நம்பிக்கையின்மை வளருகிறது
ஏறக்குறைய ஐந்தாண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையில் மிக நீண்ட நாட்களாய் நல்ல சினிமாவிற்காக களப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பவர் என்று அறியப்பட்டவரிடம் எங்கள் ஊரில் ஒரு நிகழ்வு ஒழங்கு செய்யவேண்டும் என்றபோது, முதல்கட்டமாக இவ்வளவு பணம் ஆகும் என்றார். எனக்கு என்னடா இது கலியாண மண்டப முதாலாளிபோல் தொகை நிர்ணயிக்கிறார் என்று இருந்தது. மீண்டும் இரண்டு ஆண்டுக்கழித்து அவரின் சிறப்பு பயிற்சித் திட்டம் வெளியிட்டு இருந்ததைப் பார்த்து என்னை நானே ‘உனக்கு எந்த மனிதர்களிடமும் பேசவும் தெரியவில்லை, பழகவும் தெரியவில்லை. என்று நொந்துக்கொண்டு, அவரை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
அய்யா, தங்களுடையத் திட்டத்தைக்கண்டேன். கலையின் மீதுள்ள ஆர்வத்தின் மீது தாங்கள் தொடர்ந்து இதுபோன்று திட்டங்கள் செயல்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்வு கொண்டேன். அதனால், தங்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளப் பிரியப்படுகிறேன். தங்களின் அனுமதி கிடைக்குமா?‘ என்றபோது ‘மிக்கநல்லது தம்பி உங்கள் போன்ற இளைஞர்களின் ஆர்வத்தால் தான் தமிழ் சினிமாவின் கலை நயத்தை உலகுக்கு வெளிப்படுத்த முடியும். அநேகமாக சீட் முடிந்துவிட்டது. இருந்தாலும் நீங்கள் மிகத் தொலைவில் இருந்து ஆர்முடன் கேட்பதால் தங்களையும் இணைத்துக்கொள்கிறேன். நான்கு நாள் பயிற்சி தம்பி, சில சலுகைகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம். சிலதை நீங்களாக செய்துக்கொள்ள தயாராக இருக்கவேண்டும் (குறிப்பாக நாங்கள் லெமன், புளிசாதம் தருவோம். அது உங்களுக்க உகந்ததாக இல்லை என்றால் பிரியாணி நீங்கள் வெளியில் சென்று சாப்பிடலாம் அது உங்கள் செலவு.) கட்டணத்தொகை ரூ. 20000/. ஆகும். எடுத்துவந்து விடுங்கள் ஒண்ணும் பிரச்சனையில்லை. உங்கள் ஆர்வம் வெற்றிகரமாக நிறைவேரும்.‘ என்றார்
நான் இவ்ளோ பணமா? என்று யோசித்துக்கொண்டே ஏதாவது குறைப்பு செய்ய வாய்ப்பிருந்தால்... என்று இழுத்து. எனக்கு கற்றுக்கொள்வதில் ஆர்வம் என்றேன்.
அவர் ‘நான் சொல்லுவது மிகக்குறைந்த கட்டணம்‘. என்றார்.
கலை பரந்தது, அதை முன்னெடுப்பவர்களுக்கும் இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. என்பதை உணர்ந்தேன்.
அதே காலகட்டத்தில் கலை சினிமாவிற்கான முன்னெடுப்புகளை சில இளைஞர்கள் செய்தார்கள். அதில் உண்மையில் கலைசினிமாவின் பாடுபொருள் இருந்தது. பணத்துக்கான குறிக்கோள் இல்லை என தெளிவானபோது தொடர்ந்து என்னை இணைத்துக்கொண்டேன். காலம் கடக்கக் கடக்க ஆரம்ப கட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பாடுபொருளில் இருந்து மாறவேயில்லை. அது ஒருதலையான பாடுபொருள் என்று தெளியவைத்தபிறகும் திரும்பத்திரும்ப அதையேப் பாடுகிறார்கள்.
கடந்த காலத்தில் பெரும் மாற்றத்திற்கான அடித்தளத்தை எப்படி முன்னெடுத்தார்கள். அவர்களின் போக்குகள் எப்படியிருந்தது என்று ஆராய்ந்து அதைகணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
குறிப்பாக காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும் முன்னெடுத்த களங்களின் பாணியை இந்த இளைஞர்கள் யோசிக்கவேயில்லை. இத்தலைவர்கள் முன்னெடுத்த போராட்ட வழிமுறைகள் எந்தக்கால நவீன நூற்றாண்டுக்கும் பொருந்தும் என்பதை விளங்கிக்கொள்ளவும் இல்லை. அதற்கு, அவர்கள் கொண்டிருந்த அடிப்படையான குணங்கள் மட்டும் இருந்தால் போதும். ஒட்டு மொத்த சமூகத்தின் மக்களை சுதந்தரத்திற்காக மட்டுமல்ல, சாதியத்திற்காக மட்டுமல்ல, ஒடுக்குமுறைக்காக மட்டுமல்ல. மக்களிடம் கலை சினிமாவின் ரசனையையும் உயர்த்த முடியும். அதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களின் முன்னெடுப்புகளில் கொட்டிக்கிறக்கிறது. அதை தற்கால எவ்வகை சமூக விழிப்புணர்வுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒருதலையாக எதை, எவ்வளவு காலம் செய்துகொண்டிருந்தாலும் மக்களிடம் முன்னேற்றத்தை ஏற்படுத்தமுடியாது என்பதை என்னால் பல உதாரணங்களைக்கொண்டு சொல்லமுடியும். இத்தன்மை போராட்டங்கள் நீண்ட நெடிய காலம் கிணற்றுத்தவலைபோல் பயனற்று இருப்பதை ஆய்வு செய்து அறிகின்றேன்.
முன்னோர்கள் வெறுமனே கூட்டம்போட்டு பேசிவிட்டு போய்விடவில்லை. தன்முனைப்பாக இறங்கி செய்தார்கள். காந்தி கூட்டத்திலும் பேசுகிறார். மக்களைத்திரட்டிக்கொண்டு முதல் ஆளாக ஓடுகின்றார். வெறுமன வெள்ளையனை குறைசொல்லிக் கொண்டிருப்பது மட்டும் செய்யவில்லை. அம்பேத்தர் பேசுகின்றார் இரவு பகலாக அதற்கான திட்டங்களை வகுக்கின்றார். வெறுமனே இந்திய சாதி வருணாசிரமங்களை குறைசொல்லிக்கொண்டிருப்பதை மட்டும் செய்யவில்லை. பெரியார் பேசுகிறார் சாதியத்தின் மேடு பள்ளம், பிராமணியத்தின் ஓட்டைகள் எங்கங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். வெறமனே குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் இத்தலைவர்களை மக்களே நிராகரித்துவிட்டிருப்பார்கள். இதுதான் இத்தலைவர்கள் சமூக மாற்றத்திற்காக எடுத்துக்கொண்ட அடிப்படை முன்னெடுப்பு.
இவ்வழிவகையை கலைசினிமா பற்றி பேசும் எந்த இளைஞர்களும் கண்டுபிடிக்கவில்லை. இவர்கள் தமிழ் சினிமாவை ஒரு சில இயக்குநர்கள் கலைநேர்த்தியாக செய்திருக்கிறார்கள் அவர்களால்தான் கொஞ்சமேனும் தமிழ் சினிமாவின் நற்பெயர் நிலைநிற்கிறது என்று பேசுகிறார்கள். ஆனால், அதே இயக்குநர்கள். நேர்காணலில் நான் சினிமாவை நேசிக்கிறேன். என் இயல்புக்கு வரவேண்டும் என்ற சிறத்தை செய்கிறேன். அப்படிச்செய்வது மட்டுமே எனக்குத் தெரிந்திருக்கிறது. மற்றபடி பெரிய தரிசனங்களை, கட்டமைப்புகளை எல்லாம் புகுத்தவேண்டும் என்று மெனக்கெடவில்லை என்று மிகச் சுலபமாக சொல்லியிருக்கிறார்கள்.
இவைகளை எல்லாம் தற்போதைய இளைஞர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் நல்ல சினிமாவின் ரசனையை வளர்க்க மக்கள் முன் நிற்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான்.
என்னால் உலக சினிமாவின் மேதைகளாக போற்றப்படும் பல இயக்குநர்களின் படங்களில் இருந்தும்கூட எதார்த்தம் இல்லாதக்காட்சிகள் என்பதை சுட்டமுடியும். சமீபத்தில் உலகத்தின் சிறந்த இயக்குநர்களின் படங்களை தொடர்ந்து பார்க்கும்போது அதைக்கண்டுபிடித்தேன். குறிப்பாக சார்ளி சாப்ளின், மற்றும கிம் கி டக் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது எதார்த்தமற்ற தலா ஒவ்வொருக்காட்சியைக் கண்டேன். இப்படி அந்த மேதைகளிடமே சிலநேரம் தவறும்போது. நம் தமிழ் சினிமாவின் சூழ்நிலையை யோசிக்கவேண்டும்.
இவைகளை சற்றும் யோசிக்காமல், பேசியதையேத் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டே இருப்பதால் மட்டுமே தமிழக சினிமா உலகம் உலகத்தரமான சினிமாவிற்கு நகர்ந்துவிடும் என்பதில் நம்பிக்கையின்மை கூடிக்கொண்டே இருக்கிறது.
நாம் எந்த செயலுக்காக மக்கள் முன் பேசுகிறோமோ அது இப்படி இருக்கவேண்டும் என்று குறைந்த பட்சம் செயல்வடிவத்தில் காட்டவேண்டும். அப்போதுதான் மக்கள் தாங்கள் சொல்லும் மாற்றங்களை யோசிப்பார்கள். அது இல்லாமல் ஒருதலையாக பேசிக்கொண்டே இருப்பதால், கலைக்காகப்பேசும் இளைஞர்களின் மீது கருத்து முரண் உருவாகிறது. உண்மையாகவே வேறு முன்மொழிவுகளை எதிர்பாத்து மனம் காத்திருக்கிறது.
டேனியல்
No comments:
Post a Comment