Thursday, May 1, 2014

சிறுகதை,

                                      மூன்று, ஒன்று, இரண்டு.

நான்காவதாக ஒருவர்  அந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார். அவரின் முத்திரைப் பதிக்கும் தந்திரங்கள் பற்றியும், பேசுவதெல்லாம் நேர்மையின் உண்மையான குழைந்தைகள்போல் இருக்கும். ஆனால், ஒவ்வொரு அசைவிலும் தனக்கான லாபத்தைத் தேடிக்கொண்டே இருப்பார். பழகும் நபரிடம் பணம் இருக்கும் நோக்கம் தெரிந்தால் வாய்க்கூசாமல் லட்சங்களைக்  கடனாகக்கேட்பார். மிக முக்கியமான காரியத்திற்கு தேவையானதாகக்கூட இருக்காது. ஏதேச்சியாக விட்டு பார்க்கலாம் என்ற நோக்கம் இருக்கும். பல நேரங்களில் அவர் கேட்டது போலவேக் கிடைத்துவிடும். கிடைத்ததை வைத்து செல்வத்தில் மிதப்பவர்களுக்கு இணையாகத் தன் குடும்ப பாரமரிப்பைப் பேணுவார். சில நேரங்களில் பிறருக்கு உதவுவதுபோல் செய்வார். வெகு சீக்கிரத்தில் அவர்களிடம் இரட்டத்தனையாகப் பெறாமல் இருக்கமாட்டார்.

ஒத்திகை என்பதே இல்லாமல், நேரடியாகவே  மனிதர்கள் முன் நீதியின் நாயகன் வேடத்தை அவ்வளவு எதார்த்தமாகச் செய்வார். வாரம் முழுமையாகப் பழகிய எந்த ஒரு மேலோட்டமான நீதி, நியாயம் பேசும் நபரும், அவரைப்போல் மனத்துயரப்படாமல் யாராலும் மனிதனை பாதிக்கமுடியாது‘. என்று அவருக்கு நெருக்கமான நபர்களே அக்கிராமத்தின் மூன்று, ஒன்று போன்ற நபர்களுக்கு சொல்லியிருந்தார்கள். 

இரண்டு என்பவர், நான்காவதை  அணு, அணுவாக கண்நோக்கிக் கொண்டிருப்பவர். 2008க்குப் பிறகு  நான்காவதின் இயல்பான பூதம் வெளிவரத் தொடங்கின. அவர் செயல் கட்டுப்பாடற்ற  எல்லைகளைக் கடந்து, அநியாத்தின் மூட்டைகள் பிதுங்கிக்கொண்டிருந்தது.

அடைப்புத்தாங்காமல் அநியாயத்தின் மூட்டையின் முடுச்சுகள் தளர்ந்து அவிழ்கிறது. ஆனால், அவைகள் திறமையற்ற, தற்பெருமைக்காக சடுதியில் ஏமார்ந்து போகின்ற நிர்வாகிகளாலேயே மீண்டும்.. மீண்டும் திருப்பிக் கட்டப்படுகிறது. என்பதையும்  இரண்டு நன்கு அறிந்து வைத்திருந்தார்.

கிராமத்தில் அத்திப் பூத்தார்போலதான் அந்தத் தர்க்கம் வாய்க்கும். மூன்று, முதிர் வயதை எட்டியவர். இருக்கையில் உட்கார்ந்திருந்தார். போனவாரம் நகரத்தில் இருக்கும் இரண்டாவதின் வீட்டிற்கு வந்தபோது மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கித் தந்த மெண் செருப்பு இன்னும்  புதிய தோற்றத்துடன்  இருந்தது. கருஞ்சிவப்புபுளு கலந்த செருப்பின் பெயர் ஆங்கில எழுத்தில் அழுக்குப் படியாமல் இருந்தது. 

மூன்று, செருப்பை மிக பாதுகாப்பாய் வைத்திருப்பதாகவும், தான்  ஒன்றுக்கும், இரண்டுக்கும் தேவையில்லாமல் செலவு வைப்பதில்லை என்பதாகவும் இருந்தது. சற்று நேரத்தில் வீட்டின் குட்டிகளில் ஒன்றை கத்தி அழைத்தார். சின்ன வாண்டு முகத்தைச் சுழித்துக்கொண்டே வந்தது. இது மதிக்கலபாஎன்று சொல்லிவிட்டு போடி உள்ளத் தைலம் இருக்குது பாருமா கொஞ்சம் எடுத்தாஎன்றார்.

அவள் ஆளு வந்தாப் போதும்  ஒடனே  ஆக்ஷன் தொடங்கிடுவார்என்று முணகிக்கொண்டேப்  போனாள்.  அவள் சொன்னது மூன்று, ஒன்று, இரண்டு எல்லோருக்கும் நன்றாகக்கேட்டது. ஒன்று, இரண்டு மட்டும் லேசாகச் சிரித்துக்கொண்டார்கள்.  மூன்றுக்கும் கேட்டது ஆனால், வெறுமனே இருப்பதைத்தவிர எதையும் செய்யமுடியவில்லை. 

ஒன்று, இடப்பக்கமாகவும்,  மூன்று வலப்பக்கமாகவும், சற்று கீழ் இறங்கி நடுவாக இரண்டும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த  கோணம் கை தலைகீழாகப் போட்டால் வரும். 

ஒன்று, தன் பேச்சைத் தொடங்கி பேசிக்கொண்டிருந்தார்.  மூன்று, முகத்தைக் கோணிக்கோணி அடிவயிற்றில் தைலம்  தேய்த்ததைப் பற்றி பெரியதாக வருத்தம் எதுவும் இல்லை. மூன்று, பல நேரங்களில் தன்னை வருத்திக்கொள்வது இயல்புதான் என்பதுபோல் இருந்தார்.

இரண்டு  மட்டும் தைலம் தேய்க்கும் லாவகத்தை அறிந்து மீண்டும் எந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்லப் பணிக்கப்போகிறாரோ என்று லேசான பயம் இருந்தது.

நம்ம சர்ச்சிக்கு நான்காவதாக வந்திருக்கிறாரே, அவர், சில விஷயங்களை நல்லாத்தான் செய்யிறார். ரெண்டு நாளுக்கு முன்ன ஒரு விஷயம் பேசினாரு. பேச்சு ரொம்ப கரைக்டாத்தான் இருக்குதுபாஎன்றார் ஒன்று.

மூன்று சற்று ஆவேசத்துடன் என்னத்தபா, கரைக்டா பேசுறாரு. அந்தாளாக்கூட வேலை செய்யிறானுங்களே, அந்த மூணு பசங்க ஒரு ஞாயிறுனா கோயிலுக்கு வரானுங்களா? கொஞ்சங்கூட கடவுள் பயம் இல்லாத நாயிங்க. நாங்க கிறிஸ்த்தவன்னு டவுன்ல போயி  கிறிஸ்த்தவன் பள்ளிக்கூடத்துல வேலை வாங்கிக்கவேண்டியது இங்க வந்து மாரியாத்தாவுக்கு கூவு ஊத்துறது. குடிச்சிப்புட்டு மோளம் அடிக்கிறது. இவனுங்களாம் மனுஷங்களாபா. அந்தப் பசங்களத்தான் இந்தாளு தலமேல தூக்கி வைச்சிங்கிறாரு.

ஒன்றுக்கு பித்தம் தலைக்கேறியது இப்பிடித்தாம்பா, இந்த வீட்ல ஒவ்வொரு நாளும் வயித்துல நெருப்பக் கட்டிக்கொண்டு இருக்கவேண்டியுள்ளது. வயசான நேரத்துல எவன்னா எப்படின்னாப் போட்டும் நாம பாட்டுக்குணு கெடக்குறமானு இல்லபா. அந்தப் பையன் இப்பிடிப் போறான். இந்தப் பயைன் பொறிக்கித்தனம் பண்ணுது. அப்படியேச் சொல்றாருபா. ஏதாவது ஒண்ணு துடுக்குத்தனமா கேட்டுட்டா என்னாவுறது. அவன், அப்பா, அம்மா சம்பாதிக்கிறாங்க. சாப்பாடு போடுறாங்க. குடிக்கிறான். சீட்டாடுறான் நமக்கென்ன. மத்தவங்கள குற்றவாளியாத் தீர்மாணிக்க நாம யாரு.“ 

மூன்று இந்த வாசகமெல்லாம் தமக்குத் தெரியாததுபோல நம்மிடமே சொல்கிறான் என்பதாக நினைத்திருப்பார் ஒன்று  சொல்லிக் கொண்டிருக்கும்போதே மூன்று பார்வையைச் சிறு அலட்சியத்துடன் வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். அந்தநேரம் அநேகமாகத்தன் வாலிப சிந்தையில் இருந்திருப்பார். 

இரண்டுக்கும் சற்று சங்கடமாகத்தான் இருந்தது. ஒன்றின் வார்த்தை சரியானதாகப் படவில்லை. ஆனால், முற்றிலும் தவறு என்றும் சொல்லிவிடமுடியாது. இருந்தாலும் அவருக்கு சில வழிமுறைகள் தெரியாமல் இருக்கலாம் விளக்கவேண்டியுள்ளது என்று நினைத்து பேசினான் 

சரி. எதிராளி குற்றவாளியாய் இல்லாமல் இருந்தால் ஒருவேளை நீ சொல்வதில் நியாயம் இருக்கிறது.  குற்றவாளியாய் இருக்கிற பட்சத்தில். அக்குற்றத்திலிருந்து அவன் வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில்கூட சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. சரி. நமக்கு பாதிப்பு வரலாம் என்றளவில் மற்றவனை குற்றவாளியாக நாம் சொல்லத தேவையில்லை என்கிறாய். அந்தக் குற்றவாளியை கண்காணிக்கும்  நம் குடும்பத்தைச் சாராத வேறு ஒருவன். குற்றவாளிதான் என்று மூர்க்கமாக வாதாடுகிறான். அது சரியானதா?  என்று ஒன்றைப் பார்த்து, இரண்டு கேட்டார்.

மூன்று சற்று கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒன்று எப்போதும்போல் இயல்பாக ஏன்பா, நீகூட என்னபா புரியாமப் பேசுரே. மத்தவன் சொல்றான்னா. அதற்குறியதை அவன் அனுபவிக்கப்போறான். நமக்கென்னத் தலையெழுத்து. சப்போஸ், இவரு ஒண்ணு சொல்றாரு. எதிராளி சின்னத்தனமா ஒண்ணு சொல்லுவான். எனக்கு கோபம் வரும். நான் போயி அவனக்கேக்கணும். அப்புறம் மண்டைய ஒடச்சிக்கிணு அங்கபோய் நிக்கணுமா?.

ஒன்றின் வாதத்தில் ஒருதலைத் தன்மையான நியாம்தான் இருக்கிறது என்று இரண்டு உகித்ததால்  வேகு லேசாக மடை மாற்றினார்.

நாலாவதாக வந்தவர் ஏதோ முக்கியமாகப் பேசினார் என்றாயே

ஒன்று முழு நம்பிக்கையுடன் உரையாடிக் கொண்டிருப்பதால் இரண்டின் மடை மாற்றத்தால். எந்தத் தடையும் இல்லாமல் வாதத்திலிருந்து வழுவி. இரண்டு நினைவுபடுத்திய விஷயத்திற்கு வந்துவிட்டார். அதான்பா, நம்ம வீட்டுக்கு மேற்கால பள்ள மது ஓரமா மூணு வீட்டு மணை இருக்குதாம். அவனுங்க மூணு பேரும் இந்துங்க. அதுஊர் பெருதாக்காரனும் இருக்கிறான். நான்காவது அவர்களிடம் பேசினாராம். என்னய்யா, ஊர்காரங்க நீங்க. கிறிஸ்த்தவன ஒண்ணும் மதிக்கிறது இல்ல. இந்த ஊர்ல முப்பது பேரு இந்துங்கனா. முப்பதுபேரு கிறிஸ்த்தவனும் இருக்கிறோம். ஆனா ஏரியில, குட்டையில  மீன் ஏலம் உட்டா. நீங்க மட்டும் எடுத்துக்கிறீங்க. வருஷா வருஷம் ஏரிக்கரையில் இருக்கிற மரத்தையும் ஏலம் உட்டு நீங்களே எடுத்துக்கிறீங்க.  புளியம்பழம் ஏலம் உட்டு அதையும் எடுத்துக்கிறீங்க. ஏறக்குறைய சரிபாதியா இருக்கிற எங்களுக்கு எதிலாவது பங்கு தாறீங்களா? நாங்களும் இந்த கிராமத்திலதான இருக்கிறோம்னு. சோஷியலா கேட்டு இருக்காரு. அவனுங்களும், ‘இன்னாய்யா கிறிஸ்த்தவங்க  இது வரைக்கும் எதையும் கேக்கல. நாங்களும் கொடுக்கல. இருந்தாலும், யாரு. எல்லாம் மாமன் மச்சானுங்கதானே.  வேணும்னா இந்தப் பள்ள மதுவாண்ட இருக்கிற மூணு மணையை கிறிஸ்த்தவங்களுக்குனு கொடுத்துடுறோம். வைச்சிக்குங்க. நாங்க எனாமா எழுதிக்கொடுத்துடுறோம்என்று மணைக்கார்கள் நான்காவதிடம் சொல்லியிருக்கிறார்கள். நான்காவது என்னிடம் சொன்னார்.  இந்த மாதிரி பேசினேன். இந்துக்காரங்க கோயிலுக்கு சில மனகளைத் தாரேன்னு சொல்றாங்க.  நம்ம ஆளுங்க சிலராண்ட  பேசிட்டு. அவங்களாண்ட  இருந்து எழுதி வாங்கிக்கலாம்.  

ஒன்று நான்காவது யோசனையில்  அநேகமாகக் கிரங்கிப்போய் இருக்கிறார் நான்காவதின் யோசனைகளைச் சொல்லி முடிக்கும் முன்னே மூன்றிடம் தாவினார். ஒருவேளை நான்காவது உன்னிடம் இந்த யோசனையைச் சொன்னால் நீ எந்த மறுப்பும் சொல்லாத. செய்யிங்கையானு சொல்லிடுபாஎன்று மூன்றாவதிற்கு யோசனைச் சொன்னார். கேட்டுக்கொண்டிருந்த இரண்டாவதிற்கு நான்காவதின் செயல் பெரிய விஷயமாகப் படவில்லை. இதைவிட சாமர்த்தியமாகப்பேசி எதிர் நபரை சடிதியில்  வீழ்த்தி விடுகின்ற பல வித்தைகளைக் கையாளக் கூடியவர்தான். அச்செயல் எல்லாத் தரப்பிலும் நியாயத்தைக் கடைபிடிக்கிறதா என்றால் நிச்சயம் வெகு சீக்கிரத்தில் ஏமாற்றம்தான் மிஞ்சும்.என்று இரண்டு யோனைசெய்துக்கொண்டார்.

எதிர்பாராவிதத்தில் மூன்று, “அட, அந்தாளு டகுளுபா. அவுரு இப்படிச்சொன்னார், அப்படிச் சொன்னாருங்கிற

ஒன்றுக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. இவங்க ல்லாம் என்னதான் நெனைக்கிறாங்க. நம்மை அடி முட்டாளுனு நெனைக்கிறாங்களா? இந்த ஊர்ல என்னப்போல குடும்பத்த கவனிக்கிறவன் யாரு. ஒருத்தனக் காட்டச்சொல்லு. இந்த வயசு வரைக்கும் ஒருத்தனாண்டப் போயி ஒத்தப் பைசா கடன் கேட்டேன்னு சொல்லச் சொல்லு. என் வீட்டுப்படி றி கடன் கேட்காதவன் ஒருத்தன் இருக்கானா. நாய்க்கன் கூட சில நேரம் என்னாண்ட வருவாங்க. அவ்வளவு சிக்கனமா என் உழைப்பை வச்சி வாழுறேன். நான் என்ன முள்ளமாறியா? எவனையாவது ஏமாத்தி சேக்கிறேனா? உலகம் என்னவெல்லாம் தில்லு முல்லு பண்ணி பொழைக்குது தெரியாதா? பதினைஞ்சு வருஷம் டெல்லியில வேலசெய்தேன். சென்னை, செங்கல்பட்டுனு முக்கிய நகரங்களில் இப்பவும் செய்றேன். உத்தியோகத்திலும் அவ்வளவு நல்லப்பேரு. ஆனா, இந்தக் கெழவன்கூட நம்மப் பேச்சில வயப்பட மாட்டேங்குதேஎன்று நினைத்திருப்பார்போல சற்று இடைவெளிவிட்டு குரல் கம்மி எனக்கு ஒண்ணும் தெரியாத மாதிரி சொல்லாதப்பா. அந்தாளு பேசினாரு, மணைக்காரன் குடுக்கிறோம்னு சொல்றாங்க. வந்தா நல்லதுதானே. நாளைக்கு கோயிலுக்கு சொந்தமாயிருந்தா. ஏதாவது கூடம் மாதிரிக்கூடத்தான் கட்டிக்க,  பின்னாடி வரவங்களுக்கு பயன்படப்போகுது. என்கிற மாதிரிதான் நான் யோசித்தேன்.

இரண்டிற்கு வாய்ப்புக் கிடைத்தது. சரிணா, நீ யோசிக்கிறது நல்லதுதான். அதைத் தப்புனு சொல்லல. ஆனா, நீ கொஞ்சம் ஜாக்கிறதையா இருக்கணும். அந்தாள் மணை சம்மந்தப்பட்ட ஆளுங்களாண்ட பேசி முடிச்சிட்டு எழுதி வாங்கின பிறகு ஆயரிடம் சொல்லிக்கலாம் என்பது மிக மிகத்தவறானது. இங்க இருக்கிற ஜனங்களுக்கு நான்காவது பெரிய வாத்தியார் மாயையை ஏற்படுத் தியிருக்கிறார்கள். இப்போது அங்கியில் வேறு இருப்பதால் கடவுள்  பக்த்தர் என்கிற நம்பிக்கை வேறு குடிகொண்டிருக்கும். ஆக, நான்காவதின் சாதுர்யமான பேச்சை நம்பி மயங்கிவிடுவார்கள்.  உண்மையிலேயே யாருக்கும பாதகம் இல்லாமல் செய்ய நினைத்திருந்தால், மணைக்கார்களிடம் பேசியபிறகு ஆயரிடம், அந்த மக்களின் விருப்பத்தை தெரிவிக்கவேண்டும். ஒரு வேளை ஆயர் சம்மதித்தால், மணை தருபவர்களை ஆயரிடம் கூட்டிச்சென்றால், இருதரப்பிற்கும் நல்ல புரிதல் ஏற்படும்.  இதைவிடுத்து தன்னுடைய சாம்ர்த்தியத்தை மட்டுமேக் காட்டவேண்டும் என்று ஏதோத் திருட்டுத்தனமாக வாங்குவதுபோல் காதுங்காதும் வச்சதுபோல் முடிச்சிக்கலாம் என்பது சரியான செயல் அல்ல.  அப்படியே எழுதி வாங்கும் சூழல் வந்தால் அனைத்தையும் சர்ச்பெயரில் எழுதிவாங்குங்கள். நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் சபையார்தான் செய்தாங்க என்று வாய்க்கூசாமல் சொல்லிவிடுவார்

ஒன்று ஆமாம்பா, நான்கூட சொன்னேன். என்னையா, ஐயரை காணாத நாம பாட்டுக்கு எப்படி எழுதிவாங்கிறதுனு கேட்டேன். அதுக்கு நான்காவது  அய்யா, அந்த அய்யிரு நாடாருய்யா. நம்ம எதைச் செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிப்பாரு. நாம ஒரு நல்லத செய்ய உடமாட்டாரு. மணையை எழுதி வாங்கிட்டு  அப்புறம் சொல்லிக்கலாம். சபையில் இருக்கிற நிங்க இன்னும் ரெண்டுபேரு, உங்க அப்பா சரின்னாப்போதும். நான் பாத்துக்குவேன்னு சொல்றாருபா

இப்போது இரண்டுக்கு கோபம் புடுங்கிக்கொண்டது. இவன் செய்யிறது அய்யோகியத்தனம் அதை மறைக்க ஜாதியச் சொல்றாரா. எவ்வளவு கேவலம் பார்த்தியா?  மனுஷனுக்கு பெறந்த ஊருமேல ஒரு பாசம் இருப்பதுபோல. அவனவன் ஜாதிமேலயும், உயர்வுத் தாழ்விலும் ஒரு நேசம்  இருக்கத்தான் செய்யும். ஆனா தை,  உடல் பலத்துக்காக ஊரும், சத்து பொருளாக பாவிக்கக்கூடாது, தினந்தோறும்  கழிக்கும் மலமாகக் கருதிக்கொள்ளவேண்டும்.  ஆயர் அப்படி ஒண்ணும் இல்லை. எல்லாரையும் நேர்மையின் அடிப்படையில் ஒன்றுபடுத்தி கொண்டுசெல்கிறார். ஆனால் பொதுவாக பக்தியின் பெயரால் மனித சுதந்தரத்தை ஒடுக்கப் பார்ப்பார். அது அவர் மட்டும் செய்வதில்லை.  மதநிறுவனமாக அனைவரும் அதைக் கையாள்கிறார்கள்  என்பது உண்மைதான். இருந்தாலும் நான்காவது அப்படிச்சொல்ல எந்த அருகதையும் இல்லை.“  

மூன்று எப்பா, காலம் ரொம்பக் கெட்டுப்போச்சி. ஒருத்தனும் கடவுளுக்கு பயந்து வேல செய்யவில்லை. வரும்போதே இதப்பெறட்டிக்கலாமா, அதைப் பெறட்டிக்கலாமானுதான் பாக்கிறான். தம்மா தம்மா துண்டுலாம் என்ன அக்குறும்பு பண்ணுதுங்க. நிறவேறுதுபா. கடவுள் சொன்ன வார்த்தைங்க ஒண்ணு ,ஒண்ணா நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

ஒன்றுக்கு முகம் மாறியது. அதை கவனித்த இரண்டு ஏம்பா, நீ. இன்னும் பழையக்காலத்தின் வாழ்வு முறையிலேயே இருக்கிற. உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. சின்னப் பையன்கூட புத்திமதியத் தூக்கிக் குப்பையில போடு என்கிறான். இந்தக்காலத்துல நமக்கு மரியாதைத் தருவான் என்றெல்லாம் எண்ணக்கூடாது

மூன்று ஆமாம், ஆமாம் அது என்னவோ உண்மைதான்என்று ஆமோதித்ததார்.

ஒன்று  ஒரு காலத்துல எங்க ஊத்துவாங்களோன்னு காத்துக்கிடந்தான். இப்ப அவன் புள்ளைங்க கம்பெனி ,அது இதுன்னு சம்பாதிக்குதுங்க. அவன்போயி மதிக்கலனா எங்க மதிப்பான்.

இப்போது மூன்றுக்கு கோபம் வந்துவிட்டது.  ஹிக்கும் ஊர்ல கீற பசங்களாண்ட போயிடுற. உன் பிள்ளைங்க மதிக்குதா? என்னடா வீட்ல வயசானவன் இருக்கிறானே இன்னாத் தாத்தா என்னா, ஏதுன்னு கேக்குதுங்களா? நாலு பசங்க நாலு வழியாப் போறானுங்க. நீ அதுங்கள கவனிக்காம உட்டுட்ட எனக்கென்னக் கெடக்குது போய் சேரப்போறேன். அய்யோ அவன் புள்ளைங்களானு உன்னதான் குற்றம் சொல்லப்போறாங்க.

பேச்சு வேற எங்கோ திசை மாறுது என்பதை ஊகித்த இரண்டுபசங்களாண்ட ஒரு கட்டத்துக்குமேல அதையெல்லாம் எதிர் பார்க்க முடியாதுபா. உன் இயல்பில் பசங்க இல்லாதப்ப கண்டிப்பா சகஜமா இறுக்கமாட்டானுங்க.  அவர் சொல்லாம இருப்பாரா? உனுக்கு மைறைவா பசங்களாண்ட சொல்லிக் கிணுதான் இருப்பார்.இரண்டின் இந்தப்பேச்சு ஒன்றுக்கு சற்று கோபம் தணிப்பதாக அமைந்தாலும். முழுமையாகத் தணியவில்லை. 

ஒன்று இப்பிடித்தாம்பா, என்ன டெங்ஷனாக்கி விட்டுடுறாரு. இவுரு உன்னும் அந்தக்காலத்திலேயே இருக்கிறாருபா. நான் புள்ளைங்களை கவனிக்கலையாம். சொல்றாருபாரு. ஒவ்வொரு நேரத்துல தூக்கிப்போட்டு மிதிக்கிறேனே அப்ப மட்டும் ஓடியாந்து குறுக்க நின்னுக்கிறியே. அப்பத்தெரிலியா, நான் பிள்ளைகளைக் கவனிக்கிறது. நாம புத்திமதி சொல்றோம். கேட்காம போறான். போட்டோம். கடவுள் கொடுத்தார். கடவுள் எடுத்தார்னு சொல்லிட்டு போறேன்.இதுவரை இரண்டின் முகத்தைப்பார்த்து சொல்லிக் கொண்டிருந்த ஒன்று இன்னும் கோபம் தணியாதவராக மூன்றைப் பார்த்துச் சொன்னார் அந்தக்காலத்தில இருந்து, இந்தக்காலம் வரை நாங்க இருந்தா மாதிரியே எங்கப் புள்ளைங்களும் இருப்பாங்களா என்ன?

ஒன்றுக்கு மனதளவில் சற்று வருத்தம் வந்துவிட்டது என்பதை ஊகித்த இரண்டு. இருவரையும் இயல்பு நிலைக்கு வரவேண்டி பேசினார். நம்ம கட்டுக்குள்ள இருக்கிற இப்ப மட்டுமில்ல அந்தக்காலத்திலிருந்தே பொது வேலைகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். அங்க நடக்கும் நியாய அநியாயங்களுக்காக அந்த இடங்களிலேயே பேசியவர். இப்போதும் அப்படித்தான் இருப்பார். அதுதான் அவர் குணம். இடையில் மாறிவிடாது. வேண்டு மென்றால் நியாய அநியாயங்களை அவர் பார்வையிலிருந்து மறைத்து வைக்கலாம். ஒரு வேளை நம்ம பெரியப்பாபோல அரசாங்க உத்தியோகத்தை வைத்துக்கொண்டு தன் குடும்பத்தைப் பொறுப்பாக கவனித்துக்கொண்டு வாழ்வு போகும் வழியில் வாழ்ந்திருந்தால், ரத்தத் தளர்ச்சி வராதவரை   எந்தப்பிரச்சனையும் இல்லை. 

மூன்று, ஒன்று இருவரும் இயல்பு நிலைக்கு வருவதற்கு மாறாகச் சற்று குழப்ப நிலைக்கு வந்துவிட்டார்கள். உடனே மூன்று, சமயல் செய்துக்கொண்டிருந்த மருமகளை அழைத்து ஏம்மா, சாப்பாடு குடும்மா. இருட்டிடுச்சி சீக்கிரம் ஊட்டுக்குபோட்டும்என்றார்.

தர்க்கம் ஒரு முடிவுக்கு வந்தது.

மாங்காய், முருங்கை சாம்பார், பக்கத்தில் ஆம்லெட் சாப்பிட்டபிறகு இரண்டு கிளம்கினார். வழித்தடங்கள் இருட்டுகளில் முழ்கியிருந்தது. இருந்தாலும் தர்க்கத்தின் மையக்கேள்வியான  “உன்பிள்ளைங்களே மதிக்கமாட்டேங்குது. அதுங்க பாட்டுக்கினு மூர்க்கமா திரியுதுங்கஎன்ற மூன்றின்  கேள்விகள் குடைந்துகொண்டே வந்தது. இக்கேள்வி விரிவடைந்து யார் யார் குடும்பத்தின் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள். அவர்களின் தகப்பன்கள் இயல்பான குணம் எத்தன்மை உடையது என்று பரிசோதனை செய்துக்கொண்டே இருந்தது. அதன் விளைவாக பிள்ளைகள் குற்றம் செய்யும்போது மட்டும் அடிப்பதும், திட்டுவதும் அதிகளவில் பயன் தராது. பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பொது வெளிகளில் நியாத்திற்காக உறுதியுடன் பேசுவது, நடந்துகொள்வது மிக சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதுஎன்ற முடிவுக்கு வந்தார்.

ஒன்றுஇயல்பிலேயே அவ்வாழ்வு முறையைத் தவறவிட்டிருந்தார், இல்லை யென்றால் நான்காவதின் சாமர்த்தியப்பேச்சில் கிரங்கியிருக்கமாட்டார்.


டேனியல் 








No comments: