Tuesday, April 10, 2012

கோணங்கியின் கதை

       கோணங்கியின் கதை
    
 ( மிக நீண்டநாளாகக் கோணங்கியின் மொழியை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  பலரின் பயமூட்டும் வார்த்தைகளால் அது நிகழவே இல்லை. இப்படிப் பயமூட்டும்போதெல்லாம் எப்படியாவது வாசித்தேப்பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் கூடிக்கொண்டேயிருந்தது. அதன் அடிப்படையில்தான் ‘கொல்லனின் ஆறு பெண்மக்கள்’ தொகுதியை நூலகத்தில் தேடி எடுத்தேன். முதல் இரண்டு கதைகள் வாசிக்க மிக எளிதாக இருந்தது. இவ்வளவு எளிதாக இருக்கிறது. இதைப்போய் வாசிக்க முடியவில்லை என்கிறார்களே? என்று ஆச்சரியப்பட்டேன். அடுத்தக்கதையில் நுழைந்தபோது தான் கோணங்கியின் சுயரூபம் தெரிந்தது. ‘நான்கு பக்கமும் மரணவாசல்’. ‘டிட்...டிட்..டிர்ர்...டிர்ர்.. என கணினியின் பிரிண்டர் தேய்த்துக் கொண்டு எழுத்தைப் பதிவு செய்வதுபோல’ ஒரே வரியை பலமுறை படிக்கவேண்டியதாயிற்று. படிக்கும்போதெல்லாம் ஒன்றும் புரியவில்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எதோ அந்தரத்தில் மிதக்கும் அர்த்தபுஷ்டியான வாக்கியங்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது போன்ற பிரமை. இப்படிச்செய்வது அவருக்கு மிக சுலபமாகக் கைகூடுகிறது என்று நினைக்கிறேன். கோணங்கியின் வாக்கியங்கள் மிக பரந்த வெளியைக் கொடுத்துக்கொண்டேபோகிறது. ஒருபேராவின் போக்கைக் கண்டடைந்துவிட்டால் அதைநோக்கிப் பயணிக்கமுடியும். ஆனால், அந்த பேராவின் போக்கைக் கண்டடைய ஆழ்ந்த சிந்தனையில் பத்துமுறையாவது படிக்கவேண்டியிருக்கிறது. ஒரு வரியைப் படித்து இனம் காணமுடியவில்லை என்றால், அதற்கு முன்பாராவை மீண்டும் வாசிக்கவேண்டியிருக்கிறது. அப்படியும் விளங்கவில்லை என்றால் அதற்குக் கீழ் வரியைத் தேடிப்போகவேண்டியிருக்கிறது. இப்படித்தான் இந்த முணு பக்கக் கதையை மூன்று வாரம் படிக்கவேண்டியிருந்தது. என்னைப் பொறுத்தவரை புரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. வீட்டின் ஆட்டுக்கல்லைத்துறந்து,  கிரைண்டரைத்துறந்து கடை வழியாக வரும்போது பாக்கட் மாவுக்கு மாறிவிட்டோம். ஆறுமாதம் கர்பிணியாக இருக்கும்போதே முன் பணம் கட்டிப் பள்ளியைத் தேடுகிறோம். இந்த அவசர சந்தடியை  படைப்பாளி உள்பட எல்லோரும் இயல்பாக ஏற்கும்போது.   இவ்வளவு நேரத்தைக் குடிக்கும் எழுத்து எந்த விளைவையும் ஏறபடுத்தாமல்கூட போக வாய்ப்பிருக்கிறது. நான் மெனக்கெட்டு, ஒவ்வொரு வரியாய் நமக்குப் புரிந்த பிரகாரம் எழுதிப்வைத்துவிட்டு பிறகு படித்துப்பார்க்கலாம் என்று யோசித்தேன். முதல் ஒரு வாரம் அப்படிச்செய்துப்பார்த்தேன். ஒரு சின்னப்பேராவைப் அவர் சொல்லும் வாசகத்தை ஊகிப்பதற்குள் உச்சந்தலையின் அத்தனை துவாரங்களிலும் ஊசிகளைக்குத்தி மயிரைப்பிடித்து தூக்குவதுபோல் ஒரு குத்தல் ஏற்படுகிறது. இந்த உபாதைகளோடு எந்த வாசகன்தான் படித்து அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். தொடற்சியாக அவர் எழுத்தின் அர்த்தத்தைத் தேடிக்கொண்டு கதையை ஒரே மூச்சில படித்துவிடுகிற வாய்ப்பு நடப்பதில்லை. அதிகப்பட்சம் இருபது நிமிஷம் அவர் வார்த்தைகளின் மூலத்தைத் தேடமுடிகிறது. அதற்குமேலும் அதில் இருந்தால் முடியைப்பிடித்து தூக்குகிறது. (இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்.) கோணங்கியின் இக்கதை என் சிற்றறிவுக்கு எட்டிய விதம் சுலபமான வார்த்தைகளால் அதன் அர்த்தம் மாறாமல் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால், ஒரு இருபத்தியைந்து விழுக்காடு அந்த அர்த்தம் மாறாத வார்த்தைகள்தான்  என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது உண்மை என்றால் நான் செய்துபார்த்த முயற்சிக்குச் சிறு சந்தோசம்.  இது செய்தல் என் தொடற்சியான பணியல்ல.)
                                            
                       கோணங்கியின் கதையை என் இலகுவான நடையில்

                                              சாத்தியமற்ற வாழ்க்கை

எந்த இடங்களிலும் நிறைவானதைக் காணமுடியாமல் ஒதுங்கிக்கொண்டே இருந்தேன். எதுவும் விளங்கவில்லை. அறை மூடி தனிமையில் இருப்பது தற்கொலையைத்தான் தூண்டுகிறது. பிரச்சனைக் கழுத்துவரை நெறிக்கப் படும்போது குரல் வலை ஒடுங்கி காற்றும், ஏன் பீடிப் புகைக்கூட  நெஞ்சுக்குள் இறங்க மறுக்கிறது.

சுவரில் மிரண்டு  ஓடும் பல்லியைப் போல என் மனமும் பதைத்து வெற்று சுவரையேப் பார்த்துக்கொண்டிருந்தது. எதற்காக நிற்கிறோம் எண்பது தெரியாத  சுவராக இருந்தேன். மிகவும் சோர்ந்து சுவரில் சாய்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தேன். சுவரில் மோதி சன்னல் வழியாக வெளியேறும்  புகைச் சற்று நேரத்தில் காற்றில் கலைந்து காணாமல் போகிறது. சுவரின் லேசான வெடிப்பிலிருந்து  கிளம்புகிற எறும்புகளின் வரிசை சின்ன ஏறும்பு, பெரிய எறும்பு, சிறகு முளைத்தது, சிறகு முளைக்காததாகவும்  ‘ஒரு சொல்லில் வருசையாக உயிரெழுத்து அளபெடுப்பதுபோல’ எறும்புகள் அசைந்து அசைந்து நகர்கிறது. இநத  வரிசையில் எந்த எறும்பாக நான் இருக்கிறேன்.

மனித மனங்கள் கல்லுகள் அதை சுலபமாய்  நெருங்க முயைதபடி  தவிப்பும், கதறலுமாய் ஆதங்கப்படுகின்றன. யாரிடத்திலும் என் மனச்சுமையைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை, மரணத்தை அணைத்துக்கொள்ள நினைக்கிறேன்  அதுவும் சாத்தியப்படாத நிலையில் இருக்கிறது. நேர் முகமாகப் பாறைகளில் ஏறிச்செல்ல முடியாது.  மரணம் ஒன்றே தீர்வு எனும்படியான  நினைவுதான் எப்போதும்.

அந்த எண்ணங்களில் இருந்து  விடுபட நினைக்கும்போது நண்பனின் கடந்தகால உருவம் என்னை முத்தமிட்டு,  ஒன்றி,   மேலோங்கிய நட்பின் நினைவுகள் மீட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் அவன் இல்லாதது வேதனை அதிகமானது. வார்த்தைகள் வரவேஇல்லை.  நினைவுகூர்ந்த எல்லாமே வெற்றாய்  இருந்தது.  தட்டுத்தடுமாறி மனம் போனபடி நடந்தேன். எப்போதும் வரும் அமைதியான அலை  கரையைத்தொட்டு இழுத்ததால் சுத்தமான மணல் பாதையைப்போல் மனதில் தெளிவு  பதிந்தது.

பகல் முழுதும் தனக்கு இஷ்டமானபடி நகரங்கள் செய்துகொண்டிருந்தன. நச்சுக்காற்று. முன்னோர்களின் முன்னோர்களைத் தேடி அவர்களின் வழியாக  என் கொடியை தேடிப்பிடிக்க வேண்டிய ஆசை.

எளிதில் கிடைத்தத் தகவல்களில்  அதற்கான ஆதாரங்கள் இல்லை. மேலே மேற்கொண்டு போக  வழி இல்லை.  தெருவில் அனாதையான கழுதைகள், அதன் துக்கங்களை வெளியில் சொல்லமுடியாதபடி சோகம் நிறைந்ததாக இருந்தது. மதிய வெயில் என்னைத் தாக்கியதின் புழுக்கத்தால் உடல் வேர்த்து தண்ணீராகக் கொட்டியது.

வெயில், அதைபோலவே   வாழ்வும். தலையின் கொதிப்புத் தாங்கமுடியாமல் பாதையற்ற நிலையிலும் செடிகளை விலக்கிக்கொண்டு நிழலில் இளைப்பாறினேன்.

 இழப்புகளுக்கிடையில்தொடரும் என் நிகழ்கால வாழ்வை நினைத்துப் பார்க்கிறேன். தனியறையில் சில சன்னல்கள். கம்பிகள். புஸ்தகங்கள்.  18ம் நூற்றாண்டில் வாழ்ந்த கதாப்பாத்திரங்களோடு முழ்கிக்கிடக்கிறேன்.

அக்கதாப் பாத்திரங்களோடு  ஒன்றி தனியாய் பேசுவது  கூச்சப்படவைக்கிறது.

முன்னோர்களின்  வழித்தோன்றளில் ஆதாரமற்றவனாக அறிமுகமானவன் எனக்கு நெறுக்கமானவனாக வந்தான். எந்த ஆதாரத்தையும் எனக்குத்தராமல் போனவன்  அவன் சாயலாய் வந்த இன்னொன்று பேசியது.

நான்,  நீ தேடும்  அவனல்ல. உன்னைப்போலவே மனப்புழுக்கத்துடன் அலைந்த  இன்னொரு மனசாட்சி.

 அந்த மனசாட்சியின் உணர்வின் அனுபவத்தைக் கேட்டபோதுதான்   நண்பன் பேசாமல் நிற்பதற்குக் காரணம் என்று விளங்கியது.

இப்போது எல்லா இடங்களிலும் கருமையான இருளே நிறைந்திருக்கிறது. ஒன்றுமே இல்லாத ( மாயையான) நிலையில்தான் என் முன்னோர்கள் வாழ்வாதாரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

என் உறவினர்கள் சிந்தி உறைந்துபோன ரத்தத்தின் மீது மரங்கள்   வளர்ந்து காடுகளாயின. கறுமையான இருள் சூழ்ந்த இரவில், என் தந்தை பட்ட வேதனையின் சத்தம் கேட்கிறது. மரணமற்று ரகசியங்களைப் பதுக்கியிருக்கும் வாழ்வு. குத்து மதிப்பான தூரத்தில் கரைந்துக் கிடக்கும் உறவு முறையை என்னால் கணக்கிடமுடிகிறது.

அக்காலங்களில் பருவத்திற்கு வராத பெண் மனைவியரை இரவில் புணர்ந்த பதிவுகளைக் கண்டு  ஆழ்ந்து நின்று, அழுது  கல்லாக ஆனேன். காலங்காலமாய் நிற்கும் மலைகளில்,   தாடியுடன் வெகு காலத்தைப் போக்கி தொடர்ந்தது தியானம்.

சிவனின் கைலாயத்திலிருந்து ஸப்த சுரங்களை இசைத்துப் புரண்டு ஓடி வரும் நதியானேன். அகண்ட பெருவெளியில் தனக்கு விருப்பமான படி பாதையை உருவாக்கிச்செல்கிறது நதி. இருளைப் பரப்பிக்கொண்டு இரவுகள் வேகமாக வந்தன. யுகங்களாயின. யுகங்கள்  அதன் வரலாறு கல்லுகளில் பதிவானது. இரக்கமற்ற தன்மையைக் கொண்ட பெண் நதியான என்னுடன்  சேர்ந்து வருவதாக எண்ணுகிறேன்.

அவளுக்குள் இயற்கையாய் அமைந்த பயமையான சிந்தனைப் பிரதானமான இருள் தன்மைக் கொண்டதாக இருக்கிறது.  குறிப்பிட்ட காலத்தில் பிரதானமாய் இருந்தாள். அவள் உடல் புணர்ச்சியைக் காணாமல் இருந்தது. பெரிய பெரிய முலைகளுடன், அந்த முலைகளைக் கொண்டதாலே  எல்லாம் எனக்குக் கீழ் என்ற நினைப்பு. நம்ப முடியாத இடத்தில் பொங்கி வழிகிற பாலாக இருக்கிறாள். சமாதானத்தைப் பேசுகின்ற புறாக்களின் தன்மை கொண்டவள். அவள் மிகுந்த அழகி. பிறர்தொடா முலைகள்  வழியவிடுகிற  கவர்ச்சியினால்  பல காலைப்பொழுதுகள், சில பருவங்களும் போனதே தெரியவில்லை. மீண்டும் இருளடைந்த காடுகள், ஜீவராசிகள், பறவைகள். அனைத்துவிதப் பறவைகளின்  கூட்டுச்சத்தங்கள் தனித்னியாக பதிந்து பதிந்து ஸ்படிக பாறைகள் ஆயின.  நதியின் பறவைகளின் தொடர் வாழ்வு இல்லாமல்  இப்போது அதன் கால்தடங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

நதி வற்றிச் சுருங்கி மணல்வெளியானது. வெறுமையில்  ஆழ்ந்துகிடக்கும் நகரங்கள். நகரங்களில் இடைவெளியில்லாத நிலையில், எந்த இடத்திலும் காங்கிரீட் கட்டிடங்கள்.

அரசு செய்லபாட்டை முழுமையாகச் செயல்படுத்த முடியாதபடி தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆட்சியாளர் இருக்கிறார். அதனுடன் இணைந்து செயல் படுகிறவர்கள்  மிக அபத்தம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

மக்களின்,  காடுகளின், நதியின் வாழ்வு இருளில் முழ்கியிருந்தது. இந்நிலையில்  ஆதாரமற்று  வாழ்வு  நகர்ந்தாலும், ஏதோ ஒரு புள்ளியில் தொடருவதற்காக பருந்தாக  செயல்படவேண்டியிருக்கிறது.

குடி மக்களை இழந்த வீடு இடிந்த சுவர்களைமட்டும்  வைத்திருக்கிறது. முன்னோர்களில்  ஆண்கள், பெண்களை அழித்தார்கள்.

நினைவுகூர்ந்தபோது மனம் கல்லாகி மௌனத்தை விரும்பியது. முன்னோர்கள் அழுதார்கள்.  நிலவின் தெளிந்த அமைதி நிலை.  காலத்தில் மறைந்தது அவள் உருவமா?  அப்படியானால் நிலாவான அவள் எங்கே?

 முறிந்த மரங்களின் நடுவே சிதைந்த நிலாவின் உருவம் வடிக்கும் ஒளிதான் கிடக்கிறது. தனிமை துயரம் அடர்ந்த இருளாய் மங்கி மங்கி சரிந்து செல்லும் பாலைவனப் பாதை. நாலு பக்கமும் மரணவாசல் அசைந்து கொண்டிருக்கிறது.

யார் யாரையோ நினைத்துக்கொண்டேன். எப்போதும் தயாராயிருக்கும் உணர்ச்சியற்ற யோனிகள் அழைத்தன. மனிதன் இல்லாத வெற்றுக் கட்டிடங்களாக வீடுகள். நான்கு பக்கமும் மரணவாசல். முன்னோர்களின் வரலாற்றில் தலைகீழாக உரிக்கப்பட்ட ஆடாகத் தொங்கினேன்.

உயிரற்றப் பொருளாய் முன்னோர்களின் வரலாற்றின்  இருப்பிடத்தில் நானும ஒரு பகுதியானேன்  பயனற்று தொடர்ந்தது. யுகங்களும் பருவங்களும் பனிகைகாலங்களும் மூடி உதிர்ந்தன.

இன்று நான் ஒன்றுமே இல்லாத நிலையில செயல் பட்டுக்கொண்டிருக்கும் சிறு விதை. ஒரு கிரகத்தின் கரண்டறியப்படாத நிலையில் எப்போதும், வெறுமையான நிலையில் இருந்துகொண்டிருக்கிறேன். சுய உணர்வுற்ற என் பிறந்த வெளி.

                                                           ----------------------

   ‘நான்கு பக்கமும் மரணவாசல்’                                         கோணங்கி

எல்லா இடங்களிலும் இருப்பற்று மறைந்து கொண்டிருந்தேன். எதுவும் புலப்படவில்லை. அறையை மூடித் தனிமையில் இருந்தால் தற்கொலைதான். கழுத்தில் இறுகும் வெளுமையில் காற்றோ பீடிப்புகையோ கூட அடைக்கிறது.

சுவரில் நகர்ந்த பல்லியின் மருண்ட கண்களுடன் மனம் பதிந்து நகர்ந்து வெள்ளி வெளியான சுவரில் ஏறியது. சுவரைப் போல் இருந்தேன். தளர்ந்துபோய் சுவரில்  சாய்ந்து பீடி  குடித்துக்கொண்டிருக்கிறேன்.  சுவரை  ஒட்டி  நகரும் பீடிப்புகை ஜன்னலில் நின்று கரைந்தது. சுவர்க் கீறலுக்குள் வெளிப்படும் ஏறும்பு வரிசை. சின்ன எறும்பு பெரிய எறும்பு சிறகு முளைத்தது சிறகு முடிளக்காதது ஆயிரக்கணக்கில் உயிர்த்தொடர் அசைந்து நகர்கிறது. இந்த வரிசையில் எங்கிருக்கிறேன்.

மனங்களின் பாறைகள் உட்புக வழியின்றி முனங்கலும் கதறலுமாய்க் கொதித்திருந்தன. எங்கும் இறக்க முடியவில்லை. எட்டாத உயரத்தில் அமர்ந்திருந்து மரணம். செங்குத்துப் பாறைகளில் ஏறி முன்னே செல்ல வழுக்கும். மரணம் தீவிரத்துடன் எரிந்து கொண்டிருந்தது.

தப்பிசெல்லும் வழியில் நண்பனின் கடந்த கால உரு உயிரில் ஸ்பரிசித்து ஒன்றி வளர்ந்து ஆவியில் கலந்தது. அவன் மௌனம் இறுகலானது. வார்த்தைகள் இறந்து விழுந்தன. எதிர்பார்ப்புகளில் சருகுகள் உதிர்ந்தன. தட்டுத் தடுமாறிக் கால்களை இழுத்து நடந்தேன். மௌனத்தின் ஸ்பரிச அலை இழுத்த பாதை வறண்ட மணல் வெளியாய்ப் புதைந்தது.

கோர நகரங்களின் பிடியில் பக்ல் விரிந்தது கிடந்தது. அமிலமானக் காற்று.  இறந்து கிடந்தவர்களுக்கு அடியில் என் வேர்களைத் தேடும் அலைதல்.

எதிரில் தென்பட்ட நிர்வாணமான நிழல்களுக்கு எந்த முகவிரியும் இல்லை. சாலை பிளந்து கிடந்தது.  தெருவில் அனாதையான கழுதைகள், மௌனமாய் சமைந்த சோகம். மதிய வெயில் என்னை அமிலத்தில் கரைத்துத் திரவமாக்கியது.

வெயில் வெயிலென வாழ்க்கை நெற்றியைச் சுட வேலிச் செடிகளுக்கு நடுவில் கிழித்துச் சென்றது பாதை.

பிளவுக்ளுக்கிடையில் தோன்றும் என் நிகழ்கால வெளி. சில ஜன்னல்கள். கம்பிகள். புஸ்த்தகங்கள். 18ம் நூற்றாண்டுப் பிரேதங்களோடு சிறை வைக்கப்பட்டிருக்கிறேன். 

இருப்பில் உறைந்த பிரேதங்களோடு சிறை தனியே பேசுவது வெட்கமாக இருக்கிறது. 

ஆதிமரத்திலிருந்து நிர்வாணமாக் ஓடிவந்த அந்நியன் என் நெற்றியில் உதடுகளை வைத்து ஸ்பரிசித்தான்.  திரும்பிப் பாராமல் நடந்தவனின் நிகழ் எட்டி நின்று பேசியது.

‘நான் அவனல்ல. உனக்குள் தற்கொலை செய்து கொண்ட சகமனித ஆவி’ என்றது.

ஆவியின் ஸ்பரிசம் நண்பனின் உதடுகளின் வெறுமையை உணர்த்தியது. 

இப்போது தார் பூசிய இருள் எங்கும். சூன்ய வெளிப் பிளந்து என் வேர்கள் எட்டி மண்ணைத் தொடுகிறது.

என் ரத்தத்தின் பாறைக்குள் மரங்களின் அரளிப்பான காடு. கருஞ்சிறகு விரிந்த இரவில் என் தந்தை எலும்புகளின் முனகல்.  ஜீவகோடி ரகஸியங்களின் பாதை. தான் தோன்றியான ஆழத்தில் உறைந்த, கால விந்து எனக்குள் எட்டிப் பாய்கிறது. 

ஆதிப்பெண்ணின் திறவுபடா யோனி திறந்து புணர்ந்த இரவில் லயமடைந்து வடிந்து பாறைகளைய்ச் சமைந்தேன்.மூப்படைந்த மலைகளின் தாடியுடன் காலத்தை எட்டி வளர்ந்தது தியானம்.   

குருமலையில் இடிவிழுந்து  முதல் கல் உருண்டு ஸப்த நதியானேன். 

ஊழிப் பெருவெளியில் பாதை வெட்டிக் கொண்டே நகர்ந்தது. நதி. கருஞ்சிறகு விரிந்த இரவுக்ள் பறந்து வந்தன. யுகங்களாயின. யுகங்கள் உறைந்து கல்லானது. கல்லை மனமாக வடித்த பெண்ணுரு  நதியுடன் நடந்தது. வரும் குரல். 

அவள் தோளில் அமர்ந்த புராதனப் பறவை சிறகு விரித்து இரவாக இருந்தது. காலத்தில் வெட்டிய அவள் ரூபம்.  உடல் கல்லாயிருந்தது. பெரிய பெரிய முலைகளுடன், ஒளிரும் முலைகளின் அண்ணார்ந்த பார்வை, அபாந்தரத்தில் பொங்கிய பால், வெண் புறாக்களின் சடசடப்பு அவள் ரூபவதி. உண்ணாமுலை சுரந்த பாலில் பனித்துளிகளும் பருவங்களும் தோன்றி மறைந்தன. அரளித்த காடுகள் ஜீவராசிகள் பட்சிகள். பட்சிகளின் ஒலித் தொகுதிகள் படிந்து படிந்து ஸ்படிகப் பாறைகள். எசசம் விழுந்த நதிக்கரையில் பறவைகளின் கால் பதிவுகள். 

நதி வற்றிச் சுருங்கி மணல் வெளியானது. வெறுமையில் புதைந்த நகரங்கள். நகரங்களுக்கு மேல் குத்துச்செடியின் நிழலைக்கூடக் காணவில்லை.

இடிந்த கோட்டை மேல் அமர்ந்து ஒரு தனித்த காகம் கரைந்து கொண்டிருந்தது. கருமை பூசிய சிறகுகளோடு காகங்களின் பாலை வெளி.

மலர்களும் வனங்களும் நதியும்  உதிர்ந்த வெளி கருப்பாய்  உறைந்தது. இருளில் மறைந்த கோடுகளில் புள்ளியாய் நகரும் பருந்தின் தீவிர அலைவுகள்.

செடி முளைத்த மதில் சுவர் மட்டும். ஆதிப் பெண்ணுரு ஆதி மரம் பிளந்து மறைந்தது.

நினைவுகளின் பாறைகளுக்குள் உறைந்த மௌனம். மரங்களின் இழுகுரல் நிலவின் உமையான மரணம் மோனம். காலத்தில் மறைந்த அவள் வடிவா? ஆதி நிலா எங்கே?

மூளிமரங்களின் நடுவே சிதைந்த நிலாவின் உரு வடிந்த ஒளி. தினிமையும் சஞ்சலமும் கருக்கிருட்டாய் மங்கி மங்கிச் சரிந்து செல்லும் மணல் பாதை. நாலு பக்கமும் மரணம் அசைந்து கொண்டிருந்தது.

நிழல்கள் என்னை இழுத்துச் சென்றன. வாய் பிளந்த ருட்சத்தின் யோனிகள் அழைத்தன. மதில் சுவரில் காற்றின் ஊளை, நான்கு பக்கமும் மரணவாசல். ஆதி மரத்தில் தலை கீழாக உரிக்கப்பட்ட பிரேதமாகத் தொந்கினேன்.

படிம உயிராய்ச் சுருண்டு மீண்டும் மரத்தில் காய்த்துத் தொங்கும் கனியானேன். வற்றி உறைந்து விதையாய்ச் சுருங்கி உறக்கம்  தொடர்ந்தது. யுகங்களும் பருவங்களும் பனிக்காலங்களும் மூடி உதிர்ந்தன.

இன்று நான் சூன்யத்தில் எரிந்துகொண்டிருக்கும் சிறு விதை. ஒரு கிரகத்தின் வெறுமையுடன் சதாவும் சூன்யத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். பிரக்ஞையற்ற என் பிறந்த வெளி.   
                                             ------------------------------


ஜே. டேனியல்

Thursday, March 29, 2012

சிறுகதை

நன்றி. கீற்று நந்தன்

                             முதல் கல் எறிபவன்                       


இதற்குமுன் எந்தத் திருட்டு வேலைகளிலும் ஈடுபடவில்லை. நேற்று ஒரே நாளில் தொடர்ச்சியாக இரண்டு வீடுகளில் திருடியிருக்கிறாள். யார் மேலோ அவளுக்குக்கோபம் இருந்திருக்கவேண்டும். மேலும், தானே நின்று சாதிக்கவேண்டும் என்று நினைத்திருப்பாள் போல. ஒரு வீட்டில் நாலரை சவரன், இன்னொரு வீட்டில் ஒண்ணரை சவரன் திருடுபோயிருந்தது!. நாலரை சவரன் வீடு மேற்கில் இருக்கிறது. ஒண்ணரை சவரன் வீடு ஒரு தெருத்தள்ளிக் கிழக்கில் இருக்கிறது. சவரன் அளவு வைத்தே யார் சற்று வசதிப் படைத்தவர்கள் என்பது உங்களுக்கேத் தெரியும்.

குறைவான நகை வைத்திருந்தவர் மிகவும் பாவம்தான். காலச் சுழற்சியின் போக்கிற்கேற்ப வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளவேண்டியிருந்தது. இருபத்தியைந்து வருஷத்திற்கு முன்பு ஏரி நிறையத் தண்ணீர் நிரம்பி யிருக்கும்! பக்கத்தில் இரண்டு ஏக்கர் வைத்திருந்தார்; கூடுதலாக நாய்க்கரின் இரண்டு ஏக்கர் கேட்டு பயிர்செய்தார். அம்மா, அப்பா, தம்பி எல்லாம் கூட்டாக யிருந்து விவசாயம் செய்தார்கள். அந்தக்காலமெல்லாம் எப்படித்தான், ஏன்தான் மாறிப்போனதோ!? அதன் பிறகு கூலிவேலைதான். ஏதோ ஒரு ஞானத்தோன்றலாகத்தான், இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கிவந்தார்; இன்று இருபதைக் கடந்திருந்தது. இப்போது அதுதான் குலத்தொழில்; ஒரு வகையில் வாழ்வைத்தள்ளவும் உதவுகிறது. அவ்வப்போது கிராமத்திலும், பக்கத்து ஊர்களிலும் தெரிந்தவர்கள் மரம் விற்பனைக்குச் சொன்னால் ஒரு தொழிலதிபரைப்போல் மனதில் தெம்புவரும். கூலியாட்கள் எப்போதும் அந்தத் திறமைக்கான மரியாதைத் தருவதேயில்லை. அவர் அதைப்பற்றி எப்போதும் கவலைப் பட்டதில்லை. மரத்தை நகரத்திற்கு ஏற்றிச்செல்லும் போதெல்லாம் வழியில் தென்படும் சின்னக் கன்றுகளைப்பார்த்து இது நல்லபடியாக வளரனும் என்று வேண்டுவதுபோல் மனதுருகுவார். நல்ல பெரிய சாலையோர மரங்களைப்பார்த்து இந்தமாதிரிக்கிடைத்தால் பெரிய தொகை தனக்கு மிஞ்சும் என்று பல கற்பனைகளையும் செய்துகொள்வார். கலியாண வயதில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இத்தனைக் காலத்திற்குபிறகும் அந்த நகைகள்தான் சேமிப்பாக இருந்தது. இத்தனைக்கும் அரிசிப்பானையில் இருந்ததை எப்படித்தான் ஷீலா கண்டுபிடித்தாளோ? அவளை, கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நிறையச் செல்லப்பெயர்கள் வைத்து அழைத்தார்கள்.

ஷீலா மேல்நிலையின் இறுதி வகுப்பிற்குள் நுழைகிறாள். சீருடைக்கு, சுடிதார் அளவு கொடுத்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லை. கூடவே, வீட்டில் அணிந்துகொள்ள ஜாக்கட் அளவு கொடுத்தபோதுதான், டைலர் அவளின் கப்பைப் பார்த்து சற்று வாய்ப்பிளந்தான். அடிக்கடி என்ன போன்  கெடக்குது  அம்மா சிலநேரம் தெருவிலே சண்டையிடுவாள்,  அதை பார்க்கும் சிலர், அவள் போக்கை  கண்டிக்கவேண்டும்  என்று சொன்னார்கள். அவர்கள், பெரும்பாலும் தங்களுக்கு இஷ்டமானபடி செல்லப்பெயர் வைத்து அழைத் தவர்கள். அதற்கு கைமாறாக, ஷீலா ஒரு  கிரக்கத்தை ஏற்படுத்தும் சிரிப்பையே பதிலாக விட்டுச்சென்றிருந்தாள். சிலபெண்கள் எப்போதும்போல் கலியாணங் கட்டிக்குடுத்திருந்தா இன்நேரம் நாலஞ்சி பெத்திருக்கும் என்றும் சொல்வார்கள். சற்றுக் குள்ளமாக இருப்பாள். கேலிசெய்கிறளவு குள்ளம் இல்லை. உதட்டில் சாயம் பூசுவதில்லை. பூசினார்போன்றே சிவந்திருக்கும். கண்களின் கருவளையம் தவிர மற்ற இடம் மிக உயர்ந்தரக வெண்ணிற வண்ணம் பூசப்பட்டதுபோல் தூய்மையாய் இருக்கும். காலாண்டுத் தேர்வை முடிக்கிறவரை  அவ்வளவு ஒழுங்காகதான் பள்ளிக்குப் போனாள். 

போலீஸ் ஸ்டேஷனில் அந்தப்பையனைப் பார்த்தபோதுதான், பெண்கள் எந்தக் காலத்திலும் பலகீனமானவர்களாகவே இருக்கிறார்கள் என்று  மனம் முடிவுசெய்தது. அந்தப்பையன் சுவரின் மூலையில் உட்கார்ந்திருந்தான். அப்போதுதான், வெளியிலிருந்து வந்த ஏட்டு, ஏற்கனவே தகவல் தெரிந்திருந்த நிலையில் ‘இந்த நாய்தான் ஆட்டங்காட்டுச்சா?’ என்று தலைமேல் ஒருத் தட்டுத்தட்டினார். அந்தப்பையன் ஒரு சுருளு சுருண்டு பக்கத்து அறையில் நுழைவதுபோல் விழுந்தான். அவனுக்கு சார் சார் வேணாம்சார் என்று சொல்ல வரவில்லை. ‘ஊம்..’ என்று அழத்தொடங்கினான். அவன் தடுமாறியபோது காலில் இருந்த ரப்பர் செருப்பு, தூக்கி எறியப்பட்டு விழுந்தது. மேலும் போலீஸ், அப்படி சுருண்டு விழுந்தற்காக சிறிது வருத்தமும் முகத்தில் காட்டாமல்  “டே, எந்திரிச்சி நில்லுடா” என்ற போதுதான்,  அந்தப் பையனைப் பார்க்கநேர்ந்தது. ஏதேச்சியாக, காற்று சற்றுவேகமாக  அவன் சட்டையில் புகுந்தால்  டூவீலரோ, பஸ்பேரோ தேட வேண்டியதில்லை. அவன் நினைத்த இடத்தில் போய்சேர்ந்துவிடலாம். ஷீலா  ஏன் அவசரப் பட்டாள். குடும்பம், நிர்வாகம், ஏமாற்றுப் பேர்வழி இவர்களைத் தவிர்த்து. பொதுவெளிகளில் பெண்களுக்குச் சாதகமானச் சூழலே இருக்கிறது. இந்தச்சூழல்தான் அவள் ஏமாந்து போவதற்கும் காரணமா.? தெரியவில்லை. 

ஏதோ கோயிலில் தாலி கட்டிவிட்டான் என்றுப்பேசிக்கொண்டார்கள். ஷீலா அரசாங்க விதியின் வயதை இன்னும் பூர்த்தி செய்யாததால்.  காதல் எதிர்ப்பாளர்களுக்கு சற்று தெம்பாகவே  இருந்தது. (அவர்கள் காதலிக் கிறபோது ஜி.ஓ மாறும்) போலீஸ் அவர்களுக்கானதாக, மிக சொர்ப்பத்தொகை யைத்தான் கையகப்படுத்தியது. பெண் உறவினர்கள் சுலபமாக எந்த மனவருத்தமும் இல்லாமல் கொடுத்தார்கள். தனி அறைக்குள் இருந்த ஷீலாவை ஒரு போலீஸ் அழைத்தபோது “இதுக்குள்ள ஆம்பள சுகம் கேட்குதா, போயி அப்பா, அம்மாவுடன் ஓழுங்கா இரு” என்றார். தனக்குள் எழும் காம ஆசையை, ஒரு பெண்ணிடம், இதைவிட  வெளிப்படையாக யாரும் சொல்லமுடியுமா? அதைப் பக்கத்தில் நின்றுகொண்டு உறவினர்கள் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது.  தாலியைக் கழட்டி டேபில் மீது வைக்க சொல்லிவிட்டு, அவள் பெற்றோருடன் அனுப்பினார்கள். அந்தப்பையன் கனவுகள் பயித்தியம் பிடித்து எந்தத்தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறதோ? தாலியை அவன் உறவுகளிடம் ஒப்படைத்து அனுப்பினார்கள். இல்லை துரத்தினார்கள்.  ‘வரண்ட புல்லுகளை முழ்கடித் திருக்கும் கானல் நீர்  நாவரண்ட ஆட்டுக்குட்டியின் ஓட்டத்தை நிறுத்தித் திரும்பச்செய்ததுபோல’ வெறுமையின் பிம்பமாக வெளியேறினான். பெற்றோர்களுடன் ஐக்கியமாகச் செல்லும் காதலர்கள் இனி யாரையும் நினைக்கமாட்டார்களா? 


ஷீலாவை அழைத்துவந்து தலைக்குத் தண்ணீணர் ஊற்றி உடலை மிகக் கவனமாகச் சுத்தப்படுத்தி வீட்டுக்குள் அழைத்தார்கள். ம்னசு.? இதேபோல அவனுக்கும் நடந்திருக்கலாம். ஷீலாவிற்கு பள்ளி வாழ்க்கை முற்றாக உடன்கட்டை ஏறிவிட்டது. அதற்காக  யாரும் பெரிதாக வருத்தப்படவில்லை. அடுப்படியில் தினந்தோறும்,  அவள் புகை இழுக்க ஆரம்பித்தாள். ஆறியபுண்  நிகழ்காலத்தை சந்தோசப் படுத்துவதுபோல் குடும்பம் மீண்டு கொண்டிருந்தது.  ஷீலாவை புதிதாக சிலர் ரசிக்க ஆரம்பித்தார்கள. ஏற்கனவே ரசித்தவர்கள் இன்னும் கூடுதலாக.

இந்த நிலையில்தான் ஊரே கலவரப்பட்டுப்போனது! ஆட்டுக்காரன் மனைவி வீட்டுக்கு வந்தபோதுதான்  சன்னலின் ஓரமாய் இருக்கும் சாவி திண்ணை மீதுக்கிடந்தது!. சற்று பீதியடைந்தவள் வீட்டில் நுழைந்தாள். தண்ணீர் தவலை திறந்த நிலையில்  மூடியுடன், டம்ளர்க் கீழேக்கிடந்தது. இலவச டிவியில் பவர் சுச்சின்  சிகப்பு சிக்னல் எரிந்துகொண்டிருந்து. காலையில் பார்த்த நாடகத்திற் குப்பிறகு டிவியின்  எல்லா சுச்சிகளையும் அணைத்தது,  அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. இன்னும் கூடுதலான சந்தேகம் எழுந்தாலும்  தன் பிள்ளைகளைத்தான் நொந்துக்கொண்டாள். “நாய்களுக்கு எந்தப் பொறுப்பும்  இல்லை. போற எடத்துல அதுங்க மூஞ்சில காரித்துப்புனாத்தான் புத்தி வரும்” என்று புலம்பிக்கொண்டு எல்லாவற்றையும் சரிசெய்தாள். எதேச்சியாக  சனிமூலையில் பார்வை விழுந்த போதுதான்  அதிற்சிக் காத்திருந்தது. எப்போதும் ஓரளவு முதிர்ந்திருந்த மரமாக நாலைந்து அடி உயரத்திற்கு வரிசையாய் நிற்கும் பானை துண்டுபட்டுக் கிடப்பதுபோல்  இறக்கிவைக் கப்பட்டிருந்தது. சில்லரைகள்தான் சொல்லமுடியாது, மற்றபடி எதையும் பிள்ளைகள் தொடமாட்டார்கள். இப்போது அவள் குலை நடுங்கியது. பானையைத் துழாவினாள். கையில் எதுவுமே நிற்கவில்லை. வெளியே வந்து விழுந்துக் கத்தினாள். “கடவுளே உனக்குக் கண்ணில்லையா. என்ன இப்படி மோசம் செய்துட்டாங்களே!; ஒரு ஒரு குண்டுமணியா சேர்த்தேனே எந்தப்பாவியோ மோசம் போக்கிட்டானே. அவன் கைக்கு என்ன வருமோ?”  பெருத்தக் குரலில் கூப்பாடுப்போட்டாள். கூட்டம்  வேகமாகக் கூடியது. சங்கதித் தெரிந்தப்பிறகு  குடும்பத் தலைவன், தலைவி அவரவர் வீட்டுக்கு அவசரமாய்   ஓடினார்கள். பலர் நிம்மதியுடன் ஆசுவாசப்பட்டதுபோல் மீண்டும் அங்கு வந்தார்கள். ஷீலாவீட்டிற்கு, மேற்கு பக்க வீட்டிலிருந்து குடும்பத்தோடு அய்யோப் போச்சே, என் வீட்டிலும் போச்சே, என்று வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு  ஓடிவந்தார்கள். என் வீட்டில இருந்த நாலரை சவரன் காணலியே, நான் என்னப்பண்ணுவேன் நாங்க யாரயும் மோசம் பண்ணலியே. எங்களுக்கு ஏன் இந்தச்சோதனை” கூப்பாடுப்போட்டார்கள்.


கூடியக்கூட்டம் ஆளுக்கு எதேதோ பேசிக்கொண்டார்கள். ஒரு பெரியவர் “ரொம்ப நாளுக்கப்புறம்  இப்பதத்தான் இப்படி நடக்கிறது” என்றார். உடலில் சட்டையில்லை. கழுத்தில் டவலை மாலையாகப் போட்டுக் கொண்டிருக்கிறான். அவன் இப்படிச்சொன்னான், “வெளியூர்கள்ல இருந்து எவனாவது வந்திருப்பானா? பட்டம் பகல்லயே இத்தனை வீடு திருடு போய் இருக்கிறதுன்னா, ராத்திரியில நம்ம நிலமை என்ன? அரசு நிர்வாகம் டவுனுல மட்டும்தானே போலீஸ் ரோந்துப்போடுது.” என்றான்.


பெண்களும், ஆண்களும் அங்கங்கே நடுக்கம் நிறைந்த குரலில் பேசிக்கொண்டார்கள். சில தாய்மார்கள் குழந்தைகளைக் கீழே விடவில்லை. பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. சில பெற்றோர்கள் வாலிபப் பிள்ளைகளை  “டே ராஜா வீட்டுக்கு முன்னாடி, ஒரு குண்டு பல்பாவுது போட்டு உடுங்கடா”


ஊர்த் தலைவர் வந்தார். அவர் காது சற்று பெரியதாய் இருந்தது. அடிக்கடி காற்றில் ஆடும்போல் இருந்தது. அந்த ஊருக்கு எப்போதும் தான் ரட்சகர் என்ற தொனி இருந்தது. “யாரோ ஔவுப் பார்த்துதான் இதைச்செய்திருக்கிறார்கள். காலையில் கேஸ்குடுக்கலாம் கவலப்படாதிங்க. போங்கப் போங்க” என்றான். இதற்குள் லேசான துப்புக்கிடைத்தது. ஆட்டுக்காரன் வீட்டுக்கு மூணாவது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவன், “யாம்பா அந்தப் பொண்ணுதாம்பா, என்னமோ சன்னல்ல கையவுட்டு எடுத்தது. அதன்பிறகு, ரொம்ப நேரம் கழித்துதான் வெளியவந்தது. அவுங்க வீட்டுக்கு எப்பவும்  வந்து போவுந்தானேன்னு,  நானும் வெறுமனே இருந்துவிட்டேன்.”


கைக்கு அடங்காம காற்றில் திரிந்த பலூன், திடீர் மழையில்  காலடிக்கு வந்ததாக’ ஜனங்கள் பேசிப்பேசி ஓய்ந்து வீடுகளுக்கு போகிற நேரம்பார்த்து. இந்தத் தகவல் புத்துயிர் ஊட்டியது. ஷீலாவீட்டின் முன் கூடினார்கள். அதற்கேற்றார்போல் ஷீலாவை வெளியேக் காணவில்லை! சந்தேகம் வலுத்தது.


அங்கங்கே மீண்டும், அவரவர்க்கு பிடித்தமான நபர்களுடன் நாக்கு கோலாட்டம்போட்டது. நிறைய திருட்டுக்கதைகள் வெளியில் வந்தன. பக்கத்து வீடுகளில் “அந்தப்பெண்தான்  எடுத்திருப்பா. அவள் அப்பன் யாரு, அந்தப்பழக்கம் அப்படியே வருது. பதினைந்து வருஷத்துக்கு முன்னால் இந்தமாதிரி நிகழ்வு அடிக்கடி நடக்கும். ஆனா, ஒரு முரைகூட திருடன் பிடிபட்டதேயில்லை. இந்தப்பொருள்தான் போகும்னு கெடையாது. வீட்டுல பெரியப்பெரிய ஒறையில நெல்லு கொட்டிவச்சியிருப்பாங்க வீட்டுக் காரனுக்குத் தெரியாமயே காலியாகி இருக்கும் வீட்டுக்காரன் கொஞ்சம் நாள்கழித்து விதைக்கு எடுக்கவோ, நெல் அவிக்கவோ ஆள் இறங்கும் போதுதான் அதிற்சியாக இருக்கும். அவனுககு வயிறு எரிந்தாலும், அது எப்போதோ  நடந்துவிட்டு இருப்பதால் வெளியிலும் சொல்லமுடியாது. சில வீடுகளில் பணம் போய்விடும். சாட்சிகள் இருக்காது. ஆனால், பலமான நம்பிக்கை அவன் மீதுதான் இருக்கும். துணிந்து சிலர் கேட்டால், மூர்க்கமாக, அசிங்கமான வார்த்தைகளில் பேசி எதிராளியை வாயடைக்கச்செய்வான். எதிராளிக்கு அவனைவிட அசிங்கமான வார்த்தையில் பேசமுடியும். அவன் அதை யோசித்ததேயில்லை. சிலநேரம் யார் சாட்சி நீப்பாத்தியா என்று தைரியமாகக் கேட்பான். மேலும், அந்நாளில் ஒரு தலையாரியைத்தவிர  அரசுப்பணியில் இருப்பது அவன் தகப்பன் மட்டுந்தான். அவன் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்தாலும் ‘உழைப்பவனைப்போல்’ எந்த தேவைக்காகவும் ஏங்கியதேயில்லை. இருந்தாலும் திருடுவான். அதனால், சிலர் அவன் தகப்பனிடம் சொல்லுவதற்கு தயங்குவார்கள்.  அப்போதெல்லாம் எந்தெந்த வீட்டுல என்னப்போகுமோன்னு சொல்லமுடியாது. ஊர் முழுக்க  கதிகலங்கி நிப்பாங்க. திருடியதற்கு முன்நேரமும்,  பின்நாட்களிலும் திருடுகொடுத்தவர்களிடம் நன்றாகப்பேசுவான். சிலசமயம் திருடுபோன வீட்டில் அவனுக்குத் தோதான நபரை ‘வாய்யா திருடியவன் என்னிக்காவது மாட்டாமலா போயிடப்போறான், குடிக்க அழைத்துச்செல்வான்.

அவனுக்குப்பக்கத்து வீட்டில் மிகவும் ஏழ்மையான விதவைப்பெண் இருந்தாள். அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மூத்தப் பெண்ணுக்கு கொஞ்சநாள் முன்தான் கலியாணம் நடந்தது. அவளுக்கு வந்தவன் இவனைவிட அயோக்கியன் கொஞ்சநாளிலேயே அவளை விட்டு ஓடிவிட்டான். அந்தப்பெண் தாய்வீட்டிற்கே வந்துவிட்டாள். ‘கத்திரி வெயில் வீட்டின்மேல் படுத்திருந்து, இரவில் பேயாக அழுத்த வரும் என்பதற்காக’ அந்த இளம்பெண் வீட்டுவாசலில்தான் படுத்தாள். நல்லத்தூக்கத்தில் அவள் கழுத்தில் இருந்த அரை சவரன் தாலியை அறுத்துக்கொண்டு வந்துவிட்டான். கயிறைக்கூட விடவில்லை. அந்த இரவு சற்றுத் தள்ளி, அவன் வீட்டுத்திண்ணையில் படுத்திருந்திருக்கிறான். இளம்பெண் தன் வீட்டிலேயே அழுது அழுது, விட்டுவிட்டாள். அதனாலேயே அந்தப்பெண் பித்தாகிவிட்டாள் என்று இன்றும் பேசிக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் அக்கிரமம் பண்ணவனாச்சே அவன், அதத்தான் இன்னிக்கி அவள் பொண்ணு செய்யிறா” என்று கதைக்கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

இதற்கிடையில் சிலப்பெண்கள் ஷீலாவீட்டுக்குள் நுழைந்து அவளை வெளியே அழைத்து வந்தார்கள். ‘எனக்கே ஒடம்பு சரியில்லாம படுத்திருக்கிறேன். நான் எடுக்கவில்லை’  என்று சாதித்தாள். அவள் அப்பன் இப்போதெல்லாம் அடிக்கடியான மரணப்படுக்கையில் விழுந்துவிடுகிறான். அனால், மனைவியின் ஓட்டல்சப்ளையர் வருமானத்திலும், தன் மூத்தப் பிள்ளையின் கம்பெனி வருமானத்திலும் பிழைத்துவிடுகிறான். அப்படித்தான் இந்தமுறையும் தேறிவந்திருந்தான் “என் பொண்ணுதான் கெடைச்சாளா. அவதான் எடுக்கலைன்னு சொல்றாளே. போங்கையா” எனக்கத்தினான். மேலும் கத்தத் தெம்பில்லாமல் திண்ணையில் உட்கார்ந்துவிட்டான். ஷீலாவைப் பெண்கள் விடவில்லை. துளைத்துக் கொண்டிருந்தார்கள். ஷீலாவின் துரதிர்ஷ்டம் மேலும் சிலசாட்சிகள் இறுகியது. பாம்பின் காலாய் இருக்கும் எதிர்வீட்டு சின்னப்பையன் “நான் மெத்தமேல இருந்துப்பார்த்தேன், ஷீலா எதையோ அவுங்க வீட்டுப்பின்னாடி பொதைச்சது” என்றான்.

நாலரை சவரத்தான் "மாட்டிக்கிடுச்சிடா குடுமி. சொல்றாளா இல்லியாப் பாருடா. சொல்லலனா ஒண்ணும் பண்ணாதிங்க விட்டுடுங்க. நாம செய்யவேண்டியதச் செய்தா தானா கொண்டாந்து போட்டிடுறா, டே, இங்க வாங்கடா  நீப்போயி பூசாரியக்கூப்டா,  ஒருத்தன் நாலு முட்ட எடுத்தா.  கோழி கூண்டுக்கு வந்துடுச்சாப்பாரு, அதையும் புடிச்சா.” இப்படிச்சொல்லியபோது அவனுக்கு மூச்சு வாங்கியது. இருந்தாலும் எதிர்ப்பட்ட ஒருவனிடம் “ டே, போயி வெத்திலப்பாக்கு, பழம், கற்பூரம் ஒண்ணுவிடாம வாங்கயாடா. ரெண்டுல, ஒண்ணுப்பாத்துடுறேன்” ஆவேசமடைந்தான்.

அந்த ஊருக்கு மரம், செடி, கொடிகளைத் தாண்டி  கேபில் கனைஷன் சுலபமாய் வந்துகொண்டுதான் இருந்தது. சாட்சிகள் இறுகியபோது ஷீலா சற்றுத் தடுமாறினாள். சில பெண்கள் நயமாகப்பேசி அவளிடமிருந்து உண்மை வரவழைத்துவிட்டாள் தன்னுடைய சாமர்த்தியம் மெச்சப்படும் என நினைத்தார்கள். சிலர் எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று புகழ்ந்தார்கள். இதற்கிடையில் கடைக்குப்போனவன் மூச்சிரைக்க ஓடிவந்தான். இன்னொருவன் சேவலைக் கையில் பிடித்திருந்தான். அதுக் கத்த முடியாமல் கழுத்து இறுகியிருந்தது. இறக்கை மட்டும் படபடவென அடித்தது. நீங்கள் ஷீலாவின் நிலமையை நினைத்துப்பார்க்கவேண்டும். சுற்றி இருந்த மக்கள் ஏதோ விபரீதம் ஏற்படப்போகிறது என நினைத்தார்கள்.

