Sunday, November 3, 2013

சினிமாவின் பாட்டு

சினிமாவின் பாட்டு

பல நேரங்களில் பலர் இது சம்பந்தமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த மாதத்தில் ஒரு திரை நிகழ்வில் பாட்டு இல்லாமல் ஒரு படத்தை பார்வையாளன் ரசிக்கும்படி தந்ததாகப் பேசினார்கள். மேலை நாடுகளின் படங்களில் பாட்டு வாழ்கிறதா என்ன என்ற கேள்வியும் இருக்கிறது. பாடல்கள் இடையிடையில் கதையை உள்வாங்குதலைக் கெடுக்கிறது என்கிற புரிதலும் இருக்கிறது.

தமிழ் பண்பாடு, கூட்டுக்குடும்ப முறைமைகளை அநேகமாகமுடித்துக்கொண்டது. இருவரின் தனி விருப்பம் ஒரு குடும்பம் என்கிற மோகமாக மாறிவிட்டது. கசப்பும், இனிப்பும் கலந்த கூட்டுக் கலவையின் மூலிகை மருந்து குணப்படுத்த நேரமெடுக்கிறதென்று, அவசர சிகச்சை செய்துகொள்ள தனிக்குடித்தனம் புகுகின்றார்கள். ஆனால், மனப்புண் என்கிற தொற்று வெகு சீக்கிரத்தில் தனிக்குடும்பத்தை பதம்பார்த்து விடுகிறது. வாழ முடியும் என்று கூட்டை பிரிந்து வருகின்றவர்களில் பலர், தனிகுடும்பத்தில் சோபிக்காமல் தனித் தனி மனக்கட்டையாகும் சூழல் நிரந்தரமாகிறது. அதிலும், தனி நபராகவேனும் வாழ முடியும் என்று நிற்பவர்கள் கொஞ்சம்தான். இந்த நிலைதான் பாடல் விஷயத்தில் மேலை நாடுகளையும், தமிழ் சினிமாவையும் ஒப்பிடுவது. மேற்குறிப்பிட்டதுபோல தமிழ் சினிமாவில் பாடல் இல்லாமல் போனால் வெகு சீக்கிரத்தில் ஒரு பண்பாட்டுச் சீரழிவு நடந்தேர வாய்ப்பிருக்கிறது. (அவசரம் வேண்டாம். எந்த இடத்தில் தமிழ் பாடல்களில் அதே சீரழிவு தற்போது நடக்கிறது என்பதை பின்னால் சொல்கின்றேன்.)

தமிழ் சினிமாவில் பாடல் எழுதுகிறவர்கள், இசையமைக்கிறவர்கள், தொழிற் நடைமுறைக்காக இல்லை என்றாலும், காதலுக்காக, நம்பிக்கைக்காக, சாடலுக்காக, நிம்மதிக்காக, சந்தோசத்திற்காக, அழுகைக்காக, வரலாறுக்காக, ஒருவரின் தனிப்பட்ட மனம் அதை நாடிச்செல்கின்ற நிலை இருக்கிறதென்றால் நிச்சயமாக தமிழ் சினிமாவில் பாடல் இருக்கவேண்டும். நான் கேட்கிறேன் மேலை நாட்டில் அவன் கலாச்சாரம் இதுதான் என்று வைக்கிறபோது அதையே கண்மூடிக்கொண்டு நாமும் வாலாட்டிக்கொண்டு ஓடவேண்டுமா என்ன? என்னுடைய கலாச்சாரம் இது. அதற்குள், அவனின் கலை உணர்த்தும் நுட்பத்தை நம்முடைய படைப்பில் எப்படி மெருகேற்ற வேண்டும் என்பதுதான் தற்போதையப் பிரச்சனை. 

