வழக்கு எண் 18/9
சாமான்ய மனிதர்களின் (நடிகர்களின்) கூட்டு வெற்றி. தமிழ்த் திரையுலகின் சில யதார்த்தப் போக்கை இன்னும்கூட சற்று யதார்த்தமாய் பேசவைத் திருக்கிறது. கடந்த வாரத்திற்கு முன் நாள், நண்பர் படத்திற்கு அழைத்தார் திரையரங்கத்திற்கு போன போது ரிலீஸாகி நான்கு நாட்கள்கூட ஆகாதப்படத்தை எடுத்துவிட்டு இருந்தார்கள். பாவம் விபாரி என்னசெய்வான். சரி அதுதான் போகட்டும் கடந்த வாரத்தில், அந்த நண்பரை ‘படம் பார்த்துக் கதை சொல்’ என்றப் படத்திற்கு நான் அழைத்தேன் இத்தனைக்கும் மூன்றாவது நாளோ என்னவோப்போனோம். அதுவும் எடுத்துவிட்டு இருந்தார்கள். மனசு மிகவும் நொந்துவிட்டது. அந்த நேரத்தில்தான் நண்பர் வழக்கு எண்18/9 திற்கு அழைத்தார், இந்த முறை முன்முடிவோடு ரிலீஸான முதல்நாளே சென்றுவிட்டோம். அதனால் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் படத்தைப் பார்க்கநேர்ந்தது.
வழக்கில் மாட்டப்போகும் குடும்பம் ஈச்சம்குளம் எனும் கிராமத்தில் வாழ்கிறது. அக்குடும்பத்திற்கு கந்துவட்டி கடன் கொடுத்தவன் வந்து கடன்கேட்டு மிகக்கேவலமாகப்பேசி மிரட்டுகிறான். அப்போதெல்லாம் ஒளிந்திருக்கும் கணவன் மனைவியை விபச்சாரி தொழில் செய்யக்கூட உன் உடம்பு தேராது. என்று சொல்லும் போதுமட்டும் கத்தியை உருவிக்கொண்டு கந்துவட்டிக் கொடுத்தவனை கொல்ல ஓடிவருகிறான்.(பல படங்களில் பார்த்ததால் அது பெரிதாக வருத்தப்படவைக்கவில்லை.) கந்துவட்டிக் காறர்கள் அவனை மிதித்து துவைத்து விடுகிறார்கள். கந்துவட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழையும்போதே பள்ளியில் விளையாடிக்கொண்டிருக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ‘ஸ்ரீ’ (படத்தில் பெயர்வேறு) பார்க்கிறான். நம் வீட்டிற்குதான் போகிறார்கள் என்று ஊகித்து ஓடிவருவதற்குள் மேல் குறிப்பிட்டது நடந்து முடிந்துவிட்டது. இப்போது வீட்டிற்குள் தன் அப்பா குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என பேசும்போது பையன் கேட்டுவிடுகிறான். நான் வேலைக்குப் போய் காப்பாற்றுகிறேன் என்று வேகமாக போகிறான். (இவைகளை எல்லாம் இன்னும் சற்று புதுவிதமாக அமைத்திருந்தால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்) குடும்பத்தைக் காப்பாற்ற சிறுவன் வடமாநிலம் அனுப்பப்படுகிறான். அங்கு சிறு குழந்தைகளைச் சித்ரவதை செய்து தொழில் நடத்தும் கூட்டத்தில் மாட்டிக்கொள்கிறான். வடமாநிலத்தைச் சேர்ந்த முதலாளி ‘ஸ்ரீ’ யின் தாய், தந்தை விபத்தில் இறந்து போனதைக்கூட சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவன் நண்பன் வந்து உன் தாய் தந்தை இறந்துவிட்டார்கள் என்றத் தகவலைச் சொல்லும்போது ‘ஸ்ரீ’ கோபமடைந்து முதலாளியை அடிக்க முற்படுகிறான். பிறகு அதிலிருந்து தப்பித்து சென்னைக்கு ஓடிவந்துவிடுகிறான். இங்கு சிறு கேள்வி எழுகிறது ‘ஸ்ரீ’ யின் தாய் தந்தை இறந்துவிட்டதாகச் சொல்லவருகிற நபர், எந்த முகாந்தரமும் இல்லாமல் திடீரென அவனிடம் வந்து தகவல் சொல்லுகிறான், தப்பித்து வரும்போதும் அவன் கூட வரவில்லை. மேலும் சமீபத்தில் வடமாநிலத்தவர் இங்கு சுடப்பட்டநிலையில். வடமாநிலத்தில் தமிழகப் பிள்ளைகளை வைத்துக்கொடுமைப் படுத்துவதுபோல் காட்டியிருப்பது அதற்கான நியாயம் கற்பிக்கும் செயலாக இருக்குமோ என சந்தேகம் எழுப்புகிறது. ‘ஸ்ரீ’ அறிமுகமாகியிருக்கும் சென்னை வாலிபரின் நடிப்பும், அதில் வரும் ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் பங்குக்கு மிகச்சரியாகச் செய்துள்ளார்கள்.