தாம்பாளத்தட்டை அவசர அவசரமாய் கழுவி இருப்பார்கள்போல ஈரம் இருந்தது. வெத்திலைப்பாக்கு பழம் வைத்து கற்பூரத்தைக் கொளுத்தினார்கள். கற்பூரம் எரிந்தபோது அதைச்சுற்றி தட்டில் இருந்த ஈரம் தீய்ந்து வரண்டுகொண்டேபோனது. தட்டில் இருந்த முட்டைக்குக் குங்குமம் மஞ்சள் வைத்து எதோ புரியாத வார்த்தைகளைச் சொல்லினார்கள். பிறகு  எடுத்து நாலுபேரிடம் கொடுத்து அவள்வீட்டின் நாலு மூலையிலும் வைக்கச் சொன்னார். ஒருவன் இரண்டு கையையும்குவித்து முட்டையை மிக பயபக்தியுடன் ஷீலா இருக்கும் பக்கமாக எடுத்துச் சென்றான். பலியாடு, வெட்டப்போகிறவன் கத்தியோடு நிற்பதையும், தன் கொம்புகளையும் இறுக்கி இழுத்துப் பிடித்திருப்பவனையும் கழுத்துக்கு மாலைப் போட்டவனையும் மிகப்பொறுமையோடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. ஷீலா தானும் ஆடுதான் என்ற நிலைக்கு வந்தாள். 

நாலரை சவரத்தான் “இன்னும் கொஞ்சநேரத்துல எடுத்தவங்களே கொண்டாந்து போடனும்பாரு.” என்றான். ஷீலாவின் அம்மா வீட்டின் முன் கூட்டத்தைப்பார்த்து மிரண்டு எம்மா என்னடி நடந்துச்சி.  மகளைநோக்கி ஓடினாள். ஊருக்குள் நுழையும்போதே யாரோச் சொல்லி இருக்கிறார்கள். காலையில் ஏழரைமணிக்கு ஓட்டலில் நுழைந்தால் சமயத்தைப்பார்த்து வேலை செய்யவேண்டும். எச்சில் இலை எடுக்கும்போது மட்டும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்  வேலை நடந்ததா என்பது தெரியக்கூடாது. சில கண்கொத்திக் கஷ்டமர்கள் ஏம்மா எச்சில் எலையை எடுத்துட்டு,  நீயே சாப்பாடுப் போடுறியா? என்று மூஞ்சில் அடிப்பார்கள். சிலர் அப்படிக்கேட்க மனசுவராமல் ஒரு மாதிரி அறுவறுப்பாகப் பார்த்துவிட்டால், அதற்காக தேவையே இல்லாமல் லேசான வசீகரம் கலந்த புன்னகையை உதிர்க்க வேண்டியிருக்கும். அப்போது  முன் வரிசையின் ஐந்து பல்லுக்குப் பக்கத்தில் ஓட்டைத்தெரிந்து சற்று அழகைக்கெடுத்தாலும் அதை அவமானமாக நினைக்கமாட்டாள். ஓட்டளுக்கு ஒரே பெண் ஆள் அவள்தான். அந்தக்களைப்பு தீரவில்லை. இப்போது வீட்டின் வாசலுக்கு நேராக வந்து விழுந்துவிட்டாள். உடனே ஷீலா அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.  “எம்மாடி எடுத்திருந்தா கொடுத்துடுமா அவுங்க என்ன என்னமோ செய்யிராங்க”  

கூட்டத்தில் யாரோ ஒருவன் “இவ்வளவு பேருக்கேக்குறாங்க ஏதாவது மூச்சு உடுதாபாரு.  அந்த கோழிய அறுத்து வீட்டச்சுத்தி ரத்தத்தை விடுங்கடா. தானா எடுத்துக்குடுப்பா” 

“போடீப்பாவி. நீ எங்கியோ போறவ. இந்த வீட்டுல இருக்கப்போற  தலபுள்ளை நல்லா வாழனும். போடியம்மா, உனுக்கு புண்ணியமாப்போவுது” ஒரு பெண் கணிந்த குரலில் சொன்னாள். இப்போது ஷீலா வீட்டில் நுழைந்தாள். மூலையில் தரையில் புதைத்துவைத்திருந்ததை கிளறி எடுத்தாள். அவள் பின்னாடியேப்போனவர்கள் “நாலரை சவரன் கெடச்சிடுச்சி” என்றார்கள். ஆட்டுக்காரனும், மனைவியும் ஓடிவந்தார்கள். யம்மா எங்க நகை எங்க என்று கெஞ்சினார்கள். ஷீலாத்திரும்பி வீட்டின் பின்னாடி போனாள். முட்டை வைத்திருந்த பக்கத்தில் கிளறினாள். அந்த நகையும் எடுத்துக்கொடுத்தாள். ஒவ்வொரு நகையும் எடுக்கும்போதும் சிறியவரும், பெரியவர்களும் ஆவலாக அலைமோதி ஓடுகிறார்கள்.  எந்த மனிதனுக்கும் தனக்குப்பிடித் தமானதில் தானே ஆவல் அதிகமாக இருக்கும். ஷீலா தலைகுனிந்து வீட்டில் நுழைந்தாள். இப்போது அவள்கூட யாரும்போகவில்லை. 


திடிரென்று வீட்டின் கூரையில் சொருகியிருந்த தடியை பிடுங்கக்கொண்டு ஓடினான். முறிந்திருந்த கூரையிலிருந்து வைக்கோலும், ஓலையும் கொட்டியது. “தெவிடியா முண்ட, என் மானத்தை வாங்கிட்டியே. நான் எப்பிடி தலைநிமிர்ந்து வாழமுடியும். எனக் கடுமையான வார்த்தைகளால் பேசிக்கொண்டே அடித்தான். அடி விழுகிற சத்தம் குறைவில்லாமல் கேட்கிறது. சங்கிலித் தொடரான வசைமொழி வெளிநின்ற சிலர் காதுக்கு இனிமையாக இருக்கிறது.  

வீட்டில், நகைகளை எடுத்த மண் குழி திறந்திருந்தது. பக்கத்தில், ஜிப்பு பிதுங்கும் படியாக தோல்பை ஒன்று தலைமறைவாக இருந்து. ஷீலா ஏனோ சிறிதும் அழவேயில்லை!.
                                                               --------------
 ஜே.டேனியல்

Saturday, March 24, 2012

சினிமா

                           தமிழ்  சினிமா  ஏமாற்றுகிறது
           திரையரங்குகள்  வாழ்வைக் கற்றுத்தருகிறது.


தமிழகத்தில் முன்னணி இயக்குநர்களின் தமிழ் படங்கள் எப்போதும்போல மக்களின் மூளையை மழுங்கடிக்கும் செய்தியைத்தான் தருகிறது. நேற்று ‘வேட்டை’  என்ற படத்தைப் பார்த்தேன்.  இயக்குநர் லிங்குசாமியின் படம்.  இவர்கள் படத்தை  ஸ்வாரசியமாக  தந்து  விபாரத்தில் வெற்றிபெறவேண்டும் என்றே நினைக்கிறார்கள். முன்னணி இயக்குநர்களுக்கு முற்றிலும் கலையம்சம்  நிறைந்தப்படங்களை எடுக்கத்தெரியும். ஆனால் மக்கள் ரசிக்கமாட்டார்கள் என்று காரணம்காட்டி கலைப் படங்களை எடுக்கபயப் படுகிறார்கள். 

ஒரே ஒரு வருஷம் தமிழகத்தில் வெளியாகின்ற அனைத்துப்படங்களும், முக்கியமாக முன்னணி இயக்குநர்கள் பங்கேற்கவேண்டும்,  மனித வாழ்வின் யதார்த்தம் மீறாமல்  படங்களை வெளியிடட்டும். (உண்மையைப் புரிந்துகொண்டு)  நிச்சயமாக மக்களின்  ரசனை மாறி கலைப்படங்களையும் வெற்றியடையச் செய்வார்கள். புதியவர்கள்  பலர், வாழ்வின் யதார்த்தங்களை மீறாமல் படங்கள் தருகிறார்கள். அதில் சிலர் கலைவெற்றியோடு, விபார லாபமும் அடைகிறார்கள். சிலர், விபார லாபம் இழந்துவிடுகிறார்கள், ஆனால் கலையில் தோற்பதில்லை. இப்படிச் சிலர்தோற்பதற்குக் காரணம் முன்னணி இயக்குநர்கள்  முற்றிலும் வாழ்வின் யதார்த்தம் மீறிய ஏமாற்று வேலையோடு படத்தைத் தருவதால்தான். தகப்பன், செய்வதுமட்டுந்தானே உண்மை என்று பிள்ளைகளுக்கு நம்பக மூட்டப்படுகிறது. முன்னணி இயக்குநர்கள் செய்கிறப் படங்களுக்கு மாறாக, புதியவர்கள் கட்டமைக்கும்  படங்கள் தெரியாமல் எடுக்கிறார்கள் என்ற பிம்பத்தை உண்மைத் தெரியாத மக்கள் மத்தியில்  தோற்றுவித்துவிடுகிறார்கள். இவைகள் எல்லாம் பொய் என்பது சமீபமாக புதியவர்கள் பெற்ற தேசிய விருதுகள் நிறுபிக்கின்றன.

கிளைமாக்ஸில் மாதவனும், ஆர்யாவும் துப்பாக்கியைத் தரையில் சுத்தவிட்டு வில்லன் பக்கமாகத்திரும்பினால் ‘நி காலி’ என்று பிரித்தியேகமான முடிவாக இயக்குநர் வைக்கிறார். இப்படி அபத்தமான ரசனையைத்தான் முன்னணி இயக்குநர்கள் மக்களுக்கு பிரதானமாக வைக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொண்டு வெளியே வந்தேன். என்ன இருந்தாலும், தமிழ்ப்படம் சொல்லித்தராத பல வாழ்வியலை திரையரங்குகள் சொல்லித்தருகிறது.

தகப்பன், தன் மகளிடம் பாசத்தை வெளிக்காட்டச்  சினிமாவிற்கு அழைத்துவந்திருப்பார் போல  சுற்றி நிற்கும் வாலிபர்களின் சிறிதுநேர மன மகிழ்ச்சியின் விளையாட்டிலிருந்து தப்பிக்க அவளை தன் கூடவே நிற்கவைத்திருக்கிறார். அவள் யாரையும் பார்க்க, அவளாகவே அனுமதி எடுத்துக்கொள்கிறாள். அவளை யாராவது பார்த்தால் அவள் தகப்பன்தான் அவனுக்கு உடனே எதிர்ப்பார்வையை வைக்கிறார்.

காதலியை விட்டுவிட்டு, காதலன் நொறுக்குத்தீனி வாங்கிவரச் சென்றவன்  இன்னும்  வரவில்லை. சுவர் ஓரமாக நின்ற காதலி, ககைபேசியையும் கடைவீதிகளையும் பார்த்துக்கொண்டே நிற்கிறாள். இந்த கொஞ்ச நேரத்தில் இவ்வளவு துவண்டு விடுகிறாளே. சனியன் காத்துக்கிடக்கட்டும் என்று வேண்டுமென்றே வீட்டுக்கு காலதாமதமாக  வரப்போகின்ற காலங்களில் எல்லாம் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்.

சதைகளின் தடங்களை இன்னும் காணாத காதல் ஜோடிகள் தங்களைச்சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சொர்க பூமியில் தவழ்ந்து கிடக்கிறார்கள். எல்லாம் மாயை, நாம் இருவர்மட்டுமே நிஜம் என்று திளைக்கும் அப்பாவிகள்.

ரசனை இல்லாதக் கணவனைப்பெற்ற மனைவி, குடும்பப் புழுக்கத்தைத் துறந்து சற்று நிம்மதியைக் கொண்டாடத் தன் பிள்ளைகளைச் சாக்குவைத்து வந்திருக்கிறாள். திரையரங்கு வளாகத்தில் சுதந்திரமாகத்திரியும் பிள்ளைகளை நினைத்து சற்றுநேரம் சந்தோசப்படுகிறாள். அந்தச் சந்தோசம் சடிதியில் மறைந்துப்போகிறது, பிள்ளைகள் கேண்டினில் விற்கும் இருமடங்கு விலையுள்ள தின்பண்டங்களைக்கேட்கும்போது.

எந்தப்பக்கம் திரும்பினாலும் கேட்டுப்போடும் உறவுகளை மீறி ரசிக்கப் பெண்களைக்  கூட்டாக்க முடியாமல் தவிக்கும் வாலிபர்கள். எந்த யுகத்தில் நடக்குமோ, பார்க்கும் பெண்களிடம்  சுதந்திரமாய் பேசுகின்ற நிலமை.பேச்சில் வன்மம் இருந்தால் பாளார் அரைகொடுத்து, எந்த மனஉருத்தலும் இல்லாமல் விலகிக்கொள்ளட்டும். ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுக்கு ஏன் விலகிச்சேல்லவேண்டும் என்ற கேள்வியோடுதான் திரிகிறார்கள் பல வாலிபர்கள்.(பேசுவதே உரசிக்கொள்ளத்தான் என்கிறபோது, நாறும் பன்றியும் ஜாக்கிறதையாகத்தான் இருக்கவேண்டும்)

பத்துவருடத்திற்கு முன் என் கண்முன்னால் வளர்ந்த குழந்தைப்பெண்.  தாய், தகப்பன் இல்லாத இவள், அவள் பாட்டியிடம் வளர்ந்தாள். ஒரு நாள் ஏதோ உதவிக்காக மூதாட்டி என்னை அழைத்தாள். சற்று வளர்ந்திருந்த நிலையிலும் ஒரு அனாசின் மாத்திரை வாங்கமுயாமல் சுருண்டு படுத்துக்கிடந்தாள் அந்த சின்னப்பெண். நல்ல வசதியான உரிமைநிறைந்த சொந்தங்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஒரு ஆண் பிள்ளையைத்தத்தெடுத்து வளர்த்தார்கள். அவளேதான் இன்று திரையரங்கில்  பார்த்தேன், என்ன அழகு. மெழுகுபோன்ற உருண்டையான முகத்தில் கண்ணுக்குத் தெரியாத மூக்குத்தி அணிந் திருந்தாள். அது அவளின் அழகை இன்னும் கூட்டியிருந்தது. பெண்கள் எப்படித்தான் தங்கள் வசீகரத்தைக் கூட்டிக்கொள்கிற சூட்சமங்களைக் கண்டுபிடிக்கிறார்களோ?  நான் அவளைப்பார்த்தேன். குழந்தையாய் இருந்தவளா அது?  என்னை நானேக் கேட்டுக்கொண்டேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். பொதுவெளிகளில் பெண்கள் எவ்வளவு ஒழுக்கமான வர்களாய் தங்களை அடையாளப் படுத்துகிறார்கள். தன் கைப்பேசியை காதருகில் கொண்டுவந்தாள். இதற்குள் அவள்தான் என்று ஊகித்துவிட்டு  சற்று இடம் மாறினேன்.  மீண்டும் திரும்பியபோது புதிதாக இருந்த நீண்ட தாலியை எடுத்து வெளியேவிட்டிருந்தாள். கலியாணம் முடிந்துவிட்தா? நல்ல வாழ்வுதான் அமைஞ்சிருக்கும்போல. நல்லா இருக்கட்டும் என்று  திரையரங்கில் நுழைந்தேன்.  தமிழ்படங்கள் பலநேரம் வெற்றாய் போனாலும்,  திரையரங்கு எப்போதும் வாழ்வுகளைக் கற்றுத்தருகிற இடமாகவே இருக்கிறது.

ஜேடி

Friday, March 23, 2012

கவிதை



 தோற்பது நல்லது  


தோற்றுப்போகிறவர்கள்
எப்போதும் தோற்றுக்கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது

தலைமயிர்
வளர்ந்து கொண்டேயிருக்கிறது
சலூன் நண்பர்
பார்க்கும்போதெல்லாம்
வணக்கம் வைக்கிறார்
கையளிக்க சில வாரங்களை
மௌனமாய் கடத்த வேண்டியிருக்கிறது.

வெக்கையைக்கிளப்பி
தோல் கணவாய்களின் வழியாய்
உடல் கடலுள் தேங்கிய
வற்றா நதியை வெளியேற்றி
நாவரளச்செய்கிறது
இரவு நேரம் 
சன்னலின் வெளிப்புறமாக நின்று
பணம் கையூட்டு கேட்கும் காற்று

தோற்றுப்போகிறவர்கள்
எப்போதும் தோற்றுக்கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது

 விருந்துசெய்கிறவன்
முதல் பந்திக்கு வருந்தி அழைப்பதில்லை
தவறி நுழைந்துவிட்டாலும்
இலைப்போடுகிறவன் வழிக்காட்டுதல்
ஒதுக்குப்புரமாகத்தான் இருக்கிறது.


எப்படி இருக்கக்கூடாதென்று
சின்னப்பையனுக்கு
மாதிரியாக காண்பிக்கப்
பயன்படுத்துகிறார்கள்.

பேசித்தீர்க்கும்  வழக்குக்கு
நடுவராக நியமிக்கப்படுவதேயில்லை.

தங்கள் வசதிக்கு ஒத்துவராத
இருக்கையைப்போல்
பெண்களில்  பலர் அதில் அமர்ந்து பார்க்கக்கூட
மனதற்றவர்களாய் இருகிறார்கள்.

முதியவர்கள் மாத்திரை மருந்திற்கு
நயமான வார்த்தைகளை உதிர்ப்பதேயில்லை.

மீண்டும் மீண்டும்
தோற்றுப்போகிறவர்கள்
தோற்றுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது

ஜே டி






Thursday, March 15, 2012

                                      

    கவிதை நூல்கள்

‘புது எழுத்து’ மனோன்மணி தற்போதையக் காலகட்டத்தில்  முன்னணி என்ற பெயரில்  இருக்கும் சிறுபத்திரிகைகளைவிட, எந்த வகையிலும் தரம் குறையாமல் நல்ல மொழிபெயர்ப்பபுகள், கதைகள், கவிதைகள் என்று சிறந்த முறையில் கடந்தப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனிமனிதனாக ‘புது எழுத்து’ இதழைக் கொண்டுவருகிறார்.

‘புது எழுத்து’ இதழ் மட்டுமல்ல. நல்லப் படைப்புகள் எதுவானாலும், எழுத்தாளர் பிரபலமானவராக இல்லாமல் இருந்தாலும்கூட அதைக் கணக்கில் எடுக்காமல், அவர்கள் எழுத்தின் மீது மட்டும் நம்பிக்கைவைத்துக்  கொண்டுவருகிறார். தற்போது அரசு கவிதைத்தொகுப்பை நிராகரிக்கிற நிலை தொடர்ந்து இருக்கிறது. (கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த நூல்களையுமே அரசு நூலகம் எடுப்பதில்லை. மிகச்சிறந்த கொள்கை. நாடு குட்டிச்சுவர் ஆகிறது என்பதற்கு இதுவும் அடையாளம்) பெரிய இலக்கிய நிறுவனங்களும் போட்ட முதல் எடுக்கமுடியாது என்று பயந்து ஒதுங்கிவிடுகின்றன. அந்த நிலையில்தான் மனோன்மணி ஒரேமுச்சில் தற்போதும் நான்கு படைப்பாளர்களுடையக் கவிதைத்தொகுதியை ‘புது எழுத்து’ வெளியீடாகக் கொண்டுவந்திருக்கிறார். 

நண்பர்கள் சுந்தர், சிவசங்கர்  புது எழுத்து வெளியீட்டின் புத்தகங்களை, என்னிடம் கொடுத்துள்ளார்கள். (நான்கு தொகுதியையும் முழுமையாகப் படித்துவிட்டு எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.)  இதற்கு முன்பு வெளியிட்ட றியாஸ குராணாவின் கவிதைத்தொகுதியின் முகவுரையை, றியாஸின் முகப்புத்தகத்தில்  இலக்கியத்தைக் கொல்பவனின்  சாட்சியம் என்றத் தலைப்பில் படித்தேன். அவர் சொல்லும் சில விஷயம் எனக்கும் ஏற்புடையதாக இருந்தது. மேலும் அதில் குறிப்பிட்ட கவிதையின் எடுத்துக்காட்டுக் கவிதைகளும் பிடித்திருந்தது.  அதனால் புது எழுத்தின் நான்கு கவிதைத் தொகுதியையும் காசு கொடுத்து வாங்கினேன்.

புது எழுத்தை  நான் அறிமுகம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே சிறந்தப் பத்திரிக்கை என்ற விருதை பெற்றிருக்கிறது. இருந்தாலும் என்னிடம் விற்பனைக்கான  புத்தகங்கள் இருப்பதால்  விருப்பமுள்ளவர்கள் முப்பது விழுக்காடு கழிவுவிலையில் (புது எழுத்தின் நூல்கள்)  பெற்றுக்கொள்ள நேரும் என்கிற காரணத்துக்காக இங்கே பதிவிடுகிறேன். முப்பது விழுக்காடு தள்ளுபடி என்றவுடன் புத்தகத்தில் விஷயம் இருக்காது என்று நினைக்கவேண்டாம். நல்லப்படைப்புகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே  பதிப்பாளர் இதைத் தந்துதவுகிறார். விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் எந்த எண்களையும் அனுகலாம்.
   
தொகுதியின் பெயர் -  படைப்பாளர் பெயர் -  விலை

1. இஸ்ரேலியம்        -        பாம்பாட்டிச்சித்தன் - 70
2. குற்றத்தின் நறுமணம்-வெய்யில்                  - 70
3.நாவல் ஒன்றின்
  மூன்றாம் பதிப்பபு-         றியாஸ் குராணா    - 100
4.களம்- காலம்- ஆட்டம்- சபரிநாதன்                -  70     

 ஜே. டேனியல்- 9445726354.,  சிவ சங்கர்-9600922534.,  சுந்தர்- 7358061564.

ஜேடி

Sunday, March 11, 2012

கட்டுரை

 


 திருவள்ளுவர், கடப்பாரையுடன் இளைஞனாக நிற்கிறார்.

திருக்குறள் மூலமும், பரிமேலழகர் உரையும் சேர்ந்தவாறு சென்னை இந்து தியலாஜீகல் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் கோ. வடிவேலுசெட்டியார்ரவர்கள்  இயற்றிய தெளியுரையும், கருத்துரையும்1904-ல் இரண்டாம் பதிப்பாக பதிப்பித்து இருக்கிறார்கள். இதை ஒரு பள்ளி நூலகத்தில் இருந்து கொண்டுவந்து படித்தேன். அட்டை அழுக்கடைந்திருந்தது, ஆனால் இன்னும் பெலன் குன்றாமல் இருந்தது. முறிந்துபோன அதன் ஏடுகளைத் திறந்தபோது  ஒரு கோயிலுக்குள் நுழைவதுபோன்ற உணர்வுடன் வாசிக்கத் தொடங்கினேன்.

திருக்குறளை இதற்கு முன் வாசித்ததுக்  கிடையாது. மேடைகளில் அடிக்கடி புழங்கும் பிரபலமானக் குறள்களும், அதன் அர்த்தத்தையும் மட்டுமே அறிந்தவன். திருக்குறள் இலக்கணச் சூட்சமங்களால் கட்டப்பட்டு மனித வாழ்வியியலில் சாதாரணமாக நிகழ்கிற நெருக்கடிகளை அறிவுரையாகச் சொல்லுகிறது. என்பதை ஒரே வாசிப்பபில் புரிந்துகொள்ளுகிற ஆற்றல் என்னிடம் கிடையாது.

நவீன இலக்கிய உலகின் வால் பிடித்து அதன் சீறல்களையும், பல ஏமாற்று வேலைகளையும் (ஏமாற்றுவேலை என்றுத் தெரியாமலே) உடன் சென்று திரிந்து பார்த்ததால் ஓரளவு நவீனத்தின் போக்கைப் புரிந்துகொண்டேன். இந்நிலையில்தான், காலங்கடந்தும் நிற்கும் இலக்கியங்களைத் தேடிச் சென்றேன். அதன் போக்கில் கிடைத்ததே இந்தப்புத்தகம். முதலில் குறளையே பிரித்துப் படிக்கத் தெரியவில்லை. தெளிவுரையில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரித்துப் பொருள் தந்திருக்கிறார்கள். அதை வாசித்து, பிறகு கோ. வடிவேலுசெட்டியார் கருத்துரையும் வாசிக்கிறேன். எனக்கு வேறு ஒரு மாதிரியாகப் புரிவதால் பரிமேலழகர் உரையைப் படிக்கிறேன். இப்புத்தகத்தை ஒரு வாசிப்பில் பல கிளைவாசிப்பாகவும், மீண்டும் இன்னொரு திருப்புதல் வாசிப்பாகவும் செய்து எனக்கு விளங்கிய விதமாக்குறிப்பு எடுத்துக் கொண்டேன். எனக்கு வேறாய்த்தெரிகின்ற குறளைப்பற்றி மற்ற அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இணையதளங்கள் மூலமாகத் தேடிப்பார்க்கிறேன். அதன் பிறகுதான், இந்த வாசிப்பின் வழியாக என் பார்வையில் எனக்குச் சரியாகப்படுவதை மட்டும்  வைக்கிறேன்.  இப்போது  ஓரளவுக்கு குறலின் அர்த்தத்தை நேரடியாகவே ஊகிக்க முடிகிறது. 

இப்புத்தகத்தை வாசிப்பதற்கு முன் என் மனதில் பிரமாண்ட உருவம் கொண்டிருந்த திருவள்ளுவர்,  வாசிக்க வாசிக்க அவர் மீது எனக்குக் கோபம் வந்துக்கொண்டே இருக்கிறது. அது மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

1. “மன்னிய விழைய விழையாமை மன்னரான்
        மன்னிய வாக்கந் தரும்”

2, “செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
       லான்ற பெரியா ரகத்து.”

3. “ இளைய ரினமுறைய ரெளிறிகழார் நின்ற
        வொளியோ டொழுகம் படும்.”
எந்தக் காலகட்டத்திலும், எந்த நாட்டிலும் நல்ல இலக்கியவாதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராளிகளாகவே இருந்திருக்கிறார்கள். தான் வாழும் காலத்தில் பல நூல்கள்  தடைச்செய்யப்பட்டிருக்கிறது.  ஆனால் பதினென் கீழ்கணக்கின் வரையறைக்குள் இருந்தத் திருக்குறள் மற்ற நூல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி காலங்காலமாக எவ்வளவு மோசமான ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்தாலும் (அண்ணா ஒருவர் மட்டும் திருக்குறளுக்கு உரை எழுதுகிறவர்கள், தங்கள் தங்கள் மனவிருப்பத்திற்கு ஏற்றார்போல உரை எழுதுகிறார்கள் என்கிறார்.) தன் கரத்தின் உயரம் போதவில்லை என்று மரக்குதிரைப் போட்டு அதன் மேல் ஏறித் திருக்குறளை தூக்கிப்பிடிப்பது ஏன்? விக்கிபீடியாவில் மற்றப் பதினேழு நூல்களையும் தேடியபோது, அதில் அறிமுகமாக ஒரு இரு பாடல் தந்து விளக்கவுரையும் தந்திருக்கிறார்கள். அதுவும் மிக அறிய கருத்துக்களைக் கொண்டதாகவும், பல்நூகளின் பாடல்கள் ஒரு வாசிப்பில்கூட பலப் பார்வையைத்தந்து இலக்கிய நயத்தைக் கூட்டுவதாகவும்தான் இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட குறள்களைச் சற்று நோக்கினால் ‘அரசன் ஆசைப்படுகின்ற எதையும் மந்திரிகள் ஆசைப்படக்கூடாது.’ தன்னுடையத் துணியைத் தானே துவைத்துக்கொண்ட அரசன் எந்தக் காலகட்டத்திலாவது இருந்திருக்கிறானா? மக்கள் பசியிலும், பட்டினியிலும் துவளும்போது. அரசன் அந்தப்புரத்தில் மாற்றான் மனைவியைச் சுவைத்துக் கொண்டிருக்கவில்லையா என்ன?  இப்படி இழிசெயல் செய்கிற அரசனாக இருந்தாலும், ஏன்? அரசன் சின்னப் பையனாக இருந்தாலும் அவமதிக்கக்கூடாது, அரசன் பார்க்கிற விதமாக, சக அமைச்சர்களுடன் காதுக்கருகில் பேசக்கூடாது. என்று இலக்கியவாதி ஆட்சி எந்திரத்தைக் கடவுள் தன்மைக்குத் தூக்கி நிறுத்துவதும், (உலகம் முழுவதிலும் ராஜாக்கள் தன்னையே கடவுள் என்றுதான் சொல்லிக் கொண்டார்கள்.-ஒரு நண்பர் கூறியது) மக்களைப்  பயமுறுத்தி, அரசன் தருவது   கஷ்டமாக இருந்தாலும் சகித்துக்கொள்ளவேண்டும். அவரின் எந்தக் கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தை மக்களுக்கும், மந்திரிகளுக்கும் கட்டமைக்கிறார். (இந்த வழி காட்டுதல்தான் தற்காலத்தில், ஆட்சியாளர்களுக்கு மறைவாக அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுகின்ற அமைச்சர்கள், ஆட்சியாளர்  முன்னிலையில் இருக்கிறபோது முட்டிக்கொள்ளும் ஆயுதத்தை முடக்கிவைத்து நிற்பதும், சாஸ்டாங்கமாய் தரையில் விழுவதும், மக்களை வதைக்கும் திட்டங்களில் கேள்வி எழுப்பாமல் விடுவதும் நடக்கிறது)

“தனியொருவனுக்கு உணவு இல்லை எனில் ஜெகத்தினையழிப்போம்” என்கிறார் பாரதி. இதை எந்த ஆட்சியாளராவது தான் ஆளும் அறையின் தலை உச்சியில் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்களா?

                                 “கெடல் வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
                                  னாற்று பவர்க் ணிழுக்கு.”

கோ.வ,கரு- ‘ஒருவன் தான் கெடவிரும்பினால் பகைவரை நினைத்த பொழுதே அழிக்கும வல்லமையுள்ள வேந்தரிடத்துப் பிழைசெய்யக்கடவன் என்பது.’

தனி ஒருவன் அழிய விரும்பினால் தான் நினைத்த மாத்திரத்திலேயே அழிக்கக்கூடிய அரசனைப் பகைக்கக்கடவன். என்ன அநியாயம். ஒரு சாதாரணப் பிரஜை அரசனிடம் பிழைச் செய்ய விரும்புவானா? அப்படி செய்தால் என்ன நேறும் என்ற புரிதல்கூடவா இருக்காது. அதையும் மீறி ஒருவன் அரசனைப் பழிக்க வேண்டும் அல்லது அழிக்கவேண்டும் என்று நினைத்தால் அவன் மக்களுக்கான போராளியாகத்தான் இருக்கவேண்டும்.

ஒருவேளை இந்தக்காலகட்டத்தில்  ராஜபக்சே இந்தக்குறளை நேரடியாகப் படித்து அர்த்தம் புரிந்துகொண்டாரென்றால் ஐ. நா சபையிலோ அல்லது எந்த நாட்டு மனித மீறல் நீதிமன்றத்திலோ அஞ்சாமல் சொல்லுவார். தமிழ் ஆட்சியாளர்கள் போற்றுகின்றப் புலவரே சொல்லியிருக்கின்றார். அவரின் பொன் வார்த்தைகளைத்தான் சிறமேற்கொண்டு நிறைவேற்றி இருக்கிறேன் என்று  மனசாட்சி குற்றமடையாமல் சொல்வார்.

இப்படித் தொடர்ந்து மந்திரிகள்கூட  அரசனுக்கு அடிபணிந்து நடக்கனும், எந்தக் காரணம் கொண்டும் அரசன்  மனம் கசிந்துவிடக்கூடாது என்கிற திருவள்ளுவர்

1. “வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளுமென்னாந்
    தகைமாண்ட தக்கார் செறின்.”

கோ. வ- கரு- ‘தவப் பெருமை யுடையாரால் கோபிக்கப்பட்ட அரசரது வாழ்வும் பொருளும விரைந்து கெடும் என்பது’

2. “இறந்தமைந்த சார்புடைய ராயினுமுய்யார்
       விறந்தமைந்த சீரர் செறின்.”

கோ. வ- கரு- “‘தவமுடையார் கோபித்தல் அரண் முதலிய சார்புடையவரும் பிழையார் என்பது’

(ஏண்டா, பதினென் கீழ்கணக்கின் வரிசையில் இருந்த திருக்குறள் அணைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வேதநூலாக வந்தது என்று இதன்பிறகுதான் புரிந்தது.)

அக்காலகட்டங்களில் இலக்கிய உலகில் மாபெரும் அரசியல் கூத்துஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் நிச்சயமாக நம்பமுடிகிறது.  பொருட்பாலின் அதிகபட்சமாக அரசனை தெய்வத்துக்குச் சமம் அவனை எதிர்த்தால் வாழ்வு அழியும் அப்படிசொல்லி வந்தவர் 1. தவப்பெருமை உடையார் கோபித்தாலே  அரசனது வாழ்வு அழியும், (ஒருவேளை தவம் செய்கின்றவரை வம்பிக்கிழுத்த அரசன் என்றால் கூட மனசு ஆறிவிடும். தவப்பெருமையுடையார் எனும்போது, ஏதோ ஒருகாலத்தில் தவம் செய்ததின் பலனாக  அப்பெருமை ஒட்டிக் கொண்டிருக்கலாம், அல்லது அவர்கள் முன்னோர்களின் வழியாக அப்பெருமை இன்னும் ஒருவருக்கு இருக்கலாம் அந்தப் பெருமையின் எச்சம் இருப்பதாலேயே அவர் கோபப்பட்டால் அரசனே அழிந்துவிடுவானா?)

 2. தவம் இருப்பவர் கோபித்தால்  அரண், அதைச்சார்ந்த ஆயுதம் முதற்கொண்டு எல்லாம் அழிந்து போகும் என்கிறார். (நான் தவமிருப்பாரை மதிக்கிறேன்.) எந்த உயிர்க்கும் தீங்குச்செய்யாமல் வாழ்ந்து மறைவதைக் காட்டிலும்,  சற்று நேர்மையாக சக மனிதனின் வாழ்வுக்காக ஏதோ ஒரு வகையில் சிறிதளவேனும் உழைக்கிறவன், சாதாரண மனிதனாய் இருந்தாலும் தவமிருப்பாரைவிட மேன்மையானவர்களாக மதிக்கலாம் அல்லவா?  அப்படிப்பட்டவர்கள் அரசனுக்கு முன்பாக ஒரு அடிமையைப் போல இருக்கவேண்டும். தவமுடையாருக்கு மட்டும், அரசனே அடிமையைப்போல இருக்க வேண்டும் என்று சொல்லுவதால். அரசனுக்கு மறைவாக மதவாதிகளையும், மதவாதிக்கு மறைவாக அரசனையும் மாறி மாறி சமாதானப்படுத்தி  இருக்கிறார்.

இதை நிறுபிக்கும் விதமாக,  காவிரியும், கங்கையும் என்று பொருள் தருகின்ற குறளை மேற்கோள் காட்டி ‘திருவள்ளுவர் ‘வைதீகர்’தான் என்று ‘காஞ்சியின் மாகா பெரியவர்’ தன் கருத்தை முன்வைக்கிறார்.

மதவாதிகளுக்கும், திருக்குறளுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பதற்கு இன்னுங்கூட  ஒரு குறிப்பு- நான் இதுவரை வாசித்தநூல்கள் அளவில் எந்த எழுத்தாளரும் இந்தளவிற்கு ஆதிதிராவிட மக்களை நேரடியாக கேவலப்படுத் தியிருக்க மாட்டார்கள்.  இன்னும சொல்லப்போனால் அம்மக்களை ஒரு மனிதர் களாகவே  மதிக்கவில்லை. அவர்களுக்கென்று ஒரு அதிகாரத்தையே உருவாக்கி யிருக்கின்றார். ‘அவர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்வுமுறையை சமூகத்தின் கண்முன் வெளிக்கொண்டுவர அல்ல, மாறாக கொத்தடிமைகளாய் இருக்கும்போது சதை கீறி வழியும் ரத்தத்தை பாத்திரத்தில் மொண்டு நாய்களுக்கு பரிமார.’  அதை திருவள்ளுவர் இரக்கமில்லாமல் செய்திருக்கிறார்.

(1. “மக்களே போல்வர் கயவ ரவரன்ன
      வொப்பா ரியாங்கண்ட தில்.”

பரிமேலழகர்- வடிவான் முழுதும் மக்களையொப்பர் கயவ, அவர் மக்களை யொத்தாற்போன்றே வொப்பு 1 வேறிண்டு சாதிக்கண் யாங்கண்டதிலை.

கோ.வ கரு- மக்களுங் கயவரும் குணங்களாலன்றி வடிவால் தம்முள் ஒப்பார் என்பது.

2. “நன்றறி வாறிற் கயவர் திருவுடையர்
      நெஞ்சத் தவல் மிலர்.”

கோ.வ கரு- ‘கீழ்மக்கள் பழிபாவங்களைத்தரும் காரியங்களை அஞ்சாது செய்தும் மனம் வருந்துவதில்லை’

3. “தேவ ரனையர் கயவ ரவருந்தா
       மேவன செய்தொழுக லான்.”

4. “அச்சமே கீழ்கள தாசார மெச்ச
     மாவாவுண்டே லுண்டாஞ் சிறிது.”

கோ.வ கரு- கீழ்மக்களிடத்து  ஆசாரம்  இயல்பாகவில்லை என்பது’

5. “ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
       கூன்கைய ரல்லா தவர்க்கு.”

கோ.வ கரு- ‘கீழ்மக்கள் பிறர் வருத்திய விடத்தேதான் பயன் படுவர் என்பது’

6. “உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
      வடுக்காண வற்றாகுங் கீழ்.”
கோ.வ கரு-  ‘கீழ் மகடைத்துப் பொறாமையே குடி கொண்டிருக்கும என்பது’

7. “எற்றறி குறியர் கயவரொன் றுற்றக்கால்
     விற்றற் குரியர் விரைந்து.”

பரிமேலழகர்-  “கயவர் தம்மை யாதானுமொரு துன்ப முற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக் விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்குறியர், அதுவன்றி வேறெத் தொழிற்குரியர்.”

கோ.வ கரு- ‘கீழ்மக்கள் துன்பம் நேர்தலிடத்துத் தம்மை பிறர்க்கு விற்றற் குரியவராவன்றி வேறெதற்கு முரியவராவர் என்பது’

8. “அறை பறை யன்னர் கயவர்தாங் கேட்ட
       மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.”

பரிமேலழகர்- “தாங்கேட்ட மறைகளை இடந்ததோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச்சொல்லுதலான், கயவர் அறையப்படும் 6 பறையினை யொப்பர்.”

தெளி- “ தாங்கேட்ட- மறை- இரகசியங்களை, உய்த்து-( இடந்தோறுந் தாங்கிக் கொண்டுபோய், பிறர்க்கு- உரைக்கலான்- சொல்லுதலால், கயவர்- கீழ்மக்கள், அறைபறையன்னர்- அறையப்படும் பறையினையொப்பர்வார்.”

 கோ.வ கரு- ‘கீழ் மக்களிடத்து ரகசியம் வெளிப்படாதிருத்தலில்லை என்பது’)

இப்படிப் பொருட்பாலின் ‘கயமை’ அதிகாரம் முழுதும்  திருவாய் மொழிந்துள்ளார்.  திருவள்ளுவரின் குரலில் ஒலித்தக் குறளை, பிரித்துப் பிழையில்லாமல் படிக்கமுடியுமா? நீயெல்லாம் அவரைப் பேசுகிறாயே, அவர் பறையறைப்பற்றிப் பேசவில்லை.  கீழ்த்தரமாக செயல் செய்யும் திருடனையும், கொலைகாரனையும்தான் பேசுகிறார், என்று சொல்லலாம். திருடனோ, கொலைகாரனோ  யாரிடமும் ஆசாரம் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியது,  பணம். மேலும் பணம் கையில் இருக்கும்போது யாரிடத்திலும் அடிமையாய் இருக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. ஆக, முழுக்க முழுக்க ஆதிதிராவிட மக்களைத்தான் குறிப்பிடுகிறார்.

1. ‘கீழ்மக்கள் பிறர் வருத்திய விடத்தேதான் பயன் படுவர் என்பது’ மனசாட்சி உள்ளவர்கள் எந்த அடையாளத்திலும் சாய்ந்துகொள்ளாமல்  யோசித்தால் ‘ஒருமுறை கல் வீசினால் மறுமுறை, அந்த இடம் போக நாய்கூட யோசிக்கும் ஆனால் எவ்வளவுதான் கொடுமைப்படுத்தினாலும், தன்னை அடிமைப்படுத்து கிறவனிடமே தன் வாழ்நாளைக் கழிக்கவேண்டும் என்பது எவ்வளவு மோசமான சூழல். திருவள்ளுவர் குறிப்பிடும் அக்காலப் பறையர்கள் முக்கால் பாகம் வாயிருந்தும்,  தன் எஜமான் நினைத்த  இடத்தில்  குச்சியை அடித்துக்கட்டி. தன் சம்பத்தை மிச்சப்படுத்தும் விதமாக சிந்திகிடக்கும் வைக்கோல், தவிட்டால் அவர்கள் வயிற்றை ஆற்றுப்படுத்த உதவியிருப்பார்கள் போல. (தற்போதைய தலித்துகள் பலர், அவரவர் மதவாதத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு, அவனுக்குள்ளேயே அவனுக்கு கீழாக ஏழ்மையில் இருப்பவனை கேவளப்படுத்தி மகிழும் சூழல்   பரவலாகிக் கொண்டுவருகிறது.)

இந்நிலையில் வாழ்பவன் எப்படி ஆசாரம் பார்க்கமுடியும்?. 2.‘துன்பம் வருகின்றபோது தன்னை விலைக்கு விற்றுக்கொள்கிறதைத்தவிர, வேறு எதற்கும் உதவமாட்டார்கள்’ எவ்வளவு மோசடி நிறைந்த கணிப்பு. (அவர் அப்படிச் சொல்லவில்லை. துன்பத்திற்கு ஆளானவன், சந்தற்பத்திற்கு ஏற்றார்போல தனக்குச் சாதகமாக நட்ந்து கொள்வதைத்தவிர வேறுவழி யில்லை. என்று அர்த்தம் கொண்டால் ,அடுத்தவரி எதற்கும் உதவமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், நடைமுறைச் சமூகத்தில் சமயத்துக்குத் தகுந்தார்போல கேடுசெயல் செயல் செய்வோரை  “அவன் வாய் சாலாக்குபா, அவனத் தட்டிக்க முடியாதுபா, அவன் எப்படி வேண்டுமென் றாலும் பொழைச்சிக்குவான்’  என்று பெருமைப் படும்படியாகத் தான்பேசும்.” அதனால் திருடனையோ, கொலைகாரனையோ சொல்லியதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆக, இக்காலம் வரை சில மதவாதிகள் வர்க்கத்தில் அதிகமாகப் புழங்கும், தலித்துக்களுக்கு அறிவு மட்டு உயர்வகையானப் படிப்புக்கோ, வேலைக்கோ தகுதியற்றவர்கள். என்று சொல்லுவதற்கு இக்குறள்தான் வழித்தோன்றலாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.

இவைஎல்லாவ்ற்றிகும் மேலாக, அவைகளை எல்லாம் எடுத்து சாப்பிடும் அளவுக்கு நேரடியான இழி சொல்தான் 8.“கயவர் அறைபறையன்னர்” ‘கீழ்மக்கள், அறையப்படும் பறையினையொப்ப” ‘தீயவர் அடிக்கிற (பறை) மேளத்தை ஒத்தது.’ என் அறிவிற்கு எட்டியவரை திருக்குறளில் கயமை அதிகாரம் முழுக்க வரும் (அறத்துப்பாலில் வரும் சிறியர் என்ற வார்த்தை தவிர்த்து) கயவர்- தீயவர் என்கிற கீழ்மக்கள்  இழிசொல் எல்லாமே பறையர்களைக்குறிக்கும் சொல்தான். (ஆசாரம் பார்ப்பதில்லை, குட்டக்குட் குணிகின்ற நிலையை இச்சமூகம் நிர்பந்தித்து இருக்கிறது. இருந்தாலும் குட்டுகிறவனிடமே தன் உழைப்பைச் செலுத்துகிறான். துன்பம் வரும்போது தன்னையே அடிமையாக்கிக் கொள்கிறான், இந்த அப்பாவியை தீயவர் (கயவர்)  என்பதுதான் திருவள்ளுவரின் அறமா? நான் எந்தளவுக்கு திருவள்ளு வரை மதிக்கிறேனோ, அந்தளவு அவர் என்னை ஒரு சாதாரண மனிதனாகவாவது நினைக்கவேண்டாமா? அப்போதுதானே இச்சமூகத்தில் சமன்பாடு ஓங்குவதற்கு லேசான புரிதலாவது ஏற்படும். நூறு குற்றவாளி தப்பிவிடலாம் ஒரு நிரபராதி தண்டிக்கக்கூடாது என்ற வாசகத்தை எல்லோரும் தூக்கிப்பிடிக்கிறோமே. ஆயிரம் குறள் அரசனுக்கும், சமூகத்துக்கும் வழிகாட்டியாக இருக்கட்டும். பத்து குறள், (அக்காலகட்டங்களில்) குரல்வலையே இல்லாத ஒரு சமூகத்தை குழிக்குள் தள்ளிவிடுவது நியாமா? அதன் பாதிப்பு இரண்டாயிரம் காலத்திற்குப் பிறகும் இன்னும் தொக்கி நிற்கவில்லையா?

திருக்குறள் தமிழர்களின் பொதுமறையாக இருக்கிறபோது. எனக்கு ஏன் இப்படிப் புரிபடுகிறது. என்று யோசித்தபோது ஒரு உண்மை வெளிப்பட்டது. ஆமாம், திருக்குறள்களில்  அரசுப்பேருந்துகளிலும், பொதுமேடைகளிலும், திருமணப் பதிரிகைகளிலும் சொல்லப்படும் மிகப் பிரபலமான குறள்கள் இந்தப் புத்தகத்தில் அநேகமாக காணவில்லையே? நாம் திருக்குறளைதான் வாசிக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. என்ன காரணம் என்றால் நான் வாசித்தப் புத்தகத்தில் ‘பொருட்பால், காமத்துப்பால்’ மட்டுந்தான் பதிப்பித்து இருந்தார்கள். அடடா அறத்துப்பால் விட்டுட்டு இருக்கிறாங்க. அறிவாளித் தகப்னான இணயதளங்களில் தேடவேண்டியதுதான் என்று ‘தமிழ்க் களஞ்சியம்’, ‘ஈகரை தமிழ்க் களஞ்சியம்’ இன்னும் சில இணைய தளங்களை தேடினேன். 

அதில்தான் இதுவரைப் பொது இடங்களில் புழங்கும், பிரபலமான குறள்கள்  எல்லா மனிதனும் மனம் திறந்து ஏற்றுக்கொள்ளும் வாழ்வியல் கொட்டிக்கிடக்கின்றன. இப்போதுதான்  எனக்கு இன்னும் பலக் கேள்விகள் எழுகிறது. திருக்குறளில் அறத்துப்பாலின் குறள்களைப் பொதுவெளியில் வைப்பதுபோல், மற்ற இரு பகுதியை ஏன் தெளியுரையோடு வெளியே ஒட்டுவது இல்லை?. ‘அறத்துப்பாலை’ மட்டும் விடுத்து, மற்ற இரு பகுதியை மட்டும் சென்னை இந்து தியலாஜீகல் ஹைஸ்கூல் 1904- ல் இரண்டாம் பதிப்பாகப்  பதிப்பித்துள்ளது ஏன்?  எந்தக்கட்சி  ஆட்சியாளர்களாக வந்தாலும் பெண்ணையும், மக்களை பயமுறுத்துகிற, வாயிழந்தவர்களை அடிமையாகவே  வைத்திருக்கிற சூட்சமம் நிறைந்த பின்இரு பகுதியை நிஜவாழ்வில் கடைபிடித்து. ஓட்டுச்சேகரிக்க மட்டும் அறத்துப்பாலை பொது இடங்களில் சுவரொட்டிகளாகப் பயண்படுத்துகிறார்கள். ஆனால் மதவாதிகள் சற்று நேர்மையானவர்கள், எனக்கு ஒத்தக்கருத்தை மட்டும் நேரடியாக பரப்புரைச் செய்து ஏற்கச்செய்துவிட்டால், அதன்பிறகு எப்போதும் எனக்கு அடிமைதானே. இந்த நிலையில்,  திருவள்ளுவரின்  கற்பனையான உருவத்தை அறத்துப்பாலுக்காக ஆழ்ந்த வயது முதிர்ந்த அறிஞராக ஏற்றுக்கொண்டாலும், பின்இரு பால்களுக்குகாக, முறுக்கு நிறைந்த ஏதோ ஒரு வாலிபனாக கடப்பாரையுடன் மசூதிமேல் நிற்கும் திருவள்ளுவராக என் மனம் கற்பனைச்செய்கிறது.

ஜேடி








Saturday, March 3, 2012

கவிதை


 












முற்றிய அறிவை 
முடக்கிவையுலகில்

நாணயத்தின் மதிப்பு
அறியாக் குழந்தை கடைக்குச்செல்கிறது
தனக்கு விருப்பமானதை
குழந்தை கைக்குள் திணிக்கிறான் கடைக்காரன்
தனக்கு விருப்பமானதாகவே இல்லை
இருந்தாலும், நீர் நிலையில் எச்சமிட்டுப் பறக்கும்
பறவையின் ஆவலை அடைந்து தீர்க்கிறது
அப்பாவிக் குழந்தை
முற்றிய அறிவு 
அச்செயலுக்காக மூச்சு வாங்கியதேயில்லை
இன்னும் சொன்னால், சமூகத்தில்
அதைத்தான் அழிவுக்குள்ளாகாமல்
ஆவணப்படுத்தியிருக்கிறது
முற்காலத்திலும், தற்காலத்திலும்
அன்பற்ற முற்றிய அறிவு.

இறைவா அன்பற்ற அறிவை
முடக்கிவை அல்லது மட்டுப்படுத்து, ஏனென்றால்,
காலம் முழுக்க
பல அடிமைகளை
தனக்கான மம்மிகளாகத் தகவமைத்து
பக்கபலமாய் வைத்துக்கொள்கிறது
அன்பற்ற முற்றிய அறிவு

அறிவு தன் எதிராளியை (எதிர் பதத்தை)
எப்போதும் நட்பாளராகவே
வைத்துக்கொள்ள விரும்புகிறது
தன் செயல் வீரியம் எள்ளலவும்
குறைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு
எஜமானியம், ஏகாதிபத்தியம் விட
ஆளுமையுள்ளது அறிவு. ஆனால்,
அதைவிட ஆபத்து நிறைந்தது
அன்பற்ற முற்றிய அறிவு

பிறரின் நிதர்சனமான
எந்த நியாயங்களையும்
பொய்யானக் கருத்தாய் உடைத்து, நிருபித்து.
தனது முற்றிய அறிவால்
தனக்கு ஏற்புடையதை
பொதுவான நியதியாக நிறுவிக்கொள்கிறது
ஒரு லட்சம் உயிரானாலும்
இயற்கை வளத்தை கையகப்படுத்துதலானாலும்
சிறிதாகக் கண்கலங்குவதும் இல்லை
பெரிதாக வருத்தப்படுவதுமில்லை
அன்பற்ற முற்றிய அறிவு

நான் வாழ்வதில்
அக்கறையிருந்தால் இறைவா
எனக்குள் ஓயாது இயங்கும்
அன்பற்ற முற்றிய அறிவை....

எமி