Monday, April 3, 2017

கவிதை,

நான் படைப்பாளி.
என்னை நானே நம்பிக்கொள்கிறேன்
என் எழுத்து
என்னை மீண்டும் மீண்டும் நம்பவைக்கிறது.
மற்றாரையும் நம்பவைக்க
தமிழ் கடவுள்களின்
முதுகுக்குப் பின்னால்
உதவிக்கருவிகள் கொண்டு இயங்கும்
கரங்கள் எனக்கு வாய்த்ததில்லை.
முன்னோர்களின்
பலமும், பாலமும் கிட்டியதில்லை
வாய்க்கிழிய நியாயம் பேசினால்
கிழிந்த சூத்துக்கு
ஒட்டும் கிடைப்பதில்லை
பின்புலமற்று இறங்கி
விழுந்து, எழுந்து
நிறைகள், கறைகள் கற்றேன்
எங்கெல்லாம் குழிகள் இருக்கு
அறிந்த நான்
என் படைப்புத் தொழிலை
நீண்ட அனுபவத்தோடு
என் வழித்தோன்றலின்
தோளில் ஏற்றிவிட்டேன்
நான் சந்தித்தக் குழிகளை
அவனுக்கு முன்னேராய்
சமமாக்கிக் கடக்கின்றேன்
அவன் நிண்ட அனுபவம்
பெற்றவனாக லகுவாக
நடக்கத் தொடங்குகின்றான்.
ஜேடி

Wednesday, March 8, 2017

கவிதை

செத்த உலகம்
வாழ்தலுக்கான
பாடம் நடத்துகிறது

மூன்று வேளையும்
முற்றிய பொய்கள்
அலங்கார விளக்கின்
தோற்றமாகத்
தீப்பிடித்து எரிகிறது

மது உண்டவனின்
பித்து தலையாக
ஆங்காரம் கொண்டு
குற்றங்களை ஊக்குவிக்கிறது
பச்சை எழுதுகோல்கள்

வரம் வாங்கி வரும்
தேவத்தூதர்கள்
சாக்கடையில் முழ்கிக்கொண்டே
தெளிந்த நீரோடை
முழ்கித் திளைக்க வாருங்கள்
அழைப்பு விடுக்கிறார்கள்.

பேசும் கிளிகளின்
மூக்கை அறுக்கும்
வாள்கள்
பச்சோந்திகளிடம்
ஒப்படைக்கிறார்கள்

இறுதி வாய்ப்பாகத்
தரப்படும்
அடிக்கடி நிரூபனமாகும்
குற்றங்களில் இருந்து
பாடங்கள் கற்கப்படவில்லை.

காளி கதவைத்திற
அரிச்சந்திரா வழியைவிடு
வழியனுப்புப் பாடல்
தினந்தோறும் அனைவராலும்
பாடப்படுகிறது

இரு கரங்கள்
புன்சிரிப்போடு
எழாத கூட்டிற்கு
துளிர்க்காத
சிலுவை மரத்தை
தலைமாட்டில்
அழுந்தி நடுகின்றது

                             ஜேடி

Thursday, February 2, 2017

“அண்ணே, கெட்டவங்களுக்குதான் நல்ல காலமா இருக்குண்ணே“.

“அடே..பூசணி மண்டையா. ஒத்தச் செடி நட்டாமாதிரி சொன்னா எப்புடிடா. மனுசங்கள்ல, கொழந்தைகள் இருக்கிறான்(ள்), வாலிபன், வயசானவன் இருக்கிறான்(ள்).
எத்தனை வெரைட்டி. கிட்டக்க வாடா. தெளிவாச் சொல்லு. நல்லவங்க யாரு? கெட்டவங்க யாரு? அதுக்கு வயசு அளவு வச்சியிருக்கிறியா? சாதி அடையாளம் இருக்கா? சாமி சாயல் இருக்கா?

“அண்ணே, நீங்கத் தெளிவுண்ணே. பள்ளியின், கோயிலின் சொத்துக்களை, வாரி ஊழல் வாதிக்கு எறைக்கிறாமாதிரி. வார்த்தைகளைப் பிரிச்சி போடுறீங்கண்ணே. “

அது இருக்கட்டும். சொறியாம சொல்றா, சொரக்கா மண்டையா.

“அண்ணே அண்ணே, அந்தாக்குச்சி ஐசு வாங்கிக்குடுங்கண்ணே. சப்பிக்கினே, சாலாக்காச் சொல்லுவேன்ல்ல“.

“டே, ஊன் அக்கப்போரு தாங்கமுடியலயடா, அவஅவன் இமயத்திலயும், கூட்டு ஜெபமுன்னும், பள்ளிவாசல்னும் தவமிருந்தாத்தான் ஞானம் வரும்ங்கிறான். நீ குச்சி அய்சு சப்பிக்கினு ஞானத்தை விளக்கப்போறீயா. அதையும், நான் கேட்கணுமாடா. நீ சொல்லவே வேணாண்டா.

“என்னண்ணே, இப்படிக் கோச்சிக்கிறீங்க. அம்பது பைசாதானேன்ணே. சரி அதுவும் வேணாம் விசயத்தைக் கேளுண்ணே. கொழந்தைங்க கணக்குல இல்லண்ணே. வாலிபத்தில இருந்து, வயோதிகம் வரையான மனிதர்கள் என்ற அடையாளத்தை மட்டும் வச்சிக்குவோம். சாதி, சாமி எல்லாருக்கும் பொது. இதன் அடிப்படையில் கெட்டதை விரும்புறவங்களாம், நல்லவங்கண்ணே. நல்லதை மட்டுமே செய்யிறவங்களாம் கெட்டவங்ண்ணே.

“அடே, ஞானசூன்யம்எப்படிடா அதைக் கண்டுபிடிச்சே.
எனக்கு விளக்கமாச் சொல்லு பார்ப்போம்.

1. கேடுள்ளம் கொண்டவர்களுக்கு அதாவதுண்ணே, வாழ்வதற்கு எத்தனை வகையானச் சந்தர்ப்பங்கள் அமைகின்றதோ, அத்தனை வகையையும், சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் இயல்புடையவர்களுக்கு, (இனம் இனத்தோடு சாரும் என்பதுபோல்) கேடுள்ளம் கொண்டோர் இயல்பாகவே சுகபோகத்தை அள்ளித் தருகின்றார்கள்.

2. கேடுள்ளம் கொண்டவர்கள், நல்ல விசயத்தை விரும்புகின்றவர்களைப் பார்த்ததும் குனிந்து, பணிந்து நேர்பட புகழ்ந்து, உபசரிக்கும்போது நல்லதை (நல்லதை மட்டும் செய்கிறவர்கள் அல்ல) விரும்புகிறவர்களும் கேடுள்ளமான ஊழல் வாதிகளை எல்லா இக்கட்டிலிருந்தும் காப்பாற்றி, கோயிலின், பள்ளியின் பொது சொத்தில் தன்னால் முடிந்ததை எழுதிவைத்துவிடுகிறார்கள்ண்ணே. அப்போ கேடுள்ளம் கொண்டவங்களுக்கு எப்பவும் நல்ல காலமாகவே அமைந்திருப்பது இயல்புதானேண்ணே.

Friday, November 25, 2016




Sunday, July 31, 2016

கவிதை

ஆபத்தாண்டவன்

ஒரு மயில்வாகனத்தில்
வீற்றிருக்கின்றேன்.
எனக்கும், அவளுக்குமான
இணை நாளென
உறவுகளின் நினைவேந்தலினால்தான்
அந்த வாகனம் எனக்காக
வடிவமைக்கப்பட்டிருந்தது.
அது ஒற்றை நாளுக்கான
வாகனம் என்பது
என் நினைவில் தப்பியிருந்தது.
எதிர் இருக்கைகளின்
தூரத்தில் மிக அற்புதமான
ஆபத்தாண்டவன் உலாவிக்கொண்டிருந்தான்.
பெயர் அதுவானாலும்
எத்தனையோ இக்கட்டுகளில்
பெயர்போலவே பயன்பட்டான். ஆனாலும்,
தற்போது அருகில் தேவைப்படவில்லை.
மயில் வாகனத்தின் இருப்பில்
கைக்கு எட்டும்படியாகவே
சகலமும் கிட்டிவிடுகிறது
ஒருவன் கிரீடம் சூட்டுகின்றான்
ஒருவன் மலர் பாதபடியை
சரியாக்குகின்றான்
ஒருத்தி சாயம் பூசிய
உதட்டால் மதிமயங்க முத்தமிடுக்கின்றாள்
என் முகத்திற்கு அருகில்
வாசிக்கப்படும் வாழ்த்துகள்
நான்கு திசைகளில் பரவுகிறது.
மதிப்பு மிக்க பொருள்கள்
பெற்றுக்கொண்டிருக்கும்
எனது கைகள் ஓய்ந்துபோகின்றது.
ஆஹா...ஆஹா
மயில்வாகனம் அழகு,
மயில்வாகனம் ஆசி.
மயில்வாகனம் இன்பம்
மயில்வாகனம் ஈசன்
மயில்வாகனம் உயிர்
மயில்வாகனம் ஊற்று
மயில்வாகனம் எழுட்சி
மயில்வாகனம் ஏற்றம்
மயில்வாகனம் ஐம்புலன்
மயில்வாகனம் ஒழுங்கு
மயில்வாகனம் ஓதுதல்
அருமை..ஆஹா அருமை….
வாகனமே என் வாகனமே எல்லாம்….
அது ஒற்றை நாளுக்கான
வாகனம் என்பது
என் நினைவில் தப்பியிருந்தது.
அந்தி மறைந்தது
வாகன வாடகைக்காரன் வந்தான்
ஏனோ எனக்கு
ஆபத்தாண்டவன் நினைவு வந்தது.
ஜேடி

Thursday, July 28, 2016

கபாலி
கருந்தேள் ராஜேஷ்
ரஜினி மற்றும் பிற பாத்திரங்கள் நடிப்பு அங்கங்கே சிறப்பாக செய்துள்ளார்கள். கதையின் போக்கு குழப்பம்.

ராம் சின்னப்பயல்
இருபத்தியைந்து வருஷம் சிறையில் இருந்தவருக்கு தற்கால வடிவேல் நகைச்சுவை வசனம் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.

தினமணி
உலக பெரும் அறிஞர்கள் படைப்புக்கு ஈடாக இருக்கும் என்று எதிர்பார்த்தது தவறு. பா.ரஞ்சித் அடித்தட்டு மக்களின் தேறாத வாழ்வை படம்பிடிக்கிறவர். அவரின் தலையில் பனங்காயை வைத்துவிட்டார்கள்.

தி தமிழ் இந்து.
குறை படைப்பாளியின் கையில் இல்லை. நம் பார்வையில்தான் இருக்கிறது.மேலும், முதல்நாள் டிக்கட் வியாபாரம் ஒரு கார்பரேட் தன்மையில் புழங்கியது சதாரண ரசிகனை பின்னுக்குத் தள்ளிவிட்டது. தொடர்ந்து ஆட்சியாளர்களின் பாராமுகமே காரணம்.

தலித் சார்புடையவர்கள் (பெரும்பாலும்)
பா.ரஞ்சித் புரட்சியாளர், அடித்தட்டு மக்களின் வாழ்வை தூக்கி நிறுத்தும் செயலை தொடர்ந்து செய்கின்றார். கபாலியை அவரைவிடச் சிறப்பாக யாரும் செய்யமுடியாது. சிலர் பரவாயில்ல. பத்தோட பதினொன்னு.

தலித் எதிர்ப்பாளர்கள்
பறையண்டா, ரஜினி பறையன் தலைவண்டா, இந்த மயிருக்கு எப்பிடியெல்லாம் விளம்பரம். ஊத்திக்கிடுச்சிடா,

இந்தச்சூழலில் என் பார்வையும் இங்கே. (முடிந்தால் வாசிக்கலாம்)
தேவைப்படாத சில வகைகளை உள்ளடக்கிய, தேவையான ஒன்றாக இச்சமூகத்தில் உதித்துவிட்டப் படைப்பு கபாலி.

கதையின் குறைபாடு.
ஆரம்பகால தமிழ் மலையக மக்களின் நிஜமான வாழ்வை பின்னணியில் காட்டப் படும்போது, ஒரு ஐந்து சதவிகிதம்கூட நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தவில்லை. அந்த மக்களின் நெடுங்கால கஷ்டங்களைத் துண்டு துண்டாக வாய்வழியாக விவரிப்பதுதான் திரைக்கதையின் மிகப்பெரிய குறைபாடு. இப்படி வாய்வழியாக விவரிக்கும் முறையை எடுத்துக்கொண்டதற்கு காரணம். பா.ரஞ்சித் நிண்டதொரு ஆய்வு முடிவை தன் கையில் தீர்க்கமாக வைத்திராமல் இறங்கியதுதான். இரு கேங்கின் கதையென்றால் அதன் பரிமானங்கள், வீழ்ச்சி, வெற்றி அப்பகுதியை மட்டும் எடுக்காமல், வியாபார ரீதியில் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்த இடையிடையில் நுழைக்கப்பட்ட குடும்ப உணர்வுகளின் கதைத் துண்டுகள் இவைகள்தான். கபாலியின் ரசிப்புத்தன்மையை பின்னுக்கு இழுக்க மிக முக்கிய காரணங்கள்.

ஒரு நாயகன் பாத்திரத்தை வைத்து எந்தளவிற்கு தன் இன மக்களுக்கான நியாத்தைக் கட்டமைக்க முயன்றாரோ, அதேயளவு தெரிந்தோ தெரியாமலோ தன்னுடைய இனத்தின் இளைஞன் சதாரண அடப்படை அறிவு இல்லாத முட்டாள் என்கின்ற பாத்திரத்தையும் படைத்துக் காட்டிவிட்டார். அப்பாத்திரம் என்னை முகம் சுழிக்கவும் வைத்துவிட்டது. அநேகமாக இதை யாரும் சொல்லாத ஒரு விஷயம். அட்டகத்தி நாயகன் தினேஷ். அவரை ஓவர் ஆக்டிங் என்றே சொல்லமுடியாது. அந்த பாத்திரத்தை ரஞ்சித்தான் உருவாக்கியிருக்கின்றார். அதற்கேற்ற நடிப்பை அவர்தான் வாங்கியிருகின்றார். இத்தனைக்கும் டானிடம், அந்த இளைஞனுக்கு சிறு பொறுப்புதான் வழங்கப்படுகின்றது. அந்த சிறுபொறுப்பில்கூட எவ்வளவு அடாவடித்தனத்தைக் காட்டிவிடுகின்றான். டான் போகும் இடமெல்லாம் சுற்றி நிற்பவர்களை தாருமாறாகத் தள்ளிவிடுவது. சில இடங்களில் பெண்களைக்கூட வேகமாகத் தள்ளிவிடுகின்றான். உண்மையிலேயே ஆதிக்க வர்க்கங்களுக்கு தன் மக்களின் தரத்தை உயர்த்திக் காட்டவேண்டுமென்றால் ஒவ்வொரு பாத்திரத்தையும் மிக ஜாக்கிரதையாக முன்னெடுக்கவேண்டும். டான் மூலம் நான் ஆளப்பிறந்தவண்டா என்ற கர்ஜனை பொதுவான பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படலாம் வெகுசீக்கிரம் மறைந்தும்போகும். ஆனால், தினேஷ் பாத்திரம் போன்றவைகள்தான் ஆதிக்க மக்களிடமும், அறிவுசார்ந்த மக்களிடமும் வேர் ஊன்றி, பல கட்டங்களாகப் பேசிக்கொண்டிருக்கும். இவன்களெல்லாம் இப்படித்தான். அந்த சின்ன பொறுப்பில் இருக்கும்போதே இவ்வளவு மோசமாக நடந்து்கொள்கிறான். இவன் ஆள்கின்றவனாக வந்துவிட்டால் எப்படி இருப்பான் என்கிற பிம்பத்தை மிகச்சுலபமாக குத்திவிடுகின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

நடிகர்களின் பங்கு
ரஜினி தன்னுடைய நடிப்பில் அற்புதம் செய்திருக்கின்றார். எதிரிகளிட்ம் கோபத்தைக் காட்டும்போதும், போராட்டங்களின் காலகட்டங்களிலும், மகள், மனைவியிடம் பாச உணர்ச்சியைக்காட்டும்போதும் சிறப்பாக செய்திருக்கின்றார். குறிப்பாக தான் பெரிய டான் என்றாலும் தனக்கு இருந்த ஒரே உறவான மனைவி இருக்கின்றாளா? இல்லையா? தனக்கு ஒரு வாரிசு இருந்திருந்தால் என்ற ஏக்கத்தின்போதெல்லாம் அவர் முகத்தில் காட்டும் வெறுமை, ஏக்கம் அருமை. தன் மனைவியைத் தேடும்போது மகள் இருக்கின்றாள் என்பதும், அந்நேரம் எதிரிகள் சூழ்ந்துவிட்ட சூழலில், தன்னை மிகபெரிய இக்கட்டில் இருந்து காப்பவள்தான், தன் மகள் எனத்தெரிய வரும்போது, அதுவும் அவள் ஒரு சாகசப்பெண்ணாகத் தன்னை மீட்கும்போது ரஜினி மெய்மறந்து நிற்கும் காட்சி ஆகச்சிறந்த நடிப்பு. தன் மனைவி அரவணைப்பைத்தவிர்த்து, அநேகம் ஒருவரை ஒருவர் தொடாத காட்சிகளாகத்தான் இருக்கின்றது. ரஜினியின் நிஜத்தின் பெருந்தன்மை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் பாத்திரம் ஏற்படுத்தவேண்டிய கணவன், மனைவிக்குள் மிக நெருக்கமாக எழக்கூடிய (காம) ஊடல்களைப் பார்வையில் காட்டிவிடுகின்றார். முடிந்தளவு அப்படியான நேரங்களில் தன் ஸ்டைலைக்காட்டி தப்பித்துவிடுகின்றார். மொத்தத்தில் ரஜினியின் நடிப்பு மிக அற்புதம்.

நாயகி
நடிப்பும் மிக அற்புதம். எல்லா இடங்களிலும் மிக இயல்பாக நடித்திருந்தாலும். பிரிவுக்குப்பிறகு கணவனை முதல் முதலாகக் காணும் காட்சியில் பார்வையாளர்களை தேம்பித்தேம்பி அழவைத்துவிடுகின்றார். இப்படி ஒவ்வொரு நடிகரையும் சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்து நடிகரையும் மிகப் பொறுப்பாக நடிக்கவைத்துள்ளார்பா. ரஞ்சித்.

பின்னணி இசையும், காட்சிகளோடு இயைந்த பாடல்களில் ‘மாய நதி‘ நெருப்புடா பாடல்கள் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.

