Friday, May 30, 2014

சினிமா,

தமிழ்சினிமா கூட்டுறவு இயக்கம்

எங்கள் பகுதிகளிலெல்லாம் (எல்லா ஊர்களிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்) பெண்கள் இருபதுபேர், முப்பதுபேர் குழுவாக சேர்ந்து கூட்டுறவை ஏற்படுத்திக்கொண்டு வங்கியில் கடன் பெற்று, அதைத் திரும்பச்செலுத்தி வெற்றிகரமாக இயங்குகிறார்கள் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இதற்காக பெரிதாக நேரத்தையோ, பெரிய முதலீடையோ வைக்கவில்லை. ஒருவரை ஒருவர் இணைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். நாலு பெண்கள் சேர்ந்தாக் குட்டிச்சுவர், உருப்படாது என்றதெல்லாம்போய் நல்ல ஆக்கப்பூர்வமான காரியங்கள் செய்து வாழ்கிறார்கள்.

இத்தனைக்கும் வெளிஉலகதைப்பற்றிப் பெரிய அறிதல் இல்லாமலே அவர்களால் வெற்றிகரமாக சாத்திக்க முடிகிறது.

நாம்கூட ‘தமிழ்சினிமா கூட்டுறவு இயக்கம்‘ என்று ஒன்றை உருவாக்கி, அதில் ஐநூறு உறுப்பினர்கள் (கிழிஞ்சது கிருஷ்ணகிரி. கொஞ்சம் பொறுங்கள். ஐயய்யய்யோ கொஞ்சம் சொல்லத்தான் விடுங்களேன்.) முக்கியமாக உறுப்பினர்களாக சேர விரும்புகிறவர்களுக்கு கலைகளில், இலக்கியத்தில், தொழில் முனையும் நுணுக்கத்தில் அதுசார்ந்து எதாவது ஒரு திறமை இருத்தல்வேண்டும்.

தமிழ்சினிமா கூட்டுறவு இயக்கத்திற்கு ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பித்தது, ஆளுக்கு பத்தாயிரம் முதலீடு செய்வது. ஐநூறு உறுப்பினர்கள் சேர்ந்து முடிந்ததும் அது மூன்றுமாதம் ஆகலாம் அல்லது ஆறுமாதம் ஆகலாம் இல்லை இதன் திட்டத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டதின் காரணமாக மிக விரைவாக இயக்கம் திட்டமிட்ட உறுப்பினர்களை அடைந்துவிடலாம் ஆக எப்படி இருந்தாலும் நாம் திட்டமிட்ட உறுப்பினர் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் குறைந்த பட்ஜெட்டில் சினிமா எடுக்கத்திட்டமிடுவது. (இயக்கம் உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு ஆறுமாதம் என்று வரையறுத்தால் ஆர்வலர்கள் இரண்டு மூன்று தவனைக்குள் நிர்ணயித்தத் தொகையைச் செலுத்துவதற்கும் வாய்ப்புத்தரவேண்டும்.)

மொத்த உறுப்பினர்களில், இயக்கத்தில் சேர்ந்த காலநேர முன்னுரிமை வரிசைப்படிக் கணக்கெடுத்து, பத்துபேருக்கு ஒரு பிரிதிநிதி என்று தெரிதல் செய்தபின் தமிழில் மிக நேர்த்தியாக ஒரு சினிமா எடுப்பதற்கான கதையை ஆய்வுசெய்து தேர்ந்தெடுப்பது. அதற்கு குறைந்தபட்சம் ஆறுமாதகாலம். (இதற்கான கூட்டம் இயக்கம் முடிவு செய்யும்போதெல்லாம் பிரிதிநிதி வாரியாகவும், மொத்த உறுப்பினர்கள் முன்றுமாத அடிப்படையிலும் வகுத்துக்கொள்வது நல்லது)

கதைத்தேர்வு முடிந்த ஆறு மாதத்திற்குள் ஒரு நேர்த்தியான தமிழ்சினிமாவை எடுக்கத்தொடங்குவது. எல்லாக் கணக்கு வழக்குகளையும் பிரிதிநிதிகள் முன்னிலையில் மூன்றுமாதத்திற்கு ஒருமுறை ஆய்வுசெய்துகொள்வதும், எக்காரணத்தைக்கொண்டும் முதலீடு செய்த உறுப்பினர்களின் பணம் குளைந்துபோகாமல் எடுக்கப்படும் படத்தின் ரூபத்தில் இருக்கச்செய்வதும் இயக்கத்தின் தலையாயக் கடமை.

படம் முடிந்து விநியோகம் முடிந்து ஒரு வேளை பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வியாபார ரீதியில் லாபம் கிடைக்குமானால் மொத்த உறுப்பினர்களைக்கூட்டி சமபங்குடன் பகிர்தல்வேண்டும். அதன் வெற்றி மொத்த உறுப்பினர்களையும் சார்ந்தது. ஒருவேளை நஷ்டம் எற்பட்டாலும் மொத்த உறுப்பினர்கள் கூடுகை அவசியம் மிச்சம் இருப்பதை வைத்து மீண்டும் படம் எடுக்க மீண்டும் முயற்சி செய்தல் குறித்து ஆலோசித்தல் நல்லது.

உறுப்பினர்களாக சேருகிறவர்களுக்கு முக்கியமான நோக்கம் தமிழில் நேர்த்தியான படம் எடுப்பதில் பங்குவகிக்கிறோம் என்ற பிரதான மனநிலைவேண்டும். லாபம் கிடைத்தால் சமபங்கு. லாபம் கிடைத்துவிட்டது என்று அதை வைத்து பெரிய பட்ஜெட் படம் என்று போகக்கூடாது. அந்த இடத்தில் கிடைத்ததை உறுப்பினர்களுக்கு பகிர்தல் முதல் கடமை. நஷ்டம் வந்தாலும் ஒட்டுமொத்த ஆலோசனையின்பேரில் மீண்டும் முயற்சி என்ற கொள்கையில் அனைவருக்கும் விருப்பம் இருக்கவேண்டும்.

ஒருவேளை இயக்கத்தை முன் நின்று நடத்த பொறுப்பு ஏற்கும் நபர் அவர் மேலானவர் என்று தன்னை ஒருபோதும் கருதிக்கொள்ளக்கூடாது. அவரும் சாதாரண உறுப்பினர்தான். நம் ஒட்டுமொத்த விருப்பத்திற்காகக் கூடுதலாக பணிசெய்கிறார். அவ்வளவுதான். முக்கியமாக படத்திற்காக செலவு செய்யும் ஒவொரு பணமும் உறுப்பினர்களுடையது என்ற பொறுப்பு இருத்தல் வேண்டும்.

இந்த இயக்கத்தை யாராவது முன்னெடுக்க வரும் பட்சத்தில் எனது உறுப்பினருக்கான முதல் தொகையாக ரூபாய் 5000 கொடுக்க சம்மதிக்கிறேன். அடுத்த 5000 த்திற்கானத் தொகையை இயக்கம் தந்துள்ள காலக்டுவுக்குள் கொடுப்பேன். ஆனால் இந்த இயக்கத்தின் திட்டப்படி தமிழில் நேர்த்தியான சினிமா எடுப்பதே தலையாயப்பணி, ஒரேப்பணியாக இருத்தல் வேண்டும். இதை விடுத்து வேறு காரியத்தில் பணத்தை விரயம் செய்தால் சட்டத்தின் உதவியை நாடுவேன்.

நான் எனது எந்த பதிவையும் பகிர சொல்வதேயில்லை. ஆனால் இதை பகிர்ந்து அநேக இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறேன்.

தமிழகத்தின் எந்த ஒரு மூலையிலும் ஒரு நேர்மையான, பகட்டில்லாத, எடுத்துக்கொண்ட பணியில் உண்மையாக இருக்கும் நபர்களிடம் சேர்ந்தால் தமிழ்சினிமாவில் ஒரு புதியமரபு உதிக்க வாய்ப்பு ஏற்படும்.

நண்பர்களே இப்பதிவை ஷேர் செய்து உதவுங்கள்.

டேனியல்

No comments: