சாமுவேலின் வட்டிக்கடை
சாமுவேல் வீட்டில் இருந்தால் அரைக்கால் சட்டையில்தான்
இருப்பார். முறுக்கேறிய பாடி பில்டரை ஒத்த மார்புகள். உடல் கட்டுடன்
இருக்கும். தேடினால்கூட உடலின் மீது ரோமங்கள் இருக்காது. அவரின் சிறிய
கண்கள் தன்னால் என்ன முடியுமோ அதை மட்டுமே விரும்பும். பத்தாவது
முடித்தவுடன், நான்கு வருஷம் உள்ளுர், வெளியூர் கபடி விளையாட்டில் காப்டன்.
காப்டன் சாமுவேல் என்றால் பிரபலம். ‘கபடிக்கபடி’ கூறிக்கொண்டு
போகும்போது தொட்டு விட்டு வருவது அவர் பழக்கமல்ல. பளார் என்று முதுகில்
அடித்து விட்டு வருவார். எந்த விளையாட்டு ஒழுங்கும் அந்த அடியைக்
கட்டுப்படுத்தவேயில்லை. சுற்றி வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு ‘அப்பா’ என்ன
அடி என்று பதறவைக்கும். ஆனால், அடி வாங்கியவர்களுக்கு வலிக்குமோ வலிக்காதோ
தெரியாது. அடிப்பதற்காக எந்தப்பிரச்சனையும் வந்ததேயில்லை. அதற்கு
பழிவாங்கும் விதமாக ஏதாவது ஒருமுறை சாமுவேல் காலைப்பிடித்து,
மொத்தக்கூட்டமும் அமுக்கிவிடும். சாமுவேல் அடித்துவிட்டு தப்பித்தவுடன்
சங்கடப்பட்டவர்கள் கழுத்து மடங்கி பிடிபட்டவுடன் நிம்மதியடைவார்கள்.
தற்போது அரசாங்க உத்தியோகம் கிடைத்த இருபது வருஷத்தில்தான் சற்று வயிறு
தெரிகிறது. முட்டி மோதி மச்சு வீட்டைக் கட்டியிருந்தார். வீட்டின் நடைபாதையில் பாய்விரித்திருந்தது. நல்ல வெள்ளைச்
சட்டை வேட்டியில் சம்மணமாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன் டீப்பாய்
இருந்தது. வீட்டில் இருந்தால் எப்போதும் டீப்பாய் முன் உட்காருவதில்லை. டீப்பாய் முன் இருந்தால், எதிரில் குறைந்தது இரண்டுபேராவது
உட்கார்ந்திருக்கவேண்டும். இன்று எதிரில் நான்கு பேர் இருக்கிறார்கள்.
சாய்வு டீப்பாய் உள்ளுர் ஆச்சாரி செய்ததுதான். உட்ப்பிரய்மெர்
அடித்திருந்தார்கள் திருப்பித் திருப்பி இரண்டு மூன்றுகோட் அடித்திருப்
பார்கள்போல. பிரய்மெர் மொத்தையாய் இருந்தது.
சாமுவேல் டீப்பாயில் இடது முழங்கையை மடக்கி வைத்தவாறு ஏதோ கணக்குக் குறிப்பு
எழுதி கூட்டிகொண்டிருந்தார். இடக் கைக்குக்கீழ் பத்திர பேப்பர் இருந்தது.
எதிர் வரிசையில் முதலில் மூன்றுபேரும் பின்னாக வெள்ளை வேட்டி சட்டையில்
வயிறு பெறுத்த ஒரு நபரும் உட்கார்ந்திருந்தார்கள்.
ஏழு அடி உயரம், ஐந்தடி அகலம்கொண்ட இரும்பு கிரில் கதவு திறந்திருந்தது. உள் அறைக்கு நல்ல காற்றை அனுப்பியது. இருந்தாலும் சீலிங் ஃபேன் ஓடியது.
முதல் வரிசையில் இருந்த மூன்று பேர்களில் நடுத்தர வயதுள்ள பெண் வாலிபனுக்கு
வலப்பக்கமாக உட்கார்ந்திருந்தாள். பெண் மிகவும் ஒல்லியாக
இருந்தாள். தேகம் கறுப்புதான். டார்க் பச்சைநிறத்தில் மஞ்சள் பார்டர்
விழுந்த புடவை உடுத்தியிருந்தாள். வாலிபன் நல்ல கலர். வாலிபன் இடப் பக்கத்தில் நபர்
ஒட்டிய முகத்துடன், அகலம் இல்லாத, மெலிதான, பெரிய பற்களுடன் இருந்தார்.
வாய்திறந்தால் மேல் அண்ணத்தின் நடுவில் நான்கு பற்கள் விழுந்து பெரிய
ஓட்டையாக தெரிந்தது. வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும்.
“தம்பி, நல்லா யோசனைப் பண்ணிப்பாரு ஒரு வருஷமில்ல. ரெண்டுவருஷமில்ல.
ஆறு வருஷமா நடையா நடந்தேன். நான் போகும்போதெல்லாம் அவர் வீட்டில், வயசுக்கு வந்த
ரெண்டு. மூன்றுபொண்ணுங்கதான் இருப்பாங்க. அப்பா இல்லீங்க, அங்க
போயிருக்காரு இங்க போயிருக்காருன்னு சொல்வாங்க நானும் என்னடா இது எல்லாம்
பொம்பளப்புள்ளைங்களா இருக்குதேன்னு. அப்பா வந்தா சொல்லுங்கம்மானு,
சொல்லிட்டுவருவேன். சில நேரம் இந்தம்மாக்கூட இருப்பாங்க. ஆனா, இந்தாளு
அதெல்லாம் கணக்கிலயே வெச்சிக்கல எண்பதுதான் எனக்கு கோவம். கடைசியா
ரெண்டு முறை, கொஞ்சம் ஆவேசமா பேசிட்டு வந்தேன்.
நானும் சொந்தமா வச்சிருந்துக் குடுக்கலபா” நான் ஒரு ஆபீஸராண்ட
வாங்கித்தான் குடுத்தேன். இவர் உனக்கு என்ன வேணும்” என்று சாமுவேல் கேட்டதும். எதிரில்
இருந்த வாலிபன் “மாமனாரு” எனறான்.
பெண்ணும் சற்று சத்தமாக் “என் சின்ன மருமகன் தாம்பா”
வீட்டுக்கு வெளியே டுவீலரின் சத்தம் வந்தது. சாமுவேல் சாலையை எட்டிப்பார்த்தார். ஸ்டான்லி வண்டியை
நிறுத்தி விட்டு வந்நான். சாமுவேல் எங்கேப் பேச்சை நிறுத்தினோம் என்று சற்று
ஊகித்து நினைவு வந்தவராக “ஓ அப்படியா, சரி... சரி இருக்கட்டும் தம்பி
எங்கப்பன், பாட்டன் எதோ தத்தித்தத்தியாக நெலம் வெச்சியிருந்து அதுமூலமா
பெரிய ஆஸ்த்திக்காரனா ஆகலபா. நான் வாங்குற கொறஞ்ச சம்பளத்துல வயித்தக்கட்டி
வாயக்கட்டிதான். உங்களமாதிரி என் வீடுதேடி வர சிலருக்கு குடுக்கிறேன். நான்
குடுத்தது உங்களுக்கு, ஏதோ ஒரு வகையில் உதவியாய் இருந்தது இல்ல. அதற்கு
கைமாறா இப்படிதான் இழுக்கடிக்கிறதா?. நானு ஒருத்தனாட்டம் இவன் ஏமாறுவானா
அவன் ஏமாறுவானான்னு பாக்கிறவன் இல்லபா. அப்படி சம்பாதிச்சி இருந்தாக்கூட
நாம பலபேர ஏமாத்துனோம், நம்ம ஒருத்தன் ஏமாத்திட்டான்னு உட்டுட்டு
போயிடுவேன்.
இந்தாளுக்கு மனசாட்சியிருந்தா நான் பதினைந்து கிலோமீட்டர் சைக்கிள மிதிச்சிக்கினு வந்து கேட்டுட்டுபோறேனே. என்னைக்காவது ஒருநாளு, ஒரே ஒரு நாளு. சார் சந்தர்ப்பம் இப்படி இருக்கிறது கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க. நானே வந்து கணக்க முடிச்சிட்டுப் போறேன்னு சொல்லியிருப்பாரா கேளுபா. மனுஷனுக்கு நாணயம் வேணும்பா. அப்பத்தான் ஒருத்தன் இல்லனா ஒருத்தன் உதவிசெய்வான்.”சாமுவேல் பேசிக்கொண் டேயிருந்தார். வாலிபனின் மாமனார் தலை குணிந்துவாறு இருந்தார்.
ஸ்டான்லி வாசலுக்கு வந்தான். சாமுவேலின் தந்தை வலக்கையில் நீண்ட தடியை வைத்திருந்தார். அவர் வீட்டின் வெளியே ச்சேரில் உட்கார்ந்து கொண்டு, உள்ளே பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தார். ஸ்டான்லியைப் பார்த்தும் “வாபா ஒக்காரு”என்று சொல்லிவிட்டு உள்ளே பேசும் பேச்சை கவனிப்பதில் முழ்கிப்போனார்.
சாமுவேல் “யாருபா தம்பியா வந்திருக்கான்? உள்ள வரச்சொல்லு”
ஸ்டான்லி உள்ளே சென்று சாமுவேலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். எதிர்த்திசையில் இருப்பவர்களுக்கு சாமுவேல் ஏன் இவ்வளவு பேசுகிறார் என்று மனம் கசந்தாலும், என்னவாவது நடக்கட்டும் ஒரு வழியாகக் கணக்கு முடிந்தால் நல்லது. என்பதற்காக தலைவிதியே என கேட்டுக்கொண்டிருந்தனர்.
இப்போது ஏனோ? சாமுவேலின் பேச்சு கடந்தக் காலத்தையும் தொட்டுக்கொண்டு வந்தது. “நான் பத்தாவது படிச்சிட்டு வீட்டுக்கு வரச்சொல்ல இந்தச் சேரியில முப்பது குடும்பம் இருந்தது. இன்னக்கி நூற்று இருபது குடும்பம் இருக்கிறது. இருபது வருஷத்தில ஒரு பயலாண்ட ஒரு பைசா கடன் வாங்கினது இல்ல. தப்பித்தவறி வெளியில எங்கனா வாங்கினாலும் சொன்ன நேரத்துலக் கொண்டுபோய் குடுத்துட்டு வருவேன்” பேச்சில் அவரின் தன்னம்பிக்கையும், பெருமையும் கலந்திருந்தது.
ஸ்டான்லிக்கு, உட்கார்ந்திருப்பவர்கள் யாரென்று தெரியவில்லை. கண்டிப்பாக கடனாளிகள் என்பதாக ஊகித்தான். பள்ளூரில் ஒருவர் பெருந்தொகையை வாங்கிவிட்டு இன்னும் தரவில்லை. நீயும் வாப்பா போய் கேட்டுவரலாம் என்று ஸ்டான்லியை இரண்டுமுறை சாமுவேல் அழைத்தார். அதனால் நிச்சயம் அவர்களாகத்தான் இருக்கவேண்டும். சற்று நேரத்தில் அவர்கள்தான் என்பது தெரிந்துவிட்டது. இருந்தாலும் எவ்வளவுக் கடன் என்னக் கொடுத்தார், என்ன வாங்கியிருக்கிறார்கள். எந்த விவரமும் தெரியவில்லை. ஸ்டான்லி ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருதான்.
சாமுவேல் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரமாட்டாரோ? கணக்கு முடியுமோ? என்ற மன அலைக்கழிப்பிலிருந்த பெண் ஸ்டான்லி வந்து உட்கார்ந்ததும் நம்பிக்கை வந்தவளாய் “ எப்பா நாங்க நெலம தவறிட்டோம் பயிரும் எங்களை அடிக்கடி மோசம் போக்கிடுச்சி. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கணக்க முடிச்சி உடுங்கப்பா” ஸ்டான்லியிடம் கோரிக்கையை வைக்கும் விதமாக, சாமுவேலுக்கும் படும்படியாகச் சொன்னாள்.
சாமுவேல் துண்டு சீட்டில் குறிப்பு எழுதிவிட்டு “தம்பி அசல் நாற்பதாயிரம் , வட்டி முப்பதாயிரம் மொத்தம் எழுபதாயிரம் ஆகுது. நீ இவ்வளவு தூரம் கேட்பதால ஐயாயிரம் தள்ளிடுறேன் அறுபத்தி ஐந்தாயிரம் குடுத்துட்டு உங்க பத்திரத்தை வாங்கிம்போங்க.”
ஸ்டான்லி வெளியூரில் இருப்பதால் சாமுவேலின் இந்த அவதாரத்தை இதுவரைப் பார்த்ததில்லை. தான் இருக்கும் நகரத்தில் பலரிடம் வட்டிக்கு வாங்கியிருந்தான். அப்போதெல்லாம் “சே, என்ன பொழப்பு கடன் வாங்குறவன் தன் மானத்தை அடிக்கடி புதைத்துவிடவேண்டி இருக்கிறதே. காலம் முழக்க ஏதாவது ஒரு பண முதலைகளிடம் கையேந்த வேண்டியதுதானா? ஏன் கடன் வாங்காமல் வாழமுடியாதா? இழப்பின் உத்தி எங்கேத் தொடங்குகிறது? வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சிக்கனம், (கஞ்சத்தனமல்ல) சேமிப்பு, பணம் கைக்கு வந்தபிறகு தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளவேண்டிய ஒன்றை, பெருமைக்காக எப்படியாவது முட்டிமோதி முன்கூட்டியே வாங்கி தனக்கோ, வீட்டுக்கோ அலங்காரப் பொருளாக வைத்துக்கொள்ளும் ஆசை, இவைகளால்தான் கடனில் நுழைகின்ற சூழலை ஏற்படுத்துகின்றதா? இல்லை வழிவழியாகவே தன் குடும்பப் பொருளாதாரத்தில் குறைவு இருப்பதாலும், சமூகம் பெருமைகளில் தம்மை முழுமையாக இணைத்துக் கொள்வதாலும்தானா? உறவுகளும் அதைத் தள்ளிவைக்க முடியாமல் கையில் எடுத்து கொண்டு கொண்டாடுவதால்தான், நாம் கடனில் தள்ளப்படுகிறோமா? என தனக்குள்ளாகவே கேள்விகள் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
சாமுவேல் பேச்சு, ஒரு தேர்ந்த வட்டிக்காரனின் வார்த்தைகள்போல் இருந்தது. “ என் தம்பி தான். வேலை செய்யிற ஆபீஸராண்ட, இவன்தான் பணத்த வாங்கிக்கொடுத்தான்.” என்று எதிர்தரப்பிற்குச் சொல்லி, ஸ்டான்லியை அறிமுகப்படுத்தினார்.
அக்கணத்திலிருந்து சாமுவேலுக்கும், எதிர் வரிசைக்குமாக ஸ்டான்லி சம நிலையைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது.
சாமுவேல் பெருந்தொகையில் ஐயாயிரம் மட்டும் தள்ளுவதாகச் சொன்னதும் வாலிபனின் முகம் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்தது. சற்று அமைதியாய் இருந்ததால் வாலிபனின் மாமனார் பேசினார். “ சார், அப்ப ஏகாம்பரம் எங்களுக்குத் தரவேண்டியக் காசு எப்படிங்க”
உடனே சாமுவேலிடம் முன்னின்று வாங்கிக்கொடுத்த ஏகாம்பரம் “யோ, மொதலியாரே நீ சொம்மா இருக்கமாட்டே. இடையில, இடையில கொழப்பிங்கிறியே. மொதல்ல உங்கக்கணக்க முடிச்சிக்கிணு போய்யா. என் கணக்க நான் பாத்துக்கிறேன்.”
ஸ்டான்லிக்கு குழப்பமாக இருந்தது. பேச்சு ஒன்றும் பிடிபடவில்லை. சாமுவேலை நிறுத்தி “இந்தக் கணக்கின் வழிமுறை என்ன” என்றான்.
“பின்னால இருக்கிறாரே ஏகாம்பரம், அவர்தான் எனக்குப் பழக்கம். அவரு மூலமாதான் மொதலியார் தன்னுடைய நிலப் பத்திரத்தின் மீது நாற்பதாயிரம் வாங்கினாரு. பணம் வாங்கிம்போனப்ப ஏகாம்பரம், மொதலியாராண்ட பத்தாயிரம் கடன்வாங்கிட்டு இருக்கிறார். அந்தப் பணத்துக்கு ஏகாம்பரம் வட்டியும் குடுக்கல. அதத்தான் மொதலியார் இப்பக்கேட்கிறார்.” என்று சாமுவேல் சொன்னார்.
முதலியார் மனைவி “ஏம்பா, அந்தாளு ஒரு ரெண்டாங்கெட்டாம்பா. யாரு என்ன சொல்றாங்களோ அப்பிடியே தலைய ஆட்டிக்குவாரு. அந்த பத்தாயிரத்துக்கும சேத்துதான் நாங்க வட்டிகட்டிக்கிணு வந்தோம். அதுக்கப்புறம் தான் எங்களாலயும் வட்டிக் கட்டமுடியல.”
ஸ்டான்லி ஏகாம்பரத்தைப் பார்த்தான். “மொதலியார் கேட்பது நியாந்தானேய்யா, உனக்கு பணம் வேணும்னா, உன்னுடையப் பொறுப்பிலேயே கடன் கொடுக்கிறவங்களாண்ட வாங்கியிருக்கணும். அதவிட்டு, அவர் ஏதோ அவசரத்துக்கு நெலத்த வச்சி பணம் வாங்குனா. எந்த அத்தாட்சியும் இல்லாம ரொம்ப ஈசியா அவராண்ட வாங்கியிருக்கிற. சரி அப்படியே பழ்க்க தோஷத்துல வாங்கியிருந்தாலும் மாசா மாசம் வட்டியாவது குடுத்திருக்கணும். இதுவரைக்கும். அப்படி எதையுமே செய்யாம, ரொம்பச் சரியா நடந்துக்கிறவராட்டம் பேசுற. சொந்தக் கோழியா இருந்தா, தோலுமுட்ட உடுவீங்களா. இப்பிடி இருந்தா எவன் நம்மள மதிப்பான்.”
ஸ்டான்லியை விட பல மடங்கு வயதில் மூத்தவராய் ஏகாம்பரம் இருந்தாலும் “அணா, என் நெலமையும் தவறிப்போச்சி. விபாரத்துல எறங்கி ரெண்டு லட்சரூபாய் தோத்துட்டேன்ணா.” சற்று அழுவதுபோல் சொன்னார். ஆனால், கனப்பொழுதில் முகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
சாமுவேல், இந்த நேரம் ஏகாம்பரத்தைக் கேட்பதில் பைசாவுக்கும் பிரியோஜனம் இல்லை என்று நன்றாகத்தெரிந்து வைத்திருந்தார்போல. ஸ்டான்லியின் கவனத்தைத் திசைத் திருப்ப வாலிபனிடம் “ சொல்லு தம்பி எப்படிச் செய்யப்போற” என்று நிறுத்தினார்.
வாலிபன் “அணா, வட்டியக்கொஞ்சம் கொறச்சி சொல்லுங்கணா. இப்ப இருக்கிற நெலமைக்கு அவ்வளவு கொடுக்கமுடியாதுண்ணா. கொஞ்சம் தயவு பண்ணுங்கணா.”
அவர்கள் பேச்சை கவனித்தாலும், ஸ்டான்லிக்கு பள்ளூர் முதலியார்கள் என்றால் நிலபுலன்களில், விவசாயத்தில் பேர்போனவர்களாச்சே என்ற சிந்தனையிலேயே முழ்கியிருந்தான்.
சாமுவேல் “தம்பி, என்ன சொல்ற நீ. நான் சொல்ற வட்டித்தொகையைப் பார்த்து பிரமிப்பதுபோல, அதற்கு இடையில் கடந்துபோயிருக்கும் ஆறு வருஷங்களையும், அதற்குள் அடங்கியிருக்கும் மாசங்களையும் கணக்கிட்டுப்பார். உனக்குக் குடுத்த தேதியில், அந்தத்தொகையோடு பத்தாயிரம் போட்டு ஒரு பிளாட் வாங்கிவிட்டிருந்தேன்னா. இன்னக்கித் தேதியில மூணு மடங்கு பணமாயிருக்கும். உனக்குக் குடுத்துட்டு நடையா நடந்ததுதான் மிச்சம்.”
எதிரில் இருந்த பெரியவர், “சார், நீங்க சொல்றதுலாம் வாஸ்த்தவம்தான். நான் தப்பே சொல்லல. என் குடும்பத்தில பையன் சரியில்ல. அவன் தறுதலையா இருக்கிறான். இருந்த நெலங்களில் கொஞ்சம் வித்துதான் ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணேன். மீதிப்பணத்தையும் பையன் புடிங்கிக்கினான். சரி பையன் ஏதாவது பொழைக்க வழி செய்வான்னுப் பாத்தா அதையும் அழிச்சிட்டான். இப்ப நாங்க வெறுங் கையா நிக்கிறோம். இருக்கிற நெலத்தில பயிர்செய்தாலும் முன்னமாதிரி வௌச்சல் பார்க்கமுடியல. லாபமும் கெடைக்கல. யாரு பெத்தப் புள்ளயோ, இவரு வந்துதான் என் தலைச் சொமையை கொஞ்சங் கொஞ்சமா எறக்கி வைக்கிறாரு.”
பின்னாலிருந்த ஏகாம்பரம் “அணா, உங்க தம்பியும் வந்திருக்காரு, இப்பவே கையோட ஏதோப் பாத்து முடிச்சிவுடுங்கணா.”
வெளியில் உட்கார்ந்திருந்த சாமுவேலின் தந்தை “சாமுவேலு பாத்து செய்தனுப்புபா, பாவம் பொழுதோட ஊட்டுக்கு போகட்டும்.”
சாமுவேல் சற்று ஏமாந்து என்னப்பா என்று கேட்டுவிட்டால்போதும் வட்டியும் வாணாம், ஒண்ணியும் வாணாம் அசலு வாங்கிணு பத்திரத்தைக் குடுத்தனுப்புபானு’ சொல்லி விடுவார் என்பது தெரிந்துதான், சாமுவேலின் தந்தை சொன்னதைக் கவனிக்காதது போல் தொடர்ந்து பேசினார்.
கிறிஸ்தவன் வட்டிக்கு கொடுக்கக்கூடாது என்பது சாமுவேல் தந்தையின் பூரணமான நம்பிக்கை. எண்பது வயதை முடித்திருந்தாலும் இதுவரையில் வட்டிக்கு என்று யாருக்கும் கொடுத்ததில்லை. தொடர்ந்து பொருளாதார முடக்கம், எஜமானைப்போல அவரின் விருப்பத்தை எப்போதும் முடக்கியே வைத்திருக்கும் என்பது வேறுவிஷயம். இங்கே ஒரு உண்மையைச் சொல்லவேண்டும், பொதுவாக தந்தைக்கு நேர்மாறான விஷயங்களில் அதிகமான ஆண்பிள்ளைகள் ஆர்வமாக இருக்கிறார்கள். சில ஆண்பிள்ளைகளைத் தவிர மற்றவர்கள் தகப்பனுக்கு நேர்மாறான விஷயங்களில் தன் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள். அப்படியானால் தகப்பன் ஆண் பிள்ளைகள் பேசத்தொடங்கிய காலத்திலிருந்து, குறைந்த பட்ஷம் பதிமூன்று வருஷமாவது தங்கள் பிள்ளைகளை என்னவாக்க விரும்புகிறார்களோ.அந்த விருப்பங்கள் தங்களுக்கு அறவே இல்லை என்பதாக காட்டிக்கொண்டால் போதும். அதற்கு மேல் எந்த அறிவுரையும் தேவையே இல்லை. தானாக தந்தைகள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள். கிட்டத்தட்ட சாமுவேல் இந்நிலையைத்தான் இயல்பாகப் பெற்றிருந்தார்.
