Friday, August 17, 2012


                                                                             வாழ்த்துக்கள்

 அம்ஷன் குமாருக்கு லெனின் விருது வழங்கும் தமிழ் ஸ்டுடியோவின்  நிறைவு விழாவிற்கு சென்றிருந்தேன். சில கூட்டம் பல பேரை ஏதோ ஒன்றைக் கொடுத்து (கேடயம் அல்ல, மனதிற்கு ஆத்ம நிரைவு) திருப்த்தி அடையச்செய்வதின் மூலமாக வெற்றியடைகிறது.  சில கூட்டம் பல பேரின் மனதை நோகடித்து வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்வதின் மூலமாக ஆவலாக கலந்துகொள்ள வந்தவர்கள் மீண்டும் அந்த பக்கம் வராமல் இருக்கச்செய்துவிடுகிறது.  ஏன் இப்படி நடக்கிறது என்று நான் யோசித்து யோசித்துப் பார்த்தபோது எனக்கான புரிதலாக இது இருக்கிறது. 1.கூட்டப்படுகின்ற கூட்டம்  மக்கள் நலனில் பெறும்பாலும் அக்கறை உள்ளதாக  இருத்தல். 2. கூட்டத்தைக் கூட்டுகிறவர் எப்போதும் ஒரு சமநோக்கு உள்ளவராக இருத்தல்  3. தனக்கான லாபத்தை மறைமுகமாக தூக்கலாக வைத்து செயல்படுவதை தவிர்த்தல்  4.ஏற்பாடுகளை  முழுமையான ஈடுபாட்டுடன் தன் யோசனையோ, அல்லது கூட்டுயோசனையோ எதுவாயினும் முழுதுமாக செலவழித்து நம்பிக்கையுடன் அனைத்து வழிகளிலும் செயல்படுத்த முயற்சிப்பது,  மேலும், காரணமில்லாமல் தன்னை அவமதித்தாலும் ஒருமுறையேனும் அவரை அனுகிப்பார்ப்பது. முக்கியமாக, சரியான நேரத்தைக் கடைபிடிப்பது.(சிலக்கூட்டங்கள் இரண்டரை மணிநேரம் தாமதமாகக் கூட தொடங்குகிறது. இப்படி ஆரம்பிக்கிற கூட்டம் வெறும் வெற்றுக்கடமைக்காக நடத்தப்படுகிறது என்றே நான் முழு மனதுடன் சொல்லுவேன். இப்படியான கூட்டங்கள் நடக்கிற இடங்களிலிருந்து ஒரு குரங்கைப்போல் தாவிவிட முயற்சிக்கிறேன்.) இந்த செயல்பாடுகள் சரியாக இருந்தால் நிச்சயம் கூட்டப்படுகின்ற கூட்டம் வெற்றி அடையும். அந்த, அளவில் தமிழ் ஸ்டுடியோவின் அருண் மற்றும் அவர் நண்பர்கள் சிறந்த இடத்தைப்பெறுகிறார்கள். ஐந்து மணிக்கென்றால் கூட்டம்  5.10க்கெல்லாம் சரியாகத் துவங்கிவிட்டது. அப்போதே எனக்குள் ஒரு திருப்த்தியை ஏற்படுத்திவிடுகிறார்கள். பரவாயில்லை சரியான நேரத்தில் துவங்கிவிட்டார்கள் என்று கூட்டத்தைக் கூர்ந்து கவனிக்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறேன். ஒரு வேளை தாமதமானால் என்னடா இது வீட்டில் இருந்தாலாவது ஏதாவது புத்தகம் படித்திருக்கலாமே என்ற என்னம் என் மூளையை பிசைந்து எடுக்கும் அப்போது நான் கூட்டத்திற்கு வந்ததே விருதா என்றாகிவிடுகிறது. லெனின் விருது வழங்கும் விழா அப்படி இல்லாமல்  சிறப்பாக இருந்தது. 

நான் காஞ்சிபுரத்திலிருந்து வழித்தடம் தெரியாமல் விசாரித்துக்கொண்டே வந்தபோதும் நிகழ்ச்சியிலிருந்து விடுபடமுடியாமல் கட்டிப்போட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட பாலு மகேந்திரா, வசந்த், பாலாஜி சக்திவேல், சுபகுணராஜன், ஓவியர் மருது, கூத்துப்பட்டரை நிறுவனர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்கைச் சிறப்பாக செய்தார்கள். குறிப்பாக பாலுமகேந்திரா பேசிய வார்த்தைகள் ஆழ்ந்த அனுபவங்களைக் காட்டியது. தன்னுடைய சினிமா பயிற்சிப் பள்ளியில் ஒரு மாணவன் என்னிடம் மாஸ்டர் நல்ல  படம் என்றால் என்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டான். நான் ஆடிப்போய்விட்டேன். என்னால் அவனுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் எத்தனையோப் படங்களை எடுத்திருக்கிறேன். நான் அவனுக்கு சட்டென்று சொல்லிவிடமுடியும். நான் இதுவரையில் எது நல்லப்படம் என்று நான் கருதுகிறேனோ அதை உனக்கு ஒரு வழிக்காட்டுதலாகச் சொல்லமுடியும்  ஆனால், ஒருவேளை அவைகள் உனக்கு நல்லப் படங்களாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆகையால் ஒரு நாள் அவகாசம் கொடு நான் உனக்குச் சொல்லுகிறேன்.”என்றார்.

 ‘நான்  பன்னிரண்டு வயதில் தெரிந்துகொண்டதை அவன் எட்டு வயதில் தெரிந்துவைத்துள்ளான். ஏனென்றால் தகவல் தொடர்பு முன்னைவிட எங்கோ முன்னேறிவிட்டது. அவன் என்னை விட அதிகம் படித்தவன். இருந்தாலும் தற்போது நான் ஆசிரியர் ஸ்தானத்தில் இருக்கிறேன். அவன் மானவன் ஸ்தானத்தில் இருக்கிறான், அதனால் அவனுக்கு ஒன்றை நிறுவும் தன்மையோடு பதில்சொன்னால்தான் அவனுக்கு திருப்த்தி ஏற்படும்.  ஆகவே, தம்பி ஒருநாள் அவகாசம் கொடு நான் யோசித்துச்சொல்லுகிறேன் என்றேன். 

அன்று இரவுமுழுதும் யோசித்தாலும் சரியான முடிவு பிடிபடவில்லை. இதுவரை நான் ஊகித்து எனக்கென்றே, வைத்துள்ள மக்களின் வாழ்விலிருந்து எடுப்பதுதான் நல்ல சினிமா என்ற கருதுகோளிலும் சில கேள்விகள் எழுகிறது. மறுநாள் பையனை எப்படி எதிர்கொள்வது என்று யோசனையில் இருந்தபோது. அந்தக்கேள்வியாளனும் வந்தான். சரி தம்பி நாம் சினிமாவைப்பத்தி சற்று தாமதமாக பேசுவோம். முதலில் உனக்கு எந்த விதமான சாப்பாடு பிடிக்கும். என்றுக்கேட்டேன். அவன், அங்கசுத்தி இங்க சுத்தி எனக்கு எங்கம்மா செய்யிற சாப்பாடுதான் பிடிக்கும் என்றான்.  அப்போதுதான் அவன் பதிலிலேயே, அவன் கேள்விக்கான விடையைப் பிடித்தேன்.  உனக்கு ஏன் உங்கம்மா செய்யிற சாப்பாடு புடிக்குது,. அம்மா  உன் வயிறு கெட்டுடக்கூடாதுன்னு.  உனக்கு சாப்பிட ருசியாய் இருக்கணும்னு உனக்காகப் பாத்துப்பாத்து செய்யிறாங்க, அதனாலதான் உங்கம்மா சாப்பாடு புடிக்கும்ணு சொல்றே. அதுபோலதான் ஒரு மனுசனின் மூளைக்கு கசடான விஷயத்தைப் புகுத்தாம, நேர்மையான செயல்கள் செய்வதற்கு சிறிதளவேணும் மனதை உந்தித்தள்ளுகிற வேளைகளைசெய்கிறப் படங்கள் நல்லப் படங்கள் என்று என் புரிதல் இருக்கிறது. அதுதான் நல்லப்படத்திற்கான என் வரையரை என்று  நான் கூறினேன்.” என்றார்.

“மேலும் அவர் ஆணித்தரமாகக் கூறியது, என் சினிமாத்துறைக்கு நான் முதன்மையான மூலதனமாக கையாள்வது இலக்கியம். எனக்கு அடிப்படை இலக்கியம் வாசிப்பது. அதன் ஊடாகவே நான் சினிமாவை அனுகுகிறேன். என் பள்ளி மானவர்களுக்கு காலை பத்து மணிக்கு ஏதோ ஒரு சிறுகதையைக் கொடுத்து வாசிக்கச்செய்வேன். மதியத்திற்குள் அந்தச் சிறுகதையிலிருந்து அவர்களுக்குப் புரிந்த விதத்தில் சுருக்கம் எழுதித்தரும்படிக் கேட்பேன்.” என்றார். சற்று முதிர்வை நுகர்ந்தபோதும் அவரின் சிந்தனை அழகியலை இனங்காணுவதிலும். ரசிப்புத்தன்மை மேன்மைஅடைந்திருப்பதிலும் சற்றும் குறைவுபடவில்லை. அந்த பாலுமகேந்திரா தான் பேசத்துவங்குவதற்கு முன் மேடையில் அமர்ந்திருந்ததை உற்றுப்பார்த்தேன். அச்சு அசல் அவருடைய முகம் ஒரு மெழுகுசிலைபோல் இருந்தது.

அருண் திடீரென்று இந்த விழா சாத்தியமாவதற்கு உதவிய நண்பர்களுக்கு  விருந்தினர்கள் பரிசளிப்பார்கள் என்று இடையில் என்னையும் அழைத்தார் நான் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் வேகமாகச் சென்று கை நீட்டியபோது  தன்னுடைய தொப்பிக்குள்ளிருந்து நேர்க்கோட்டில் பாயும் பார்வையால் என்னைப் பார்த்து வாழ்த்துக்கள் என்றார். 

அருண் பேசும்போது தற்போதய நிலையில் ஒரு சில படங்கள் நல்ல நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவைகள் நான்கு ஐந்து நாளுக்குள்ளே எடுத்துவிடுகிறார்கள். சினிமாத்துறையிலிருந்து வந்த ஆட்சியாளர்கள், சினிமாவின் போக்கைக் கண்டுகொள்வதில்லை. படைப்பாளர்கள்  இருக்கும் போது  அவர்களைக் கொண்டாடாமல் இல்லாதபோது தலையில் தூக்கி வைத்துக்கொள்வதில்  ஒரு பயனும் இல்லை. என்ற தன் ஆவேசத்தை வைத்தார். நிகழ்வில் அம்ஷன் குமாருக்கு பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் பணமுடிப்பும், கேடயமும் வழங்கப்பட்டது. நல்ல விஷயங்களை நம் சக்த்திக்கு மீறி செய்வதில் மனக்கசப்பு ஏற்படாது. ஆனாலும் தொடர்ந்து நல்லதை செய்யவேண்டி  இருக்கிறதே? இளைஞ்ர்கள்தான் அருணுக்கு தோள்கொடுக்கவேண்டும். அம்ஷன் குமாரின் ஏற்புரையை மட்டுமே கேட்கமுடியாமல் போனது. தாம்பரம் 8,30 ரயிலில் உட்கார்ந்தபோதான் அவரின் உரையைக் கேட்காதது  சற்று வருத்தமாகப்பட்டது.

ஜே. டேனியல்.

No comments: