Thursday, March 1, 2012

சிறுகதை



(இம்மாதிரியான கதைகளின் நரம்புகளில் மனிதபிரளயத்தின் இயக்கத்திற்கான  ரத்தப்பாய்ச்சல்கள் இருந்துகொண்டே இருக்கும.  தனது தற்காப்புக்காக எந்த இசத்தையும் பக்க பலமாய் வைத்துக்கொள்வதில்லை. மனிதனின் தீராத இருப்பைப்போல், அது எப்போதும் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது)




 ( மாக்ஸிம் கார்க்கி)                                 அந்தப் பையன்

இந்தச் சின்னக்கதைய எப்படிச் சொல்லுவது என்று புரியவில்லை. அவ்வளவு எளிதானது.

நான் வாலிபப்பருவத்தில். ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக்குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே உள்ள வயல் வெளிக்கும் அழைத்துச் செல்வது வழக்கம். குருவிக்குஞ்சு மாதிரி சுற்றித்திரியும் இந்தச் சின்னவர்களோடே சிநேகமாகப் பழகுவதில் எனக்கு ஒரு அபாரப் பிரேமை.

புழுக்கமும் புழுதியும் குமையும் தெருக்களை விட்டுவிட்டு வெளியே வந்து விடுவதில் குழந்தைகளுக்கும் ஆசைதான். தாய்மார் ரொட்டித்துண்டுகள் கட்டிக்கொடுத்தார்கள். நானும் கொஞ்சம் லாஸ்ஞ்சர் வாங்கிக்கொண்டு, ஒரு பாட்டில் நிறைய க்வாஸ் (ஒருவகைக் பானம்) நிறைத்துக்கொண்டு, புறப்படுவேன். கவலை தெரியாத இந்தச் சித்தாட்டுக்குட்டிகளை நகர் வழியாக வயற்புறம் கூட்டிச்சென்று, பசிய நிறம் படர்ந்து கண்ணுக்கு ரம்மியாக இருக்கும். வசந்தம் அணிந்த கானகத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன்.

அதிகாலையிலேயே ஊரைவிட்டுப் புறப்பட்டு விடுவது வழக்கம். மாதாகோயில் மணி  உதயகால ஜபத்துக்கு கூப்பிடும் நேரத்திலேயே புறப்பட்டுவிடுவோம் இளங்குதி கால்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பரிவாரமாக ஓடி வரும் மத்தியானத்தில் சூரிய வெப்பம் உச்சத்தில் இருக்கும்போது விளையாடிக் களைத்த என் கானகத்தில் ஓரம்தில் வந்து கூடுவார்கள். சாப்பிட்டபிறகு சிறுசுகள் மர நிழலில் படுத்துக்கிடந்து உறங்கும். சற்றுப்பெரிய குழந்தைகள் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கதை சொல்லிச் சொல்லி வற்புறுத்தும். இவர்களுடைய இடையறாத சளசளப்புடன் என் கதாகாலட்சேபமும்  நடைபெறும். வாலிபத்துடுக்கும் தலைக்கொழுப்பும் அனுபவமற்ற சிற்றறிவுக்கு நிலைத்திருக்கும் வேடிக்கையான நிச்சயத் தன்மையும் எனக்கு இருந்தாலும், சின்ன விவேகிகளிடையே சிக்கிக்கொண்ட இருபது வயதுக் குழந்தையாக இருக்க வேண்டிய நிலைமை எனக்கு அடிக்கடி ஏறப்பட்டதுண்டு.

தலைக்குமேல் என்றும் இருக்கும் வானம் எங்களைக் கவித்தது. கண்ணெதிரே கானகத்தின் வண்ணக் கலவைகள் வாரி எடுத்துக்காட்டி அரிதுயில் போல் ஆழ்ந்த மௌனத்தில் கூடிக்கிடந்தது. ஊசல் காற்று காதில் குசுகுசுப் பேசியது. கானகத்தின் மகரந்த நிழல்கள் சற்றே நடுங்கி மற்றும் மௌனத்தில் ஆழ்ந்தன. இந்தப் புனிதகரமான மௌனம் ஜீவனிலும் துளும்பிப் பரிபூரணப் படுத்தியது.

கரைகாணா நீலவானத்தில் வெள்ளை மேகங்கள் மெதுவாக நீந்தின. சூரியவெதுவெதுப்பில் ஒண்டி வளரும் மண்ணிலிருந்து பார்க்கும் நமக்குத் தெரிகிறது. அப்படி இருந்தும் அந்த மேகங்கள் அங்கு கிடந்தது உருகுவதும் புதிர்போலத்தான் நமக்குத் தெரிகிறது.

என்னைச் சூழ இந்தக் குழந்தைகள் வாழ்வின் இன்ப துன்பங்களைக் கற்றுத் தெரிந்து கொள்வதற்காக இவ்வுலகிற்குத் தருவிக்கப்பட்டிருக்கின்றன.

அந்தக் காலத்தை என்னுடைய நல்ல தசை என்றே சொல்லவேண்டும். அந்தச் சாப்பாடு எல்லாம் வாஸ்தவமான விருந்துகள். என் ஜீவன் அந்தக் காலத்திலேயே வாழ்வின் இருள் நதியிலே முழு குண்டு மாசுபட்டிருந்தாலும் குழந்தைகளின் சிந்தனைகள் உணர்ச்சிகள் என்ற தெளிவான விவேகம் என்னைத் தளிர்க்கவைத்தது.

ஒரு நாள், நான் என் குழந்தைப் பரிவாத்துடன், ஊருக்கு அப்புற மிருந்த வயல் வெளியை மிதிக்கும்போது, நாங்கள் ஒரு அன்னியனைச் சந்தித்தோம். ஒரு சின்ன யூதப் பையன், காலில் ஜோடுகிடையாது. உடம்பில் கிழிசல் சட்டை. கருப்புப் புருவம். வெண்மையான சுருட்டைத்தலை. ஆட்டுககுட்டி மாதிரி, அவனை ஏதோ தொந்தரவுபடுத்தியிருக்க வேண்டும். அழுது கொண்டிருந் திருந்தான் போல் தெரிகிறது. ஒளியற்ற கருங்கண்களைப் பாதுகாத்த இமை வீங்கிச் சிவந்திருந்தது. முகத்தில் பசிகாட்டும் நிலப்பூப்பு படர்ந்தது. குழந்தைகள் மத்தியில் ஓடிவந்து தெருவின் மையத்தில் நின்றுகொண்டான். குளிர்ந்த காலைப் புழுதியில் காலை ஊன்றி நின்றான். அழகமைந்த அவன் உதடுகள் பயக்குறிகாட்டி மலர்ந்தன. அடுத்த வினாடி ஒரே குதியில் நடைபாதைக்குத் தாவி விட்டான்.

‘அவனைப் பிடியுங்கள். சின்ன யூதப் பயல். அந்தச் சின்ன யூதப் பயலைப் பிடியுங்கோ’ என்று குழந்தைகள் உற்சாகமாகக் கத்தின.

அவன் ஓடிவிடுவான் என நினைத்தேன். அகன்ற கண் ஏந்திய ஒல்லிய முகம் பயக்குறி காட்டியது. உதடுகள் நடுங்கிப் படத்தன. கேலி செய்யும் குழந்தைக் கும்பலின் நடுவே நின்றான். உயரத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ள முயலுவ்து போல நிமிரிந்துகொண்டான்.தோள்களை வேலியோடு அமுக்கிக்கொண்டு கைகளைப் பின்னுக்கு இறுக்கக்கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றான்.

அவன் திடீரென்று அமைதியாகக்தெளிவாக, ‘ஒரு வித்தை காட்டுகிறேன் பார்க்கிறீர்களா?’ என்று கேட்டான்.

