Tuesday, May 13, 2014

சிறுகதை,

                                                         வாழ்த்துக்கள் 

   
அன்பு மகளே! ஒரு விண்வெளிப்பயணத்தை விட ஆபத்தான சமூகவெளிப் பயணத்திற்கு உன்னை அனுப்பி வைப்பதில் மகிழ்வடைகின்றேன். சமூக வெளிப்பயணத்தை பதினெட்டாவது வயதில் மேற்கொள்வது அற்புதமானதுதான். நீ தலை வாரிக்கொள்ளத்தெரியாத நிலையில் ஈன்றவள், உன்னை என் பக்கத்தில் நிறுத்தி. ஆழ்ந்த வருத்தம் தோய்ந்தக் கண்களால் என்னையேப் பார்த்துக்கொண்டு தன் கடைசி மூச்சை விட்டதின் அந்தக் காட்சித்தான் தற்போது நீ சமூகவெளிக்குப் போகும்போதும் கண்ணில் நிழலாடுகிறது


சமூகத்தில் அநேக சமயங்களில், அநேக இடங்களில் நாம் வாழ்தற்கான இயல்பு முடிக்கப்பட்டுவிடுகின்ற அனுபவம் சாதாரணமாக நடந்தேறிவிடும். அத்தனைக் கொடுமையானதா? இருக்காது. போகும் இடமெல்லாம் நடமாடும் மனித முகங்களில் அநேகமாக அன்பு படர்ந்திருப்பதையே என்னால் காணமுடிகிறது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பினால் அப்படிச் சொல்கிறீர்கள். என்று உனக்கு கேள்வி எழலாம். முகங்களைப்பற்றி நீ சொல்வதை ஒரு வகையில் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் மற்றெல்லாவற்றையும் விட உன்னிடம் அன்பு சிறப்பானதாக இருக்கிறது. உனக்குள் இருப்பதுபோலவே பிறருக்குள்ளும் இருக்கும் என கணிக் கின்றதற்காய். சமூகத்தை வெள்ளந்தியாய் நம்பிவிட அத்தனை மென்மையானதும், ஆபத்து இல்லாதது என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், சுயநலமற்ற உன்னத பண்பாளர்கள் இருக்கவும் செய்கிறார்கள்.


நான்கு ஆண்டுகளுக்கு முன் உன் சகோதரனை இப்பயணத்திற்கு முதலாவது அனுப்பியிருக்கிறேன். பயணத்தை முடித்து நல்லபடியாக வீடு திரும்பியிருக்கிறான். எனக்கு மட்டும் ஏனப்பா இந்த விஷேச ஆலோசனையை சொல்கிறீர்கள். நான் பெண்ணாய் இருப்பதால்தானே என்று இதை வாசிக்கும்போது உனக்குக் கேட்கத்தோன்றும். உண்மைதான் மகளே. நீ ஒன்றை யோசிக்கவேண்டும். பெண்கள் மீதானப் பார்வை, பெரிய அளவில் வக்கிரத்தோடு இருப்பது கூடிக்கொண்டேப்போகிறதே ஒழிய குறையவில்லை. அவ்வக்கிரத்தின் உச்சமாக தற்போது பல சந்தர்ப்பங்களில் ஆண்கள் கூட்டுசேர்ந்து விடுகிற நிகழ்வை அடிக்கடி ஊடகங்களில் பார்க்கமுடிகிறது. இதற்கு கல்லூரி மாணவர்களும் விதிவிலக்கல்ல


இந்த இடத்தில், உன்னை டுவீளரில் அழைத்துச் சென்றபோது, ஏய். என்ன? ரோட்ல போற அந்த ஆண்டிய மொறச்சி பாக்கிறே. என்று விளையாட்டாக, நீ என்னைக் கேட்டதை நினைவு கூர்ந்துப்பார். அதற்கு பதிலாக அப்போது வெறுமனே சிரித்துக் கொண்டேனேத் தவிர வேறு ஒன்றையும் நான் சொல்லவில்லை. இப்போது பதில் சொல்ல வாய்த்ததிற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். ஆண், பெண்ணையோ. பெண், ஆணையோ பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. அதின் அர்த்தம், ஒருவர் ஐஸ்கிரிம் சாப்பிடுகிறபோது. உற்றுப்பார்க்கும் குழந்தையின் பார்வைக்கு ஒத்ததாக இருக்கிறதுஅநேகமாக அந்தப்பார்வையில் எந்த அநீதியும் நடந்துவிடாது. சாப்பிடுகிறவர்களுக்கு சற்று சங்கடமாக இருக்கும். பார்க்கும் குழந்தையும், சாப்பிடும் நபரும் நாகரீகராய் இருந்தால். சாப்பிடும் நபரே ஒரு ஐஸ்கிரீமை வாங்கித்தருவார். இல்லை. சாப்பிடும் நபர் வாயை வேறுபக்கம் திரும்பிக்கொள்வார்.குழந்தையின் பார்வையும் வேறு பக்கம் திரும்பிவிடும் அவ்வளவுதான்.

உன்னை அனுப்பும்போது சற்று துக்கங்கொண்டாலுக்கான மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. இதை அறிவுஜீவிகள் ஆண் தன்மையில் வெளிப்படும் தாழ்வு மனப்பான்மையின் வார்த்தைகள் என்று சொல்லலாம். அவைகள் வெளி இடங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருக்கும் சாதாரண வார்த்தைகள். இப்படிச் சொல்கிறவர்கள் தினந்தோறும் தன் குடும்பப் பெண்களை உயர்தர பாதுகாப்பான வாகனங்களில் வழியனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபோதும் ஆட்டோக்காரனையோ மக்கள் ஓடியேறும் அரசுப்பேருந்துகளிலோ தனியாக அனுப்புவதில்லை. குடும்பத்தில் அன்பாய் நேசிக்கும் எந்தக்குழந்தையையும்  வெளியே அனுப்பும்போது பதட்டப்படாமல் இருக்கும் சூழல் நாட்டின் எந்த இடத்திலும் இருப்பதில்லை என்பது வாதிடுபவர்களுக்கும் தெரிந்ததுதான்.
மகளே வீட்டிலிருந்து புறப்படும் ஒவ்வொரு நாளும் உன் மனசாட்சியை நேர்மைபட வைத்துக்கொள்வதுதான் முதன்மையான செயல். இரண்டாவது சாந்த்தம். அது இயல்பாகவே உன் காலடிகளில் தவம்கிடக்கிறது என்பது தெரிந்ததுதான், இருந்தாலும் மேற்சொன்ன இரண்டையும் இழந்துவிடாமல் இருந்தால், மனசுக்கும் பழுதொன்றும் ஏற்படாமல் நீ வீட்டிலிருந்து சென்றதுபோலவே திரும்பவும் சாத்தியம் இருக்கிறது.

குறிப்பாக நீ பயணத்திற்காக பேருந்து நிறுத்தம், அருகில் நிற்க வேண்டியிருக்கும்தினந்தோறும் பேருந்து நெரிசலைச் சந்திக்க வேண்டியிருக்கும். சில நாள் சில்லரை இல்லாததற்கு நடத்துனரிடம் வசைச்சொல் வாங்கவேண்டியிருக்கும். இங்கு வந்து ஆங்கிலத்தை கற்கிறார்கள் கழுதைகள் என்று உன் சக தோழிகளின், தோழர்களின் முன் உன் கல்வியாளரின் பேச்சை கேட்கவேண்டியிருக்கலாம். தினந்தோறும் வெறுமனே நீ போகும் திசைகள் எல்லாம் வாலிபர்கள் கண்களில் படுவார்கள். உலகத்தில் இந்தமாதிரி நற்பண்புகள் உடைய இருபத்தி ஐந்து வயதுடைய மனிதன் இருக்கமுடியுமா? என்கிற முடிவுக்கு வரும்படி மாதத்தின் முதல் ஐந்து தேதிக்குள் தவறாமல் ஒருவன் தனித்துவமாக உன் பார்வைக்குத்  தென்படக்கூடும். இந்தமாதிரி காட்டு மிராண்டிகளால்தான் தனிமனித சுதந்திரம்  கெட்டுவிடுகிறது என வேறு ஒருவனை நீ ஊகிக்கலாம். உன் கண்முன் உன்ளவு சரீரம் வாய்க்காத அல்லது உனக்கு ஈடான சரீரம் உடையவர்கள், ஒரே வகை ஈர்ப்பினால் சில நேரம் பிரிதற்காகக்கூட துக்கிக்கலாம். வயது முதிர்ந்தவன் சாலையைக் கடக்க உதவும்படி உன் கைகளை இறுக்கமாக பிடிக்க நேரலாம். சாலை ஓரங்களின் ஒதுக்குப்புறமாக அபயக்குரல் கொடுக்கும் ஏழைகள் உன் வருகையின்போது கை நீட்டலாம். வெறுமையாய் இருக்கும் உன் கறுங்கூந்தலைப் பார்த்து குடையின் கீழ் இருக்கும் பூக்காறர் அழைக்க நேரலாம். எந்தக்குரலையும் நீ அலட்சியமாக எண்ணிவிடக்கூடாது. அவைகளில் எந்தளவு நேர்மை இருக்கிறது என்பதை, நீ தினந்தோறும் கடைபிடிக்கும் நேர்மையோடு சமனாக்கி தர்க்கம் செய்துப்பார்ப்பதை மறந்துவிடாதே.

எனக்கு இருக்கும் ஒரேக் கவலை. என்னை விட ஒருப் படி மேலேச்சென்று பொன்னில் நம்பிக்கையற்று இருப்பதும், சிறு பூச்சியின் சுதந்தர வாழ்விற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்று பதருகிற உன் இயல்பைக் குறித்தும்தான்மகளே இப்படி இருப்பதால் தமக்கு நேரும் இழப்பு என்பதை கணக்குப்படுத்த முடியாதம்மா. என் நாற்பத்தி இரண்டு ஆண்டுகால வாழ்வில், குழந்தைப்பருவத்தின் பனிரெண்டைக் கழித்துவிட்டால் எறைக்குறைய முப்பது ஆண்டுகாலம் இழந்துவிட்டவை அநேகம் மகளே. இருந்தாலும் முற்றாக நான் அழிந்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால், இக்குணத்தை பிரித்தியேகமாக வைத்துக்கொண்டு ஒரு பெண்ணாக இச்சமூகத்தில் இயல்பாக பயணிப்பது அவ்வளவு சுலபமானது அல்ல.


மணலில் ஊறும் நீர்போல உன் காலடிகளைச் சுற்றி மிகக் குளிற்சியான தோற்றம் தரித்துக்கொண்டு நட்புகள் வருவதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது. எது போலி, எது உண்மை என்பதை அறிந்துகொள்ள உன்னிடம் ஒரு ஆயுதமும் இல்லவேயில்லை. ஒருவேளை அறிவின் யோசனைகள் சிலநேரம் உதவலாம். ஆனாலும், அது முழுமையாகப் பாதுகாக்கும் கரமல்ல. இரண்டுக்குமான போக்குக் காட்டலை தரிசிக்க, நீ சோம்பல் படாமல் இலக்கியத்தரமான புத்தகங்களைப் படிக்க வேண்டும் அப்போது நிச்சயம் போலியை, நிஜத்தை சரியாக கணிக்க உதவும். மாதத்தில் ரத்தப்போக்கை எதிர்கொள்ள ஆய்த்தமாகும் அளவுக்கு வாசிப்பு இருந்தால்கூட போதுமானதுதான். அதற்குள்ளாகவே மனிதனிடம் நடமாடும் நாடகங்கள் உனக்கு பிடிபட்டுவிடும்.  ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. இலக்கியப் புத்தகங்கள் எல்லாம் மிக உயர்ந்த நோக்கம் கொண்டது என்று நம்பி எந்நேரமும் அதில் முழ்கிவிடாதே. அது மிக ஆபத்தமானதுகைவிடமுடியாத பழக்கமாக அரங்கேறிவிட்டால். நம்மைச்சுற்றி இருக்கும் எந்த நபரிடமும் இயல்பாக பழக அனுமதிக்காது.


நீ ஒருபோதும், உனக்கு இயல்பாகத்தோன்றும் ஆர்வங்களை மறைத்துக்கொண்டு நடமாட இடங்கொடுத்துவிடாதே. அதேசமயம் எல்லாவித ஆர்வங்களையும் வெளிப்படையாக விவாதிப்பதையும் தவிர்க்கவேண்டும். இல்லை என்றால் பயித்தியக்காரி, பீத்தல்காரி என்கிற பெயர் வந்துசேரக்கூடும். உன் ஆர்வங்கள் செயல்வடிவமாக மாறும்போது முடிந்தளவு நேர்மையை மனதில் நிறுத்திக்கொள். அது எந்தச் சூழ்நிலையானாலும் சரி. பலநேரம் சிலருக்கு நீ நம்பும்படியானவள் இல்லை என உதாசினப்படுத்தி கடந்துவிடலாம். அதற்காகச் சற்றும் வருத்தம் அடையாதே. காலம் கடந்தாலும் என்றாவது ஒருநாள் உதாசினப்படுத்தியவர்கள் உன்னைக்காண நேரலாம். அப்போது உன் எண்ணம் மேன்மையானது என்று அவேர்களே உறுதியளிக்கும் சூழல் வாய்க்கும். 


ஆர்வங்களில் முதன்மையான இடத்தில் இருப்பது காதல், அதன் தன்மை உனக்கும்கூட தெரியும் என்றளவிற்கு பருவம் அடைந்து விட்டதால். இதைத் தெளிவிக்கவேண்டியது என் கடமையும்கூட. நிறப்பாத இடங்களே இல்லாத காற்றின் தன்மை போன்றது காதல். பார்வைக்கேத் தெரியாமல், அனுமதியும் கோராமல் நமக்குள்ளே விழுது பரப்பும் சக்தி, காதலுக்கு மட்டுந்தான் வாய்த்திருக்கிறது. இதுத் தேவையில்லை என்பதை நான் தன்னிச்சையாகக் கூறும் அளவிற்கு அதன் தன்மையை அறியாதவன் இல்லை. நீ பருவத்தின் தகுதி உடையவள் என்பதால் உன்னையே யோசிக்கச் சொல்கிறேன். காதல் ஆண், பெண் விருப்பத்தை மட்டுமே சார்ந்து தொடங்குகிறது. அவர்களோடு இருக்கும்வரை அதிகமாக பிரச்சனை ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை. குடும்பம் ஆள்கிறவர்களோடு இணைய முயற்சிக்கும் போதுதான் பிரச்சனைத் தொடங்குகிறது. ஆக பிரச்சனை எங்கேத் தொடங்குகிறது என்பதை முதலாவது நீ ஊகிக்கவேண்டும். உன் அண்ணன் இந்தப் பிரச்னையோடு நம் வீட்டுக்கு வரநேர்ந்தால், நாம் பேசும் அதே வார்த்தைகள். எதிராளிக்கும் பொருந்தும் அல்லவா?.


ஒருவேளை இந்தச் சந்தர்ப்பம் ஒரு ஆணின் மூலமாக உனக்கு வாய்க்க நேர்ந்தால். ஒரு இமாலயக் கனவு நிறைவேறி விட்டதாக திருப்தி கொள்ளாதே. அப்படியானக் கனவு மிக அபத்தமானது. மெய்மறந்து நீங்கள் இருவர் மட்டுந்தான் சாலையில் நடமாடுகிறீர்கள் என்ற மாயையை ஏற்படுத்திவிடும். வெளியிடங்களில் டூவீலர் பயணம் வாய்க்கும்போது அக்கம், பக்கத்தில் உள்ள மனிதர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. 


மகளே அந்த நட்பு என்பது, நீண்டநாள் உயிராகவே உடன் கடந்துவந்து, மிக அற்பமான விஷயத்திற்காக நொடிப்போழுதில் வண்ணக்கலரில் மின்னும் சோப்பின் முட்டையாக வெடிக்கவும் நேரும்.  அப்போது நீ அற்பமாய் எண்ணிய சுற்றத்தார், உன்னை அற்பமாய் எண்ணுகிற சூழல் எழும். ஆக தற்செயலாகக் கிடைத்த ஆண் நட்பில் பெரிய விஷேசம் இருப்பதாக ஒரு கணமும் பெருமை கொள்ளாதே. இடைசெறுகளாக இங்கே இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். பிறருக்கு அளித்து, செய்து மகிழ்வது இடையில் என்னிடம் வந்தப்  பழக்கம் அல்ல. அது நம் குடும்ப பாரம்பரியமாக உன் தாத்தாவின் தாத்தாவிடம் இருந்து கடந்து வருகிறது. அந்தக் குணம் உன் அண்ணன் தம்பிகளுக்கு குறைவாகவும், பெண்பிள்ளையான உன்னிடத்தில் அதிகமாகவும் இருப்பது சற்று பயமாகவும் இருக்கிறது. சமயத்தில் நான் கல்வி கட்டணத்திற்காக கொடுக்கும் பணம், உன் காலில் கிடக்கும் மெல்லிய வெள்ளி கொளுசைக்கூட சுலபமாய் கழட்டி உதவி என்ற பெயரில் கொடுத்து விடுவாயோ என்ற பயம்தான். உன் தோழிக்கோ, முடியாபட்சத்தில் அதைச் செய்தால் நானும் வரவேற்பேன். மாறாக ஆண் நட்பையோ, தோழி நட்பையோ தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு சிறு பொருளையும் பயன்படுத்தாதே. அப்படி லஞ்சம் கொடுத்து எந்த உறவையும் தக்கவைத்துக்கொள்ள முடியாதம்மா.


நீண்ட ஆய்வுக்குப்பிறகு உன் சம்மதத்தின்பால் வயப்பட்டவன் அவ்வளவு சீக்கிரம் உன்னைவிட்டு கிளம்பிவிட மாட்டான். அதனால், முதலில் அவன் குடும்பத்து நபர்களை விசாரித்து அவர்களின் இயல்பு நடை யுடை பாவணைகளை முற்றாக அறிந்துகொள்ள முயற்சிக்க யோசனை செய். இரண்டாவது நம் குடும்பத்திற்கும் அந்த நட்பாளரை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிடுவது நலமானதாக இருக்கும் ஒன்றை மட்டும் தெளிவாக நீ புரிந்துகொள்ளவேண்டும். நட்பு என்பது உன் பாடப்புத்தகத்தோடு சேர்ந்த இன்னொரு பாடப்புத்தகம். பாடப்புத்தகம் எப்படி ஓரளவுக்கு சமூக ஒழுங்கைக் கணக்கில் கொண்டு வடிவமைக் கப்பட்டதோ, அதைப்போல உன் நட்பைக்  கடைபிடிப்பது நல்லது. ‘சமூகப்போராளிகள் இதை பழமை வாதத்தின் எச்சம். ஆண், பெண் தனிமனித சுதந்தரத்தை குளைக்கிற செயல். சந்தேகிப்பதை நாசூக்காக ஒழுங்கின் கட்டமைப்புக்குள் கொண்டுவருகிறார்‘ என்பார்கள். ஒருவேளை அவைகளில் உண்மையும் இருக்கலாம். அதைவிட நீ எடுத்துக்கொண்டக் கல்வியில் ஜெயிக்கவேண்டும் என்பதும் முக்கியமல்லவா? கல்விக்காக அறிதாகக் கிடைத்த நட்பை உதாசினப்படுத்த சொல்லவில்லை. நட்பால் கல்வியை இழந்துவிட்டால், இழந்த கல்வியின்பால் கிடைத்த நட்பையும் முற்றாக இழக்கும் சூழல் வரலாம். கூடுதலானத் தகவல் இதில் தனிக் கவனம்வேண்டும். ஒரே கல்லூரி. ஒரே வகுப்பறை. இருவருக்குமே ஒரே ஆசிரியர்தான். எதிலும் பேதமே இல்லை என ஆண் நட்பை  ஒப்பிட்டு நம்பிவிடாதே. நீயும், நட்பாளரும் இடைவெளி விட்டு நாகரீகமாய் நடந்தாலும்.  சாதி எனும் பிரிவினைப் பைத்தியம், அல்லது சைக்கோ இரக்கமற்று சாலை ஓரங்களிலும், கொள்ளைப் புறங்களிலும் உறங்கும் வேடம் தரித்து படுத்திருக்கும் மறந்துவிடாதே. இவைகள் ஒருபுறம் இருந்தாலும் பதினெட்டு வயதுவரை ஒரு கணமும் தரிசித்திராத அற்புதங்கள் தானாக வாய்ப்பது சாதாரண விஷயமல்ல.


எனக்கு சில அனுபவங்கள் நேர்ந்திருக்கிறது. இந்நேரம் அதைப் பகிர்ந்துகொள்வது அநாகரிகமானது என்று நான் கருதவில்லை. சில நேரம், பல இடங்களில் நான் பார்க்கும் அழகியப் பெண்களில் பலர் இன்னும் காதல் என்ற அற்புத அனுபவத்தைப் பெறாதவர்களாய் இருப்பார்கள் என்று நினைப்பதுண்டு. அந்த எண்ணம் வெகு சீக்கிரத்தில் என் ஊகத்தின் சுவடு மறைகிறதற்கு முன்னே தவறு என்று நிரூபணம் ஆகும். இது ஆண் சிந்தனையில் மட்டும் இப்படி உதிக்கிறதா? என்பது தெரியவில்லை. அநேகமாக பெண்களும் பல வாலிபர்களை இத்தன்மையில் நோக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்றை மறந்துவிடாதே. தற்கால ஊடகத்தில் வெட்டவெளி ஆபாசங்கள் துருத்திக்கொண்டு இருப்பதால்.இளம் மனங்கள் எதுவுமே தனித்து இருக்கவிரும்புவதில்லைஆதலால், ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் குறைந்தது கைபேசியில்சாப்டியா‘ ‘வணக்கம்அற்பமான காரியங்களுக்குக்கூட  ‘I Like you‘ போன்ற அன்பைப்பொழிகின்ற வார்த்தைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆக புதிய இடங்களில் யாரும் தனியாட்களாய் இருப்பார்கள் என்பதை உறுதியாக கருதிவிடமுடியாது. உன்னை நாடி வரும் நட்பு சரியான ஆய்வுக்கு உட்படுத்துவது சிறந்தது. எதிர் நபரின் கண்களில் இருக்கும். உண்மை  தரிசிக்கப் பழகிக்கொள். அது சாத்தியம் ஆனால் பல சந்தர்ப்பங்களில் உனக்குச் சாதகமானப் பேச்சுக்கள் கிடைக்கும்.


ஒரு நாள் நீ தவிர்க்க முடியாதபடி, நட்பாளர் பேல்பூரி வாங்கித்தந்தால், இன்னொரு சந்தர்ப்பத்தில் அதற்கு ஈடாக அந்நபருக்கு பாப்கார்ண் வாங்கிக்கொடுத்துவிடு. ஒருவேளை அந்நபருக்கு அது பிடிக்காத நொறுக்குத்தீணியாகப் பட்டால் சற்று கூடுதலானாலும் பரவாயில்லை. வேறு ஒன்றை வாங்கி பதில் செய்துவிடு. எக்காரணத்தைக்கொண்டும் மீண்டும் மீண்டும் அந்நபரின் தன்னார்வமான  உதவுதலை அல்லது முதலீட்டை அனுபவிக்காதே. நம் குடும்பம் உன்னைத் தொடர்பு கொள்வதற்காக வாங்கித்தந்த கைபேசியை அதிகளவில் பயன்பாட்டுக்குள் வைத்திருக்காதே. ஆய்வு அளவில் பல கேடுகள் இருப்பதாக முடிவுகள் சொல்லப்படுகிறது. எனக்கோ, உன் அண்ணனுக்கோ அன்றி அநேகமான நேரங்களில் நட்பாளருக்கு மிஸ்டுகால் பயண்படுத்தாதே. அவனாகவே மூன்று முறை கால் செய்தால், இன்னொரு சந்தர்ப்பத்தில் நீ கால் செய்யப் பழகிக்கொள்.வெட்டி வார்த்தைகள் உறவில் சிறுகச்சிறுக இடைவெளிக்கு வழிவகுக்கும். ஒருவேளை அவன் குடும்பத்தின் நபர்களைத் தொந்தரவுச் செய்து நண்பர்களை மகிழ்விக்க தாராளமாய் இருக்கலாம். இருப்புக்காரனாய் இருந்தாலும் அவனுக்குறிய பணமாய் இருக்காது. எப்படி இருந்தாலும், ஒருவனின் ஆதாயத்தை தொடர்ந்து அனுபவிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது. நீ அப்படி இருக்கும் பட்சத்தில், அவன் நம்பிக்கையற்றவனாய் வெளிப்படும்போது எந்த மன வருத்தமும் இல்லாமல் வெளியேற உன்னால் கூடும்.

அப்பா, காதல் தற்காப்புக்கு மட்டும் ஏன் இந்த நீண்ட உரை. எனக்கு கோபம் வருகிறது என்று உனக்குச் சொல்லத்தோன்றுகிறா? இல்லை மகளே. சமூகப்போராளிகளுக்கு, குடும்பத் தலைவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, பல விதங்களில் நெருக்கடி வருகிறது. ஆனால், இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுதான் முதன்மையான நெருக்கடியாக இருக்கிறது என்பதை மறந்துவிடாதே. சரி உனக்கு அதிர்ப்தியாய் இருப்பதால் அவைகளில் இருந்து வெளியேறிவிடுகிறேன்.


மகளே நான் முதலில் சொன்னதுபோல ஒவ்வொரு நாளும் உன் மனசாட்சியை நேர்மைபட வைத்துக்கொள்வது எல்லா சூழலுக்கும் உகந்ததம்மா. நீ ஏறிச்செல்லவேண்டியப் படிகள் செங்குத்தான உயரத்தில் இருக்கும் என்று நினைக்காதே. அந்தப் படிகள்தான் சமூகத்தில் திசைக்கொன்றாகவும், கலைத்துப் போடப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கிறது. அதன் தன்மைகளைக் கண்டிபிடித்து உச்சத்தை அடைவது சாதாரணச் விஷயமல்ல. அதற்காக நிறைய உழைக்கவேண்டும். அந்த உழைப்பின் பெரும்பகுதியை நீ எடுத்துக்கொண்ட செயலில் முதலீடு செய்யவேண்டும். படிகளின் உச்சம் மிகத்தாழக் கிடக்கும். அந்த உச்சங்களை அடைய என் அன்பின் வாழ்த்துக்கள்.


மகளே! அதோ உன் கல்லூரியின் கதவு திறக்கப்பட்டுவிட்டது. முதல் நாள் வகுப்பறைப் பயணம் இனிதாகட்டும்.


டேனியல்


No comments: