Saturday, May 18, 2013

சினிமா,



                             சூது கவ்வும்

மிக மோசமான  எண்ணங்களை உற்பத்தியாக்க முயலும் புதிய இளைஞர்களின் புதிய தொழில் நுட்பங்கள்தான் சூது கவ்வும்.

நண்பர் சிவ சங்கர் தன் முகப்புத்தகத்திலும், அருண் தன் பக்கத்திலும் இப்படத்தைப்பற்றியக் கருத்தைசொல்லியிருந்தார்கள். மேலும், போஸ்டரின் வடிவமைப்பைப் பார்க்கும்போது ஏனோ படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். பிறகு, பேசாமொழியில்  சாட் பை சாட் என்கிற மொழிபெயர்ப்பை செய்கிற ராஜேஷ் என்கிற கருந்தேல் அவருடைய வலைதளத்தில் இப்படத்தின் விமர்சனத்தை எழுதியிருந்தார். அவர் பரவலாக உலகப்படங்களைக்குறித்து பேசுகிறவர். நல்ல ரசனை வாய்ந்ததாக இருக்கும். அவர் எழுதிய விமர்சனத்தை அருண் விரும்பியிருந்தார். எனக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது.

நன்பர் சிவசங்கர், அருண் முகப்புத்தகத்தில் கருத்துக்கள் ஓரளவுக்கு ஒத்திருந்தது. கருந்தேலின் பார்வை முற்றிலும் படத்திற்குச் சாதகமானதாக இருந்தது. நாம படத்தைப்பார்த்தால்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று படத்தைப்பாத்தேன்.

ஒரு படம் எவ்விதமான கலாச்சாரத்தை ஏற்படுத்தும், என்பதை அதன் பார்வையாளர்களை வைத்துசொல்லிவிடலாம். நான் சென்ற திரையரங்கு முப்பது ரூபாய், ஐம்பது ரூபாய் கட்டணங்களைக் கொண்டது. முப்பது ரூபாய் திரையை ஒட்டியும். ஐம்பது ரூபாய் குஷன் இருக்கை கொண்டதுமாய் இருந்தது. ஒருவன் டிக்கட்டை ஆய்வுசெய்து ஆனுப்பியிருந்தான். நான் முப்பது ரூபாய் டிக்கட்டில் சென்று அமர்ந்திருந்தேன். திரையரங்கம் இருளாய் இருந்தது. சற்று நேரம் கழித்து வயதுகுறைந்த வாலிபப்பெண்கள் மூன்றுபேர் வந்தார்கள். சோதனைக்காரன் முன்னேபோகும்படி சத்தமாகச்சொன்னான். ஏறக்குறைய முன் இருக்கை முழுதும்  ஆண்கள் இருந்தார்கள். அப்பகுதிக்கு போக பெண்கள் தயங்கினார்கள். ஒரு பெண் வேணாம் வெளியே போய்விடலாம் என்றாள். சோதனைக்காரன் இப்போது சத்தமாகக் கத்தினான். “ஏம்மா உள்ளப்போங்க“ மூன்று பெண்களும் வெளியேப் போய்விட்டார்கள். சற்று நேரங்கழித்து மீண்டும் என்னைக்கடந்து போனார்கள். என் வரிசையில் நான்காவது இருக்கையில் அமர்ந்திருந்தவன். போங்கடி முப்பது ரூபாக்கு இந்த இடந்தான் வரும் என்றான். பெண்களுக்கு நன்றாகக்கேட்டு இருக்கும் ஆனால் அவர்கள் கேட்காத்துபோல சென்றார்கள். முன்னாடி இருந்தவர்கள் சத்தமாக சிரித்தார்கள். நான் அவனைத் திரும்பித் திரும்பி கோபத்துடன் பார்த்தேன்.  சற்று நரேம் கழித்து வாலிபர்கள் என் வரிசையில் காலியான இடத்திற்கு வந்தார்கள். அதே ஆள் முன்னபோங்கபா பிகர்லாம் வந்திருக்குது என்றான். முன்னே சென்ற பெண்கள் இருக்கையில் நுழைந்தபோது சிலர் சத்தமாகக் கத்தினார்கள். அவர்கள் பயந்து பின் இருக்கையைத்தேடி அமர்ந்தார்கள். இதுபோன்றப் படங்கள் இதுமாதிரி ஆட்களைத்தான் இழுக்கும்போல என்று படம் முடிந்தபிறகு நினைத்துக்கொண்டேன். 

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கேலிசெய்கின்ற விதமாகத்தான் எடுத்திருக்கின்றோம் என்ற நொண்டிசாக்கைச் சொல்லி தப்பிவிடமுடியாது. இப்படியெல்லாம் சமூகத்தில் நடக்கிறதா? என்கிற கேள்விகளை எழுப்புவதாக இருக்கவேண்டுமேத்தவிர. அந்த அவலங்களைப் பார்வையாளனையே செய்யத்தூண்டுவதாக இருக்கக்கூடாது. உலகப்படங்களில் எதார்த்தம் கொட்டுகிறது, கக்குகிறது என்கிறவர்கள். அதைத்தொடர்ந்து பார்க்கிற புதிய இளைஞர்கள் சுருக்கமான எதார்த்தமற்ற காட்சிகளின் மூலம் பார்வையாளனை நுனி இருக்கையில் அமரவைத்து சந்தோஷப் படுத்திவிடலாம் என்று நினைத்தால், அது தமிழ் சினிமாவை மீண்டும் பாதாளத்தில் தள்ளும் செயல்தான். 

இதற்குத்தான் எங்களின் நண்பர் ஒருவர் தமிழ் சினிமாக்களைப்பார்த்து நல்ல கலைஞனாக உருவாகமுடியாது என்று அடிக்கடிச் சொல்வார். (அதில் முழுமையான நம்பிக்கையில்லை என்றாலும் யோசிக்வேண்டியிருக்கிறது) என்னயிருந்தாலும் மலையாளப்படங்கள் ஏற்படுத்தும் மன நிறைவை புதிய தொழில் நுட்பங்கள் பேசும் இளைஞர்களாலும் ஏற்படுத்த முடியாதது தமிழின் தொடர் சோகந்தான்.
ஜேடி 


No comments: