Wednesday, May 21, 2014

கட்டுரை,

                          ‘வேற்றுமைக்குள் ஒற்றுமை


டும்...டும்...டும்...டும்... டும். இதனால் காஞ்சியின் சகல இலக்கிய அமைப்பாளர்கள் நண்பர்களுக்கும், இலக்கியத்தில் தங்களையும் ஒரு குச்சியாக இணைத்துக்கொண்டுள்ள தனி நபர்களுக்கும் காட்சித்திரையிடல் அமைப்புகளுக்கும் தெரிவிப்ப தென்னவென்றால் இக்கல்வியாண்டு முதல் (கல்வி ஆண்டுனாதான் ஒரு பயம் வரும்) சம சஞ்சாரத்தின்கதவு திறக்கப்பட தங்களால் ஆன ஈடுபாட்டை நாடி நிற்கிறது காலம். டும்...டும்...டும்...டும்... டும்.

நாம் அரசியல் கட்சி  நடத்தவில்லை. நாம் அக்கட்சியின் தலைவர்களென்றும் சொல்லிக்கொள்வதில்லை. அப்படி இருந்தால் ஒரு கட்சி நிர்வாகத்தில்  இன்னொரு கட்சி நுழையக்கூடாது என்று கருதிக்கொண்டிருக்கலாம்.   நாம் நடத்துவதுபெருவாரியான மக்களுக்கு சூன்யமாய்தெரிகின்ற, நடத்துனருக்கு நஷ்டத்துடன் மனக்கஷ்டத்தையும் தருகின்ற கூட்டங்களாகும். தமக்குத் தெரிந்தே சூன்யம் வைத்துக்கொள்ளும் தொழில் இலக்கியம், உலகத்தரத்தில் கலை நேர்த்தியான சினிமாவைப்பற்றி பேசுதும்தான் என்று நினைக்கின்றேன்.

நமக்குள் பல விதங்களில் கலைசார்ந்து புரிந்துகொள்வதில் வேறுபாடுகள் இருக்கலாம். இந்த வகையில் அர்த்தங்கொண்ட வகைமைகளில் நடக்கும் கூட்டம், மற்றும் திரையிடல்களில்தான் என்னால் கலந்துகொள்ளமுடியும் என்ற முதிற்சி இருக்கலாம். அப்படி எண்ணிக்கொள்வது அவரவரின் தனியுரிமை. ஆனால், இலக்கியம், நல்ல சினிமா சார்ந்து அமைப்புகள் நடத்தும் கூட்டங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிடுவது அறம் அன்று. வியப்பு என்னவென்றால் இரு சாராருக்கும் ஒன்றுக்கொன்றில் மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. ஆனால், அவர்கள் நடத்துவதில் நான் கலந்துகொள்ளமாட்டேன். இவர்கள் நடத்துவதில் அவர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றப் போக்கு ஓங்கி நிற்கிறது. இதை வெளியில் இருந்து பார்க்கிற சாமான்யன் நம்மை கேலிக்கூத்தாகப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.  இரு நபர்கள் நேருக்கு நேர் வாதிடலில் ஒருவருக்கு தன்மானக்குறைவு ஏற்பட்டுவிட்டால் ஒருவேளை அமைப்புகளுக்கு வருவதற்கு சற்று சங்கடம் ஏற்படலாம். அதைக்கூட நிவர்த்திசெய்துக்கொள்ள சாத்தியம் இருக்கிறது. அதற்கே இருக்கும்போது வெறுமனே மன உறுதியை நம்பி வேண்டுமென்றே போகக்கூடாது என்ற முடிவை தள்ளுபடி செய்ய வேண்டி முன்மொழிவுகள் வைக்கப்படுகிறது. 

ஒரு சிறப்பானக்கூட்டம், அல்லது திரையிடல் நடக்கிறபோது அதன் நுட்பம் தெரிந்தவர்கள் இல்லாமல்போய் வெறுமனே பொழுதைக் கழிக்கவரும் நபர்களால் மேலோட்டமான (மட்டமான) கேள்விகளை எழுப்பி நிகழ்வை உப்பு சப்பு இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். இந்த நிலமை நம் இருப்பிடத்தில் தொடர்ந்து இருந்தால், எதிர்காலத்தில் தான்தோன்றியாய்த் தோன்றிய ஏதோ ஒரு இளைஞன் குறிப்பிட்ட காலத்தில் இலக்கியத்தில் சூன்யம்தான் இருந்த்து என்று சாருநிவேதிதாவின் வார்தைகளால் திட்டித் திட்டி சபிப்பதைத்தான் செய்வான். ஆகவே ஒவ்வொருவரும் இதில் தயைகூர்ந்து தாராளமயத்தை கடைபிடிக்க கோரப்படுகிறார்கள்.

ஒரு வேளை  இலக்கியம் என்ற பெயரில்  பெரு லாபம் காணுமளவுக்கு பத்திரிக்கை, பதிப்பகம் என்று வளர்ந்துவிட்டால்கூட. அவரவர் வருவாயை தக்கவைத்துக்கொள்ள நாம் எப்போதும் எதிரி நாடகம் ஆடிக்கொண்டே இருக்கலாம்.  ஆனால், நாமோ வெறுமனே டீ, பிஸ்கட்கொடுத்து சாமானியனின் மூளையில் சமூக நலன் எனும் பித்துப் பிடிக்க மந்திரம் ஓதுகின்றோம்.  ஓதுவது, சில நேரங்களில் பிறருக்கானது என்றே எண்ணிக்கொள்கிறோம். அப்படியல்ல பல நேரங்களில் ஓதும் வார்த்தைகள் நமக்கே மறந்துபோகாதபடி நிதானித்துக்கொள்ள நமக்கும் பயன்படுகின்றது. ஆக, அது அவரவர் அமைப்பு என்று தெளிவாகிவிட்டபிறகு வேறுபாடுகளை மறந்து அமைப்பாளர்கள் ஒன்றில் ஒன்று ஒன்றிக்கொள்ளவேண்டும். அவர் முதலில் வரட்டும், இவர் வரட்டும் என்பதை பின்னுக்குத்தள்ளிவிட்டு. எது முதலில் வருகிறதோ அதில் கலந்துகொள்ள முயலவேண்டும்.

ஒரு வேளை முதலில் வருவது தமக்கு ஏற்புடையக் கூட்டமாய்  இல்லாமல் இருந்தால், கட்டாயமில்லை. நமக்கு ஏற்புடையக்கூட்டமாக இருந்தால் மதிக்கவேண்டும். மதித்தல் என்பது, பங்குகொள்ளுதலின் பொருளாகும்.  இலக்கியக்கூட்டத்திற்கு ஒரு சாரார் தானாக மனமுவந்து  கலந்துகொண்டால், அடுத்து நல்ல சினிமா திரையிடலுக்கு அடுத்த அமைப்பாளர்கள் பங்குகொள்ள முயற்சிக்கவேண்டும். படைப்பைப் முன்கூட்டியேத் அறிந்திருந்தால் கலந்துகொள்பவரின் விருப்பு கருத்தில் கொள்ளலாம். அதற்காக சாக்குப்போக்குகளை தவிர்ப்பது நல்லது.

ஒருவர் கூட்டத்தில், இன்னொருவரின் கூட்டத்திற்கான அழைப்பிதழை பார்வையாளர்களுக்கு எந்த சங்கடம் இல்லாமலும் அளித்துக்கொள்ளலாம். அதற்காக பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கும், நெடுக்குமாக  நடமாடி அழைப்பிதழ் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

காஞ்சியில் இலக்கியம், மற்றும் நல்ல சினிமா ஆர்வலர்கள் படைப்பாளர்கள் வேற்றுமைக்குள் ஒற்றுமைஎன்ற பண்பை கடைபிடிக்கவேண்டும் என்பதில் தாராள மனமுள்ளவர்கள் கடந்த காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. கூட்டங்களில் கலந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். ஒருவேளை ஒரு சாரார் கலந்துகொண்டு இன்னொரு சாரார் கலந்துகொள்ள மழுப்புச் செயல் செய்தால், அதன் நியாயமற்ற வாதங்களை பொதுவெளியில் வைக்கப்படும். அவரவர்கள் நடந்துகொண்டதில் எப்பக்கம் உதாசினங்கள் நடந்துள்ளது என்பதை பார்வையாளர்கள் தீர்மாணித்துக்கொள்வார்கள். தீர்மாணிப்பதின் பொருள் அவர்கள் இயல்பை தீர்மாணிக்கிறார்கள் என்பதை உதாசினப்படுத்தியோர் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவரின் இயல்பை தீர்மாணித்தல் என்பது எதிர்காலத்திற்கு வழிகாட்டியான விஷயமல்ல. அதற்கு பின் விளைவுகள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. ஆளை காலி செய்கிற அளவுக்கு யோசிக்கவேண்டாம். ஒரு வகையில் தங்களுக்கு விருப்பமான இலக்கிய வகைமைகளில் இருந்து பார்வையாளர்களே, அவர்களைத் தள்ளிவிடுகிற வாய்ப்பிருக்கிறது. இது, ஆள் காலியாவதை விடக் கொடுமையானது என்பது அதை நேசிப்பவர்கள் உணருவார்கள்தானே.

விரும்புகிறவர்கள் ஒன்றில் ஒன்று கலக்கும்போது  மனப்புழுக்கம் உடைகிறது. சம்பந்தப்பட்ட வகைமையில் இயல்புநிலைத் திரும்புகிறது. ஆலோசனைகள் பெருகுகிறது. ஆர்வம் தழைக்கிறது. அரங்கேற்றம் தொடங்குகிறது. இவ்வளவும் இயல்பாய் நடக்க வழியிருக்கிறபோது. நாம் ஒருவரின் ஒருவர் முகம் பார்க்காதபடி ஒளிந்துபோய்க்கொண்டிருப்பது நல்ல நடைமுறைக்கான செயல்களா யோசிக்கவேண்டும். எந்த நபரும் எல்லா நிகழ்வுக்கும் தவறாது வரவேண்டும் என்பது முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. ஆனால் முடிந்தளவு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இயல்பாக நிகழ்வுகளில் கலந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வை ஏற்பாடுசெய்கிறவர்கள் தோய்வின்றி செய்கிறபோது பார்வையாளர்கள் அதைக் குறைவாக மதிப்பிடக்கூடாது.
முதலில் இணக்கமாவோர் சமாதானத்தூதுவர்கள் என்று அழைக்கப்படுவர். இது வெறுமனே புறா பறக்கவிடும் தண்டோரா இல்லை. திறமையானவர்கள் முக முகமாய் தரிசிக்காமல் போவதால் எந்தச் செயல்களிலும் முன்னேற்றம் அற்றேக்கிடக்கிறது.

யோசிங்க. வாங்க... வாங்க... வாங்க... வேற்றுமைக்குள் ஒற்றுமைகாண.

டேனியல்


No comments: