்ளறைக்கு சென்று திரும்பியபோது ஊருக்கு திரும்ப பஸ்பேர்மட்டும் இருக்கிறதா என்று பாக்கட்டை தொட்டுப்பார்த்தான் ஜோதி.  "தலைவரே கும்புடப்போன தெய்வம் போல வரீங்க"


"இன்னா, ரிஜிஸ்டர் வர புதன் கிழமைதான். பணமெதுனா வேனுமா ஜோதி. ரிஜிஸ்டர் அன்னிக்கி உன்பொண்டாட்டி, பையன் எல்லாம் கூட்டியாந்துடு."

"அதெல்லாம் இருக்கட்டுந்தலைவரே பையன இங்கதான் டவுனுல பதினொன்னாவது சேத்துட்டேன். டெய்லி இங்க வந்துபோக கஷ்ட்டமா இருக்கும்னு எங்கவீட்லலாம் சொல்லுச்சி, உங்களாண்ட இருக்கிற பணத்துக்கு இங்கியே ஒரு எடம் பாத்து வாங்கிக்குடுத்துடு. நான் ஓலக்கூரக்கூட போட்டுக்கிறேன்" 

"அப்பிடியா செரி செரி இதெல்லாம் முடியட்டும். நம்ம பசங்க இருக்கிறாங்க ஒடனே முடிச்சி குடுக்கச்சொல்றேன். வரட்டுமா" சாரங்கன் எப்படியும் முடித்துவிடுவார் இனிமே நாமலும் இந்த டவுனுலதான் பிழைப்பு தேடனும் போல என்று தனக்குள் நினைத்தான். 

பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, 'தள்ளிவிடச்சொல்லி கிளம்பும் வண்டியைப்போல்' காலையில் அங்கங்க நிற்பதும் லேசாக நகருவதுமாய் இருந்தார்கள் மனிதர்கள். மஞ்சுளாவும் ஜோதியும் புங்கைமரக்குளிர்ச்சியில் தஞ்ஜமடைந்திருந்தார்கள். நேரம் கழித்து சாரங்கன் காரில் வந்தான் .ஜோதி காரைப்பார்த்ததும்  ஊசலாடிய உயிர் சுகம்பெற்றதான சந்தோசத்துடன் எழுந்துபோனான். சாரங்கன் பார்த்தான் இவன் நின்ற இடத்திற்கே வந்தான். தன் கணவனை ஏமாற்றுவதாக நினைக்கக்கூடாது என்பதற்காகவே மஞ்சுளாவிடம் சொன்னான். "ஏம்மா நான் டவுனுப்புள்ளா விசாரிச்சிட்டேன் எங்கியும் நாம  சொல்ரரேட்டுக்கு ஒரு எடமும் கெடைக்கல உங்களுக்குங்கிறதால நம்ம கட்சிக்காரப்பையனாண்ட ஒரு வீடு இருக்கிது. அவன் மார்க்கெட் பக்கமா புதுசா வீடூ கட்டிக்கினு போயிட்டான். இந்த வீடு வித்துடுறான். அது கோயில் எடம், ஆனா இருபது வருஷத்துக்கு மேல நெறைய  பேரு மெத்த, மாடிலாம் கட்டிங்கிறாங்கோ. யாரும் ஒன்னும் செய்யமுடியாது. அது உங்களுக்கு சரிபடுமானு பாருங்க. சொன்னிங்கன்னா உங்களுக்கு சேரவேண்டிய பணத்திலயே வீட்டுக்காரனை பத்திரமெல்லாம் உங்கபேருக்கு எழுதிகுடுக்கச் சொல்றேன் யோசனைப்பண்ணி சொல்லுங்க நானு ஆபீஸ் உள்ள போய்வரேன்" என்று கார் நின்ற பக்கமாக போனான் சாரங்கன்.

"இன்னா கோயில் எடம்னு சொல்றார். பட்டா கெடையாது. எதுனா பிரச்சனை வரப்போகுது."

"வேற இன்னா பண்றது. அங்க இருக்கிற அவ்ளோ பேருக்கு வராத பிரச்சைனையா நமக்கு வரப்போகுது. பையன் நல்லா படிக்கனும்னா வந்துதான் ஆகனும்"  என்று தீர்மானமாய் இருந்தான் ஜோதி.

E.B காரன் வந்து அட்டையைக்கேட்ட போதுதான் இது இரண்டாவது கணக்கெடுப்பு என்பதை கணக்கிட்டாள் மஞ்சுளா. டவுனுக்கு நேற்று காலையில்தான் வந்ததுபோல நினைத்தாள். தவிற்கக்கூடாத கடமையைப் போல் அவசர அவசரமாய் தண்ணீர் தெளித்து இருவேளையும் வாசலைப் பெருக்குவது நகரத்தில் வசிப்பவர்களுக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது. பள்ளியிலிருந்து வந்த ராஜா பையை தூக்கிப்போட்டான். எப்பவும் அவன் அப்படி நடந்துகொண்டதில்லை. புத்தகங்களுக்கு மரியாதைகொடுக்க வேண்டும் அவன் அப்பா சொல்லுவார். அவனேக்கூட புத்தகங்களை தேவையில்லாமல் மடிப்பதோ கிறுக்குவதோ செய்யமாட்டான். மஞ்சுளா வழக்கமான இருப்பிடத்தில் பை இல்லாமல் இருப்பதைக்கண்டாள். எடுத்து ஓரமாகவைத்தாள். சமையல் செய்வதற்காக ஆய்த்தமானாள்.

"அம்மா அந்த ஸ்கூல் புடிக்கவேயில்லமா நெறைய கண்டிசன் போடுறாங்கமா முடி ஒட்ட வெட்டனுமாம், மூனு சட்டவச்சிக்கினு பேஜ்சி தைக்கனுமாம், பெல்ட், செருப்பு இல்லாம வரக்கூடாதாம். சின்ன தவறுக்கு கூட அசிங்கமான வார்த்தைகளில் திட்டுறாங்க. எனக்கு எரநூறு குடும்மா அப்பத்தான் நான் பள்ளிக்கோடம் போகமுடியும்." கத்திரிக்காய் நறுக்கி தண்ணிரில் போட்டிருந்தவள் பையனிடம் வந்தாள். "எப்பா இன்னாடா இப்படி சொல்றே. கிராமத்தில நெலத்த வித்ததுக்கும் இந்த வீட்ட வாங்கினதுக்கும் சரியாப்போச்சினு கையில இரண்டாயிரம் குடுத்தான். அதவச்சி  இதுவரைக்கும் தள்ளிம் போச்சி திடிர்னு எரநூறு குடுனா எங்கடா போறது. உங்கப்பா போற கொளுத்து வேலைகூட ஒரு நாள் கெடைக்குது ஒம்பது நாளைக்கு இல்லைன்றாரு. நான் என்ன செய்யிறது".  ராஜா எதுவும் பேசவில்லை அமைதியாய் இருந்தான். புத்தகப்பையை தன்னிடம் இழுத்தான். எழுத ஆரம்பித்தான். கண்ணிர் சொட்டு நோட்டில் விழுந்தது. எதிர்ப்பில்லாத மெளனம் எதிர்மறையானவரை பேசத்தூண்டிக்கொண்டே இருக்கும்போல. மஞ்சுளா பக்கத்தில் உட்கார்ந்தள். "ராஜா ரெண்டு நாளைக்கு போபா. நானு பக்கத்து தெருவுல மிட்டாய் கடைக்கு வேலைக்கு கூப்பிட்டுருக்காங்க அங்க அட்வான்ஸாவது கேட்டுப்பாக்கிறேன். "சொன்னதும் சமாளிப்பத்தைத் தவிற வழியில்லை காலையில் சற்று சீக்கிரமாகச் சென்றுவிட்டால் முன்னாடியே கிளாசில் உட்கார்ந்துவிடலாம் என்று நினைத்தான். அப்படியே அவசரமாக பள்ளியில் நுழைந்தான். காவலர் கூண்டுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஆசிரியர் திடீரென திரும்பினார் "டேய்...டேய் நில்லு. நேத்தே சொன்னேன் இல்ல முடிவெட்டனும் எல்லாம் மாட்டிக்கினு வரனும்னு. உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும். அப்பிடியே ஓரமா நில்லு. ஹெட்மாஸ்டராண்ட போனாத்தான் நீயெல்லாம் உருப்படுவே." தலையை குனிந்து நின்றவன் கண்களால் மழைப்பொழிந்தான்.


"டே... ஓடு... ஓடு..." என்று பையன்களை விரட்டினார். இவர் எதிர்ப்பார்க்கின்ற குறைபாடு நிறைந்த இன்னும் இருவர் வந்தார்கள். சற்று நிறுத்தி பிறகு 'ஓடு ' என்று துரத்திவிட்டார். கேஸ் கிடைக்காதபோது பிளாட்பாரத்தில் தூங்கு வோரை இழுத்துச்செல்லும்  போலீஸாக மாறி தற்போது இவன் போதுமென்று ராஜாவை இழுத்துச்சென்றார். "நான் அவ்ளோசொல்லி அனுப்பியும் நீ அப்பிடியே வரனா நாங்க என்ன கேனையங்களா. போ...போ போடா" தலைமையாசிரியர் அறைக்கு கிட்டவந்தபோதுதான் சத்தம் அதிகமானது. உள்ளே தள்ளினார். பையன் "சார்...சார்..."என்று சொன்னதுடன் ஆசிரியரை பரிதாபமாகப்பார்த்தான். அறையில் நுழைந்தான். ஆசிரியர் மைய ஆசிரியரைப்பார்த்தார். எதுவும் பேசவில்லை. "இதெல்லாம் உருப்படாதுங்க சார். அது மூஞ்சியபாத்தாவே படிக்கிறாமாதிரி தெரியலே. ரோட்டுல பொறுக்குறாமாதிரி இருக்குது. உங்கம்மா சோத்த மட்டும்  போட்டு தொரத்திடுவாங்களா புள்ளையப்பத்தி கவலையில்லையா. இதுங்கள்லாம் படிக்காது. T.Cய குடுத்து துரத்திடனும். உங்கப்பாவ கூட்டிக்கினுதான் வரனும் இல்லனா வராத" எந்த சலனமும் இல்லாமல் சொன்னார்.


ராஜா கஷ்டப்பட்டான். அம்மாவை பற்றி சொன்னபோது கோபம் வந்தது. இப்போது அழவில்லை துடைத்துக்கொண்டான். வீட்டிற்கு போனபோது பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் விசாரித்தான். "மிட்டாய் கடைக்கு வேலைக்கு போறேன்னாங்கபா' என்றதுடன் சரி. அவன் முதுகில் பேக்கின் பாரம் அழுத்தியது. இறக்கும்போது தான் பாரம் அதிகமாய் தெரிகிறது. கிராமத்தில் வீட்டுச்சாவியை கதவின் பக்கத்தில் வைப்பார்கள். அதைபோல இங்கு வைத்திருக்கிறார்களா என்று பார்த்தான். அவன் கனிப்பு சரியாக இருந்தது. பையை கழட்டி எறிந்தான் .கதவு சாத்திவிட்டு தரையில் படுத்துவிட்டான். மஞ்சுளா நடந்துவரும் போது அவள் நிழல் அவள் காலடிக்கு கீழாகவே வந்தது. வீட்டின் கதவில் பூட்டு இல்லாமல் போக திடுக்கிட்டாள். நடை சற்று வேகமானது. மனசு பல வாதங்களை எழுப்பியது. கதவை திறந்தாள். இன்னும் திடுக்கிட்டாள். "டேய்.. ராஜா இன்னாடா பள்ளிகோடம்  போகலியா"  அவன் தூங்கி விட்டிருந்தான். அவள் மீண்டும் தட்டி எழுப்பினாள். முகத்தை திருப்பிகொண்டான். கண்களில் கண்ணிர் காரைத் தரையில் விழுந்தது. தன்னால் முடிந்தளவு தரையை ஈரமாக்கியது. அவள் கீழே உட்கார்ந்தாள்.

"ராஜா இன்னாடா'எழுந்து உட்கார்ந்தான். " அந்த ஸ்கூலே வேனாமா. நான் வேற ஸ்கூல்ல சேர்ந்துக்கிறேன். அங்கப்படிச்சாலும் நான் பாஸ் பண்ணிடு வேன்"


"யப்பா சோறு  போடுற நெலத்தக்கூட உன் படிப்புக்காக உட்டுட்டு வந்துட்டமேடா. இப்ப, இப்பிடி சொல்ரியே. எப்பிடிப்பா. வத்தியாரு எதுனா சொன்னாங்களா, நான் ஒன்னா சொல்லி உட்டுட்டு வரேன் வாபா. இந்த டவுனுலயே அந்தமாதிரி பள்ளிக்கோடம் கெடையாதாம்பா"


"அம்மா உனக்கு தெரியாதும்மா எங்க கிளாஸ்சில  பசங்களே யாரோ வாங்கி வச்ச பேருல, இவுனுங்க குளிரு காய்ராங்கனு பேசிக்கிறாங்கம்மா" மஞ்சுளா எதுவும் பேசவில்லை அழ ஆரம்பித்தாள். பிறகு கதவு தாளிட்டு உட்கார்ந்து "அந்தாளு வந்தா நான் இன்னா பதில் சொல்லுவேன் தெனமும் கல்லயும் மண்ணயும் சொமக்கிறானே பாக்கிறவங்களுக்கு கேவலமாப்பூடுமே, ஊர உட்டே போனா அவன் புள்ள ஓடியாந்துடுச்சினு பேசுவாங்களே" என்று அழுதுகொண்டே மாரை பிடித்துக் கொண்டு தரையில் சாய்ந்தாள். பையன் "அம்மா.. அம்மா.. எந்திரிம்மா. இன்னாச்சிம்மா. எந்திரிமா நான் போறேன்மா. அந்தப்பள்ளிகோடமே போறேன்மா." மஞ்சுளாவை தட்டியும் முகத்தை அழுத்தியும் சொன்னான். இதுவரை தண்ணிர் தெளிக்க வேண்டும், கொடுக்கவேண்டும் என்று தோன்றவில்லை. மஞ்சுளா லேசாக கண்விழித்து. கொஞ்ஜம் தண்ணிக்குடுபா என்று கேட்டதும் சொம்பு எங்க டம்ளர் எங்கனு தேடி தண்ணிர் மொண்டு வந்து குடிக்கக் கொடுத்தான். குடித்தப்பிறகு முகத்தில் லேசாக தண்ணிர்போட்டு கழுவினான். சற்று நேரத்திற்கு பிறகு உட்கார்ந்தாள். பையன் எழுந்து பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். மஞ்சுளாவும் தலைவாரி முகத்தை கழுவிக்கொண்டு கிளம்பினாள். பள்ளியின் கேட்டை பார்த்தபிறகுதான். நம்ம சொன்னது சரியாத்தான் இருக்குமோ என்று பிரமித்தாள். கண்ணாடிக்கதவோரம் நிறுத்தப்பட்டாள் உள்ளே யாரோ பேசிவிட்டுவெளியே வந்தபோது சில்லென்ற காற்று மஞ்சுளாவின் முகத்தில் அப்பியது. அது வெளியில் சுவாசிக்கும் காற்றைப்போல் இல்லை. அறையில் யாரும் இல்லாதபோதே உள்ளே அனுமதித்தார்கள். ராஜா மஞ்சுளாவுக்கு பின்னாக வந்து நின்றான். அவன் சுவாசித்த காற்றின் வாசம் பிடிக்கவில்லை. இரண்டு முறை யாருக்கும் தெரியாமல் மூக்கை தேத்துக்கொண்டான்.


"ஏம்மா அவனை பள்ளிக்கூடம் அனுப்புறியா , காயிலாங்கடை குப்பபொறுக்க அனுப்புறியா. அதுந்தலையும்,  அதுமூஞ்சியும் சோத்த மட்டும்  ஆக்கி, ஆக்கி கொட்டிட்டா போதுமா. நீ இருக்கிறாபோல தான் புள்ளியும் வெச்சிங்கீற போமா. வெளிய போமா. இவன்லாம் இந்த பள்ளிகோடத்துக்கு லாய்க்கு இல்ல.  கூட்டிக்கினு போமா" மஞ்சுளா அழுதாள்."சார் இனிமே ஒழுங்கா அனுப்புறேன் சார். இந்த ஒரு முறை மண்ணிச்சிடுங்கசார்." என்று தடாலென்று காலில் விழுந்துவிட்டாள்.

"ஏம்மா பொம்பளைய அனுப்பிட்டு உங்க ஊட்டுக்காரு எங்கப்போயிட்டாரு. போயி அவுற அனுப்புமா. அவுராண்டசொல்லி அனுப்புறோம் போமா"  அம்மா காலில் விழுந்ததை பார்த்து மல மல வென்று அழுதுவிட்டான். தாமதப்படுத்தாமல் மஞ்சுளாவை தூக்கினான். ராஜாவுக்கு அந்த அறை புகை மண்டிக்கிடப்பது போன்று  தோன்றியது. ஏமாற்றத்துடன் கதவைத்திறந்தான். மஞ்சுளா வெளியே வரும் வரை கதவைப்பிடித்திருதான். மஞ்சுளா வெளியே வருவதற்குள். நல்ல வளர்த்தியானவள், பெரிய முலைகளைக்கொண்ட பெண்  பையனோடு உள்ளே நுழைந்தாள். "வாங்க வாங்க நம்ம 'பி.டி.ஏ'  தலைவர் சொன்னாரே அவுங்கதான நீங்க ஒக்காருங்க. பையனை கிளாசுக்கு அனுப்பிடுங்க. அடிக்கடி  வாங்க. எப்படி படிக்கிறானுவிசாரிங்க" அவள் கலையாத புடவையின் மடிப்பு  பக்க முலையை வெளியரங்கமாய் காட்டியிருந்தது. 

ராஜா அம்மாவை வளியே அழைத்துவந்தான். கேட்டுக்கு வெளியே விட்டு "அம்மா அங்கே கடையாண்டையே  இரு வரேன்" கண்னாடி அறையில் அவள் இருந்தாள். இவன் நேராக உள்ளே நுழைந்து காரித்துப்பினான். மீசையிலும் முகத்திலும் எச்சில் அப்பிக்கொண்டது. அவர் கைத்துண்டு எந்த பாக்கெட்டில் இருக்கிறது என்று தேடுவதற்குள் வேகமாக வெளியே  வந்து ஓடினான்.

"இன்னாடா எங்க போனே". என்றாள் மஞ்சுளா அவமானங்களையும் மீறி.

"ஏண்டா வெள்ளக்காரன்  "தோள உறிச்சி போட்டுட்டிங்கனு கேட்டு வந்தேன். நீ கவலப்படாதம்மா நான் எப்பிடியாவது படிச்சி  பாஸ் பண்ணிடுவேன். தன் வீட்டிற்கு முன் ஒரு ஜீப் நின்றிருந்தது. சிலர் வருசையாக நின்றனர். ஒரு அதிகாரி கையெழுத்து வாங்கிக்கொண்டு எதையோ கொடுத்தார். நான்கு போலிஸ்  முன்னும் பின்னுமாக உட்கார்ந் திருந்தனர். போலீஸ் கைகளில் கணத்த தடியிருந்தது. மஞ்சுளாவும்  ராஜாயும் எதோ நடக்கிறது என்று யூகித்து வேகமாவந்தார்கள். ஜோதியை தொடுகிற தூரத்தில் வந்தபோது அவன் கையெழுத்துப் போட்டு பணத்தை வாங்கினான். அவன் சட்டை கிழிந்திருந்தது. அவர்களைபார்த்தும். ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்குப்போனான். பணத்தை தூக்கி மூலையில் அடித்தான். மஞ்சுளா "இன்னாச்சி" என்றாள் பதட்டதுடன் மீண்டும்  "சட்டை கிழிஞ்சியிருக்குது  இன்னாச்சி"

"எல்லாம் போச்சி மஞ்சு எல்லாம் போச்சி கட்சித்தலைவர்து நூற்றாண்டு நெனைவு நாள் வருதாம், அவர் நெனைவா பூங்கா, கோயில், கொளம் ,ரோடுனு எல்லாம் புதுசா போடப்போறாங்களாம் அதனால கோயில் சுத்தியிருக்கிற எடத்த எல்லாம் இடிக்கப்போறாங்கங்களாம் அதுக்கு பதிலா வேற எடத்தில எடம் தறாங்களாம். ஒடனே அதுல போய் வீடுகட்டிக்கனும்னு அய்யாயிரம் குடுத்திருக்கிறாங்க" என்று அழுதான். அதற்குமேல் பேசமுடியவில்லை ஜோதி அழுததைப்பார்த்து மஞ்சுவும் ராஜாவும் பள்ளியின் நடவடிக்கைக்காகவும் சேர்ந்து அழுதார்கள். அவர்களின் அழுகையை நிறுத்தி ஜோதி அழுகையை அடக்கினான். பேச்சை திசைத்திருப்பினான். 'மஞ்சு எதுக்கு சொம்மா அழுற நடக்கிறது நடக்கட்டும்  சிலதெல்லாம் எடுத்து. மூட்டைக்கட்டி வையி நானு நம்ம ஊருவரைக்கும் போயிட்டு வரேன்' என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான் .   
ஜோதி கண்திறந்தபோது புல்லில் முக்கிளை பூ ஒன்று புதிதாக பூத்திருந்தது.



நம்புழுதி
 

   
     

            
                                                                                                

Sunday, September 26, 2010

திரை என்கிற 'தரை'

காஞ்சியில் சில நண்பர்களால் 'தரை' என்கிற திரையமப்பு தொடங்கப்பட்டுள்ளது.2010 ஜூன் முதல் டிசம்பர் முடிய என்கிற  ஒரு வருடத்திற்கான திட்டத்துடன் தொடங்கியிருக்கிறார்கள். 'ரன் லோல ரன்' இதில் தொடங்கி ரன்னாகிக்கொண்டிருக்கிறது. இதில் தேர்ந்தெடுத்த உலக சினிமாவை வாரந்தோறும் திரையிடுகிறார்கள். இவர்கள் வீதியில் கிடக்கும் காய்ந்த சருகுகளில் இலக்கிய எழுத்தைப்பார்த்தாலும் தூசுத்துடைத்து அதன் வீரியமிக்க கருத்துக்களை விவாதிக்கும் வே.நாராயணன் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள். தற்போது இலக்கிய படைப்புகளின் பார்வையில் பரந்து விரிந்திருப்போர், சந்தர்ப்ப சூழ்நிலையால் பார்வையின் இடுக்குகளில் மறைந்திருப்போர் எழுத்துக்களின் நாடித்துடிப்பை ரத்தம் வடியாமல், சீழ்பிடிக்காமல் படைப்பை லேசர் ஆபரேசன் செய்கிற விர்ப்பன்னர்கள். (ஆனால் மதிப்புக்குரிய (படைப்பாளியை)  சுந்தரராமசாமியை விவாத்தத்தின் முலம் கண்ணிர் சிந்தவைத்தது. சற்று மனவருத்தத்தை தரக்கூடியதாகத்தான் எனக்குத்  தோன்றுகிறது) அமைப்புகள் தொடர்ந்து நடத்துவதில் இழப்புகளை தாம்பத்திய குறைபாடு போல் மெளனமாய் வைத்துக்கொண்டு, மேலும் இலக்கியத்தை பலரும் ருசிக்கச்செய்வதில்  அரசுக்கு ஆதரவாய் தண்டோரா போடுபவன்போல் உற்சாகமாய் செயல்படுகிறோம். இதன் ஒரு பகுதியாகத்தான்  'தரை' அமைப்பின் செயல் தொடர்கிறது.

கடந்த ஞாயிறு  19.9.2010 ஆறுமணியளவில் திரையிடப்பட்ட சீனப்படம் 'The Rood Home' எச்சை உறிஞ்சிக்கொள்ளும் முத்தங்களும்,வாழ்க்கை ஓடுகிற வேகத்துக்கு உணர்வுகளை அலையவிடாமல் ஒருவர்மீது வைக்கும் உண்மையான அன்பு எந்த கஷ்ட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்பதை மிகவும் யதார்த்தமாக படம்பிடித்துள்ளார்கள். சந்தோசமான மனித வாழ்வுக்கு இயற்கையை மாற்ற முயற் சிக்கும் போதுதான் பிரச்சனைவருகிறது. படத்தில் மனசின் சூழலுக்கு   ஏற்றது   போல்    கலர் மாற்றியமைத்ததில் படத்துக்கு எந்த வலுவும் சேர்த்தது போல் தெரியவில்லை.  இறந்த மனிதன் உடல் சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் உயிரோடு இருப்பவனை கஷ்ட்டப்படுத்துவது எப்படி சரி என்று தெரியவில்லை. இதுதான் படத்தின் குறை.

அதற்கடுத்ததாக 'The Father'  Iran படம். தன்னை பாசமாய் நடத்தியத் தந்தை திடிரென்று மரணத்தை தழுவுகின்றார். தன் குடும்பத்தை காப்பாற்ற சிறுவன் நகரத்துக்கு சென்று ஒரு கடையில் வேலைசெய்கின்றான்.பல வருடங்கள் கழித்து தன் தாயும்,தங்கையும் பார்க்க வருகிறான்.வரும்வழியில் ஒரு கால்வாயில் தண்ணீர் அருந்தும்போது. தந்தையின் போட்டோ தண்ணிரில் விழுந்துவிடுகிறது. தந்தையின் ஞாபகம் வரும் போதெல்லாம் அந்தப்போட்டோவை பார்த்து ஆருதலடைந்தவன். வானத்தின் உயரத்தில் பருந்து சிறகை அசைக்காமல் பறப்பதுபோல் ஓடுகிற தண்ணிரில் போட்டோ மிதந்துச்செல்கிறது. சிறுவன் பின்தொடர்ந்து ஓடுகிறான். ஆறுதலாய் இருந்த ஒரே உறவும் மறைந்ததற்கான காட்சிப்படுத்துதல் அது. தமிழ் படங்களில் சோகத்தை வெளிப்படுத்த கத்திக்கதறி, புரண்டு, அழுதும் கூட பார்வையாளனுக்கு ஏற்படுத்த முடியாத ஒரு வலியை தண்ணிரில் மிதந்து மறையும் போட்டோ ஏற்ப்படுத்திவிடுகிறது.

தாய் தன் அப்பாவுக்கு  செய்த சேவையை இப்போது வேறு ஒருவருக்கு செய்கிறாள் என்பதை நேரடியாக பார்கின்றபோது. தான்  வாங்கிவந்த துணி மணிகள்  எல்லாம் வீசி எறிந்துவிட்டு ஓடுகிறான். சிதைந்த துணி மணிகள் சிறுவனின் ஆக்ரோஷமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்படத்தில் நூறு வாகனத்தில்  கத்தியும், உருட்டுக்கட்டையும் ஒரு ஐநூறுபேர் வண்டியில் நிறப்பிகூச்சல் போட்டால் தான்  வில்லன் கோபமாய் துரத்துகிறான் என்பதை வெளிப்படுத்திக் காட்டமுடயும். தனக்கு ஆதரவு தருகிற மனுஷனோடு தன்னை மகன் பார்த்து விட்டு ஓடுவதை, பார்க்கும் தாயின் முகத்தில் வாழ்வு எவ்வளவு சிக்கலான கொடூரங்கொண்டது  என்பதை தெளிவுபடுத்துகிறது.

அடாவடி போலீஸ்க்காரனையே இதுவரை திரையில்  பார்த்திருப்போம்.   நியாமான மனித உணர்வை வெளிப்படுத்தும் போலீஸ், அவருக்குள்ளும் இயலாமை, சிறுவனுக்கும் மரியாதை கொடுக்கும் முறை எல்லா உத்தியோகத்தை போல அதுவும் ஒரு வாழ்வாதாரத்துக்கான வேலை, இதற்ககு சமூக அக்கறை சற்று கூடுதளாக இருந்தால் போதுமானது.பெருசா தியாகம் செய்கிற பணி, போற்றப்பட வேண்டியபணி என்றெல்லாம் கிடையாது என்பதை அதில்வரும் போலீஸ் பாத்திரம் நிறுவுகிறது.

தாயின் அன்பும் தங்கையின் பாசமும் இந்த போலீஸ்சால்தான் கிடைக்காமல் போகிறது என்று போலீசை பழிவாங்க நினைக்கிறான். அதில் தோல்விகண்டு அதற்கான நேரங்கிடைக்கும், அப்போது நிறைவேற்றலாம் என்று சிறுவன்  மீண்டும் நகரத்திற்கு சென்றுவிடுகின்றான்.

சின்னப்பையன் தானே மனசை மாற்றி தன் குடும்பமாக இணைத்துக்கொள்ளலாம் என போலீஸ் நினைக்கிறான். அதில் பலமுறை  தோல்வி கண்டதும்  இனி தண்டனை தான் சரியான தீர்வு என்று கோபத்துடன்  போலீஸ் விலங்கை எடுத்துக்கொண்டு சிறுவனைத்தேடி  நகரத்திற்கு வருகிறான். தொடர்ந்து தேடலுக்குப்பிறகு சிறுவனை விலங்கிட்டு அழைத்துச் செல்கிறான். போகும்போது, தன் கிராமத்துக்கு போகிற வழியை தவறவிட்டு பாலைவனத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். எந்தப்பக்கமும் வழி தெரிய வில்லை. வாழ்வு நிர்கதியாய் மாறுகிறபோது. எதிரெதிர் என்னங்கோண்டவர்களை சூழ்நிலை  எப்படி ஒத்த கருத்துக்கு மாற்றுகிறது. என்பதின் பதிவுடன் படம் நிறைவுபெறுகிறது.

நிறைவுக்காட்சியின் முத்தாய்ப்பு.  ஆரம்பத்தில் கால்வாயில் தந்தையின் போட்டோ காணாமல் போகிறபோது கைவிடப்பட்டநிலையை குறிக்கிறது. பாலைவனத்தில் போலீஸ் மயக்கமடைந்து விழுகின்றான். சிறுவன் மனம்மாறி தண்ணீரைத்தேடி ஓடுகிறான். தூரத்தில் ஒரு கால்வாயில் தண்ணீர் போகிறது. போலீஸ்க்காரனை இழுத்துச்சென்று பாதி  முகம் நனையும்படி  கால்வாயில் போட்டான். தானும் தண்ணீரில் முகம் முழுகும்படியாக விழுகிறான். போலீஸ்காரன் பாக்கட்டிலிருந்து , தாய், தங்கை யனைவரும் சந்தோசமாய் இருக்கும் குருப்போட்டோ தண்ணிரில் மிதந்துவந்து சிறுவனின் முகத்தில் முட்டுகிறது. சிறுவன் போட்டோவை எடுத்து  பார்க்கும்போது, போலிசை ஏற்றுக்கொண்டான். என்று  புரியவைப் பதோடு படம் நிறைவுபெறுகிறது.
                                                  படங்கள் வினையாற்றுகிறது.
ஏறக்குறைய இருபத்தி அந்து வருடங்களாக தமிழ்,மற்றும் ஆங்கிலஆக்க்ஷன், படங்கள் தீவிரமாக பார்த்துள்ளேன். இதுவரை ஏதாவது வினையாற்றிதா என்றால் மிகவும் குறைவுதான். அனால் ஜுன் 2010 முதல் காஞ்சிபுரம் தரை அமைப்பில் ஞாயிறு  தோறும் போடப்படும் படங்கள் (உலக படங்கள்) வினையாற்றுகின்றன. அவைகள் உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன்  பரிமாறுகின்றன. வினைகளை தனியாகவே எழுதலாம்.                           'தரை' தொடர்ந்து உற்சாகமாய் செயல்படவேண்டும்.

நம்புழுதி        

Wednesday, September 22, 2010

கட்டுரை

                                    ஆதிதிராவிடன் சலுகை சாதியல்ல

எங்கள் பாட்டன் பூட்டன் எல்லாம் அவமானங்களையும், பிறருக்கு உழைப்பை வழங்கியுமே தங்கள் வாழ்வை கழித்தார்கள். குத்துபட்ட முருங்கை மரத்தில் கசியும் பிசின்போல்' எப்போதும் கசக்கி பிழிதலையே உணர்ந்தார்கள். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்பதில் உறுதிகொண்டு சிலநேரம் சந்தோசம் பலநேரம் கசப்பிலும் காலம் கடத்தினார்கள். மின்சாரம் பாய்ந்த  உடலில் ரத்தக்கடத்தல்  நின்றுவிடுவது போல் மதிப்புக்குரிய முன்னாள் பண்ணையாளர், உயர்சாதி என தங்களை எப்போதும் விளம்பரப்படுத்திக்கொள்ளும் மனிதத்தன்மையில் நம்பிக்கையில்லாத நண்பர்களும் சேர்ந்து புதயலை தோண்டுவதாக எளியவர்களின் உழைப்பை பிழிந்து தங்களுக்கு செல்வம் சேர்த்துக் கொண்டார்கள். இதில் மின்சாரம் பாயாமலே உழைப்பாளியின் ரத்தம் சுண்டிவிட்டது. வாழ்வின்  சுவாரசியத்தை சற்றும் ருசிக்காமல்  கொடூரங்களை சுமந்தே 'பூட்டன்' மறைந்துவிட்டான். வெள்ளைக்காரன் தரிசனத்தால் 'பாட்டன்' கடைசி காலத்தில் சற்று நிம்மதியடைந்தான். அதனாலே அப்பன் பெயர் மாறியது. எறும்பு  தன் இரையை இழுதுச்செல்வதாக  வாழ்வு நகர்ந்தது. பெயர் மாற்றிக்கொண்டதால் வெள்ளைக்காரன் மோட்ச்சம் போகும் வழியை எல்லார்க்கும் காட்டும் பொறுப்பை சிலரிடம் தந்தான். பொறுப்பு, மையம், புள்ளி, மதிப்புடையது, மதிப்பில்லாதது என தன்னைத்தான் கட்டி நிருவனமயமாய் தொடர்கிறது. மாமன், மச்சான் தெரிந்தவர்கள், உண்டியலை எந்த வழியிலேனும் சம்பாதித்து நிறப்புகிறவர்கள், சாதிக்காரன் என்று பொறுப்பை பிரித்துக்கொண்டு அமைப்பைத் தொடர்ந்து  நடத்துகின்றோம்.

எந்த அறிஞர்களாலும்  கண்டுபிடிக்கமுடியாத  ரிப்பேர் ஆகாத ஒரே மெஷின்தான் அந்தக்கால அம்மா. விசேஷ நாட்களில் தேர்ந்த மஞ்சள் கிழங்கை உரசி பூசிய வெளுத்த முகத்தின் அழகும், கிளிமார்க் சிக்காயில் ஊரி கருத்த முடியில் மிச்சமாய் நின்ற வாசமும்,  ஆண்டை வீட்டின் மாட்டுக்கொட்டாயின் சாணத்தில் கரைந்து நாற்றமாய் உருமாறி வெளியேறும் தினந்தோறும்.       

அண்ணன் சமயக்கொள்கையை பரப்புகிற ஆயர் பொறுப்பில் அமர்த்தப்படுகின்றான். பிறகு அவன் சபைமக்களிடம் பேசும்போது. உங்களை ஆளுகிற அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. என்கிற தொனியிலேயே பேசி செயல்படுகிறார். கிராமங்களுக்கு செல்லும்போது கொழுத்தக்கன்றுகள் அளவுக்கு நாட்டுக்கோழிகளை அடிக்கத்தூண்டுகிறார்கள். 'செத்த பொணத்தை பருந்து தின்பதுபோல்' எழை கிராமக் குழந்தைகளை ஏக்கத்தோடு பார்க்கவைத்து தின்கிறார்கள். அரிசி மூட்டைக்கு மேல் சட்டியையும், கிழ் இரண்டு கொம்பு சொருகியது போல் அண்ணனுக்கு உருவம் மாறிவிட்டது. ஆசீர்வாதங்களை பொழிவதற்காக அவரே  கையேந்துகிறார் என்று கடவுள்   மீது பழியைப்போட்டு  வடக்கிலும், தெற்கிலும் வீடும் நஞ்ஜையும் வாங்கிப்போட்டார். அவர் செயல்பாடுகளை விமர்சிக்கும்  யாரையும் பழிவாங்கி ஏப்பம்விடுவார்.

தம்பி,  பள்ளி  படிப்பை  விட்டு  ஷகிலாவின்  படத்தை காலாவதியான திரையரங்கத்தில்
தேடுகிறான். வீட்டில் தந்தைக்கு அடங்கி நடப்பவன்போல் நடந்து. தன் பணியை செய் தாலும்  வஞ்சகமுள்ள எஜமானி வேலையாளை எப்படி பேசுவாளோ அதைபோல் அதைவிட கேவலமாய் தன் தாயை பேசக்கற்றுக்கொண்டான். ஒட்டகம் தொண்டை தண்ணியாக' தந்தை வைத்திருப்பதை    ஏமாறும்போது எந்த மன உறுத்தலும் இல்லாமல் பணப்பையை சுருட்டிவிடுகிறான். மற்றவர்களின் மனநோவுப்பற்றி கவலையில்லை  பொய்களை உண்மைபோல் குரல் உயர்த்தி பேசுகிறான்.

அக்காவும்,தங்கையும் தட்டுத்தடுமாறி படிக்கிறார்கள்.அடுக்குமாடியின் கண்ணாடி சன்னலை உற்று பார்த்துக்கொண்டே வருகிறார்கள். இவர்கள் தலைக்கு எண்ணெய் பூசிக்கொண்டு போவதால் இவளைச்சார்ந்தவளின் தலை எண்ணெயில்லாமல் சருகு போல் பறக்கும் பட்சத்தில் கேலிசெய்கிறார்கள். முன்னணி நடிகையின் நகை அலங்க்கரங் களுக்காக ஏங்குகிறார்கள். இக்காலத்திலும் கிராமத்தில் முல்லுகளை சுள்ளியை அடுப்பில் வைத்து ஊதி ..ஊதி புகையில் மூச்சுமுட்டும். அது வயதானவர்களுக்குதான் என்று ஒதுக்குவதுபோல்   சமூக அக்கறை, அரசியல், இலக்கியம் சார்ந்த எதையும் புறந்தள்ளிவிடுகிறார்கள்.

மாமன், யார் முடங்கினாலும் கண்டுகொள்ளாமல் தான் முன்னேற அதிகாரம் உள்ளவர்களின் உறுப்பை உருவிக்கொண்டே கிடக்கிறார்கள். கிருத்தவ நிறுவனம் தன் மனைவிக்கு புடவைதந்தால் தன் பெயரை மாற்றிக்கொள்கிறார். அரசாங்கம் அடுப்புதரும்போது எச்சறிக்கையாக சலுகை மதத்தை பதிவுசெய்கிறார். தினந்தோறும் பஞ்சு சிகரட்டும், மாமிமுசம், மதுவும்  இல்லாமல்  அவரால் வாழமுடியவில்லை.

பெரியப்பா பிள்ளைகள் பாட்டன் சம்பாதித்த முன்று சென்ட் வீட்டு மனையை  இரண்டு தலைமுறையினர் ஆண்டு,  தற்போது  குடும்ப அட்டையில்  தலைவர்களாய் வர்ணிக் கப்படுகிறவர்கள் நான்கு குடும்பமானபோது அதேமனையில்  பாகம்பிரிக்க அடித்துக் கொள்கிறார்கள். அந்த களேபரங்களில் சகோதரர்களின் ரத்தமும்,  சதையும்  பரிபோகிறது ஆயரிடம் முறையிடும்போது. தன்மேனியை குன்டூசியும் தீண்டாமல் பாதுகாத்து  இயேசுவின் ரத்தமும் சதையும் பெற்றுக்கொள்ள வாருங்கள். எனஅழைக்கிறார்.

நகரங்கடந்து பெண் கொண்டும்  கொடுத்தும் வாழ்கிறார்கள். சூலாயுதங்களில் பக்தி கொண்ட சொந்தக்காறர்கள். வாலிபர்கள் நல்ல ஆடைகளை உடுத்திக்கொள்ள சினிமாவை பார்த்து பழகுகிறார்கள். நல்ல அந்தஸ்த்து நிறைந்த காதலியை தேடி அலைகின்றார்கள். சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள  தன் மானத்தை மறந்து. நாக்கு தரையில் படும்படி குனிந்து விடுகிறார்கள். பஞ்சாயத்து செய்தபிறகு தங்கள் பாகமென்று கட்டாயமாய்  மறைமுகமாக பெற்றுக்கொள்கிறார்கள். தாய், தகப்பன் கஷ்ட்டத்தை பெற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள்  சீக்கிரத்தில் கட்டாயமாக மறந்துவிட,  விடா முயற்ச்சிசெய்கிறார்கள். காதுகளை அகலமாய் விரித்து தன்னை புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்று  எதற்கும் அடிமையாக துணிகிறார்கள். லாபம் ஈட்டமுடியாத சமூகப்பணியில், அறிவை வளர்த்துக்கொள்கிற முயற்சியில், மானத்தை இழந்து போகாததில், மனசாட்சியை மதிப்பதில், எதிலும் நீதியை மறந்து போகாமல் இருத்தலில் மிகமிக பின்தங்கியநிலையில் இருக்கிறோம்,  இனியும்  சலுகை சாதி என்று சொல்லிக்கொள்வதில் மார்தட்டி நிற்கக்கூடாது.   ஆதிதிராவிடன் சலுகை சாதி மட்டுமல்ல  எல்லா நிலைகளிலும் நீதியை முன்னிலைபடுத்தி சமூகத்தை சமன் செய்துக்கொண்டு செல்கின்ற ஆளுமை வாய்ந்தவன். நீதியும், சமூக அக்கறையும் உயர்வர்க்கத்துக்கு மட்டுமல்ல  எனக்கும் வேண்டும்.   எல்லாம் செழிப்பாக்க.