பாட்டனிலிருந்து ஆரம்பித்த மதம்தான் இன்றும் சாமுவேல் மிகவும் பயபக்தியுடன் பேணிவருகிறார். வட்டிக்கு கொடுக்கக்கூடாது என்பது அவருக்குத் தெரியாததல்ல. சிக்கனம் தான் அவர் கையாளும் பிரதானப் பண்பு. மற்றவருக்கு உதவும் குணம் இல்லாமல் போகவில்லை. இளமையில் வாட்டி எடுத்த பஞ்சம், அக்காலத்தில் பணம் வைத்திருந்தவர்கள். நிராகரித்த நிகழ்வு, குட்டியும், குசுமான்களுமாக இருந்த குடும்பம். பெரியவராய் பிறந்ததால் அவர்மீது விழுந்த பாரம். இவைகள்தான் அவர் இயல்பை மாற்றிவிட்டது. அரசாங்க உத்தியோகம் கிடைத்த பிறகு இப்படி சிறு சிறுத்தொகையாகச் சேர்த்து. தன்னை நாடி வருவோருக்கு கொடுத்தார். இன்று ஓரளவு எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்திருக்கிறது.
சாமுவேல் வாரம் தவராது ஆலயத்திற்கு போகிறவர்தான். பிறகு எப்படி வட்டிக்கு விடுகிறார் என்று கேட்கமுடியாது. ஏனென்றால் ஒரு சமயம் பிரசங்கம் செய்த ஆயர், ஏசுவின் உவமைகளைச் செய்தியாகச் சொன்னார். அச்செய்தி இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சாமுவேல் அந்தச் செய்திக்குப் பிறகுதான் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வட்டிக்குக் கொடுத்தார். ‘எஜமான் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் காசுகளைப் பிரித்து கொடுத்துச் செல்கிறார். திரும்பிவந்து அவரவரைக் கேட்டபோது, ஒவ்வொருவருனும் தனக்குத்தந்த பணத்திற்கு அதிகமாகத் திருப்பித்தருகிறார்கள். ஒரு காசு வாங்கியவன் மட்டும் மண்ணில் புதைத்து வைக்கிறான். தன் எஜமான் அவனைக் கேட்கிறபோது, உங்கள் கடினமான இருதயத்தப் பற்றித்தெரியும் அதனால்தான் மண்ணில் புதைத்து வைத்தேன் என்று தனக்குத்தந்த ஒரு காசைத் திருப்பித்தருகிறான். எஜமானுக்கு கோபம்வந்து அற்ப சோம்பேறியே. இதைக் காசுக்காரரிடத்தில் கொடுத்திருந்தால்கூட இரண்டு மூன்று பணமாக வந்திருக்குமே’ என்று அழுத்திச்சொன்னார். அதைக் கிறிஸ்துவும் நியாயம் என்கிறவிதமாக உவமாணமாக சொல்லி இருப்பதுதான் சாமுவேலுக்கு மகிழ்ச்சியான விஷயம். அந்நாளில் இருந்து தனக்கென்று ஒரு திட்டம் அதிகமான வட்டிக்குக்கொடுக்கக்கூடாது, அவர்கள் மனம்நோகும்படி வாங்கக்கூடாது. தன்னை நாடி வருகின்றவர்களுக்கு மட்டுமே உதவுவது என்று தொடர்கிறது வட்டிக்கடை.
ஸ்டான்லி ஒரு முறை சாமுவேலைக் கேட்டுருக்கிறான் “ வட்டிக்குக் கொடுக்கிறது வேணாம், வேற ஏதாவது கூட செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறான்.
“நீங்கள் எல்லாரும், நான் என்னமோ அநியாய வட்டி வாங்கிறதா நினைக்கிறீர்கள். என்னாண்ட வாங்குற யாராவது அநியாய வட்டின்னு சொல்லட்டும் நான் விட்டுடுறேன். சரி, உன் பேச்சு பிரகாரம் பார்த்தாலும் எந்தக் கிறிஸ்தவன் அதிக வட்டி தரும் பேங்கை தேடிப்போகாம இருக்கிறான். அதிக வட்டிக் கிடைக்கிறதென்றால் விழுந்தடிச்சி தனியார் வங்கிக்கு ஓடுவதை நீ கேள்விப்படவில்லையா? இன்னுங்கூட ஒண்ணு கேக்கிறேன் எந்தத் துறையில் இருக்கிறவன் தனக்குக் கிடைக்கும் ஊதியம் போதும்னு நினைக்கிறான். அவரவர் பகுதிவாய்ப்பாக சம்பாதிக்வில்லையா?
நான் என்னை நம்பி வருகிறவர்களுக்கு கொடுக்கிறேன். கிராமத்தில் சிலர் தர்ம சங்கடமான நேரங்களில் என்னை அனுகுகிறார்கள். வைத்துக்கொண்டு கொடுக்காமல் இருக்க என்னால் முடியாது. இதை உதவியாகத்தான் செய்கிறேன். சிலர் இதில் என்னை ஏமாற்றியும் இருக்கிறார்கள். அதற்காக ஆட்களை கூட்டிக் கொண்டு போவதோ, மிரட்டுவதோ செய்வதில்லை. சில நேரம் கொஞ்சம் கடிந்து கொள்வேன். அதிலும் கொடுக்காதவர்களை விட்டுவிடுவேன். கடவுள் பார்த்துக்கொள்வார் என்பது என் முடிவு” என்று சாமுவேல் சொல்லும் நியமான வாதங்களை மனதில் நிழலாடவிட்டபடி ஸ்டான்லி உட்கார்ந்திருந்தான்.
திடிரென்று எதிர் முனையில் இருந்த பெண்மணி “யாம்பா, நாங்களும் உங்களப்போலதாம்பா. விழுந்தாலும் எழுந்தாலும் நாங்கதான் பாத்துக்கணும். எதோ மகராசனாட்டம் இந்தப்புள்ள வந்துதான் என் குடிய, மானம் போகாமக் காப்பாத்துது. இன்னுங்கொஞ்சம் வட்டியக் கொறைச்சிங்கன்னா. உங்க புள்ள குட்டிங்களுக்குப் புன்னியமாப்போகும்.” இப்போது கையெடுத்து கும்பிடுவதைப்போல் இருகைகளும் குவிந்த வந்தது. இரு முழங்கைகளும் சுருங்கி, நரம்புகள் தெரியும்படியாக இருந்தது. வளையல் எடுக்கும்போது சரியான அளவு இல்லாமலா இருந்திருக்கும். அவள் கண்ணகளில் கண்ணீர் சுரந்து கொட்டியது.
சாமுவேலின் தந்தைக்கு அந்தம்மாவைப் பார்த்ததும் முகம் சுருண்டுவிட்டது. சாமுவேல் வாயிலிருந்து என்ன வருமோ என்று பார்த்துக்கொண்டிருந்தார். சாமுவேல் “ ஏம்பா பத்தாயிரம் கொறைச்சிக்கோ. அறுபது ஆயிரம் குடுத்துட்டு உன் பத்தரத்தைக் வாங்கிக்கிணுபோயிடு. அதுக்குமேல ஒரு பைசாக் கொறைக்கமாட்டேன். நானும் வாங்கின எடத்தில குடுக்கவேணாமா?” என்று சற்று சத்தமாக குரல் உயர்த்திப் பேசினார்.
வாலிபன் ஏகாம்பரத்தைப்பார்த்து “நீங்க எவ்ளோணாத் தறீங்க என்னாண்ட இருகிற பணத்தையும் போட்டு குடுத்துடுவோம். மீதிய வரும் ஞாயிறு கொண்டாந்து குடுத்துடுவோம்.”
வயிறு பெருத்த ஏகாம்பரம் “நான் எதுவும்காசு வெச்சில்லபா. நீங்க வெச்சிங்கீறத வச்சி முடிச்சிக்கிங்கோபா. என் கணக்கை நான் வந்து பார்த்துக்கிறேன்.”
ஸ்டான்லி சற்றுக் கோபமாக “யோ, ஏகாம்பரம் நீ தனியா வாங்கினியே அந்தப்பணத்தக் குடுக்கச்சொல்லல. மொதலியாராண்ட இடையில கைமாத்தா வாங்கினியே பத்தாயிரம், அதத்தான் கேக்குறாங்க புரியுதா?”
“அண்ணா, எனக்கு பணம் வர இன்னும் இரண்டு மாசம் ஆகும்ணா. வந்ததும் செட்டில் பண்ணிடுரேன்ணா. மொதல் இவுங்க கணக்க முடிச்சி அனுப்புங்கணா. ஒரு நிமிஷம் இருங்கணா. ” என்று வாலிபனை வெளியில் அழைத்துச் சென்றான்.
சற்று நேரங்கழித்து மீண்டும் உள்ளே வந்தார்கள். இப்போது ஏகாம்பரம் ஒரு தீர்க்கமான முடிவைப் பேசிவந்தவர்கள்போல் “ தம்பி நீ பேச, அவர் பேச இழுத்துக்கினேப்போகும். உன்னால எவ்வளவுக் குடுக்கமுடியும்னு சொல்லு. அண்ணங்க ரெண்டுபேரும் இருக்கச்சொல்லவே முடிச்சிகினு போயிடலாம். முடிவா என்னதான் குடுக்கமுடியும்னு சொல்லு” என்று வாலிபனைத் தூண்டினான்.
வாலிபன் “அணா, அசல் நாற்பதாயிரம், வட்டி பத்தாயிரம் மொத்தம் ஐம்பதாயிரம் குடுத்திடுரேன்ணா. எங்க நெலமையக் கொஞ்சம் பாருங்கணா. போனவாரந்தான் ஒரு கடனை அடச்சிட்டு வந்தேன். இந்தக் கடனை அடச்சிட்டு, இன்னொரு தலைபோரக்கடனை அடைக்கனும். நான் சம்பாதிக்கிறது எங்க வீட்டுக்குக்கூட குடுக்கலணா. இங்கதான்ணா போடுறேன்” கஷ்டப்பட்டு உழைக்கிறப் பணம் நமக்கு எந்தப்பயன் பாடும் இல்லாமல் இப்படி போகிறதே என்ற வருத்தம் அவன் இதயத்தை பிழிகிறதுபோல கண்கள் கலங்கி கண்ணீர்க் கொட்டியது. வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. கரகரத்துப்போசினான்.
சாமுவேலின் தந்தை எழுந்துக்கொண்டார். “சாமுவேலு, முடிச்சிவுடுபா. அந்தப்புள்ளையப் பாருபா. உடுபா போகட்டும்.”
ஸ்டான்லிக்கும் வாலிபப்பையன் இவ்வளவு கெஞ்சுகிறானே என்று மனம் பதைத்தது. சாமுவேலை மீறி முந்திக்கொண்டு சொல்லத் தயங்கினான். இருந்தாலும் ஒரு சாக்காகத் தான் எவ்வளவு பணம் வெச்சிங்கிறே. எடுத்து வையிபா” என்று சற்றுக் குரல்கொடுத்து கேட்டான்.
சாமுவேல் “ஏம்பா இவ்வளவு கொறைச்சா எப்படி. நானும் வாங்கின எடத்துல திருப்பித்தர வேண்டாமா? சாமுவேலின் பார்வை இப்போது முதலியாரின் பக்கம் போனது“ மோலியாரே, ஆறு வருஷமா இழுக்கடிச்சது இதுக்குத்தானா? இவ்ளோ காலம் இழுக்டிச்சியே நானும் ஆவேசப்பட்டு நாலுபேரக் கூட்டிக்கினு வந்திருந்தா பொம்பளப்புள்ளைங்க இருக்கிற எட்ததுல நல்லா இருந்திருக்குமா? இந்தத் தம்பி வரலனா இன்னும் எத்தனை வருஷமோ. மனுஷனுக்கு வாங்குனத திருப்பிக்குடுக்கனும்னு மனசுவேணும் மோலியாரே. சரி... சரி குடுத்துட்டுப்போங்க. மீதிப்பணத்தை எடுத்தாந்து குடுத்துட்டு பத்திரத்தை வாங்கிம்போங்க.”
வாலிபன் உள் பாக்கட்டிலிருந்து ஆயிரம், ஐநூறு கலந்தநோட்டுகளை எடுத்தான். பணம் மடித்து பச்சைநிற ரப்பர் பேண்ட் போட்டிருந்தது. சாமுவேல் வாங்கி ஸ்டான்லியிடம் கொடுத்தார். ஸ்டான்லி எண்ணிப் பார்த்து இருபத்தைந்தாயிரம் இருக்கிறதென்று சொல்லி மீண்டும் ரப்பர் பேண்ட்போட்டு சாமுவேலின் டீப்பாய் மீது வைத்தான். எதிரில் இருந்தவர்களுக்கு இப்போதுதான்.சற்று நிம்மதி வந்தது.
வாலிபன் “ரொம்ப நன்றின்ணா”. வரும் ஞாயிறு வந்து மீதியக் குடுத்திடுறோம்.” என்று கிளம்பினார்கள்.
சாமுவேலின் முலாம் பூசப்பட்ட கண்ணாடி மின்னியது. இடக் கையின் முழங்கையை டீப்பாய்யின் மீது ஊன்றிக்கொண்டு குறிப்பு எழுதினார்.
ஜே.டேனியல்
No comments:
Post a Comment