மலேசிய நாட்டின் கட்டடங்கள் ஒளிகளால் நிறைந்த இரவுநேரக் காட்சிகள் அழகு. பா.ரஞ்சித் காட்சிகளை மிக நேர்த்தியாக கட்டமைக்கின்றார். வசனங்கள் பார்வையாளர்களிடத்தில் பரவலாக பேசப்பட்டாலும், பாத்திரங்களுக்குப் போருந்தும்படியாக அமைந்திருந்தால் மிகச் சிறப்பாக வந்திருக்கும். பல விஷயங்களைப் படிக்கின்றவன் தகுதிக்கான வசனங்களை, கதைக்கு பொருந்தும் பாத்திரங்களில் பேசினால் சில நேரம் ஒன்றாமலும், சிலநேரம் வீனான சார்புத்தன்மையில் கொண்டுபோய்விடும் என்பது என் நம்பிக்கை. ராம் சின்னப்பயல் தன் முகப்புத்தகத்தில் அதை அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளதைப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாக கபாலியைக் கணக்கிட்டுப் பார்த்தால், மிகச்சிறந்த சத்துக்கள் கொண்ட பழவகைகள் எப்படி தேவையில்லாத தோல், நார், போன்றவைகளால் இணைந்து சத்துள்ள சுலைகளை கொண்டுள்ளதோ அவைபோன்றுதான், தேவைப்படாத சில வகைகளை உள்ளடக்கிய, தேவையான ஒன்றாக இச்சமூகத்தில் உதித்துவிட்டப் படைப்பு கபாலி.

டேனியல்

Monday, July 25, 2016

'ஈரம் வற்றும் தட்டுகள்'

ஈரம் வற்றும் தட்டுகள்.

ரஜினியின் தொடக்ககாலம் கிராமங்களில் நிறைந்திருந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் ரசிப்பால்தான், அவர்களின் கொண்டாட்டங்காளால்தான் வியாபார ரீதியாக அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது. குறிப்பாக தலித் மக்களுக்கு அதில் பெரும்பங்குண்டு. அடித்தட்டு மக்களில், இளைஞர்கள் அவரின் புதுவிதமான ஸ்டைலில் ஈர்க்கப்பட்டார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் பெரியவர்கள் தாமாகவே, தங்கள் இனம்போல கருதி இயல்பாகவே நம்ம ஆளாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அளவில் அவரின் படங்களை அதிக விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால்,  அந்தக் காலகட்டங்களில் மேல்தட்டு மக்கள், மற்றும் படித்து பொருளாதாரத்தில் உயர்ந்து சமூகத்தில் உயர்மதிப்பு நிலைக்குள் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், அநேகமாக ரஜினியை, மெண்ட்டல், அல்லது குடிகாரன் என்கிற தகுதியில்தான் வைத்திருந்தார்கள். மேலும், சாதிய ரீதியாகவும், நிறம் ரீதியாகவும் எம்.ஜீ.ஆர், சிவாஜி போன்ற பெரும் ஆளுமைகளில் தங்களைக் கரைத்துக் கொண்டிருந்ததாலே, ரஜினியை அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு சாதாரன நடிகனாகக்கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

மேல்தட்டு விமர்சனம்

ஒரு கட்டத்தில் மேல்தட்டு மக்களின் விமர்சனங்களில் ரஜினி துவண்டு புழுவாகத் தத்தளித்தக் காலங்கள் உண்டு. அந்த நேரங்களிலும் அடித்தட்டு மக்களின் கனவு நாயகனாக வலம் வந்துகொண்டிருந்தார். அநேக இளைஞர்கள் திரும்பத்திரும்ப ரஜினியை நேரில் சென்று உரையாடுவதுபோல சினிமா கொட்டகைகளில் அவரைத் தரிசிக்கத் தொடங்கினார்கள். மேலும், ரஜினி தன்னுடைய அயராத உழைப்பால் தனித்தன்மையான திறமையை வெளிப்படுத்தினார். அதன்பால் நாளுக்கு நாள் வெற்றியையும் குவித்தார். வேறு வழியில்லாமல் கொஞ்சங் கொஞ்சமாக மேல்தட்டு மக்கள் முதலில் வியாபார ரீதியான லாபத்திற்காகத்தான் ரஜினியை ஆதரித்தார்கள். அதற்கான லாபத்தை பெருமளவில் ஈட்டிக்கொண்டார்கள். லாப ருசி கண்டவர்கள் ரஜினியை மேல்தட்டிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்பினார்கள்.  அவர்களுக்கு அது மிகத் தேவையாக இருந்தது. இவர்கள் எதற்காக தம்மை நாடியிருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்பது ரஜினிக்கு மிகத் தெளிவாகவேத் தெரியும். அதனால்தான் யாரையும் சாய்ந்து வாழ்பவராக இல்லாமல் தனிமைப்பட்டவராக இருந்துவருகின்றார். ஒருவேளை மேல்தட்டு, நடுத்தட்டு என்று இன்றைய தலைமுறை வாலிபர்கள் ரஜினியை எந்த அரசியலும் இல்லாமல் விரும்பலாம், அவர் எளிமை, நற்பண்பு, ஆண்மீகம், உச்சம் மற்றும் ஈர்ப்பு எனும் நிலை நிரந்தரமாக அவரில் உள்ளதால்.

நன்றி மறவாமை

ஆரம்ப காலங்களில் தன்னுடைய சொந்த மக்கள்போலவே தனக்கு ஆதரவு தந்த அடித்தட்டு மக்களுக்கு இதுவரை எதையுமேச் செய்யவில்லை என்ற வருத்தம் தொடர்ந்து அவரில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை நினைத்துக் காத்துக்கொண்டிருந்தார். பொதுவாக ரஜினி கடந்த காலத்தை, அதாவது தனக்கு செய்த உதவியை மறக்காதவர். அவற்றிர்க்கு பதிலியாகத் தனக்கு வாய்ப்புக்கிடைக்கும்போது திருப்பி செய்துவிடுகின்ற பண்புடையவர். அப்படித்தான் ஆரம்ப காலங்களில் எந்த அடித்தட்டு மக்களால் தான் தமிழகத்தில் கால்ஊன்ற உதவியாய் இருந்தார்களோ அவர்களுக்கு ஏதாவது திருப்பி செய்யவேண்டும் என்ற நோகில் கபாலியைக் கையில் எடுத்தார். அப்படித்தான் பா.ரஞ்சித்தின் கதை பிடித்தவுடன், ‘போய் தாணுவைப்பார். அவருக்கு நான் நன்றிக்கடன் செய்யவேண்டியிருக்கிறது‘. என்றார்.

ரசிப்பின் உச்சம்

எங்கள் கிராமத்தில் எண்பதுகளிலும், தொண்ணூறுகளைக் கடந்தும் நாங்கள் ஒரு நாலு பேர் மிகத் தீவிரமான ரஜினி ரசிகர்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் கிணற்றண்டையில் கூடி ரஜினி புகழ் பாடிக்கொண்டிருப்போம்.  ரஜினியின் ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு பணத்திற்கு சர்வதேச திட்டம்போல் வகுப்போம். தொடர்ந்து கூலிவேலைக்குப் போவது. சில நாள் கூலி இன்னும் கொடுக்கப்படவில்லை என வீட்டிற்குச் சொல்வதுண்டு. பதில் செய்வதற்கு வேறு சில கூடுதலான வேலைசெய்து, முன்நாள் கூலியை வீட்டிற்குக் கணக்குக் காட்டுவது. சில நாள் வீட்டிற்கு கொடுப்பது போக,  மிச்சம் பிடித்து படத்திற்காக சேகரிப்பது என்றெல்லாம் நடந்திருக்கிறது. அநேகமாக நான் ரஜினியின் படங்களை முதல் நாள், முதல் காட்சி நண்பர்களுடன் சேர்ந்தோ, தனியாகவோ பார்த்துவிடுவேன். ரஜினி ரசிப்பின் உச்சமாக எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வொன்று நடந்துவிட்டது. ‘தர்மதுரை‘யா, ‘அதிய பிறவி‘யா சரியாக நியாபகம் இல்லை. ரஜினி பச்சை சட்டை, மஞ்சள் பேண்ட்  தொல, தொலனு போட்டு, இன்செய்துகொண்டு வருவார். அந்த உடை எங்களை ஈர்த்தது. கொஞ்ச நாளாக அதே நினைவாக இருந்தோம். சில நாள் கழித்து “டே, அதேமாதிரி டிரஸ் நம்ம நாலுபேரும் தச்சி போடனும்டானு“ பெசிக்கொண்டோம். அதை எப்படியோ சாத்தியப்படுத்தினோம். எங்கள் ரசனை எல்லை மீறியது என்று அப்போதுத் தெரியவில்லை. எனக்குப் பொண்ணு நிச்சயம் பண்ணப்போகின்ற நாளில், அந்த டிரஸ்சை நாலுபேரும் ஒரே மாதிரி போட்டுகொண்டு சென்றோம். அங்கு போனபிறகுதான் பெண் வீட்டார் “யார்ரா அவுனுங்க புதுசா தொடங்குன பேண்டு செட்டுகாரனுங்களாட்டம் வந்திருக்கானுங்கனு, ஒரே கிண்டல் பேச்சாகிவிட்டது. இருந்தாலும் எங்களுக்கு அது பெருமையாகவேப் பட்டது. ஆனால், இப்போது நினைக்கும்போ சற்று சிரிப்பாகத்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் ரசிகர்கள் இருந்துதான் ரஜினியின் மதிப்பைக் கூட்டினார்கள். இதுபோல ஆயிரக்கணக்கான செயலை அடித்தட்டு மக்கள் செய்து ரஜினி எனும் மாபெரும் பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவைகளை ரஜினி எளிதில் மறந்துவிடமாட்டார்.

மதிப்பீடு

2003க்குப்பிறகு என்னை இலக்கிய செயல்பாடுகளில் இணைத்துக்கொண்டேன். நண்பர்களுடன் உலக சினிமாவின் தரத்தை உற்று பார்க்கத் தொடங்கியதிலிருந்து படிப்படியாக தமிழ் கதாநாயகர்களின் மீதான பிரமாண்டமான நம்பிக்கைகள் குறையத்தொடங்கின. இருந்தாலும் ரஜினியைப் பொறுத்தளவில் தனிமனித வாழ்வின் சிறப்பியல்புகளில் என் மதிப்பீடு உயர்ந்தே இருக்கிறது. கிராமத்திலிருந்து நகரத்தில் வந்து பிழைக்கிறவன், நகர மக்களுக்கு செய்ததைவிட, எந்தவிதத்திலும் ரஜினி செய்யாமல் இருக்கவில்லை என்பது என் கருத்து.  இந்த புரிதலோடு கபாலியைக் குறித்து நானும் என் கருத்தை வைக்க விரும்புகிறேன். லட்சக்கணக்கில் விமர்சனங்கள் வந்திருந்தாலும் தினமணி போன்ற வன்மமான மதிப்பீட்டின் மூலம், வெகுஜன மக்களிடம் பொய்யான மதிப்பீட்டை நிறுவுவதற்கு, மாற்று மதிப்பீடாகவும் படத்தில் தவறு எங்கேத் தொடங்குகிறது. எங்கே சிறப்பு அடைகிறது என்பதை என் அறிவுக்கு எட்டியவிதமாக  வெளிப்படுத்த முயல்கின்றேன்.

தொடரும்...