என் எழுத்தை யாருக்காகவோ, நானே வாங்கனுமா?
இன்று (05.05.13) தஞ்சாவூர் மாவட்டம்,
எலங்கார்குடி என்ற ஊரிலிருந்து கே.
ராஜகோபாலன் என்கிற ஒருவர் போன் செய்தார். “டேனியல் தானே” என்றார், கைபேசி சற்று
நேரம் கரக்முரக் என்றது. ‘நான் ஒரு ரூபாய்க் காயிண்போட்டுப் பேசுகிறேன். சரியாக் கேட்கவில்லை.
மறுபடியும் போடுகிறேன் இருங்க‘ என்றார், கட்டாகிவிட்டது.
மீண்டும் சற்று
நேரங்கழித்து “டேனியல் தானே”
‘ஆமாங்க, நீங்க‘ என்றேன்.
‘உங்க ‘ஜேடி’ நாவலை வாசித்தேன். அற்புதமாக இருந்தது. ஒருவாரம்
முன்பு படித்தேன். அதிலிருந்து உங்களிடம் பேசவேண்டும் என்று முடிவுசெய்து அதன்
பதிப்பாளரைத் தொடர்பு கொண்டு, டேனியலின் போன் நெம்பரைத் தரமுடியுமா
என்றுக்கேட்டேன். நான் வேலையா இருக்கிறேன். அங்க இருக்கிறேன். பிறகு தருகிறேன்‘என்றார்.
நாலைந்து நாள் ஆனபிறகும் தரவில்லை. மறுபடியும் நேற்று தொடர்பு கொண்டேன். அதன்பிறகு
தந்தார்‘என்றார்.
மேலும், ‘நீங்க என்ன
செய்றீங்க என்று விசாரித்தார். நான் பதில் சொன்னேன். எனக்கு எழுபத்தி இரண்டு வயது
ஆகிறது. ரயில்வேயில் வேலைசெய்து ஓய்வுபெற்றவன்‘
‘அப்படியா, ரொம்ப
நன்றிசார்‘ என்று சொல்லிக்கொண்டே இவர் மற்ற இலக்கியங்களை வாசிக்கிறவரா? சந்தேகம்
வந்தது. ‘நான் தஞ்சாவூர் லைபிரரியில் புதிதாக எதுவந்தாலும் எடுத்து வாசிப்பேன்.
அப்படிப் பார்த்தபோதுதான் உங்கள் புத்தகம் இருந்தது. நாவல் சமூகத்தின் சுற்று
வட்டங்களில் இருந்து எடுத்ததா? இல்லை உங்கள் சொந்த வாழ்க்கையா?“ என்றார்.
நான் ‘சொந்த
வாழ்விலிருந்து எடுத்ததுசார்‘ என்றேன். சொந்த வாழ்வானாலும் அதன் சித்தரிப்பு
அவ்வளவு நேர்த்தியாக வந்திருக்கிறது. மேலும், அவராகவே, நீங்கள் எழுதுவதை
நிறுத்திவிடக்கூடாது. தொடர்ந்து எழுதவேண்டும்‘ என்றார். ‘நான் மீண்டும் ரொம்ப
நன்றிசார்‘ என்றபோது எதிர்முனையின் இணைப்புக் கட்டானது.
அதன்பிறகுதான் ‘ஜேடி‘
நாவல் எழுதப்பட்ட சூழல், வெளியிட்ட சூழல் எனக்கு நினைவாகச் சுழன்றது. நாவல் எழுதும்போது இலக்கியத்தின் பின்புலம்,
அறிமுகம் ஏதும் இல்லாமல்தான் எழுதினேன். அந்த நிலையிலும் எழுத்து என்பது அள்ள அள்ளக்
குறையாத கடல் நீரையாய் இருந்தது. எழுதி முடித்தேன். பல சந்தர்ப்பங்களில் என்
முகத்திற்கு நேராக குத்துகள் விழுந்தது. ஆனால், அவைகள் என்னைப் பாதிக்கவில்லை.
மேலும், ஆர்வம் கூடிக்கொண்டுதான் இருந்தது. கையில் பத்தாயிரம் எடுத்துக்கொண்டேன்.
இரண்டாயிரத்து ஐநூறு செலவுசெய்து தட்டச்சு அட்டைப் படம் எல்லாவற்றையும் பல
நண்பர்களின் உதவியுடன், சீடியிலிருந்து நேரடியாக பிடிஎப் பைலாக மாற்றி, அச்சுப்பாரம்
ஏற்றுகிற அளவில் தாயாராக எடுத்துச்சென்றிருந்தோம். திருவல்லிக்கேணியில் ‘ஜேடி‘யின்
பதிப்பாளரிடம் பத்தாயிரம் மற்றும் சீடியைக்கொடுத்துவிட்டு வந்தோம். அந்நேரம் அப்பதிப்பகம்,
அங்கொன்றும், இங்கொன்றுமாக புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருந்தது.
வெளியீட்டு நாளில்
நூறு புத்தகங்கள் கொடுத்தார்கள். 100x100=
10,000/- அந்தநேரம் இலக்கிய நண்பர்கள் கூட்டுக்குடும்பத்தின் தலைவர்கள் என்ற
அளவில் என் மதிப்பு இருந்தது. குடுபத் தலைவர்கள் எதைச்செய்தாலும் குடும்பத்தின்
தனி நபர்களின் சுயமரியாதை, நலனையும் கணக்கிடுவார்கள், என்ற நினைப்பு இருந்தது.
நண்பர்கள் கூட்டாக முடிவு எடுக்கும் விதமாக புத்தகம் விலை நூறு ரூபாயாக
இருக்கிறது. வெளியீட்டில் என்ன விலை கொடுக்கலாம் என்றக்கேள்வி எழுந்தது. அப்போது யார் யார் என்ற முகப்பரிச்சயம் கணித்திருக்கவில்லை.
கூட்டத்தில் ஒருவர் ஐம்பது ரூபாய் வைக்கலாம். சில்லறைக் கொடுப்பதற்கு வசதியாக
இருக்கும்’ என்றார்.
எனக்கு அங்குதான்
பிறந்தது, இலக்கியத்தின் முதல் ஞானம்.
எண்பது புத்தகங்கள்
இனாமாக போய்விட்டது என்பதில் துளியும் வருத்தம் இல்லை. ஆனால், தினந்தோறும்
ஞானத்தின் கீற்றுகள் எங்கிருந்து கிளம்புகிறது என்பதை உள்வாங்கிக் கொண்டேயிருந்தேன்.
நான்கு வருஷத்தில் தற்போதைய இலக்கியம், வியாபாரத்தின் உச்சகட்டமும் கூட என்பதைப்
புரிந்துகொண்டேன். (ராஜகோபாலன் சொன்னபிறகுதான் ஜேடி புத்தகம் நூலகத்தில் இருக்கிறது
என்பது தெரியும். இத்தனைக்கும் நூலகத்தின் விண்ணப்பத் தொகையைக்கூட நான்தான்
செலுத்தினேன்.) பல பிரச்சைனைகளுக்கு மத்தியில் மீண்டும் சொந்த செலவில்
சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டேன்.
‘அப்பா நானூறு
புத்தகம் நல்ல விலைக்குப் போய்விடும் என்பதை மனதில் வைத்துக்கொள். கீழாண்ட
வீதியில், பின் அட்டையில் இருக்கும் உன் முகத்தைக் கிழித்துவிட்டு எடைத்தட்டில்
நிறுத்தும்போது‘ என்று என் சின்ன மகன் ஒரு
வருஷம் கழித்து, பரண்டில் இருக்கும் புத்தகத்தைப்பார்த்து சொன்னபோதுச்
சிரித்துக்கொண்டேன்.
எனக்கு நானே
விவாதமாய், விமர்சனமாய் வைத்தபிறகு, புதிய சிறுகதைகள் எனது கணினியின் பேஜ் மேக்கரில்
200 பக்கம் பிரிண்ட் எடுக்க நெருங்கிக்கொண்டிருக்கிறது.‘ என்பதை மூத்த வாசிப்பாளர்
ராஜகோபாலன் அவர்களிடம் சொல்லவில்லை.
என் எழுத்தை யாருக்காகவோ,
நானே காசுகோடுத்து வாங்கும் அவசியம் இல்லாததால்.
ஜேடி
No comments:
Post a Comment