தமிழ் சினிமாவின் எழுச்சிப்பாடல்களால் ஆட்சி அதிகாரங்களை பிடிக்கமுடிந்ததுபோக, தற்போதும் அப்பாடல்களைக் கேட்கும்போது அந்த மனநிலை நமக்கு வராதா? இதுமாதிரியாக இச்சமூகம் மாறிவிடாதா? என்கிற உள் உணர்வுகள் சொல்லிக்கொண்டே இருக்கும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளின் தமிழ் சினிமா பாடல்களை ஆய்வுசெய்தால் அதன் மோசமான பரிணாமம் உச்சத்தை அடைந்திருப்பது தெளிவாகும். இதற்கு தமிழ் சினிமா வியாபாரிகளின் வக்கிர புத்தியை மட்டுமே சொல்லமுடியாது. ஓய்வில்லாமல் மக்கள் மீது ஊடகங்கள் திணிக்கும் வக்கிரபுத்தியைதான் முதலில் குறிப்பிடவேண்டும். இரண்டாவது சினிமா வியாபாரிகள். பிணம் விழுகாமலே குத்தாட்டம்போடும், கடைநிலையில் இருக்கும் யோசிக்காத கடந்தகால, தற்கால இளைய சந்ததியர்கள். 

இன்று ‘பாண்டிய நாடு‘ பார்த்தேன். நல்ல படம் என்று பேசப்படவேண்டிய படம். அபத்தமாக திணிக்கப்பட்ட பாடல்களால் கலைத்தன்மையை இழந்து நிற்கிறது. உண்மையிலேயே திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார்கள். இயல்பு வாழ்வில் சாதாரண மனிதன் நடந்து கொள்வது போலவே அதன் கட்டமைப்பு சிறப்பு பெறுகிறது. சண்டை அமைப்புகள் கூட கொஞ்சமும் எதார்த்தம் மீறவில்லை. ஆனால், கோயில் பாட்டில் சிவகுமார் (விஷால்) வாயசைப்பும், பாடலுடன் கொஞ்சமும் ஒன்றாத முகபாவங்களுடன் பாட்டைக்கேட்பது சலிப்பாக இருக்கிறது. (என்ன இருந்தாலும் பாடல்களின் நிஜத்தன்மையை உணரச்செய்தவர் ‘மோகன்‘ ஒருவர் மட்டுமே.) வசனம்கூட சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், கதை உருக்கமாக போகிறபோது கேவலமான குத்தாட்டம் பாட்டுபோடுகிறார்கள். இந்த மாதிரி பாடல் போடும் உத்திதான் தமிழ்சினிமாவின் கலையை முடக்கும் போக்காகும். நல்ல கதையைக்கேட்டு, விஷால் படத்தை தானே தயாரிக்க ஒத்துக்கொண்டார் என்று பாராட்டலாம். ஆனால், தேவைற்ற நேரத்தில் பாடல்களை திணித்து அவரே அப்படைப்பை கெடுத்துவிட்டார். 

தமிழ் சினிமாவில் நான்கு, ஐந்து உருப்படியில்லாத பாடல்களை போடுவதை விட, ஒன்று இரண்டு பாடல்களைமட்டும் சேர்ப்பது நல்லது. அது தமிழ் பண்பாட்டையும் மறக்காமல் இருப்பதற்கு உதவும். ஆனால், அப்பாடல்களை சினிமாவில் சேர்ப்பதற்கு மிக நேர்த்தியான இடத்தைக் கொடுக்கவேண்டும். அதைவிடுத்து ‘போறதுதான் போறே. அந்த நாயை, ச்சூன்னு தொறத்திட்டு போன்னு‘ பாட்டியின் வாசகத்தை கொண்டாந்து தமிழ் சினிமா பாடலின் நடைமுறையாக்கக்கூடாது. திரைக்கதைக்கு எப்படி சுவாரசியம் குறையாமல் மெனக்கெடுறார்களோ, அதேபோல பாடல்களை கதையில் நுழைப்பதற்கு மிகுந்த மெனக்கெடல் வேண்டும். கதையின் நுட்பம் கெடாதபடி, கதையும் பாடலும் பிரிக்க முடியாதபடி சூழலை உருவாக்கவேண்டும். அப்படி முடியவில்லை என்றால் அப்படத்தில் பாடல் தவிர்த்துவிடலாம். ஒன்றிரண்டு படங்களில் பாடல் இல்லை என்றால் கலாச்சாரம் அழிந்துவிடாது. டாஸ்மார்க் ஏற்படுத்துகிற சீரழிவிற்கு, சற்றும் குறைந்தல்ல வலிந்து திணிக்கப்படும் தமிழ் சினிமாவின் பல பாட்டுகள்.

ஜேடி

No comments: