Friday, October 19, 2012

புரிந்துணர்ந்தது,


ஊர்ப்பிடாரி


கவிப்பித்தன்

வேலுர் மாவட்டம்   வாலாஜா பேட்டையில், 23,09,2012 அன்று  ஊர்ப்பிடாரி திரு. ஜி. விஸ்வநாதன் வெளியிட எழுத்தாளர் பிரபஞ்சன் பெற்றுக்கொண்டார். நான் வாலாஜாவில் இறங்கி, விழா இடம் எங்கு இருக்கிறதோ என்றுத்தேடத் தொடங்கியதும் பேருந்துநிலையம் நுழையும் இடத்தில் நிகழ்வின் மிகப்பெரிய  பிலக்ஸ் பேனர் வைத்திருந்தார்கள்.  ஒருவரிடம்  இடத்தின் முகவரியைக் கேட்டுக்கொண்டு போனேன், நிகழ்வு  நடக்கும் இடத்தில் பெரிய பெரிய பேனர்கள். குறைந்தது நான்கு அங்கங்கே இருந்தது.  வாசலில் வரவேற்ற ஊர்ப்பிடாரியின் சொந்தக்காரர் வாங்க என்று அழைத்தார்.அவருடன் பல நண்பர்கள்  இருந்தார்கள். அடுத்து என்ன செய்யனும் நண்பரே என்கிற விதமாக கதையாளரிடம் ஆலோசனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் சற்று ஆச்சரியத்துடன் இங்குள்ள நண்பர்கள் ஒரு படைப்பு வருவதற்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள் என்று வியந்தேன். உள்ளே நுழைந்ததும். நிகழ்வு  மண்டப  அறையில்   பெண்களும்  குழைந்தைகளும்  முதியவர்களும் வாலிபர்களும்  கூட்டம்  அதிகமாகவே இருந்தது. பரவாயில்லை இந்தப்பகுதியில் இலக்கிய நிகழ்வுக்கு இவ்வளவுக் கூட்டம் வருகிறதே என்று மனதுக்குள் பெருமைப் பட்டுக்கொண்டேன். இந்தக் கூட்டத்திற்கு பல நண்பர்கள் தாராளமாக உதவிசெய்தார்கள். அதனால்தான் நிகழ்வு  இப்படிச் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று மேடையில் வரவேற்பு நிகழ்த்தியபோது சொன்னார்கள். இன்னும் கூடுதல் பெருமை.  ஆனால், ஆத்மார்த்மான  ஈடுபாடற்ற சில இடங்களில் நடப்பதுபோலவே  2,30க்கு நூல் வெளியீடு என்று போட்டு கிட்டத்தட்ட ஆறுமணிக்கு ஆரம்பித்தார்கள்.

கதையாளர் கஷ்டத்திலிருந்து அப்புத்தகத்தை கொண்டுவருகிறார்.அதனால், அண்பளிப்பாக ஆயிரம் மட்டும்  கொடுத்துவிடு என்று  இங்கிருந்துப் போகும்போது நண்பர் பணம்கொடுத்தனுப்பினார். நிகழ்வு முடிந்தபிறகு கதையாளரிடம் நண்பர் கொடுத்தப் பணத்தைச் சேர்த்துவிட்டேன். மிகவும் வருத்தப்பட்டவராக நண்பரே கடைசியில சொல்றீங்களே முன்னாடியே சொல்லியிருந்தா மேடையில் கூப்பிட்டு கவுரவப்படுத்தியிருப்பேனே என்று வருத்தப்பட்டார்.இருந்தாலும்  நண்பருக்கு ஒரு புத்தகத்தைக்கொடுத்து சேர்த்துவிடச்சொன்னார். ஏற்கனவே இக்கதையாளரின் இடுக்கியைப் படித்த அனுபவம் இருக்கிறது.  அதனால், புத்தகத்தின் உரிமையாளரிடம் சேர்ப்பதற்குள் வாசித்துவிட மனசு படபடத்தது. ஆனால், உள்ளுர் நண்பருக்கு தகவல் தெரிவித்து புத்தகத்தை இரண்டு நாளில் சேர்த்துவிடுகிறேன் என்று கேட்டுக்கொண்டேன். அதன் அடிப்படையில் வாசித்தேன்.


கதையாளர்  வித்தியாசமான பாத்திரங்களையுடையதாக,  ஒவ்வொரு கதைகளையும் தேர்வுசெய்கிறார். அக்கதைகளைத் தன்னுடைய இயல்பான பாணியிலேயே  கொண்டுசெல்கிறார். கதைகள் ஒரு சீரான நூல் பிடித்தார்போல கொண்டுசெல்வதில் அதிக கவனம் செலுத்துகிறார். பார்க்கும், கேள்விப்படும்,  அனுபவிக்கும் விஷயங்களைத்தான் கதைக்களன்கலாக எடுத்துக்கொள்கிறார். கதைமாந்தர்கள் கையாளும் வாய் மொழியை, அப்படியே தன் பகுதியின்  வட்டார மொழி என்கிற விதமாகப் பயன்படுத்துகிறார். கதைக்குள் நுழைகிறேன்.

1. ‘அத்திப்பூ சென்பகம்’

கணவனை இழந்தப் பெண் தன் மகளை மிகவும் கவனமாக பாதுகாத்து வளர்க்கிறாள். அதனால்,  அப்பெண் வெளிச்சூழலில் அதிகமான ஈடுபாடு இல்லை. அம்மா, மகள் வயதிற்கு வந்தபிறகு இன்னும் கூடுதல் கவனம் செலுத்துகிறாள். அம்மாவைவிட அதிகமாக, செண்பகம் தன்னுடலை தனக்குக் கிடைத்த மிகப்பெரியப் பொக்கீஷமாக பாதுகாக்கிறாள். தன் அம்மாவிற்குக் கூட தன் உடலைக் காட்டியதில்லை. செண்பகத்திற்கு கல்யாணம் நடக்கிறது. இரண்டு குழந்தைகள். இரண்டாவது குழந்தை  பிரசவித்தபிறகுதான் செண்பகத்திற்கு குடும்பக்கட்டுப்பாடு நடக்கிறது. இந்த டாக்டர்தான் பிரசவம் பார்த்தார் என்று வழியில் போகிற டாக்டரைக்காட்டி எதேச்சியாக அம்மா சொல்லுகிறார். பிரச்சனை அங்குதான் தொடங்குகிறது. தன் உடலை அம்மணமாகப் பார்த்திருப்பாரே என்று நினைத்து நினைத்து வருந்தி உயிரையே மாய்த்துக்கொள்வதாக முடிக்கிறார்.

 இக்கதை பெண்ணின்  நிலையில் நின்று அவளுக்கு இப்படியான எண்ணம் ஏன் வரவேண்டும்? அதற்கான காரணம் என்ன? என்றக் கேள்வியை எழுப்பியிருந்தால் கதை வெற்றிபெற்றிருக்கும். மாறாக,  நடந்த விஷயத்தைப் பதிவுசெய்த விதம் என்னதான் காலம் முன்னேறினாலும்  பெண் எல்லாச் சடங்காச்சாரங்களையும் இம்மியும் தவராமல் கடைபிடித்து வாழவேண்டும் என்ற நிலைக்கு கதையாளர் கொண்டுசெல்கிறார் என்ற எண்ணத்தைத்தான் எனக்கு ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற கதைகள் தேவையா? என்ற கேள்வியை எழுப்பினால்,  இது தேவை இதுதேவையில்லை என்பதை நினைத்து வருவதல்ல படைப்பு என்று சொல்லலாம்.  ஆனால், ஒரு கதை  நூறு வருஷத்திற்கு பின்தங்கிய சமநோக்கு இல்லாத வாழ்வை  தற்போது நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்கிறக் கருத்தை வைக்கிற விதமாக கதை இழுத்துச்செல்கிறதென்றால் இதுத்தேவையா? அதிலும் கதை முழுக்க செண்பகத்தின் உள் உணர்வுகளை எந்த இடத்திலும் பிரிதிபளிக்கவே இல்லை செண்பகத்தைப்பற்றி பேச்சுவாக்கிள் கேள்விப்பட்டதை பதிவுசெய்வதாகதான் கதை முழுக்க அமைகிறது.

செண்பகம் இரண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்றால் அவளின் மனம் எந்தளவு பாதித்திருக்கும். ஒரு பெண்ணுக்கு அப்படியானச் சூழலை ஏற்படுத்தியது எது? ஏன் தொடர்ந்து மனம் பிரம்மை பிடித்துத் தவித்தது. இவைகளைக் கதை ஆராயவில்லை.

இரண்டு பிள்ளைகளை, கணவனை, தாயை விட்டு மீண்டும் திரும்பி வரமுடியாத ஒரு உயிர் போய்விட்டதே என்று வாசகனுக்கே பதைக்கிறபோது. கதையாளர்   “காலையில் செண்பகத்தின் கதை முடிந்துவிட்டது.”   என்று  சொல்லும் மேம்போக்கான வார்த்தையில்தான்,  இக்கதை பழமைகளில் ஊரிப்போன விஷயத்தை,  மறைமுகமாக முன்வைக்கிற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காகப் படைக்கப்பட்டதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

2. சிப்பாய் கனேசன்

பொதுவாக இவருடைய  பல கதைகள், இறந்து போனவர்களுடைய  வாழ்வைத்தழுவி எழுதப்பட்ட  கதைகளாகத்தான் இருக்கிறது. ராணுவ வீரர் ஆறுமாதம் அல்லது  வருஷத்திற்கு ஒருமுறை,  வரும்போதெல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது குடும்பம். அப்படியொரு முறை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும்போது அதற்கு மாறாக அவர் மரணப் பெட்டி வருவதைச்சொல்லுகிறது.  

“பையன் படுத்து விழிக்கிறபோது  அம்மா வளையல் மாட்டிக் கொண்டிருந்தாள்.  அப்பா இல்லாதபோது வளையல் கழட்டுவதில்லை.” என்று ஒரு நிகழ்வை புரிந்துகொள்ள அழகான குறியீடாக இந்த வார்த்தைகளை வைத்திருப்பார்.இதுபோன்ற குறியீட்டு வார்த்தைகள். இவருடையக் கதைகளில்  மிக அரிதாகத்தான் கண்டெடுக்க முடிகிறது.

முக்கியமாக இவருடைய உவமாணங்கள், குறிப்பிடப்படுகின்ற சூழலுக்கு சற்றும் பொருத்தமற்றதாக இருக்கிறது. ‘ஒரு கைப்பை நிரம்பியிருப்பதை’ “எருமை மாட்டின் வயிறுபோல” என்கிறார்.

3. சாவு பஜனை

ஒருவர் மரணத்தில் ஒருவர் சந்தோசப்படுகின்ற வாழ்வு முறை எந்தச் சமுதாயத்திலும் சிலரிடம்  இருக்கத்தான் செய்கிறது. என்கிற புரிதலை ஏற்படுத்துகின்றது. அது மிகப்பெரிய பொருளை அபகரித்தல் விதமாக இல்லை. சாதாரண போதைமயக்கத்திற்கா என்கிறபோது மனிதர்களுடைய மனசாட்சியை என்னவென்று சொல்வது என்கிற கேள்வியையும் எழுப்புகிறது

வார்த்தைச் சிக்கனம் என்றபெயரில் தவறான அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாக ஆகிவிடக்கூடாது. “ ஓடிவந்து பிணத்தின் மீது புரண்டு கதறினாள்.”   என்கிற போது நீட்டி  படுத்திருக்கிற பிணத்தின் மீது குறுக்காக புரளுவது போல் அர்த்தமாகிறது, ‘பிணத்தின் மீது விழுந்து,  புரண்டு அழுதாள்’ என்கிறபோது  சரியாக நடந்ததைப்போன்று அர்த்தமாகும்.

நடேச  ரெட்டியார் இறந்த செய்தியை சொல்ல  நாலாபுறமும்  ஆள் அனுப்புகிறார்கள் என்கிற விஷயத்தை ஆசிரியர் சொல்லிக்கொண்டு வரும்போது வெளியூர் போகிறவர்களுக்கு, ‘பறை மேளத்துக்கு முன் பணம் கொடுத்தனுப்பினான்’  என்று சொல்லுவார்.  (ஒரு முற்போக்கான கதையாளரரிடமிருந்து இப்படியான ஒரு வார்த்தை வந்தது உண்மையில் வருத்ததை ஏற்படுத்தியது.) ஏனென்றால் அதன் கீழ்பகுதியில் ரெட்டியார்களில்  சாதாரணப் மனிதன் ஒருவர் பேச்சுவாக்கில் சொல்லும்போது ‘அந்த பறை மேளம் அடிக்கிறவங்க  என்று குறிப்பிடுவார். அப்படிக் குறிப்பிடுகிற தொனியில் அலட்சியம் தெரியும். அந்தத்தொனிக்கும் கதையாளர் குறிப்பிடும் தொனிக்கும் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை ரெட்டியார், சமூகம் தன் இயல்பில் இழிவைக் கலந்துப்பேசிப் பேசிப் பழக்கப்பட்டதால் அவரும் அப்படியானப்பேச்சைச் சாதாரணம்போன்று குறிப்பிடுகின்றார். ஆனால், இங்கு ஆசிரியம் அதே பாணியைக் கையாளும்போது கதைக்கு மட்டும்தான் முற்போக்கா?என்கிற கேள்வி எழுகிறது.

ஒரு கட்டத்தில் இப்போதெல்லாம் சரக்கில்லாமல் எந்த விஷேசமும் நடப்பதில்லை என்கிற சமூகத்தின் தற்கால அவலநிலையான உண்மையை போகுற போக்கில் சரியாக குறிப்பிடுகின்றார்.

4. திருட்டு இலுப்பை

இலுப்பை தோப்பில் கொட்டைத் திருடுபோகிறது. பக்கத்து ஊர்க்காரனா? ஆடுமாடு மேய்ப்பவர்களா? யார்தான் திருடுகிறார்கள் என்று மண்டையைக்குடைந்து தேடுகிறபோது கொட்டையைப் பொறுக்குகிற வர்களே மறைத்து வைக்கிறார்கள் என்கிற உண்மை வெளிப்படுகிறது. மற்றவர்களைக் குற்றம் சாட்டிய ரெட்டியார் கடைசியில் தன் காலில் மலத்தை ஒட்டிச்செல்கிறார் என்கிற நீதியை வழங்கி கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

பொதுவாக இக்கதையாளரின் பல கதைகள் வாசகனை யோசிக்கத்தூண்டுகிற செயலை பரவலாகச் செய்யவில்லை. மாறாக சாதாரண நிக்ழ்வுகளை ஆசிரியரின் திறமையால் சிறுகதையின் ஒழுங்கு உடையாமல் ஒரு நூல் இழைபோல்  கொண்டுசென்று முடிக்கவேப்பார்க்கிறார்.  மேலும் அப்பாவித்தனமா? தன்னுடைய வார்த்தைகளை விட்டு தானே மாட்டிக்கொள்கிறார்.  அப்படி அப்பாவித்தனமாக இருந்தால் ஒரே நேரத்தில் பத்திரிகையாளன், கவிஞர், சிறுகதையாளர் என்ற தன் பதிவுகளில் வெற்றிபெறமுடிமா? என்று நினைக்கவும் தோன்றுகிறது.

இக்கதையிலும் சேரிக்காரர், வண்ணார், அம்பட்டர்தான் திருட்டுக்கொட்டையை பொறுக்குவார்கள். அம்மக்களுக்கு பங்கில்லை என்றாலும், இரண்டு மூன்று செக்குக்கூட ஆடிவிடுவார்கள்’. என்று ஒரு கட்டத்தில் தன் கருத்தாகச்சொல்லுகின்றார்.

மேல் குறிப்பிட்ட மக்களுக்கு  ‘பங்கில்லை என்றாலும், இரண்டு மூன்று செக்கே ஆடிவிடுவார்கள்’ என்பதில் பெரிய அரசியலே இருக்கிறது. கதையாளர் அம்மக்களுக்கு இலுப்பைத்தோப்பில் ஏன் பங்களிக்கக்கூடாது என்ற கேள்வியை வைக்கவில்லை. மாறாக பங்கில்லை என்றாலும் திருட்டுக்கொட்டையால் இரண்டு மூன்று செக்கை ஆடிவிடுவார்கள் என்று கூறுவது எவ்வளவு மோசடியான வார்த்தை. இதையெல்லாம் எந்த இலக்கியவாதியின் கண்களுக்கும் தெரியவில்லையா? தெரிந்தும் அப்படியே புழுங்கட்டும் என்று விடுகிறார்களா?

பாத்திரமாக வருகிற கண்ணப்ப ரெட்டியாருக்கு இலுப்பக்கொட்டையை யார் திருடுகிறார்கள் என்பதில் தலைவலி வருகிறது. அவர் பல வகையில் திட்டம்போட்டு கண்டுபிடிக்கிறார்க்ள.கடைசியில் கொட்டைப் பொறுக்குகிறவர்களே  மண்ணில் புதைத்து  வைத்துள்ளார்கள் என்பது வெளியாகிறது.

அதனால் தவறாக வேற்று மக்கள் மீது சந்தேகப்பட்ட, தண்டனை அளித்த  கண்ணப்ப ரெட்டியாரின் காலில் மலம் ஒட்டிக்கொள்வதை  ஆசிரியர்  நீதியாக வழங்குகிறார். மலத்தை பூசிவிட்டால் இதுவரை அம்மக்களைப் பேசிய பேச்சுக்கள், கொடுத்த தண்டனைகள் எல்லாவற்றுக்கும் தீர்வாகிவிடுமா? எனக்கு எழுகிறக் கேள்வி  பாத்திரம் செய்த தவறுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கிவிட்டார். ஆனால் ஆசிரியர் கதையின் முதலிலேயே  சேரிக்காரர், வண்ணார், அம்பட்டர்தான் இலுப்பைக் கொட்டை திருடுவார்க்ள என்று ஆணித்தரமாக சொல்கிறாரே? அதை எப்படி எடுத்துக்கொள்வது.

5. ஆயிரங்காலத்துப் பயிர்

உலகத்திலேயே தழ்நாட்டின் பெற்றோர்கள்தான் படிப்பின் மீது அதிக அக்கறை எடுத்து பிள்ளைகளை  படிக்கவைக்கிறார்கள் என்கிறார். என்னளவில் ஒரு புதியவிஷயமாகப்படுகிறது. மேலும் யார் யார் எல்லாம், தான் படிக்கவில்லை என்றாலும் தங்கள் பிள்ளைகள் படிக்கட்டும் என்று  கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார்கள் என்கிற பட்டியலைத்தருகிறார்.   ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், அடுத்தக் கட்டத்தில் அத்னையும் மண்ணுக்குள் புதைத்துவிடுகிறதுபோல் ஒரு வார்த்தை வருகிறது. “எழுத்துக் கூட்டி வாசிக்கிற அறைகுறைகள்கூட  படிக்கவைக்கிறார்கள்”  எப்படி, ஒரு கதையாளர் சக மனிதனை இவ்வளவு இழிவாக எடைபோடமுடிகிறது. படிக்கத்தெரியாதவன் எழுத்தைக் கூட்டியாவது படிக்க முயற்சிக்கிறானே என்று அவனை மெச்சவேண்டியப் பொறுப்பு உள்ள கதையாளர் இப்படி கணிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனக்குக் கேட்க்கத்தோன்றுகிறது,  பல பட்டங்களை வாங்கியப் படிப்பாளிகள், பட்டம் வாங்கிவிட்டபிறகு,  எத்தனைபேர் ஓய்வு இருக்கிறது என்று புத்தக்த்தைப் படிக்கிறார்கள்.

இக்கதையில் வருகிற வாசுதேவன் மீது கோபம்தான் வருகிறது. மிகப்படித்தவர் அடிக்கடி மிக மிக உயரிய கருத்துக்களைப்பற்றி சிந்திப்பதாகவும் சமூக நிலையைக்குறித்து மனம் வெதும்புவதாகவும் வெளிப்படுத்துகின்றார்.


 ஆனால் நிஜத்தில் அவரின் மாறுபாடான பிம்பம் மிகச்சாதாரணமாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு இடத்தில் தன் மைத்துனனுக்கு சரியான பெண் கிடைக்கவில்லை எண்பதைக்குறிப்பிட இப்படிப் பேசுகிறார்.  “ இவர்கள் தகுதிக்கு மீறி எல்லாமேப் படித்தப் பெண்கள். படிக்காதப் பெண்களின் குடும்பமோ இவர்கள் தகுதிக்கு பொறுத்தமாக இல்லை.” தகுதியை இவ்வளவு பொறுத்தமாக எந்த மதவாதியால் முடிவு செய்யமுடியும். ஒரு மதவாதி நிர்ணயித்து வைத்திருக்கிற கொள்கையை விலங்கியல் படித்த பட்டதாரி வைத்திருக்கிறார் என்றால். இந்நாட்டின் கல்விமுறையை என்னவென்று சொல்வது.

பத்தாவது படித்த மைத்துனனுக்கு பெண்ணைத் தேடித்தேடிப்  பார்த்து அலுத்துவிட்ட மாமன் பட்டதாரி வாசுதேவன் “டேய் மச்சான் மொதல்ல அப்ளிகேஷன் போட்டுரு.... அப்புறம்... மாப்ள எம்.ஏ  இன்கம்ப்ளீட்னு சொல்லிக்கலாங்.... இதத்தவிர வேற வழியில்ல....”  இந்த அறமற்ற வாசகத்தை நான் வாசித்தவரை  கதைமாந்தர் கூட சொன்ன தில்லை.சாதாரணமாக உற்சாகப்படுத்துகிற விதமாக  பெயிலானாக்கூட பரவாயில்லை. நேரங்கெடைக்கும்போது படிடா,  எழுதுடா, என்றுகூட சொல்லும் மனம் இல்லாத வாசுதேவன்,  சும்மா சமூகத்தைப்பார்த்து கேள்வி எழுப்புகிறேன், சிந்திக்கிறேன் என்பது எல்லாமே என்னளவில் வீன் என்றுதான் கருதுகிறேன்.

6. ரெட்டைக் குண்டி

வெளியூர்களுக்குச் சென்று மாடுகளைப் பிடித்துவந்து விற்று பணம் ஈட்டுகின்ற ஒரு கெட்டிக்காரரின் கதையும். அவன் இறந்தபின் பேயாக பனைமரத்தில் உச்சியிலும் ஊரிலும் வளம் வருவதாக வதந்தி.அநத் வதந்திக்கு பயந்து, ஊரே இரவில் நடமாட நடுங்கும் இருவர்   ஊரின் குளத்தில்  மீன் பிடிக்கப்போகிறார்கள். அப்போது பனைமரத்திலிருந்து விழுந்த உருவத்தைப்பார்த்து குளத்திலேயே பயந்து விழுகிறான்.பிறகு மரித்தும்போகிறான். அதைக் கூடயிருந்துப்பார்த்தவன் அந்த ஊரைவிட்டே போய்விடுகின்றான். பல வருஷங்கள் கழித்து மீண்டும் தன் ஊருக்கு வருகிறான். வந்தவன் அக்குளத்தை அதிசயமாப் பார்க்கிறான். அக்குளத்தில் சிறு பிள்ளைகள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  பொய்யான வதந்திகள் காலங்கடந்து நிற்பதில்லை. அத்தகைய வதந்திகளை பிள்ளைகள் அடித்து துவம்சம் செய்கிறார்கள் என்பதைத்தான் கதை வெளிப்படுத்துகிறது .என்பாதக  எனக்குப்படுகிறது.

மேற்குறிப்பிட்டதைப்போல  உவமாணங்கள் மிக மிக அபத்தமாக இருக்கிறது. அவசரப்பட்டு எழுதிவிடுகிறாரா? என்று தோன்றுகிறது. சில இடங்களில் எழுத்தை சுருக்கிப்போடுகிறேன் என்று அர்த்தக்குறைவான வார்த்தைகளாக வந்துவிடுகிறது. பல இடங்களில் ஒரு இடத்தில் சிக்கனமாக முடியவேண்டிய இட்த்தில் தேவையில்லாமல் நீண்டுகொண்டு வருகிறது.

மனுஷனுக்கு வேர்க்கிறது என்பதை தெளிவுபடுத்த இந்த வாசகத்தைப் பயன்படுத்துகின்றார். “ வேகாத மண் பாணையில் ஊற்றிய நீர் மேனி எங்கும் ஒழுகுவதுபோல”  வேகாத பாணையில தண்ணீரை ஊற்றமுடியுமா?  சரியாக வேகாத பாணையில் என்றால்தான், உதாரணம் சரியாக பொருந்திவரும் வரும்.

உடல்முழுதும் வேர்த்தது என்று சொல்வதை. ‘நெற்றி, மார்பு, கை, கால் என்று வார்த்தைகளை நீட்டிக்கொண்டே போவது தேவையா? அந்த இடம் அப்படி நீட்டி சொல்வதற்கான இடமாகவும் இல்லை.

“குழந்தை பிய்த்துப்போட்ட தோசைபோல் நிலா இருக்கிறது என்கிறார். ஆனால் நிலா வளர்பிறையானாலும், தேய்பிறையானாலும் அத்தனை ஒழுங்குக்கிரையமாக இருப்பது நமக்குத் தெரியும். குழந்தை பிய்த்துப்போடுகிற தோசை கண்ணா பின்னா என்று வராதா? எப்படிப் பொருந்தும்.

இன்னொரு இடத்தில் மனதில் பயம் கூடிக்கொண்டே போகிறது என்பதைக் குறிப்பிட “நிமிடத்திற் கரையான் புற்றுபோல வளர்ந்துகொண்டே இருந்தது.” அலைபாய்கிற எண்ணத்தால் பயம் தானாக கூடிக்கொண்டே வருகிறது. புற்று நிமிடத்திற்கு நிமிடம் வளரக்கூடியதா? எறும்போ அல்லது ஈசலோதான் அப்புற்றுகளை உருவாக்குகிறது அதுவும்  இரவுநேரங்களில்தான் இருக்குமென்று கருதுகிறேன்.

இன்னொரு இடத்தில் கோழிக்குஞ்சியை கொத்திக்கொண்டுபோகும் குருவியைப்போல” குருவியாக் கொத்திச்செல்லும். இப்படி முரண்பாடானா விஷயங்கள் சற்று சலிப்படையச்செய்கிறது.

7.வேதாளங்களின் உலகம்

கோப்புகளை நகர்த்துகிற அரசு அலுவலகங்களின் அலுவலர்கள், தாங்களே அரசு அதிகாரத்தை நேரடியாக கையில் வைத்திருப்பவர்கள்போல்   பொதுமக்களை நடத்துகிறார்கள். என்பதை மிக வேதனை நிறைந்த அளைச்சல்களால் பதிவுசெய்திருக்கிறார். மேலும் அதிகாரிகள் தங்களுடையப் பொறுப்புகளை எவ்வாறு தட்டிக்கழிக்கிறார்கள்  என்பது, பல தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

அதைக்காட்டிலும், இதில் கதையாளரின் மூழுமையான பிம்பங்கள் வெளிப்பட்டு விடுவதையும் தவிற்கமுடியவில்லை. அது அவரின் தனிப்பட்டத் தன்மைகளையும் காட்டிவிடுகிறது.  கதையாளர் புனைப்பெய்ர் வைத்துக்கொண்டு படுகிற அவஸ்த்தையை லேசாக விவரித்துவிட முடியாது.

எழுதும் படைப்பாளிக்கு, சாதாரண மனிதனைவிட அதிகப்பொறுப்பு இருக்கிறது. தன் மூளையின்  வழியாக ஊற்றெடுத்து,  இதய தாராசில் வைத்து சரிப் பார்த்துவிட்டுதான் எழுத்துக்கள் காகிதத்தை நிறப்பவேண்டும்.   குறிப்பாக ஒரு மனிதனைப்பற்றி மதிப்புக் குறைத்து எழுதுகிறோம் என்றால் முதலில்  நாம் அத்தன்மையில் இருக்கிறோமா? இல்லையா? என்கிறகேள்வி தனக்குள் கேட்டுப்பார்த்துவிட்டுதான் மேற்கொண்டு அக்கருத்தை வைக்கவேண்டும். அப்போதுதான் நாம் மனநிறைவாக எழுதியுள்ளோம் (மனசாட்சி உள்ளவர்களுக்கு) என்ற நிம்மதி கிடைக்கும். இல்லை என்றால் ஊறுக்கு உபதேசம் சொல்லுகின்ற கருத்துக் கண்ணாயிரம் போன்ற எழுத்துக்கள்தான் எல்லா காகிதங்களையும் நிறப்பும்.

விசித்திரகுப்த்தன் என்கிற எழுத்தாளன் தன்னுடைய காரியம் நடக்கவேண்டும் என்கதற்காக பல நேரங்களில் நான் ஒரு எழுத்தாளன், என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.  யதார்த்த வாழ்வில் எலலோரும் அப்படித்தான் என்பதை சுட்டவேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தாரா? இல்லை அவரின் இயல்பான நிலை அதுதானா? என்கிற கேள்வி எழுகிறது.  யதார்த்த நிலையில் எலோரும் அப்படி என்று இவர் சொல்லியிருந்தால்,  குழந்தைக்கு பிறந்த சான்று  வாங்க ஏறக்குறைய இரண்டுமாதம் அலைகின்ற நபர்  அங்கு இருக்கிற அதிகாரிகளையோ? அல்லது அதற்கு பொறுப்பான நபர்களையோ ஒரு முறைக்கூட  கோபம் பொங்கிக் கேட்கவேயில்லை. அதுதான் மிக வருத்தமாக இருக்கிறது.

அங்கு நேரடியாக கேட்காமல், சித்திரகுப்த்தன் ‘இந்தச் சமூகம் மோசம், இதில் எழுதுவதைவிட தூக்குப்போட்டு சாகலாம்’ என்றெல்லலாம் புலம்புவது வீன் என்றுதான் என்னைப்பொறுத்தளவில் படுகிறது. ஒரு படைப்பாளிக்கு தன் கண்முன் நடக்கிற விஷயங்களைப்பார்த்து கோபம் வரவில்லை என்றால் அவன் என்ன விதமான படைப்பை வைக்கமுடியும். அதிலும் தானே அனுபவிக்கிற அளைச்சல்  கொடுமைக்கு ஒரு சாதாரண மனிதன்கூட கடைசிவரை சாதுவாக இருக்கமுடியுமா?

ஒரு கட்டத்தில்  அலுவலக உதவியாளர் உங்க இஷ்டத்துக்கு பேர மாத்தி வைத்துக்கொண்டு எங்க உயிர வாங்கரிங்களா? என்று கேட்கும்போது   பிரசவத்தின்போது யாராவது சொந்தக்காறரர்கள் வைத்துவிட்டு இருப்பார்கள்’   என்கிறார். சொந்தக்காறரர்களை பிரசவ அறைவரை தாராளமாக அனுமதிப்பார்களா எனபதே கேள்விதான். ஆனால், அவரே இன்னொருக் கட்டத்தில்  அரைமயக்கத்தில் இருக்கும்போது மனைவி தன் கணவனின் புனைப்பெயரச் சொல்லிவிட்டது எவ்வளவு கஷ்டத்தைத் தருகிறது என்று வேதனைப்படுவார். இங்கேயும் கூட, பேஷண்ட்டாக  அரை மயக்கத்தில் இருக்கிற  நபரை தொந்தரவு செய்யும் விதமாக கணவன் பெயரை மற்ற விபரங்களைக்கேட்டிருப்பார்களா? இப்படி பல முரண்பாடுகள் நிரைந்திருக்கிறது.


7.ஊர்ப்பிடாரி

இக்கதை அருமையாக வந்திருக்கிறது. இதன் புனைவுமொழியும் நன்றாகக் கைக்கொடுத்திருக்கிறது. கதையைக் கொண்டுசெல்கிற விதம்மும் அருமை. படைப்பாளி கடவுள்களைக்கூட ஒரு சாதாரண விஷயத்திற்காக ஏங்குகின்ற மனித்ர்களைப்போல் மாற்றமுடியும் என்பதை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்தத்தொகிப்பிலேயே என்க்கு மிகவும் பிடித்தக் கதை இதுதான். இது ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது கடவுளைக் குறைக்கூறியதற்காக இருக்குமோ என்று யோசித்தேன். காரணம் அதுவல்ல, மனிதன் அடுத்தடுத்துத செயல்பாடுகளில் ஈடுபடுகிறபோது முன்ளுள்ளதை மறந்துவிடுகிறான். அவன் மூளையில் நிலையாக இருப்பது எதுவுமே இல்லையா? என்ற யோசனைகளை எழுப்புவதால் இது பிடிக்கிறது என்று நினைக்கின்றேன்.

ஜேடி.







Tuesday, September 18, 2012

கவிதை




ஒரு சகோதரி


ஒரு சகோதரி
தாயின்
அரவணைப்பைக்காட்டிலும்
மூர்க்கமான
அன்பைப்பொழிகிறாள்.

ஒரு குடும்பத்தை
நட்டாற்றில்
விட மனமற்று
தன் இளமையைக்கூட
ஒரு முதிராத மாம் பிஞ்சாக
உதிர்த்துவிடுகிறாள்
மிகச்சுலபமாக.

ஒரு குடும்பம்
தமயனுக்குக் கொடுத்த
ஊட்டத்தைக்காட்டிலும்
மிகக்குறைவாகவே
அவளுக்கு ஊட்டிவிட்டது
ஆனால், தமயனை  தகப்பனாக,
தவப்புதல்வனாக,
அவளால் மட்டுமே கொண்டாடமுடிகிறது.

இளமையில் கல் என்றது
கற்றவனுக்கு
பயனுள்ளதானது

ஒரு சகோதரி
கற்ற
குடும்ப அன்பின்
இளமைப்பாடம்
தன் குடும்பம் மட்டுமல்ல
சுற்றம் சூழ கண்காணித்துக்காக்கிறது
சிறிதுகாலமல்ல காலம் முழுக்க.

முருங்கையல்ல, பசுவல்ல
ஒரு சகோதரி
ஒரே ஒரு சகோதரி
குடும்ப அன்பின்
இளமைப்பாடம்
கற்ற
ஒரு சகோதரி போதும
சோர்வடைதலைச் சுற்றம் காணாதிருக்க.

ஜேடி



Sunday, September 9, 2012

சிறுகதை

       

சாமுவேலின் வட்டிக்கடை

சாமுவேல் வீட்டில் இருந்தால் அரைக்கால் சட்டையில்தான் இருப்பார். முறுக்கேறிய பாடி பில்டரை ஒத்த மார்புகள்.  உடல்  கட்டுடன் இருக்கும். தேடினால்கூட உடலின் மீது ரோமங்கள் இருக்காது. அவரின் சிறிய கண்கள் தன்னால் என்ன முடியுமோ அதை மட்டுமே விரும்பும். பத்தாவது முடித்தவுடன், நான்கு வருஷம் உள்ளுர், வெளியூர் கபடி விளையாட்டில் காப்டன். காப்டன் சாமுவேல் என்றால் பிரபலம். ‘கபடிக்கபடி’ கூறிக்கொண்டு போகும்போது தொட்டு விட்டு வருவது அவர் பழக்கமல்ல.  பளார் என்று முதுகில் அடித்து விட்டு வருவார். எந்த விளையாட்டு ஒழுங்கும் அந்த அடியைக் கட்டுப்படுத்தவேயில்லை. சுற்றி வேடிக்கைப்  பார்ப்பவர்களுக்கு ‘அப்பா’ என்ன அடி என்று பதறவைக்கும். ஆனால், அடி வாங்கியவர்களுக்கு வலிக்குமோ வலிக்காதோ தெரியாது. அடிப்பதற்காக  எந்தப்பிரச்சனையும் வந்ததேயில்லை. அதற்கு பழிவாங்கும் விதமாக ஏதாவது ஒருமுறை சாமுவேல் காலைப்பிடித்து, மொத்தக்கூட்டமும் அமுக்கிவிடும். சாமுவேல் அடித்துவிட்டு தப்பித்தவுடன் சங்கடப்பட்டவர்கள்  கழுத்து மடங்கி பிடிபட்டவுடன் நிம்மதியடைவார்கள்.

தற்போது அரசாங்க உத்தியோகம் கிடைத்த இருபது  வருஷத்தில்தான் சற்று வயிறு தெரிகிறது. முட்டி மோதி மச்சு வீட்டைக் கட்டியிருந்தார். வீட்டின் நடைபாதையில் பாய்விரித்திருந்தது. நல்ல வெள்ளைச் சட்டை வேட்டியில் சம்மணமாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன் டீப்பாய் இருந்தது. வீட்டில் இருந்தால் எப்போதும் டீப்பாய் முன் உட்காருவதில்லை.  டீப்பாய் முன் இருந்தால், எதிரில் குறைந்தது இரண்டுபேராவது உட்கார்ந்திருக்கவேண்டும். இன்று எதிரில் நான்கு பேர் இருக்கிறார்கள். சாய்வு டீப்பாய் உள்ளுர் ஆச்சாரி செய்ததுதான்.  உட்ப்பிரய்மெர் அடித்திருந்தார்கள் திருப்பித் திருப்பி இரண்டு மூன்றுகோட் அடித்திருப் பார்கள்போல. பிரய்மெர் மொத்தையாய் இருந்தது.

சாமுவேல் டீப்பாயில் இடது முழங்கையை மடக்கி வைத்தவாறு ஏதோ கணக்குக் குறிப்பு எழுதி கூட்டிகொண்டிருந்தார். இடக் கைக்குக்கீழ் பத்திர பேப்பர் இருந்தது. எதிர் வரிசையில் முதலில் மூன்றுபேரும் பின்னாக வெள்ளை வேட்டி சட்டையில் வயிறு பெறுத்த ஒரு நபரும் உட்கார்ந்திருந்தார்கள்.

ஏழு அடி உயரம், ஐந்தடி அகலம்கொண்ட இரும்பு கிரில் கதவு திறந்திருந்தது.  உள் அறைக்கு நல்ல காற்றை  அனுப்பியது. இருந்தாலும் சீலிங் ஃபேன் ஓடியது. முதல் வரிசையில் இருந்த மூன்று பேர்களில் நடுத்தர வயதுள்ள பெண் வாலிபனுக்கு வலப்பக்கமாக  உட்கார்ந்திருந்தாள். பெண் மிகவும் ஒல்லியாக இருந்தாள். தேகம் கறுப்புதான். டார்க் பச்சைநிறத்தில் மஞ்சள் பார்டர் விழுந்த புடவை உடுத்தியிருந்தாள். வாலிபன் நல்ல கலர். வாலிபன் இடப் பக்கத்தில்  நபர் ஒட்டிய முகத்துடன்,  அகலம் இல்லாத, மெலிதான, பெரிய பற்களுடன் இருந்தார். வாய்திறந்தால் மேல் அண்ணத்தின் நடுவில்  நான்கு பற்கள் விழுந்து பெரிய ஓட்டையாக  தெரிந்தது. வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும்.

“தம்பி, நல்லா யோசனைப் பண்ணிப்பாரு ஒரு வருஷமில்ல. ரெண்டுவருஷமில்ல.  ஆறு வருஷமா  நடையா நடந்தேன். நான் போகும்போதெல்லாம் அவர் வீட்டில், வயசுக்கு வந்த ரெண்டு. மூன்றுபொண்ணுங்கதான் இருப்பாங்க. அப்பா  இல்லீங்க,  அங்க போயிருக்காரு  இங்க போயிருக்காருன்னு சொல்வாங்க நானும் என்னடா இது எல்லாம் பொம்பளப்புள்ளைங்களா இருக்குதேன்னு.  அப்பா வந்தா சொல்லுங்கம்மானு, சொல்லிட்டுவருவேன். சில நேரம் இந்தம்மாக்கூட இருப்பாங்க.  ஆனா, இந்தாளு அதெல்லாம் கணக்கிலயே வெச்சிக்கல  எண்பதுதான் எனக்கு கோவம். கடைசியா ரெண்டு முறை, கொஞ்சம் ஆவேசமா பேசிட்டு வந்தேன். 

நானும் சொந்தமா வச்சிருந்துக் குடுக்கலபா” நான் ஒரு ஆபீஸராண்ட வாங்கித்தான் குடுத்தேன். இவர் உனக்கு என்ன வேணும்” என்று சாமுவேல் கேட்டதும்.  எதிரில் இருந்த வாலிபன் “மாமனாரு” எனறான்.

பெண்ணும் சற்று சத்தமாக் “என் சின்ன மருமகன் தாம்பா”

வீட்டுக்கு வெளியே  டுவீலரின் சத்தம் வந்தது.  சாமுவேல் சாலையை எட்டிப்பார்த்தார். ஸ்டான்லி வண்டியை நிறுத்தி விட்டு வந்நான். சாமுவேல் எங்கேப் பேச்சை நிறுத்தினோம் என்று சற்று ஊகித்து நினைவு வந்தவராக “ஓ அப்படியா, சரி... சரி இருக்கட்டும் தம்பி எங்கப்பன், பாட்டன் எதோ தத்தித்தத்தியாக நெலம் வெச்சியிருந்து அதுமூலமா பெரிய ஆஸ்த்திக்காரனா ஆகலபா. நான் வாங்குற கொறஞ்ச சம்பளத்துல வயித்தக்கட்டி வாயக்கட்டிதான். உங்களமாதிரி என் வீடுதேடி வர சிலருக்கு குடுக்கிறேன்.   நான் குடுத்தது உங்களுக்கு, ஏதோ ஒரு வகையில் உதவியாய் இருந்தது இல்ல. அதற்கு கைமாறா இப்படிதான் இழுக்கடிக்கிறதா?. நானு ஒருத்தனாட்டம் இவன் ஏமாறுவானா அவன் ஏமாறுவானான்னு பாக்கிறவன் இல்லபா. அப்படி சம்பாதிச்சி இருந்தாக்கூட நாம பலபேர ஏமாத்துனோம், நம்ம ஒருத்தன் ஏமாத்திட்டான்னு உட்டுட்டு போயிடுவேன்.

இந்தாளுக்கு மனசாட்சியிருந்தா நான் பதினைந்து கிலோமீட்டர் சைக்கிள மிதிச்சிக்கினு வந்து கேட்டுட்டுபோறேனே. என்னைக்காவது ஒருநாளு, ஒரே ஒரு நாளு. சார் சந்தர்ப்பம் இப்படி இருக்கிறது கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க. நானே வந்து கணக்க முடிச்சிட்டுப் போறேன்னு சொல்லியிருப்பாரா கேளுபா. மனுஷனுக்கு நாணயம் வேணும்பா. அப்பத்தான் ஒருத்தன் இல்லனா ஒருத்தன் உதவிசெய்வான்.”சாமுவேல் பேசிக்கொண் டேயிருந்தார்.  வாலிபனின் மாமனார் தலை குணிந்துவாறு இருந்தார்.

ஸ்டான்லி வாசலுக்கு வந்தான். சாமுவேலின் தந்தை வலக்கையில் நீண்ட தடியை வைத்திருந்தார். அவர் வீட்டின் வெளியே ச்சேரில்  உட்கார்ந்து கொண்டு, உள்ளே பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தார். ஸ்டான்லியைப் பார்த்தும் “வாபா ஒக்காரு”என்று சொல்லிவிட்டு உள்ளே பேசும் பேச்சை கவனிப்பதில் முழ்கிப்போனார்.

சாமுவேல் “யாருபா தம்பியா வந்திருக்கான்
?  உள்ள வரச்சொல்லு”

ஸ்டான்லி உள்ளே சென்று சாமுவேலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். எதிர்த்திசையில் இருப்பவர்களுக்கு சாமுவேல் ஏன் இவ்வளவு பேசுகிறார் என்று மனம் கசந்தாலும், என்னவாவது நடக்கட்டும் ஒரு வழியாகக் கணக்கு முடிந்தால் நல்லது. என்பதற்காக தலைவிதியே என கேட்டுக்கொண்டிருந்தனர்.

இப்போது  ஏனோ?
சாமுவேலின் பேச்சு கடந்தக் காலத்தையும் தொட்டுக்கொண்டு வந்தது. “நான் பத்தாவது படிச்சிட்டு வீட்டுக்கு வரச்சொல்ல இந்தச் சேரியில முப்பது குடும்பம் இருந்தது. இன்னக்கி நூற்று இருபது குடும்பம் இருக்கிறது. இருபது வருஷத்தில ஒரு பயலாண்ட ஒரு பைசா கடன் வாங்கினது இல்ல. தப்பித்தவறி வெளியில எங்கனா வாங்கினாலும் சொன்ன நேரத்துலக் கொண்டுபோய் குடுத்துட்டு வருவேன்” பேச்சில் அவரின் தன்னம்பிக்கையும், பெருமையும் கலந்திருந்தது.

ஸ்டான்லிக்கு, உட்கார்ந்திருப்பவர்கள் யாரென்று தெரியவில்லை. கண்டிப்பாக கடனாளிகள் என்பதாக ஊகித்தான். பள்ளூரில் ஒருவர் பெருந்தொகையை வாங்கிவிட்டு இன்னும் தரவில்லை. நீயும் வாப்பா போய் கேட்டுவரலாம் என்று ஸ்டான்லியை இரண்டுமுறை சாமுவேல் அழைத்தார். அதனால் நிச்சயம் அவர்களாகத்தான்  இருக்கவேண்டும். சற்று நேரத்தில் அவர்கள்தான் என்பது தெரிந்துவிட்டது. இருந்தாலும் எவ்வளவுக் கடன் என்னக் கொடுத்தார், என்ன வாங்கியிருக்கிறார்கள். எந்த விவரமும் தெரியவில்லை. ஸ்டான்லி ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருதான்.

சாமுவேல் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரமாட்டாரோ? கணக்கு முடியுமோ? என்ற மன அலைக்கழிப்பிலிருந்த பெண் ஸ்டான்லி வந்து  உட்கார்ந்ததும் நம்பிக்கை வந்தவளாய் “ எப்பா நாங்க நெலம தவறிட்டோம் பயிரும் எங்களை அடிக்கடி மோசம் போக்கிடுச்சி. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கணக்க  முடிச்சி உடுங்கப்பா” ஸ்டான்லியிடம் கோரிக்கையை வைக்கும் விதமாக, சாமுவேலுக்கும் படும்படியாகச் சொன்னாள்.

சாமுவேல் துண்டு  சீட்டில் குறிப்பு எழுதிவிட்டு “
தம்பி  அசல் நாற்பதாயிரம் , வட்டி முப்பதாயிரம் மொத்தம் எழுபதாயிரம் ஆகுது. நீ இவ்வளவு தூரம் கேட்பதால ஐயாயிரம் தள்ளிடுறேன் அறுபத்தி ஐந்தாயிரம் குடுத்துட்டு உங்க பத்திரத்தை வாங்கிம்போங்க.”

ஸ்டான்லி வெளியூரில் இருப்பதால் சாமுவேலின் இந்த அவதாரத்தை இதுவரைப் பார்த்ததில்லை. தான் இருக்கும் நகரத்தில் பலரிடம் வட்டிக்கு வாங்கியிருந்தான். அப்போதெல்லாம் “சே, என்ன பொழப்பு கடன் வாங்குறவன் தன் மானத்தை அடிக்கடி புதைத்துவிடவேண்டி இருக்கிறதே. காலம் முழக்க ஏதாவது ஒரு பண முதலைகளிடம் கையேந்த வேண்டியதுதானா? ஏன் கடன் வாங்காமல் வாழமுடியாதா? இழப்பின் உத்தி எங்கேத் தொடங்குகிறது?  வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சிக்கனம், (கஞ்சத்தனமல்ல) சேமிப்பு,  பணம் கைக்கு வந்தபிறகு
தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளவேண்டிய ஒன்றை, பெருமைக்காக எப்படியாவது முட்டிமோதி முன்கூட்டியே வாங்கி தனக்கோ, வீட்டுக்கோ அலங்காரப் பொருளாக வைத்துக்கொள்ளும் ஆசை, இவைகளால்தான் கடனில் நுழைகின்ற சூழலை ஏற்படுத்துகின்றதா? இல்லை வழிவழியாகவே தன் குடும்பப் பொருளாதாரத்தில் குறைவு இருப்பதாலும், சமூகம் பெருமைகளில் தம்மை முழுமையாக இணைத்துக் கொள்வதாலும்தானா? உறவுகளும் அதைத் தள்ளிவைக்க முடியாமல் கையில் எடுத்து கொண்டு கொண்டாடுவதால்தான், நாம் கடனில் தள்ளப்படுகிறோமா? என தனக்குள்ளாகவே கேள்விகள் கேட்டுக்கொண்டு  உட்கார்ந்திருந்தான்.

சாமுவேல் பேச்சு, ஒரு தேர்ந்த வட்டிக்காரனின் வார்த்தைகள்போல் இருந்தது. “ என் தம்பி தான்.  வேலை செய்யிற ஆபீஸராண்ட,
இவன்தான் பணத்த வாங்கிக்கொடுத்தான்.” என்று எதிர்தரப்பிற்குச் சொல்லி, ஸ்டான்லியை அறிமுகப்படுத்தினார்.

அக்கணத்திலிருந்து சாமுவேலுக்கும்,  எதிர் வரிசைக்குமாக  ஸ்டான்லி சம நிலையைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது.

சாமுவேல் பெருந்தொகையில் ஐயாயிரம் மட்டும் தள்ளுவதாகச் சொன்னதும் வாலிபனின் முகம் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்தது. சற்று அமைதியாய் இருந்ததால் வாலிபனின் மாமனார் பேசினார். “ சார், அப்ப ஏகாம்பரம் எங்களுக்குத் தரவேண்டியக் காசு எப்படிங்க”

உடனே சாமுவேலிடம் முன்னின்று வாங்கிக்கொடுத்த ஏகாம்பரம் “யோ, மொதலியாரே நீ சொம்மா இருக்கமாட்டே. இடையில, இடையில கொழப்பிங்கிறியே. மொதல்ல உங்கக்கணக்க  முடிச்சிக்கிணு போய்யா. என் கணக்க நான் பாத்துக்கிறேன்.”

ஸ்டான்லிக்கு குழப்பமாக இருந்தது. பேச்சு ஒன்றும் பிடிபடவில்லை. சாமுவேலை நிறுத்தி “இந்தக் கணக்கின் வழிமுறை என்ன” என்றான்.

“பின்னால இருக்கிறாரே ஏகாம்பரம், அவர்தான் எனக்குப் பழக்கம். அவரு மூலமாதான் மொதலியார் தன்னுடைய நிலப் பத்திரத்தின் மீது நாற்பதாயிரம் வாங்கினாரு. பணம் வாங்கிம்போனப்ப  ஏகாம்பரம், மொதலியாராண்ட பத்தாயிரம் கடன்வாங்கிட்டு இருக்கிறார். அந்தப் பணத்துக்கு ஏகாம்பரம் வட்டியும் குடுக்கல. அதத்தான் மொதலியார் இப்பக்கேட்கிறார்.” என்று சாமுவேல் சொன்னார்.

முதலியார் மனைவி “ஏம்பா, அந்தாளு ஒரு ரெண்டாங்கெட்டாம்பா. யாரு என்ன சொல்றாங்களோ அப்பிடியே தலைய ஆட்டிக்குவாரு. அந்த பத்தாயிரத்துக்கும சேத்துதான் நாங்க வட்டிகட்டிக்கிணு வந்தோம். அதுக்கப்புறம் தான் எங்களாலயும் வட்டிக் கட்டமுடியல.”

ஸ்டான்லி ஏகாம்பரத்தைப் பார்த்தான். “மொதலியார் கேட்பது நியாந்தானேய்யா, உனக்கு பணம் வேணும்னா, உன்னுடையப் பொறுப்பிலேயே கடன் கொடுக்கிறவங்களாண்ட வாங்கியிருக்கணும். அதவிட்டு, அவர் ஏதோ அவசரத்துக்கு நெலத்த வச்சி பணம் வாங்குனா. எந்த அத்தாட்சியும் இல்லாம ரொம்ப ஈசியா அவராண்ட வாங்கியிருக்கிற.  சரி அப்படியே பழ்க்க தோஷத்துல  வாங்கியிருந்தாலும் மாசா மாசம் வட்டியாவது குடுத்திருக்கணும். இதுவரைக்கும். அப்படி எதையுமே செய்யாம, ரொம்பச் சரியா நடந்துக்கிறவராட்டம் பேசுற. சொந்தக் கோழியா இருந்தா, தோலுமுட்ட உடுவீங்களா. இப்பிடி இருந்தா எவன் நம்மள மதிப்பான்.”

ஸ்டான்லியை விட பல மடங்கு வயதில் மூத்தவராய் ஏகாம்பரம் இருந்தாலும் “அணா, என் நெலமையும் தவறிப்போச்சி. விபாரத்துல எறங்கி ரெண்டு லட்சரூபாய் தோத்துட்டேன்ணா.” சற்று அழுவதுபோல் சொன்னார். ஆனால், கனப்பொழுதில் முகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

சாமுவேல், இந்த நேரம் ஏகாம்பரத்தைக் கேட்பதில்  பைசாவுக்கும் பிரியோஜனம் இல்லை என்று நன்றாகத்தெரிந்து வைத்திருந்தார்போல. ஸ்டான்லியின் கவனத்தைத் திசைத் திருப்ப  வாலிபனிடம் “ சொல்லு தம்பி எப்படிச் செய்யப்போற” என்று நிறுத்தினார்.

வாலிபன் “அணா, வட்டியக்கொஞ்சம் கொறச்சி சொல்லுங்கணா. இப்ப இருக்கிற நெலமைக்கு அவ்வளவு கொடுக்கமுடியாதுண்ணா. கொஞ்சம் தயவு பண்ணுங்கணா.”

அவர்கள் பேச்சை கவனித்தாலும், ஸ்டான்லிக்கு பள்ளூர் முதலியார்கள் என்றால் நிலபுலன்களில், விவசாயத்தில் பேர்போனவர்களாச்சே என்ற சிந்தனையிலேயே முழ்கியிருந்தான்.

சாமுவேல் “தம்பி, என்ன சொல்ற நீ. நான் சொல்ற வட்டித்தொகையைப் பார்த்து பிரமிப்பதுபோல, அதற்கு இடையில் கடந்துபோயிருக்கும் ஆறு வருஷங்களையும், அதற்குள் அடங்கியிருக்கும் மாசங்களையும் கணக்கிட்டுப்பார். உனக்குக் குடுத்த தேதியில், அந்தத்தொகையோடு பத்தாயிரம் போட்டு ஒரு பிளாட் வாங்கிவிட்டிருந்தேன்னா. இன்னக்கித் தேதியில மூணு மடங்கு பணமாயிருக்கும். உனக்குக் குடுத்துட்டு நடையா நடந்ததுதான் மிச்சம்.”

எதிரில் இருந்த பெரியவர், “சார், நீங்க சொல்றதுலாம் வாஸ்த்தவம்தான். நான் தப்பே சொல்லல. என் குடும்பத்தில பையன் சரியில்ல. அவன் தறுதலையா இருக்கிறான். இருந்த நெலங்களில் கொஞ்சம் வித்துதான் ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணேன். மீதிப்பணத்தையும் பையன் புடிங்கிக்கினான். சரி பையன் ஏதாவது பொழைக்க வழி செய்வான்னுப் பாத்தா அதையும் அழிச்சிட்டான். இப்ப நாங்க வெறுங் கையா நிக்கிறோம்.  இருக்கிற நெலத்தில பயிர்செய்தாலும் முன்னமாதிரி வௌச்சல் பார்க்கமுடியல. லாபமும் கெடைக்கல. யாரு பெத்தப் புள்ளயோ, இவரு வந்துதான் என் தலைச் சொமையை கொஞ்சங் கொஞ்சமா எறக்கி வைக்கிறாரு.”

பின்னாலிருந்த ஏகாம்பரம் “அணா, உங்க தம்பியும் வந்திருக்காரு, இப்பவே கையோட ஏதோப் பாத்து முடிச்சிவுடுங்கணா.”

வெளியில் உட்கார்ந்திருந்த சாமுவேலின் தந்தை “சாமுவேலு பாத்து செய்தனுப்புபா, பாவம் பொழுதோட ஊட்டுக்கு போகட்டும்.”

சாமுவேல் சற்று ஏமாந்து என்னப்பா என்று கேட்டுவிட்டால்போதும் வட்டியும் வாணாம், ஒண்ணியும் வாணாம் அசலு வாங்கிணு  பத்திரத்தைக் குடுத்தனுப்புபானு’ சொல்லி விடுவார் என்பது தெரிந்துதான்,
சாமுவேலின் தந்தை சொன்னதைக் கவனிக்காதது போல் தொடர்ந்து பேசினார்.

கிறிஸ்தவன் வட்டிக்கு கொடுக்கக்கூடாது என்பது சாமுவேல் தந்தையின் பூரணமான நம்பிக்கை. எண்பது வயதை முடித்திருந்தாலும் இதுவரையில் வட்டிக்கு என்று யாருக்கும் கொடுத்ததில்லை. தொடர்ந்து பொருளாதார முடக்கம், எஜமானைப்போல  அவரின் விருப்பத்தை எப்போதும் முடக்கியே வைத்திருக்கும் என்பது வேறுவிஷயம். இங்கே ஒரு உண்மையைச் சொல்லவேண்டும், பொதுவாக தந்தைக்கு நேர்மாறான விஷயங்களில்  அதிகமான ஆண்பிள்ளைகள்  ஆர்வமாக இருக்கிறார்கள்.  சில ஆண்பிள்ளைகளைத் தவிர மற்றவர்கள் தகப்பனுக்கு நேர்மாறான விஷயங்களில் தன் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள்.  அப்படியானால் தகப்பன் ஆண் பிள்ளைகள் பேசத்தொடங்கிய காலத்திலிருந்து, குறைந்த பட்ஷம் பதிமூன்று வருஷமாவது  தங்கள் பிள்ளைகளை என்னவாக்க விரும்புகிறார்களோ.அந்த விருப்பங்கள் தங்களுக்கு அறவே இல்லை என்பதாக காட்டிக்கொண்டால் போதும். அதற்கு மேல் எந்த அறிவுரையும் தேவையே இல்லை. தானாக தந்தைகள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள். கிட்டத்தட்ட சாமுவேல் இந்நிலையைத்தான் இயல்பாகப் பெற்றிருந்தார்.

பாட்டனிலிருந்து ஆரம்பித்த மதம்தான் இன்றும் சாமுவேல் மிகவும் பயபக்தியுடன் பேணிவருகிறார். வட்டிக்கு கொடுக்கக்கூடாது என்பது அவருக்குத் தெரியாததல்ல. சிக்கனம் தான் அவர் கையாளும் பிரதானப் பண்பு. மற்றவருக்கு உதவும் குணம் இல்லாமல் போகவில்லை. இளமையில் வாட்டி எடுத்த பஞ்சம், அக்காலத்தில் பணம் வைத்திருந்தவர்கள். நிராகரித்த நிகழ்வு, குட்டியும், குசுமான்களுமாக இருந்த குடும்பம். பெரியவராய் பிறந்ததால் அவர்மீது விழுந்த பாரம். இவைகள்தான் அவர் இயல்பை மாற்றிவிட்டது. அரசாங்க உத்தியோகம் கிடைத்த பிறகு இப்படி சிறு சிறுத்தொகையாகச் சேர்த்து. தன்னை நாடி வருவோருக்கு கொடுத்தார். இன்று ஓரளவு எல்லாக் கஷ்டங்களும்  தீர்ந்திருக்கிறது.

சாமுவேல் வாரம் தவராது ஆலயத்திற்கு போகிறவர்தான்.  பிறகு எப்படி வட்டிக்கு விடுகிறார் என்று கேட்கமுடியாது. ஏனென்றால் ஒரு சமயம் பிரசங்கம் செய்த ஆயர், ஏசுவின் உவமைகளைச் செய்தியாகச் சொன்னார்.  அச்செய்தி இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சாமுவேல் அந்தச் செய்திக்குப் பிறகுதான்  எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வட்டிக்குக் கொடுத்தார். ‘எஜமான் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் காசுகளைப் பிரித்து கொடுத்துச் செல்கிறார். திரும்பிவந்து அவரவரைக் கேட்டபோது, ஒவ்வொருவருனும் தனக்குத்தந்த பணத்திற்கு அதிகமாகத் திருப்பித்தருகிறார்கள். ஒரு காசு வாங்கியவன் மட்டும் மண்ணில் புதைத்து வைக்கிறான். தன் எஜமான் அவனைக் கேட்கிறபோது, உங்கள் கடினமான இருதயத்தப் பற்றித்தெரியும் அதனால்தான் மண்ணில் புதைத்து வைத்தேன் என்று தனக்குத்தந்த ஒரு காசைத் திருப்பித்தருகிறான். எஜமானுக்கு கோபம்வந்து அற்ப சோம்பேறியே. இதைக் காசுக்காரரிடத்தில் கொடுத்திருந்தால்கூட இரண்டு மூன்று பணமாக வந்திருக்குமே’ என்று அழுத்திச்சொன்னார். அதைக் கிறிஸ்துவும் நியாயம் என்கிறவிதமாக  உவமாணமாக சொல்லி இருப்பதுதான் சாமுவேலுக்கு மகிழ்ச்சியான விஷயம். அந்நாளில் இருந்து தனக்கென்று ஒரு திட்டம் அதிகமான வட்டிக்குக்கொடுக்கக்கூடாது, அவர்கள் மனம்நோகும்படி வாங்கக்கூடாது. தன்னை நாடி வருகின்றவர்களுக்கு மட்டுமே உதவுவது என்று தொடர்கிறது வட்டிக்கடை.

ஸ்டான்லி ஒரு முறை சாமுவேலைக் கேட்டுருக்கிறான் “ வட்டிக்குக் கொடுக்கிறது வேணாம், வேற ஏதாவது கூட செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறான்.

“நீங்கள் எல்லாரும், நான் என்னமோ அநியாய  வட்டி வாங்கிறதா நினைக்கிறீர்கள். என்னாண்ட வாங்குற யாராவது அநியாய வட்டின்னு சொல்லட்டும் நான் விட்டுடுறேன்.  சரி, உன் பேச்சு பிரகாரம் பார்த்தாலும் எந்தக் கிறிஸ்தவன் அதிக வட்டி தரும் பேங்கை தேடிப்போகாம இருக்கிறான். அதிக வட்டிக் கிடைக்கிறதென்றால் விழுந்தடிச்சி தனியார் வங்கிக்கு ஓடுவதை நீ கேள்விப்படவில்லையா? இன்னுங்கூட ஒண்ணு கேக்கிறேன் எந்தத் துறையில் இருக்கிறவன் தனக்குக் கிடைக்கும் ஊதியம் போதும்னு நினைக்கிறான். அவரவர் பகுதிவாய்ப்பாக சம்பாதிக்வில்லையா?

நான் என்னை நம்பி வருகிறவர்களுக்கு கொடுக்கிறேன். கிராமத்தில் சிலர் தர்ம சங்கடமான நேரங்களில் என்னை அனுகுகிறார்கள். வைத்துக்கொண்டு கொடுக்காமல் இருக்க என்னால் முடியாது. இதை உதவியாகத்தான் செய்கிறேன். சிலர் இதில் என்னை ஏமாற்றியும் இருக்கிறார்கள். அதற்காக ஆட்களை கூட்டிக்  கொண்டு போவதோ, மிரட்டுவதோ செய்வதில்லை. சில நேரம் கொஞ்சம் கடிந்து கொள்வேன். அதிலும் கொடுக்காதவர்களை  விட்டுவிடுவேன். கடவுள் பார்த்துக்கொள்வார் என்பது என் முடிவு” என்று சாமுவேல் சொல்லும் நியமான வாதங்களை மனதில் நிழலாடவிட்டபடி ஸ்டான்லி உட்கார்ந்திருந்தான்.

திடிரென்று எதிர் முனையில் இருந்த பெண்மணி “யாம்பா, நாங்களும் உங்களப்போலதாம்பா. விழுந்தாலும் எழுந்தாலும் நாங்கதான் பாத்துக்கணும். எதோ மகராசனாட்டம் இந்தப்புள்ள வந்துதான் என் குடிய, மானம் போகாமக் காப்பாத்துது. இன்னுங்கொஞ்சம் வட்டியக் கொறைச்சிங்கன்னா. உங்க புள்ள குட்டிங்களுக்குப் புன்னியமாப்போகும்.” இப்போது கையெடுத்து கும்பிடுவதைப்போல் இருகைகளும் குவிந்த வந்தது. இரு முழங்கைகளும் சுருங்கி, நரம்புகள் தெரியும்படியாக இருந்தது. வளையல் எடுக்கும்போது சரியான அளவு இல்லாமலா இருந்திருக்கும். அவள் கண்ணகளில் கண்ணீர் சுரந்து  கொட்டியது.

சாமுவேலின் தந்தைக்கு அந்தம்மாவைப் பார்த்ததும் முகம் சுருண்டுவிட்டது.  சாமுவேல் வாயிலிருந்து என்ன வருமோ என்று பார்த்துக்கொண்டிருந்தார். சாமுவேல் “ ஏம்பா பத்தாயிரம் கொறைச்சிக்கோ. அறுபது ஆயிரம் குடுத்துட்டு உன் பத்தரத்தைக் வாங்கிக்கிணுபோயிடு. அதுக்குமேல ஒரு பைசாக் கொறைக்கமாட்டேன். நானும் வாங்கின எடத்தில குடுக்கவேணாமா?” என்று சற்று சத்தமாக குரல் உயர்த்திப் பேசினார்.

வாலிபன் ஏகாம்பரத்தைப்பார்த்து “நீங்க எவ்ளோணாத் தறீங்க என்னாண்ட இருகிற பணத்தையும் போட்டு குடுத்துடுவோம். மீதிய  வரும் ஞாயிறு கொண்டாந்து குடுத்துடுவோம்.”

வயிறு பெருத்த ஏகாம்பரம் “நான் எதுவும்காசு வெச்சில்லபா. நீங்க வெச்சிங்கீறத வச்சி முடிச்சிக்கிங்கோபா. என் கணக்கை  நான் வந்து பார்த்துக்கிறேன்.”

ஸ்டான்லி சற்றுக் கோபமாக “யோ, ஏகாம்பரம்  நீ தனியா வாங்கினியே அந்தப்பணத்தக் குடுக்கச்சொல்லல. மொதலியாராண்ட இடையில கைமாத்தா வாங்கினியே பத்தாயிரம், அதத்தான் கேக்குறாங்க புரியுதா?”

“அண்ணா, எனக்கு பணம் வர இன்னும் இரண்டு மாசம் ஆகும்ணா. வந்ததும் செட்டில் பண்ணிடுரேன்ணா. மொதல் இவுங்க கணக்க  முடிச்சி அனுப்புங்கணா. ஒரு நிமிஷம் இருங்கணா. ” என்று வாலிபனை வெளியில் அழைத்துச் சென்றான்.

சற்று நேரங்கழித்து மீண்டும் உள்ளே வந்தார்கள். இப்போது ஏகாம்பரம் ஒரு தீர்க்கமான முடிவைப் பேசிவந்தவர்கள்போல் “ தம்பி நீ பேச, அவர் பேச இழுத்துக்கினேப்போகும். உன்னால எவ்வளவுக் குடுக்கமுடியும்னு சொல்லு. அண்ணங்க ரெண்டுபேரும் இருக்கச்சொல்லவே முடிச்சிகினு போயிடலாம். முடிவா என்னதான் குடுக்கமுடியும்னு சொல்லு” என்று வாலிபனைத் தூண்டினான்.

வாலிபன் “அணா, அசல் நாற்பதாயிரம், வட்டி பத்தாயிரம்  மொத்தம் ஐம்பதாயிரம் குடுத்திடுரேன்ணா. எங்க நெலமையக் கொஞ்சம் பாருங்கணா. போனவாரந்தான் ஒரு கடனை அடச்சிட்டு வந்தேன். இந்தக் கடனை அடச்சிட்டு, இன்னொரு தலைபோரக்கடனை அடைக்கனும். நான் சம்பாதிக்கிறது எங்க வீட்டுக்குக்கூட குடுக்கலணா. இங்கதான்ணா போடுறேன்” கஷ்டப்பட்டு உழைக்கிறப் பணம் நமக்கு எந்தப்பயன் பாடும் இல்லாமல் இப்படி போகிறதே  என்ற வருத்தம் அவன் இதயத்தை பிழிகிறதுபோல கண்கள் கலங்கி கண்ணீர்க் கொட்டியது. வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. கரகரத்துப்போசினான்.

சாமுவேலின் தந்தை எழுந்துக்கொண்டார். “சாமுவேலு, முடிச்சிவுடுபா. அந்தப்புள்ளையப் பாருபா. உடுபா போகட்டும்.”

ஸ்டான்லிக்கும் வாலிபப்பையன் இவ்வளவு கெஞ்சுகிறானே என்று மனம் பதைத்தது. சாமுவேலை மீறி முந்திக்கொண்டு சொல்லத் தயங்கினான். இருந்தாலும் ஒரு சாக்காகத் தான் எவ்வளவு பணம்  வெச்சிங்கிறே. எடுத்து வையிபா” என்று சற்றுக்  குரல்கொடுத்து கேட்டான்.

சாமுவேல் “ஏம்பா இவ்வளவு கொறைச்சா எப்படி. நானும் வாங்கின எடத்துல திருப்பித்தர வேண்டாமா?  சாமுவேலின் பார்வை இப்போது முதலியாரின் பக்கம் போனது“ மோலியாரே, ஆறு வருஷமா இழுக்கடிச்சது இதுக்குத்தானா? இவ்ளோ காலம் இழுக்டிச்சியே   நானும் ஆவேசப்பட்டு நாலுபேரக் கூட்டிக்கினு வந்திருந்தா பொம்பளப்புள்ளைங்க இருக்கிற எட்ததுல நல்லா இருந்திருக்குமா? இந்தத் தம்பி வரலனா இன்னும் எத்தனை வருஷமோ. மனுஷனுக்கு வாங்குனத திருப்பிக்குடுக்கனும்னு மனசுவேணும் மோலியாரே. சரி... சரி குடுத்துட்டுப்போங்க. மீதிப்பணத்தை எடுத்தாந்து குடுத்துட்டு பத்திரத்தை வாங்கிம்போங்க.”

வாலிபன் உள் பாக்கட்டிலிருந்து ஆயிரம், ஐநூறு கலந்தநோட்டுகளை எடுத்தான். பணம் மடித்து பச்சைநிற ரப்பர் பேண்ட் போட்டிருந்தது. சாமுவேல் வாங்கி ஸ்டான்லியிடம் கொடுத்தார். ஸ்டான்லி எண்ணிப் பார்த்து இருபத்தைந்தாயிரம் இருக்கிறதென்று சொல்லி மீண்டும் ரப்பர் பேண்ட்போட்டு சாமுவேலின் டீப்பாய் மீது வைத்தான்.  எதிரில் இருந்தவர்களுக்கு இப்போதுதான்.சற்று நிம்மதி வந்தது.

வாலிபன் “ரொம்ப நன்றின்ணா”. வரும் ஞாயிறு வந்து மீதியக் குடுத்திடுறோம்.”  என்று கிளம்பினார்கள்.

சாமுவேலின் முலாம் பூசப்பட்ட கண்ணாடி மின்னியது. இடக் கையின் முழங்கையை டீப்பாய்யின் மீது ஊன்றிக்கொண்டு குறிப்பு எழுதினார்.


ஜே.டேனியல்       

Wednesday, September 5, 2012

கவிதை

மனத் திட்பம்

சுற்றிக்கொண்டிருப்பது
பிரதானம்
மட்டுமல்ல

என்
இதழ்களை
உரசிச்சென்ற காதல்
உன்னை வந்தடைவதும்

எப்போதும்
உனக்காகச்
சமைத்துக்கொண்டிருப்பவள்
என் தலையனையின்
ஈரத்தைத் துடைத்தெடுப்பதும்

ஓயாமல்
வாத்துகள்
சேற்றைத் துழவுவதுபோல்
நடந்தேறுகிறது.

சுற்றிக்கொண்டிருப்பது
பிரதானம்
மட்டுமல்ல


இரவுகளைப் புணர்ந்து
பனிப்புல்லின்
முனைகளில் பூத்திருக்கும்
நீர் மொட்டுக்கள்
எதிரியின் எய்தலுக்கு
கூரிய அம்புகள்போல்
எழும்
கதிர்பட்டு
ஒரு மனித இருப்பிடம்
இல்லாமல் போவதும்

மணல் குவியலை
மறைத்துவிட
மணித்துளிபொழுதும்
பிறப்பெடுக்கும்
மென் குரல் கதரிகளும்தான்.


சுற்றிக்கொண்டிருப்பது
பிரதானம்
மட்டுமல்ல

பயணப்பட

வழியற்ற முதியரைப்போல்
துக்கம்
ஓரிடத்தில்
தங்கிவாழும்

கைமாறும்
நடைபழகா
குழந்தையைப்போல்
மகிழ்ச்சி
இடம் மாறி மாறிப்போகும்
ஆனாலும், இவை எல்லாமும்
சுற்றிக்கொண்டிருப்பதுதான்
மனத்திட்பத்திற்கேற்ப.

ஜேடி

Tuesday, August 28, 2012

கவிதை


முடிவுராத இருவருக்குமான முரண்

ஒரே
ஒரு முறை
வருகிற நாள்
எனக்கும்
உனக்குமான
நாளாக இருக்கும்.

முரண்பாடுகள் முற்றி
தலை வீங்கி
வார்த்தைகள் வழிந்து
இதயத்தை நிரப்புகிறபொழுது

நம்
இருவருக்குமான
பாதை
இரு வேறு
திசைகளைக் காட்டி
கொக்கரிக்கும்,

கடந்த காலம் முழுக்க
நடந்துகொண்டதை
நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே

ஒரு
மழைத் துளியின் வேகமாக
எதிர்காலம்
முடிந்திருக்கும்.

நானோ
நீயோ
எங்கு இருந்தோம் என்பது
நம்
 இருவருக்குமேத் 
தெரியப்போவதில்லை.

ஜே.டேனியல்

Friday, August 24, 2012

புரிந்துணர்ந்தது

               எரியும் பனிக்காடு

பி.எச் டேனியல் எழுதிய  இந்நாவலை  தமிழில் மொழிபெயர்த்த  இரா. முருகவேள் தனது அறிமுக உரையில் “ஆனை மலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள். ....நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக்குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்...” என்று  ஆதவன் தீட்சன்யாவின் வாசகத்தைப் போட்டிருகிறார். இதில் ஆங்கிலேயரை மட்டும் சொல்வதில் நியாயமில்லை. தென் மாவட்டங்களின் வறட்சியின் காரணமாக ஏதோ ஒரு மூலையில் ஒருவேளை அரிசி சோற்றுக்குக் கூட வழியில்லாமல் திண்டாடும் மக்களை நயவஞ்சகமாய் ஏமாற்றி ஆசை வார்த்தைகளைக் கூறி ஆடு, மாடுகளைப் போல ஏற்றிச்சென்று திறந்த வெளி அடிமைச்சிறைகளில்  (தேயிலைத் தோட்டங்களில்) அமர்த்தியது யார்? என்றக் கேள்வியோடு இந்த நாவல் எனக்கு ஏற்படுத்தியதை இங்கு பதிர்ந்துகொள்கிறேன்.

நாவல் 1925 டிசம்பர் இரவு திருநேல்வேலி மாவட்டத்தின் மயிலோடை என்ற கிராமத்தில் தொடங்குகிறது. அச்சிறு கிராமம் கொடிய பஞ்சத்தால் சுருண்டு வதங்குகின்றன. அக்கிராம  மக்கள், தங்கள்  குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது  என்று தெரியாமல் பல்வேறு  யோசனைகளைப் பயன்படுத்தி, பிழைப்புக்கான வழிகளைத்தேடி அலைகிறார்கள். இப்படியே இருந்தால் எல்லோரும் பசியால் சாகவேண்டியதுதான் என்று கருப்பன் எண்ணுகிறான். கயத்தாறு போனால் ஏதாவது வேலை கிடைக்கும் என நம்பினான். கயத்தாறில் சுற்றியுள்ள கிராம மக்கள் எல்லாம் தங்களுக்கான காய்கறிகள், பொருள்கள் வாங்கக் கூடுகிற இடம். கருப்பன் கடை கடையாக ஏதாவது வேலையிருக்கிறதா என்று கேட்கிறான்.  எல்லோரும் அலட்ச்சியப்படுத்தி விரட்டுகிறார்கள். தன்னை மேம்பட்ட சாதியாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒரு நபர் உணவுவிடுதி வைத்திருக்கிறார். அங்கு வசதிபெற்றவர்களை தன் ஓட்டலில் பென்ச்சிலும், தலித்துகள் வந்தால் தனிக் கொட்டகையிலும் உணவு பரிமாரப்படும்.  அந்த முதலாளி கருப்பனிடம் கட்டை பிளக்கவேண்டும் ஆனால் இப்போது இல்லை இன்னொரு நாளைக்கு வா என்கிறான். கருப்பன் இன்றே கொடுத்தால் குடும்பத்தை பசியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கெஞ்சுகிறான். முதலாளி இப்போது கட்டாயமாக மறுத்துவிடுகிறான்.

நீண்ட நேரம் கருப்பனைக்   கவனித்துக் கொண்டிருக்கிற வெள்ளைக்காரனின் வாந்திகளை வந்தனம் செய்து சாப்பிட்டுத் தன் தொந்திகளை வளர்க்கும், நமக்குச்சொந்தமான உள்ளூர் வெள்ளையன். ஏசுவின் போதனைப்போல் தேயிலைத்தோட்டங்களின் சாகசங்களைப் பசுமை நிரைந்த எதிர்காலங்களை கருப்பன் மூளைக்குள் தினிக்கிறான். ஏற்கனவே வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொண்டவர்கள் எப்பேர்ப்பட்ட பஞ்சகாலங்களிலும்  தங்கள் செல்வங்கள் குறைந்து போகாமல் இறுக்க  உழைப்பாளிகளின் வயிற்றை பச்சைத்தண்ணீரால் கூட நிரப்ப மனம்மற்று, கூலிகளைக்கொண்டு தங்கள் வசதிவாய்ப்புகளைத்  தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

கருப்பனின் நிலையைப் புரிந்துகொண்ட சங்கரபாண்டியன் மேஸ்திரி,  தேயிலைத் தோட்ட வேலைக்கு முன்பணமாக நாற்பது ரூபாய் கடனாக வாங்கித்தருகிறான். அதன் மூலம் தேயிலைத் தோட்டத்துக்கு அடிமைகளாகிறான். சொர்க்கலோகத்துக்கு அழைத்துச் செல்வதுபோல ஆயிரமாயிரம் அப்பாவி மக்களை மலையின் உச்சியில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். தாங்கள் திரும்பிச் செல்கிறபோது செல்வச் சீமான்களாய் வீடுதிரும்புவோம் என்ற கனவுகள்  வந்த கொஞ்ச நாட்களிலேயே பொய்யாய்ப்போகிறது. ஒரு செடியின் வளரும் கொழுந்தையே வளரவிடாமல் கிள்ளிப்போடுகிறவர்கள் தங்கள் வாழ்வை எப்படி வளரச்செய்வார்கள் என்று எந்தத் தொழிலாளியும் யோசிக்கவே இல்லை,

கயத்தாறில் தனக்காகப் பேசி நாற்பது ருபாய் கடன் வாங்கிக்கொடுத்ததால் தன் குலதய்வம், புத்தன், காந்தி என்றெல்லாம்  காட்சிதந்த சங்கரபாண்டியன் மேஸ்திரி, மலையுச்சியில் வந்தவுடன் நானே இம்மலையின் ராட்ச்சசத் தலைவன் என்கிற விதமாகமாறிவிட்டானே என்று நினைக்கிறபோது கருப்பனுக்கு அதிற்சியாக இருந்தது. கூட்டம் கூடடமாக அழைத்து வரப்படுகின்ற  மக்கள் ஒரே டெண்டுக்குள் இரண்டு குடும்பம் மூன்று குடும்பங்கள் என்று  தங்கவைக்கிறார்கள். அந்த குடிலுக்குள்ளேதான் குடும்பம் நடத்த வேண்டும். கூலிகளுக்குத் தனிப்பட்ட எந்த விருப்பும் இருக்கக்கூடாது. ஆட்களின் பெயர் பதிவு செய்துவிட்டபிறகு  தேயிலை எஸ்டேட்டுக்கு முழு அடிமைகளாகிவிடுகிறார்கள். அவர்களின் தகவல் தொடர்பான போஸ்ட் கார்டுகளைக்கூட கண்காணிக்கப்படுகிறது. கூலிகளின் உறவுகள் போடுகின்ற தபால்களை மேஸ்திரிகள் பிரித்து வாசிப்பார்கள். அதில் எழுதிப்பட்டிருக்கிற வாசகங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு ஏன் கடிதத்தையே மறைத்துவிட்டு கூலிகளிடம் உங்கம்மா நல்லா இருக்கிறாங்களாம், எங்களுக்கு போதுமான காசு கையில் இருக்கிறது .நீங்க பணம் ஏதும் அனுப்பவேணாம்னு சொல்லி இருக்கிறாங்க அந்த லெட்டரைப் படிச்சிட்டு எங்கோ வச்சேன் கானல என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே வெள்ளையரின் கையாட்களாய்  இருக்ககின்ற வியாபாரிகள்  உயர்சாதி வகுப்பினர் துரைமார்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு  கூலிகளிடம் தன் தன் மனம் போனப் போக்கில் கணக்கு சொல்லுவது என்ற நிலை இருக்கிறது காளிச்செட்டியார் மளிகை கடையில் வைக்கிற விலைதான். ஓரு முறை கடன் வாங்கிவிட்டால்  வாழ்நாள் முழுவதும் அக்கடனில் இருந்து மீளவே முடியாது.  கருப்பனின் கனவு நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்துகொண்டே வருகிறது.

மேஸ்திரிகள் வெள்ளை துரைகளின் நம்பிக்கைக்குரிய  மனிதர்களாய் இருப்பதற்கு,  தங்களுடைய சொந்த மக்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக வேலை வாங்குகிறார்கள். வருடந்தோறும்  வெயில் நாட்களில் கொடிய காச்சலில் விழுந்து குழந்தைகள் பெரியவர்கள் மரிப்பதும், மழைக்காலங்களில் நிமோனியா போன்ற நோய்களில் குவியல் குவியலாக குழந்தைகள், ஆண்கள், பெண்கள் மரித்துப்போகிறார்கள் என்பதை வாசிக்கிறபோது எவ்வளவு துயரங்கள் நடந்தேறியிருக்கிறது என்று வேதனைப்படத்தான் முடிகிறது, பெண்களுக்கு கூடுதலாக மார்பு நோய்கள் தொடங்கிவிடுகிறது.  மழைகாலங்களில் மனிதனின் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் படை படையாய்க் கிளம்பிவிடும். கூலிகளின் குடிசைகளிலும் புகுந்து குடிசை வாசி மனிதர்களை வேட்டையாடுகிறது.  அட்டை  மனிதர்களின்  கால்களிலும் கைகளிலும் ஏறி ஒட்டிக்கொள்கிறபோது அதைப்பிடித்து இழுத்தால் ரத்தம் பீரிட்டு அடிக்கும்,  ஒண்ணு ஒண்ணாகப் பிடுங்கி போடும்போது ரத்தம் மாலை மாலையாக வழியும் இப்படி வழிந்து அவதிப்பட்டாளும் மேஸ்திரிகள் ஒருவனையும் குடிசைக்குள் தங்கவைப்பதில்லை, வேலைக்கு போ போ என்று துரத்துவான் பெண்கள் கை கால் வீங்கக்கிடந்தாலும்  கூட இரக்கமற்ற (அக்காலகட்டத்தில் ஒண்ணு ரெண்டு கணக்குக்கூட தெரியாதவர்களை இங்கிலாந்து நாட்டு பெற்றோர்கள் இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய துரத்திவிட்டார்களாம் வீட்டுக்கும் அடங்காமல், விவரமும் இல்லாத நபர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்)  வெள்ளையர்களாக மாறி நாமெல்லாம் ஒரே இனம் என்கிறவன், தன் இன  மக்களையே வதைத்து எடுக்கிறார்கள் மேஸ்திரிகள்.

இருபது பேர் அல்லது ஐம்பது கொண்ட கூலிகளுக்கு ஒரு மேஸ்திரி. ஒவ்வொரு கூலியும் அதிகமானக் கொழுந்து கிள்ளி சம்பாதித்தால் அதில் இருபது இருபத்திஐந்து விழுக்காடு மேஸ்திரிக்கு கமிஷன் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு கூலிகளின் வருமானத்திற்கு தகுந்தார்போல் மேஸ்திரிகளுக்கு வருமானம் கிடைப்பதால்  கூலிகளை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார்கள்.

தோட்டங்களில் பெண்கள் வேலை செய்யும்போது வெள்ளைதுரைகள் வந்துவிட்டால் எந்த பெண் தேவையோ அவர்களைத் தூக்கி குதிரையில் வைத்துக்கொண்டுபோய்விடுவார். பெண்ணின் கணவன் இருந்தாலும் ஒன்றும் கேட்கமுடியாது கேட்டால் அவர்களைக் கடுமையான வேலை வாங்குதல் அவர்களுக்குத் தரவேண்டிய ரேஷன்களைக்குறைத்தல் குடிசையை மாற்றி ஒன்றுக்கும் உதவாத இடங்களில் தங்கவைத்தல் என்று கொடுமைக் கூடிக் கொண்டே போகும்.

அதேசமயம் வெள்ளை துரைகளையும் மேஸ்திரிகள், எழுத்தர்களின் இச்சையைப் புரிந்துகொண்டு சாமாளிக்கத்தெரிந்த பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத உபசாரங்கள் செல்வங்கள் வந்து குவிந்துவிடுகிறது. மேலும் தோட்டங்களில் கஷ்டமான வேலைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். கருப்பன் வள்ளி போன்ற நேர்மையான உழைப்பைச்செலுத்துகிற  குடும்பங்கள் எந்த விசாரனையும் இன்றி தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்கு எருவாகி இருக்கிறது. இந்த பரந்த பனிக்காட்டின் ரத்தம் தோய்ந்த மணணுக்கு முதன் முதலாக ஆபிரஹாம் என்கிற டாக்டர் வருகிறார். அவர்தான் தேயிலைத் தோட்டத்தின் அக்கரமங்களைக் கண்டு கொதிக்கிறார், மனிதர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று பொருமுகிறார்.

கணக்கு முடிக்கும் போதெல்லாம் மேஸ்திரிகளும், கடன் தரும் காளிச்செட்டியாரும் கணக்கில்லாமல் குத்து மதிப்பாக ஏற்றிச் சொல்லும் கணக்குகளால் இரண்டு வருஷமாக தன் கிராமம் போகமுடியாமல் தவிக்கும் கருப்பன், வள்ளி இந்த வருஷமாவது எப்படியாகிலும் போய்விட வேண்டும் என்று நினைக்கும்போது,  வள்ளி மிகக்கொடூரமாக நோய்வாய் படுகிறாள். புதிதாக வந்த டாக்டர் எத்தனையோ  மருத்துவம் தந்தும் காப்பாற்ற முடியவில்லை வள்ளி இறந்துபோகிறாள். கருப்பன் எல்லாக் கனவுகளும் தகர்ந்த நிலையில் தனிமையாகிறான். இரண்டு நாள் கழித்து மேஸ்திரி, உன் மனைவிக்கு காரியங்கள் செய்த கடன் அதிகமாக இருக்கிறது வேலைக்கு போடே என்று சொல்வதுடன் நாவல் முடிகிறது.

 சமூகத்தில் ஒருவனிடமிருந்து  பொருளைக் கொள்ளையடித்து விடுகிறார்கள் அல்லது ஒருவனை  உலகத்தில் இல்லாமல் கொலை செய்துவிடுகிறார்கள். ஒருவன் பொருளை முற்றிலுமாக இழந்துவிட்டால் மீண்டும் சுதாரித்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளலாம், அதேபோல கொலையுண்டால் ஒருவேளை ஐந்து நிமிடமோ அரைமணி நேரமோ அவன் வாழ்வு அதோடு முடிந்தவிடும், ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களை நயவஞ்சகமாய் ஏமாற்றி நிர்கதியான இடத்தில் கொண்டுபோகிறார்கள். காலம் முழுக்க அவர்களின் பெலத்தை எல்லாம் சுரண்டிக்கொள்ளுதல், அவர்கள் வாழ்வையே  அவர்களுக்கு  இல்லாமல் செய்தல்  என்பது ஒரு ஆட்சியாளனின் போர்க்குற்றத்தைவிட,  இரக்கமற்ற தீவிரவாதத்தை விடக்கொடுமையானது.

தற்காலத்தில் எழுதப்படுகிற நாவல்கள் தங்களுடைய தொழில் முறையுக்திகள் தங்களுடைய முழுமையான கற்பனைச் சாகசங்களை முதன்மையானதாக வைத்துக்கொண்டு இடையிடையிடையில் அங்கங்கு சில சில மனிதர்களின் மேம்போக்கான வாழ்வியலை தென்படவைக்கும் முறைகளிலிருந்து ‘எரியும் பனிக்காடு’ முற்றிலும் சமூகத்தின் ரத்தமும் சதையுமான அப்பட்டமான வாழ்வியலை முன்வைக்கிறது. இதன்மூலம் பணமுதலாளிகளின்  மனசாட்சியை சற்றேனும் உளுக்கிவிடுவது.  தூரத்து பசுமையை நம்பி அப்பாவித்தனமாய் வந்து விழுகிறவர்களின் எண்ணத்தை யோசிக்கவைப்பது, அல்லது இவர்களே ஒரு போராட்டத்தின் மூலமாக தங்கள் நியாமான கூலிகளுடன் வாழ்வைப்பெறுவது என்பது  நடந்தேறுகிற வாய்ப்பு இருக்கிறது.  அக்கால எழுத்துக்கள் மிகவும் போர்குணம்மிக்கதாக இருந்தது. அதனால், சில இடங்களில்  சமூகத்தை மாற்றம்கானச் செய்கிற நிகழ்வை நடத்திக்காட்டியது.  அக்கால மனிதர்கள் அடக்கு முறையாள னென்றால்  எந்த பச்சாதாபங்களுக்கும் செவிசாக்காமல் முற்றிலும் தங்கள் செய்லபாடே சிறந்ததென்று தனித்தன்மையுடன் நின்றார்கள். அதேபோல நீதிமான்கள் என்றாள் எந்த அநியாயத்திற்கும அடிபணியாது தூக்கு மேடைவரை ஒரே முடிவுடன் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலர் எழுதும்போது மிக வீரியமான எழுத்து, மனதை ஆயுதத்தால் கீறுகிறக் காரியத்தைச் செய்தது.  ஆனால், தற்போதைய சமூகம் அப்படியில்லை. ஆட்சியாளனும், பணமுதலைகளும், எல்லா மனிதர்களும் ஏன கடைநிலையில் உள்ள மனிதன்வரை தங்கள் இயல்பை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தகுந்தார்போல செயல்பட தெரிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் இயல்புத்தன்மையை நிறுவுகிற தனிமனிதன் மிகக்குறைவு. அப்படியே இருந்தாலும் அவர்களை இச்சமூகம் வெளிப்படையான பயித்தியங்கள் என்று முத்திரைக் குத்திவிடுகின்றன. ஆகவேதான்,  இப்படியானச் சூழலில், யாருடைய எழுத்துக்களானாலும் வெறுமனே ரசிக்கவும், நேரத்தை கடத்த வாசிக்கவுமான  தளங்களாக மாறிவிட்டன. இந்தப்போக்கில் எழுத்து அல்லது படைப்பு சமூகத்தில்  எந்த மாற்றத்தை  ஏற்படுத்திவிடும்.

பி.எச். டேனியல் அக்கால கட்டங்களில் தேயிலைத்தோட்டங்களின் மக்கள் பட்ட கஷ்டங்களை மிகவும் கரிசனை உள்ளத்தோடு  பதிவுசெய்திருக்கிறார். தலித்துகள், பள்ளர்கள், வசதியற்ற சில உயர்சாதி மக்கள், கேரளத்திலிருந்தும் தரகர்களால் ஆட்களைப் பிடித்து வந்துள்ளனர் என்கிற வரலாற்றின் பதிவை தெரிந்துகொள்ள முடிகிறது. ஆயிரமாயிரம் பின்தங்கிய மக்களால்தான் தேயிலைத் தோட்டத்தின் வளர்ச்சி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பணத்தாசைப் பிடித்த வெள்ளையனும், வெள்ளையனை விடக்கொடுரமாய் தங்களுடைய மக்களைத் தமிழனே வதைத்துள்ளான்  என்பதை அறிகிறபோது, உலகத்தின் எந்த மூலையின் மனிதனாக இருந்தாலும் இதயத்தில் இரக்கம், ஈதல், போதும் என்கிற மனநிலையற்ற எவனையும் மனிதனாக சொல்லத்துனிய மனம் கூசவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறேன்.

சமீபமாக நான் வாசித்த  எந்த  நாவலும்  இந்தளவு மனதைச் சிதைக்கவில்லை.

ஜே. டேனியல்


Friday, August 17, 2012


                                                                             வாழ்த்துக்கள்

 அம்ஷன் குமாருக்கு லெனின் விருது வழங்கும் தமிழ் ஸ்டுடியோவின்  நிறைவு விழாவிற்கு சென்றிருந்தேன். சில கூட்டம் பல பேரை ஏதோ ஒன்றைக் கொடுத்து (கேடயம் அல்ல, மனதிற்கு ஆத்ம நிரைவு) திருப்த்தி அடையச்செய்வதின் மூலமாக வெற்றியடைகிறது.  சில கூட்டம் பல பேரின் மனதை நோகடித்து வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்வதின் மூலமாக ஆவலாக கலந்துகொள்ள வந்தவர்கள் மீண்டும் அந்த பக்கம் வராமல் இருக்கச்செய்துவிடுகிறது.  ஏன் இப்படி நடக்கிறது என்று நான் யோசித்து யோசித்துப் பார்த்தபோது எனக்கான புரிதலாக இது இருக்கிறது. 1.கூட்டப்படுகின்ற கூட்டம்  மக்கள் நலனில் பெறும்பாலும் அக்கறை உள்ளதாக  இருத்தல். 2. கூட்டத்தைக் கூட்டுகிறவர் எப்போதும் ஒரு சமநோக்கு உள்ளவராக இருத்தல்  3. தனக்கான லாபத்தை மறைமுகமாக தூக்கலாக வைத்து செயல்படுவதை தவிர்த்தல்  4.ஏற்பாடுகளை  முழுமையான ஈடுபாட்டுடன் தன் யோசனையோ, அல்லது கூட்டுயோசனையோ எதுவாயினும் முழுதுமாக செலவழித்து நம்பிக்கையுடன் அனைத்து வழிகளிலும் செயல்படுத்த முயற்சிப்பது,  மேலும், காரணமில்லாமல் தன்னை அவமதித்தாலும் ஒருமுறையேனும் அவரை அனுகிப்பார்ப்பது. முக்கியமாக, சரியான நேரத்தைக் கடைபிடிப்பது.(சிலக்கூட்டங்கள் இரண்டரை மணிநேரம் தாமதமாகக் கூட தொடங்குகிறது. இப்படி ஆரம்பிக்கிற கூட்டம் வெறும் வெற்றுக்கடமைக்காக நடத்தப்படுகிறது என்றே நான் முழு மனதுடன் சொல்லுவேன். இப்படியான கூட்டங்கள் நடக்கிற இடங்களிலிருந்து ஒரு குரங்கைப்போல் தாவிவிட முயற்சிக்கிறேன்.) இந்த செயல்பாடுகள் சரியாக இருந்தால் நிச்சயம் கூட்டப்படுகின்ற கூட்டம் வெற்றி அடையும். அந்த, அளவில் தமிழ் ஸ்டுடியோவின் அருண் மற்றும் அவர் நண்பர்கள் சிறந்த இடத்தைப்பெறுகிறார்கள். ஐந்து மணிக்கென்றால் கூட்டம்  5.10க்கெல்லாம் சரியாகத் துவங்கிவிட்டது. அப்போதே எனக்குள் ஒரு திருப்த்தியை ஏற்படுத்திவிடுகிறார்கள். பரவாயில்லை சரியான நேரத்தில் துவங்கிவிட்டார்கள் என்று கூட்டத்தைக் கூர்ந்து கவனிக்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறேன். ஒரு வேளை தாமதமானால் என்னடா இது வீட்டில் இருந்தாலாவது ஏதாவது புத்தகம் படித்திருக்கலாமே என்ற என்னம் என் மூளையை பிசைந்து எடுக்கும் அப்போது நான் கூட்டத்திற்கு வந்ததே விருதா என்றாகிவிடுகிறது. லெனின் விருது வழங்கும் விழா அப்படி இல்லாமல்  சிறப்பாக இருந்தது. 

நான் காஞ்சிபுரத்திலிருந்து வழித்தடம் தெரியாமல் விசாரித்துக்கொண்டே வந்தபோதும் நிகழ்ச்சியிலிருந்து விடுபடமுடியாமல் கட்டிப்போட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட பாலு மகேந்திரா, வசந்த், பாலாஜி சக்திவேல், சுபகுணராஜன், ஓவியர் மருது, கூத்துப்பட்டரை நிறுவனர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்கைச் சிறப்பாக செய்தார்கள். குறிப்பாக பாலுமகேந்திரா பேசிய வார்த்தைகள் ஆழ்ந்த அனுபவங்களைக் காட்டியது. தன்னுடைய சினிமா பயிற்சிப் பள்ளியில் ஒரு மாணவன் என்னிடம் மாஸ்டர் நல்ல  படம் என்றால் என்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டான். நான் ஆடிப்போய்விட்டேன். என்னால் அவனுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் எத்தனையோப் படங்களை எடுத்திருக்கிறேன். நான் அவனுக்கு சட்டென்று சொல்லிவிடமுடியும். நான் இதுவரையில் எது நல்லப்படம் என்று நான் கருதுகிறேனோ அதை உனக்கு ஒரு வழிக்காட்டுதலாகச் சொல்லமுடியும்  ஆனால், ஒருவேளை அவைகள் உனக்கு நல்லப் படங்களாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆகையால் ஒரு நாள் அவகாசம் கொடு நான் உனக்குச் சொல்லுகிறேன்.”என்றார்.

 ‘நான்  பன்னிரண்டு வயதில் தெரிந்துகொண்டதை அவன் எட்டு வயதில் தெரிந்துவைத்துள்ளான். ஏனென்றால் தகவல் தொடர்பு முன்னைவிட எங்கோ முன்னேறிவிட்டது. அவன் என்னை விட அதிகம் படித்தவன். இருந்தாலும் தற்போது நான் ஆசிரியர் ஸ்தானத்தில் இருக்கிறேன். அவன் மானவன் ஸ்தானத்தில் இருக்கிறான், அதனால் அவனுக்கு ஒன்றை நிறுவும் தன்மையோடு பதில்சொன்னால்தான் அவனுக்கு திருப்த்தி ஏற்படும்.  ஆகவே, தம்பி ஒருநாள் அவகாசம் கொடு நான் யோசித்துச்சொல்லுகிறேன் என்றேன். 

அன்று இரவுமுழுதும் யோசித்தாலும் சரியான முடிவு பிடிபடவில்லை. இதுவரை நான் ஊகித்து எனக்கென்றே, வைத்துள்ள மக்களின் வாழ்விலிருந்து எடுப்பதுதான் நல்ல சினிமா என்ற கருதுகோளிலும் சில கேள்விகள் எழுகிறது. மறுநாள் பையனை எப்படி எதிர்கொள்வது என்று யோசனையில் இருந்தபோது. அந்தக்கேள்வியாளனும் வந்தான். சரி தம்பி நாம் சினிமாவைப்பத்தி சற்று தாமதமாக பேசுவோம். முதலில் உனக்கு எந்த விதமான சாப்பாடு பிடிக்கும். என்றுக்கேட்டேன். அவன், அங்கசுத்தி இங்க சுத்தி எனக்கு எங்கம்மா செய்யிற சாப்பாடுதான் பிடிக்கும் என்றான்.  அப்போதுதான் அவன் பதிலிலேயே, அவன் கேள்விக்கான விடையைப் பிடித்தேன்.  உனக்கு ஏன் உங்கம்மா செய்யிற சாப்பாடு புடிக்குது,. அம்மா  உன் வயிறு கெட்டுடக்கூடாதுன்னு.  உனக்கு சாப்பிட ருசியாய் இருக்கணும்னு உனக்காகப் பாத்துப்பாத்து செய்யிறாங்க, அதனாலதான் உங்கம்மா சாப்பாடு புடிக்கும்ணு சொல்றே. அதுபோலதான் ஒரு மனுசனின் மூளைக்கு கசடான விஷயத்தைப் புகுத்தாம, நேர்மையான செயல்கள் செய்வதற்கு சிறிதளவேணும் மனதை உந்தித்தள்ளுகிற வேளைகளைசெய்கிறப் படங்கள் நல்லப் படங்கள் என்று என் புரிதல் இருக்கிறது. அதுதான் நல்லப்படத்திற்கான என் வரையரை என்று  நான் கூறினேன்.” என்றார்.

“மேலும் அவர் ஆணித்தரமாகக் கூறியது, என் சினிமாத்துறைக்கு நான் முதன்மையான மூலதனமாக கையாள்வது இலக்கியம். எனக்கு அடிப்படை இலக்கியம் வாசிப்பது. அதன் ஊடாகவே நான் சினிமாவை அனுகுகிறேன். என் பள்ளி மானவர்களுக்கு காலை பத்து மணிக்கு ஏதோ ஒரு சிறுகதையைக் கொடுத்து வாசிக்கச்செய்வேன். மதியத்திற்குள் அந்தச் சிறுகதையிலிருந்து அவர்களுக்குப் புரிந்த விதத்தில் சுருக்கம் எழுதித்தரும்படிக் கேட்பேன்.” என்றார். சற்று முதிர்வை நுகர்ந்தபோதும் அவரின் சிந்தனை அழகியலை இனங்காணுவதிலும். ரசிப்புத்தன்மை மேன்மைஅடைந்திருப்பதிலும் சற்றும் குறைவுபடவில்லை. அந்த பாலுமகேந்திரா தான் பேசத்துவங்குவதற்கு முன் மேடையில் அமர்ந்திருந்ததை உற்றுப்பார்த்தேன். அச்சு அசல் அவருடைய முகம் ஒரு மெழுகுசிலைபோல் இருந்தது.

அருண் திடீரென்று இந்த விழா சாத்தியமாவதற்கு உதவிய நண்பர்களுக்கு  விருந்தினர்கள் பரிசளிப்பார்கள் என்று இடையில் என்னையும் அழைத்தார் நான் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் வேகமாகச் சென்று கை நீட்டியபோது  தன்னுடைய தொப்பிக்குள்ளிருந்து நேர்க்கோட்டில் பாயும் பார்வையால் என்னைப் பார்த்து வாழ்த்துக்கள் என்றார். 

அருண் பேசும்போது தற்போதய நிலையில் ஒரு சில படங்கள் நல்ல நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவைகள் நான்கு ஐந்து நாளுக்குள்ளே எடுத்துவிடுகிறார்கள். சினிமாத்துறையிலிருந்து வந்த ஆட்சியாளர்கள், சினிமாவின் போக்கைக் கண்டுகொள்வதில்லை. படைப்பாளர்கள்  இருக்கும் போது  அவர்களைக் கொண்டாடாமல் இல்லாதபோது தலையில் தூக்கி வைத்துக்கொள்வதில்  ஒரு பயனும் இல்லை. என்ற தன் ஆவேசத்தை வைத்தார். நிகழ்வில் அம்ஷன் குமாருக்கு பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் பணமுடிப்பும், கேடயமும் வழங்கப்பட்டது. நல்ல விஷயங்களை நம் சக்த்திக்கு மீறி செய்வதில் மனக்கசப்பு ஏற்படாது. ஆனாலும் தொடர்ந்து நல்லதை செய்யவேண்டி  இருக்கிறதே? இளைஞ்ர்கள்தான் அருணுக்கு தோள்கொடுக்கவேண்டும். அம்ஷன் குமாரின் ஏற்புரையை மட்டுமே கேட்கமுடியாமல் போனது. தாம்பரம் 8,30 ரயிலில் உட்கார்ந்தபோதான் அவரின் உரையைக் கேட்காதது  சற்று வருத்தமாகப்பட்டது.

ஜே. டேனியல்.