என் சிறுகதைத் தொகுப்பின்
எதிர்வினை சாரத்தை ஒட்டியக்கட்டுரை
மூக்கு அறுபடும் படைப்புகள்
காஞ்சிபுரத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பு இலக்கியத்தின்
பங்கு என்ன என்று யோசிக்கின்றபோது, எனக்குத் தெரிந்தளவில் பெரிதாக
சாதித்து விட்டோம் என்று சொல்லுகிறதற்கு ஆதாரம் ஒன்றுமே கிடைக்கவில்லை. தொடர்ந்து இலக்கியத்தோடு போராடுகிறோம் என்று சொன்னாலும் தமிழக
அளவிலாவது படைப்பு இலக்கியத்தில் தீவிரமான பங்கு வகிக்கின்றவர்கள் எவராவது இப்பகுதியின்
மக்களை ஒரு தேர்ந்தப்படைப்பாளியாக ஏற்றுக்கொண்டிருக் கிறார்களா? ஒரு சிலர்
எக்பர்ட் சச்சிதானந்தத்தை குறிப்பிடுகின்றார்கள். அவர் ஏறக்குறைய நாற்பது
ஆண்டுகாலம் இக்காஞ்சிமண்ணில் வாழ்கின்றார். பெரும்பாலும் இப்பகுதியின் கதைக்களத்தையே பயன்படுத்தியிருக்கின்றார்.
இருந்தாலும் அவரை நாம் முழு மனதுடன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவராக ஏற்பதில் தயக்கம்
காட்டுகின்றோம். துரதிஸ்டம் என்னவென்றால் இலக்கியம் என்று வருகின்றபோது அவரேகூட
காஞ்சிபுரத்திலிருந்து சற்று விலகி நின்று தன்னை அடையாளம் காட்டுகின்ற நிலைகூட
இருக்கலாம். அது நாம் அவரை சற்று தூரவைத்துப்பார்பதனாலோ அல்லது அவருக்கு
பிறப்பிடத்தின் உணர்வு தங்கியிருப்பதானாலோ நிகழ வாய்ப்பிருக்கிறது.
காஞ்சிபுரத்தைப் பொருத்தவரை தீவிர படைப்பிலக்கியவாதிகள் உடனான இலக்கியம்,
ஏன் காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து புறக்கணித்துச்செல்லுகிறது. இதற்கு காரணம்தான் என்ன என்று
நான் தீவிரமாக யோசிக்கிறேன். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக படைப்பைத்தொடாமலே வெறும்
பேச்சாகவே பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறது. மேலும் பல அமைப்புகள் முக்கியமான படைப்பாளர்களை அழைத்து விவாதித்தாலும்
விமர்சனம் என்ற பெயரில் அவர்களை நிம்மதியுடன் போகச்செய்த நிகழ்வுகள் மிகவும்
சொர்ப்பம்தான். அதேவேளையில் தங்களைப் புகழ்கிறார்கள்
என்கிற காரணத்தினாலேயே ஒரு சிலரை படைப்பாளிகள் என்று தங்கள் கைக்காசுகளை எல்லாம்
போட்டு அவருக்கு பரிவாரம் கட்டி அனுப்புகின்ற பரிதாப நிகழ்வும் நடந்துள்ளது.
அந்த நபர் சற்று தூரம் சென்று டி ஏ இன்னும் நூறு கூடுதலாகத் தந்திருக்கலாம்
நிர்வாகிகள் சரியில்லைபோலும் சரி கிடைத்தவரை லாபம் என்று புலம்பிச் செல்கின்றவராகவே இருக்கிறார்.
ஒருவேளை விமர்சனம் என்பது படைப்பை, படைப்பின் மேம்பட்ட தளத்திற்கு கொண்டுசெல்கின்ற நல்லென்னத்திற்கான விமர்சனமாக இருந்திருந்தால், அதே தீவிர
படைப்பாளிகள் கண்டிப்பாகப் போற்றி யிருப்பார்கள். காஞ்சிபுரத்தின்
விமர்சகர்களைத்தேடி தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ள ஓடி வந்திருப்பார்கள். அதன்
மூலமாகவாவது காஞ்சிபுரத்தின் இலக்கியப்பங்கு வாழ்ந்திருக்கும். அதை விடுத்து
எழுத்தாளர்களின் ஜாதியப்பார்வை, மதப்பார்வையை மட்டும் தூக்களாகவும், அதற்கும்
மேலாக விமர்சிக்கின்ற தாங்கள்தான் படைப்பாளர்களைவிட ஜாம்பவான்கள் என்கிற மனோபாவம் எப்போதும் மிகுந்து (யாரும், யாருக்ககும் குறைந்தவர்கள் அல்ல என்பதை மறந்து) நின்றிருக்கிறது.
தன் குடும்ப நிகழ்வுகளில் குறைபாடு இருந்தாலும் சில பெண்கள் வெளியில் சென்று
வருபவர்களின் சிந்தை குளிர்ந்து இருக்கும்போது, குடும்பத்தில் இப்படி எல்லாம் குழப்பம்
நிலவுகிறது அவைகளை கண்டிப்பாக சரிசெய்துக்கொள்ளவேண்டும் என்று ஆலோசனை சொல்லுவாள்.
சில குடும்பத்திற்கு தன்னால் இழப்பையே கூடுதலாக தருகிற நபராய் இருந்தாலும்
குடும்பத்தின் முக்கியமானவர்கள். களைத்து வந்து வாசலில் மிதியடியை கழட்டும்போதே
காதில் ஊதிவைப்பார்கள். இதில் எது சிறந்தது என்று நாம்தான் முடிவுசெய்யவேண்டும். அதைப்போலத்தான்
படைப்ப விட்டு தன் சொந்த விருப்பு, வெறுப்பைக்கொண்டு படைப்பாளனை கொச்சைப்
படுத்தும் எண்ணத்துடன் விமர்சனம் செய்யும் நபரை மேலேக்குறிப்பிட்ட இரண்டாம்தர
நபரோடுதான் என்னால் ஒப்பிடமுடிகிறது. மேலும் நான் நல்ல படைப்பை உருவாக்க ஐம்பதுமுறை கதைக்கருவையோசித்து, பத்துமுறை (நல்ல வாசகமாக அமையாத) வாசகத்தை அடித்து திருத்தி, மூன்றுமுறை முழுமையான கதையாக நான் உருமாற்றிக் கொண்டுவரும்போது. வாசகன் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது (படிக்காவிட்டாலும்) படைப்பின் (புரிபடாத) வாசகத்தை யோசிக்கக்கூடாதா? வாசித்த மாத்திரத்தில் மனதில் தோன்றியதை, தோன்றிய மாத்திரத்தில் கூறிவிடுவது சரியான கருத்தாகுமா? கவனிக்கவேண்டும்.
இவ்வளவு காலம் ஓயாத செயல்பாட்டால் படைப்பு இலக்கியத்தில் காஞ்சிபுரம் என்ன
சாதித்து இருக்கிறது. அதற்கான வரலாறு ஏதாவது இருக்கிறதா? தீவிரமான இலக்கியத்தில் ஓரளவேனும் ஏற்கும் விதத்தில் ஒரு சுமூகமான போக்கு தொடர்ந்து இங்கு நிகழாமலே
இருந்திருக்கிறது. புதிதாக ஆர்வத்துடன் வருகின்றவர்களை வரும்போது ஆர்வத்துடன்
அழைத்து உபசரித்தாலும் அவன் தப்பித்தவறி எழுதிவிட்டால் உனக்கு என்னத்தெரியும்
என்று உதாசினப்படுத்தும் போக்கு நிலவுகிறது. நாங்கலெல்லாம் எத்தனை வருஷம் சர்வீஸ்
நாங்களே கையைக்கட்டிக் கொண்டு நிற்கிறோம் என்ற பேச்சு பொறித்தட்டி நிற்கிறது.
காஞ்சிபுரத்தின் மிக முக்கியப்போக்கு, இலக்கியத்தை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது
என்கிற எண்ணம், நல்லதுதான். ஆனால் நிஜவாழ்வில் கீழ்த்தரமான செயல்களுடன் வாழ்க்கை
வாழ்பவர்களை போற்றியும் அவர்களின் வால்பிடி நபர்களாகவும் நாம் ஒவ்வொருவரும் இருக்காமலிருக்கிறோமா?
என்று கேட்டால் கேள்விக்குறிதான். இலக்கியப் பண்பு என்பது இந்த இருபத்திநான்கில் ஒன்பது
என்கிற குறுகிய வட்டத்திற்குள் மட்டும்தானா?
விரிந்த வான் முழுவதும் ஒட்டிக்கிடக்கும் எண்ணிலடங்கா நட்ச்சத்திரங்களைப்போல்
மனிதவாழ்வியலின் மேன்மையை நோக்கி அமைந்திருக்கும் நோக்கங்களை, ஆய்வுகளை, மன
ஓட்டங்களை, அதன் சிறப்புகளை, செயல்பாடுகளை விளக்கும் நூல்களைப் படிக்காமல் ஒருவேளை
தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தால் அதை எந்த விமர்சன நபரும் புறந்தள்ளத் தேவையில்லை.
தானாகவே புறக்குழியில் விழுந்து தன்னைத்தானே புதைத்துக்கொள்ளும்.
காஞ்சிபுரத்தில் முப்பது ஆண்டுகாலம் தீவிர இலக்கியப் பணிக்கு வரலாறு
இருக்கிறது என்றால் அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் என்னையறியாமலே நானும் இலக்கியப்
பணியாற்றியிருக்கிறேன். பதிநான்கு வயதில் நகரத்தை நோக்கியப் பள்ளியில் என்னை
ஒன்பதாம் வகுப்பு சேர்த்தார்கள். அப்பள்ளியின் சற்றே புதியநிலையில் இருந்த
ஒன்றிரண்டு கட்டிடங்களைப்பார்த்து மிரண்டு போனேன். “அப்பா. இது நம்மூரைப்போன்று
சிறிய பள்ளிக்கூடம் இல்லை. நான் நிச்சயம் பெயிலாகிவிடுவேன். உங்கள் கனவுகளை, காலம்
கழித்து வீனாக்கவிரும்பவில்லை. தற்போது உழைக்கின்ற பணமாவது மிச்சப்படும் அதனால்
வீட்டை விட்டு போகின்றேன் என்னைத் தேடவேண்டாம் என்று கல் நெஞ்சத்தையும்
கரைத்துவிடுகின்ற மிக உருக்கமான வார்த்தைகளால் கடிதம் எழுதிவைத்து விட்டுப்போனேன். அந்த கடிதத்திலிருந்து தொடங்குகிறது என் இலக்கியப்பணி. தெருக்களில் காற்றில் பறந்து
வரும் ஏதோ ஒரு காகிதத்தில் கிடக்கின்ற எழுத்துக்களை படிப்பதும், அக்கால கட்டத்திலேயே
ரீமிக்ஸ் என்று தெரியாமலே திரைப்பட பாடல்களை அதே மெட்டில் வேறு உயிருள்ள
வார்த்தைகளால் உருவாக்கி புதிய பாட்டுக்களாக கேசட்டுகளில் பதிவுசெய்து தெருக்களில்
போட்டிருக் கிறோம். இப்படி தொடர்ந்து செயல்பட்டும் இருக்கிறோம்.
கடந்த காலங்களில் இலக்கியப்பணியில் நுழைந்து யாரையும் போக்குக்காட்டவில்லை.
ஏழு வருடங்களில் இருபது ஆயிரத்துக்கும் மேலாக புத்தக்ங்களை சிறுப்பத்திரிகை உள்பட
பணம்கொடுத்து வாங்கியிருக்கிறேன். (இங்கு தோழர்களின் மனைவியர்கள் இல்லை எண்பதால்
சொல்கிறேன். நண்பர் புல்வெளி காமராஜ் ஒரே நாளில் பத்தாயிரத்துக்கு புத்தகம்
வாங்குகிறார் அது வேறுவிஷயம்) என் சக்த்திக்கு நான் வாங்குவது மிக கூடுதலான விலைதான். மேலும்
ஏராலமாகக் கொட்டிக்கிடக்கும் இலக்கியச் சஞ்சாரங்களை உடனுக்குடன் படித்துவிட
இன்டர்நெட் கனைஷமூலம் குறைந்தபட்சம் மாதம் ஆறுநூறு இப்படித்தான் நான் இலக்கியத்தை தொடர்ந்து
கடந்துசெல்கிறேன். என் உள்ளத்தைப் பிடித்துக்கொள்கிற புத்தகம் எதுவோ அதைப்
படித்துவிடுகிறேன். ஏதாவது ஒரு காலகட்டத்தில் அது எனக்குள் கட்டாயம்
வெளிப்பட்டுவிடுகிறது. என்னளவில் நிஜத்தில் மோசமான மனநிலை கொண்டு எழுதும் நல்லப்படைப்பும், (நிஜத்தில்) நல்ல மனநிலை கொண்டு எழுதும் மோசமானப்படைப்பும் தரத்தில் ஒன்றாகவே கருதுகிறேன். எந்த சூசகமும் வைத்துக்கொண்டு வாழ்வை அனுகினால்
கட்டாயம் நல்லப்படைப்பு கைக்கூடுவதில்லை என்றே உணர்கிறேன். இழப்புகளை எதார்த்தமாய்
ஏற்று சில நேரம் நிற்கதியாய் நிற்கிறபோதுதான். என்னுள் வீரியம் உள்ள படைப்புகள்
வருகிறது என்று நம்புகின்றேன். காஞ்சிபுரத்தை பொறுத்தமட்டில் அப்படியான இழப்புகளை
சந்தித்தவர்கள் மிகக்குறைவுதான் என்று நினைக்கிறேன். நல்ல படைப்பாளன் உருவாகாமல்
போனதற்கு அதுவும் ஒரு காரணம்தான்.
என் சிறுகதைத்தொகுப்பை சிலர் சேற்றில் வீசலாம், சிலர் குப்பைக்கூடத்தின்
பக்கத்தில் வைக்கலாம், சிலர் புத்தக அலமாரியில் வருசைப்படுத்தி அடுக்கலாம்
எப்படியிருப்பினும் எனக்கு மகிழ்ச்சி இல்லை. மாறாக இப்பகுதியின் இளம் தலைமுறை ஆர்வமாக
வந்து படைப்பாக்கத்துக்கு பங்களிப்பைத்தரும்போது படைப்பு செழுமையடைய முன்னோடிகளாய்
இருப்பவர்கள் உதவிசெய்யவேண்டும். அப்போதுதான் இனியாவது இப்பகுதியில் படைப்புகள்
சிறந்து உருவாகும். அப்படிச்செய்ய மனம் இல்லை என்றால், அவசர அவசரமாய் தனிப்பட்ட
அரசியல் தன்மையுடன் படைப்பாளியின் மூக்கை கர கர வென்று அறுத்து கையில்கூட
கொடுக்காமல் காக்காய்க்கு போட்டுவிடாதீர்கள்.
ஜேடி
1 comment:
உங்கள் படைப்பில் நேர்மையும் உழைப்பும் இருக்கிறது. யாருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்தாதீர்கள். தொடர்ந்து செயல்படுங்கள் அது மட்டுமே சிறந்த வழி. சகபடைப்பாளியின் வயிற்றெரிச்சல் எந்த படைப்பாளிக்கும் உண்டு. புறக்கணித்து கடந்து செல்வதே வழி. என்னால் எதாவது மனசங்கடம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும் சக படைப்பாளிக்கு உதவ எப்போதும் நான் காத்திருப்பவன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
Post a Comment