Wednesday, September 5, 2012

கவிதை

மனத் திட்பம்

சுற்றிக்கொண்டிருப்பது
பிரதானம்
மட்டுமல்ல

என்
இதழ்களை
உரசிச்சென்ற காதல்
உன்னை வந்தடைவதும்

எப்போதும்
உனக்காகச்
சமைத்துக்கொண்டிருப்பவள்
என் தலையனையின்
ஈரத்தைத் துடைத்தெடுப்பதும்

ஓயாமல்
வாத்துகள்
சேற்றைத் துழவுவதுபோல்
நடந்தேறுகிறது.

சுற்றிக்கொண்டிருப்பது
பிரதானம்
மட்டுமல்ல


இரவுகளைப் புணர்ந்து
பனிப்புல்லின்
முனைகளில் பூத்திருக்கும்
நீர் மொட்டுக்கள்
எதிரியின் எய்தலுக்கு
கூரிய அம்புகள்போல்
எழும்
கதிர்பட்டு
ஒரு மனித இருப்பிடம்
இல்லாமல் போவதும்

மணல் குவியலை
மறைத்துவிட
மணித்துளிபொழுதும்
பிறப்பெடுக்கும்
மென் குரல் கதரிகளும்தான்.


சுற்றிக்கொண்டிருப்பது
பிரதானம்
மட்டுமல்ல

பயணப்பட

வழியற்ற முதியரைப்போல்
துக்கம்
ஓரிடத்தில்
தங்கிவாழும்

கைமாறும்
நடைபழகா
குழந்தையைப்போல்
மகிழ்ச்சி
இடம் மாறி மாறிப்போகும்
ஆனாலும், இவை எல்லாமும்
சுற்றிக்கொண்டிருப்பதுதான்
மனத்திட்பத்திற்கேற்ப.

ஜேடி

No comments: