காஞ்சியில் சில நண்பர்களால் 'தரை' என்கிற திரையமப்பு தொடங்கப்பட்டுள்ளது.2010 ஜூன் முதல் டிசம்பர் முடிய என்கிற ஒரு வருடத்திற்கான திட்டத்துடன் தொடங்கியிருக்கிறார்கள். 'ரன் லோல ரன்' இதில் தொடங்கி ரன்னாகிக்கொண்டிருக்கிறது. இதில் தேர்ந்தெடுத்த உலக சினிமாவை வாரந்தோறும் திரையிடுகிறார்கள். இவர்கள் வீதியில் கிடக்கும் காய்ந்த சருகுகளில் இலக்கிய எழுத்தைப்பார்த்தாலும் தூசுத்துடைத்து அதன் வீரியமிக்க கருத்துக்களை விவாதிக்கும் வே.நாராயணன் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள். தற்போது இலக்கிய படைப்புகளின் பார்வையில் பரந்து விரிந்திருப்போர், சந்தர்ப்ப சூழ்நிலையால் பார்வையின் இடுக்குகளில் மறைந்திருப்போர் எழுத்துக்களின் நாடித்துடிப்பை ரத்தம் வடியாமல், சீழ்பிடிக்காமல் படைப்பை லேசர் ஆபரேசன் செய்கிற விர்ப்பன்னர்கள். (ஆனால் மதிப்புக்குரிய (படைப்பாளியை) சுந்தரராமசாமியை விவாத்தத்தின் முலம் கண்ணிர் சிந்தவைத்தது. சற்று மனவருத்தத்தை தரக்கூடியதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது) அமைப்புகள் தொடர்ந்து நடத்துவதில் இழப்புகளை தாம்பத்திய குறைபாடு போல் மெளனமாய் வைத்துக்கொண்டு, மேலும் இலக்கியத்தை பலரும் ருசிக்கச்செய்வதில் அரசுக்கு ஆதரவாய் தண்டோரா போடுபவன்போல் உற்சாகமாய் செயல்படுகிறோம். இதன் ஒரு பகுதியாகத்தான் 'தரை' அமைப்பின் செயல் தொடர்கிறது.
கடந்த ஞாயிறு 19.9.2010 ஆறுமணியளவில் திரையிடப்பட்ட சீனப்படம் 'The Rood Home' எச்சை உறிஞ்சிக்கொள்ளும் முத்தங்களும்,வாழ்க்கை ஓடுகிற வேகத்துக்கு உணர்வுகளை அலையவிடாமல் ஒருவர்மீது வைக்கும் உண்மையான அன்பு எந்த கஷ்ட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்பதை மிகவும் யதார்த்தமாக படம்பிடித்துள்ளார்கள். சந்தோசமான மனித வாழ்வுக்கு இயற்கையை மாற்ற முயற் சிக்கும் போதுதான் பிரச்சனைவருகிறது. படத்தில் மனசின் சூழலுக்கு ஏற்றது போல் கலர் மாற்றியமைத்ததில் படத்துக்கு எந்த வலுவும் சேர்த்தது போல் தெரியவில்லை. இறந்த மனிதன் உடல் சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் உயிரோடு இருப்பவனை கஷ்ட்டப்படுத்துவது எப்படி சரி என்று தெரியவில்லை. இதுதான் படத்தின் குறை.
அதற்கடுத்ததாக 'The Father' Iran படம். தன்னை பாசமாய் நடத்தியத் தந்தை திடிரென்று மரணத்தை தழுவுகின்றார். தன் குடும்பத்தை காப்பாற்ற சிறுவன் நகரத்துக்கு சென்று ஒரு கடையில் வேலைசெய்கின்றான்.பல வருடங்கள் கழித்து தன் தாயும்,தங்கையும் பார்க்க வருகிறான்.வரும்வழியில் ஒரு கால்வாயில் தண்ணீர் அருந்தும்போது. தந்தையின் போட்டோ தண்ணிரில் விழுந்துவிடுகிறது. தந்தையின் ஞாபகம் வரும் போதெல்லாம் அந்தப்போட்டோவை பார்த்து ஆருதலடைந்தவன். வானத்தின் உயரத்தில் பருந்து சிறகை அசைக்காமல் பறப்பதுபோல் ஓடுகிற தண்ணிரில் போட்டோ மிதந்துச்செல்கிறது. சிறுவன் பின்தொடர்ந்து ஓடுகிறான். ஆறுதலாய் இருந்த ஒரே உறவும் மறைந்ததற்கான காட்சிப்படுத்துதல் அது. தமிழ் படங்களில் சோகத்தை வெளிப்படுத்த கத்திக்கதறி, புரண்டு, அழுதும் கூட பார்வையாளனுக்கு ஏற்படுத்த முடியாத ஒரு வலியை தண்ணிரில் மிதந்து மறையும் போட்டோ ஏற்ப்படுத்திவிடுகிறது.
தாய் தன் அப்பாவுக்கு செய்த சேவையை இப்போது வேறு ஒருவருக்கு செய்கிறாள் என்பதை நேரடியாக பார்கின்றபோது. தான் வாங்கிவந்த துணி மணிகள் எல்லாம் வீசி எறிந்துவிட்டு ஓடுகிறான். சிதைந்த துணி மணிகள் சிறுவனின் ஆக்ரோஷமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்படத்தில் நூறு வாகனத்தில் கத்தியும், உருட்டுக்கட்டையும் ஒரு ஐநூறுபேர் வண்டியில் நிறப்பிகூச்சல் போட்டால் தான் வில்லன் கோபமாய் துரத்துகிறான் என்பதை வெளிப்படுத்திக் காட்டமுடயும். தனக்கு ஆதரவு தருகிற மனுஷனோடு தன்னை மகன் பார்த்து விட்டு ஓடுவதை, பார்க்கும் தாயின் முகத்தில் வாழ்வு எவ்வளவு சிக்கலான கொடூரங்கொண்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.
அடாவடி போலீஸ்க்காரனையே இதுவரை திரையில் பார்த்திருப்போம். நியாமான மனித உணர்வை வெளிப்படுத்தும் போலீஸ், அவருக்குள்ளும் இயலாமை, சிறுவனுக்கும் மரியாதை கொடுக்கும் முறை எல்லா உத்தியோகத்தை போல அதுவும் ஒரு வாழ்வாதாரத்துக்கான வேலை, இதற்ககு சமூக அக்கறை சற்று கூடுதளாக இருந்தால் போதுமானது.பெருசா தியாகம் செய்கிற பணி, போற்றப்பட வேண்டியபணி என்றெல்லாம் கிடையாது என்பதை அதில்வரும் போலீஸ் பாத்திரம் நிறுவுகிறது.
தாயின் அன்பும் தங்கையின் பாசமும் இந்த போலீஸ்சால்தான் கிடைக்காமல் போகிறது என்று போலீசை பழிவாங்க நினைக்கிறான். அதில் தோல்விகண்டு அதற்கான நேரங்கிடைக்கும், அப்போது நிறைவேற்றலாம் என்று சிறுவன் மீண்டும் நகரத்திற்கு சென்றுவிடுகின்றான்.
சின்னப்பையன் தானே மனசை மாற்றி தன் குடும்பமாக இணைத்துக்கொள்ளலாம் என போலீஸ் நினைக்கிறான். அதில் பலமுறை தோல்வி கண்டதும் இனி தண்டனை தான் சரியான தீர்வு என்று கோபத்துடன் போலீஸ் விலங்கை எடுத்துக்கொண்டு சிறுவனைத்தேடி நகரத்திற்கு வருகிறான். தொடர்ந்து தேடலுக்குப்பிறகு சிறுவனை விலங்கிட்டு அழைத்துச் செல்கிறான். போகும்போது, தன் கிராமத்துக்கு போகிற வழியை தவறவிட்டு பாலைவனத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். எந்தப்பக்கமும் வழி தெரிய வில்லை. வாழ்வு நிர்கதியாய் மாறுகிறபோது. எதிரெதிர் என்னங்கோண்டவர்களை சூழ்நிலை எப்படி ஒத்த கருத்துக்கு மாற்றுகிறது. என்பதின் பதிவுடன் படம் நிறைவுபெறுகிறது.
நிறைவுக்காட்சியின் முத்தாய்ப்பு. ஆரம்பத்தில் கால்வாயில் தந்தையின் போட்டோ காணாமல் போகிறபோது கைவிடப்பட்டநிலையை குறிக்கிறது. பாலைவனத்தில் போலீஸ் மயக்கமடைந்து விழுகின்றான். சிறுவன் மனம்மாறி தண்ணீரைத்தேடி ஓடுகிறான். தூரத்தில் ஒரு கால்வாயில் தண்ணீர் போகிறது. போலீஸ்க்காரனை இழுத்துச்சென்று பாதி முகம் நனையும்படி கால்வாயில் போட்டான். தானும் தண்ணீரில் முகம் முழுகும்படியாக விழுகிறான். போலீஸ்காரன் பாக்கட்டிலிருந்து , தாய், தங்கை யனைவரும் சந்தோசமாய் இருக்கும் குருப்போட்டோ தண்ணிரில் மிதந்துவந்து சிறுவனின் முகத்தில் முட்டுகிறது. சிறுவன் போட்டோவை எடுத்து பார்க்கும்போது, போலிசை ஏற்றுக்கொண்டான். என்று புரியவைப் பதோடு படம் நிறைவுபெறுகிறது.
படங்கள் வினையாற்றுகிறது.
ஏறக்குறைய இருபத்தி அந்து வருடங்களாக தமிழ்,மற்றும் ஆங்கிலஆக்க்ஷன், படங்கள் தீவிரமாக பார்த்துள்ளேன். இதுவரை ஏதாவது வினையாற்றிதா என்றால் மிகவும் குறைவுதான். அனால் ஜுன் 2010 முதல் காஞ்சிபுரம் தரை அமைப்பில் ஞாயிறு தோறும் போடப்படும் படங்கள் (உலக படங்கள்) வினையாற்றுகின்றன. அவைகள் உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன் பரிமாறுகின்றன. வினைகளை தனியாகவே எழுதலாம். 'தரை' தொடர்ந்து உற்சாகமாய் செயல்படவேண்டும்.
நம்புழுதி
No comments:
Post a Comment