   நம்புழுதி
                                       

Monday, August 30, 2010

சிறுகதை


                                               பூட்டப்படாத வீடும் வெளியும்

குளத்தில் இரண்டு பிடி பொரியை  அள்ளித்தூவினார். இன்னும் சற்றுத்தள்ளி கொஞ்சம் தூவினார்.கோயிலுக்குச்சொந்தமான ஒவ்வொருபொருளிலும் கடவு ளின் நுண் துகலாவது இருக்கும் என்றுதான். இங்குவருகின்ற  எல்லோரும் நினைக்கின்றார்கள்.நான்கு பக்கமும் நூறடி சதுரப்பரப்பில் குளம்.இரண்டு படி விட்டு நீர் நிரம்பி இருக்கின்றது. வானம் தன் இயல்பான நிறத்தை மாற்றிக் கொள்ளவே மறுக்கிறது .எப்போதும்போல் அதேநிறத்தையே நிறைவாய் வைத் திருக்கிறது.வெண்குதிரை புறா நாரை கொக்கு ராட்சஷ உருவம்கொண்டு வெண்மேகங்களில் குவியல் குவியலாய் சிறகுடன் பறந்து மிதக்கிறது. எதோ ஒரு மூலையிலிருந்து நிரந்தர இடம்தேடி நின்று நின்று எழும்பிப்கொண் டிருந்தது. முட்டைபோல் திட்டாய் தங்கியிருக்கும் கரும்மேகம். வான் ஊர்தியைவிட வேகமாய் கீழ் வானத்தின் பல திக்குகளிலிருந்து, கண்ணுக்கு தெரியாமல்   படர்ந்து வந்த  செந்நிறம்கலந்த மேகங்கள்   கருமேகத்தை அழுத்தி மறைத்துவிட்டதை. இந்த 2009 அதிகாலையில்      குளத்து  தண்ணீரில்    முழுமையான அழகுடன் அதனதன் நிறம் மாறாமல் தெளிவாய்காட்டிக் கொடுத்தது.
 மீன்கள் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டு பொரிகளை சாப்பிட்டது. தட்டிப்பரித்துக்கொள்வதில் நம்பிக்கை வைக்கும் எவற்றுக்கும்  பெரியது சிறியது என்ற வித்தியாசம் இல்லை.  சிந்தனை எல்லாவற்றிக்கும் ஒரே மாதிரிதான். பலம் பலமின்மையால் சிலதுக்குக்கிடைத்தும் சிலதுக்கு  கிடைக்காமலும் போகின்றது. கிடைக்காத மீன்களுக்கு பொரியில்லை என்றாலும் அதே குளத்தில் ஏதொ ஒன்று வயிற்று பாட்டுக்குகிடைக்கின்றது. தொடர்ந்து வாழ்கின்றது. மீன்களின் பசிசண்டையில் குளத்தில் மிதந்திருந்த வானத்தின் அழகு பிம்பம் தடுமாறிப்போனது. பக்கத்தில் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். இருகைகளாலும் அள்ளி முகத்தை கழுவினார். இன்னொரு முறை வலது கையில் அள்ளி தலைமீது தெளித்துக்கொண்டபோது தோளில் போட்டிருந்த சின்ன துண்டு குளத்தில் விழுந்து மிதந்தது. சற்று அவசரமாய் அதை எடுத்தபோது தடுமாறிப்போனார்."நகரீஷ்வரா உன்னைத்தான் பாக்க வந்திருக்கிறேன்பா" என்று சற்று மெல்ல குரலில் சொல்லிக்கொண்டு கரை ஏறினார்.பக்கத்தில் ஒரு தம்பதிகள் குழந்தைகளை  தண்ணீர்பக்கம்  வராமல் தடுத்தனர். தங்கள் தலையில் தண்ணீர் அள்ளி தெளித்துக்கொண்டு குழந்தைகளின் தலையை தங்கள் ஈரக்கைகளால் துடைத்தார். அப்பா மகனையும் அம்மா மகளையும் அழைத்துக்கொண்டு படியேறினார்கள். பக்கத்தில் முக்கியமான கடைகள் நிறைந்த பிரதான சாலை. கனரகவாகன  பேருந்து சென்றதால் குளத்தில்  படியேறியவர்கள் கால்கள் அதிர்வை உணர்ந்தது. சற்று வயதில் மூத்தவர்கள் தனித்தனியே வருகிறார்கள், போகிறார்கள். ஒரு முதியவர் பொறுமையாக படிகளை நிதானித்து மூன்றாவது படியில் இறங்கி மூழ்கினார். மேல் ஏறியவர் படியில் வேட்டியை அவிழ்த்துப்பிழிந்தார்.பிரித்து தோளின்மீது போட்டு கரையேறினார். ஏறியவர் நின்று கிழக்குப் பக்கமாக முழங்கால் முடங்கி வணங்கினார். பாதி வயதை கடந்தவர்கள் தான் அநேகர் கடவுள் இருப்பிடம் தேடிவருகிறார்கள். மனிதனுக்குசாவு இல்லை என்று ஆனால் அவரவர்களே கடவுள்களாய்  இருந்து விட்டுப்போகலாம். குளத்திற்கு தெற்கில் பெரிய ஆலமரத்தில் இரண்டு பையன்கள் இரு வேருக்கிளைகளில் ஏறி எதையோ கிறுக்கிக்கொண்டிருந் தார்கள்.சிறிய பிள்ளைகளும் மரத்தில் ஏறும் படியாக மரக்கிளைகள் கிட்டத்தில் பிரிந்திருந்தது.மரத்தை சுற்றி  மேடை இருந்தது. சிலர் அதில் உட்கார்ந்து ஆன்மீகத் தோடு தங்கள் குடும்பக்கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மரத்தில் ஏறும் பசங்களைப் பார்த்து விட்டார். "டே...டே... வாளுப் பசங்களா,உழப்போரிங்க ஏறங்குங்கடா"  என்று சத்தம் போட்டார். அவர் போட்டசத்தத்தில் குயிலோடு சேர்ந்து,கிளிகளும் கத்திக்கொண்டு பறந்தது. நகரம் போடும் சத்தத்தில் பறவைகள் அலறல் யார் காதிலும் விழ வில்லை.
உலக உருண்டைப்போல் அமைக்கப்பட்ட விளையாட்டுக்கூண்டில்  இளம் தம் பதிகளில் ஒருவள் குழந்தையை ஒவ்வொருப்படியாக ஏற்றிப்பிடித்தாள். ஒரு கொம்பில் புடலங்காய், பூசணிக்காய், இதயம் வடிவில் பலூன் கட்டியிருந்தது. பலூன்காரன் அப்போதுதான் 'டர்ர்ர்..க்கி...' என்று பலுனை தேய்த்து சத்தம் எழுப்பினான். குழந்தை  பலுன்காரன் சத்தம்கேட்டு திரும்பிப்பார்த்தது. மனித இயல்பே இயல்பில் முரண்படுதல்தானா? கேட்காத குழந்தைக்கு கொடுத்து பழ க்கப்படுத்துவது,கேட்கின்ற குழந்தைக்கு மறுப்பது.அடக்குவது.நான் பொய்யா சொல்றேன்.  அதன் அம்மா ஒரு பலுனை வாங்கி குழந்தையிடம் கிக் ...பிக்...என்று தேத்தாள் சத்தம் கேட்டு சறுக்கு மரம் விளையாடிக்  கொண்டிருந்த பெரியப்பய்யன் ஓடிவந்தான். "அப்பா எனக்கு பலுனு "
"வேனா...வேனா....ஒடச்சிடுவ "பையன் கையையும், காலையும் உதைத்துக் கொண்டு அழுதான்.சற்று  பொராட்டத்திற்குப் பிறகு வெற்றிகண்டு மீண்டும் சறுக்கு மரத்திற்க்கு ஓடினான். நீண்டு வளர்ந்து தலைவிரித்தாடும் ஈச்ச்சமரத்தில் குலைகள் அடுக்கியிருந்தது. புளியமரத்தில் வாழைகளாய் நீண்டு பழங்கள் தொங்கியிருந்தது. வெள்ளிமுலாம் பூசியதுபோல் இரும்பு மின்கம்பம் மின்னியது. கம்பத்தின் உச்சியின் கண்ணாடி குடுவையில் சூரியனை அடைத்து வைத்திருந்தது. சுச்சி போட்டதும் கோயில் எல்லைமுழுதும் பகலுக்கு மாறியது. பிரியாணி சாப்பிட்டு  பிடாபோட்ட வயாக ஆலமரத்தில் படும் வெளிச்சத்தால் இலைகள் சிவந்திருந்தது. வெளிச்சம் பார்த்துவரும் வெண்தும்பிகளாக விளையாட்டுப் பிள்ளைகள் வருகிறார்கள். எதற்கோ  விடுதலை வேண்டி குளித்த சோப்பின் வாசத்தோடு கருவறையை சுற்றுகிறார்கள். சிரித்த முகத்துடன் பார்க்கும்  பூவும், அதன் வாசத்தொடும் வந்து கருவறையின்  முன்  நிற்கும் போது 'நகரீஸ்வரர் முகம் பிரகாசிக்கிறது. அருள் பொழிகிறார்' என்று பேசி நடக்கிறார்கள்.
கோயில் எல்லை சுவற்றிற்கும் புளியமரத்திற்கும்  இடையில் கோணிகள் போட்டு முடியிருந்தார்கள்.அதை  இருபகுதியாக்கி இருகுடும்பங்கள் இருந்தது கோயில் சொத்துக்களை பாதுகாக்கின்றதுபோல இந்த குடும்பங்களையும் தான் தான் பாதுகாக்கவேண்டியிருக்கிறது என்று பெருமையாக சொல்லிக் கொள்வார். இன்று குளத்தின் ஒரு மூலையிலிருந்து கோயில் இடத்தை பார்க்கின்றார். அவருக்கு மின்னல் கீற்றுபோல உதித்ததுதான் இந்த எண்ணம், அப்பா கொண்டாந்து சேத்துட்டுபோன சுடலை  மட்டும்தான் எப்பவும்போல இருக்கிறான்.
குளத்தில் கால்பாகத்திற்கு மேல் சொழைப்புல்  நல்ல வளமாக  வளர்ந்திருந் தது. சுடலை புல்  அறுத்துப்போட்டு நிமிர்ந்தபோதுதான், எஜமான் தன்னை கவணிப்பதாக உணர்ந்தான்.ஒரு விளையாட்டு அரங்கத்தில் அமரும் பென்சை போல குளத்தின் படிகள் இருந்தது. உறுதியான பாறைகளால் செதுக்கப்பட்ட படிகள் இன்னும் ஆழகுடன்தான் இருந்தது. மழை என்பவள் பருவமடையா தவளாகவே இருக்கிறாள். மக்களின் கஷ்டங்கள் அவளுக்கு புரிவதே இல்லை.  
குளம் வள்ளல் பரம்பரைதான், தண்ணிரை எல்லாம் ஆவியாக்கிவிட்டு இன்று ஏதொ ஒரு முலையில் சேரும் சகதியுமாய் இருக்கின்றது. மழைகாலங்களில் சாலையிலிருந்து கழிவுகளும் ,சகதியுமாய் கலந்து விழுந்து குளத்தின் சேற் நல்ல உரமாகிப்போய் இருந்தது. குளத்தின் படிகளில் அங்கங்கே பூண்டுகள் முளைத்திருந்தது.குளத்தில் கார் டயர்களும் டூவிளர் டயர்களும் முழ்கிதன் கருமேனியை அழுக்கோடு காட்டியிருந்தது. பச்சைத்தவளைகள் கொழு கொழு வென்று பதட்டமில்லாத இடத்தில் பாதுகாவலனைப்போல் உட்கார்த்திருந்தது. சேற்றை தழுவிக்கொள்ளும் விரால்மீன் தன் பெருத்த உடலால் மென்மையான  சேற்றை கலங்கடித்துச்சென்றது.
சுடலை குளத்தில் ஓரமாகபுல்லை அறுத்துக்கொண்டிருந்தான். எந்தகிராமம் சென்றாலும் ஆள் உயரத்துக்கு கழுத்து நிறைய தங்கத்தை கோத்ததுபோல் வயல்களில் பொன்னிவிளைச்சல் கம்பீரமாய் நின்றிருக்கும்.சுடலை இன்று கோயில் குத்தகைதாரரின் பசு மாடுகளுக்கு வயல்வெளி தேடிச்செல்லாமல் குளத்திலேயே அறுத்துக்கொள்வது சற்று சுலபமாய் இருந்தது. குத்தகைதாரர் கோயிலின் மொத்த இடங்களையும் பார்த்தார். 'எந்த தீர்மானமும் இல்லாமல் காலம் ஏன் இப்படி? எங்கேதான் ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு பதினைந்து வருடம் இத்தனைச்சிக்கிரத்தில்  கடந்தகாலமாய் மாறிவிட்டதா?' ஆலமரப் பக்கம் வந்தார். ஒரு கிளையில் பெண்ணின் முகமும், இன்னொரு கிளையில் ஆங்கில எழுத்தும் உப்பி மரத்தோடு அதுவும் வளர்திருந்தது. மரத்தைச் சுற்றியிருந்த மேடை உடைந்து சிதைந்திருந்தது. அதில் இருந்த ஈச்சமரம், முதியோர்  இல்லத்தை தேடுகிற வயதை எட்டியிருக்கலாம். தினந்தோறும் உதிரும் சருகுகளை கொளுத்தி கொளுத்தி புளிமரத்தின் ஒரு பகுதி தீந்து இருந்தது. அதன் காய்கள் காசநோய்க்கு ஆளாகியிருந்தது.சறுக்குமரத்தில் பூசியவண்ணங்கள் இல்லை.அதன்தாங்கிகள் இடுப்பொடிந்த நிலைதான். உலக உருண்டைபோல் செய்திருந்த விளையாட்டு சாதனம்,இப்போது தெருஓர பயித்தியக்காரனாக கேட்பாரற்று கிடந்தது. மைதானமாய் இருந்த நடுப் பகுதியில் குச்சிகளை நட்டு பிளாஸ்டிக்காகிதங்களை போட்டு முடியிருந் தார்கள். கோழிகூண்டை விட சற்று உயரமாய் இருந்தது இரு குடும்பங்களும். ஒருவாசலில் கந்தையை போட்டு இரு குழந்தைகளை கிடத்தியிருந்தார்கள். ஒரு குழ்ந்தை கை காலை உதைத்துக்கொண்டு மரத்தையே பார்த்தது. இன்னொன்று பக்கவாட்டில் படுத்து தூங்க்கிக்கொண்டுடிருந்தது.குப்பைகளை கொளுத்திய கரியில் இன்னும் இரு குழதைகள் விளையாடிக் கொண்டிருந்தது. உடல்முழுக்க கரி திட்டு திட்டாய் அப்பிக் கொண்டு கிடந்தது.அக்குழந்தைகளை குளிக்கவைக்க மாட்டார்களா என்ற கேள்வியைத்தான் எழுப்பும். வயிறு முட்டிக்கொண்டு இருந்து. ஒருவள் பக்கத்தில் அடுப்பில் சாப்பாடு செய்துக்கொண்டு இருந்தாள். அப்போது ஏதொ கரிக்கந்தைய இடுப்பில் சொருகி  இருப்பதுபோல்  ஒரு குழந்தையை  பிடித்திருந்தாள்.  சந்தை முதலாளிகளின் வியாபாரக்கூச்சல் சாலையில் கவர்ச்சியான வாகனத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த பெண்கள் பொத்தலும் கந்தலையுமே உடுத்தியிருந்தார்கள்.கழுத்தில்  மஞ்சள் கயிறு புத்தம் புதிதாக இருந்தது.
சுடலை புல்லு கட்டை குத்தகைதாரர் விட்டின் வாசலில் போட்டு பசு மாடுகளுக்கு கொஞ்சம் போட்டான்.அவன் தலைமயிர் கருப்பும்,வெள்ளையும் கலந்து சுருள் சுருளாய் இருந்தது. குத்தகைதாரர் முகம் சற்று விரக்தியைக் கண்டிருந்தது. சுடலையின் எதிர் புறமாக வந்தார்."சொடலை சாப்பிட்டுவடா. அந்த வெறகுலாம் பொளந்துடு, உன் பொண்டாட்டிய சாணிலாம் வாரிட்டு எடத்தலாம் சுத்தம் பன்னச்சொல்லு. நானுபோயி குத்தகப்பணம் கட்டிட்டு வந்துடுறேன்."
சுடலை சங்கடத்துடன் "சாமி சேட்ட ஊட்டு கல்யாணமா ,என்பொண்டாட்டி லைட் தூக்க போறா .அவ போட்டும் நானு ஒண்ணா மாட்டுக்கொட்டாவ சுத்தம் பண்ணிடுறேன்."
"அப்பிடியா செரி செரி பாத்துக்கோ, சொடல முக்கியமானத மறந்துட்டேன். உங்க அண்ணன அனுப்பி நம்ம செட்டியார் ஊட்டு தோட்டத்துல அடிக்கடி பாம்பு வருதாம்.பக்கத்திலதான்  அதன் பொந்து இருக்குதாம், அத புடுச்சி அடிச்சிப்போட்டு  வந்துடச்சொல்லு"
சுடலையிடம்  சொல்லிவிட்டு குத்தகைதாரர்  கிளம்பும்போது. சுடலையின் அண்ணன் மகனும் அவன் மனைவியும் வந்தார்கள். துணியில் கட்டியி ருந்தது.மீனாகதான் இருக்கும் என்பதை குத்தகைதாரர் விளங்கிக்கொண்டார். இருந்தாலும் தன் எஜமான் தனத்தை வெளிப்படுத்தினார். "டேய் இங்க வாட சயந்திரம் நம்ம செட்டியார் வீட்டுத்தொட்டத்துல பாம்பு வருதாம், அது அங்கி யேதான் இருக்குதுபோல அத புடுச்சி அடிச்சிட்டு வந்துடு.வரட்டுமா."என்று முடிப்பதற்குள்.
"இல்லபா நானு மீனு புச்சாந்துகிறேன், அத போயி வித்துட்டுவரனும்.நாங்க சாப்பிட்டு போலாம்னு வந்தோம்.எங்கப்பா வந்தா அனுப்புங்கோ" என்று மனைவியுடன் நடந்துக்கொண்டே இருந்தான்.
சற்று தொலைவில் சென்றுவிட்டசுடலையை சத்தமாக அழைத்த குத்தகை தாரர் "டேய் சொடல பாத்தியாட. நான் சொல்றதை  எங்கனா மதிக்கிறானா பாத்தியா" கோயில் எடத்துல இருந்த எல்லாரையும் காலிபண்ணிட்டேன் 
உங்களை மட்டும்  யேண்டாவச்சிங்கிறேன். ஒரு வருஷமா ரெண்டு வருஷமா பாஞ்சிவருஷம். யாருநீங்க குடியிருக்கும் சேத்து வாடகைகட்டுவான்"
கரியநிறத்திற்கு மாறியிருந்த இரண்டு வெள்ளை கோழிகுஞ்சி  பக்கத்தில் மலைபோல கொட்டிய சாணிக்குள் இரைதேடி ஓடிவந்தது."சாமி சின்ன பய்யன் தெரியாம சொல்டான் பெர்சா எத்துக்காதிங்க."
"இல்ல சொடல அந்த பையனுக்கு இன்னா? ஒரு இருபது வயசிருக்கும் இல்ல. ஒரு நாலு வருஷமாவே பய்யன் ஒரு மாதிரியாதான் இருக்கான்.தெனாவட் டான பார்வை உனக்காகவும் ,உன் அண்ணனுக்காகவுதான் பாக்குறேன். நானு உங்கள யாரோனாப்பாக்குறேன்.எந்த நல்லது பொல்லது செய்தாலும் உங்கள உட்டுட்டு சாப்புடுறோமா.வெளி நாட்டுல வேலசெய்துங்களே என் ரெண்டு பசங்க அதுங்க கூட எப்பப்பாரு உங்கள விசாரிச்சிகினுதான் கெடுக்குதுங்க."
"சாமி எங்கண்னுக்கு, எனுக்கு முன்னாடி கல்யாணம் ஆனாகூட எனக்கப்புறம் ரொம்ப நாள் கழிசிதான் கொழந்த பொறந்தது.அதனால பையன செல்லமா வளத்துடாறு. நானு அண்ணா வந்துதும் அனுப்புறேன். நீங்க அதலாம் மன்சில வெச்சிக்காதிங்க"
குத்தகைதாரர் முகம் மிகவும் இயல்பாயிருந்தது."இல்ல சொடல நானு முடிவுபண்ணிட்டேன்.உங்க அண்ணன் அவன்பொண்டாட்டி,நீ உன் பொண் டாட்டிமட்டும் இருங்க.அவனும் அவன் பொண்டாட்டியும் இருக்கக்கூடாது. தோ உங்காட்ட சொல்லிட்டேன்.உங்க அண்ணனாண்டையும் சொல்லிடுறேன். அவுங்க இந்த எடத்துல இருக்கக்கூடாது. நானு போயி குத்தகப்பணம் கட்டிட்டு வந்துடுறேன்."வேகமாகச்சென்றார்.
சாணத்தில் பெரிய பெரிய புழுவாக இருந்தது.இரு கோழிக்குஞ்சுகளுக்கு நல்ல இரை கிடைத்தது. சுடலையின் மனைவி பாத்திரத்தை கழுவி ஊற்றினாள்.ஒரு கோழிக்குஞ்சு நனைந்தது. அலறி குதித்த குஞ்சு சிலுப்பியது. சற்று தள்ளி உட்கார்ந்திருந்த சுடலையின் பார்வைக்கு இப்பொது கோழிக்குஞ்சி வெள்ளை 
யாக தெரிந்தது.
"சித்தப்பா ,நாங்க மீனு வித்துட்டு அப்பிடியே சினிமாவுக்கு போயிட்டு வரோம் அப்பவாண்ட சொல்லு "என்றான்.
அண்ணன்மகன் வேட்டியும் சற்று வெள்ளையாக இருந்தது. நாம ஒருநாளும் இப்படி வெள்ளையா கட்டினதேயில்லையே! எவ்வளவு காலம் கடந்து போச்சி, அண்ணன மகன் சொன்னது சரிதானோ? நான்கூட இந்த வார்த்தையை        பாஞ்சிவருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருக்கனுமோ?   என்று தனக்குள் நொந்துக்கொண்ட சுடலை  "டே  ராஜா வாங்கடா குள்சிடுங்க, ஒடம்புலாம் அயுக்கா இருக்குதுபாரு" என்று முதல் முறையாக தன் பிள்ளைகளை குளிக்க அழைத்தான்.    
                                                -------------------------------------------------