Thursday, July 3, 2014

விமர்சனம்,

  கோடையில் ஒரு மழை                     தமிழில் ச. ஆறுமுகம்

அவள் அணிந்திருந்த ரவிக்கை, பாவாடை எப்படி இருந்ததோ அப்படியே அதோடு அவளைப் புதைக்க வேண்டுமெனச் சொல்லியிருந்தாளாம்

சிறுமி, இந்த வரிகளை உதிர்ப்பதற்கு முன்னால் விரிகின்ற கதை உலகம் மிக மென்மையான வெண் பனியைவிடத் தூய்மையானது. எத்தனையோ வகை காதல் கதைகளை நாம் தரிசித்திருப்போம், ஆனால் காதலின் லாபநோக்கமான காமத்தின் துளிர்கூட இல்லாமல், காதலின் பூரணத் தன்மையை பிழிந்து அன்பின் வழியாக வெளியேற்றுகின்ற கதையை நிச்யம் இதில்தான் என்னால் பார்க்க முடிகிறது.

புதிதாக தன் கிராமத்திற்கு வரும் சிறுமி இயற்கையின்  தன்மைகளை ரசிக்கின்றாள். அதை மறைவாக நின்று கண்காணிக்கும் சிறுவன். நாளடைவில் ஒன்றாக விளையாடும் வாய்ப்புக் கூடுகின்றது. இந்த நட்பை மெல்ல மெல்ல அற்புதமான காதல் தன்மைக்கு இழுத்துச் செல்வதுதான் கதையின் உச்சம்.

ஒரு மழைநாளில் நீண்ட தூரம் நடந்து, மழையிலும் நனைந்து களைத்துப்போன சிறுமியை, சிறுவன் தன் செம்மண் ஒட்டிய முதுகில் சுமந்து வருவான். அதன் பிறகு சிறுமிக்கு உடல் சுகவீனம் அடைந்து நீண்ட நாள் விளையாட்டுப்பகுதிக்கும், பள்ளிக்கும் வரமாட்டாள். இந்த நிலையில் சிறுமியின் குடும்பம் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பவேண்டி வருகிறது. நாம் இந்த ஊரைவிட்டு போகப்போகிறோம் என்பதை அறிந்த சிறுமி கடைசியாக தன் நட்புச்சிறுவனை பார்க்க முடிவுசெய்து. உடல் முடியாத நிலையிலும் அவனைத்தேடி வருகிறாள்.

பழகிய நாட்களின் நினைவிற்காக எந்த அடையாளமும் தங்களிடம் இல்லாதவர்களாய் முகம் பார்த்து நிற்கிறார்கள். பிரிய நேருகின்ற சோகத்தை எண்ணி தவிக்கின்ற மனங்களில் இருந்துஇங்கே பார், நான் கண்டுபிடித்துவிட்டேன், அன்றைக்கு நாம் அந்தக் கால்வாயைக் கடக்கும்போது நீ என்னை முதுகில் ஏற்றிக்கொண்டேயே, இந்தக் கறை உன் முதுகிலிருந்துதான் பட்டிருக்கவேண்டும்என அச்சிறுமி தன் ரவிக்கையின் முன் பகுதியில் பட்ட கறை போகவே மாட்டேன் என்கிறது. அதுதான் நம் நட்பிற்கான அடையாளம் என்று சொல்கிறாள். இந்த இடத்தைவிட்டு என்னால் வெகு சாதாரணமாக வெளியேறவே முடியவில்லை.

குடும்பம் கிளம்பும் முன்பே வாழ்வின் துரதிர்ஷ்டம் சிறுமி மரித்துப்போகிறாள். மரித்தது சிறுவனுக்குத் தெரியாமல் கடைசியாக பார்த்துவிடவேண்டும் என அவர்கள் வீடுநோக்கி பயணப்படும்போது.  “அவள் அணிந்திருந்த ரவிக்கை, பாவாடை எப்படி இருந்ததோ அப்படியே அதோடு அவளைப் புதைக்க வேண்டுமெனச் சொல்லியிருந்தாளாம்சிலர் பேசிக்கொள்வதைக் கேட்கிறான்.

நட்பின் உன்னதம் அவளுடன் மட்டுமே உடன்கட்டை ஏறிவிட்டது என்று சிறுனின் வெறித்த பார்வையை புறந்தள்ளி விடமுடியுமா? மேன்மையான அன்பின் தரிசனங்களை அவர்கள் வழியாக வாசகன் உள்வாங்கிவிடச் செய்வது, கதையாளரின் சாதுர்யம்தான்.

               இரும்புக் குழந்தை
இக்கதைப்பற்றி கடைசியாகத் தந்துள்ள குறிப்பில் மூலஆசிரியர், இக்கதையை நீதிக்கதையில் சேர்த்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.
சர்வ சக்தியையும் தன்னகத்தில் வைத்துக்கொள்ளும் அரசாங்கம், தான் கட்டமைக்கும் பணிகளுக்கு ஏழை, எளிய மக்களைத்தான் தன் இஷ்டம்போல வைத்து பயன்படுத்துகிறது. இக்கதையில் பனிரெண்டு மைல் தூர ரயில்பாதை அமைக்கும் பணிக்கு, இரண்டு லட்சம்பேரை வலுக்கட்டாயமாக பயன்படுத்துகிறது என்பதை அறியும்போது,  மக்களை ஆளுகின்ற அரசாங்கம் எந்தக்காலத்திலும் சாமான்ய மக்களின் நலனை போற்றிப் பாதுகாப்பது அல்ல மாறாக அந்த சாமான்ய மக்களை வைத்து நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளக் கட்டமைப்புகளை எப்படி உருவாக்கிக்கொள்து என்றளவில்தான் கவனம் செலுத்துகிறது.

மண் வெட்டி அல்லது ஏதாவது ஒரு மண் கிளறும் கருவியைத் தூக்கிப் பயன்படுத்த முடிகின்ற யாராக இருந்தாலும். தொழிலாளர் அணியில் கட்டாயமாக சேர்க்கப்பட்டனர்.“

இந்நிலமை எல்லா அதிகார மையங்களுக்கும் பொதுவிதியாக இருக்கும்போலசாமான்ய மக்களுக்கு உணவு, உடை, ஓய்வு, எதையுமே முழுமையாகத்தராமல் அடிமைகளைப்போல் வைத்துதான் தற்காலத்தில் நாம் பார்க்கும் பிரமாண்ட சாலைகள், பாலங்கள் ரயில்பாதைகள், அரசு கட்டடங்கள் கோபுரங்கள், கோட்டைக்கொத்தளங்களை உருவாக்கி இருப்பார்கள் என்ற பழைய வரலாற்றைக் கிளறிவிடுகிறது. இக்கதையில் ரயில்பாதைப் பணியில் ஒரு செல்வந்தன்கூட ஈடுபட்டான் என்ற குறிப்பு இல்லவேயில்லை. சமூகத்தில் எப்போதும் அப்படித்தானே?

இரும்புப் பாதை அமைக்கும் பணியால்தான் தம் தாய்த் தந்தைகள் நம்மை விட்டு பிரிந்தார்கள் என்ற வெறுப்பு குழந்தைகளிடம் எழ வாய்ப்பிருக்கிறது. அதை பிரிதிபலிக்கும் விதத்தில் ஒரு இரும்பு புனைவுக் குழந்தையை உருவாக்கி இரும்புகளையே தின்றுவிடும் பயிற்சியைக்கொடுக்கிறார் கதையாசிரியர். புனைவு என்பது இடையில் திணிக்கப்பட்டது என்று சொல்லவேமுடியாது. அவ்வளவு இயல்பாக இரும்பை ஒரு ரொட்டித்துண்டை சுவைப்பதுபோல் கட்டமைத்திருப்பது அருமை. இரும்பைத் திண்ணுவது என்பது அரசை, அதிகாரத்தை எதிர்க்கப் பழக்கப்படுத்துதல் என்ற குறியீடாக நான் பார்க்கிறேன்.

இரும்பையேத் திண்ணுகின்ற திறமை வாய்ந்த ஒரு போராட்டக் குழந்தையை அரசாங்கம் கயிறுகூண்டால் முடிவுக்கு கொண்டுவருகிறது. ஒரு சாமான்யன் போராட்டம் என்பது, எந்த ரூபத்தில் வந்தாலும், அதிகார சக்திகள் அவைகளை ஈவு இரக்கம் இல்லாமல் முறியடித்துவிடும் என்ற உண்மையை காட்டிச்செல்கிறது கதை.

நகரத்தில் ஹான்வெல்
கடிதப்போக்கில் இருந்தாலும் சரளமான உரையாடலில் ஒன்றமுடியவில்லை. இதற்கு அடுத்துவரும் இரு கதைகளும் அதனதன் அளவில் தனித்தும் கொண்டதாக இருக்கிறது. எனக்கு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.

இங்கிலாந்தும் என் குல மக்களும்.

என் குடும்பத்திற்கும் ஒரு வெகுதூர தேசத்திற்கும் இடையிலான பகையையும், இணக்கத்தையும் தெரிவிக்கிற ஒரு கதை

இவ்வரிகளோடு முடிகின்ற இக்கதை வணிகம் என்ற பெயரில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் வளங்களைச் சூறையாடும் நோக்கத்தையும், விழுந்துபோன வரலாற்றையும் பதிவுசெய்கிறது. இது ஒரு குடும்பத்தின் வழிவழியான கொந்தளிப்பு மட்டுமல்ல என்பதை ஊகிக்கமுடிகிறது.

சீனத்தில் வளம்கொழிக்கும் சுரங்கங்களை வைத்திருந்த ஒரு குடும்பத்தின் மூதாதையர்கள் இங்கிலாந்து அறிமுகப்படுத்திய அபின் மாயையால் படிப்படியாக செல்வங்களை இழந்து தற்கொலைக்கும், ஏழையின் வரிசைக்கும் வந்துவிடுகிறது. இந்நிலையை எண்ணி, அபின் அறிமுகப்படுத்திய நாட்டின் மீது பகை ஏற்படுகிறது. முப்பாட்டன், பாட்டன் என பல தலைமுறைகளாக பகை குலையாது தொடர்கிறது. அப்படி நிகழ சாத்தியம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது. ஏனென்றால், மூதாதையர் காலத்திலிருந்து மாபெரும் வளங்களைத் தன்னகத்தே வைத்திருந்த மலைகள் தங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. அதைப்பார்க்கும் போதெல்லாம் தங்கள் முன்னோர்கள் செழித்திருந்த படிமத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் என்பது உண்மைதான். தாத்தாவின் இறுதி மூச்சுவரை உயிர்த்திருக்கிறது பகை.

பேரன், தாத்தாவிடம் நான் இங்கிலாந்துக்கு போகிறேன் என்றதும், தாத்தாவிற்குள் இருக்கும் மம்மி உற்சாகம் அடைவதை அவர்கண்களில் பார்க்கமுடிகிறது. ஒரு குடும்ப கௌரவத்தை ஒப்படைப்பதுபோல் முழு பகையையும் பேரனிடம் ஒப்படைக்கின்றார். தன் வழிவழியானக் கடமையை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று நிம்மதியாக கண்மூடுகின்றார்பல நேரம், தங்கள் மூதாதையர் தக்கவைத்துக் கொண்டிருந்த போராட்ட குணம், அடுத்த தலைமுறைக்கு கடக்காமல் முடிவடைந்து விடுவதும் உண்டுஅத்தன்மையில் ஒரு குடும்பத்தில் இருந்து உருவான ஒரு நாட்டின் மீதானப் பகை, தாத்தாவின் காலத்தோடு முடிந்துவிட்டது.

குடும்பக்கொள்கையான இங்கிலாந்தின் யாரையாவது துருபிடித்தக் கத்தியால் இருதயத்தில் குத்தவேண்டும்என்ற குரல் தாத்தாவின் பேரனுக்கு தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருக்கின்றது. பேரன் இங்கிலாந்தின் நகரங்களில் சுற்றிவிட்டு வெறுமனே வருகின்றான்.  முதாதையர் இருப்பிடம் வந்தபேரன் தாத்தாவின் குரலையும், வளங்களைக் கொள்ளை கொடுத்த மலைகளையும் ஒரு சேரப்பார்க்கிறான். இங்கிலாந்தும் என் குல மக்களும் என்ற ரலாற்றுக் கதையை வைக்கிறான். ஒரு நாட்டின் வளத்தில் கண்ணம் வைத்த அத்தனை இருதயங்களையும் குத்தி தாத்தாவின் வாக்கை நிறைவேற்றுகின்றார்.

மலையில் வந்தது கரடி
ஆலீஸ் மன்றோவின் அதி அற்புதமான கதை. சமூகத்தில் கணவன் மனைவி என்ற மாபெரும் பிம்பத்தை, ஒன்றோடு ஒன்று கட்டுக்கோப்புடன் பிணைக்கப்பட்ட வாழ்முறையை ஒன்றுமில்லாமல் உடைத்து. அதுவும் சமூகம் எதிர்பார்க்கும் ஒழுங்கு முறைக்குள்ளாகவே நகர்த்திச்சென்று எப்படியெல்லாம் ஒழுங்கை மீறவேண்டுமோ அத்தனையையும் மீறி, பாதரசம் கூடுவதுபோல் மீண்டும் ஒழுங்கில் வந்துகூடும் கதைநேர்த்தியில் வெற்றிகண்டிருக்கிறார்.

கிராண்ட் ஃபியோனா கணவன் மனைவி. ஆப்ரே மரியான் என்று இன்னொரு தம்பதிகள். ஃபியோனா செயல் மிக நேர்த்தியானதும், அதேசமயம் நிரந்தரம் இல்லாததுமாகும். பல விஷயங்கள் துல்லியமாக பேசுவாள். திடீரென்று கணவனை மறந்துவிடுவாள். நகர்புறத்தின் கடைக்கு போகும்போது வேறு எங்காவது சென்றுவிடுவாள். மனதிறம் இல்லாதவள். கிராண்ட், மருத்துவரின் ஆலோனைப்படி காப்பகத்தில் சேர்க்கிறார். அங்கே மரியானின் கணவன் ஆப்ரே வைரஸ் நோயால் கை கால் விளங்காமல் கோமாவில் இருந்து சற்றுதேறிவருகின்ற நோயாளியாய் இருக்கிறான். நாளடைவில்  ஆப்ரேயிக்கும், ஃபியோனாவுக்கும் மன நெருக்கம் ஏற்படுகிறது.

கிராண்ட், ஃபியோனாவை பார்க்க வரும்போது, தன் கணவனை எங்கோ அறிமுகமான நபராகத்தான் பார்க்கின்றாள், பாவிக்கின்றாள். கிராண்ட் கண்முன்னே ஃபியோனா, ஆப்ரேயிடம் தனக்கு பிடித்தமான காதலர்கள் போல் தங்களைத் தாங்களே மாறி மாறித் தேற்றிக்கொள்கிறார்கள், தழுவிக்கொள்கிறார்கள். 
சமூகத்தில் மதிக்கக்கூடிகணவனாக இருக்கின்ற கிராண்ட் தன் முன்னாலேயே மனைவி  இன்னொருனுடன் காதல் வயப்டுகின்றாள் சேட்டைகள் புரிகிறாள் என்கிறத் தவிப்பும், புழுக்கத்தையும் ஆசிரியர் அற்புதமாக பதிவுசெய்திருப்பார்.

மனைவி (ஃபியோனா) தன் கணவனிடம் ஆப்ரேயின் மகத்துவத்தையும், இயலாமையையும் தன் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சொல்லும்போது  உடைபடுகிறது சமூக ஒழுங்குகள். அங்கே நடக்கின்ற மிக எதார்த்தமான உரையாடல்கள், உணர்வுப் பூர்மான தழுவல்கள் எல்லாமே மிக மிக உச்சம் தொட்டவைகள்.

நார்மலான பெண் இக்காரியத்தைச் செய்யமுடியுமா? சமூம் வாய்மூடிக் கொண்டிருக்குமா? அதற்காகத்தான் பாத்திரங்களை குறைபாடுள்ளவர்களாக மாற்றி, அதேசமயம் எதார்த்த வாழ்வியல் நிலைகளை முற்றிலும்  அறியாதவர்களுமாக இல்லாமல். இரண்டையும் சமநிலையில் தந்து மிக அழகியல் தன்மையோடு பாத்திரங்களை வடித்திருக்கிறார்.

ஃபியோனா தன்னைவிட்டு போய்விடுவாளோ என்கிற நியாயமானப் பதட்டத்துடன் ஆப்ரேயின் மனைவியை வீட்டிற்குச் சென்று கிராண்ட் மனைவிக்கும், மரியான் கணவனுக்கும் இருக்கும் நிலைமைகளை விளக்கும்போது, அங்கே மரியான் தன் கணவனைக்குறித்து பேசும் மிக நியாயமான சூழல்களும் அந்த உரையாடலின் போக்கில் மரியான் கிராண்டின் மீது விருப்பம் ஏற்பட்டு அதை கிராண்டிடம் தெரிவிக்கின்ற நிலையில், கிராண்ட் முதலில் மறுத்து பிறகு கொஞ்சங் கொஞ்சமாக கிராண்ட்டுக்கு மரியான் பேச்சின்மீது ர்ப்பு ஏற்படுகின்றபோது ஃபியோனா மனநிலை சரியாகி ஆப்ரேயை யாரென்றே தெரியாமல், கிராண்ட்டை அன்புள்ள கணவரே வேறுயாராக இருந்தால் அந்த நோயாளி போகட்டும்  என்று விட்டிருப்பார்கள். என் அன்பே நீங்கள்தான் என் உயிரினும் மேலானவர் என அறிகின்ற தருணங்கள் எல்லாம் வாழ்வின் நிலைத்தன்மைகளை மீட்டுருவாக்கம் செய்ததாக உணரமுடிகிறது.

இத்தொகுப்பை ஒட்டுமொத்தமாக நோக்கின் ஓரிரு கதைகளைத்தவிர்த்து மற்ற கதைகள் மிக அற்புதமானவை. மனித வாழ்வியலின் அநேக முகங்களை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்ற முக்கியமானத் தொகுப்பு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

.ஆறுமுகம் அவர்களின் மொழிபெயர்ப்பு வாசிப்புத்தடை இல்லாமல் மிக எளிமையாகவும், மூல மொழியின் சுவாரசியம் அப்படியே உள்வாங்கும் விதமாகவும் இருப்பது சிறப்புக்குறியது. ஒரு தொகுப்பில் அதிகபட்சம் சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுத்து தந்திருப்பது என்பது அவரின் ஆர்வத்தையும் அயராத உழைப்பையும் காட்டுகிறது.
ஆதி பதிப்பகம் புத்தகத்தை மிக நேர்த்தியாக் கொண்டுவந்துள்ளதைப் பாராட்டலாம்.

டேனியல்.


No comments: