![]() |
| ஊர்ப்பிடாரி |
![]() |
| கவிப்பித்தன் |
வேலுர் மாவட்டம் வாலாஜா பேட்டையில், 23,09,2012 அன்று ஊர்ப்பிடாரி திரு. ஜி. விஸ்வநாதன் வெளியிட எழுத்தாளர் பிரபஞ்சன் பெற்றுக்கொண்டார். நான் வாலாஜாவில் இறங்கி, விழா இடம் எங்கு இருக்கிறதோ என்றுத்தேடத் தொடங்கியதும் பேருந்துநிலையம் நுழையும் இடத்தில் நிகழ்வின் மிகப்பெரிய பிலக்ஸ் பேனர் வைத்திருந்தார்கள். ஒருவரிடம் இடத்தின் முகவரியைக் கேட்டுக்கொண்டு போனேன், நிகழ்வு நடக்கும் இடத்தில் பெரிய பெரிய பேனர்கள். குறைந்தது நான்கு அங்கங்கே இருந்தது. வாசலில் வரவேற்ற ஊர்ப்பிடாரியின் சொந்தக்காரர் வாங்க என்று அழைத்தார்.அவருடன் பல நண்பர்கள் இருந்தார்கள். அடுத்து என்ன செய்யனும் நண்பரே என்கிற விதமாக கதையாளரிடம் ஆலோசனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் சற்று ஆச்சரியத்துடன் இங்குள்ள நண்பர்கள் ஒரு படைப்பு வருவதற்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள் என்று வியந்தேன். உள்ளே நுழைந்ததும். நிகழ்வு மண்டப அறையில் பெண்களும் குழைந்தைகளும் முதியவர்களும் வாலிபர்களும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பரவாயில்லை இந்தப்பகுதியில் இலக்கிய நிகழ்வுக்கு இவ்வளவுக் கூட்டம் வருகிறதே என்று மனதுக்குள் பெருமைப் பட்டுக்கொண்டேன். இந்தக் கூட்டத்திற்கு பல நண்பர்கள் தாராளமாக உதவிசெய்தார்கள். அதனால்தான் நிகழ்வு இப்படிச் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று மேடையில் வரவேற்பு நிகழ்த்தியபோது சொன்னார்கள். இன்னும் கூடுதல் பெருமை. ஆனால், ஆத்மார்த்மான ஈடுபாடற்ற சில இடங்களில் நடப்பதுபோலவே 2,30க்கு நூல் வெளியீடு என்று போட்டு கிட்டத்தட்ட ஆறுமணிக்கு ஆரம்பித்தார்கள்.
கதையாளர் கஷ்டத்திலிருந்து அப்புத்தகத்தை கொண்டுவருகிறார்.அதனால், அண்பளிப்பாக ஆயிரம் மட்டும் கொடுத்துவிடு என்று இங்கிருந்துப் போகும்போது நண்பர் பணம்கொடுத்தனுப்பினார். நிகழ்வு முடிந்தபிறகு கதையாளரிடம் நண்பர் கொடுத்தப் பணத்தைச் சேர்த்துவிட்டேன். மிகவும் வருத்தப்பட்டவராக நண்பரே கடைசியில சொல்றீங்களே முன்னாடியே சொல்லியிருந்தா மேடையில் கூப்பிட்டு கவுரவப்படுத்தியிருப்பேனே என்று வருத்தப்பட்டார்.இருந்தாலும் நண்பருக்கு ஒரு புத்தகத்தைக்கொடுத்து சேர்த்துவிடச்சொன்னார். ஏற்கனவே இக்கதையாளரின் இடுக்கியைப் படித்த அனுபவம் இருக்கிறது. அதனால், புத்தகத்தின் உரிமையாளரிடம் சேர்ப்பதற்குள் வாசித்துவிட மனசு படபடத்தது. ஆனால், உள்ளுர் நண்பருக்கு தகவல் தெரிவித்து புத்தகத்தை இரண்டு நாளில் சேர்த்துவிடுகிறேன் என்று கேட்டுக்கொண்டேன். அதன் அடிப்படையில் வாசித்தேன்.
கதையாளர் வித்தியாசமான பாத்திரங்களையுடையதாக, ஒவ்வொரு கதைகளையும் தேர்வுசெய்கிறார். அக்கதைகளைத் தன்னுடைய இயல்பான பாணியிலேயே கொண்டுசெல்கிறார். கதைகள் ஒரு சீரான நூல் பிடித்தார்போல கொண்டுசெல்வதில் அதிக கவனம் செலுத்துகிறார். பார்க்கும், கேள்விப்படும், அனுபவிக்கும் விஷயங்களைத்தான் கதைக்களன்கலாக எடுத்துக்கொள்கிறார். கதைமாந்தர்கள் கையாளும் வாய் மொழியை, அப்படியே தன் பகுதியின் வட்டார மொழி என்கிற விதமாகப் பயன்படுத்துகிறார். கதைக்குள் நுழைகிறேன்.
1. ‘அத்திப்பூ சென்பகம்’
கணவனை இழந்தப் பெண் தன் மகளை மிகவும் கவனமாக பாதுகாத்து வளர்க்கிறாள். அதனால், அப்பெண் வெளிச்சூழலில் அதிகமான ஈடுபாடு இல்லை. அம்மா, மகள் வயதிற்கு வந்தபிறகு இன்னும் கூடுதல் கவனம் செலுத்துகிறாள். அம்மாவைவிட அதிகமாக, செண்பகம் தன்னுடலை தனக்குக் கிடைத்த மிகப்பெரியப் பொக்கீஷமாக பாதுகாக்கிறாள். தன் அம்மாவிற்குக் கூட தன் உடலைக் காட்டியதில்லை. செண்பகத்திற்கு கல்யாணம் நடக்கிறது. இரண்டு குழந்தைகள். இரண்டாவது குழந்தை பிரசவித்தபிறகுதான் செண்பகத்திற்கு குடும்பக்கட்டுப்பாடு நடக்கிறது. இந்த டாக்டர்தான் பிரசவம் பார்த்தார் என்று வழியில் போகிற டாக்டரைக்காட்டி எதேச்சியாக அம்மா சொல்லுகிறார். பிரச்சனை அங்குதான் தொடங்குகிறது. தன் உடலை அம்மணமாகப் பார்த்திருப்பாரே என்று நினைத்து நினைத்து வருந்தி உயிரையே மாய்த்துக்கொள்வதாக முடிக்கிறார்.
இக்கதை பெண்ணின் நிலையில் நின்று அவளுக்கு இப்படியான எண்ணம் ஏன் வரவேண்டும்? அதற்கான காரணம் என்ன? என்றக் கேள்வியை எழுப்பியிருந்தால் கதை வெற்றிபெற்றிருக்கும். மாறாக, நடந்த விஷயத்தைப் பதிவுசெய்த விதம் என்னதான் காலம் முன்னேறினாலும் பெண் எல்லாச் சடங்காச்சாரங்களையும் இம்மியும் தவராமல் கடைபிடித்து வாழவேண்டும் என்ற நிலைக்கு கதையாளர் கொண்டுசெல்கிறார் என்ற எண்ணத்தைத்தான் எனக்கு ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற கதைகள் தேவையா? என்ற கேள்வியை எழுப்பினால், இது தேவை இதுதேவையில்லை என்பதை நினைத்து வருவதல்ல படைப்பு என்று சொல்லலாம். ஆனால், ஒரு கதை நூறு வருஷத்திற்கு பின்தங்கிய சமநோக்கு இல்லாத வாழ்வை தற்போது நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்கிறக் கருத்தை வைக்கிற விதமாக கதை இழுத்துச்செல்கிறதென்றால் இதுத்தேவையா? அதிலும் கதை முழுக்க செண்பகத்தின் உள் உணர்வுகளை எந்த இடத்திலும் பிரிதிபளிக்கவே இல்லை செண்பகத்தைப்பற்றி பேச்சுவாக்கிள் கேள்விப்பட்டதை பதிவுசெய்வதாகதான் கதை முழுக்க அமைகிறது.
செண்பகம் இரண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்றால் அவளின் மனம் எந்தளவு பாதித்திருக்கும். ஒரு பெண்ணுக்கு அப்படியானச் சூழலை ஏற்படுத்தியது எது? ஏன் தொடர்ந்து மனம் பிரம்மை பிடித்துத் தவித்தது. இவைகளைக் கதை ஆராயவில்லை.
இரண்டு பிள்ளைகளை, கணவனை, தாயை விட்டு மீண்டும் திரும்பி வரமுடியாத ஒரு உயிர் போய்விட்டதே என்று வாசகனுக்கே பதைக்கிறபோது. கதையாளர் “காலையில் செண்பகத்தின் கதை முடிந்துவிட்டது.” என்று சொல்லும் மேம்போக்கான வார்த்தையில்தான், இக்கதை பழமைகளில் ஊரிப்போன விஷயத்தை, மறைமுகமாக முன்வைக்கிற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காகப் படைக்கப்பட்டதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
2. சிப்பாய் கனேசன்
பொதுவாக இவருடைய பல கதைகள், இறந்து போனவர்களுடைய வாழ்வைத்தழுவி எழுதப்பட்ட கதைகளாகத்தான் இருக்கிறது. ராணுவ வீரர் ஆறுமாதம் அல்லது வருஷத்திற்கு ஒருமுறை, வரும்போதெல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது குடும்பம். அப்படியொரு முறை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும்போது அதற்கு மாறாக அவர் மரணப் பெட்டி வருவதைச்சொல்லுகிறது.
“பையன் படுத்து விழிக்கிறபோது அம்மா வளையல் மாட்டிக் கொண்டிருந்தாள். அப்பா இல்லாதபோது வளையல் கழட்டுவதில்லை.” என்று ஒரு நிகழ்வை புரிந்துகொள்ள அழகான குறியீடாக இந்த வார்த்தைகளை வைத்திருப்பார்.இதுபோன்ற குறியீட்டு வார்த்தைகள். இவருடையக் கதைகளில் மிக அரிதாகத்தான் கண்டெடுக்க முடிகிறது.
முக்கியமாக இவருடைய உவமாணங்கள், குறிப்பிடப்படுகின்ற சூழலுக்கு சற்றும் பொருத்தமற்றதாக இருக்கிறது. ‘ஒரு கைப்பை நிரம்பியிருப்பதை’ “எருமை மாட்டின் வயிறுபோல” என்கிறார்.
3. சாவு பஜனை
ஒருவர் மரணத்தில் ஒருவர் சந்தோசப்படுகின்ற வாழ்வு முறை எந்தச் சமுதாயத்திலும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது. என்கிற புரிதலை ஏற்படுத்துகின்றது. அது மிகப்பெரிய பொருளை அபகரித்தல் விதமாக இல்லை. சாதாரண போதைமயக்கத்திற்கா என்கிறபோது மனிதர்களுடைய மனசாட்சியை என்னவென்று சொல்வது என்கிற கேள்வியையும் எழுப்புகிறது
வார்த்தைச் சிக்கனம் என்றபெயரில் தவறான அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாக ஆகிவிடக்கூடாது. “ ஓடிவந்து பிணத்தின் மீது புரண்டு கதறினாள்.” என்கிற போது நீட்டி படுத்திருக்கிற பிணத்தின் மீது குறுக்காக புரளுவது போல் அர்த்தமாகிறது, ‘பிணத்தின் மீது விழுந்து, புரண்டு அழுதாள்’ என்கிறபோது சரியாக நடந்ததைப்போன்று அர்த்தமாகும்.
நடேச ரெட்டியார் இறந்த செய்தியை சொல்ல நாலாபுறமும் ஆள் அனுப்புகிறார்கள் என்கிற விஷயத்தை ஆசிரியர் சொல்லிக்கொண்டு வரும்போது வெளியூர் போகிறவர்களுக்கு, ‘பறை மேளத்துக்கு முன் பணம் கொடுத்தனுப்பினான்’ என்று சொல்லுவார். (ஒரு முற்போக்கான கதையாளரரிடமிருந்து இப்படியான ஒரு வார்த்தை வந்தது உண்மையில் வருத்ததை ஏற்படுத்தியது.) ஏனென்றால் அதன் கீழ்பகுதியில் ரெட்டியார்களில் சாதாரணப் மனிதன் ஒருவர் பேச்சுவாக்கில் சொல்லும்போது ‘அந்த பறை மேளம் அடிக்கிறவங்க என்று குறிப்பிடுவார். அப்படிக் குறிப்பிடுகிற தொனியில் அலட்சியம் தெரியும். அந்தத்தொனிக்கும் கதையாளர் குறிப்பிடும் தொனிக்கும் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை ரெட்டியார், சமூகம் தன் இயல்பில் இழிவைக் கலந்துப்பேசிப் பேசிப் பழக்கப்பட்டதால் அவரும் அப்படியானப்பேச்சைச் சாதாரணம்போன்று குறிப்பிடுகின்றார். ஆனால், இங்கு ஆசிரியம் அதே பாணியைக் கையாளும்போது கதைக்கு மட்டும்தான் முற்போக்கா?என்கிற கேள்வி எழுகிறது.
ஒரு கட்டத்தில் இப்போதெல்லாம் சரக்கில்லாமல் எந்த விஷேசமும் நடப்பதில்லை என்கிற சமூகத்தின் தற்கால அவலநிலையான உண்மையை போகுற போக்கில் சரியாக குறிப்பிடுகின்றார்.
4. திருட்டு இலுப்பை
இலுப்பை தோப்பில் கொட்டைத் திருடுபோகிறது. பக்கத்து ஊர்க்காரனா? ஆடுமாடு மேய்ப்பவர்களா? யார்தான் திருடுகிறார்கள் என்று மண்டையைக்குடைந்து தேடுகிறபோது கொட்டையைப் பொறுக்குகிற வர்களே மறைத்து வைக்கிறார்கள் என்கிற உண்மை வெளிப்படுகிறது. மற்றவர்களைக் குற்றம் சாட்டிய ரெட்டியார் கடைசியில் தன் காலில் மலத்தை ஒட்டிச்செல்கிறார் என்கிற நீதியை வழங்கி கதையை முடிக்கிறார் ஆசிரியர்.
பொதுவாக இக்கதையாளரின் பல கதைகள் வாசகனை யோசிக்கத்தூண்டுகிற செயலை பரவலாகச் செய்யவில்லை. மாறாக சாதாரண நிக்ழ்வுகளை ஆசிரியரின் திறமையால் சிறுகதையின் ஒழுங்கு உடையாமல் ஒரு நூல் இழைபோல் கொண்டுசென்று முடிக்கவேப்பார்க்கிறார். மேலும் அப்பாவித்தனமா? தன்னுடைய வார்த்தைகளை விட்டு தானே மாட்டிக்கொள்கிறார். அப்படி அப்பாவித்தனமாக இருந்தால் ஒரே நேரத்தில் பத்திரிகையாளன், கவிஞர், சிறுகதையாளர் என்ற தன் பதிவுகளில் வெற்றிபெறமுடிமா? என்று நினைக்கவும் தோன்றுகிறது.
இக்கதையிலும் சேரிக்காரர், வண்ணார், அம்பட்டர்தான் திருட்டுக்கொட்டையை பொறுக்குவார்கள். அம்மக்களுக்கு பங்கில்லை என்றாலும், இரண்டு மூன்று செக்குக்கூட ஆடிவிடுவார்கள்’. என்று ஒரு கட்டத்தில் தன் கருத்தாகச்சொல்லுகின்றார்.
மேல் குறிப்பிட்ட மக்களுக்கு ‘பங்கில்லை என்றாலும், இரண்டு மூன்று செக்கே ஆடிவிடுவார்கள்’ என்பதில் பெரிய அரசியலே இருக்கிறது. கதையாளர் அம்மக்களுக்கு இலுப்பைத்தோப்பில் ஏன் பங்களிக்கக்கூடாது என்ற கேள்வியை வைக்கவில்லை. மாறாக பங்கில்லை என்றாலும் திருட்டுக்கொட்டையால் இரண்டு மூன்று செக்கை ஆடிவிடுவார்கள் என்று கூறுவது எவ்வளவு மோசடியான வார்த்தை. இதையெல்லாம் எந்த இலக்கியவாதியின் கண்களுக்கும் தெரியவில்லையா? தெரிந்தும் அப்படியே புழுங்கட்டும் என்று விடுகிறார்களா?
பாத்திரமாக வருகிற கண்ணப்ப ரெட்டியாருக்கு இலுப்பக்கொட்டையை யார் திருடுகிறார்கள் என்பதில் தலைவலி வருகிறது. அவர் பல வகையில் திட்டம்போட்டு கண்டுபிடிக்கிறார்க்ள.கடைசியில் கொட்டைப் பொறுக்குகிறவர்களே மண்ணில் புதைத்து வைத்துள்ளார்கள் என்பது வெளியாகிறது.
அதனால் தவறாக வேற்று மக்கள் மீது சந்தேகப்பட்ட, தண்டனை அளித்த கண்ணப்ப ரெட்டியாரின் காலில் மலம் ஒட்டிக்கொள்வதை ஆசிரியர் நீதியாக வழங்குகிறார். மலத்தை பூசிவிட்டால் இதுவரை அம்மக்களைப் பேசிய பேச்சுக்கள், கொடுத்த தண்டனைகள் எல்லாவற்றுக்கும் தீர்வாகிவிடுமா? எனக்கு எழுகிறக் கேள்வி பாத்திரம் செய்த தவறுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கிவிட்டார். ஆனால் ஆசிரியர் கதையின் முதலிலேயே சேரிக்காரர், வண்ணார், அம்பட்டர்தான் இலுப்பைக் கொட்டை திருடுவார்க்ள என்று ஆணித்தரமாக சொல்கிறாரே? அதை எப்படி எடுத்துக்கொள்வது.
5. ஆயிரங்காலத்துப் பயிர்
உலகத்திலேயே தழ்நாட்டின் பெற்றோர்கள்தான் படிப்பின் மீது அதிக அக்கறை எடுத்து பிள்ளைகளை படிக்கவைக்கிறார்கள் என்கிறார். என்னளவில் ஒரு புதியவிஷயமாகப்படுகிறது. மேலும் யார் யார் எல்லாம், தான் படிக்கவில்லை என்றாலும் தங்கள் பிள்ளைகள் படிக்கட்டும் என்று கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார்கள் என்கிற பட்டியலைத்தருகிறார். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், அடுத்தக் கட்டத்தில் அத்னையும் மண்ணுக்குள் புதைத்துவிடுகிறதுபோல் ஒரு வார்த்தை வருகிறது. “எழுத்துக் கூட்டி வாசிக்கிற அறைகுறைகள்கூட படிக்கவைக்கிறார்கள்” எப்படி, ஒரு கதையாளர் சக மனிதனை இவ்வளவு இழிவாக எடைபோடமுடிகிறது. படிக்கத்தெரியாதவன் எழுத்தைக் கூட்டியாவது படிக்க முயற்சிக்கிறானே என்று அவனை மெச்சவேண்டியப் பொறுப்பு உள்ள கதையாளர் இப்படி கணிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனக்குக் கேட்க்கத்தோன்றுகிறது, பல பட்டங்களை வாங்கியப் படிப்பாளிகள், பட்டம் வாங்கிவிட்டபிறகு, எத்தனைபேர் ஓய்வு இருக்கிறது என்று புத்தக்த்தைப் படிக்கிறார்கள்.
இக்கதையில் வருகிற வாசுதேவன் மீது கோபம்தான் வருகிறது. மிகப்படித்தவர் அடிக்கடி மிக மிக உயரிய கருத்துக்களைப்பற்றி சிந்திப்பதாகவும் சமூக நிலையைக்குறித்து மனம் வெதும்புவதாகவும் வெளிப்படுத்துகின்றார்.
ஆனால் நிஜத்தில் அவரின் மாறுபாடான பிம்பம் மிகச்சாதாரணமாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு இடத்தில் தன் மைத்துனனுக்கு சரியான பெண் கிடைக்கவில்லை எண்பதைக்குறிப்பிட இப்படிப் பேசுகிறார். “ இவர்கள் தகுதிக்கு மீறி எல்லாமேப் படித்தப் பெண்கள். படிக்காதப் பெண்களின் குடும்பமோ இவர்கள் தகுதிக்கு பொறுத்தமாக இல்லை.” தகுதியை இவ்வளவு பொறுத்தமாக எந்த மதவாதியால் முடிவு செய்யமுடியும். ஒரு மதவாதி நிர்ணயித்து வைத்திருக்கிற கொள்கையை விலங்கியல் படித்த பட்டதாரி வைத்திருக்கிறார் என்றால். இந்நாட்டின் கல்விமுறையை என்னவென்று சொல்வது.
பத்தாவது படித்த மைத்துனனுக்கு பெண்ணைத் தேடித்தேடிப் பார்த்து அலுத்துவிட்ட மாமன் பட்டதாரி வாசுதேவன் “டேய் மச்சான் மொதல்ல அப்ளிகேஷன் போட்டுரு.... அப்புறம்... மாப்ள எம்.ஏ இன்கம்ப்ளீட்னு சொல்லிக்கலாங்.... இதத்தவிர வேற வழியில்ல....” இந்த அறமற்ற வாசகத்தை நான் வாசித்தவரை கதைமாந்தர் கூட சொன்ன தில்லை.சாதாரணமாக உற்சாகப்படுத்துகிற விதமாக பெயிலானாக்கூட பரவாயில்லை. நேரங்கெடைக்கும்போது படிடா, எழுதுடா, என்றுகூட சொல்லும் மனம் இல்லாத வாசுதேவன், சும்மா சமூகத்தைப்பார்த்து கேள்வி எழுப்புகிறேன், சிந்திக்கிறேன் என்பது எல்லாமே என்னளவில் வீன் என்றுதான் கருதுகிறேன்.
6. ரெட்டைக் குண்டி
வெளியூர்களுக்குச் சென்று மாடுகளைப் பிடித்துவந்து விற்று பணம் ஈட்டுகின்ற ஒரு கெட்டிக்காரரின் கதையும். அவன் இறந்தபின் பேயாக பனைமரத்தில் உச்சியிலும் ஊரிலும் வளம் வருவதாக வதந்தி.அநத் வதந்திக்கு பயந்து, ஊரே இரவில் நடமாட நடுங்கும் இருவர் ஊரின் குளத்தில் மீன் பிடிக்கப்போகிறார்கள். அப்போது பனைமரத்திலிருந்து விழுந்த உருவத்தைப்பார்த்து குளத்திலேயே பயந்து விழுகிறான்.பிறகு மரித்தும்போகிறான். அதைக் கூடயிருந்துப்பார்த்தவன் அந்த ஊரைவிட்டே போய்விடுகின்றான். பல வருஷங்கள் கழித்து மீண்டும் தன் ஊருக்கு வருகிறான். வந்தவன் அக்குளத்தை அதிசயமாப் பார்க்கிறான். அக்குளத்தில் சிறு பிள்ளைகள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். பொய்யான வதந்திகள் காலங்கடந்து நிற்பதில்லை. அத்தகைய வதந்திகளை பிள்ளைகள் அடித்து துவம்சம் செய்கிறார்கள் என்பதைத்தான் கதை வெளிப்படுத்துகிறது .என்பாதக எனக்குப்படுகிறது.
மேற்குறிப்பிட்டதைப்போல உவமாணங்கள் மிக மிக அபத்தமாக இருக்கிறது. அவசரப்பட்டு எழுதிவிடுகிறாரா? என்று தோன்றுகிறது. சில இடங்களில் எழுத்தை சுருக்கிப்போடுகிறேன் என்று அர்த்தக்குறைவான வார்த்தைகளாக வந்துவிடுகிறது. பல இடங்களில் ஒரு இடத்தில் சிக்கனமாக முடியவேண்டிய இட்த்தில் தேவையில்லாமல் நீண்டுகொண்டு வருகிறது.
மனுஷனுக்கு வேர்க்கிறது என்பதை தெளிவுபடுத்த இந்த வாசகத்தைப் பயன்படுத்துகின்றார். “ வேகாத மண் பாணையில் ஊற்றிய நீர் மேனி எங்கும் ஒழுகுவதுபோல” வேகாத பாணையில தண்ணீரை ஊற்றமுடியுமா? சரியாக வேகாத பாணையில் என்றால்தான், உதாரணம் சரியாக பொருந்திவரும் வரும்.
உடல்முழுதும் வேர்த்தது என்று சொல்வதை. ‘நெற்றி, மார்பு, கை, கால் என்று வார்த்தைகளை நீட்டிக்கொண்டே போவது தேவையா? அந்த இடம் அப்படி நீட்டி சொல்வதற்கான இடமாகவும் இல்லை.
“குழந்தை பிய்த்துப்போட்ட தோசைபோல் நிலா இருக்கிறது என்கிறார். ஆனால் நிலா வளர்பிறையானாலும், தேய்பிறையானாலும் அத்தனை ஒழுங்குக்கிரையமாக இருப்பது நமக்குத் தெரியும். குழந்தை பிய்த்துப்போடுகிற தோசை கண்ணா பின்னா என்று வராதா? எப்படிப் பொருந்தும்.
இன்னொரு இடத்தில் மனதில் பயம் கூடிக்கொண்டே போகிறது என்பதைக் குறிப்பிட “நிமிடத்திற் கரையான் புற்றுபோல வளர்ந்துகொண்டே இருந்தது.” அலைபாய்கிற எண்ணத்தால் பயம் தானாக கூடிக்கொண்டே வருகிறது. புற்று நிமிடத்திற்கு நிமிடம் வளரக்கூடியதா? எறும்போ அல்லது ஈசலோதான் அப்புற்றுகளை உருவாக்குகிறது அதுவும் இரவுநேரங்களில்தான் இருக்குமென்று கருதுகிறேன்.
இன்னொரு இடத்தில் கோழிக்குஞ்சியை கொத்திக்கொண்டுபோகும் குருவியைப்போல” குருவியாக் கொத்திச்செல்லும். இப்படி முரண்பாடானா விஷயங்கள் சற்று சலிப்படையச்செய்கிறது.
7.வேதாளங்களின் உலகம்
கோப்புகளை நகர்த்துகிற அரசு அலுவலகங்களின் அலுவலர்கள், தாங்களே அரசு அதிகாரத்தை நேரடியாக கையில் வைத்திருப்பவர்கள்போல் பொதுமக்களை நடத்துகிறார்கள். என்பதை மிக வேதனை நிறைந்த அளைச்சல்களால் பதிவுசெய்திருக்கிறார். மேலும் அதிகாரிகள் தங்களுடையப் பொறுப்புகளை எவ்வாறு தட்டிக்கழிக்கிறார்கள் என்பது, பல தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
அதைக்காட்டிலும், இதில் கதையாளரின் மூழுமையான பிம்பங்கள் வெளிப்பட்டு விடுவதையும் தவிற்கமுடியவில்லை. அது அவரின் தனிப்பட்டத் தன்மைகளையும் காட்டிவிடுகிறது. கதையாளர் புனைப்பெய்ர் வைத்துக்கொண்டு படுகிற அவஸ்த்தையை லேசாக விவரித்துவிட முடியாது.
எழுதும் படைப்பாளிக்கு, சாதாரண மனிதனைவிட அதிகப்பொறுப்பு இருக்கிறது. தன் மூளையின் வழியாக ஊற்றெடுத்து, இதய தாராசில் வைத்து சரிப் பார்த்துவிட்டுதான் எழுத்துக்கள் காகிதத்தை நிறப்பவேண்டும். குறிப்பாக ஒரு மனிதனைப்பற்றி மதிப்புக் குறைத்து எழுதுகிறோம் என்றால் முதலில் நாம் அத்தன்மையில் இருக்கிறோமா? இல்லையா? என்கிறகேள்வி தனக்குள் கேட்டுப்பார்த்துவிட்டுதான் மேற்கொண்டு அக்கருத்தை வைக்கவேண்டும். அப்போதுதான் நாம் மனநிறைவாக எழுதியுள்ளோம் (மனசாட்சி உள்ளவர்களுக்கு) என்ற நிம்மதி கிடைக்கும். இல்லை என்றால் ஊறுக்கு உபதேசம் சொல்லுகின்ற கருத்துக் கண்ணாயிரம் போன்ற எழுத்துக்கள்தான் எல்லா காகிதங்களையும் நிறப்பும்.
விசித்திரகுப்த்தன் என்கிற எழுத்தாளன் தன்னுடைய காரியம் நடக்கவேண்டும் என்கதற்காக பல நேரங்களில் நான் ஒரு எழுத்தாளன், என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். யதார்த்த வாழ்வில் எலலோரும் அப்படித்தான் என்பதை சுட்டவேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தாரா? இல்லை அவரின் இயல்பான நிலை அதுதானா? என்கிற கேள்வி எழுகிறது. யதார்த்த நிலையில் எலோரும் அப்படி என்று இவர் சொல்லியிருந்தால், குழந்தைக்கு பிறந்த சான்று வாங்க ஏறக்குறைய இரண்டுமாதம் அலைகின்ற நபர் அங்கு இருக்கிற அதிகாரிகளையோ? அல்லது அதற்கு பொறுப்பான நபர்களையோ ஒரு முறைக்கூட கோபம் பொங்கிக் கேட்கவேயில்லை. அதுதான் மிக வருத்தமாக இருக்கிறது.
அங்கு நேரடியாக கேட்காமல், சித்திரகுப்த்தன் ‘இந்தச் சமூகம் மோசம், இதில் எழுதுவதைவிட தூக்குப்போட்டு சாகலாம்’ என்றெல்லலாம் புலம்புவது வீன் என்றுதான் என்னைப்பொறுத்தளவில் படுகிறது. ஒரு படைப்பாளிக்கு தன் கண்முன் நடக்கிற விஷயங்களைப்பார்த்து கோபம் வரவில்லை என்றால் அவன் என்ன விதமான படைப்பை வைக்கமுடியும். அதிலும் தானே அனுபவிக்கிற அளைச்சல் கொடுமைக்கு ஒரு சாதாரண மனிதன்கூட கடைசிவரை சாதுவாக இருக்கமுடியுமா?
ஒரு கட்டத்தில் அலுவலக உதவியாளர் உங்க இஷ்டத்துக்கு பேர மாத்தி வைத்துக்கொண்டு எங்க உயிர வாங்கரிங்களா? என்று கேட்கும்போது பிரசவத்தின்போது யாராவது சொந்தக்காறரர்கள் வைத்துவிட்டு இருப்பார்கள்’ என்கிறார். சொந்தக்காறரர்களை பிரசவ அறைவரை தாராளமாக அனுமதிப்பார்களா எனபதே கேள்விதான். ஆனால், அவரே இன்னொருக் கட்டத்தில் அரைமயக்கத்தில் இருக்கும்போது மனைவி தன் கணவனின் புனைப்பெயரச் சொல்லிவிட்டது எவ்வளவு கஷ்டத்தைத் தருகிறது என்று வேதனைப்படுவார். இங்கேயும் கூட, பேஷண்ட்டாக அரை மயக்கத்தில் இருக்கிற நபரை தொந்தரவு செய்யும் விதமாக கணவன் பெயரை மற்ற விபரங்களைக்கேட்டிருப்பார்களா? இப்படி பல முரண்பாடுகள் நிரைந்திருக்கிறது.
7.ஊர்ப்பிடாரி
இக்கதை அருமையாக வந்திருக்கிறது. இதன் புனைவுமொழியும் நன்றாகக் கைக்கொடுத்திருக்கிறது. கதையைக் கொண்டுசெல்கிற விதம்மும் அருமை. படைப்பாளி கடவுள்களைக்கூட ஒரு சாதாரண விஷயத்திற்காக ஏங்குகின்ற மனித்ர்களைப்போல் மாற்றமுடியும் என்பதை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்தத்தொகிப்பிலேயே என்க்கு மிகவும் பிடித்தக் கதை இதுதான். இது ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது கடவுளைக் குறைக்கூறியதற்காக இருக்குமோ என்று யோசித்தேன். காரணம் அதுவல்ல, மனிதன் அடுத்தடுத்துத செயல்பாடுகளில் ஈடுபடுகிறபோது முன்ளுள்ளதை மறந்துவிடுகிறான். அவன் மூளையில் நிலையாக இருப்பது எதுவுமே இல்லையா? என்ற யோசனைகளை எழுப்புவதால் இது பிடிக்கிறது என்று நினைக்கின்றேன்.
ஜேடி.


2 comments:
வித்தியாசமான படைப்பாக இருக்கும் போல
வாங்க வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
முடிந்தால் பதிப்பகம், எந்த புத்தக நிலையங்களில்
விற்பனை ஆகிறது, இணையம் மூலம் வாங்கும் வசதிகள்
குறித்துப் பகிருங்கள்;
நிறைய வாசகர்களைச் சென்று அடைய உதவும்
Post a Comment