தன்னைத் தற்காத்துக்கொள்ள அவன் செய்யும் சூழ்ச்சியென்று நான் முதலில் எண்ணினேன். குழந்தைகளுக்கு அந்த வித்தையில் உடனே ஆசைதட்ட விலகி நின்று வரி கொடுத்தார்கள் சற்று வயசும். முரட்டுத்தனம் வலுத்தவைகளே அவனைச் சந்தேகத்துடன் கவனித்து நின்றன. எங்கள் தெருக் குழந்தைகளும் மற்ற எல்லாத்தெருக் குழந்தைகளுக்கும் சண்டை. தாங்கள் தான் அந்தஸ்து மிகுந்தவர்கள் என்பதில் ஸ்திரமான நம்பிக்கை. இதரர்களின் உரிமைகளைப் பற்றி அவை சட்டை  செய்வதில் சிரத்தை கொள்வதில்லை. அவை சட்டை செய்யாதிருந்தன என்பதே உண்மை.  

சிறுசுகள் அவனை நம்பின.
‘உம், உன் வித்தையைக்காட்டு, பார்ப்போம்’ என்றன.

அந்த அழகான, ஒல்லியான சிறுவன் வேலி ஓரத்திலிருந்து வந்தான். மலர்ந்த உடலை வளைத்துக் தரை மீது கை ஊன்றி ஒரே துள்ளலில் கைகளைத் தட்டிக்கொண்டு எழுந்து நின்றான்.

‘ஹப்’

பிறகு சகடக்கால் மாதிரி, கைகளையும் கால்களையும் விரித்துப் பக்கவாட்டில் சரிந்து சுழன்று சக்கரடித்தான். அக்னி தீய்த்துக்கொண்டு போவது போலிருந்தது அவனுடையகதி. சட்டை ஓட்டை வழியாகத் தோள்பட்டையும் சாம்பல் பூத்த சர்மமும் விலாவெலும்பும் தெரிந்தன. கழுத்து எலும்புகள் கண்டமாலை மாதிரி கிடந்தன, அதை அவன் வலுவாக அமுக்கினால் எங்கே ஒடிந்து விடுமோ என்றிருந்தன. முயற்சியால் வேர்வை கொட்டி முதுகுபுறத்தை நனைத்தது. ஒவ்வொரு தரம் விதவிதமான வித்தை காட்டும்போது ஜீவனற்ற ஒரு சிரிப்போடு குழந்தைகளை ஏறிட்டுப் பார்த்தான். ஒளி மயங்கிய கண்கள் விரியத்திறந்திருப்பது  பார்ப்பதற்கு அகோரமாக இருந்தன. பார்வையில் சிசுத்தனமையற்ற ஒரு வெறி இருந்நது. குழந்தைகள் கூச்சல் போட்டு அவனைப் பின்பற்றி அவைகளும் புழுதியில் குட்டிக் கரணமடிக்க ஆரம்பித்துவிட்டன. லாகவமற்ற முயற்சிகளால், கரிவதும், விழுவதும் சமயத்தில் கரணம்போட்டு விழுவதும் பொறாமைப் பட்டுப் பார்த்துக்கொண்டிருப்பதுமாகக் குழந்தைகள் குமைந்தன.

இந்தக் கோலாகலம் திடீரென்று முடிவுற்றது. அவன் துள்ளியெழுந்து நின்று அனுபவசாலியான வித்தைக்காரன் மாதிரி புன்சிரிப்போடு கைகளை நீட்டி

‘ஏதாவது கொடுங்கள்’ என்றான்.

குழந்தைகள் மௌனமாக நின்றன. ஒரு குழந்தை ‘துட்டா’ என்று கேட்டது.

‘ஆமாம்’ என்றான் பையன்.

‘இது நல்ல வேடிக்கையா இருக்கே?’

துட்டுன்னா நாங்களே நல்லா அது மாதிரி செஞ்சிருப்பமே...’

இந்த வேண்டுகோள் வித்தைக்காரனைத் துச்சமாக மதிக்கும்படி செய்வித்தது. குழந்தைகள் சிரித்துக்கொண்டு, கொஞ்சம் வைதுகொண்டு வயற்புறமாக ஓடின. அவர்களிடை பணம் கிடையாதுதான். என் வசம் ஏழு கொபெக்குகள் தான் வைத்திருந்தேன். (ருஷ்யச் சில்லரை நாணயம்) அழுக்கேறிய அவனுடைய உள்ளங்கையில் இரண்டைக் கொடுத்தேன். அவன் அவற்றை விரலால்தொட்டுப் பார்த்து விட்டு வந்தனம் கூறினான்.

அவன் போகும்போது, முதுகை மூடியிருந்த சட்டையில் கறை படிந்திருப் பதைப் பார்த்தேன். அது தோள் பட்டையுடன் ஒட்டிக்கொண்டுவிட்டது.

‘நில்லுடா, அதென்ன?’ என்றேன்.

அவன் நின்றான், திரும்பினான், என்னை ஊன்றிக் கவனித்தான். பழைய ‘நல்லதனச்’ சிரிப்போடு சாந்தமாகப் பதில் சொன்னான். ‘முதுகில் இருப்பதா? ஈஸ்டர் பண்டிகையில் சர்க்கஸ் ஆடுகிறபோது டிரிபீஸிலிருந்து நாங்கள் விழுந்துவிட்டோம். அப்பா இன்னும் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். எனக்கு குணமாகிவிட்டது. நான் சட்டையைத் தூக்கிப் பார்த்தேன. இடது தோள் பட்டையிலிருந்து துடை வரை முதுகுத் தோல் அப்படியே உரிந்துபோய் ஒரே பெரிய வடுவாக மாறியிருந்தது. புண்வாய் ஆறி உலர்ந்து காய்ந்து பொறுக்கில் பல இடங்களில் கீரல் விழுந்தது அதன் வழியாக ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்தது.

இப்போது வலிக்கவேயில்லை... வலிக்கவேயில்லை அரிக்கத்தான் செய்கிறது....

வீரனுடைய நெஞ்சழுத்தப் பார்வையுடன் அவன் பெரிய மனுஷன் குரலோடு எனக்காக நான் இப்படி வேலை செய்தேன் என்றா நினைக்கிறாய்? சத்தியமா சத்தியமா அப்படியே இல்லை. எங்கப்பா- எங்கிட்டத் தம்பிடி கிடையாது. எங்கப்பாவுக்கு ரொம்பக் காயம் . அதனாலே எப்படியும் வேலை செய்துதானே ஆகணும். மேலுமி நாங்கள் யூதர்கள். எல்லாரும் எங்களைப் பார்த்தால் கேலி செய்கிறார்கள்... போயிட்டுவாரே.’

அவன் மலர்ந்த முகத்துடன் குதூகலத்துடனேயே பேசினான். பிறகு விசுக்கென்று வாய்திறந்த வீடுகளைத் தாண்டிச் சென்று மறைந்துவிட்டான்.

இதெல்லாம் அற்ப விவகாரந்தானே. ஆனால் என் ஆயுளில் கஷ்டம் வந்தபோது இந்தச் சின்னப் பையனுடைய தைரியத்தை அடிக்கடி நினைத்தேன். நன்றியுடன் நினைத்தேன்.

மூலம்      (மாக்ஸிம் கார்க்கி)

மொழிபெயர்ப்பு
புதுமைப்பித்தன்
(உலகப் புகழ் பெற்ற சிறுகதைகள், தொகுப்பிலிருந்து)

பகிர்வு
ஜேடி

Thursday, February 23, 2012

கட்டுரை

                                     ‘காதலின் இசை’


( கிரேய்ஸர் சொனாட்டா) லியோ டால்ஸ்டாய் எழுதிய இந்நாவல் 'காதலின் இசை' என்ற பெயரில் பேராசிரியர் நா. தர்மராஜன் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார். (டால்ஸ்டாயின் எந்தப் படைப்புக்கும் இல்லாத அளவுக்கு வெகுஜன எதிர்வினைகளை இக்கதைத் தூண்டியுள்ளது. இக்கதையை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கையெழுத்துப் பிரதியாகவும், ஒரே ஒரு அச்சிட்ட பிரதியாகவும் வாசிக்கப்பட்டுள்ளது. விவாதிக்கப்பட்டுள்ளது. 1891 வரை இப்படைப்பு அச்சிட்டு வெளிவரவில்லை. டால்ஸ்டாயின் மனைவி முயற்சி செய்து சக்கரவர்த்தி மூன்றாம் அலெக்ஜாண்டரின் அனுமதிப் பெற்று  அவர் படைப்புகளில் சேர்த்துள்ளார்.) (முன்னுரையில் பாரதி புக்கவுஸ், மதுரை.)

இலக்கியத்திற்கென்று; நிஜத்திற்கென்று பாசாங்குச் செய்யத்தெரியாது; ஆத்மார்த்தமாகப் படைப்புகளில் தன்னை இணைத்துக்கொள்ளும் நண்பரை, கோபுர வாசலில் நுழைந்து, குளத்திற்கு மேற்கில் சிறு மண்டபத்தின் பின்பக்கத்தில் சந்தித்தேன். புத்தகங்கள் வாசிக்காமல், வாசித்ததுபோல் பாவனைச் செய்கின்றானா என்ற ஆய்வு இல்லாமல் நண்பர் முதலில் அவர் வாசித்தப் புத்தகத்தை விவாதத்தில் வைத்தார். பிறகு, பேச்சு நகர்ந்தது. இடையில் இன்று ‘காதலின் இசை’ என்ற சிறுநாவலை வாசித்து முடித்தேன் அடடா என்ன ஒரு படைப்பு என்று மெச்சினார். நான் அதை உள்வாங்கிக்கொண்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  நான் வாசித்ததை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். ஒருவேளை, நீ என்ன வாசித்தாய் என்று  முதலிலேயே  சோதிக்கவேண்டும் என்கிற விதமாக என்னிடம் கேள்வியை எழுப்பியிருந்தால்,  அவருக்கு உபயோகப்படும் படி நிச்சயமாக என்னிடத்திலிருந்து ஒன்றும் கிடைத்திருக்காது. ‘வாசிக்கிறவனா இல்லையா என்பது வாசித்தவன் சொல்லுவதைக் கவனிப்பதிலேயே தெரிந்து கொண்டிருப்பார் போல’ இப்பொழுது நான் வாசித்ததை, என்னை அறியாமலே விவாதத்திற்குள் இழுத்துவிட்டார். இது உண்மையிலேயே படைப்பாளனின் ஆழ்ந்த உத்தி என்றுதான் எனக்குப்படுகிறது. மேலும், விவாதிக்கும் இருவருமே  எந்தப் புறசூழலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஆத்மார்த்தமாகப் படைப்பைக்குறித்து படைப்பிற்குள் சென்றுவிட்டதால் விவாதம் சிறப்பை எட்டியது என்றுதான் சொல்லவேண்டும்.

நான் வாசித்த ‘ஜே ஜே சில குறிப்புகளில்’ “இரு நண்பர்கள் பேசிக் கொள்கிறபோது, ஒருவர் நண்பரிடம் அடுத்து என்ன பேசவேண்டும் என்று நினைவுப்படுத்திக்கொள்கிற நிலமை வரவேக்கூடாது” என்று சொல்வார். உண்மையிலேயே அப்படி ஒரு நிலமை அந்தச் சந்திப்பின் விவாதத்தில் வந்ததேயில்லை. நாங்களாக அதிகநேரம் கடந்துவிட்டது என்று கிளம் பினோம். அப்பொழுதுதான் ‘காதலின் இசை’ புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். ‘லியோ டால்ஸ்டாய்’ புத்தகம் தறீங்களா? படித்துவிட்டு தருகிறேன் என்று கேட்டேன். “நூலகத்திற்கு திருப்பித்தர இன்னும் நாள் இருக்கிறது பொறுமையாகப் படித்துவிட்டுத்தாருங்கள்” என்றார்.

எந்தக் கிரகங்களிலும் தங்கிவிடாமல் சுழன்றடித்து, இப்பிரபஞ்சத்திலேயே கண்ணுக்குப் புலப்படாமல் தங்கியிருப்பதுப் படைப்பாளியின் சிந்தனைதான். உண்மையானப் படைப்பாளிகள் தீர்க்கதரிசியின் இன்னொரு பிம்பமாயும், வாழும்போதே மனிதனைக் காப்பவனாய், வாழாமல் வாழும்போது அம்மனிதனை ஒழுங்குபடுத்துபவனாய் இருக்கிறான். நிச்சயமாக லியோ டால்ஸ்டாய் அப்படிப்பட்டவர்தான்.( கிரேய்ஸர் சொனாட்டா ஜெர்மானிய இசைமேதையான மீத்தோவன், பிரெஞ்சு இசைவாணர் ராதோல்ஃப் கிரேய்ஸருக்கு (1766-1831ல் ) அர்ப்பணித்த பிரபலமான சங்கீதப் படைப்பு) என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்த இசைப்படைப்பின் பெயரைத் தலைப்பாக வைத்துள்ளார்கள். அட்டைப்படத்தில் ஒரு கொடூரமானக் கொலை நிகழ்வைப் போட்டிருக்கிறார்கள். இதிலேயே இந்நாவலின்  முழு அர்த்தங்கள் புதைந்து கிடக்கிறது.

நாவல் தொடர் வண்டியில் பயணிக்கும், பயணிகளின் விவாதத்தில் தொடங்குகிறது.  ஒரு பெட்டியில்  கணவன் மனைவி இன்னும் நான்குபேர் உட்கார்ந்துச் செல்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஒருவருக்குள் ஒருவர் வாக்குவாதம் நடந்துகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் எதிரில் உள்ளபெரியவர் ஆலோசனைச் சொல்லும் விதமாகக் குறுக்கிடுகின்றார். அதை ஒட்டி மற்ற நபர்களும் வாக்குவாதத்தில் நுழைகிறார்கள். வயதானவர் “முன்பெல்லாம் மனைவிகள் கணவனிடம் இப்படியெல்லாம் வாதம் செய்யமாட்டார்கள். ஆனால், இப்பொழுதுப் பெண்கள் கல்விக் கற்றுவிடுவதால் இந்த வாதங்கள் சாதாரணமாக நடக்கிறது” என்று சொல்லுகிறார்.

பெண், கல்விக் கற்பதற்கும் இந்த வாதத்திற்கும் என்ன சம்பந்தம், “பெண்கள் கல்விக் கற்பதே தவறானதா? பழைய காலத்தில் மணமகளும், மணமகணும் திருமணத்திற்கு முன்பு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலேயே கல்யாணம் செய்துகொண்டார்கள். அது நல்லதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று வாதிடுகிறாள். மேலும் எதிர்த்திசையில் உள்ள ஆண்களில் ஒருவர், "பெண்கள், ஆண்களை மதிப்பதில்லை. கணவனுக்கே பயப்படுவதில்லை,” என்று குறறம் சாட்டுகிறார்.

அதற்கு அவள் “எல்லாச் சுதந்தரங்களையும் உங்களுக்கே வைத்துக் கொண்டு பெண்களை அடக்கி வைத்திருக்க விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பம்போல எதைவேண்டுமானாலும் செய்யவதற்கு உங்களுக்கு உரிமைக் கொடுத்துக் கொள்கிறீர்கள்.” இப்படியாக வாதத்தின் போக்கு வாழ்வியலுக்கான தத்துவங்களை உள்ளடக்கிக்கொண்டு நகர்கிறது. பெண்ணின் கணவன் வழக்குரைஞர். வாக்குவாதம் வலுவடைந்து ஒரு கட்டத்தில் உன்னோடு வாழமுடியாது என்று மாறிமாறி சொல்லிக்கொள்கிற சந்தர்ப்பம் வருகிறது. குடும்ப வாழ்வில் கணவன் மனைவி ஒருவரில் ஒருவர் காதல் கொண்டுதான் வாழ்கிறார்களா? அப்படி வாழவில்லை என்றால் அதற்கு காரணம் யார்? என்று ஒருவர் விவாதம் எழுப்புகிறார். இடையில் பெரியவ்ர் மீண்டும் ‘பெண்கள் சரியில்லை.மனைவி கணவனுக்கு துரோகம் செய்கிறாள். அப்படி செய்தால் என்ன தீர்வு’ என்கிறார்.

வழக்குரைஞர் மனைவி, “பெண்களை நல்ல விதமாக நடத்தினால் நிச்சயமாக காதல் இருக்கும துரோகம் செய்யமாட்டாள். திருமணத்தில் காதல் இல்லையென்றால் அது திருமணமேயல்ல. காதல்தான் திருமணத்தைப் புனிதப்படுத்துகிறது” என்கிறாள். இதற்கிடையில் சற்று முன் ஸ்டேஷனில் ஏறிய ஒரு கனவான் விவாதத்தை உன்னிப்பாகக் கவனித்துவந்தார். திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு “காதல் என்பது என்ன? எந்த காதல் புனிதமானது? திருமணத்தைப் புனிதப்படுத்துகின்ற காதல் என்பது என்ன?  கேள்வியை எழுப்புகிறார். பயனிகள் உட்பட சற்று அதிர்ச்சியுற்றுப் பார்க்கிறார்கள். வழக்குரைஞர் மனைவி “காதல் என்பது மற்ற எல்லாரைக்காட்டிலும், ஒரு குறிப்பிட்ட ஆணையோ அல்லதுப் பெண்ணையோ அதிகமாக விரும்புவதைக் குறிக்கும்” என்கிறாள். அப்படிப்பட்டக் காதல் எவ்வளவு காலத்துக்கு இருக்கும்? ஒருமாதமா? இரண்டு நாட்களா? அரைமணிநேரமா? என்று மீண்டும் கேள்வியை எழுப்புகிறார். அக்கேள்விக்கு அவளால் சரியானப் பதில் சொல்ல முடியவில்லை. அவள் கணவன் வழக்குரைஞர் பதில் சொல்லுகிறார், கனவானுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் அவளே “அதாவது, எவ்வளவு காலத்துக்கென்றால், மிக நீண்ட காலத்துக்கு சில சமயம் வாழ்க்கை முழுவதற்குமே” என்று பதில் சொல்லுகிறாள்.

கனவான் “அப்படி நடப்பது நிஜவாழ்வில் அல்ல. நாவல்களில்தான் அப்படி நடக்கச் சாத்தியமுண்டு”  இப்பொழுது எதிர்திசையில் இருக்கும் கிழவர், வழக்குரைஞர்  உள்பட  ‘கனவானே உங்கள் வாதத்தில் மட்டுமே முற்றிலும் உண்மை இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது’என்று மறுப்பு கூறுகிறார்கள். மறுப்பது உங்கள் உரிமை என்பதுபோல் “திருமணங்கள் எல்லாக் காலத்திலும் இருக்கின்றன.  பெரும்பாலும் கடவுளின் தண்டனைக் காத்திருக்கிறது என்று பெரும்பாலானோர் நம்புவதின் மூலமாகத் தங்கள் வாழ்க்கையில் தங்களின் விருப்பங்களுக்கு மாறாகப் புனிதமாக வாழ்வதைப்போல் மோசடி செய்துக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் கணவனும் மனைவியும்; ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு பலாத்கார வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அதன்மூலம், சீக்கிரத்தில் மனக்கசப்பு உண்டாகிச் சண்டையிட்டுக்கொண்டும், புறங்கூறிக்கொண்டும் நாளுக்கு நாள் பிரச்சனை வளர்ந்துகொண்டுபோகிறது. இப்படிப்போனதின் பலனாகத்தான் என் மனைவியை நான் குத்திக்கொன்றுவிட்டேன்.” என்று உணர்வுப் பொங்கச் சொல்லும்போது எதிர்த்திசையில் இருப்பவர்கள் கேட்டு அதிர்ச்சியுறு கிறார்கள். அடுத்த, ஸ்டேஷன் வந்தபோது சிலர் இறங்குவது போலவும்; சற்று அடுத்தப்பெட்டிக்கு நடப்பதுபோலவும்; எல்லோரும் நழுவி விடுகிறார்கள்.  ஒருவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். (அவரையே கதையாசிரியராகவும் எடுத்துக்கொள்ளலாம்)  கனவான் தன் மனைவியைக் கொல்லும் படியானச் சந்தர்ப்பம் எப்படி வந்தது. இந்த வாழ்வில் ஒருவரை ஒருவர் (ஆண் பெண்) சார்ந்து வாழ்கிற குடும்ப உறவு ஏன் பெரும்பாலும் நீடித்து நில்லாமல் போகிறது.’ அதற்குப் பொறுப்பாளி யார்? சமூகத்தால் அதற்குத் தீர்வுக்கிடைக்கிறதா? பிரச்சனை எவ்விதம் வருகிறது என்ற காரணத்தைச் சொல்லுகிறார். தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது என்கிற விவாதத்தையும் வைத்து,  கனவான் தன் கடந்த கால வாழ்வை அந்த நபரிடம் சொல்லிச்செல்கிறார். இது ஏதோ ஒருவர் சார்ந்த வாழ்முறையல்ல. நாடுகடந்து, மொழிகடந்து பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பொருந்தும் விதத்தில் வாழ்வின் விவாதத்தை வைத்துள்ளார்.

காதலை ‘லியோ’ இப்படியாக அறிமுகப்படுத்துகின்றார். 1“ஒரு அழகானப் பெண்ணைப் பார்க்கும்போது நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படுகிறது இதைதான் நீங்கள் காதல் என்று சொல்லுகிறீர்கள்” மேலும், 2“கவித்துவம் நிறைந்த காதல் என்று சொல்கிறீர்களே; அது அறப்பண்புகளால் ஏற்படுவதில்லை. உடல் உரசுவதால், முடியலங்காரத்தால், உடையின் வர்ணஜாலங்களால் அதன் வடிவமைப்பால் ஏற்படுகின்றது, என்பது பெண்களுக்கே நன்றாகத்தெரியும்” 3“காதல்  இலச்சியப் பூர்வமானதும் மேன்மையானது என்று கருதப்படுகிறது. ஆனால், அது உண்மையில் மிகக்கீழ்த்தரமானதாகவும் பன்றிகளுடைய குணம் சார்ந்ததாகவும் இருக்கிறது” என்கிறார்.  ஒரு நபர் காதலியைப் பிடித்து விட்டால் அந்தக் காதலியிடம் எப்படி கண்மூடித்தனமாக நடந்துகொள்கிறான் என்பதையும் கூறுகிறார். 4“ஒரு அழகானப் பெண் அபத்தங்களைப் பேசலாம், நீங்கள் அதைக்கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவள் பேசுவது அபத்தங்கள் அல்ல. அறிவார்ந்த விஷயங்களைப் பேசுகிறாள், செய்கிறாள், அவற்றில் ஏதோ அழகு இருப்பதாக நினைக்கிறீர்கள்.” என்கிறார்.  உண்மையில் பல ஆண்கள் அப்படிப் புரிந்துகொள்வதால்தான் பெற்றோர்கள் பிச்சை எடுக்கவும், பாதுகாப்பு இல்லங்களை தேடியும் செல்கிறார்கள்போல.


பெண்களை இச்சமூகம் எப்படி வைத்திருக்கிறது என்பதையும் பல இடங்களில் வாதிக்கிறார். 1“ ஒரு பெண் அவளுடைய இயல்புக்கு மாறான வகையில் ஒரே சமயத்தில் கர்பவதியாகவும், குழந்தை வளர்க்கும் தாயாகவும், தன் கணவனுக்கு மனைவியாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் இதன் பொருள்” இந்த நிலமையை அனுபவிக்கிறப் பெண்கள் பலர் பலவித நெருக்கடிகளுக்கு ஆளாகித் தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படுத்தியும் விடுகிறார்கள். 2“ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சம உரிமைகளைக்தர மறுத்து அவர்களை அவமதித்ததற்காக, ஆண்களுடைய சிற்றின்ப உணர்ச்சிகளை முடிக்கிவிட்டு பொறியில் சிக்க வைத்து அவர்கள் பழிவாங்குகிறார்கள்.” 3“ பெண்கள் தங்கள் கணவன் மார்களிடமிருந்து கீழ்மையானக் குணங்களைக்கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஆண்களின் தூய்மையை நம்புவதாக நடிக்கிறார்கள்.” 4“ஒயினும், பெண்களும், கவிதைகளும் என்று ஜெர்மன் கவிஞர்கள் பெண்ணைப்பற்றிக் கவிதைப் பாடியுள்ளார். மூன்றுமே போதைத்தரக்கூடிய போகப்பொருளாகவே கவிதைகளில் உருவகம் செய்திருக்கிறார்” இப்படித்தான் நாவல் முழுதும் இயங்குகிறது. வாழ்வியலில் அனைத்துத் தரப்பினருக்குமான இரகசியங்களை அவிழ்த்துக் கொண்டேபோகிறது.

டால்ஸ்டாய் இன்னொரு உண்மையையும் வைக்கிறார்.1“குழந்தைகள் என்றால் பேரானந்தம், கடவுளின் அருட்கொடைகள் என்கிறார்கள். அது எல்லாம் பொய் குழந்தைகள் துன்பம் என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஏதோ ஒருசமயத்தில் தாய்கள் அதை வெளிப்படுத்தியும் விடுகிறார்கள்.” சற்று ஆழ்ந்து யோசித்தால் இது உண்மைதான் என்பது விளங்கும். பாத்ரூமில், தானாகக் கால் அலம்பிக்கொள்ள கற்றுக்கொண்டால்; அதன்பிறகு கடமைக் குதான் பெற்றோர், பிள்ளை உறவு. தலைக்கு எண்ணைத் தேய்க்கும் அம்மாவின் கைகளில் இருந்து சீப்பைப் பிடிங்கிக்கொள்கிறான். 'அம்மா என்று சொல்லத் தயங்கி, குடு நானே வாரிக்கொள்கிறேன்' என்கிறான். தினந்தோறும பள்ளி வாசலுக்கு மதிய உணவுக் கொண்டுவந்தாலும், என்றாவது ஒருநாள் ஆசிரியரைப் பார்க்கிறேன் என்றதற்காக “நாளையிலிருந்து நீ வரவேண்டாம்” என்று முரைக்கிறான். ஆணானாலும் ,பெண்னாலும் திருமணத்திற்குப் பிறகு அவசர தேவைக்கு அடகுவைத்து தற்காலிகத் தேவையைப் பூர்த்திசெய்ய உதவும் பொன் நகைதான். சிலநேரம் (சிலது) நம்மிடம் திரும்பி வராமலே முழ்கிவிடும், (சிலது) அதிகமாக நஷ்டப்படுத்திய பிறகு கைக்கு வரும், அதன் பிறகாவது எப்போதும் நம்முடன் இருக்குமா சந்தேகம்தான். இப்போது சொல்லுங்கள் ‘லியோ’ சொல்வது சரிதானே?. (நூறில் ஒன்று தங்கமாய் இருக்கும் அது விதி விளக்கு).



இந்நாவல் ஆண் சார்பாக மட்டுமே நின்றுப் பேசவில்லை. பெண்களுக்கு இழைக்கப்படும் சமன்பாடற்றக் குளறுபடிகளைச் சுடடிக்காட்டுகிறார். அதே சமயம் பெண்கள் லேசுபட்டவர்கள் அல்ல எண்பதையும் சுட்டுகிறார். 1“ஒரு பெண் ஒரு ஆணை மயக்கிவிட்டால் மகிழ்ச்சி அடைகிறாள், தன்னுடைய மிக உயர்ந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறாள். அது கடந்த காலத்தில் அப்படித்தான் இருந்தது. எதிர்காலத்திலும் அப்படித்தான் இருக்கும். இது திருமணமாகாத பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும் பொருந்தக்கூடியது.” என்று பெண்கள் குணம் சார்ந்து சொல்லுகிறார்.

கனவான் வாலிபவயதில் பல பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிறான். (அதற்கானச் சூழலை இந்தச் சமூகம்தான் அவனுக்கு கட்டமைத்துத் தருகிறது. மனம் போனபடியானக் கேளிக்கைகள், ஆடம்பரமானக் கொண்டாட்டங்கள் ஒருவரைத் தாழ்த்தி ஒழுக்கக்கேடன் என்றும். ஒருவர் தவறுசெய்தாலும் உயர்த்தி வசீகரிப்பவள், வசீகரிப்பவன் என்றும் கட்டமைத்து வைப்பதில்தான் இப்படியானச் சம்பவங்கள் நடக்கிறது. மனிதனின் உள்ளத்தில் நீதியின் குரல் ஒலித்துக்கொண்டே இராதபட்சத்தில் இப்படியான செயல் வெளிப்பட் டேத்தீரும்.) ஆனால், தனக்கு மனைவியாய் வருபவளிடத்தில் இனிமேல் உண்மையாய் இருக்கவேண்டும் என்பதைக் கடமையாகக்கொண்டு வாழ்க்கைத் தொடங்குகிறான். அவன் எதிர்பார்த்துபோல் இனிமையானதாக இல்லை. ஆண் பெண் உறவில் எத்தகையதான முரண்பாடுகள் எழுகின்றது. அந்த முரண்பாடுகள் ஏற்படுவதற்கு தான்சார்ந்த செயல்பாடுகளில் அன்பற்று, ஒழுங்கின்மையுடன் செயல்படுதலே என்பதை வைக்கிறார். முப்பிரி கயிறு அன்புகலந்து இறுகுகிறபோது, நூல் உறுதிபடும் அதுவே அரக்கத்தனம் சேர்ந்து மேலும், மேலும் சற்று இறுகுகிறபோது எத்தகையதான வலுவுள்ள கயிறானாலும் அறுவதைத்தவிர வேறு வழியில்லை. இப்பொழுது கனவானுக்கும், மனைவிக்கும் இடைவெளி தொடரும்போது கனவானின் பால்யகால சினேகிதன் நுழைகிறான். கனவான் குடும்பத்தில் பிரச்சனை கூடுகிறது. சூழல் மேலும், ஒருவரில் ஒருவர் அன்பற்றதாக மாறிக்கொண்டே செல்கிறது. ‘வருடங்கள் கடந்து வாழ்கிற மரத்தை, இயந்திரமான ஜேசிபி தனது இடதுகையால் ஐந்து நிமிடத்தில் லேசாகத்தள்ளி சாய்துவிடுவதுபோல’ கனவான் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்கிறான். சிறிதுநாள் கழித்துக் கனவான் விடுதலை பெற்றுவிட்டான். கொலையுண்ட பெண்ணை எந்தச் சூழலிலும் வேசியாகவோ கீழ்மையான செயல்பாடு நிறைந்தவளாகவோ ‘லியோ’ காட்டமாட்டார். கனவானுக்கும் விடுதலைக் கொடுப்பதின் மூலமாக அவனும் ஒரு கொடூரமானவன் இல்லை என்பதை வைப்பார். வாழ்வியலில் இத்தனைச் சிக்கள்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால், மனிதன் எத்தகைய செயல்களை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார். இதற்கு ஆண் பெண் ஒவோருவரும்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்

நாவலின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. வாசிக்க எந்தத் தடையையும் ஏற்படுத்தாவண்ணம் மிக அற்புதமாக இருக்கிறது. ‘காதலின் இசை’ ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய முக்கியப் படைப்பு.

எமி




Monday, February 13, 2012

கவிதை

 குருட்டாட்டம்


கண்களைக் குருட்டாட்டம்
காட்டுகிறது இருள்
நீயோ
அதற்குள் நீச்சலடித்து வருகிறாய் 
கண்கூசாத ஒளியை உமிழ்ந்து
இறக்கைத் தெரியாத மின்மினியாய்


உலை  இல்லாமலே
குட்டி விளக்குடன் வருகின்றாய்
அது  கண்களைக் கூசச்செய்யவும் இல்லை
மனதுக்குப் பிடித்தமானபடி இருக்கிறது
உன் பய்னதராத வெளிச்சம்
இருந்தாலும்
ஏற்றுக்கொள்வேன்  இரவுமுழுதும்.

விடிந்தபொழுது
உன் தோளில் சாய்ந்தபடியே
நான்
மரணிக்க வேண்டும் என்ற வார்த்தையை
என் வாயினால் வரவழைக்க
நீ ஆசைப்படுவாய்


இரு இறக்கையும்  
சமநிலைச் செயல் குறையோடு
எந்தப் பறவை இலக்கை எட்டிவிடமுடியும்
நீ சொல்லும் காதலில்
மின்மினியின் ஒளிகூட இல்லாமல்
அடிக்கடி குருட்டாட்டம்
தலைகாட்டுகிறது எனக்கு.


எமி



Saturday, January 28, 2012

கவிதை

                                          அறுவடை செய்கிறது

சோம்பேரியான
பொறுக்கிச்சமூகம்
என் பாட்டனின் அப்பனுக்கு
திண்ணை ஈந்திருந்தால்
கற்று
இருமாந்த இரவில்
தினவு எடுத்த அவன் குறி
பாட்டியின் குகை கண்டிருக்கும்

அதிலிருந்து வடிந்த
என் பாட்டனின் மூளை
சற்று முறுக்குடைந்து
திறவுகோலினுள் ஓரத்தில்
கோணிக்குள் அமைந்திருக்கும்

அதிலூர்ந்து கசிந்து
அருஞ்சுவை மெருகேறி
அப்பனுக்கு அர்ப்பணிப்புக்கூடி என்னை
அழகின் ஊட்டிக்கோ, ஆலப்புழைக்கோ
அரிச்சுவடிக்கு அனுப்பியிருப்பான்

தாய், தத்தித்தத்தி நடந்தபோதே
தலயணை காவியங்களை
விளையாட்டுக் காட்டிக்கொண்டே
தந்திரமாய் ஊட்டியிருப்பாள்

உலகத்தைப் பொருட்படுத்தாததால்
கொட்டிக்கிடக்கும் என்நேரத்தில்
தாஸ்தாவெஸ்கியையும், டால்ஸ்டாயையும்
அன்னாந்துப் பார்க்காமல்
அதன் மூல மொழிகளில்
நுழைந்துப் பிழிந்திருப்பேன்

அதனை ஒத்திராமல்
சுவை மிகுந்து வடிய
இருமடங்காய் கொடுத்திருப்பேன்

தற்போது
குருடன்
தன் மனைவியை கவிச்சியாகவும்
முடவன் தன் கால் சட்டைக்குள்
கழிந்துவிடுவதுபோலவும்
என் கண்ணீரை எழுதும்போது
கண்ணீருக்கு ‘ன்’னகரத்தையும்
மலத்துக்கு ‘ள்’ளகரத்தையும்
போட்டு எழுதுகிறேன்
வீரியமாய்
அறுவடை செய்கிறது சமூகம்.

ஜேடி



Thursday, January 26, 2012

கட்டுரை

என் சிறுகதைத் தொகுப்பின் எதிர்வினை சாரத்தை ஒட்டியக்கட்டுரை
                      
                       மூக்கு அறுபடும் படைப்புகள்

காஞ்சிபுரத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பு இலக்கியத்தின் பங்கு என்ன என்று யோசிக்கின்றபோது,  எனக்குத் தெரிந்தளவில் பெரிதாக சாதித்து விட்டோம் என்று சொல்லுகிறதற்கு ஆதாரம் ஒன்றுமே கிடைக்கவில்லை. தொடர்ந்து இலக்கியத்தோடு போராடுகிறோம் என்று சொன்னாலும் தமிழக அளவிலாவது படைப்பு இலக்கியத்தில் தீவிரமான பங்கு வகிக்கின்றவர்கள் எவராவது இப்பகுதியின் மக்களை ஒரு தேர்ந்தப்படைப்பாளியாக ஏற்றுக்கொண்டிருக் கிறார்களா? ஒரு சிலர் எக்பர்ட் சச்சிதானந்தத்தை குறிப்பிடுகின்றார்கள். அவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகாலம் இக்காஞ்சிமண்ணில் வாழ்கின்றார். பெரும்பாலும்  இப்பகுதியின் கதைக்களத்தையே பயன்படுத்தியிருக்கின்றார். இருந்தாலும் அவரை நாம் முழு மனதுடன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவராக ஏற்பதில் தயக்கம் காட்டுகின்றோம். துரதிஸ்டம் என்னவென்றால் இலக்கியம் என்று வருகின்றபோது அவரேகூட காஞ்சிபுரத்திலிருந்து சற்று விலகி நின்று தன்னை அடையாளம் காட்டுகின்ற நிலைகூட இருக்கலாம். அது நாம் அவரை சற்று தூரவைத்துப்பார்பதனாலோ அல்லது அவருக்கு பிறப்பிடத்தின் உணர்வு தங்கியிருப்பதானாலோ நிகழ வாய்ப்பிருக்கிறது. 

காஞ்சிபுரத்தைப் பொருத்தவரை தீவிர படைப்பிலக்கியவாதிகள் உடனான இலக்கியம், ஏன் காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து புறக்கணித்துச்செல்லுகிறது. இதற்கு காரணம்தான் என்ன என்று நான் தீவிரமாக யோசிக்கிறேன். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக படைப்பைத்தொடாமலே வெறும் பேச்சாகவே பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறது. மேலும் பல அமைப்புகள் முக்கியமான படைப்பாளர்களை அழைத்து விவாதித்தாலும் விமர்சனம் என்ற பெயரில் அவர்களை நிம்மதியுடன் போகச்செய்த நிகழ்வுகள் மிகவும் சொர்ப்பம்தான். அதேவேளையில் தங்களைப் புகழ்கிறார்கள் என்கிற காரணத்தினாலேயே ஒரு சிலரை படைப்பாளிகள் என்று தங்கள் கைக்காசுகளை எல்லாம் போட்டு அவருக்கு பரிவாரம் கட்டி அனுப்புகின்ற பரிதாப நிகழ்வும் நடந்துள்ளது. அந்த நபர் சற்று தூரம் சென்று டி ஏ இன்னும் நூறு கூடுதலாகத் தந்திருக்கலாம் நிர்வாகிகள் சரியில்லைபோலும் சரி கிடைத்தவரை லாபம் என்று புலம்பிச் செல்கின்றவராகவே இருக்கிறார்.

ஒருவேளை விமர்சனம் என்பது படைப்பை, படைப்பின் மேம்பட்ட தளத்திற்கு கொண்டுசெல்கின்ற நல்லென்னத்திற்கான விமர்சனமாக இருந்திருந்தால், அதே தீவிர படைப்பாளிகள் கண்டிப்பாகப் போற்றி யிருப்பார்கள். காஞ்சிபுரத்தின் விமர்சகர்களைத்தேடி தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ள ஓடி வந்திருப்பார்கள். அதன் மூலமாகவாவது காஞ்சிபுரத்தின் இலக்கியப்பங்கு வாழ்ந்திருக்கும். அதை விடுத்து எழுத்தாளர்களின் ஜாதியப்பார்வை, மதப்பார்வையை மட்டும் தூக்களாகவும், அதற்கும் மேலாக விமர்சிக்கின்ற தாங்கள்தான் படைப்பாளர்களைவிட ஜாம்பவான்கள் என்கிற மனோபாவம்  எப்போதும் மிகுந்து (யாரும், யாருக்ககும் குறைந்தவர்கள் அல்ல என்பதை மறந்து) நின்றிருக்கிறது.

தன் குடும்ப நிகழ்வுகளில் குறைபாடு இருந்தாலும் சில பெண்கள் வெளியில் சென்று வருபவர்களின் சிந்தை குளிர்ந்து இருக்கும்போது, குடும்பத்தில் இப்படி எல்லாம் குழப்பம் நிலவுகிறது அவைகளை கண்டிப்பாக சரிசெய்துக்கொள்ளவேண்டும் என்று ஆலோசனை சொல்லுவாள். சில குடும்பத்திற்கு தன்னால் இழப்பையே கூடுதலாக தருகிற நபராய் இருந்தாலும் குடும்பத்தின் முக்கியமானவர்கள். களைத்து வந்து வாசலில் மிதியடியை கழட்டும்போதே காதில் ஊதிவைப்பார்கள். இதில் எது சிறந்தது என்று நாம்தான் முடிவுசெய்யவேண்டும். அதைப்போலத்தான் படைப்ப விட்டு தன் சொந்த விருப்பு, வெறுப்பைக்கொண்டு படைப்பாளனை கொச்சைப் படுத்தும் எண்ணத்துடன் விமர்சனம் செய்யும் நபரை மேலேக்குறிப்பிட்ட இரண்டாம்தர நபரோடுதான் என்னால் ஒப்பிடமுடிகிறது. மேலும் நான் நல்ல படைப்பை உருவாக்க ஐம்பதுமுறை கதைக்கருவையோசித்து, பத்துமுறை (நல்ல வாசகமாக அமையாத) வாசகத்தை அடித்து திருத்தி, மூன்றுமுறை முழுமையான கதையாக நான் உருமாற்றிக் கொண்டுவரும்போது. வாசகன் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது (படிக்காவிட்டாலும்) படைப்பின் (புரிபடாத)  வாசகத்தை யோசிக்கக்கூடாதா? வாசித்த மாத்திரத்தில் மனதில் தோன்றியதை, தோன்றிய மாத்திரத்தில் கூறிவிடுவது சரியான கருத்தாகுமா? கவனிக்கவேண்டும். 

இவ்வளவு காலம் ஓயாத செயல்பாட்டால் படைப்பு இலக்கியத்தில் காஞ்சிபுரம் என்ன சாதித்து இருக்கிறது. அதற்கான வரலாறு ஏதாவது இருக்கிறதா? தீவிரமான இலக்கியத்தில் ஓரளவேனும் ஏற்கும் விதத்தில் ஒரு சுமூகமான போக்கு தொடர்ந்து இங்கு நிகழாமலே இருந்திருக்கிறது. புதிதாக ஆர்வத்துடன் வருகின்றவர்களை வரும்போது ஆர்வத்துடன் அழைத்து உபசரித்தாலும் அவன் தப்பித்தவறி எழுதிவிட்டால் உனக்கு என்னத்தெரியும் என்று உதாசினப்படுத்தும் போக்கு நிலவுகிறது. நாங்கலெல்லாம் எத்தனை வருஷம் சர்வீஸ் நாங்களே கையைக்கட்டிக் கொண்டு நிற்கிறோம் என்ற பேச்சு பொறித்தட்டி நிற்கிறது. காஞ்சிபுரத்தின் மிக முக்கியப்போக்கு, இலக்கியத்தை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்கிற எண்ணம், நல்லதுதான். ஆனால் நிஜவாழ்வில் கீழ்த்தரமான செயல்களுடன் வாழ்க்கை வாழ்பவர்களை போற்றியும் அவர்களின் வால்பிடி நபர்களாகவும் நாம் ஒவ்வொருவரும் இருக்காமலிருக்கிறோமா? என்று கேட்டால் கேள்விக்குறிதான். இலக்கியப் பண்பு என்பது இந்த இருபத்திநான்கில் ஒன்பது என்கிற குறுகிய வட்டத்திற்குள் மட்டும்தானா?

விரிந்த வான் முழுவதும் ஒட்டிக்கிடக்கும் எண்ணிலடங்கா நட்ச்சத்திரங்களைப்போல் மனிதவாழ்வியலின் மேன்மையை நோக்கி அமைந்திருக்கும் நோக்கங்களை, ஆய்வுகளை, மன ஓட்டங்களை, அதன் சிறப்புகளை, செயல்பாடுகளை விளக்கும் நூல்களைப் படிக்காமல் ஒருவேளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தால் அதை எந்த விமர்சன நபரும் புறந்தள்ளத் தேவையில்லை. தானாகவே புறக்குழியில் விழுந்து தன்னைத்தானே புதைத்துக்கொள்ளும்.

காஞ்சிபுரத்தில் முப்பது ஆண்டுகாலம் தீவிர இலக்கியப் பணிக்கு வரலாறு இருக்கிறது என்றால் அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் என்னையறியாமலே நானும் இலக்கியப் பணியாற்றியிருக்கிறேன். பதிநான்கு வயதில் நகரத்தை நோக்கியப் பள்ளியில் என்னை ஒன்பதாம் வகுப்பு சேர்த்தார்கள். அப்பள்ளியின் சற்றே புதியநிலையில் இருந்த ஒன்றிரண்டு கட்டிடங்களைப்பார்த்து மிரண்டு போனேன். “அப்பா. இது நம்மூரைப்போன்று சிறிய பள்ளிக்கூடம் இல்லை. நான் நிச்சயம் பெயிலாகிவிடுவேன். உங்கள் கனவுகளை, காலம் கழித்து வீனாக்கவிரும்பவில்லை. தற்போது உழைக்கின்ற பணமாவது மிச்சப்படும் அதனால் வீட்டை விட்டு போகின்றேன் என்னைத் தேடவேண்டாம் என்று கல் நெஞ்சத்தையும் கரைத்துவிடுகின்ற மிக உருக்கமான வார்த்தைகளால் கடிதம் எழுதிவைத்து விட்டுப்போனேன். அந்த கடிதத்திலிருந்து தொடங்குகிறது என் இலக்கியப்பணி. தெருக்களில் காற்றில் பறந்து வரும் ஏதோ ஒரு காகிதத்தில் கிடக்கின்ற எழுத்துக்களை படிப்பதும், அக்கால கட்டத்திலேயே ரீமிக்ஸ் என்று தெரியாமலே திரைப்பட பாடல்களை அதே மெட்டில் வேறு உயிருள்ள வார்த்தைகளால் உருவாக்கி புதிய பாட்டுக்களாக கேசட்டுகளில் பதிவுசெய்து தெருக்களில் போட்டிருக் கிறோம். இப்படி தொடர்ந்து செயல்பட்டும் இருக்கிறோம்.

கடந்த காலங்களில் இலக்கியப்பணியில் நுழைந்து யாரையும் போக்குக்காட்டவில்லை. ஏழு வருடங்களில் இருபது ஆயிரத்துக்கும் மேலாக புத்தக்ங்களை சிறுப்பத்திரிகை உள்பட பணம்கொடுத்து வாங்கியிருக்கிறேன். (இங்கு தோழர்களின் மனைவியர்கள் இல்லை எண்பதால் சொல்கிறேன். நண்பர் புல்வெளி காமராஜ் ஒரே நாளில் பத்தாயிரத்துக்கு புத்தகம் வாங்குகிறார் அது வேறுவிஷயம்) என் சக்த்திக்கு நான் வாங்குவது மிக கூடுதலான விலைதான். மேலும் ஏராலமாகக் கொட்டிக்கிடக்கும் இலக்கியச் சஞ்சாரங்களை உடனுக்குடன் படித்துவிட இன்டர்நெட் கனைஷமூலம் குறைந்தபட்சம் மாதம் ஆறுநூறு இப்படித்தான் நான் இலக்கியத்தை தொடர்ந்து கடந்துசெல்கிறேன். என் உள்ளத்தைப் பிடித்துக்கொள்கிற புத்தகம் எதுவோ அதைப் படித்துவிடுகிறேன். ஏதாவது ஒரு காலகட்டத்தில் அது எனக்குள் கட்டாயம் வெளிப்பட்டுவிடுகிறது. என்னளவில்  நிஜத்தில் மோசமான மனநிலை கொண்டு எழுதும் நல்லப்படைப்பும், (நிஜத்தில்) நல்ல மனநிலை கொண்டு எழுதும் மோசமானப்படைப்பும் தரத்தில் ஒன்றாகவே கருதுகிறேன். எந்த சூசகமும் வைத்துக்கொண்டு வாழ்வை அனுகினால் கட்டாயம் நல்லப்படைப்பு கைக்கூடுவதில்லை என்றே உணர்கிறேன். இழப்புகளை எதார்த்தமாய் ஏற்று சில நேரம் நிற்கதியாய் நிற்கிறபோதுதான். என்னுள் வீரியம் உள்ள படைப்புகள் வருகிறது என்று நம்புகின்றேன். காஞ்சிபுரத்தை பொறுத்தமட்டில் அப்படியான இழப்புகளை சந்தித்தவர்கள் மிகக்குறைவுதான் என்று நினைக்கிறேன். நல்ல படைப்பாளன் உருவாகாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்தான்.

என் சிறுகதைத்தொகுப்பை சிலர் சேற்றில் வீசலாம், சிலர் குப்பைக்கூடத்தின் பக்கத்தில் வைக்கலாம், சிலர் புத்தக அலமாரியில் வருசைப்படுத்தி அடுக்கலாம் எப்படியிருப்பினும் எனக்கு மகிழ்ச்சி இல்லை. மாறாக இப்பகுதியின் இளம் தலைமுறை ஆர்வமாக வந்து படைப்பாக்கத்துக்கு பங்களிப்பைத்தரும்போது படைப்பு செழுமையடைய முன்னோடிகளாய் இருப்பவர்கள் உதவிசெய்யவேண்டும். அப்போதுதான் இனியாவது இப்பகுதியில் படைப்புகள் சிறந்து உருவாகும். அப்படிச்செய்ய மனம் இல்லை என்றால், அவசர அவசரமாய் தனிப்பட்ட அரசியல் தன்மையுடன் படைப்பாளியின் மூக்கை கர கர வென்று அறுத்து கையில்கூட கொடுக்காமல் காக்காய்க்கு போட்டுவிடாதீர்கள். 

ஜேடி

Tuesday, January 17, 2012


                                           

வாழு நேற்றோடுன் இன்றும்

எல்லாம் முடிந்தது என்று விழுகிறபோது முடிவே இல்லாமல் தொடர்கிறது வாழ்க்கை. 

அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், நண்பன், குரு எல்லாரும்தான் எனக்கு மிகவும் அருகில் இருக்கிறார்கள்.
நான் தனியாகவே விடப்படுகின்றேன்
அவர்களுக்குறிய யோசனையை என்மீது திணிக்கிறார்கள் என்று நான் விலகிவிடும்போது.

எனக்கு நன்றாகவே தெரிகிறது அவர்களை அதிகமாக நேசிக்கிறேன்
என் மனம் அவர்களின் பேரில் தீரா காதல் கொண்டு அலைகிறது என்று
இருந்தாலும் என்னை தனியாகவே விட்டுவிடுகிறார்கள்
போனால் போகிறது என்று என்குடும்பத்தார் வேளைக்கு வயிற்றை நிறப்பிவிடுகிறார்கள்
நண்கர்களும் கைவிட்டுவிடுவதில்லை வெளியில் பார்க்கிறபோது ஒரு வணக்கம் சொல்வதோடு பிரிந்து விடுகிறார்கள்.

எல்லாம் பொய் என்கிறபோது வழியிருக்கிறது நீ உணரவேயில்லை
என் கைங்கிரயங்களைத்தருகிறேன் சீக்கிரம் வெற்றி அடைவாய் வாழ்த்துகிறேன் என்கிறான். 
அவன் கண் முன்னேதான் மிக உன்னதமான முறையைக் கையாண்டு மேல் வருகின்றேன்
அவனேதான் உன் முட்டால்தனமான முயற்சியால்  வானங்களின் நட்சத்திரங்கள் பூமியில் கொட்டிக்கொண்டேயிருக்கிறது
நீ வாழ்வதை நிறுத்திக்கொள் என்கிறான்.

பேசாமல் பேசுகின்றவர்களின் மூளையில் பதிந்திருக்கும் பாசம், அன்பு, பொய்யும் பொய்யில்லாக்கோபம், வேதனை, அசாத்தியம் இவைகளின் ருசியை பருகிக்கொண்டேயிருக்கும்போதுதான்
தலையில் இளமையைக்காட்டு கின்ற  கறுப்பு மயிர்களைக்காட்டிலும்  நரைக்கும் மயிர்கள் வீரியமாக வளர்வதை கண்டுகொண்டேன். நரைத்த மயிர்கள் வேகத்தை எட்டும்போது
நான் வாழத்தான் வேண்டும் மிக அவசியமாக சமூகத்தின் பதுங்குக்குழிகளில் படிந்திருக்கும் கசடுகளை கண்டுபிடித்து என் பயன் தரும் மனசாட்சியின் மூலம் நேற்றும இன்றும கலந்து விதைத்துவைக்க.


ஜேடி



Thursday, January 12, 2012

                                           இயற்கை

காற்று
தெருஓரம்தான்
மெல்ல நடத்கிறது
வழி தெரிந்தும்
டயர், பிளாஷ்டிக் எரியும்
என் வாசலை
புறக்கணித்துச் செல்கிறது

நான் இருசக்கரத்திலிருந்து
வெளியேற்றும்
கரும்புகைச்சலால் 
தினந்தோரும்
அழகு மிளிர
குளிர்மையுடன்
எழுந்து கொள்ளும்
வான்கொளுத்தி
உயர உயர வளரும்போது
என் கறுத்த மேனியைஉருக்கி விடும்படி 
எரிகணைகளை 
துப்பிக்கொண்டே போகிறது

குளங்ளில்
தங்கிய நீர்
தன் சுற்றதின்
கரைகளில் பூக்கும்
புல்பூண்டுகளை
செழுமையாக்கியது
இன்று
முடிந்தளவு அவைகளை
சேமிப்புக் கணக்கின்
எண்களால் நிறப்பிக்கொண்டதால்
என் சுயம் சார்ந்தவர்களோடு
நானும்தான்
நாவரண்டு
காணாமல்போகிறேன்.

இயற்கையின் தரிசனங்களை
இரகசியமாகவேணும்
தரிசிக்காதபோது
இயற்கை
வெறுமையாகவே
விட்டு விடுகிறது
நாம் நம்
சந்ததிக்கு
விட்டுச்செல்கிறது போலவே.

ஜேடி