கதையின் முக்கியப் பாத்திரமாக இல்லாமல் போனாலும் மிக முக்கியப் பங்கைச் சேர்த்திருப்பது. வேலைக்கார பெண்ணின் தாயாக வரும் கதாப்பாத்திரம் மற்றும் ‘ஸ்ரீ’ யுடன் தெரு ஓர டிபன் கடையில் கூட வேலைக்குச்சேரும் ஒருச் சின்னப்பையன். இருவரும் போட்டிப் போட்டு யாதார்த்த நடிப்பை பின்னுகிறார்கள். இதுவரை வந்த தமிழ்ச்சினிமாக்களில் யதார்த்தமாக பேசும் வார்த்தைகளை (கைத, சோமாறி, பேமானி,) இப்படி மிகக்கேவலமாக பேசும் நிலையில்தான் வைத்திருந்தார்கள். முதல் முறையாக மனித இயல்பின் கோபத்தில் ஏற்படுகின்ற வார்த்தைகளை மிக யதார்த்தமாக அதிலும் ரசிக்கும் படியாகவும் அமைத்திருப்பது மிக அருமையான புதுமை. இயக்குநர், அந்த அம்மாவையும், சின்ன பையனையும் உங்கள் விருப்பம் போல செய்யுங்கள் என அதிகமான சுதந்தரம் கொடுத்து விட்டிருப்பார்போல அவரின் நம்பிக்கையை வீனடிக்காமல் செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பையனின் சிறு சப்ஜெக்டை மட்டும் சொல்லுகிறேன்.
இயல்பாகவே அவன் ஒரு கூத்துக்கலைஞன். தற்போது தொழில் சரியாக இல்லாமல் சென்னைக்கு வந்து தள்ளுவண்டியில் ‘ஸ்ரீ’ யோடு வேலைக்கு சேருகிறான். நாளடைவில் சின்னப்பையனுக்குள் இருக்கும் திறமையை நினைத்துப் ‘ஸ்ரீ’ பெருமையடைகிறான். அந்தக்கடைக்குவரும் சினிமா போட்டோகிராப்பரிடம் சொல்லி எப்படியாவது சினிமாவில் சேர்க்கலாம் என்பது ‘ஸ்ரீ’யின் ஆசை. அந்தப்பிரகாரம் முதலாளிக் குத்தெரியாமல் போட்டோ எடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் முதலாளிக்குத் தெரியவர போட்டோ எடுத்தவனோடு சின்னப்பையனையும் திட்டித்தீர்க்றான். பேச்சி ஆவேசம் அடைய முதலாளி அடிக்கக் கை ஓங்குகிறான், அந்த நேரம் சின்னப்பையன் ஆவேசம் கொண்டவனாக “அடிக்கிறவேலை எல்லாம் வெச்சிக்காதிங்க பிடிக்கலனா எனக்கு கணக்குப்பார்த்து அனுப்புங்க” என்பான் ‘ஸ்ரீ’ “டே என்னடா முதலாளியப்போய்” என்று ஆரம்பிக்கும்போதே அவனையும் “யோ, நீ யார்யா இதுலத் தலையிட” என்று எதிர்த்துப்பேசிவிட்டு போய்விடுவான். பிறகு ஒரு நாள் அவனைத் தனியாகப்பார்த்து அவனை எதிர்த்துப் பேசியதற்கான காரணத்தைக் கூறும்போது ஆடியன்சை ஒட்டுமொத்தமாக அழவைத்து விடுகிறான். (இது போன்ற படங்களைத் தீயேட்டரில் சென்றுப் பார்ப்பது அல்லது அப்பட்ங்களைக் கூட்டாகப்பார்த்து விவாதிப்பதுதான் அதுபோன்றக் கலைஞர்களை வளர்த்தெடுப்பதற்கு, அல்லது நாமே கலைஞர்களாக மாறுவதற்கும் உதவியாக இருக்கும். அதை செய்யாத பட்சத்தில், மற்ற எந்த சாக்குப்போக்கு சொல்லாடல்களை பேசுவது, காலங்காலமாய் பிரமாண்டங்களை ஏகோபித்து வரவேற்று விசிலடிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளின் செயல்களுக்குத் துணைபோகிறவர்களாகத்தான் கலையை ரசிக்கிறவர்களும் செய்கிறார்கள் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.)
வீட்டில் வேலைசெய்கிறப் பெண் மிக அழகுடன், மேக்கப் இல்லாமலே வெளுத்து நிற்கிறக்கலர். இவள் வேலைசெய்கிற அதேவீட்டில் பனிரெண்டாம் வகுப்புப் படிக்கிற வசீகரிக்கும் உடல் அமைப்பைக்கொண்ட இன்னொருப் பெண். தமிழகத்தில் சினிமா வரலாற்றில் கதாநாயகிகளை மிக தைரியமாக கருப்பு நிறத்தில் அறிமுகப் படுத்தியவர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் என்று சொல்கிறார்கள். கடைநிலையில் வேலைசெய்கிற கதாநாயகனுக்கு கருத்த பெண்தான் கதாநாயகியாக போடனுமா? என்ற கேள்விக்கு நியாயம் இருந்தாலும், நடுத்தர வர்கப்பெண்கள் ஏன் கருப்பாக இருக்கவே மாட்டார்களா? பணக்காரப்பைன் கருப்பான பெண்ணை காதலிக்க வேமாட்டானா? எங்கே காதலிக்கிறான் அவன் கைபேசியில் காதலிப்பதாக் கூறும் பெண்ணின் பெயரை ‘ஐட்டம்’ என்று தானே பதிவுசெய்து வைத்திருக்கிறான். அவனுக்குத்தேவை கவர்ந்திழுக்கும் பெருத்த சதைகள். அது கருப்பாக இருந்தால் என்ன, சிவப்பாக இருந்தால் என்ன. ஆனால், தமிழ் சூழலில் கதாநாயகிகளை வெளியிடங்களில் இருந்து இறக்குமதிச்செய்யும் நிலை மட்டும் இன்னும் மாற்றம் வரவேயில்லை. பாலாஜி சக்திவேலும் அதைக்கடைபிடிக்கிறார். வேலைச்செய்கிற பெண்ணாக இருந்தாலும், பணக்காரவீட்டுப் பெண்ணாக இருந்தாலும் வயதிற்கு மீறியசதைகளுடன் துருத்திக்கொண்டு இருக்கவேண்டும். இப்படிதான் நதாநாயகித்தேர்வு இருக்கிறது.
பணம் விளையாடும் பிள்ளைகளிடம் இரக்கமற்ற கலாச்சார சீரழிவுகளும் சேர்ந்தே
விளையாடுகிறன. பாதி வயதைக்கூட கடக்காத பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும்
சேர்ந்து செய்கிற பித்தலாட்டங்கள் வெளிநாடுகளின் கலாச்சாரத்தை ரசித்து ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு கூட அருவருப்பை ஊட்டும். என்பதை நிதர்சன உண்மையாய் வைக்கிறார் பாலாஜி சக்திவேல். நடுத்தர வீட்டுப்பெண்ணை, ஒரு கல்வி முதலாளிப் பையன் காதலிப்பதாக நடித்து ஆசைக்காட்டி பீச்சிக்கு அழைத்துச்செல்கிறான். அங்கு அவளுக்குத் தெரியாமல் செக்ஸியானப்படங்களை எடுப்பதும், ஆனால் நல்லவன் போல் நடித்து அவளிடம் நன்மதிப்பைப் பெற்றபிறகு தன் தேவையைப் பூர்த்தி செய்துக்கொள்வது என்பதும் அவன் திட்டமாக இருக்கிறது. அவளைக் கடலில் குளிக்கவிடுகிறான். ஓட்டலில் ரூமெடுத்து தங்குகிறார்கள் (சார் நீங்க நினைக்கிறாமாதிரி எல்லாம் ஒண்ணும் நடக்கலசார் அதான் பாலாஜி) அவன் நல்லவன் போல் வெளியே இருக்கிறான். ஆனால் கைப்பேசியை மட்டும் அவளுக்குத் தெரியாமல் ஆன்செய்து கண்ணாடி முன் வைக்கிறான். அதுதெரியாமல் தன் அம்மனத்தை கண்ணாடி முன் அவளே ரசித்துக்கொள்கிறாள். இந்த நாளில் இதுபோதும் என்று கிலம்பிவிடுகிறார்கள். வரும் வழியில் அவள் அவனின் கண்ணியத்தை மெச்சி இப்படிப்பட்ட நல்லவன் கிடைக்கமாட்டான் என்று தன் காதலை சொல்லிவிட வாய் எடுக்கிறாள். அந்நேரம் பார்த்து கார் பழுதாகி நின்றுவிடுகிறது. அவன் பக்கத்தில் மெக்கானிக்கை கூட்டிவர போகின்றான். சும்மா இருக்கும நேரத்தில் அவள் அனுடைய கைபேசியை கிளறுகிறாள். படிப்படியாக அவன் சுயரூபம் தெரியவருகிறது. கண்ணாடியில் பிரிதிபலித்தது முதல் எல்லா ஆபாசங்களும் புற்றீசல்போல் கிளம்பிக்கொண்டேயிருந்தது, இவளுக்கு அழுகையும் வேதனையும் பொங்கிக் கொண்டுயிருக்கிறது. அப்போது அவன் மெக்கானிக்கைக் கூட்டிக்கொண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறான். பதரிப்போன அவள் புத்திசாளித்தனமாக வேகவேகமாக எல்லாவற்றையும் நீக்கம் செய்துவிட்டு சிம்கார்டை கழட்டிஎடுத்துக்கொண்டாள். வண்டி சரியாகிவிட்டது ‘வேறு எங்காவது போகலாமா’ என்கிறான். அவள் சாதுர்யமாக ‘வீட்டுக்குப்போகலாம்’ என்கிறாள். அவனும் இன்னொரு நாளைக்குப் பார்த்தால்போகிறது என்று கிளம்புகிறார்கள். அவள் வீடு கிட்டத்தில் வந்ததும் அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் வேகமாகக் கதவைச்சாத்திவிட்டு போகிறாள். அவனுக்குப் பிறகுதான் விஷயம் தெரிந்தது. அவள், அவன் முகத்தில் விழிப்பதில்லை. அவன் வெறிப்பிடித்தவனாக மாறிப்பழிவாங்க நினைக்கிறான். அவன் ஆசை நிறைவேறாத பட்சத்தில் அவள் முகத்தில் திராவகம் வீசிசிதைக்கத் திட்டமிட்டு வீட்டிற்குச்சென்று காலிங்பெல்லை அழுத்துகிறான். பாவம் அப்பாவி வேலைக்காரப்பெண் வந்துக்கதவைத் திறக்கிறாள். யார் என்று கூட பார்க்காமல் முகத்தில் வீசிவிட்டு ஓடுகிறான்.
இந்த திராவகவீச்சிற்கும் இல்லிக் கடையில் வேலைசெய்யும் ‘ஸ்ரீ’ க்கும் என்னத்தொடர்பு, இயக்குநர் இக்கதையை மிக சாமர்த்தியமாக எப்படி நகர்த்திச் செல்கிறார் என்பதே சவாலானது. ஆதாவது இட்லிக்கடையில் வேலைசெய்யும் ‘ஸ்ரீ’ வேலைக்காரப்பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் கெட்டவன் போன்ற நிகழ்வே தானாக நிகழ்ந்துவிடுகிறது. அந்தப்பெண்ணின் தாய் ‘ஸ்ரீ’ பார்த்தாலே அசிங்கமாகத் திட்டித்தீர்ப்பாள். அந்த நிலையில் ‘ஸ்ரீ’ யின் மீது சந்தேகம் கொள்கிறார்கள். கைதான ‘ஸ்ரீ’ வெளிப்படையாக உண்மையை சொல்லுகிறான். அதேபோல பணக்காரப்பெண் சொல்லும் போதும் உண்மை வெளிப்படையாகத் தெரிகிறது. திராவகம் வீசியவனும் தன் தவறை எந்த பிடிவாதமும் இல்லாமல் நான் தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறான். ஆனாலும் பணமும், அதிகார வர்க்கங்களும் தங்கள் சுயநலத்திற்காக எவ்வளவு சுலபமாக சாமான்யர்களை சட்டத்தில் சிக்கவைக்கிறார்கள். ஏமாற்றுக்காரர்களுக்கு சுதந்தரமான இடம் பூமியில் எப்போதும் இயல்பானதா? என்ற கேள்விகளுக்கு பதில் நீங்களே அப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். போலீஸ் அதிகாரியாக வரும் நபருக்கு எல்லா விஷயங்களும் தெரியும். அவர் நாயகமா, வில்லத்தனமா என்று அவசரமாகப்பிரித்து எடைபோட்டுவிடமுடியாது. அப்படி அசத்தியிருக்கிறார்.
நா.முத்துக்குமாரின் ஒரே பாடல் வரிகள் பல காட்சிகளில் திரும்பத் திரும்பத்வந்தாலும் ரசனை குறையவில்லை. ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது. விசாரனையின்போது கேமராவின் கோணம் மாறுபட்டு வருது வித்தியாசமாக இருந்தது. இசையில் நமக்கு பிரித்தியேகமான ஞானம் இல்லை என்றாலும் பராவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாலாஜி சக்திவேல் இதுபோன்ற வாழ்வின் பல பரினாமங்களை தமிழக மக்களுக்கு படைப்புகளாகத் தரவேண்டும் என வாழ்த்துவோம். நான் சாதாரணமானவன் என்கிற நினைப்பு கொண்ட கலைஞனை வாழ்த்தினால் வீழ்ந்துவிடமாட்டான்.
ஜேடி
நா.முத்துக்குமாரின் ஒரே பாடல் வரிகள் பல காட்சிகளில் திரும்பத் திரும்பத்வந்தாலும் ரசனை குறையவில்லை. ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது. விசாரனையின்போது கேமராவின் கோணம் மாறுபட்டு வருது வித்தியாசமாக இருந்தது. இசையில் நமக்கு பிரித்தியேகமான ஞானம் இல்லை என்றாலும் பராவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாலாஜி சக்திவேல் இதுபோன்ற வாழ்வின் பல பரினாமங்களை தமிழக மக்களுக்கு படைப்புகளாகத் தரவேண்டும் என வாழ்த்துவோம். நான் சாதாரணமானவன் என்கிற நினைப்பு கொண்ட கலைஞனை வாழ்த்தினால் வீழ்ந்துவிடமாட்டான்.
ஜேடி

No comments:
Post a Comment