தோற்பது நல்லது
தோற்றுப்போகிறவர்கள்
எப்போதும் தோற்றுக்கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
தலைமயிர்
வளர்ந்து கொண்டேயிருக்கிறது
சலூன் நண்பர்
பார்க்கும்போதெல்லாம்
வணக்கம் வைக்கிறார்
கையளிக்க சில வாரங்களை
மௌனமாய் கடத்த வேண்டியிருக்கிறது.
வெக்கையைக்கிளப்பி
தோல் கணவாய்களின் வழியாய்
உடல் கடலுள் தேங்கிய
வற்றா நதியை வெளியேற்றி
நாவரளச்செய்கிறது
இரவு நேரம்
சன்னலின் வெளிப்புறமாக நின்று
பணம் கையூட்டு கேட்கும் காற்று
தோற்றுப்போகிறவர்கள்
எப்போதும் தோற்றுக்கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
விருந்துசெய்கிறவன்
முதல் பந்திக்கு வருந்தி அழைப்பதில்லை
தவறி நுழைந்துவிட்டாலும்
இலைப்போடுகிறவன் வழிக்காட்டுதல்
ஒதுக்குப்புரமாகத்தான் இருக்கிறது.
எப்படி இருக்கக்கூடாதென்று
சின்னப்பையனுக்கு
மாதிரியாக காண்பிக்கப்
பயன்படுத்துகிறார்கள்.
பேசித்தீர்க்கும் வழக்குக்கு
நடுவராக நியமிக்கப்படுவதேயில்லை.
தங்கள் வசதிக்கு ஒத்துவராத
இருக்கையைப்போல்
பெண்களில் பலர் அதில் அமர்ந்து பார்க்கக்கூட
மனதற்றவர்களாய் இருகிறார்கள்.
முதியவர்கள் மாத்திரை மருந்திற்கு
நயமான வார்த்தைகளை உதிர்ப்பதேயில்லை.
மீண்டும் மீண்டும்
தோற்றுப்போகிறவர்கள்
தோற்றுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது
ஜே டி

No comments:
Post a Comment