முகம்
பலிபீடம் சுவர் நடுவில் பெரிய சிலுவை. சிலுவை
தரம் வாய்ந்த மரத்தால் ஆனதுதான். மினு மினுப்பான உட்பிரைமருக்குமேல் சிவப்பு
நிறத்தில் சிறுசிறு வண்ண விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன. உயர்ந்த வலைவான
சுவர்கள் வெண்நிறத்தைப் பூசிக்கொண்டிருந்தது. அங்கங்கே அழகிய உயிரற்ற பூக்கள்
சுவர்களில் பூத்திருந்தது. கீழே அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான டேபில், அதில்,
கிறிஸ்துவிடம் அழைத்துச்செல்கிறேன் என்று சொல்வதற்கான அனைத்துப் பொருள்களும்
இருந்தது. விசுவாசிகள் பலிபீடத்திற்குள் நுழைந்துவிடாதபடி எல்லையை வகுக்கும் விதமாக அலங்காரமான மரக்கதவு இரண்டடி உயரத்தில் இருந்தது.
சிலுவையின் இருபக்கங்களிலும் இரண்டு கிறிஸ்துகள். ஒன்பதிற்கு ஆறு என்ற அளவிற்குள்
பிரமாண்டமாய் இருந்தார்கள். இடப்பக்கத்தில் இருந்தவர் மலைப்பகுதியில் ஜெபித்துக் கொண்டிருந்தார்.
இரண்டு முன்று சிறு பாறைகள் பக்கத்தில் பக்கத்தில் இருந்தது. பாறை பொன்னும், ஜீவாலையும்
கலந்த நிறத்தில், ஒரு மாதிரி கண்ணை ஈர்க்கும் விதமாக இருந்தது. பாறையின்
இடுக்கிலிருந்து பக்க வாட்டாக சில பூண்டுகள் வளர்ந்திருந்தது. கிறிஸ்து பாறையை
ஒட்டி முழங்கால் பணிந்திருந்தார். இரு கரங்களின் விரல்களைக் கோர்த்தபடி பாறையின்
மீது வைத்திருந்தார். விரல்கள் மிக இறுக்கமாக மூடிவைத்திருப்பதுபோல் இருந்தது. லேசான இளஞ்சிவப்பு நிறத்திலான மேல்போர்வையை வலப்புறத்
தோளில் போட்டிருந்தாலும், இடப்புறத் தோளையும், கையையும் மைறைத்திருக்கவில்லை. இடது
தோள்பகுதியிலிருந்து ஒரே தையலில் ஆன
வெள்ளை அங்கியும், வலது தோளிலிருந்து லேசான இளஞ்சிவப்புப் போர்வை பாதம் வரையும்
மூடியிருந்தது. கால் பகுதியும், அதன் சுற்று வட்டங்களும் அடர்பச்சையும், சற்று
மஞ்சளும் கலந்த புற்கள் பசுமையாக இருந்தது. கிறிஸ்துவின் வலப்பக்கத்திற்கு பின்னாக அழகழகான
மஞ்சள் மலர்கள் இரவு பகல்வித்தியாசம் இல்லாமல் பூத்திருந்தது.
கிறிஸ்து தலையை லேசாக வானம் பார்த்தவாறு வைத்திருந்தார்.
கன்னத்தில் லேசாகவும் மோவாய்கட்டையில் மட்டும் சற்றுக் கூடுதலாகவும் மயிர்கள் இருந்தது.
வானத்திலிருந்து சூரியக்கதிர்கள் சிகப்பு, மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில்
தலைக்குப்பின்னாகப் பிரகாசித்தது. கிறிஸ்து வடக்கு பக்கமாக முகத்தையும், தெற்கு
பக்கமாக முதுகையும் காட்டியவாறு ஜெபித்திருந்தார். வலது பக்கத்தின் கன்னம் மட்டுமே
தெரிந்திருந்தது. சந்தனமும், ரோஜா இதழ்களும் குழைத்த நிறத்தில்
வழுவழுப்பாக இருந்தது. கன்னம் அழகுதான் ஆனால், கன்னத்தின் மயிர்களைவிடச் சற்றுக் கூடுதலாக
தாடி மொத்தையாக இருந்தது.
இடப்பக்கம் இருந்த கிறிஸ்து
ஆடுமேய்த்துக்கொண்டிருந்தார். உயரமான மலைசார்ந்த பகுதிதான். சுற்றி பாறைப்பகுதிகள்.
இடது பக்கமாகச் சற்று உயரத்தில் நீர்வீழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அது, வானத்தின் நீலமும் மின்னலின் வெளிச்சமும்
கலந்த நிறத்தில் இருந்தது. கிறிஸ்துவின் பாதங்களைச் சுற்றி பசுமை அடர்ந்த
புற்கள். அவ்வளவு அற்புதமான பசுமை. செழித்த பூண்டுகள். எப்போதும் குளிர்ச்சியை
உள்வாங்கியதால் தங்கள் இயல்பான நிறங்களில் இருந்து மாறாத பாறைகள். கிறிஸ்து
நடுவாக நிற்கிறார். சிறிய ஆட்டுக்குட்டியை வலது மார்பில் அணைத்துக் கொண்டிருக்கிறார். இளஞசிவப்பான போர்வையைத் தோளில் போர்த்தியவாறு இருக்கிறார். இடது கையில் குடைக்காம்பின் வளைவு வானக் குச்சியை வைத்திருக்கினறார்.
சற்று உயரமான குச்சியைப் பிடித்திருந்ததால், இடதுகை முழங்கைவரை
மடங்கி இருந்தது. தோளில் போர்த்தியிருக்கும் போர்வை இடது முழங்கையோடு மடிந்தவாக்கில்
தொங்கிக்கொண்டிருந்தது. கழுத்திலிருந்து பாதம்
வரை குறுக்குத் தையலில்லாத அங்கி மிகவும் வெண்மை நிறத்துடன் இருந்தது. அங்கி நெடுகவும்
அதிக மடிப்புகள் இல்லை. அங்கி, பாதம் தெரிகிற அளவில் இருந்தது. வலதுகாலை முன் வைத்துக்கொண்டிருந்தார்.
கோணல் இல்லாத விரல்கள் வரிசை, ஒரு தொடங்கு
புள்ளியின் கணக்கியலைச் சொல்லித்தருவதுதாக இருந்தது. பாதத்தின் மொழு மொழுப்பானத்தன்மை மெழுகின் வார்ப்புபோல் இருந்தது.
முட்டிக்காலுக்கு சற்று உயரமாக இரண்டு ஆட்டுக்குட்டிகள் வலதும் இடதுமாக இருந்தது. அவைகள்
வெளுக்கப்பட்ட வெண்மையாய் இருந்தது. இடது பக்க ஆடு அன்னாந்து கிறிஸ்துவைப் பார்ப்பதுபோல்
பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக்குட்டி வலது பக்க ஆட்டைவிட சற்று மெலிந்து இருந்தது.
அதற்கு முன்னங்காலின் வலது கால், இடதுகாலைவிட உயரம் கொஞ்சம் குறைந்ததாக இருந்தது.
வலதுபக்க ஆடு குனிந்து இரை எடுத்திருந்தது.
புற்களின் உடல் பகுதியெல்லாம் மென்றுவிட்ட நிலையில் வால்பகுதி மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது.
இடது பக்க ஆட்டைவிடச் சற்று குண்டாக இருந்தது. ஆனால் இரண்டுமே கிறிஸ்துவின்
கால்களை ஒட்டியவாறு இருந்தது. கிறிஸ்துவிற்கு நைல் நதியின் ஆற்றில் தலைக்கசக்கிய
மயிர்கள் லேசானக்காற்றில் அலைவதுபோல் பிரிந்து சரிந்து விழுந்திருந்தது. தலையை
லேசாக வலது பக்கம் சாய்த்திருந்தார். சுருக்கமற்ற நெற்றியின் கீழ், வளைந்த புருவங்களின்
மயிர்கள் முகத்தின் அழகைக் கூட்டியிருந்தது. பார்வைக் கீழ்நோக்கியிருந்ததால் கண் பாதுகாப்புக்கரங்களால் சற்று மூடியவாறு இருந்தது. முரட்டுத்தன்மை யில்லாத மீசையும் தாடியும்
ரசிக்கும்படியாகவே இருந்தது. ஒட்டியும், அதிகமாக உப்பியும் இல்லாதக்கன்னத்துடன் ஒட்டுமொத்த
முகம் சாந்த சொரூபமாய் இருந்தது.
அவனுக்கு என்னப் பிரச்சனையோ தெரியவில்லை. ஆலயம்,
தினந்தோறும் காலை பத்து மணிமுதல், இரவுவரை திறந்தே இருக்கும். ஒரு நாள் திடீரென
நுழைந்தான். பிரசங்கம் செய்கிற இடத்தில் இருந்த மைக்கைப் பிடுங்கி எறிந்தான்.
இடப்பக்கம் நின்றிருந்த கிறிஸ்து. சுக்குநூறாக நொறுங்கிப்போனார். சற்று நாள் கழித்து இடப்பக்கத்தில் புதிதாக ஒரு கிறிஸ்து வந்தார். அதே
மலைப்பகுதிதான், அதேச் சுழல்தான். இடது பக்கத்தின் உச்சியிலிருந்து மொத்தையான
நீலமும் உப்புக்கலவையின் சாரமும் கலந்த நிறத்தில் நீர்வீழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது.
எரியும் கதிர்பட்டு பாறைகள் கறுத்து இருள் அடர்ந்ததுமாக இருந்தது. கிறிஸ்துவைச் சுற்றி புற்களின் பசுமையே
இல்லாமல், எரிக்கப்பட்ட கரித்தூளுடன்,
அடர்பச்சை நிறத்தைக் கலந்து கத்துக்குட்டி பெய்ண்டர் திட்டுதிட்டாக அடித்தார்போல்
இருந்தது. சிறிய ஆட்டுக்குட்டியை மார்பில் அணைத்துக் கொண்டிருக்கிறார். தோளின்
மேல் இருந்த போர்வை இடது முழங்கையை முட்டித் தொங்கிக்கொண்டிருந்தது. கறுப்பும், பொடியும் கலந்த நிறம் அழுதுகொண்டிருந்தது. குடைமுனைபோல் வளைந்த குச்சி இடது கையில்
இருந்தது. கழுத்து பகுதியில் இருந்து, பாதம் வரைத்தொங்கும் அங்கி இரண்டு மூன்று
குறுக்குத்தைய்லகளை சுட்டியது. அங்கியில் கணக்கற்ற மடிப்புகள் இருந்தது. வெள்ளையும்
ஊதாவும் கலந்த நிறத்தில் அங்கி இருட்டை நிரூபித்திருந்தது. இடப்பக்கம், வலப்பக்கம்
ஆட்டுக்குட்டிகள் லேசாக சிகப்பு, அதிகமாக கறுப்புக் கலந்த நிறத்தில் இருந்தது. அதன்
கண்கள் குருடுடாக்கப் பட்டிருந்தது. இரண்டு குட்டிகளுமே எதிர் போட்டோவுக்கு போஸ்
கொடுப்பதுபோல நின்றிருந்தது. கிறிஸ்துவின் தலைமயிர் விக் வைத்ததுபோல்
கவிழ்த்திருந்தது. சுருக்கப்பட்ட
நெற்றியின் இறக்கத்தில் வளைவற்ற புருவங்களில் மயிர்கள் இருந்தது. கன்னங்களில் மிதமான
மயிர்களாலும், தாடி சற்று தொங்களாக இருந்தது. மார்பில் இருந்து ஒட்டியக்கழுத்து
சற்று பொறுத்தமற்ற வகையில் எக்கியதுபோல் இருந்தது. அதிலும் மார்புசதையில் இருந்து
இழுத்து பிடித்ததுபோல் கழுத்து நரம்புகள் தூக்கலாக இருந்தது. முகத்தின் கண்களில்
சுற்று சதைகள் உள் இழுத்ததுபோல் இருந்தும், கண்கள் மட்டும் வெளியில் எழுந்ததுபோல்
உருண்டு இருந்தது. அக்கண்களில் துளியும் சாந்தம் இருக்கவில்லை. கிறிஸ்துவின்
சாய்ந்த தலையில் ஒழுகும் தாழ்மையும் புலப்படவில்லை.
கடந்த மாத்ததில் இடப்பக்கம் கிறிஸ்து
உடைந்து புதிதாக மாட்டப்பட்டது முதல் நான் கவனிக்கின்றேன். முன்பு இடப்பக்கம்
கிறிஸ்துவிற்கு நேராக ஜெபித்தவர்கள். தற்போது வலப்பக்கம் இருக்கும் கிறிஸ்துவிற்கு
நேராக ஜெபிக்கிறார்கள்.
அனேகமாக, கடவுள்களின் முகங்களை ஒழுங்கற்றதாக சித்தரித்தாலே மதங்கள்... ?தான்.
ஜே. டேனியல்
No comments:
Post a Comment